07/09/2012

கண்ணகி மானுடப் பெண் அல்ல! - பேரா. இராம. இராமநாதன்


சிலப்பதிகாரத்தின் முதன்மைத் தலைவன் கோவலனே. முதன்மைத் தலைவி கண்ணகியே. இக்காப்பியம் இருவரின் குடும்ப வாழ்க்கையையே அலசுகிறது. குடும்ப வாழ்க்கை தொடங்கும்போது கோவலனின் வயது பதினாறை நெருங்கிக் கொண்டிருந்தது எனச் சிலம்பு பதிவு செய்கிறது. பதினாறு வயதிற்கு முந்திய இளமை வாழ்க்கையைச் சிலம்பு காட்டவில்லை. குடும்ப வாழ்க்கை தொடங்கி அவ்வப்போது நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளின் வழியாகவே கோவலனின் இளமை வாழ்க்கையை, ஆய்ந்து பொறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது. இக்காப்பியம் வரலாறு கூறுவதால்தான் அதன் பிறப்புத் தொடங்கி, வளர்ப்புப் படிநிலைகளைச் சொல்ல வேண்டியதாக உள்ளது. சில உயர்ந்த உண்மைகளை உலகிற்கு உணர்த்தத் திட்டமிட்டுச் செய்த காப்பியம் இது. ஆதலால் நாடகப் பாங்கில் தொடங்கி, அறிவூட்டுவதற்கு வேண்டிய நிகழ்ச்சிகளை நிரல் படுத்தாமல் ஆர்வத்தைத் தூண்டுமாறு ஆங்காங்கே வளர்த்து இளங்கோவடிகள் பின்னியுள்ளார்.
எனவே நிகழ்ச்சிகளின் வழி அறியும் செய்திகளிலிருந்து கோவலன் & கண்ணகி இளமை வாழ்க்கையைப் பற்றி ஊகப்படுத்தியே அறிய வேண்டியுள்ளது.

கி.பி. 2&ஆம் நூற்றாண்டு சிலப்பதிகாரம் தோன்றிய காலம் என்று ஆராய்ச்சியாளர்களால் கூறப்பட்ட காலத்தையே எடுத்துக் கொள்ளலாம். இந்தக் காலத்தில் தமிழகம் எவ்வாறு இருந்தது? தமிழ் மக்கள் ஒழுகலாறுகள் எவ்வாறு இருந்தன? சிலப்பதிகாரத்தில் உள்ள பல பழக்க வழக்கங்கள் இன்றளவும் தமிழ் மக்களால் பின்பற்றப்பட்டு வருகின்றன. என்றாலும் இளங்கோவடிகள் தெரிவிக்க விழைந்த சில அடிப்படை உண்மைகள் மறக்கப்பட்டோ அல்லது உணரப் பெறாமலோ உள்ளனவோ என்ற எண்ணம் என்னுள் எழுவது உண்டு. அவற்றைப் பற்றியும் சிந்திக்க எண்ணுகின்றேன்.

போகநீள் பூகழ் மன்னும் புகார் நகரில் வான்நிகர் வண்கை மாநாய்கன் குலக்கொம்பாகக் கண்ணகி தோன்றினாள். பன்னிராண்டு வயதுடையவள். திருமகளைப் போன்ற வடிவுடையவள். இவள் நிறம் அருந்ததியை ஒத்தது. இவள் பெயர் பெருங் குணங்களாலேயே நிலைபெற்று விளங்கிற்று. இவளுடைய இளமை வாழ்க்கை பற்றி அடிகள் பதிவு செய்யவில்லை. எவ்வாறு பெற்றோர்களால் வளர்க்கப் பெற்றாள் என்றும் தெரியாது. கல்வி உண்டா? தெரியவில்லை. ஆனால், ஒன்றுமட்டும் உறுதி. குடிமைப் பண்பும், குலக்குணமும் நிறைந்து விளங்குமாறு இவள் வளர்க்கப்பட்டுள்ளாள் என்பது மட்டும் உறுதி.
கோவலன் கண்ணகி திருமணம் பெற்றோர் முடிவு செய்து சடங்குகளுடன் நடந்துள்ளமை குறிக்கத் தக்கது. ஒருவரை ஒருவர் பார்த்து ஒருமைப்பட்டுப் பெற்றோரிடம் தெரிவிக்க நடந்த திருமணம் என்றுகூறக் குறிப்பேதும் இல்லை. மாநகரில் சடங்குகளை நடத்தி மணம் ஈந்தார் பெற்றோர் என்பது மட்டுமே பதிவாகியிருக்கிறது. பெற்றோர் கற்பு நெறிப் படுத்தியுள்ளனர் என்பதும் தெளிவு. இதனைத் தொல்காப்பியர் கற்பியலில், கற்பெனப்படுவது கரணமொடு என்று சுட்டுவார்.

சிலப்பதிகாரக் காலத்தில் கடவுள் நம்பிக்கை என்ற கருத்துண்மையை முதலாவதாக எடுத்துக் கொள்ளலாம். அடிகளே கடவுள் நம்பிக்கை உடையவராகவே தெரிகின்றார். சிலப்பதிகாரக் காப்பியத்தின் தலைவி என்று கண்ணகியை அடிகள் யாண்டும் எடுத்துக் கூறவில்லை. அறிமுகப்படுத்தும் முதற்பாத்திரமாகத்தான் கண்ணகியை அவர் புலப்படுத்துகின்றார். இயல்பாகவே கடவுள் வாழ்த்து என்ற தொடக்கத்தை அடிகள் பின்பற்றவில்லை. சிலப்பதிகாரக் காப்பியத்திற்கு முன்பு பல காப்பியங்களும் நூற்களும் தமிழில் இருந்திருத்தல் வேண்டும். அவற்றில் கடவுள் வாழ்த்து இருந்தமை அறிய முடியவில்லை. சங்க இலக்கியத்திற்குப் பின்னர் வந்த பனம்பாரனார் கடவுள் வாழ்த்துப் பாடிச் சேர்த்ததாகக் கூறுவர். ஆனாலும், இளங்கோவடிகளுக்குக் கண்ணகியைத் தெய்வமாகவே அறிமுகப்படுத்தும் பாங்கு இங்கு நினைக்கத் தக்கது.

அவளுந்தான், போதிலார் திருவினாள் புகழுடை வடிவென்றும் பெயர்மன்னும் கண்ணகி என்று கண்ணகியை பெண்கள் வழிபடும் ஓர் ஒப்பற்ற தெய்வமாகவே கூறுவது இங்கு நன்குச் சிந்திக்கத் தக்கது. பெண்கள் அழகைப் பாராட்டலாம். அவள் அறிவைப் பாராட்டலாம். ஆனால், அடிகளோ பெண்கள் அவளைப் பார்த்தவுடன் கையால் தொழுது வணங்கினர் என்பது தமிழகத்தில் சிறுதெய்வ வழிபாட்டிற்குத் தொடக்கமாகக் கருத இடம் தருகின்றது. இளங்கோவடிகள் கண்ணகியைக் கோவலன் மனைவியாகக் கூறினாலும் கோவலனும் அவளைத் தன் மனைவி என்று கருதி முதலிரவில் அவளோடு இன்பம் துய்க்க முயன்றான் என்பதும் சிலப்பதிகாரத்தில் மனையறம்படுத்த காதையில் சொல்லப்படுகிறது. ஆனாலும் கண்ணகிபால் கோவலன் தான் விரும்பிய கூட்டத்தைப் பெற முடியவில்லை என்பதும் அடிகளால் இலைமறைக் காயாக உணர்த்தப்படுகிறது. இங்கு, அடிகளின் சொற்களை நாம் கூர்ந்து பார்த்தல் இன்றியமையாதது. கண்ணகியின் பெற்றோரும் கோவலனின் பெற்றோரும் தாங்களாகவே விரும்பித் தங்கள் குடும்பங்களுக்குள் ஓர் ஒத்த உறவை ஏற்படுத்திக் கொள்ளவே இவர்கள் திருமணம் ஊர்மெச்ச நடந்தது என்பதை, இருபெருங் குரவரும் ஒரு பெரு நாளால் மணவணி காண மகிழ்ந்தனர் என்றும், மாநகர்க்கீந்தார் மணம் என்றும் அடிகள் கூறுவதும், இத்திருமணம் மனம் ஒத்த மணமக்களுக்காக நடந்ததாகக் கூறாமையும் கருதத்தக்கது. கோவலனுக்கும் கண்ணகிக்கும் திருமணத்திற்கு முன்பு தொடர்பு இருந்ததாகக் கூறப் பெறவில்லை. திருமணம் முடிந்த முதல்நாள் இரவுதான் இருவரும் தனியாகச் சந்திக்கின்றார்கள். மனமொத்த மணமக்களாய் இருந்தால் இருவரிடையேயும் ஏதாவது கருத்துப் பரிமாற்றம் இருந்திருக்க வாய்ப்பு உண்டு. ஆனால், இங்குக் கோவலன் மட்டுமே பேசுகின்றான். கண்ணகி மறுமொழி ஏதும் கூறவில்லை. இதனை நம் ஆராய்ச்சியாளர்கள் அது பெண்மையின் அடக்கம் என்று பெருமையாகக் குறிப்பிடுகின்றனர். இக்கூற்றும் மனையறம்படுத்த காதையும் மீள்பார்வைக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.

கோவலன் கண்ணகியிடம் கூறுவன அனைத்தும் குறியாக் கட்டுரை என்றும் உலவாக் கட்டுரை என்றும் அடிகள் கூறுகின்றார். மாசறு பொன்னே, வலம்புரி முத்தே என்று தொடங்கிக் கோவலன் பேசியவை அனைத்தையும் இங்கு நோக்குதல் வேண்டும். நடைபெற வேண்டியது புது மணமக்களின் மண வாழ்க்கைத் தொடக்கம். கவிஞர் கண்ணகியையும் கோவலனையும் அந்த இன்பமான நேரத்தில் அவர்கள் எப்படி இருந்தார்கள் என்பதை கதிர் ஒருங்கிருந்த காட்சி போல என்று சூரியனும் நிலவும் ஒன்றாக இருப்பது போல இருந்தனர் என்று கூறுகின்றார். அதாவது எது உலகில் நடவாதோ, அதாவது சூரியனும் நிலவும் ஒரு காலத்தும் இணைந்து ஒரே இடத்தில் இருக்காது. அதனைக் கண்ணகி & கோவலன் இணைந்திருப்பதற்கு உவமையாகக் கூறுவதிலிருந்து நடக்க இயலாத ஒன்றினை உவமையாகக் கூறுவதால், மணமக்கள் இருவரும் இணைந்திருக்கப் போவதில்லை என்பதைக் குறிப்பால் விளக்குகிறார் எனலாம்.

அடுத்து நடைபெற வேண்டிய கூடும் இன்பம் எனும் கூட்டம் பற்றிய செய்தி சொல்லப்படுகிறது.
கோவலன் அணிந்திருந்த மாலையும், கண்ணகி அணிந்திருந்த மாலையும் நன்றாகக் கசங்கிப் போயின என்று தெளிவாகக் கூறுகிறார். கோவலனும் கண்ணகியும் கூடும் இன்பத்திற்குப் பெரிதும் முயன்றிருக்கின்றார்கள் என்று தெரிகிறது. இருவரும் கட்டிப் புரண்டதால் இருவரும் அணிந்திருந்த மாலைகளும் நன்றாகக் கசங்கிப் போயின என்று தெளிவாகத் தெரிகிறது. அப்படியானால், மணமக்கள் இருவரும் புணர்ச்சி நிறைவுற்று மனம் மகிழ்ந்தனரா? என்றால், இங்குதான் கூட்டம் நிகழவில்லை என்பதை அடிகள் கையற்று என்ற ஒரு சொல்லால் விளக்குகின்றார். கையறு நிலை என்றால், ஒன்றை இழத்தலால் தோன்றும் இயல்பு ஆகும். இங்கு என்ன இழக்கப் பெற்றது என்றால், கோவலன் கண்ணகி கூட்டம் (இன்பம்) இழக்கப் பெற்றது என்பதே ஆகும். அந்திமாலைச் சிறப்புச் செய் காதையிலும் கண்ணகியைக் குறிப்பிடும்போது கையறு நெஞ்சத்துக் கண்ணகி என்றே இளங்கோவடிகள் குறிப்பிடுகின்றார்.

கோவலன் தன் காதல் வேட்கை தீராமையால்தான், அதைத் தணிக்கும் பொருட்டுக் கண்ணகியைப் பார்த்துப் பேசித் தன் நிறைவேறாத காதலைப் போக்கிக் கொள்ளுகின்றான். இதனால்தான் கோவலன் கண்ணகியை நோக்கிப் பேசியவை அனைத்தும் உலவாக் கட்டுரை என்றும், அவன் பேசி முடிக்கும்போதும் குறியாக் கட்டுரை என்றும் அடிகள் தெளிவுபடக் கூறுகின்றார். இதனைத் தொல்காப்பியமும் …கைக்கிளைக் குறிப்பே என்று புலப்படுத்தும்.

மனையறம் படுத்த காதையுள் இருவருக்கும் கூட்டம் நடந்திருந்தால் மணமக்கள் இருவரும் அயர்ந்து உறங்கியிருப்பார்களே தவிர நீண்ட உரையாடல் நிகழ வாய்ப்பில்லை என்பதும் அறிவியலார் துணிபும் ஆகும். மேலும் கோவலன் கண்ணகி இருவரின் இல்லற வாழ்க்கை பற்றி நாம் நூலுள் விரிவாக அறியுமாறு இல்லை. குறிப்பாகச் சில செய்திகள் நாம் உய்த்துணரத்தக்க வகையில் உள்ளன. இருவரது திருமண வாழ்க்கையில் சில ஆண்டுகள் கழிந்தன என்பதால், அந்த மண வாழ்க்கை மகிழ்ச்சிக்கு உரியதாகத் தோன்றவில்லை. கண்ணகி என்னவோ படைப்பால் மானிடப் பெண். அதற்குரிய இயல்பான நடைமுறைகளை உடையவளாகவே வருணிப்பார். மணமக்கள் இருவரையும் தனி வீட்டில் வேறு வைக்கிறார்கள். பதினெட்டு வயதுக் கோவலன் புணர்ச்சி வேட்கையின் பொருட்டு நடன மங்கை மாதவியைச் சேருகின்றான். கண்ணகி தனியளாய்த் தன் வீட்டில் வாழும்போது கோவலனின் பெற்றோர் அவளைப் பார்க்க வரும்போது வாயால் முறுவல் செய்தனள் என்று கூறுவார். உண்மையில் அவளுக்கு இன்பமான வாழ்க்கை இல்லை என்பதையே இக்குறிப்பும் உணர்த்துகின்றது. கோவலனோடு மெய்யுறு இன்பம் கண்ணகி பெற்றிருந்தால், நூலுள் எங்காவது அவள் சுட்டியிருப்பாள். கண்ணகிக்குத் தேவந்தி என்றொரு தோழி இருந்தாள். தன் தோழி தேவந்தியிடம் நள்ளிரவில் தான் கண்ட கனவு பற்றிக் குறிப்பிடும்போது, கோவலனைத் தன் கைப் பற்றியவன் என்று மட்டும் குறிப்பிடுவதோடு என் மனம் பற்றியவன் என்று குறிப்பிடாமையும் அவளுடைய தொடர்பு, அவனைத் தன் பெற்றோர் மணம் செய்து வைத்த உறவு மட்டுமே என்பது, மானுட வாழ்க்கை வாழ்வதால் இக்கால மரபிற்கேற்ப ஒரு குடும்பப் பெண் எப்படியெல்லாம் நடக்க வேண்டுமோ அப்படியெல்லாம் நூல் முழுவதும் வாழ்ந்து காட்டுகிறாள். ஊருக்காகச் செய்யப்பட்ட திருமணம் என்பதைத் தவிர, மணமக்கள் கோவலனும், கண்ணகியும் ஒரு நாளாவது இன்பம் துய்த்தனர் என்றோ, கண்ணகியோ அல்லது கோவலனோ யாண்டும் இருவரும் மீண்டும் கூடி வாழ்ந்து இல்லற இன்பம் துய்க்க விரும்பியதாக, எண்ணியதாகக் கூடக் குறிப்பேதும் இல்லாமை நோக்கத்தக்கது.

தான் ஒரு பத்தினித் தெய்வம் என்றோ, தன்னிடம் அளவற்ற ஆற்றல் உண்டு என்றோ அவள் உணர்ந்ததாகத் தெரியவில்லை. தான் மதுரைக்குச் சென்று பொருளீட்டி, இழந்த பொருளை மீட்க எண்ணும் கோவலன் கண்ணகியோடு மதுரையில் குடும்பம் நடத்தி மகிழ விரும்பியதாகவும் கூறாமை நோக்கத் தக்கது.
இவ்வாறு தாமரை இலைத் தண்ணீராக வாழ்க்கை நடத்த வேண்டிய நலைக்குக் காரணம் என்ன? முன்பு குறிப்பிட்டவாறு கண்ணகியைப் பெண்கள் தொழுது ஏத்தினர் என்பதும், வேட்டுவ வரியில் தெய்வம் ஏறிய வேட்டுவ மங்கை கண்ணகியைப் பார்த்து, இவளோ கொங்கச் செல்வி, குடமலையாட்டி, தென்தமிழ்ப்பாவை செய்த தவக்கொழுந்து, ஒரு மாமணியாய் உலகிற்கோங்கிய திருமாமணி என்று தெய்வம் வந்துரைக்க என்று அடிகள் குறிப்பிடுவார். உலகில் மற்றவர்களுக்கெல்லாம் கண்ணகி தெய்வமாகவே தெரிவதாக அடிகள் சுட்டுவர். அழற்படு காதையில் மதுராபதித் தெய்வம் கண்ணகியைத் தெய்வம் என்று உணர்ந்து அவள் முன்வர அஞ்சிப் பின்புறமாக நின்று பேசியதாகக் குறிப்பிடுவார். மதுரை மாநகரத்து மக்கள், கையில் தனிச் சிலம்போடு அரற்றி வரும் கண்ணகியைத் தெய்வம் என்று உரைக்கின்றார்கள். வழக்குரை காதையில் வாயிற் காவலன் கண்ணகியைக் காளி என்றுகூட அரசனிடம் கூறுகின்றான். இவ்வாறு பல திறப்பட்ட மக்களும் கண்ணகியை மானுடப் பெண்ணாகவே பார்க்கவில்லை. இளங்கோவடிகளின் விருப்பம் கண்ணகி மாசு மருவற்ற பெண்ணாகவே, ஒரு சாதாரண மனிதனுக்கு மணம் செய்து வைத்தாலும் மரபுகளுக்கேற்ப வாழ்ந்து, தெய்வ நிலையை எய்த வேண்டும் என்ற தம் குறிக்கோளைக் காப்பியத்துள் மிகவும் நயமாகக் கையாண்டுள்ளமை வியக்கத்தக்கதாகும்.

சுருங்கச் சொன்னால் சிலப்பதிகாரத்தில், கண்ணகியின் பங்கு முதன்மையானது. அவள் தீது இலாதவள். முதிரா முலையள். அளியள். தன்துயர் காணாத் தகைசால் பூங்கொடி. தன்னைக்காத்துக் கொண்டவள். தற்கொண்டவனைப் பேணியவள். தகைசான்ற சொல் காத்தவள். சோர்விலாதவள். பொறாமையற்றவள். கற்புடைய மனைக் கிழத்தி. சிறுமை கண்டு பொங்குபவள். கணவனுக்குக் கட்டுப்பட்டவள். பிறர் புகழின் நாணுபவள். நல் நோக்குடையவள். பேச்சுவன்மை உடையவள். நீதிக்குப் போராடுபவள். வாதிடும் வழக்கறிஞர். பிறர்மனை நயவாத பேராண்மை உடையவள். கோவலன் போற்றா ஒழுக்கத்திற்கு, மாதவியைக் காரணமாக்காதவள். ஊழ்வினையை நம்புபவள். அஞ்சாத நற்பண்புடையவள். மக்களும், மன்னரும், அமரரும், கடவுளும் போற்றி வணங்கும் சிறப்புத் தன்மை உடையவள். சேரன் செங்குட்டுவனால் வடபுலத்தில் கல் எடுத்துக் கங்கையில் நீராட்டிக் கோயில் எழுப்பிய பெருமைக்குடைய மா பத்தினி கண்ணகி நல்லாள். மனிதப் பிறப்பு எடுத்து ஓர் ஆண் மகனுக்கு வாழ்க்கைப் பட்டாலும் தெய்வச் சிறப்பிற்குரிய மாசு மருவற்ற கன்னிமைத் தன்மை கழியாதவளாகவே இளங்கோவடிகள் சிறப்பாகப் படைத்துள்ளார் என்ற முடிவு சான்றோர் தம் ஆய்விற்குரியது என்பது என் கருத்தாகும்.

------------

காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தின் ஓய்வுபெற்ற தமிழ்த் துறைத் தலைவர் பேராசிரியர் இரா. இராமநாதன் அவர்கள் வெளிநாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழர்களுக்குத் தமிழ்மொழியைக் கம்ப்யூட்டர் மூலமாகக் கற்றுக் கொடுத்து வரும் ஆசிரியர்களில் ஒருவர். மிடுக்கான அவருடைய தோற்றத்தை இந்த வயதில் பார்த்தால், இளமைக் காலத்தில் எப்படி எடுப்பாக இவர் இருந்திருப்பார் என்பதை ஊகிக்க முடியும். இந்தப் பொலிவுக்கும், வலிவுக்குமான ஒரே காரணம் இவர் மருந்து போல சாப்பிடுவது உணவைத்தான். 50 ஆண்டுகளுக்கு முன்பு காரைக்குடிக்கு நேருஜி வந்திருந்த போது நேரில் சந்தித்த இவரிடம், நேருஜி என்ன கேட்டார் தெரியுமா? எல்லா மொழிகளிலும் எழுத்து, சொல் மட்டும்தானே இருக்கின்றன. அது என்ன உங்கள் தமிழ் மொழியில் பொருள் என்று தனிப் பிரிவு. அது என்ன? என்றாராம்.

நேருஜி கேட்ட கேள்வி தொல்காப்பியத்தில் உள்ள பொருள். வியந்துபோன பேராசிரியர் இராமநாதன், சரியான விளக்கம் தந்து நேருஜியை வியப்பில் ஆழ்த்தினார்.

பாவேந்தர் பாரதிதாசனோடு இவர் பழகியவர் மட்டுமல்ல, உடனுறைந்தவர். தி.வ. மெய்கண்டாரின் கவிதா மண்டலத்தில் பாவேந்தரோடு வாழ்ந்தது பற்றிய இவருடைய அனுபவங்கள் தொடர் கட்டுரைகளாக வெளிவந்துள்ளன.

காரைக்குடி என்றாலே கம்பன் அடிப்பொடி சா. கணேசன் அவர்களின் கம்பன் கழகம்தான் தமிழ்கூறு நல்லுலகத்திற்குத் தெரியும். அதே காரைக்குடியில், மறைந்த தன் அன்பு மனைவியின் திருப்பெயரில் அறக்கட்டளை ஒன்றை நிறுவி, பத்தினி கண்ணகியைப் பார்போற்றும் தெய்வமாகப் பரப்பும் சிலப்பதிகாரத் தொண்டு செய்யத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளவர் பேரா. இராமநாதன் அவர்கள்.
கம்பன் அடிப்பொடி போல இவர் இளங்கோ அடிப்பொடி. காரைக்கால் அம்மையாரைப் போல, கண்ணகியும் தெய்வம் என்பது இளங்கோவடிகளுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்! இதைத் தெரிந்து கொண்ட இரண்டாவது புலவர் பேராசிரியர்தான்.

கைகுவித்துத் தொழும் தெய்வமாகக் கண்ணகியைக் கண்டுகொண்ட பிறகு, அந்தத் தெய்வ மாக்கதையைத் தேசம் முழுவதிலும் ஏன் தேசம் கடந்தும் பரப்புரைக்கும் பணியினைத் தொடங்கித் தொய்வில்லாமல் செய்து வருகிறவர்.

கண்ணகித் தெய்வம் கன்னித் தமிழின் உன்னதமான அடையாளம். கடலுக்குள் கால்கோள் போட்டுக் கட்டப்பட்ட பாம்பன் பாலம் போல, பேராசிரியரின் இக்கட்டுரை இலக்கியக் கடலுக்குள் கால்கோள் போட்டுக் கட்டப்பட்ட பைந்தமிழ்ப் பாலம்.

(பொ&ஆர்.)

நன்றி - ஓம் சக்தி டிசம்பர் 2011

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக