கொடிபவுனு அம்மா
வீட்டுக்கு வந்திருந்தாள். அவள் வாழ்க்கைப்பட்ட ஊர் பக்கத்தில்தான் இருக்கிறது என்பதால்...
நினைத்தால் போதும், குழந்தைகளை இடுப்பில் ஒன்றும் கையில் ஒன்றுமாகப் பிடித்துக்கொண்டு
ஏரிமேட்டினைக் கடந்து மலைக்குள் இறங்கி, ஓடைக்குள் நடந்து, சுடுகாட்டு வழியாக அம்மா
வீட்டுக்கு அரை மணி நேரத்தில் வந்து விடுவாள்.
சுடுகாட்டைக்
கடந்து வரும் போது அவள் மனதுக்குள் அழிக்க முடியாத பயம் இருக்கும். இப்போது அதற்குப்
பதில் ஒவ்வொரு முறையும் அவளது கால்கள் தடுமாறுகின்றன. இருந்தாலும் இந்த வழியை அவளால்
மாற்றிக்கொள்ள முடியவில்லை.
அம்மா வீட்டுக்கு
கொடிபவுனு வந்து சேர்ந்தபோது இரவாகிவிட்டதால், மருத்துவரிடம் குழந்தையைக் கொண்டுபோய்க்
காண்பிக்க முடிய வில்லை. பெரிய மகளுக்கு வயிற்றுப்போக்கு. இரவு முழுக்க உறக்கம் இல்லாமல்
வயிற்றுவலியால் அவதிப்பட்டுக்கொண்டே இருந்தாள்.
விடிந்ததும்
முதல் வேலையாக கொடிபவுனு தன் மகளை ‘கன்ட்ரோல் அம்மாவிடம் அழைத்துப் போனாள். ‘அரங்கநாதன் அம்மா’ என்றுதான் சொல்ல வேண்டும் என்றாலும்,
யாரும் அப்படி அழைப்பதில்லை.
இரவு முழுக்க
இடைவிடாத மழை என்பதால், கால்வைக்கிற இடமெல்லாம் தண்ணீராக இருந்தது. கோழிகள் இரை கிடைக்காமல்,
நனைந்த இறக்கைகளை விரிக்க இயலாமல் ஒடுங்கி நின்றிருந்தன. அம்மாவும் மகளும் குடைக்குப்
பதிலாக ஆளுக்கொரு முறத்தைத் தலையில் பிடித்துக்கொண்டு நடந்து போய்ச் சேர்ந்தார்கள்.
வீட்டுக்குள்
மழைத் தண்ணீர் ஒழுகிய இடத்தில் எல்லாம் கன்ட் ரோலின் அம்மா பாத்திரங்களை அடுக்கி வைத்திருந்தாள்.
பாத்திரத்துக்குள் ஒழுகிய மழைத் தண்ணீர் ஏற்படுத்தும் ஒவ்வொரு சொட்டின் ஒலியும் அவளுக்குத்
தன் மகனையே நினைவுபடுத்தின. தண்ணீர் நிரம்பி வழிந்தோடும் பாத்திரங்களை எடுத்து அப்புறப்படுத்தாமல்,
தூண் ஓரமாக தரையில் ஒடுங்கிப் படுத்திருந்தாள். கொடிபவுனின் வரவு அவளை எழுந்து உட்காரவைத்தது.
நெடுநாட்களுக்குப் பின் முதல் முறையாக வந்திருக்கும் தம்பி மகளைப் பார்த்ததும், மனதுக்கு
ஆறுதலாக இருந்தது.
கொடிபவுனு அந்த
வீட்டினுள் கால் வைத்தபோது, அவளால் தன் மாமன் கன்ட்ரோலை மறந்து நிற்க முடியவில்லை.
வீட்டினுள் சூழ்ந்திருந்த இறுக்கம் அவளின் மனதுக்குள்ளும் பரவியது. அத்தை தைலம்மை,
கொடிபவுனைத் தடவிக் கொடுத்தாள்.
எது எதற்கெல்லாமோ
மருத்துவம் வந்துவிட்டது. இன்னும் குடலேற்றத்துக்கு மட்டும் மருத்துவம் வந்ததாகத் தெரியவில்லை.
குடலேற்றம் வந்துவிட்டால் ஊரில் யாராக இருந்தாலும் தைலம்மையிடம்தான் வந்தாக வேண்டும்.
ஐந்து நிமிடத்தில் மருத்துவம் முடிந்துவிடும். நான்கு நாட்கள் வரைக்கும் வயிற்றுவலியால்
அவதிப் பட்டு, வயிற்றுப்போக்கில் கிடந்தவர்கள்கூட அடுத்த வேளையே சாப்பிடத் தொடங்கி
விடுவார்கள்.
குழந்தைக்கு
ஏதோ விளையாட்டின்போது குடலேற்றம் நிகழ்ந்துவிட்டது. சிறிய பித்தளைச் சருவத்தில் தண்ணீரைக்
கொண்டு வந்து வைத்துவிட்டு, குழந்தையின் இரண்டு கைகளையும் அசையாமல் பிடித்துக்கொண்டாள்
கொடிபவுனு. தண்ணீரைத் தன் வலது கை விரலால் தொட்டுத்தொட்டு குழந்தையின் அடிவயிற்றின்
குடல் பகுதியில் ஒரே சீராக மேலிருந்து கீழாக தைலம்மை தட்டிக்கொண்டே இருந்தாள். குழந்தை
வலியால் துடித்தது.
மழை ஒரே சீராகப்
பெய்துகொண்டு இருந்தது. கூரையின் ஓடுகளின் வழியே தண்ணீர் கீழே வழியாதபடிக்கு அந்தக்
காலத்துப் பழைய இசைத்தட்டுக்கள் ஓடுகளின் இடுக்கில் சொருகிவைக்கப்பட்டிருந்தன. ஒரு
காலத்தில் ஓயாமல் இசைத்த அந்த இசைத்தட்டுகளெல்லாம் இப்போது மழையிலும் வெயிலிலும் காய்ந்துகிடப்பதை
கொடிபவுனு பார்த்தாள். பல இசைத்தட்டுகள் பாதியாக உடைக்கப்பட்டு சொருகப் பட்டிருந்தன.
அதனைப் பார்க்கப் பார்க்க, கன்ட்ரோலை அவளால் நினைக்காமல் இருக்க முடியவில்லை.
சிறு வயதிலேயே
தந்தையை இழந்த அரங்கநாதன் என்கிற ஒரே மகனை மனம் கோணாமல் செல்லமாக வளர்த்தாள் தைலம்மை.
ஒன்றாம் வகுப்பில் பள்ளியில் சேர்க்கும்போதே இரண்டு ஜோடி மேளதாளத்தோடுதான் பள்ளிக்குள்
நுழைந்தான். நாகஸ் வரத்தையும் தவிலையும் போட்டி போட்டு வாசிக்கச் சொல்லி கன்ட்ரோலின்
தாய்மாமன் ராச மாணிக்கம் அவ்வப்போது பரிசுத் தொகை ரூபாய்களை அவர்களின் சட்டைப் பைகளில்
திணித்தார்.
சின்னப் பள்ளிக்கூடத்தின்
எதிரிலிருந்த பெரிய பள்ளிக்கூடத்தில் ஆறாம் வகுப்புக்குப் போகும்போதும் மேளதாளம் இல்லாமல்
போக மாட்டேன் என அடம்பிடித்தான். அப்போதும் அவனது ஆசையை நிறைவேற்ற ராசமாணிக்கம் தவற
வில்லை. தனது மகள் கொடிபவுனு வையும் அவனோடு மேளதாளத்துடன் பெரிய பள்ளிக்கூடத்துக்கு
அழைத்துப் போனார். ஐந்தாம் வகுப்புக்குள்ளேயே இரண்டு ஆண்டுகள் தேர்ச்சி பெறாமல் இருந்ததால்,
தன்னைவிட இரண்டு வயது குறைந்த கொடிபவுனுவின் வகுப்பிலேயே கன்ட்ரோலும் படிக்கும்படி
ஆகிவிட்டது.
ஐந்தாம் வகுப்பில்
புகைப்படம் எடுக் கும்போது அவளின் பக்கத்தில்தான் நிற்பேன் என இறுதிவரைக்கும் அடம்பிடித்து,
அதேபோல் நின்றான். பொன்வண்டு தீப் பெட்டிக்குள் முட்டையிட்டாலும், பனைமட்டையில் காற்றாடி
செய்தாலும், ஓடையில் மீன் பிடித்தாலும், மண்பானைக்குள் வேப்பிலை போட்டுப் பழுக்கவைத்த
மாம்பழமோ, சீதாப் பழமோ எதுவானாலும் முதலாவதாக கொடிபவுனுவிடம்தான் கொடுத்தான். போதாக்குறைக்கு
ராசமாணிக்கம் அடிக்கடி அவனை ‘மாப்ள, மாப்ள’ என அழைத்ததாலும் கொடிபவுனு தனக்குத்தான்
சொந்தம் என்கிற உணர்வு அவனது மனதில் குடி கொண்டுவிட்டது. பள்ளியில் யாருடனும் அவளை
அவன் விளையாட அனுமதிப்பதில்லை. கொடிபவுனு அவனுக்குப் பேரழகியாகத் தெரிந்தாள்.
ஏழாம் வகுப்புப்
படிக்கிறபோது, அறிவியல் ஆசிரியர் வகுப்பில் உள்ளவர்களை அணி அணியாகப் பிரித்தபோது, கன்ட்ரோலும்,
கொடிபவுனும் ஒரே அணியில் இருந்தார்கள். அவள் தனது அணியில் சேர்ந்துவிட்டது குறித்து
அவனுக்குள் ஏற்பட்ட கற்பனையும் மகிழ்ச்சியும் அவனுக்குப் பள்ளிக்கூடத்துக்கு வர வேண்டும்
என்கிற ஆர்வத்தை மிகுதிப்படுத்தியது. இருவரும் ஒன்றாகச் சேர்ந்து பதினோராம் வகுப்பு
வரை ஒரு செடி நட்டு அதனை மரமாக வளர்க்கப் போகிறோம் எனும்போதே, அரை மணி நேரத்தில் வெட்ட
வேண்டிய குழியை ஐந்து நிமிடத்தில் தோண்டி முடித்துவிட்டான். அடுத்த அணியான அரங்கநாதனுக்கும்,
கொடிபவுனுக்கும் ‘பதியின் கன்று’ எனச் சொல்லி பூவரசு கன்றினை ஆசிரியர்
அறிவித்துக் கொடுத்தபோது, இருவரும் ஒன்றாக சேர்ந்து வாங்கி னார்கள். அப்போது அவனது
ஆறாம் விரல் அவளின் கையில் உரசியதை, அவளால் தாங்கிக்கொள்ள முடிய வில்லை. இவனோடு சேர்ந்து
எப்படி ஒரு மரத்தை வளர்க்கப் போகிறோம் எனும்போதே அவளுக்குக் குமட்டி வாந்தி வந்தது.
கட்டுப்படுத்திக் கொண்டுதான் பூவரசுக் கன்றினை குழிக்குள் வைத்தாள். மண்னைக் குழிக்குள்
தள்ளி மூடும்போது அந்த ஒட்டியிருந்த ஆறாம் விரல் சுருங்கிய நகத்தோடு சூம்பி ஆடியதைப்
பார்த்த கொடி பவுனு, குழிக்குள்ளிருந்து கையை விலக்கிவிட்டு எழுந்தாள். கற்பனையில்
மிதந்திருந்த கன்ட்ரோல் அவளின் கையைப் பிடித்து இழுத்த போது மேலும் அதனைப் பொறுத்துக்
கொள்ளாத கொடிபவுனு, ‘கைய எடுரா!’ எனத் திட்டியதை யாரும் கவனிக்கவில்லை
என்றாலும், கன்ட்ரோல் மனதுக்குள் நொறுங்கிப் போனான்.
எத்தனையோ முறை
ஆசை ஆசையாக வாங்கிக் கொடுத்தபோது, அதையெல்லாம் பெற்றுக்கொண்ட கொடிபவுனு, இப்போது தான்
எது கொடுத்தாலும் வாங்காததையும், தன்னை வெறுப்பதையும் அவனால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.
அன்றைக்குத் திரைப்பட அரங்கில் மணலில் உட்கார்ந்து படம் பார்த்த போது, ஆசை ஆசையாக முறுக்கு
வாங்கி, பெண்கள் பகுதியில் அமர்ந்திருந்த அவளிடம் கொடுத்த போது மீண்டும் அதே மாதிரிதான்.
‘‘ஏண்டா என்னைக்
கொல்றே? ஒன்னாலதாண்டா நான் சாவப் போறேன்’’ என அனைவரின் முன்னா லேயும் திட்டினாள்.
அப்போதுகூட அவள்தான் முக்கியம் என நினைத் தானே தவிர, அந்த அவமானத்தைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
காலமாற்றத்தில்
கொடிபவுனு வுக்குப் பிடிக்காமல் போனது போலவே, கன்ட்ரோலை அவளது அப்பா ராசமாணிக்கத்துக்கும்
பிடிக் காமல் போனது. எட்டாம் வகுப் போடு படிப்பை மூட்டை கட்டி விட்டவனை மாப்பிள்ளை
எனக் கூப்பிட அவருக்கு விருப்பமில்லை. ராசமாணிக்கம் தனக்குப் பெண்தான் முக்கியம் என
நினைத்தார். அவனிடம் தனது மகளை இனி பார்க்கக் கூடாது என எச்சரித்தார். தனக்குச் சொந்தமானவள்
தன்னை விட்டு விலகிப் போவது, அவனது பெரும் பிரச்னையாக இருந்தது. அம்மாவிடம் அது பற்றி
சொல்லிச் சொல்லி அழுதான்.
அவள் வயதுக்கு
வந்து விமரிசையாக மஞ்சள் நீர் சடங்கு விழா நடத்திய போதுகூட, தாய்மாமனான கன்ட் ரோலுக்கு
அழைப்பு இல்லை. மரியாதை இல்லாத இடத்துக்கு நாம் போகக் கூடாது எனத் தைலம்மை எவ்வளவோ
சொல்லி யும், அவன் கேட்க வில்லை. போட்டிக்கு அவன் ஒலிபெருக்கி ஒன்றை விலைக்கே வாங்கி
வந்து, அவனே பந்தல் கம்பத்தில் கட்டினான். எவ்வளவு சத்தம் கூட்டிவைக்க முடியுமோ அப்படி
அலறவிட்டான். ராசமாணிக்கம் அமர்த்திய ஒலிபெருக்கிக்காரனுக்கும் இவனுக்கும் போட்டி மூண்டது.
இரண்டின் இரைச்சலிலும் காரியத்தைக் கவனிக்க முடியவில்லை. போட்டியைச் சமாளிக்க முடியாமல்
இறுதியாக ராசமாணிக்கத்தின் ஆள் பணமே வேண்டாம் எனச் சொல்லி ஓடிவிட்டான். கொடிபவுனுக்கு
பந்தலுக்கு வந்து மணையில் அமரவே பிடிக்கவில்லை. ‘‘என்னைவிட்டால் யாருமில்லை, கண்மணியே
உன் கையணைக்க, உன்னைவிட்டால் வேறொருத்தி எண்ணமில்லை நான் காதலிக்க...’ இந்த பாடலையேதான் திரும்பத் திரும்ப ஒலிக்கச்
செய்தான். அந்தப் படம் வெளியாகியிருந்த நேரம் அது. பாடலை முழுமையாக ஒலிபரப்பி னாலும்
பரவாயில்லை. அந்த இரண்டு வரிகளை மட்டுமே திரும்பத் திரும்ப, நிறுத்தி நிறுத்தி ஒலிக்கச்
செய்துகொண்டு இருந்தான். யாருக்கும் போய்க் கேட்கிற துணிவில்லை. கேட்டால் அவன் பிடித்துக்
கொள்வான். அவனைச் சமாதானப்படுத்த முடியாது என்பது தெரியும். இவனும் எவனாவது வந்து கேட்க
வேண்டும் என்றே எதிர் பார்த்தான்.
மணையில் வந்து
அமர்ந்த கொடி பவுனு நிமிர்ந்து அவன் இருக்கிற திசையைப் பார்க்கவே இல்லை. அவன் அவளை
முறைத்துக் கொண்டே இருந்தான். திரும்பத் திரும்ப அவன் ஒலிபரப்பிய பாடலின் அந்த இரண்டு
வரிகளையும் தானே பாடுவது போலவே அவன் நினைத்துக் கொண்டான். தனது காதில் அவன் வந்து கத்துவது
போலவே அவளுக்குப் பட்டது.
எவ்வளவு நேரந்தான்
அவனாலும் தொடர்ந்து இந்த வேலையைச் செய்ய முடியும்? சோர்ந்துபோனான். சடங்கு களெல்லாம்
முடிந்து கொடிபவுனு உள்ளே சென்றிருந்தபோது, சிறுநீர் கழிக்கச் சிறிது நேரம் நிறுத்திவிட்டுப்
போனான். அவன் திரும்பி வந்து அதே பாடலை ஒலிபரப்பலாம் என முற்பட்டபோது, அந்த இசைத்தட்டு
அங்கில்லை. தேடித் தேடிப் பார்த்து அலுத்துப் போனான். கோபத்தை யாரிடம் காண் பிப்பது
எனத் தெரியவில்லை. அவ்வளவு நேரம் வீராப் போடு இருந்தவன், வழி யிலிருந்தவர்களை எல்லாம்
தள்ளிக்கொண்டு நேராக வீட்டுக்குள் நுழைந்து கொடிபவுனு இருக்கும் அறையைத் தேடினான்.
கன்ட்ரோலின்
இந்தச் செய்கை வாசலில் வட்டமாக அமர்ந்து, வந்து போகிறவர்களுக்குத் தாம்பூலம் கொடுத்துக்கொண்டு
இருந்த அனைவருக்குமே சிரிப்பாக இருந்தது. அதனை வெளிக்காட்டிக் கொண்டால் என்ன நடக்கும்
என்பது தெரிந்ததால் அவர்களுக்குள் ளேயே சிரித்துக்கொண்டார்கள்.
இறுதியாக, சாமி
அறைக்குள் நுழைந்தான் அவன். அறையில் கொடிபவுனுவும் அவளின் தங்கை முத்துலட்சுமியும்
மட்டுமே அமர்ந் திருந்தார்கள். அவனைப் பார்த்ததும் அவள் எழுந்திருக்கவில்லை. இவ்வளவு
நேரம் அனைத்தையும் கவனித்துக் கொண்டு இருந்த பெண்களெல்லாம் அடுத்து நடக்கப் போவதைப்
பார்ப் பதற்காக ஆர்வத் தோடு முற்றத்தில் காத்திருந்தார்கள். கன்ட்ரோல் உச்சக் கட்ட
கோபத்தில் இருந்தான். அவளை அடிக்கிற மாதிரி முன்னோக்கி ஓடுவதும் பின் கமலை மாடு மாதிரி
பின்னோக்கி வருவதும், மீண்டும் கோபத்தோடு முன்னோக்கி ஓடி அவளை அடிக்கிற மாதிரியும்
கத்தினான்... ‘‘நீனும் ஒங்கப்பன் ஆத்தாளும் என்ன தாண்டி நெனைச் சிருக்கீங்க? என்னைக்
கூப்பிடாம பண்ணிட லான்னு பாத்தீங்களா? எப்பிடிப்பட்ட பாட்டுப் போட்டுக் காட்னேன் பாத்தியா?
அதான் நானு. ரிக்கார்டத் தூக்கி ஒங்கப்பன் ஒளிச்சு வச்சுக்கினான்னா நான் உட்டுட்டுப்
பூடுவனா? இன்னும் ஒரு பாட்டு எடுத்து வச்சிருக்கேன். இங்க பாரு, என்ன நீ புரிஞ்சுக்கினே
இல்ல?’’
அவனது முகத்தைப்
பார்க்க அவளுக்குப் பிடிக்கவில்லை. அவனது செய்கை அவளுக்கு அவமானமாக இருந்தது. மிக நெருங்கி
நின்றிருந்த கன்ட்ரோலுக்கு அவள் மிக அழகாக இருப்பதாகத் தெரிந்தது. முதல் முறையாக அவள்
புடவையில் இருந்தது, அவனுக்கு இன்னும் அவளிடம் பேச வேண்டும் போலிருந்தது.
அனைத்தையும்
பின் வாசலில் உட்கார்ந்து கேட்டுக் கொண்டிருந்த ராசமாணிக்கத் தால் அதற்கு மேலும் பொறுமையாக
இருக்க முடியவில்லை. கொடிபவுனுவின் அம்மா ஓடி வந்து மறித்தாலும், அவர் விடுவதாக இல்லை.
நேருக்கு நேராக ராசமாணிக் கத்தைப் பார்த்ததும் அவனது கோபம் கெஞ்சலாக மாறியது. ‘‘ஏன்
மாமா எங்கள காரியத்துக்குக் கூப்புடல? ஒனக்குமா என்னப் புடிக்கல? ஒனக்காகத்தான் நான்
இப்ப சும்மா உட்டுட்டுப் போறேன்’’
அதன்பின், கன்ட்ரோல்
ஒரு வழியாக சமாதானம் ஆனான். பதினோராம் வகுப்பு முடிவதற்காக கன்ட்ரோல் காத்திருந்தான்.
கொடி பவுனுதான் அந்த ஆண்டு பள்ளிக் கூடத்தில் முதல் மதிப்பெண் பெற்றிருந்தாள். கொடிபவுனுவுக்கு
வேறு மாப்பிள்ளை பார்க்கிற செய்தி கன்ட்ரோலுக்குத் தெரிந்தது. மேற்கொண்டு யாரிடமும்
கெஞ்ச விருப்பமில்லை. அவனின் அம்மா, ‘‘உன்னைப் பிடிக்காத பெண் தேவையில்லை. அவளைவிட
அழகான பெண்ணைப் பார்த்து உடனே திருமணம் செய்துவைக்கிறேன்’’ என எவ்வளவோ சொன்னாள். ஆனால், தான் விரும்பிய
கொடிபவுனுதான் மனைவியாக வர வேண்டும் என அவன் முடிவு செய்துவிட்டான்.
அவனாகவே அச்சகத்துக்குச்
சென்றான். அவனுக்குத் தெரிந்ததைச் சொன்னான். திருமணப் பத்திரிகை யோடு வீட்டுக்கு வந்தான்.
மகனின் பிடிவாதத்தைக் கண்டு தைலம்மை வாயடைத்துப் போனாள். பத்திரிகையில் அவனது பெயரையும்,
அவளது பெயரையும் பார்க்கப் பார்க்க கன்ட்ரோலுக்கு அளவற்ற மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும்
இருந்தது. அவளோடு வாழ்வதாகக் கனவில் மிதந்தான்.
விவரமறிந்த ராசமாணிக்கம்
பதறிப் போனார். எதிர்த்துப் பேசினால் அவன் என்ன செய்வான் என்பது அவருக்குத் தெரியும்.
அவனை என்னவெல்லாம் சொல்லி சமாதானப்படுத்த முடியுமோ அப்படியெல்லாம் சொல்லி அவனது கையைப்
பிடித்துக் கெஞ்சினார். சொந்தக்காரர் களை எல்லாம் கூட்டிப் பேசியபோது, ஜாதகம் சரியாக
இருந்தால் உடனே அதே தேதியில் திருமணம் நடத்திக்கொள்ளலாம் என முடிவு செய்யப்பட்டது.
வேறு வழி தெரியாமல் கன்ட்ரோலும் அதை ஏற்றுக்கொண்டான்.
கொடிபவுனு வெளியிலேயே
வர வில்லை. பத்திரிகையைப் பார்த்துப் பார்த்து அழுதாள். அவனை நினைக்கிறபோதெல்லாம் அவளுக்கு
அவனுடைய ஆறாவது விரல் தவிரவும், அவள் மனதைவிட்டு நீங்காத இன்னொரு நிகழ்ச்சிதான் கண்முன்
வந்து நின்று, அவன் மீது வெறுப்பை ஏற்படுத்தியது.
அன்று விடுமுறை
நாள். கொடிபவுனு ஏழாம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்தாள். கொல்லையில் ஏர் உழுதுகொண்டு
இருந்த அப்பாவுக்காக சாப்பாடு எடுத்துப் போனாள். குருவிகளின் இரைச்சல் தாங்க முடியவில்லை.
விளைந்து தயாராக இருந்த கம்பங் கொல்லையில் நொடிக்கொரு கதிராக அமர்ந்து கொத்திக் கொத்திப்
பறந்துகொண்டு இருந்தன. இருபுறமும் ஆளுயரத்துக்கு வளர்ந்திருந்த கம்பங் கொல்லைகளுக்கு
நடுவேயிருந்த வரப்பில், சினிமாப் பாடலைப் பாடிக்கொண்டு நடந்து வந்துகொண்டு இருந்த கொடிபவுனு,
வரப்பின் வளைவில் திரும்பியபோது திடுக்கிட்டு பிரமை பிடித்தவள் போல நின்றுவிட்டாள்.
ஒரு நொடி அவளால் பார்வையைத் திருப்ப முடியவில்லை. எப்போதும் போல், யாரும் வர மாட்டார்கள்
என நினைத்து வரப்பின் ஓரமாக வயலில் அமர்ந்து மலம் கழித்துக்கொண்டு இருந்த கன்ட்ரோலுக்
கும் என்ன செய்வதெனப் புரியாமல் அப்படியே உட்கார்ந்து இருந்தான். திரும்பிப் போகப்
பிடிக்காத கொடி பவுனு வேறு வழியில்லாமல் முகத்தை எதிர்ப்பக்கம் திருப்பிக்கொண்டு அவனைக்
கடந்தாள். என்ன செய்வ தெனப் புரியாமல் திகைத்துப்போன கண்ட்ரோல், கால் சட்டையை ஒரு கையால்
பிடித்தபடியே எழுந்து நின்றான்.
கொடிபவுனுவின்
ஆழ்மனதில் பதிந்துபோன அந்த நிகழ்வு அவன்மீது அருவருப்பையும் அவனைப் பிடிக்காத மாதிரியும்
செய்துவிட்டது.
ஜாதகம் பார்த்து
முடிவு தெரியும் வரை ஒரு சொட்டுத் தண்ணீர்கூட தொண்டைக்குள் இறங்காது என கன்ட்ரோல் சொல்லிவிட்டான்.
ஊரார் முன்னிலையில் அவன் வீட்டு வாசலிலேயே ஜாதகக்காரனை வரவழைத்துப் பார்த்தார்கள்.
கொடிபவுனுக்குத் தாலி கட்டினால் அவன் உயிர் இருக்காது என்று ஜாதகக்காரன் அடித்துச்
சொன்னான். கன்ட்ரோலின் அம்மா, தன் தம்பி யிடம் கெஞ்சி, உடனே இன்னொரு ஜாதகக்காரனை அழைத்து
வரச் சொன்னாள். கன்ட்ரோல் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. தனக்குச் சாதகமாக அவன் சொல்ல மாட்டான்
என அவனே புறப்பட்டு வடலூர் போய், வேறு ஜாதகக்காரனை அழைத்து வந்தான். அவனும் முன்பு
சொன்னவன் போலவேதான் சொன்னான்.
கன்ட்ரோலிடம்
பழைய நடவடிக் கைகள் இல்லை. ஊர் மக்களைப் பார்ப் பதையே தவிர்த்தான். வயல் வேலைக்கும்
செல்வதில்லை. கடலூருக்கும், பண்ருட்டிக்கும் சினிமா பார்க்கப் போவதுகூட நின்றுபோனது.
வீட்டிலேயே முடங்கிக்கிடந்தான்.
அன்று இரவு,
ராசமாணிக்கம் மனைவியுடன் திருமணத் தாம்பூலத் தோடு வந்தார். அக்காவிடம் தாம்பூலத் தட்டை
கொடுத்துவிட்டு அவரால் அழத்தான் முடிந்தது. அவர்களை கடைசி வரை கன்ட்ரோல் பார்க்கவே
இல்லை. தலை குனிந்தபடியே தரையைப் பார்த்துக்கொண்டு இருந்தான். ராசமாணிக்கத்தால் கன்ட்
ரோலுக்கு சமாதானம் சொல்ல முடியவில்லை. இன்னும் மூன்று நான்கு ஆண்டுகள் காத்திருந்தால்
தனது இளைய மகளைத் தருகிறேன் என்று சொன்னார்.
பெண் அழைப்புக்கு
மாப்பிள்ளை வீட்டிலிருந்து கார் வந்துவிட்டது. பெண்ணை அனுப்பிவைக்க தைலம்மை யையும்
வந்து கூப்பிட்டார்கள். ஒவ்வொரு நிகழ்வும் கன்ட்ரோலை நிலை தடுமாறச் செய்தது. கிடுகிடுவென
பரணையில் ஏறியவன், சாக்குப்பையில் கட்டி வைத்திருந்த முந்திரி மரத்துக்குத் தெளிக்கவைத்திருந்த
பூச்சி மருந்தை எடுத்தான். குடித்துவிட்டுத்தான் இறங்கினான்.
இறுதியாக ஊரை
விட்டுப் போகும் போது கோயிலில் சாமி கும்பிட்டு விட்டுத்தானே கொடிபவுனு போவாள் என்பதற்காக,
கோயிலில் போய்ப் படுத்துக்கொண்டான். அதற்குள் கை, கால் இழுக்க ஆரம்பித்துவிட்டது. கொடிபவுனு...
கொடிபவுனு என சத்தம் போட்டுக் கத்தினான். இறுதிவரைக்கும் வரவே மாட்டேன் என அடம்பிடித்தவனைத்
தூக்கிக் கொண்டு நடுவீரப்பட்டு மருத்துவ மனைக்கு ஓடினார்கள்.
செய்தி கேள்விப்பட்ட
கொடிபவுனு, தன் மீது உயிரை வைத்திருக்கும் மாமனை நினைத்து அழுதாள். திருமணத்துக்கு
மாப்பிள்ளை வீட்டுக்குப் போகும் வழிதான் என்பதால், மருத்துவமனைக்குச் சென்று மாமனைப்
பார்க்க ஆசைப்பட்டாள். உறவினர்கள் பார்க்க அனுமதிக்கவில்லை. அந்த இடம் வந்தபோது சத்தம்
போட்டுக் கத்தி, காரை நிறுத்தச் சொன்னாள். யார் தடுத்தும் கேட்காமல் மருத்துவ மனைக்குள்
மணக் கோலத்துடன் ஓடினாள் கொடிபவுனு. கன்ட்ரோலைக் காப்பாற்றும் முயற்சியில் நிர்வாணமாகக்
கிடத்தப்பட்டிருந்தான். அவனைப் பார்த்ததும், கொடிபவுனுக்கு மேலும் அழுகைதான் வந்தது.
அப்போதுகூட, ‘‘நான் சாவறண்டா, நான் சாவறண்டா’’ எனக் கத்திக்கொண்டு இருந்த மயக்க நிலையிலேயே
கொடி பவுனுவைப் பார்த்தான். இதையெல்லாம் சகித்துக்கொள்ள முடியாத தைலம்மையும், ராச மாணிக்கமும்,
அங்கிருந்து கொடிபவுனுவை மாப்பிள்ளை வீட்டுக்கு அழைத்துப் போனார்கள்.
கொடிபவுனு தாய்
வீட்டுக்கு வந்திருந்தாலும், அவள் கன்ட்ரோல் வீட்டுக்கு வரவில்லை. இதுதான் கொடிபவுனுவின்
குழந்தை என அம்மா சொன்னபோதுகூட அவனுக்குத் தொட்டுத் தூக்கப் பிடிக்கவில்லை. வீம்புக்காக
வாங்கிய ஒலிபெருக்கி தொடர்பான சாதனங் களை தூசுதட்டி எடுத்தான். வெல்கம் பலகை, குத்துவிளக்குப்
பலகை டியூப்லைட் என அனைத்துச் சாதனங் களையும் ஒரே சைக்கிளில் வைத்துக் கட்டி எடுத்துக்கொண்டு
போகும் அளவுக்குப் பழகியிருந்தான். வயல்வேலை செய்யப் பிடிக்காமல் திருமணம், மற்ற காரியங்களுக்குச்
சென்று ஒலி, ஒளி அமைப்பதையே தொழிலாகக் கொண்டுவிட்டான் கன்ட்ரோல்.
நான்கு ஆண்டுகளாக
வளர்த்திருந்த தாடியும் மீசையும், அவனைப் பார்க்கிற குழந்தைகள் பயந்து மிரண்டு அழும்படி
செய்தன. கொடுக்கன் பாளையத்து மாரியம்மன் கோயிலுக்கு மார்கழி மாதம் முழுக்க, பாட்டு
ஒலிபரப்புவதற்காக கன்ட்ரோலிடம் பணம் பேசி பாக்குக் கொடுத்து இருந்தார்கள். மாலை நாலரை
மணிக்கு, இரவு சாப்பாட்டுக் காக அம்மா சுட்டுக்கொடுக்கும் கேழ்வரகு தோசையை எடுத்துக்கொண்டு
போவான்; மாலை ஐந்தரை மணியிலிருந்து இரவு எட்டு மணி வரைக்கும் பக்திப் பாடல்களை ஒலிபரப்பிவிட்டு,
கோயிலிலேயே படுத்துக்கிடந்து, மீண்டும் காலை நாலரை மணிக்கு எழுந்து எட்டு மணி வரைக்கும்
பாடலை ஒலிபரப்புவான். பின், சைக்கிளில் வீட்டுக்கு வந்து பகல் முழுக்கத் தூங்குவான்.
அந்த ஊரில்தான் கொடிபவுனு வாழ்க்கைப் பட்டிருக்கிறாள் என்பது அவனுக்குத் தெரியும்.
முப்பது நாட்களும் காலையும் மாலையும் ஒலிபரப்பும் அனைத்துப் பாடல்களையும் கொடிபவுனு
கேட்டுக்கொண்டுதான் இருந்தாள். கோயிலில் படுத்துக்கிடப் பவனை வீட்டில் படுத்துக்கொள்ளச்
சொல்லலாம். சொன்னால் கேட்க மாட்டான் என்பதால், அவளும் அழைக்கவில்லை.
அன்று வெள்ளிக்கிழமை
என்பதால் குழந்தைகளோடு கோயிலுக்கு வந்திருந்தாள். அடையாளம் தெரியாதபடி உருமாறியிருந்த
கன்ட் ரோலைப் பார்க்கப் பார்க்க கொடிபவுனுக்கு வேதனையாக இருந்தது. சுவரையே பார்த்தபடி
தலையில் முக்காடோடு கை கட்டி உட்கார்ந் திருந்தான். எப்படி யாவது அவனிடம் பேசிவிட வேண்டும்
என நினைத்தவளால் பேச முடியவில்லை. மஞ்சள் நீர் சடங்கில் கன்ட்ரோல் தொலைத்துவிட்டுத்
தேடிய இசைத்தட்டு இப்போது கொடிபவுனு கையில் இருந்தது. யாரும் பார்க்காதபடி அவனின் பக்கமாக
விசிப் பலகையில் வைத்துவிட்டு வந்துவிட்டாள்.
இவ்வளவு காலம்
தன்னைத் தொந்தரவு செய்துகொண்டு இருந்த இசைத்தட்டு தன்னிடம் இல்லாமல் போனது கொடிபவுனுக்கு
அதை விடவும் தொந்தரவாக இருந்தது.
கொடிபவுனுவின்
மகளை தைலம்மை திண்ணையிலிருந்து மூன்று முறை குதிக்கச் சொன்னாள். இன்னும் மழை நிற்கவில்லை.
தண்ணீரில் ஓடுகளுக் கிடையில் சிறைபட்டுக் கிடந்த இசைக்காத இசைத் தட்டுக்களையே கொடி
பவுனு பார்த்துக்கொண்டு இருந்தாள். தான் வாழ்ந்திருக்க வேண்டிய வீடு. அவளால் தைலம்மையிடமிருந்து
பிரிய முடியவில்லை. போகும்போது இளைய மகளிடமிருந்து ஐம்பது பைசா நாணயத்தை வாங்கி அத்தையிடம்
நீட்டினாள். தனது சிகிச்சைக்காக தைலம்மை சம்பிரதாயத்துக்குப் பெறும் கூலி அது. தனது
பேத்திக்குத் தானே செய்தேன் என வாங்க மறுத்துவிட்டாள்.
எங்கோ உருவாகிய
மேகம், நீர்த்துளியாகி இந்த மண்ணில் பெய்து நிறத்தை இழந்து, எல்லாமோடு எல்லாமாகக் கலந்துவிட்டது.
சிவப்பாக செம்மண்ணில் கலந்துவிட்ட மழைநீர் எங்கே போவது எனத் தெரியாமல் போய்க்கொண்டு
இருக்கிறது.
கொடிபவுனு இப்போது
தலையில் முறத்தைப் பிடித்திருக்கவில்லை. மழையிலேயே நனைந்தாள். ஆளுக் கொரு முறத்தைத்
தலையில் பிடித்தபடி அம்மாவின் பின்னால் இரண்டு மகள்களும் மழையை ரசித்தபடி நடந்துகொண்டு
இருந்தார்கள்.
தன்னிடமிருந்து
களவுபோன இசைத்தட்டு திரும்பக் கிடைத்ததும், அது கிடைத்த இடமும் கன்ட் ரோலுக்குள் அப்போது
பல கேள்வி களை எழுப்பின. பின், அவனுக்கு விடையும் கிடைத்தது. அப்போது அவனுக்கு எல்லையற்ற
மகிழ்ச்சியை அடையும்படியான மனநிலையைக் கொடுத்தது. தனக்கு வாழத் தகுதி இருப்பதாக நினைத்துக்கொண்டான்.
மறுநாள் காலையே சவரம் செய்து மாப்பிள்ளை போல் ஆனான். அதற்கான காரணம் யாருக்கும் புரியவில்லை.
தைலம்மை மகனின் மாற்றத்தைப் பார்த்து பூரித்துப் போனாள். அவள் அவனைச் சாப்பிட அழைத்தும்கூட
வரவில்லை. அறையை மூடிக்கொண்டு அதே பாடலையே திரும்பத் திரும்ப இசைக்கச் செய்து கேட்டான்.
ஒரு கட்டத்தில்
மகிழ்ச்சி, துக்கம், எல்லாமும் பொய் என்பதாக அவன் உணர்ந்தான். மகிழ்ச்சி அவனிடமிருந்து
மறைந்து போனது. வாழ நினைத்த அறையிலேயே தூக்கில் தொங்கியவனை வெளியில் கொண்டு வந்து போட்டார்கள்.
அவன் மகிழ்ச்சியாக இருந்ததற்கும், இறந்ததற்குமான காரணம் யாருக்கும் புரியவில்லை. அவனின்
அறையில் கண்டெடுக்கப்பட்ட எழுத்துப் பிழையுடன் இருந்த அந்தக் கடிதத்தில், தனது சொத்துக்களை
முழுக்க கொடிபவுனுவின் குழந்தை களுக்கு எழுதி வைத்துவிடும்படியும், அந்த இசைத்தட்டை
கொடிபவுனுவிடம் கொடுத்துவிடும்படியும் எழுதியிருந்தான்.
கொடிபவுனு அவனுடைய
நினைவு வரும்போதெல்லாம், இசைக்காத அந்த இசைத்தட்டை எடுத்துப் பார்த்துக்கொண்டு இருக்கிறாள்.
அதனை இசைத்துப் பார்க்கக்கூடிய தைரியம் அவளிடம் இல்லை!
நன்றி விகடன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக