30/01/2013

'மாஜினி' - இரா.ரங்கசாமி - ராதாவனமாலி



எழுதவேண்டும், எழுத்தாளனாக, பத்திரிகையாளனாக வேண்டும் என்ற தனது வேட்கை 92 வயது வரை மாஜினி என்கிற இரா.ரங்கசாமிக்குத் தணியவே இல்லை! ஆம்! 92 வயதுவரை எழுதிக்கொண்டே இருந்தவர் மாஜினி.

1920-ஆம் ஆண்டு ஏப்ரல் 14-ஆம் தேதி மதுரையில் பிறந்தார். தந்தை இராமாநுஜம், தாயார் சுப்பம்மாள். போக்குவரத்துக் காவலரின் மகனாகப் பிறந்த ரங்கசாமி, இளமையிலேயே வறுமையின் கொடுமையை அனுபவித்தவர். மாஜினி, வறுமையின் பிடியில் சிக்கித் தவித்தபோதிலும் படிப்பைத் தொடர்ந்தார். மதுரை நாடார் பள்ளியிலும், யூனியன் கிறித்தவ உயர்நிலைப் பள்ளியிலும், மதுரைக் கல்லூரியிலும் அவரது தந்தை மிகுந்த சிரமங்களுக்கிடையே அவரைப் படிக்க வைத்தார். தந்தையின் மனநிலை அறிந்து நன்கு படித்த மாஜினி, உயர்நிலைப் பள்ளி இறுதித் தேர்வில் வரலாற்றுப் பாடத்தில் மதுரை மாவட்டத்திலேயே முதலிடத்தைப் பெற்றதற்காகப் பரிசும் பெற்றார்.

எட்டாம் வகுப்புப் படிக்கும் மாணவராக இருந்தபோதே சிறந்த எழுத்தாளராகவும், பத்திரிகையாளராகவும், நூலாசிரியராகவும் ஆகவேண்டும் என்ற தீராத வேட்கை இவருக்குள்ளே இருந்தது என்றால், அவரது எழுதுகோலின் பிரசவ வேதனையின் வலி எத்தகையது என்பதை உணர்ந்துகொள்ள முடியும்.

இளம் வயதிலேயே தாம் ஓர் எழுத்தாளனாக வேண்டும் என்ற லட்சிய வேட்கை மாஜினிக்கு இருந்த அளவுக்கு நாட்டுப்பற்றும், அந்நியர் ஆட்சியின் அடக்குமுறை கண்டு வெகுண்டு, நாட்டின் விடுதலைக்குப் பாடுபடவேண்டும் என்ற கொள்கைப்பிடிப்பும் இருந்தன. மாணவப் பருவத்திலேயே, விடுதலைக்காகத் தன்னை அர்ப்பணித்துக்கொண்டு, கதராடையே உடுத்துவது என்று உறுதி கொண்டார். விடுதலை வேள்வியில் தன்னை இணைத்துக்கொள்ளக் கருதி காங்கிரஸில் இணைந்தார். மதுரையில் மாணவர் இயக்கத்தை வளர்க்கும் பணியில் தொய்வில்லாமல் பாடுபட்டார். சமுதாயச் சீர்கேடுகள், ஏற்றத்தாழ்வுகள், தீண்டாமை ஒழிப்பு ஆகியவற்றை ஒழிப்பதிலும் அயராது பாடுபட்டார்.

மாணவராக இருந்தபோதே பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள் போன்றவற்றில் கலந்துகொண்டு பல தலைவர்களின் சொற்பொழிவுகளைக் கேட்கும் நல்வாய்ப்புகளையும் பெற்றார். இதனால், அவரது மதுரைக் கல்லூரிப் படிப்பு ஓராண்டுடன் முடிவடைந்தது.÷ஆனந்த போதினி, பிரசண்ட விகடன் ஆகிய இதழ்கள் அக்காலத்தில் பல எழுத்தாளர்களை உருவாக்கின. மாஜினி எழுத்துலகுக்கு நுழைவதற்கும் இவ்விரு இதழ்கள்தான் துணைநின்றன - தூண்டுகோலாக அமைந்தன. எழுத்தாளனாக வேண்டும் என்ற லட்சியவெறியை மனதில் இருத்தி, பல நூல்களைப் படித்தார். சிறுகதைகள் எழுதத்தொடங்கினார்.

ரங்கசாமியாக இருந்தவர் எழுத்துலகில் புனைபெயர் தாங்கி அறிமுகமாக வேண்டும் என்று கருதினார். என்ன பெயரில் எழுதுவது என்ற சிந்தனையில் இருந்தபோது, தமிழறிஞரான வெ.சாமிநாத சர்மாவின் "இத்தாலியின் வரலாறு' என்ற நூலைப் படித்தார். அந்நூலைப் படித்த பிறகே "மாஜினி' என்ற புனைபெயரை வைத்துக்கொண்டேன் என்று கூறியுள்ளார்.

 ""இத்தாலியின் வரலாறு என்ற வீரகாவியத்தின் நாயகர் இருவர். ஒருவர் கரிபால்டி, மற்றவர் மாஜினி. இவர்களில் மாஜினி இத்தாலி நாட்டு எழுத்துலக சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தி. விண்ணரசை மண்ணிலே கொண்டுவரத் தனது பேனாவைக் கொண்டு பாடுபட்டவர். அடிமைச் சங்கிலியை உடைத்து நொறுக்கி, கரிபால்டியுடன் இணைந்து நின்று போராடித் தூக்குமேடை சென்றவர்'' என்று தனக்குப் புனைபெயர் கிடைத்ததைப் பதிவுசெய்துள்ளார்.

1942-ஆம் ஆண்டிலிருந்து "மாஜினி' என்ற புனைபெயருடன் வாசகர்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாக எழுதினார். இவரின் முதல் படைப்பு "பார்வதியின் உயில்' என்ற சிறுகதை. இக்கதையை 1942-ஆம் ஆண்டு ஆனந்த விகடனுக்கு அனுப்பிவைத்தார். அடுத்த மாத இதழிலேயே அக்கதை பிரசுரமானது. பின்னர் அடுத்தடுத்து ஆனந்தவிகடன், கல்கி இதழ்களில் மாஜினியின் சிறுகதைகள் வெளிவரத் தொடங்கின. அல்லயன்ஸ் நிறுவனத்தார் வெளியிட்ட "ஐம்பது சிறந்த தமிழ்ச் சிறுகதைகள்' என்ற தொகுப்பில் மாஜினியின் "குலதெய்வம்' சிறுகதை இடம்பெற்றது.

பத்திரிகையாளராக ஆகவேண்டும் என்ற மாஜினியின் அடுத்த லட்சியவேட்கையைத் தணித்தது "தினத்தந்தி' நாளிதழ். தினத்தந்தி நாளிதழின் நிறுவனர் ஆதித்தனாரைச் சந்தித்து தன்னை அறிமுகம் செய்துகொண்டார். ஆதித்தனார், ஒரு செய்தியை மொழிபெயர்க்கச் சொன்னார். அதைச் சிறந்த முறையில் மொழிபெயர்த்திருந்தார் மாஜினி. பிறகு தினத்தந்தி "மதுரை' பதிப்பில் பணியில் சேர்ந்து மூன்று மாதம் பணியாற்றினார். பின்னர், குடும்பத்தாரின் வற்புறுத்தலால் குன்னூரில் உள்ள வட்டாட்சியர் அலுவலகப் பணியில் சேர்ந்தார். சிலநாள்கள் அங்கு பணிபுரிந்தவர், அந்தப் பணியில் மனநிறைவு தோன்றாமல் மீண்டும் தினத்தந்தி நாளிதழுக்கே வந்து சேர்ந்தார். அக்காலத்தில் தினத்தந்தியில் மாஜினி எழுதிவந்த தலையங்கங்கள், பிரபல தலைவர்கள், கல்வியாளர்கள், பேரறிஞர்கள் போன்றோர் பலரின் பாராட்டைப் பெற்றன.

1946-இல் தினத்தந்தி சென்னைப் பதிப்பு தொடங்கப்பட்டது. "தமிழன்' வார இதழும் இந்த அலுவலகத்திலிருந்தே வெளிவந்தது. இவ்விரு இதழ்களிலும் மாஜினி பணியாற்றினார். பின்னர் சில கருத்து வேறுபாடு காரணமாக தினத்தந்தியை விட்டு விலகி, "தமிழ்நாடு' பத்திரிகையில் சேர்ந்தார். மாஜினியின் "சுவர்க்கபூமி' என்ற சிறுகதை இவ்விதழில் இடம்பெற்று பலரது பாராட்டைப் பெற்றது.

பிறகு, தமிழ்நாடு பத்திரிகையின் பணியைவிட்டு, தாமே ஒரு வார இதழைத் தொடங்குவது என்ற தீர்மானத்துடன் "புரட்சி' என்ற பெயரில் இதழைத் தொடங்கினார்.

பத்திரிகை நடத்துவது என்றால் அவ்வளவு எளிதானதா என்ன? பொருளாதார நெருக்கடியை "புரட்சி' இதழும் சந்தித்தது. இவ்விதழுக்கு நடிகர் எம்.ஆர்.ராதா மற்றும் என்.எஸ்.கிருஷ்ணன் ஆகியோர் உதவியபோதிலும், "ஜனசக்தி' இதழில் இருந்து மாஜினிக்கு அழைப்பு வந்ததால், ஜனசக்தி ஆசிரியர் குழுவில் இணைந்தார். ஜனசக்தியில் மாஜினி எழுதிய "உரைகல்' என்ற பகுதி பலரையும் ஈர்த்துப் பராட்டுகளை அள்ளிவீசியது. ஜனசக்தியில் தோழர் ஜீவா உள்ளிட்ட கம்யூனிஸ்டு தலைவர்கள் பலரிடம் நெருங்கிப்பழகும் வாய்ப்புக் கிடைத்ததைப் பற்றி "எனது மலரும் நினைவுகள்' என்ற நூலில், சிலாகித்து எழுதியுள்ளார். பிறகு "சோவியத் நாடு' இதழில் இணை ஆசிரியராகப் பணியாற்றும் நல்வாய்ப்புக் கிடைத்தது. கூடவே "தாமரை'யை நடத்தும் பொறுப்பையும் ஏற்று நடத்தினார்.

சோஷலிசத் தத்துவத்தை மையமாகக்கொண்ட வரலாற்று நூல்கள், நாவல்கள், அம்பேத்கரின் நூல்கள், ஆய்வுரைகள் ஆகியவற்றை மாஜினி மொழிபெயர்த்தளித்தார். சிந்துமுதல் கங்கை வரை, சோவியத் யூனியன் தகவல் களஞ்சியம், பணநாயகம், சோஷலிச சோதனை, யுவதிகள், சகோதரிகள், உல்லாசக் குடும்பம், நாலாயிரம் வயது மனிதன், பண்டைக்கால இந்தியா, நான் கல்லறையில் இருந்து பேசுகிறேன் முதலிய 17-க்கும் மேற்பட்ட நூல்களை மொழிபெயர்த்துள்ளார். ஜனசக்தியில் பணியாற்றிக் கொண்டிருக்கும்போதே, "நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்' என்ற புத்தக நிறுவனத்தில் மொழிபெயர்ப்பாளராகச் சேர்ந்தார்.

மொழிபெயர்ப்பாளருக்கு மதிப்பும், எந்தவிதமான அங்கீகாரமும் தமிழுலகில் கிடைப்பதில்லை என்பதை ஓரிடத்தில் வருத்தத்துடன் பதிவுசெய்துள்ளார் மாஜினி.

தனது 92-வது அகவையிலும் விடாமல் தொடர்ந்து எழுதிவந்த மாஜினி, 2010-ஆண்டு மார்ச் 23-ஆம் தேதி இயற்கை எய்தினார்.

பொதுவுடைமைக் கொள்கைகளைப் பரப்புவதற்குப் பெருந்துணை நின்றும், பத்திரிகை உலகில் தடம்பதித்தும், எழுத்தாளராகக் கோலோச்சியும், மொழிபெயர்ப்புத் துறைக்கு உரம்சேர்த்தும் தம் லட்சியப் பயணத்தை நினைத்தபடி இனிதே பயணித்து, நிறைவுசெய்து மக்கள் மனதில் என்றென்றும் நிலைத்துவிட்டார்.

நன்றி - தமிழ்மணி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக