23/08/2012

சௌந்தரவல்லியின் மீசை - எஸ்.ராமகிருஷ்ணன்


அவன் சொன்னதைக் கேட்டு, அவளை எழுந்து நிற்கச் சொன்னார். மாணவிகள் வாயை மூடிக்கொண்டு சிரித்தார்கள். சௌந்தரவல்லி தலையைக் கவிழ்ந்து உட்கார்ந்துகொண்டாள். சயின்ஸ் வாத்தியார் சத்தமாக, ''ஏ... இந்திராணி! அவளுக்கு மீசை இருக்கா, இல்லையானு பார்த்துச் சொல்லும்மா'' என்று சொன்னதும் வகுப்பில் சிரிப்பு பலமாக வெடித்தது.

இது போன்ற சந்தர்ப்பத்துக்காகவே காத்துக்கிடந்தவள் போல, அவள் சௌந்தரவல்லியின் தலையைப் பிடித்து மேலே தூக்க முயன்றாள். குனிந்தபடியே பெஞ்ச்சைப் பிடித்த கையை சௌந்தரவல்லி விடவே இல்லை. இந்திராணி வேண்டுமென்றே பெஞ்ச்சின் அடியில் குனிந்து, அவள் முகத்தைப் பார்க்க முயற்சித்தாள். சௌந்தரவல்லி நறநறவென பற்களைக் கடித்தாள். அப்படியே இந்திராணியை செவுளோடு சேர்த்து அறைய வேண்டும் போல் இருந்தது.

''சார்... பல்லைக் கடிச்சிக்கிட்டுத் தலையை நிமிரவே மாட்டீங்கா! ரெண்டு பிள்ளைக ஒண்ணா சேந்து இழுக்கட்டுமா?'' என்று இந்திராணி கேட்க, சயின்ஸ் வாத்தியார் உற்சாகமாகி, ''என்ன செய்வீங்களோ எனக்குத் தெரியாது. உண்மை தெரிஞ்சாகணும்'' என்றார்.

உடனே, சௌந்தரவல்லியின் பெஞ்ச்சின் பின்னால் இருந்த சங்கரி, அவள் ஜடையைப் பிடித்து பின்னால் இழுக்க ஆரம்பித்தாள். பிடரியில் வலி உண்டானபோதும் சௌந்தரவல்லி தலையை நிமிர்த்தவே இல்லை. உடனே, அவளுக்கு இடது பக்கம் உட்கார்ந்திருந்த மாரிக்கனி அவளது இடுப்பில் கிச்சலம் காட்டத் துவங்கினாள். உடம்பை நெளித்துக்கொண்டபோதும் சௌந்தரவல்லியின் முகம் வெளிப்படவே இல்லை.

அவளது முன் பெஞ்ச்சில் இருந்த நிர்மலா மட்டும், ''ஏய்... விடுங்கடி! அதெல்லாம் சௌந்தரவல்லிக்கு மீசை கிடையாது'' என்று ஆதங்கத்துடன் சொன்னாள். அதை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. வகுப்பு லீடராக இருந்த ஆவுடையப்பன் மிகுந்த ஆவலோடு, ''நான் வேணா தலையை இழுத்துப் பார்க்கட்டுமா சார்?'' என்று கேட்டான். ''இங்கே என்ன ஜல்லிக்கட்டா நடக்குது? ஆளுக்கு ஆள் இறங்குறீங்க. இருங்கடா, பார்க்கலாம்!'' என்று அவர்களைக் கட்டுப்படுத்தினார் வாத்தியார். மாணவர்கள் குசுகுசுவெனப் பேசிக்கொண்டார்கள்.

பெஞ்ச்சுக்கு அடியில் குனிந்து உட்கார்ந்து, கையைக் கொடுத்து சௌந்தரவல்லியின் தாடையைப் பிடித்து இந்திராணி நகத்தால் கிள்ளியபோதும் பிடியை விடவே இல்லை. அவள் தாடையைப் பிடித்து மேலே தூக்கத் துவங்கினாள் இந்திராணி. சௌந்தரவல்லி திமிரவும் பின்னால் இருந்த சொர்ணம் சடையைச் சுண்டி இழுக்கவும், முகம் வெளியே வந்தது. அவசரமாக தன் கைகளால் முகத்தைப் பொத்திக்கொண்டாள் சௌந்தரவல்லி. இந்திராணி அப்படியும் விடவில்லை. சௌந்தரவல்லியின் கைகளைப் பிரித்து முகத்தைக் காட்டினாள்.

மொத்த வகுப்பும் சௌந்தரவல்லியின் முகத்தையே பார்த்தது. வாத்தியார் அருகில் வந்து, உற்றுநோக்கினார். பிறகு பலத்த சிரிப்போடு, ''ஆமாண்டா! சௌந்தரவல்லிக்கு மீசை இருக்கு'' என்றார். மாணவர்கள் பெஞ்ச்சைத் தட்டிச் சிரித்தார்கள். சௌந்தரவல்லி அவமானம் தாங்காமல், உதட்டைக் கடித்துக்கொண்டு இருந்தாள். கண்களில் அழுகை முட்டியது.

''உன் முகரையை ஒரு தடவையாவது கண்ணாடியில பார்த்திருக்கியா?'' என்று கேட்டார் வாத்தியார். அவளால் பதில் சொல்ல முடியவில்லை. தொண்டையில் யாரோ கையால் நெருக்கிப் பிடித்து அழுத்துவது போல இருந்தது.

''தினம் தினம் குளிப்பியா?'' என்று கேட்டார். அவள் தலையாட்டினாள். ''எங்கே?'' என்று கேட்டதும், அவள் தயங்கித் தயங்கி, ''கல் கிடங்குல சார்!'' என்று கைகளைக் கட்டிக்கொண்டு சொன்னாள். உடனே ஒரு பையன் எழுந்து, ''பொய்யி சார்! கல் கிடங்குல பொம்பளப் பிள்ளைக யாரும் குளிக்க வரது கிடையாது. அது ரெண்டு ஆளு ஆழம்!'' என்றான்.

''அதான் இவ லட்சணம், முகரையில தெரியுதே! நீ வேற சொல்லணுமாக்கும்'' என்றபடியே ''இந்த வருஷத்தில் என்னிக்குக் குளிச்சே?'' என்று கேட்டார். அவளுக்கு ஆத்திரமாக வந்தது. பதில் சொல்லாமல் நின்றாள். வாத்தியார் அவள் பாவாடை மீது பிரம்பால் ஒரு அடி கொடுத்தபடி, ''நல்லா சண்டியரு மாதிரி மீசையை ஏத்தி வளத்துட்டு வா! அப்போதான் கெத்தா இருக்கும். நம்ம வகுப்புல பயக ஒருத்தனுக்கும் மீசை முளைக்கவே இல்லை. ஆனா, அதுக்குள்ள இந்தப் பொம்பளைப் பிள்ளைக்கு மீசை வந்துருச்சு, பாருங்கடா!'' என்றார்.

மாணவிகளும் இதைக் கேட்டுச் சிரித்தார்கள். இந்திராணி மட்டும் நல்ல பிள்ளை போல, ''சார்... நான் தினம் மஞ்ச தேய்ச்சுக் குளிப்பேன். எனக்கெல்லாம் மீசை வரவே வராது'' என்றாள். ''அதான் பொம்பளைப் பிள்ளைக்கு அழகு'' என்று நற்சான்றிதழ் தந்தார் வாத்தியார். வகுப்பு முடியும் வரை அந்த கேலிப் பேச்சு ஓடிக்கொண்டே இருந்தது.

மதியச் சாப்பாட்டுக்காக மணி அடித்த போது, சயின்ஸ் வாத்தியார் வகுப்பைவிட்டு வெளியேறத் துவங்கினார். அவரது தலைமறைந்த மறுநிமிஷம் சௌந்தரவல்லி ஆவேசமாகப் பாய்ந்து, இந்திராணியைக் கீழே தள்ளி, அவள் மீது ஏறி உட்கார்ந்து மாறி மாறி அடித்தாள். அவளும் விடவில்லை. சௌந்தரவல்லியின் தலைமயிரைப் பிடித்து உலுக்கினாள். இருவரும் கட்டிப் புரண்டார்கள்.

இந்திராணி அவள் பாவாடையை உருவி விடுவதற்காக நாடாவைப் பிடித்து இழுத்தாள். சௌந்தரவல்லி அப்படியே அவள் கையைப் பிடித்து, அழுத்தமாகக் கடித்தாள். கையில் ரத்தம் வரவும் இந்திராணி பெருங்குரல் எடுத்து அழத் துவங்கினாள். சௌந்தரவல்லி தன் பையைக்கூட எடுக்காமல், பள்ளிக்கூடத்தை விட்டு வெளியே ஓடத் துவங்கினாள்.

டீச்சர்ஸ் ரூமில் போய் இரண்டு பையன்கள் சௌந்தரவல்லி கடித்துவைத்த விஷயத்தைச் சொன்னார்கள். கையில் பிரம்போடு நாரம்பூ சார் வந்தபோது, இந்திராணி தன் கையில் பதிந்திருந்த பல் தடத்தைக் காட்டினாள். ''நாளைக்கு வரட்டும் அவ, பார்த்துக்கிடலாம்'' என்றபடியே, இந்திராணி கையில் குப்பை மேனியை அரைத்துத் தடவும்படி சொல்லி விட்டுச் சென்றார். மதிய வகுப்புகள் துவங்கியபோது, சௌந்தரவல்லி வரவே இல்லை. நிர்மலாவும் சி.முருகேஸ்வரியும் மட்டும் அவளுக்காக வருத்தப்பட்டார்கள்.

பள்ளியிலிருந்து வெளியேறிய சௌந்தரவல்லிக்கு, உடம்பெல்லாம் எறும்பு அப்பிக்கொண்டு இருப்பது போன்று அவர்களின் கேலி ஒட்டிக்கொண்டு இருந்தது. அப்படியே ஏதாவது ஒரு பாங்கிணற்றில் விழுந்து செத்துப்போகலாமா என்று தோன்றியது. வழியில் தென்பட்ட தும்பைச் செடிகளை ஒடித்துத் தள்ளியபடியே, தனியே நடத்து போய்க்கொண்டு இருந்தாள்.

காட்டுமுனியம்மன் கோயில் இருந்த பாறையருகே வந்தபோது, ஆள் நடமாட்டமே இல்லை. ஒரேயரு வேப்பமரமும், வெளிறிப் போன சில மேகங்களும், விரிந்த ஆகாசமும் மட்டுமே இருந்தன. கோயில் முன்பாக நாலைந்து துருப்பிடித்த மணிகள் மட்டும் இரண்டு கல்தூண்களுக்கு நடுவில் தொங்கிக்கொண்டு இருந்தன. வெயிலேறிக்கிடந்த பாறை மீது உட்கார்ந்தபோது, தன் முகத்தை ஒருமுறையாவது பார்க்க வேண்டும் போல் இருந்தது சௌந்தரவல்லிக்கு.

கண்களைக் கூர்மையாக்கிக்கொண்டு மூக்கின் நுனியைப் பார்க்கத் துவங்கினாள். மீசை இருக்கிறதா, இல்லையா என்று தெரியவே இல்லை. 'இந்தக் கண்ணு எழவு எம்புட்டோ தூரத்தில் இருக்கிற நிலாவைக்கூடப் பார்க்குது உதட்டு மேல இருக்கிற மீசையைப் பார்க்க முடியலை' என்று கண்களின் மீது ஆத்திரமாக வந்தது. தலையை அந்தப் பக்கம் இந்தப் பக்கம் திருப்பி எப்படியாவது மீசை இருக்கிறதா என்று பார்க்க முயற்சித்தாள். தென்படவே இல்லை. அவர்கள் வீட்டில் இருந்த கண்ணாடி ரசம் போனது. கலங்கலாகத்தான் முகம் தெரியும். பொட்டு வைப்பதற்கு மட்டும்தான் அந்தக் கண்ணாடியை சௌந்தரவல்லி உபயோகப்படுத்துவாள். இன்றைக்கு எப்படியாவது மீசை இருக்கிறதா என்று கண்ணாடியில் பார்க்காவிட்டால், மனசு ஆறாது போலிருந்தது.

மாலையடங்கும் வரை அவள் அந்தப் பாறையிலேயே உட்கார்ந்துஇருந்தாள். கிணற்று வெட்டுக்குப் போனவர்கள் திரும்பி வரத் துவங்கிஇருந்தார்கள். இனியும் கிளம்பா விட்டால் வீட்டில் தேட ஆரம்பித்துவிடுவார்கள். ஏகாந்தமான காற்றில், அலைபடும் தலைமயிரோடு அவள் மெதுவாக வீட்டை நோக்கி நடக்கத் துவங்கினாள்.

வீட்டில் கேட்டால், என்ன சொல்வது என்று தெரியவில்லை. அம்மாவிடம் இதைப் பற்றி சொன்னால் அடிக்கும். அண்ணன்கள் யாரும் அவளைப் பற்றி அக்கறைகொள்வதே இல்லை. அய்யா வீட்டுக்கு வருவதற்கே இரவாகிவிடுகிறது. என்ன செய்வது என்று புரியாத யோசனைகளோடு எதற்கும் சி.முருகேஸ்வரியை பார்த்துவிட்டு, வீட்டுக்குப் போகலாம் என்று அவள் வீட்டை நோக்கி நடந்தாள்.

சி.முருகேஸ்வரி திண்ணையில் உட்கார்ந்து, தீப்பெட்டி ஒட்டிக்கொண்டு இருந்தாள். அவளைப் போலவே பள்ளிப் பிள்ளைகளில் பாதிக்கும் மேலாக தெரு விளக்கடியில் உட்கார்ந்து, தீப்பெட்டி ஒட்டுவார்கள். சௌந்தரவல்லி அடிக்கட்டை ஒட்டுவதில் தேர்ச்சி பெற்றவள். அவளால் வேக வேகமாக ஒட்ட முடியும்.

திண்ணையில் சிதறிக்கிடந்த தீப்பெட்டிகளை ஒதுக்கித் தள்ளிவிட்டு சௌந்தரவல்லி ஏறி உட்கார்ந்தாள். சி.முருகேஸ்வரி தீப்பெட்டி ஒட்டியபடியே, சௌந்தரவல்லியின் பையை ஹெட்மாஸ்டர் ரூமில் கொண்டு போய் ஆவுடையப்பன் ஒப்படைத்துவிட்டதாகவும் மறுநாள் அவள் பள்ளிக்கு வரும்போது நாரம்பூ சார் வகையாகப் பிரம்படி சாத்துவார் என்றும் சொன்னாள்.

''அவிங்க கிடக்காய்ங்க பொண்டுகப் பயலுக! எல்லாம் அந்த இந்திராணி குரங்காலே வந்த வெனை! அவளை சங்கைக் கடிச்சுவெச்சிருக்கணும். தப்பிச்சுட்டா!'' என்று சௌந்தரவல்லி குறைபட்டுக்கொண்டாள். சி.முருகேஸ்வரி ஆதங்கத்துடன், ''கோதண்டராமன், சின்னமுத்து, வெளவாலு இந்த மூணு பயகளும்தான் இத்தனைக்கும் காரணம். அவிங்கதான் உன்னைப்பத்தியே நோண்டிக்கிட்டுக் கிடப்பாய்ங்க'' என்றாள்.

சௌந்தரவல்லி தயங்கித் தயங்கி, ''அவிங்க சொல்றது நிஜமா முருகு? என் மூஞ்சியில மீசையா முளைச்சிருக்கு?'' என்று கேட்டாள்.

சி.முருகேஸ்வரி கண்ணில் விழுந்த தூசியை எடுப்பவள் போல மிக அருகில் பார்த்துவிட்டு, ''ஆமா! எம்புட்டு ரோமம் முளைச்சிருக்கு'' என்று சிரிக்காமல் சொன்னாள். அவர்கள் வீட்டில் கண்ணாடி இருக்கிறதா என்று சௌந்தரவல்லி கேட்க, உள்ளே ஜன்னலில் மாட்டிவைத்திருப்பதாகச் சொன்னாள்.

திண்ணையில் இருந்து குதித்து வேகமாக உள்ளே போனாள் சௌந்தரவல்லி. அந்தக் கண்ணாடியிலும் ரசம் போயிருந்தது. மிக நெருக்கமாக கண்ணாடியை முகத்துக்கு அருகில் வைத்துப் பார்த்தாள். அந்தப் பையன்கள் சொன்னது போல லேசாக மீசை ரோமங்கள் அரும்பத் துவங்கியிருந்தன.

'இது என்ன எழவுக்கு எனக்குப் போய் முளைக்குது!' என்றபடியே விரல் நுனியால் தடவிப் பார்த்தாள். பூனை ரோமம் போன்றிருந்தது. பார்க்க அசிங்கமாக இருக்கிறதோ என்று கண்ணாடியைச் சற்றுத் தொலைவில் வைத்துப் பார்த்தாள். அவளது கழுத்து எலும்புகள் புடைத்து, கண்கள் உள்ளோடிப் போய், முகமே பிதுங்கியிருப்பது போலத்தான் இருந்தது.

இந்திராணிக்கு அப்படி இல்லை. கன்னங்கள் நன்றாக உப்பியிருந்தன. காதோரம் முடி சுருள் சுருளாகப் பறக்கிறது. அவள் தினமும் புருவத்துக்குக்கூட மை போட்டுக்கொள்கிறாள். அவள் அப்பா பஞ்சாயத்து போர்டில் வேலை செய்கிறார். அவர்கள் வீட்டில் பெரிய பவுடர் டப்பா இருக்கிறது.

சௌந்தரவல்லி வீட்டில் ஒரே ஒரு சாந்துப் பொட்டு மட்டுமே! கண் மை டப்பாகூட இல்லை. ''பள்ளிக்கூடம் போற கழுதைக்கு எதுக்கு கண் மை, காது மை எல்லாம்? இன்னும் ரெண்டு வருசத்துல எவனாவது கிணறு வெட்டுக்கிட்டே புடிச்சிக் குடுத்திறப்போறோம். அதுக்கு இம்புட்டு அழகு போதும்'' என்பாள் அம்மா.

கண்ணாடியில் திரும்பத் திரும்ப பார்த்தபோது, மீசை அரும்பியிருப்பது அசூயையாக இருந்தது. ஒவ்வொரு ரோமமாகப் பிடுங்கிப் போட்டுவிடலாமா என்று விரல் நுனியால் ஒரு ரோமத்தைப் பிடித்துப் பார்த்தாள். விரலால் பிடிக்கவே முடியவில்லை. கறுப்புப் பென்சிலால் கோடு போட்டது போல லேசாகத் துவங்கி இருக்கிறது.

அவளுக்கு அழுகையாக வந்தது. கண்ணாடியை ஜன்னலில் மாட்டிவிட்டு வாயைப் பொத்திக்கொண்டு அழுதாள். இந்த மீசையை எப்படி அழிப்பது என்று தெரியவில்லையே என்ற வலி அவளுள் பீறிட்டது. கண்ணைத் துடைத்துக்கொண்டு சி.முருகேஸ்வரியிடம் வந்து, வருத்தமான குரலில், ''இப்ப நான் என்னடி செய்றது?'' என்று கேட்டாள். ''எதுக்கும் மஞ்சளை நல்லா அரைச்சுப் போடு. நாலஞ்சு நாள்ல மறைஞ்சுபோயிடும்'' என்றாள். 'அப்போ நாலைந்து நாட்களுக்குப் பள்ளிக்கூடம் போகக் கூடாது' என்று மனதுக்குள்ளாக முடிவு செய்துகொண்டு கிளம்பினாள் சௌந்தரவல்லி.

தெருவில் தென்படும் ஒவ்வொரு பெண்ணின் முகத்தையும் உற்றுப் பார்த்துக்கொண்டே போனாள். ஒன்றிரண்டு பெண்களுக்கு மீசை ரோமங்கள் இருப்பது கண்ணில் தென்படத்தான் செய்தது. அவர்களும் தன்னைப் போல அவமானப்பட்டு இருப்பார்களா என்று யோசனையாக இருந்தது.

வீட்டுக்குப் போனபோது அம்மா அடுப்பில் மிளகாய் வற்றலை வறுத்துக்கொண்டு இருந்தாள். புகை மண்டியிருந்தது. உள்ளே எட்டிப் பார்த்ததுமே, அம்மா கரண்டியை அவள் மீது வீசி எறிந்தாள். ''எதுக்குடி இந்திராணியைக் கடிச்சுவெச்சே? நீ என்ன கடிநாயா, இல்லே கறிக்கு ஏமாந்து போய் அலையிறியா?'' என்று கேட்டாள். ''நான் ஒண்ணும் சும்மா கடிக்கலை'' என்றாள் சௌந்தரவல்லி முறைப்பாக.

அம்மா சேலை நுனியால் இரும்புச் சட்டியைப் பிடித்து இறக்கிவைத்துவிட்டு, ''அவங்க அம்மாவும் அய்யாவும் வழியில என்னைப் பிடிச்சு நிறுத்தி, நாற வசவு வஞ்சாங்க. அந்நேரம் மட்டும் நீ என் கையில கிடைச்சிருந்தா, உன்னை நரம்பு நரம்பா எண்ணியிருப்பேன். எங்கேடி போய்த் தொலைஞ்சே?'' என்றாள்.

பள்ளியில் நடந்தது எதையும் அம்மாவிடம் சொல்ல வேண்டாம் போலிருந்தது. வழக்கம் போல, தான் ஒட்ட வேண்டிய தீப்பெட்டியின் அடிக்கட்டைகளுக்கான பொருட்களை அள்ளிக்கொண்டு, வாசலுக்கு வந்து உட்கார்ந்தாள். அவளால் கவனமாக ஒட்டவே முடியவில்லை. மனதில் வலி அதிகமாகிக்கொண்டே இருந்தது.

மிக மெதுவாக வீட்டினுள் நடந்து போய் அடுப்படியில் இருந்த மஞ்சள் கிழங்கைத் தேடினாள். உரசி உரசி மஞ்சள் கிழங்கு தேய்ந்து போயிருந்தது. வீட்டின் பின்புறம் இருந்த படலினுள் போய் நின்றுகொண்டு, மஞ்சள் கிழங்கை கல்லில் வேகவேகமாக உரசி, உதட்டுக்கு மேலாக அப்பிக்கொண்டாள். கையெல்லாம் மஞ்சளாகியது.

அம்மா வரும் சத்தம் கேட்டதும், தலையைக் கவிழ்ந்தபடியே வெளியே நடந்து போனாள். அன்றைக்குப் பார்த்து அவளோடு பெட்டி ஒட்டுவதற்கு அம்மாவும் வந்து சேர்ந்தாள். அருகில் வந்து உட்கார்ந்தவுடனே சௌந்தரவல்லியின் முகத்தைப் பார்த்துவிட்டு, 'என்னடி இது வேஷம்?' என்று கேட்டாள். 'முகத்தில் எரிச்சல் இருக்கிறது' என்று சௌந்தரவல்லி பொய் சொன்னாள். ''அதுக்கு இப்பிடியா மஞ்சளைப் பூசிக்கிட்டு வருவ?'' என்றபடியே தீப்பெட்டி ஒட்டத் துவங்கினாள் அம்மா.

அம்மாவின் முகத்திலும் பூனை ரோமங்கள் இருக்கத்தான் செய்கின்றன. அதைப் பற்றி அய்யாவோ, அண்ணன்களோ எதுவுமே சொன்னதே இல்லை. அம்மா முகத்தை உற்றுப் பார்த்துக்கொண்டே இருந்தாள். அம்மா அதைக் கவனிக்கவே இல்லை. தயங்கித் தயங்கி அம்மாவிடம், தனக்கு மீசை வளர்வதாகச் சொன்னாள் சௌந்தரவல்லி. அம்மா அவளை அருகில் அழைத்து முகத்தை உற்றுப் பார்த்துவிட்டு, ''அது தானாப் போயிரும். அதுக்குப் போயா இப்படி மஞ்சளைப் பூசிக்கிட்டு இருக்கே?'' என்றாள். சௌந்தரவல்லிக்கு அந்தப் பதில் போதுமானதாக இல்லை. முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு, ''புதுசா ஒரு கண்ணாடி வாங்கணும்'' என்றாள். ''அதெல்லாம் உன்னைக் கட்டிக் குடுக்குற அன்னிக்கு வாங்கிக்கிடலாம்'' என்றாள். சௌந்தரவல்லிக்குக் கோபம் உச்சத்தைத் தொட்டது.

''அதுவரைக்கும் நான் கருகருனு மீசையை வளர்த்து அசிங்கமா அலையணுமா..? ஆம்பளைப் பயக எம்புட்டுக் கேலி செய்றாங்க தெரியுமா?'' என்றாள். ''அதுக்கு நான் என்னடி செய்ய? இருக்கிற பாட்டையே பார்க்க முடியல! இதுல உனக்கு மீசை முளைக்கிறதுதான் பெரிய பிரச்னையாக்கும்'' என்றாள் அம்மா. அதற்குள் அண்ணன் வர, அம்மா அவனோடு பேசிக்கொண்டே கிளம்பிப் போனாள்.

ஐந்தாம் வகுப்பு படிக்கும் வரை சௌந்தரவல்லிக்கு இதுபோன்ற தொல்லைகள் எதுவுமே கிடையாது. ஆறாம் வகுப்பு போகும்போது 'கால் தெரியாமல் பாவாடை கட்ட வேண்டும், ஆம்பளைப் பிள்ளை மாதிரி சட்டை போடக் கூடாது' என்று பள்ளிக்கூடத்தில் நிறைய கெடுபிடிகள் கொண்டுவந்துவிட்டார்கள். அப்போதிலிருந்துதான் அவள் உடலில் ஏதேதோ மாற்றங்களும் உருவாகத் துவங்கின. அதைவிடவும் அம்மா எடுத்ததற்கெல்லாம் அவளைக் கட்டிக்கொடுப்பது பற்றியே பேசுவது வேறு எரிச்சலை உண்டு பண்ணியது. அன்றிரவு அவள் சாப்பிடாமலே உறங்கினாள்.

மறுநாளில் இருந்து தொடர்ந்து மூன்று நாட்களுக்கு, அவள் நினைத்த நேரம் எல்லாம் மஞ்சள் கிழங்கை உரசி உரசி முகத்தில் பூசினாள். ஆனால் மீசை ரோமங்கள் மறையவே இல்லை. மாறாக, முகத்தில் மஞ்சள் படிந்து, காமாலை கண்டவள் போலாகிவிட்டாள். விஷயம் அய்யா காதுக்கும் போய், ''பொம்பளைப் பிள்ளையை உருப்படியா வளர்க்கத் தெரியலை. கோயில் மாடு மாதிரி அலையவிட்டா மீசையும் முளைக்கும், தாடியும் முளைக்கும்'' என்று அம்மாவைப் போட்டு அடித்தார்.

அம்மா யாரிடமோ ஆலோசனை கேட்டு, மஞ்சளோடு பச்சிலைகளை சேர்த்து அரைத்துப் பூசினாள். ஆனாலும், ரோமம் மட்டுப்படவே இல்லை. யாரும் அறியாமல் கழுதை மூத்திரத்தைக்கூடப் பிடித்து வந்து அவள் முகத்தில் தேய்த்துப் பார்த்தாள். சௌந்தரவல்லியால் அந்த நெடியைத் தாங்க முடியவில்லை.

''எம் பிள்ளைய யாரு கட்டிக்குவான்? இப்பிடி ஆகிப் போச்சே!'' என்று அம்மா தெருவில் போகிற வருகிற பெண்களிடம் எல்லாம் சொல்லிச் சொல்லி அழுதாள். சௌந்தரவல்லி அதன் பிறகு பள்ளிக்கூடம் போகவே இல்லை. நாலைந்து நாட்களுக்குப் பிறகு, அவளும் அம்மாவோடு கட்டட வேலைக்குச் செல்லத் துவங்கினாள். அங்கே யாரும் யாரையும் நின்று கவனிப்பதற்கோ, கேலி செய்வதற்கோ நேரமே இல்லை. அவளும் அம்மாவும் கடுமையாக வேலை செய்தார்கள். ஒவ்வொரு நாளும் வேலைக்குச் செல்லும்போது சௌந்தரவல்லி பள்ளியைக் கடந்து செல்வாள். தூரத்திலிருந்தே வகுப்பில் மாணவர்கள் படிக்கும் சத்தம் கேட்கும். அவள் தலைகுனிந்தபடியே கடந்து போய்விடுவாள்.

தன் பையையும் புத்தகங்களையும் மட்டுமாவது பள்ளிக்கூடத்திலிருந்து கேட்டு எடுத்து வர வேண்டும் என்று எப்போதாவது தோன்றும். ஆனால், தன்னோடு படித்த மாணவர்களை மறுபடி நேர்கொண்டு பார்ப்பதற்கு கூச்சப்பட்டுக்கொண்டு அவள் போகவே இல்லை.

நீண்ட நாட்களுக்குப் பிறகு, ஓர் இரவு அம்மா அவளுக்காக டவுனிலிருந்த மருந்துக் கடையில் கேட்டு, முகத்துக்குப் பூசிக்கொள்கிற க்ரீம் ஒன்றை வாங்கி வந்து தந்தாள். இனிமேல் அதெல்லாம் எதற்கு என்று தோன்றியது. ''கிணற்று வெட்டுக்காரனைக் கட்டிக்கிறதுக்கு இருக்கிற மூஞ்சியே போதும்மா'' என்று அதை வாங்க மறுத்தாள்.

''நம்ம வீட்டுல வந்து எதுக்குடி பொறந்தே? என்னாலே யாருக்குன்னு பார்க்க முடியுது?'' என்று தலையில் அடித்துக்கொண்டு அழத் துவங்கினாள் அம்மா. சௌந்தரவல்லிக்கும் அழ வேண்டும் போலிருந்தது. இருவரும் ஒருவரையருவர் கட்டிக்கொண்டு அழுதார்கள்.

அந்த அழுகை, சௌந்தரவல்லியின் மீசை முளைத்ததற்காக மட்டும் இல்லை என்பது இருவருக்கும் தெரிந்தே இருந்தது.

நன்றி - விகடன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக