15/01/2013

கறுப்பு அணில் - அ.முத்துலிங்கம்


ஒரு நாள் தற்செயலாகத்தான் அது ஆரம்பமானது.

வேலை முடிந்து மாலை பஸ் தாப்பில் இறங்கி வீட்டுக்கு வரும் வழியில் அவன் ஒரு கார் பாதுகாப்பு நிலையத்தை கடப்பான். பட்டனை அமுக்கி டிக்கட்டை இழுத்து கார்கள் உள்ளே நுழைவதையும், திரும்பும்போது காவலனிடம் காரோட்டிகள் கட்டணம் செலுத்துவதையும் பார்த்திருக்கிறான். சாரதி கண்ணாடிக் கதவை திறந்து காசைக் கொடுப்பான். மீதி சில்லறை வழங்கப்பட்டதும் மஞ்சளும், கறுப்பும் பூசிய தடுப்பு மரம் மறுபடியும் உயர கார் வெளியே சென்றுவிடும்.

அன்று அந்த நிலையத்தை தாண்டும்போது தடுப்பு மரத்துக்கு கீழே சில்லறைக் காசுகள் சிதறிக் கிடந்தன. அவன் அதை பொறுக்கி பக்கட்டுக்குள் வைத்துக்கொண்டான். ஆயிரம் கார்கள் போகும் இடத்தில் ஒரு சிலர் சில்லறைகளை தவறவிட்டு விடுவார்கள். பரம லோபிகளைத் தவிர மற்றவர்கள் சீட் பெல்ட்டைத் தளர்த்தி, கதவைத் திறந்து, கீழே இறங்கி அவற்றை பொறுக்கமாட்டார்கள்.

இந்தச் சில்லறையைதான் கொண்டுபோய் அவன் தன் அறையிலே காலியான ஒரு வாய் அகலமான போத்தலில் போட்டு வைத்துக் கொண்டான்.

அதற்கு பிறகு அதுவே வழக்கமாகிவிட்டது. அந்த நிலையத்தை தாண்டும்போது அவன் குனிந்து சில்லறைகளை தேடுவான். எல்லாமே 25,10,5, 1 சதக்குற்றிகளாக இருக்கும். அபூர்வமாக டொலர் குற்றிகளும் கிடைக்கும். அவற்றை அவன் தவறாமல் அந்த போத்தலில் போட்டு மூடியையும் திருகிவிடுவான்.

இவன் வேலையில் சேர்ந்த அந்த முதல் நாள் லோரா என்ன டிரஸ்ஸில் வந்தாள் என்று கேட்டால் மிகச் சாியாக பதில் சொல்லிவிடுவான். கறுப்பு நீள ஸ்கர்ட், கறுப்பு தொளதொள பிளவுஸ். அதற்கு மேல் ஒரு ரத்தச் சிவப்பு ஸ்வெட்டர், பொிய பட்டன்கள் வைத்து முன்புறமாக திறக்கும் வசதியுடன் இருந்தது. தலை மயிர் இவ்வளவு குவியலாக பொன் நிறமாக இருந்ததை அவன் முதன்முதலாக பார்த்தது அப்போதுதான்.

அன்றைய வேலை நிரல்களை அவள் நின்றபடி டிக் செய்து இரண்டு இடங்களில் முத்திரை குத்தி அவர்களிடம் நீட்டினாள். இவனுடைய முறை வந்தபோது இவன் முகத்தை அவள் பார்க்கவில்லை. பார்க்க முயலவுமில்லை. இவனுடைய பாரத்தில் முத்திரையை அளவுக்கு அதிகமான பலத்துடன் குத்தி அதை மேசை மீது தள்ளிவிட்டாள். அது மேசையின் விளிம்பை தாண்டி வேகம் குறையாமல் போகும்போது இவன் ஒரு பறவையை பிடிப்பதுபோல பிடித்தான். மற்றவர்களுடையதைப்போல அந்த நிரலை கையிலே கொடுக்கலாம் என்ற சாதாரண அறிவு அவளுக்கு தோன்றவில்லை என்பதில் அவனுக்கு வருத்தம்.

தன் பெயர் தொியாமல் அவள் பாரத்தை மாற்றிக் கொடுத்துவிடலாம் என்ற பயத்தில் இவன் 'என்னுடைய பெயர் லோகிதாசன். இன்றைக்குத்தான் புதிதாக வேலைக்கு சேர்ந்திருக்கிறேன் ' என்று முனகினான். இடைக்கு மேலே உள்ள பாகத்தை மட்டும் இவனுக்கு எதிரான திசையில் திருப்பி வைத்து அலட்சியமாக அடுத்த தாளில் முத்திரை பதிப்பதில் அவள் சிரத்தையானாள்.

அவளுடைய நீண்ட வெண்மையான கழுத்திலிருந்து எப்படிப்பட்ட ஒலி வரும் என்று ஊகிப்பதில் அவனுக்கு அன்று இரவு முழுக்க செலவழிந்தது. அந்தக் கவலை அடுத்த நாள் காலையே தீர்ந்தது. லோரா பக்கத்தில் இருந்தவளிடம் சோகமாக ஒரு முறைப்பாட்டை வைத்துக் கொண்டிருந்தாள். அவளுடைய பொிய மஞ்சள் பூ போட்ட கவுனை சலவைக்காரன் பாழாக்கிவிட்டானாம். இந்த அழகான பெண்ணின் மனது இப்படி நொந்துபோனதே என்று இவனுக்கு கோபமாக வந்தது. ஒரு கன்றுக்குட்டி பார்ப்பதுபோல அவளைப் பார்த்தான். அவளுக்கு தேறுதல் சொல்வதற்கு அவனிடம் போதிய ஆங்கில வார்த்தைகள் அப்போது சேர்ந்திருக்கவில்லை.

அவளுடைய அலங்காரம் அன்று முற்றிலும் மாறியிருந்தது. ஆழமான கழுத்துடன், இறுக்கமான மஞ்சள் பிளவுஸில் வந்திருந்தாள். வேப்பம்பழ சைஸ் செயற்கை முத்துக்களால் செய்த மாலை ஒன்று அவள் ஸ்தனங்களுக்கிடையில் சிக்கிக் கிடந்தது. இதை போடுவதற்கு அவள் மிகுந்த சிரமப் பட்டிருக்கவேண்டும். இதைக் கழற்றும்போது இன்னும் சிரமமிருக்கிறது. ஒன்றிரண்டு முத்துக்கள் அறுந்து விழுவதற்கான சாத்தியக்கூறுகள் நிறைய இருந்தன.

எந்த ஏரியா அவனுக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது என்று கேட்டாள். இவன் 'சாவிக்னோன் ' என்று கூறினான். மிகவும் செலவு வைக்கக்கூடிய ஒரு அபூர்வமான ஒப்பனைக்காரியால் செதுக்கப்பட்ட மெல்லிய புருவங்களை உயர்த்தி சுழித்தபடி, அந்த வார்த்தையின் சரியான உச்சரிப்பை கூறினாள். மேலும் பேப்பரை இழுத்து மிகக்கச்சிதமாக இரண்டுதரம் குத்தினாள். அன்றைக்கும் அவனுடைய முகத்தை அவள் பார்க்கவில்லை.

சாதாரண ஊழியன் என்ற முறையில் அவன் அதிபரை சந்திக்க முடியாது. காலாண்டுக் கூட்டங்களில் அவருடைய சொற்பொழிவை கேட்டிருக்கிறான். 'தூசி எங்கள் எதிரொலி ' என்று பேச்சை தொடங்குவார். முக்கோண தாடையுடன், அடர்ந்த புருவங்களுடன், மிக நேர்த்தியாக வாரிய சிகையுடன் சிவப்பு நிறத்தில் அவர் இருப்பார். உலர் சலவை செய்த அவருடைய உயர்தர ஆடையின் மடிப்புகள் அவர் அசையும்போது அலையாக எழும்பி அதே இடத்தில் விழும். அவர் பேசத் தொடங்கும்போது அவருடைய குரல்கூட சுத்திகாிக்கப்பட்ட பின்பே வெளியே வரும். அவனுக்கு எங்கே தான் விடும் சுவாசக் காற்றின் மிச்சத்தை அவர் சுவாசித்துவிடுவாரோ என்ற பயத்தில் மூச்சுமுட்டும்.

மிகப் பாரமான தூசி உறிஞ்சிகளை மெலிந்த தோள்களில் காவியபடி அவன் ஆயிரம் மாடிப்படிகள் ஏறி இறங்கினான். ஆயிரம் கம்பளங்களை உறிஞ்சி எடுத்தான். மெல்லிய மருந்து நெடி கொண்ட கிருமி நாசினிகளால் கழிவறைகளை கழுவினான். உரஞ்சி, உரஞ்சி துடைத்த அவை தானாகவே ஒளிவிட்டன. கண்ணாடிக் கதவுகளையும், சாளரங்களையும் விண்டெக்ஸ் மாயசக்தியால் பளபளப்பாக்கினான். அவற்றில் தொியும் முகங்கள் சொந்தக்காரர்களின் முகங்களிலும் பார்க்க பிரகாசம் கூடியவையாக இருந்தன. படுக்கை விாிப்புகள் வெள்ளை நிறத்தில் நறுமணம் பரப்பி ஒரு சுருக்கு விழாமல் உறுதியாக படுக்கைகளை மூடின. புரூஸ் லஸ்ரர் மினுக்கி போட்டு துடைத்து வழுவழுப்பாக்கிய மேசைகளும், கதிரைகளும், சோபா கைப்பிடிகளும் தூசிகள் எப்படி இருக்கும் என்பதை மறக்கவைத்தன.

வெள்ளை வெளேரென்று சுத்தமான தூசிகள் அகற்றப்பட்ட ஒரு சுகந்தமான உலகத்தை தயாாிப்பதில் அவன் தீவிரமாக ஈடுபட்டிருந்தான்.

அலுவலகங்களை சுத்தப்படுத்துவதற்கும் வீடுகளை சுத்தப்படுத்துவதற்கும் பல வேறுபாடுகள் இருந்தன. அலுவலகங்கள் பெரிசாக இருந்தாலும் வேலையை சீக்கிரமாக முடித்துவிடலாம். கையைக் காலை நீட்டி வேலை செய்ய தாராளமாக இடம் இருக்கும். தரையோடு ஒட்டிய கம்பளங்கள், மேசைகள், கதிரைகள் என்று துப்புரவு செய்வது சுலபம்.

வீடுகள் என்றால் நெருக்கமான சூழ்நிலை. கார்ப்பட்டுகளில் கால்கள் புதையும். படுக்கை விாிப்புகளை மாற்றவேண்டும். அலங்காரப் பொருட்களை தூசி தட்டி குசினிகளை பளபளப்பாக்க வேண்டும். இந்த வீட்டு எசமானிகளை சமாளிப்பது மகா கஷ்டம். முறைப்பாடுகள் வந்தபடியே இருக்கும்.
என்றாலும் அவனுக்கு வீடுகள்தான் பிடிக்கும். அவனும், அவனுடைய சகாவும் வேலையை படுக்கை அறை, இருக்கும் அறை, நிலவறை, கழிவறை, குசினி என்று பிரித்துக் கொள்வார்கள். துப்புரவு செய்யும்போதே அந்த வீட்டில் வாழ்பவர்கள் பற்றியும், அவர்களுடைய குணாதிசயங்கள் பற்றியும் அவனுடைய கற்பனைகள் விரியும்.

வேலை முடிந்த சில நேரங்களில், முற்றிலும் தூசி நீக்கிய, கைப்பிடிகள் மினுக்கிய, வெள்ளை வெளேரென்ற மிருதுவான சோபாவில் அவன் சாய்ந்ததும் கனவுகள் உண்டாகும். அவனுடைய வீடு வெண்ணீல வர்ணத்திலும், திரைச்சீலைகள் விடியல் நிறத்திலும் இருக்கும். அலுவலகத்தில் இருந்து அவன் களைத்து வந்து கதவைத் திறந்ததும் நல்ல வாசனை வரும். பிரபல இத்தாலியன் டிசைனர் Georgio Armani உருவாக்கிய, ஒரு வயதேயான ஆட்டுக்குட்டியின் மெல்லிய சருமத்தினால் தயாரித்த கதகதப்பான மேலங்கியை கழற்றிவிட்டு, கணுக்கால்கள் புதையும் கார்ப்பட்டில் நடந்துபோய், அமர்ந்ததும் அரையடி கீழே பதியும் சோபாவில் கால்களை நீட்டி உட்காருவான். கணப்பு அடுப்பில் புகை தராமல் சிறு மணத்துடன் எரியும் பேர்ச் விறகுகளை மெல்லத் தள்ளிவிடுவான். இரண்டு கைகளை அகட்டி விரித்தாலும் விளிம்புகளைத் தொடமுடியாத அகலமான தட்டை கண்ணாடி வியில் 55 வது சானலை திருப்பி வைப்பான்.

அன்று அவன் வீடு திரும்பும்போது இரவு பத்து மணிக்கு மேல் ஆகிவிட்டது. 14 மணி நேரம் தொடர்ந்து வேலை. அதில் இரண்டு மணி நேர சம்பளத்தை லோரா வெட்டிவிட்டாள். மெல்லிய பனிப்புயல் தொடங்கிவிட்டது. குளிர் காலத்துக்கு பொருத்தமில்லாத சப்பாத்துகளை அவன் முடிச்சுப்போட்டு நீட்டிய லேஸ்களால் கட்டியிருந்தான். பனித்தூள்கள் உள்ளே போய் கால்கள் ஈரமாகிவிட்டன.

அந்த வீட்டின் நிலவறையை அமைத்தவன் மிகவும் விவேகமானவனாக இருந்திருக்கவேண்டும். இருட்டிலே வந்து அவன் துழாவி சாவியை போட்டு கதவை திறப்பான். அதற்கு பிறகு பத்தடி தூரம் தடவித்தடவி போய் ஸ்விட்சை கண்டுபிடித்து போடுவான். எலிகளை மிதிக்காமல் தந்திரமாக நடக்க பழகிக்கொண்டான். சிறு வயதில் பிறந்த நாள் விழாக்களில் கண்ணை கட்டிவிட்டு கழுதையின் படத்துக்கு வாலை சாியான இடத்தில் பொருத்திய பயிற்சி அப்போது அவனுக்கு மிகவும் உதவியது.

அவனுக்கு கடிதங்கள் வருவதில்லை. மாதம் ஒருமுறை வரும் அம்மாவின் கடிதம் நீல உறையில், பென்சிலால் விலாசம் எழுதப்பட்டு, மூன்று நாட்களாக உடைக்கப்படாமல் கிடந்தது. அன்றைக்கு அதை திறப்பதாக இருந்தான். அதில் இருக்கும் தகவல்களை தாங்கிக்கொள்ளும் பலத்தை அவன் இன்னும் சேகாிக்கவில்லை.
அவனுடைய பச்சை குளிர்பெட்டி அறையின் நடுவில் இருந்தது. மடகஸ்கார் கறை படிந்த சாரம் அவன் கழற்றி விட்ட இடத்திலேயே கிடந்தது. அவன் இல்லாத நேரத்தில் மாயக்குள்ளர்கள் வந்து அறையை சுத்தம் செய்து நறுமணம் பரப்பி வைக்கவில்லை. 'தூசி எங்கள் எதிரொலி ' என்று கறுப்பு எழுத்தில் எழுதிய மஞ்சள் வானில் துப்பரவுப் பணியாளர்கள் வந்து சுத்தம் செய்யவும் இல்லை. தரையில் விரித்த மெத்தை அவன் காலையில் விட்டமாமாதிரியே ஒரு எஸ்கிமோவின் இக்ளூ போல தடித்த போர்வையில் ஒரு துளை கொண்டதாக அவனுடைய உடம்பு திரும்பவும் நுழைவதை எதிர்பார்த்து கிடந்தது.

பிரிட்ஜின் கதவை திறந்து பார்த்தான். முந்தாநாள் சாப்பிட்டு மீதம் வைத்த பீட்ஸா துண்டு ஒன்றிருந்தது. ஹைனக்கன் பியர் கான் ஒன்று விசேட தினமொன்றில் குடிப்பதற்காக காத்துக் கிடந்தது. வேறு ஒன்றுமே இல்லை.

மறுபடியும் பனி கொட்டத் தொடங்கிவிட்டது. அவனுக்கு பசித்தது. இன்னும் ஒரு முறை சப்பாத்து அணிந்து, கோட்டை மாட்டி, தொப்பி போட்டு வெளியே போகும் சக்தி அவனுக்கில்லை. பீட்ஸாவை சாப்பிடுவோம் என்று யோசித்தான். ஆனால் அதை நிறைவேற்ற முடியவில்லை. அதை அவன் உண்ண முன்பே நித்திரையால் கவரப்பட்டு விாிப்புகள் இழுத்து மூடப்படாத அந்தப் படுக்கையில் விழுந்து அப்படியே தூங்கிவிட்டான்.
அவனுடைய பக்கத்து வீட்டில் குடியிருந்தது ஒரு வசதியான சீனக்குடும்பம். பொிய வீடு. இரண்டு இருக்கும் அறைகள்; இரண்டு கார்கள்; இரண்டு பிள்ளைகள்; இரண்டு நாய்கள். எல்லாமே பணக்காரருக்கான அறிகுறி. பத்து கியர் வைத்த சைக்கிளில் பையன் ஓடித்திாிந்தான்; அவள் பதினேழு வயது பள்ளி மாணவிபோல காணப்பட்டாள்.

மாலை வேளைகளில் அந்த நாய்கள் அவளுடன் உலாத்தப்போகும். அந்த தருணங்களை எதிர்பார்த்து அவன் பல நாட்கள், பல மணி நேரங்கள் காத்திருப்பான். ஒரு நாள் அவள் பெயரை கேட்கவேண்டும் என்று நினைத்தான். அன்றும் அவள் நாய்களுடன் உலாத்தச் சென்றபோது இவனும் அவள் திரும்பி வரும் பாதையை ஊகித்து அதற்கு எதிராக போனான்.

பனித்திவலைகளை தாங்கும் இமைகளும், நுனி சிவந்த நாக்கும், தோளில் தொட அனுமதி மறுத்து உச்சியில் சுருட்டி வைத்த முடியும், சிறிய மூக்கை நோக்கி மேடாக வளைந்து, பார்த்த கணத்தே காமத்தை தூண்டும் சொண்டுமாக அந்தப் பெண் சடை நாய்கள் முன்னே போக பின்னால் செல்லமாக அசைந்தாள். பக்கத்து வீட்டில் அவன் குடியிருக்கிறான். ஒரு 'ஹாய் ' சொல்லுவாள் என்று எதிர்பார்த்தான். அவளுக்கு அந்த எண்ணம் இருக்கவில்லை.

நாய்களுக்கு இருந்ததாகவும் தெரியவில்லை. கறுப்பு தோல் பூட்ஸ்கள் பனியிலே புதைய மறைந்து போனாள்.
இந்த நாட்டில் அவனுக்கு முகமன் கூறுவதற்கு யாருமேயில்லை. அவனுடன் வேலை செய்யும் டானியல், உயரமாக, உறுதியான உறுப்புகளுடன் துப்புரவுப் பணிக்கே படைக்கப்பட்டவன்போல இருப்பான். கயானா நாட்டுக்காரன். அவனைப் போலவே கள்ளமாக வந்தவன்; அவனைப் போலவே தனிமையானவன். அவனைப்போலவே வசதிகள் குறைந்த ஒடுக்கமான நிலவறையில், வீட்டுக்கு உடமைக்காரன் உஷ்ணத்தை கூட்டி வைக்கப்போகும் நல்ல தருணத்துக்காக ஏங்கி இருப்பவன்.

கறுப்பு எழுத்துகள் பொறித்த மஞ்சள் நிற வாகனத்தில் அன்று சாமான்களை ஏற்றும்போது டானியல் 'ஹாய் ' என்றான். இவன் வாய் திறக்கவில்லை. 'என்ன அந்த நெட்டை கொக்கு இன்றைக்கும் உன்னை ஏசினாளா ? '
'இல்லை, மூன்று நிமிடம் ஆகிவிட்டது. இதுவரை தப்பிவிட்டேன். '

'ஒரு நாளைக்கு சொல்லிவிடு. '

'என்னத்தை சொல்ல ? '

'நான் என்ன பாம்பா ? நீ மெக்ஸிக்கோ தேசியக்கொடி கழுகா ? எப்ப பார்த்தாலும் என்னை கொத்துகிறாயே! அப்படிச் சொல்லு. அவளுடைய மூதாதையர்கள் மெக்ஸிக்கோவிலிருந்து வந்தவர்கள். விளங்கிக்கொள்வாள். '
'எனக்கு அவ்வளவு தைரியமிருந்தால் உள்ளாடைகளை நான் மாற்றவே தேவையில்லை. ' அவன் முகம் இருண்டு கண்கள் ஈரமாகத் தொடங்கின. அதற்கு பிறகு வேலை முடியும்வரை அவர்கள் பேசவேயில்லை.
அன்றைக்கு பனிக்காலத்து அயனம் (solstice ) என்று அறிந்திருந்தான். வடபாதி உலகத்தின் மிக நீண்ட இரவு, குறைந்த பகல். அவன் நீண்ட நித்திரையில் இருந்தபோது வானம் சோம்பலாக இருக்கவில்லை. இரவு முழுக்க பனி பெய்துகொண்டே இருந்தது. ஜன்னல் வழியே பார்த்தபோது கார்கள் எல்லாம் வெள்ளித்தொப்பிகள் அணிந்திருந்தன. தரை உயர்ந்துகொண்டே வந்தது. பிரகாசம் கண்ணை அடித்தது. அவனுக்கும் உலகத்துக்கும் இருந்த ஒரே தொடர்பு அந்த ஜன்னல்தான். அதுவும் அரைவாசி பனியில் மூழ்கி இன்னும் சிறிது நேரத்தில் கல்லறைபோல ஆகிவிடும்.

அன்றைக்கு வேலைக்கு போவதா, விடுவதா என்பதை அவனால் தீர்மானிக்க முடியவில்லை. பாதைகள் சீரானால் ஒழிய பஸ்கள் ஓடாது. லோரா வேலை பாரங்களையும், முத்திரை குத்திகளையும் வைத்துக் கொண்டிருப்பாள். அன்று அவனுடைய சீட்டை மிகவும் சந்தோசத்தோடு கிழிக்க தயாராவாள். ஒரு பிங்க் கலர் தாளில் அவனுடைய பேரை எழுதி, வேலை நீக்கும் காரணத்தை குறித்து, தேதியையும் போட்டு அவனிடம் நீட்டுவாள். அப்பொழுதுகூட அவனுடைய முகத்தை பார்க்கமாட்டாள்.

மாலைவரை அவன் அசையவில்லை. பனிப்பொழிவும் அசையவில்லை. ஒரு பனிச்சிறையில் அகப்பட்டதுபோல அவனுக்கு மூச்சு முட்டியது. வாய்விட்டு கத்தவேண்டும் அல்லது கூரையை பிய்க்கவேண்டும் என்று தோன்றியது. அந்த மாலை குப்பை பைகளுக்கான மாலை. அந்த வீதியிலே குப்பை பைகள் எல்லாம் நிரையாக அடுக்கப்பட்டிருந்தன. எல்லா வீட்டு முகப்புகளிலும் அந்தந்த வீட்டு தராதரத்தை காட்டுவதுபோல நாலு, ஐந்து, மூன்று என்று குப்பை பைகள் கட்டப்பட்டு கிடந்தன. அடுத்த நாள் அதிகாலையிலேயே அவை மறைந்துவிடும்.
இவை அந்தஸ்தை குறிப்பவை. அவனுடைய வீட்டின் முன் ஒரு பை மாத்திரமே கிடந்து வீட்டுக்காரருடைய வறுமையை பறை சாற்றியது. பக்கத்து சீனக்காரர் வீட்டில் வழக்கம்போல ஆறு கறுப்பு தடித்த பொலிதீன் பைகள் சிவப்பு நாடாவினால் கட்டி இறுக்கப்பட்டு கிடந்தன. அதை பார்க்க பார்க்க எரிச்சலாக வந்தது.
அதற்கு முன்பு வராத ஒரு எண்ணம் அவனுக்கு தோன்றியது. ஆறு கறுப்பு பொலிதீன் பைகளை நிரப்புவது மாதிரி அப்படி என்ன குப்பை அவர்கள் சேர்க்கிறார்கள். அப்பொழுது இரவு பதினொரு மணியாகிவிட்டது. வீதியில் நடமாட்டம் குறைந்துபோய் இருந்தது. பனிப்பொழிவு நின்றுவிட்டது ஆனால் சந்திர ஒளியில் பனி நிலம் பகல்போல ஜொலித்தது.

இவன் தன்னுடைய கறுப்பு ஓவர்கோட்டை அணிந்து வெளியே போய் ஒரு குப்பை பையை உள்ளே தூக்கி வந்தான். அந்தப் பையை நடு அறையில் வைத்து அதற்கு மேல் ஏறி நின்றான். ஓங்கி உதைத்தான். துள்ளி மிதித்தான். அதன் பக்கங்களெல்லாம் பிாிந்து கொட்டத் தொடங்கியது. முட்டைகோசின் மணமும், அழுகிய தோடம்பழத்தோலின் நெடியும் அறையை நிறைத்தது. பிரசவ காலத்துக்கு முன்பாகவே கர்ப்பிணியின் பன்னீர்குடம் உடைந்ததுபோல குப்பை நாலு பக்கமும் வழிந்தது.

பெரும் ஓட்டத்திற்கு பிறகு இரையைப் பிடித்த விலங்கு மாதிரி அவனுடைய மூச்சு பெரிதாக வந்தது. வியர்வை பெருக்கெடுத்தது. மறுபடியும் பையைக் கட்டி அதே இடத்தில் வைத்துவிட்டு திரும்பியபோது அவனுடைய கையிலே எப்படியோ ஒரு பழைய கழித்துவிட்ட நீல ரிப்பன் காணப்பட்டது. அது சரசரவென்று ஒரு சிறு பாம்பைப்போல குளிர்ந்தும், மிருதுவாகவும் இருந்தது. அவளுடைய சருமமும் அப்படித்தான் இருக்கும் என்று அவன் மனம் ஊகித்தது.

அயனம் முடிந்து நாலு நாள் ஆகியும் அவளைக் காணவில்லை; நாய்களையும் தவறவிட்டுவிட்டான். இந்த நாய்கள் ஒரே ஜாதியில், ஒரே வயதுடையவை. இரண்டுமே ஓவல்டின் கலரில் சிறிது சடை வைத்து நீண்ட உடம்புடன் பழுப்பு நிறக் கண்களுடன் இருந்தன. அவற்றின் கழுத்துப் பட்டைகள் பதப்படுத்தப்பட்ட தோலினால் கறுப்பாக செய்யப்பட்டிருந்தன. வேண்டிய தூரம் நீளக்கூடியதும், சுருங்கக் கூடியதுமான தடித்த நைலோன் நாடாவின் நுனியில் அவை பிணைக்கப் பட்டிருந்தன. அதன் அடுத்த நுனி அவள் கையில் இருந்தது. அந்த நாய்கள் ஏற்கனவே பழக்கப்பட்ட சாலையில் துள்ளிக்கொண்டு முன்னால் பாய்ந்தும், ஓடியும், நின்றும், பனித்தரைக்கு மேலாக தொியும் ஒரு சில செடிகளை மோந்து பார்த்தும் விளையாடின.

அந்த சீனப்பெண்ணின் முகம் மஞ்சள் நிறத்தில் இருந்தது. சூரிய ஒளியில் இருந்து பல வருடங்கள் மறைத்து வைக்கப்பட்டதில் கிடைத்த வர்ணம் இது. அவளுடைய கீற்று கண்கள் இயற்கையாகவே பச்சையாக இருந்தன. உதடுகள் ரத்தச் சிவப்பு. இப்படியாக பச்சை, சிவப்பு, மஞ்சள் ஆகிய மூன்று சிக்னல் விளக்கு வர்ணங்களுடனும் இருந்த அவள் அவனுக்கு வேண்டிய சமிக்ஞையை தருவதற்காக காத்திருந்தான்.
அம்மாவுக்கு அனுப்புவதற்காக அவன் சேமித்து வைத்திருந்த காசை ஏற்கனவே எடுத்துவிட்டான். அதிலே குளிரில் இருந்து பாதுகாப்பதற்கு உத்திரவாதமளித்த அந்த புதிய ஓவர்கோட்டை வாங்கியிருந்தான். அதை அணிந்தபோது என்றும் இல்லாதமாதிரி அவனுடைய உடம்பு கதகதப்பு நிலையை அடைந்தது. அவளைக் கண்டதும் ஓவர்கோட்டை தாடைவரை இழுத்துவிட்டு, மூக்கும், கண்களும், வாயும் மாத்திரம் தொியும் விதமாக நின்றுகொண்டு, தற்செயலானதுபோல 'ஹாய் ' என்று சொன்னான். அவளும் பதிலுக்கு போதிய இடைவெளிகூட விடாமல் 'ஹாய் ' என்று திருப்பி கூறினாள். அப்படியே நாய்கள் வேகமாக இழுக்க பென்ஹர் குதிரைகள் ஓட்டிச் சென்றதுபோல நிமிடத்தில் மறைந்துபோனாள். அவள் போனபிறகு அந்த நடைபாதை அநியாயத்துக்கு சும்மா கிடந்ததை அவனால் தாங்கிக் கொள்ளமுடியவில்லை.

தீவிரமாக யோசித்துப் பார்த்தான். அவள் சீன மொழியில் நாய்களுடன் பேசியிருக்கலாம் என்றும் பட்டது.
அவனுடைய அம்மாவின் நீல உறைக் கடிதம் அன்றும் பிாிக்கப்படவில்லை. மண்ணெண்ணை விளக்கில் மணிக்கணக்காக குனிந்திருந்து, வயலட் கலர் பென்சிலால் அடிக்கடி நாக்கை தொட்டு, அதை எழுதியிருப்பாள். மாதாமாதம் பயணக் கடன் தீர்க்க அவன் அனுப்பும் காசு அந்த மாதம் கிடைக்கவில்லை என்று புலம்பியிருப்பாள். பக்கத்து வீட்டு பத்மனாபன் பணம் கிரமமாக அனுப்பி அவர்கள் காணியை மீட்டுவிட்டதை புளகாங்கிதத்தோடு அறிவித்திருப்பாள். இப்பவெல்லாம் தென்னையிலிருந்து தேங்காய் விழுவதில்லை; வானத்தில் இருந்து மழை விழுவதில்லை; ஆகாயத்தில் இருந்து குண்டுகள் விழுகின்றன என்றும் எழுதியிருப்பாள்.

கடைசி பாராவில் தன்னுடைய வியாதி பற்றிய குறிப்புகளை குணுக்கி, வியாதி உச்ச நிலையை அடைய கிட்டத்தட்ட எவ்வளவு காலம் எடுக்கும் என்பதை ஆதாரங்களோடு விளக்கியிருப்பாள். எந்த விரதம் முடிந்தது, எது ஆரம்பமாகிவிட்டது போன்ற விபரங்களும் ஞாபகமாக குறிக்கப்பட்டிருக்கும்.

வேலைக்கு போகத் தேவையில்லை. விடுமுறை. ஒரு நாள் சம்பளத்தை வெட்டும் சந்தோசம் லோராவுக்கு கிடையாது. பனிப்பிரதேசம் சூரிய ஒளியில் பளீரென்று கண்ணாடி வழியாக தெரிந்தது. அன்று காலையில் இருந்து அதையே பார்த்தவாறு இருந்தான்.

புசுபுசுவென்று சடை வைத்து கொழுத்த கறுப்பு அணில் ஒன்று எங்கிருந்தோ தோன்றியது. பனிக்குள் கால்கள் புதைய புதைய மீட்டுக்கொண்டு விரைந்தது; தொியாத இடத்துக்கு அவசரப்பட்டு வந்துவிட்டது போல திகைத்து இரண்டு கால்களிலும் நின்றது. கண்களில் மிரட்சியுடன் முன்னங்கால்களால் பனியை அகற்றியது. பின் தன் செய்கையின் அசட்டுத்தனத்தை யாராவது கவனிக்கிறார்களோ என்று அங்குமிங்கும் பயத்துடன் பார்த்தது. பிறகு சறுக்கிக்கொண்டு போனது. வெகுதூரத்துக்கு. வெள்ளிப் பனியில் கறுப்பு புள்ளி பாய்ந்து பாய்ந்து மறைந்து போனது.

அந்தக் காட்சி அவனை என்னவோ செய்தது. திடாரென்று அந்த மூன்று கால் கதிரையை தள்ளிவிட்டு எழுந்தான். அவனுடைய பச்சை நிற குளிர் பெட்டியின் மேல் அந்த மூடி திருகிய போத்தல் இருந்தது. அதை முக்கல்வாசி நிறைத்து, அவன் கார் தாிப்பு நிலையத்தில் மஞ்சளும், கறுப்பும் பூசிய தடுப்பு கம்புக்கு கீழே பொறுக்கிய சில்லறைக் காசுகள் கிடந்தன. அவற்றை திறந்து உடனேயே எண்ணிப் பார்க்கவேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது.

இரண்டு நாள் பழசான தினசரி பேப்பரை தரையிலே விரித்து போத்தல் காசுகளை அதிலே கொட்டினான். கொட்டிவிட்டு அவற்றை வகைப்படுத்தி எண்ணத் தொடங்கினான்.

கனடாவுக்கு வந்த நாளில் இருந்து அவனை அலைக்கழித்த விஷயம் ஒன்றிருந்தது. பத்துசதக்குற்றி சிறிய வெள்ளி வட்டமாக இருக்கும். ஐந்து சதக்குற்றியோ பெரிய வெள்ளி வட்டமாக இருந்தது. இது கனடிய அரசாங்கம் விட்ட பாரதூரமான பிழை என்ற கருத்து அவனுக்கிருந்தது. பெரிய வட்டமான குற்றி சிறிய வட்டத்திலும் பார்க்க உண்மையில் மதிப்பு குறைந்தது என்பதை அவனுடைய மனது ஏற்க சரியாக ஒரு வருடம் பிடித்தது. 25 சதக்குற்றிகள் மிகையாக இருந்தன. மீதி எல்லாம் 10,5,1 சதக் குற்றிகளே. லூனி என்று சொல்லப்படும் ஒரு டொலர்கூட இரண்டு இருந்தன. ரூனி, அதாவது இரண்டு டொலர் குற்றி, ஒன்றும் இருந்தது. ஆறுமாதக் கடும் உழைப்பில் அவனிடம் 48.19 டொலர் சேர்ந்திருந்தது.

மனதினால் ஒரு கணக்கு போட்டுப் பார்த்தான். இன்னும் சரியாக எண்பத்தி மூன்று வருடங்களில் ஒரு ரொயோட்டா கார் இரண்டாம் கையாக வாங்கும் அளவுக்கு அவனிடம் காசு சேர்ந்துவிடும்.
அந்த எண்ணத்தில் அவனுடைய மனது பூரித்தது. இந்த சந்தோசத்தை எப்படியும் கொண்டாடிவிட வேண்டும் என்ற ஆசையேற்பட்டது. நேராக நடந்து பழைய நீல ரிப்பன் பாதி ஒட்டி வைத்திருக்கும் பச்சை குளிர்பெட்டியின் கதவை திறந்தான். அங்கே நடுநாயகமாக அவன் ஒரு விசேட தினத்துக்காக பாதுகாத்துவந்த ஹைனக்கன் பியர் கான் இருந்தது. அதைக் கையிலே எடுத்துக்கொண்டு கதவை சத்தத்துடன் சாத்தினான்.

மூன்று கால்கள் மட்டுமே விசுவாசமாக உழைக்கும் அந்த நாற்காலியில் அவன் சாய்ந்திருந்து, ஆள்காட்டி விரலை வளைத்து பியர் கானைத் திறந்து, அதை ஒரு கிளாஸில் ஊற்றிக் குடிக்கும் பொறுமைகூட இன்றி, வலது கையால் தூக்கி உயரப்பிடித்து வாய்வைத்து இரண்டு கடவாய்களிலும் ஒழுக குடித்தான். அப்பொழுது அவனது இடதுகை 55 வது சானலை தேடியது.

நன்றி - திண்ணை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக