16/10/2012

இதோ, இன்னொரு விடியல்! - வண்ணநிலவன்


ஆறு மணிக்குக் கூட்டம். இன்னும் இஷ்யூ ரெடியாகவில்லை. முப்பத்திரண்டே பக்கங்கள்தான். இரண்டு சிறுகதைகள், ஒரு கட்டுரை, எட்டுக் கவிதைகள்! ஆறு கவிதைகளை முள்ளுக்காடு ராஜுவே எழுதியிருந்தான். ஆசிரியர் முகில், இரண்டு கவிதைகள் எழுதியிருந்தார். இவை தவிர, தரமான பட்டுச் சேலைகளுக்கு கே.வி.சில்க்ஸ், நாவிற்கினிய இனிப்புகளுக்கு மீனா ஸ்வீட்ஸ், ஓட்டல் ஆனந்தா, ராஜா ராணி காபி பார், கீர்த்தி ஸ்டோர்ஸ் என உள்ளூர் விளம்பரங்களால் மற்ற பக்கங்களை நிரப்பியிருந்தார் முகில்.

'வாசல் கதவும் ஜன்னல்களும் திறந்துகிடக்கின்றன, உன்னை எதிர்பார்த்து' என்றொரு கவிதையும், 'தோட்டத்தில் குண்டு மல்லிகைகள் பூத்திருக்கின்றன, உன்னால் பறிக்கப்படுவதற்காக' என்றொரு கவிதையும் எழுதியிருந்தார் ஆசிரியர் முகில். எட்டாவதும் பத்தாவதும் படிக்கிற இரண்டு பிள்ளைகளின் தந்தையான அவர் காதல் கவிதைகள் எழுதியது முள்ளுக்காடு ராஜுவுக்கு என்னவோ போலிருந்தது!

முத்தையா என்ற முகிலுக்கு இலக்கியம் என்றால் 'அ'னா, 'ஆ'வன்னாகூடத் தெரியாது. ஏதோ ஓர் அலுவலகத்தில் வேலை பார்த்து வந்தார். சித்த சுபபோதினி விளக்கச் சொற்பொழிவுகள், யோகக்கலை என்று ஊரில் எந்தக் கூட்டம் நடந்தாலும், முத்தையா ஆஜராகிவிடுவார். அந்த மாதிரிதான் அவர் இலக்கியக் கூட்டங்களிலும் கலந்துகொண்டு வந்தார். கதாபாத்திரங்களின் பெயர் வராதவாறு 'அவன், இவன்' என்று எழுதினால் போதும்... அந்தக் கதை இலக்கியத் தரமாகிவிடும் என்பது முகிலின் திடமான இலக்கியக் கொள்கை.

'பூக்காரி தெருவில் போனாள்
வாசம் ஜன்னல்
எட்டிப் பார்த்தது' என்ற ரகத்தில், நேரம் கிடைக்கும்போதெல்லாம் வார்த்தைகளை மடக்கி மடக்கிப் போட்டுக் கவிதைகளை எழுதித் தள்ளிக்கொண்டே இருந்தார். ஜன்னல் இல்லாமல் அவருக்குக் கவிதை எழுத வராது. அவரது அலுவலகச் செல்வாக்கினால், உலக இலக்கியங்களைக் கரைத்துக் குடித்த இலக்கியச் செல்வர் ஆர்.எஸ்.ராமநாதன் கூட அவரது கவிதைகளைப் பாராட்ட ஆரம்பித்திருந்தார். ஆர்.எஸ்.ராமநாதன் நடத்தி வந்த 'பேனா' என்ற பத்திரிகைக்கு ஏராளமான விளம்பரங்களை வாங்கிக் கொடுத்திருக்கிறார் முகில்.

தனது 'தென்பொருநைத் தென்றல்' வெளியீட்டு விழாவுக்குக்கூட ஆர்.எஸ்.ராமநாதனைத்தான் அழைத்திருந்தார் முகில். இலக்கியச் செல்வர் ஆர்.எஸ்.ராமநாதன் காலையிலேயே ரயிலில் வந்து இறங்கிவிட்டார். அவரை முகிலும் முள்ளுக்காடு ராஜுவும் இதர இலக்கிய அன்பர்களும் ரயில் நிலையத்திலிருந்து அழைத்துச் சென்று, பகவதி லாட்ஜில் தங்க வைத்திருந்தனர்.

'தென்பொருநைத் தென்றல்' என்று யாராவது இவ்வளவு நீளமான பெயரைச் சொல்லி, கடைகளில் பத்திரிகையைக் கேட்டு வாங்குவார்களா என்ற தனது சந்தேகத்தை முள்ளுக்காடு ராஜு ஆரம்பத்திலேயே முகிலிடம் சொல்லிப் பார்த்தான். 'பொருநை' என்ற பெயரே போதும் என்பது முள்ளுக்காட்டின் அபிப்பிராயம். தெருத் தெருவாகப் பஞ்சு மிட்டாய் விற்றுக்கொண்டு இருந்த தன்னைக் கூப்பிட்டு வேலை போட்டுக் கொடுத்த முகிலிடம் அதிகமாகப் பேசினால் வேலையை விட்டே நிறுத்திவிடுவாரோ என்று முள்ளுக்காடு பயந்தான். தவிர, அவனுடைய ஆறு கவிதைகள் வேறு முதன்முதலாகப் பிரசுரமாகின்றன. முதல் இதழிலேயே ஆறு கவிதைகள் வெளியாகிறதென்றால், அது சாமான்யமான காரியமா! அதுவும் வரிக்கு வரி கலையும் இலக்கியமும் மிளிரும் ஒரு பத்திரிகையில் கவிதைகள் பிரசுரமாவது என்பது சாதாரண விஷயமே அல்ல! உலகத் தரம் வாய்ந்த இலக்கிய நிகழ்வல்லவா அது?!

முள்ளுக்காடு ராஜு, பஞ்சு மிட்டாய் வியாபாரத்தையும் இலக்கியப் பத்திரிகைகளில் பணிபுரிவதையும் மாறி மாறிச் செய்து வந்தான். தென்பொருநைத் தென்றலுக்கு முன்பே அர்ச்சனா, பாகீரதி போன்ற கலை இலக்கியத் திங்கள் இதழ்களில் பணிபுரிந்த அனுபவம் முள்ளுக்காடு ராஜுவுக்கு இருந்தது. அவை எல்லாமே இரண்டு மூன்று இதழ்களோடு நின்றுவிட்டன.

இரண்டு மாதம் உதவி ஆசிரியர் வேலை, திரும்பவும் பஞ்சு மிட்டாய் வியாபாரம் என்று அவனது கலை இலக்கிய நாட்கள் கழிந்துகொண்டு இருந்தன. என்ன வேலை பார்த்தாலும், கவிதை எழுத மட்டும் மறக்க மாட்டான். தினசரி நாலு கவிதைகளாவது எழுதினால்தான், அவனது கலை இலக்கிய தாகம் அடங்கும்.

'பஸ்ஸில் நாம் மட்டுமா செல்கிறோம்? இன்ஜினும் இருக்கைகளும் அல்லவா செல்கின்றன!' என்ற முள்ளுக்காடு ராஜுவின் கவிதை, அந்நியமாதலை அப்படியே உரித்துக் காட்டுகிறது என்று பிரபல கலை இலக்கிய விமர்சகர் டி.ஹெச்.சண்முகம் அடிக்கடி கூட்டங்களில் குறிப்பிடுவார். முள்ளுக்காடு ராஜுவின் கவிதைகளை மேற்கோள் காட்டிப் பேசும்போது, அவருக்கு எப்போதும் தும்மல் வந்துவிடும். தும்மலும் அந்நியமாதலின் உடல்ரீதியான விளைவு என்பார் சண்முகம்.

கயல் அச்சக முதலாளி மணி, மேஜை டிராயரில் வெகு நேரமாக எதையோ தேடிக்கொண்டு இருந்தார். மேஜையில் காகிதங்களும், புரூஃப்களும், ஃபைல்களும் தாறுமாறாகக் கிடந்தன. மணியால் எதையாவது தேடாமல் இருக்க முடியாது. அச்சகத்தினுள் இயந்திரங்கள் ஓடுகிற சத்தமும், வேலையாட்களின் பேச்சுக் குரல்களும் கலவையாகக் கேட்டன. முள்ளுக்காடு ராஜு, முதலாளியின் தலைக்கு மேலே இருந்த கடிகாரத்தைப் பார்த்தான். மணி நான்கு ஆகியிருந்தது.

தென்பொருநைத் தென்றல் வெளியீட்டு விழா, மாலை ஆறு மணிக்கு! இலக்கிய சாம்ராட் ஆர்.எஸ்.ராமநாதனை லாட்ஜிலிருந்து முகிலே அழைத்து வந்துவிடுவார். ஒரு ஐம்பது பிரதிகளாவது ஹாலுக்கு எடுத்துக்கொண்டு போனால் போதும்!

''ஃபாரம் எல்லாம் மடிச்சாச்சு. கட்டிங் பண்ணிப் பின் போட வேண்டியதுதான்'' என்று, தேடுவதை நிறுத்தாமலேயே பேசினார் மணி.

'அர்ச்சனா' பத்திரிகையும், 'பாகீரதி' பத்திரிகையும்கூட இதே அச்சகத்தில்தான் அச்சிடப்பட்டன. அந்தப் பத்திரிகைகளையும் ஆர்.எஸ்.ராமநாதன்தான் வெளியிட்டு, மிகுந்த உற்சாகமாகப் பேசினார். 'அர்ச்சனா' பத்திரிகையை நடத்தியவர் வாட்ச் கடை அதிபர். 'பாகீரதி'யை ஆரம்பித்தவர் ஸ்வீட்ஸ் ஸ்டால்காரர். பத்திரிகை வெளியிட யார் கூப்பிட்டாலும், ஆர்.எஸ்.ராமநாதன் சளைக்கவே மாட்டார். 'அர்ச்சனா' விழாவில், 'இலக்கியத்தின் விடிவெள்ளி' என்று அந்தப் பத்திரிகையைப் போற்றினார். 'பாகீரதி' வெளியீட்டு விழாவில், 'இதோ தமிழ் இலக்கியத்தின் விடியல்' என்றார். இரண்டு பத்திரிகைகளுமே நின்றுவிட்டன. என்றாலும், மங்காத உற்சாகத்துடன் ரயிலேறி, தென்பொருநைத் தென்றலை வெளியிட வந்துவிட்டார். ஊக்கமும் உற்சாகமும் ததும்பி வழியும் தமிழ் இலக்கியப் பிதாமகரல்லவா ஆர்.எஸ்.ஆர்.?

மலையாளக் கவி சுள்ளிக்காட்டுக்கும் தனக்கும் முக ஜாடை ஒத்திருப்பதாக ராஜுவுக்கு நினைப்பு! அதனால்தான் தன் பெயருக்கு முன்னால் முள்ளுக்காடு என்று போட்டுக்கொண்டு இருந்தான். மற்றபடி, கையகல முள்ளுக்காடுகூட முள்ளுக்காடு ராஜுவுக்குக் கிடையாது.

ராஜு வெளியே போய் டீ சாப்பிட்டுவிட்டு வருவதற்குள், மணி தயாராக நூறு பத்திரிகைகளைக் கட்டி வைத்திருந்தார். ஒரு ஆட்டோவில் பத்திரிகைக் கட்டை ஏற்றிக்கொண்டு, விழா நடைபெறும் ஹாலுக்குப் போனான் முள்ளுக்காடு. ஹாலில் பதினைந்து இருபது பேர் இருந்தனர். மேடையின் அருகே கட்டை வைத்துவிட்டு நிமிர்ந்தபோது, ஹாலுக்குள் ஆசிரியர் முகிலும் ஆர்.எஸ்.ராமநாதனும் நுழைந்துகொண்டு இருந்தனர். கட்டைப் பிரித்து ஒரு பத்திரிகையை எடுத்தான் ராஜு. 'தென்பொருநைத் தெண்ரல்' என்ற பத்திரிகைத் தலைப்பின் கீழ், 'ஆசிறியர் முகில்' என்று அச்சாகியிருந்தது.

நன்றி - விகடன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக