11/06/2012

அப்பர் பெர்த் - ஆதவன்

 கடைசியாக ஒரு உறிஞ்சு; கடைசி வாய்ப்புகை - ரயில் ஜன்னலுக்கு வெளியில் அவன் விட்டெறிந்த சிகரெட்டின் சிறு துணுக்கை வேகமான எதிர்க்காற்று கொத்திச் சென்றது.

இரவு மணி எட்டேகால். தொடர்ச்சியாக மூன்று சிகரெட்டுகளைக் குடித்தும் பதினைந்து நிமிடங்களைத்தான் தள்ள முடிந்திருக்கிறது. இன்னும் இரண்டு நாட்களை எப்படித் தள்ளுவது? - இந்த மூன்றாம் வகுப்புப் பெட்டியில், இந்த ஜனங்களுக்கு மத்தியில். சிதம்பரம் அருவருப்புடன் முகத்தைச் சுளித்துக் கொண்டான். டில்லியிலிருந்து அவசரமாகக் கிளம்பியதால் முதல் வகுப்பில் இடம் கிடைக்கவில்லை. அன்று எல்லோரும் அவனுக்கு அறிமுகமில்லாத டி.டி.ஆர்.கள் வேறு - இந்த டி.டி.ஆர்.களை ஏன் அடிக்கடி மாற்றுகிறார்கள்? ஒருவன் எத்தனை டி.டி.ஆர்.களைத்தான் வசப்படுத்த முடியும்?
டில்லியில் அவனை வழியனுப்ப வந்திருந்தவர்களை அவன் நினைவுபடுத்திக் கொண்டான் - சாந்தா, பேபி, ரத்னா, அபர்ணா - அவளைத்தான் முதலில் நினைக்க வேண்டும். மிஸ்டர் முகர்ஜியும் மிஸஸ் முகர்ஜியும் - மிஸஸ் முகர்ஜியின் கடைசிப் புன்னகை - அவனைப் போன்ற இளைஞர்களிடம் அவள் ஒரு பிரத்தியேக அலைவரிசையில் ஏதோ ஒலிபரப்புவதாகத் தோன்றுகிறது.
அந்தப் போலிக் கூட்டத்தில் உண்மையான பாசமென்பது அபர்ணாவுக்குத்தான் இருந்தது. ஸ்டேஷனில் அவளுடைய முகத்தில் தென்பட்ட தாபத்தைப் பார்த்தவுடன் அவனுக்குக்கூட நெஞ்சை ஏதோ செய்தது. அவளை ஆதரவுடன் அணைத்துக் கொண்டு,"உன் மனசு எனக்குத் தெரியும் அபர்ணா!" என்று மெல்லிய குரலில் அவளிடமும், "இவள்தான் என் உண்மைக் காதலி - தெரிந்து கொள்ளுங்கள்;!" என்று மற்றவர்களிடமும் உரக்கவும் சொல்லிவிட்டு, ரயிலைத் தவறவிட்டு அவளுடனேயே இருந்துவிடலாமா என்று தோன்றியது. ஆனால் நல்ல எண்ணங்கள் எங்கே நீடிக்கின்றன? கைக்குட்டையை ஆட்டி விடை கொடுத்த அவளுடைய தோற்றம் மட்டுந்தான் இப்போது மிஞ்சியிருந்தது - அதுவும், அவளுடன் முன்பு கழித் திருந்த பழைய தருணங்களின் மங்கலான நினைவும்; அமைதி யும் வாத்ஸல்யமும் அழகும் நிரம்பிய தருணங்கள் .. அபர்ணாவை மணந்து கொண்டால் வாழ்க்கைகயில் என்றைக்குமே அமைதியும் அழகும் மிளிரும். ஆனால், அவனுடைய ஆசைகள்? கனவுகள்? என்றும் சாதாரணமான வனாகவே இருந்துவிட அவன் விரும்பவில்லை. என்றாவது ஒருநாள் சமூகத்தில் பெரிய புள்ளியாக வரவேண்டும் - ஒரு புத்திசாலித்தனமன கல்யாணத்தின் மூலம் இதற்கு அவன் அடிகோலலாம். காதலா, வாழ்வில் மேன்மையா என்று யோசித்தபொழுது, பிந்தையதைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டியிருந்தது.

திடீரென்று அவன் மடியில் ஒரு ரப்பர் பந்து வந்து விழுந்து சிந்தனையைக் கலைத்தது. நிமிர்ந்து பார்த்தபொழுது எதிர் ஸீட்டிலிருந்து வாயில் விரலைக் கடித்துக் கொண்டே பயமும் வெட்கமுமாகத் தன்னைப் பார்க்கும் சிறுவனைப் பார்த்தான் சிதம்பரம். பந்து அவனுடையதாகத்தான் இருக்கும். "இந்தா!" என்று புன்னகையுடன் அவனிடம் பந்தை நீட்டினான். சிறுவன் மிகவும் தயக்கத்துடன் அவனிடம் வந்து பந்தை வாங்கிக் கொண்டு, அவசரமாகத் தன் ஸீட்டுக்குத் திரும்பிச் சென்றான்.

எதிர் ஸீட்டிலிருந்த ஒல்லியான முப்பது வயது இளைஞர், சிறுவனின் தந்தை, சிதம்பரத்தைப் பார்த்துப் புன்னகையுடன், "ஒரு நிமிஷம் சும்மா இருக்க மாட்டான்" என்றார்.

சிதம்பரம் அனுதாபம் செறிந்த ஒப்புதல் புன்னகையுடன், "சின்னவன்தானே! இந்தக் கம்பார்ட்மெண்டுக்குள் அவ னுக்கு அடைத்துப் போட்டது போலிருக்கும்" என்றான். இதைக் கேட்டு அவளும் புன்னகை செய்தாள் - பையனின் தாய், இளைஞனின் மனைவி. சிதம்பரத்துக்கு அந்தப் புன்னகை பிடித்திருந்தது. அவளுடைய கண்கள், எடுப்பான நாசி, கன்னங்கள், கழுத்து - ஏன், உடல் முழுதுமே சேர்ந்து புன்னகை செய்தது போல அவனுக்குத் தோன்றியது.

"நீங்களும் சென்னைக்குத்தானா?" என்று சிறுவனின் தந்தை கேட்டான்.

"ஆமாம்" என்றான் சிதம்பரம்.

"அங்கேதான் உத்தியோகமாக?"

"இல்லை - டில்லியில் ஒரு கம்பெனியில் விற்பனைப் பிரதிநிதியாக இருக்கிறேன்"

"ஓகோ! டில்லிவாலாதானா நீங்களும்!"

"பக்கா டில்லிவாலா!" என்று சிதம்பரம் சிரித்தான்.

இவன் என்ன வேலை செய்து கொண்டிருப்பான் என்று சிதம்பரம் ஊகிக்க முயன்றான். ஏதாவது சர்க்கார் ஆபீஸில் மேஜை உத்தியோகமாக இருக்கும். முகத்திலும் பாவனைகளிலும் கொஞ்சமாவது சுறுசுறுப்போ ஊக்கமோ தென்படவில்லை. "மினிஸ்ட்ரியில் வேலையாயிருக்கிறேன்" என்று எதிர் ஸீட்டாளி சொன்னவுடன் சிதம்பரத்தின் ஊகம் ஊர்ஜிதமாயிற்று.

மனைவி அழகானவள்தான் நிஜமாகவே - அதுவும் இந்தக் கணவனுடன் ஒப்பு நோக்கும்போது! அவன் பார்த்திருந்த பல பொருத்தமற்ற ஜோடிகளில் இதுவும் ஒன்று. அந்தப் பெண்ணுக்கு இதைவிட நல்ல கணவனைப் பெறும் தகுதி நிச்சயமாக இருக்கிறது; செக்கச் செவேலென்று மூக்கும் முழியுமாக - அடேயப்பா, போட்டி போட்டுக் கொண்டு வந்து விழுவார்களே - இந்தப் பயலுக்கு அதிர்ஷ்டம்.

இவனுக்கு அதிர்ஷ்டம், அவளுக்குத் துரதிர்ஷ்டம். பாவம், மனதாழத்தில் ஒரு ஏக்கம் இருந்தாலும் இருக்கும் - ஒரு ஆற்றாமை, ஒரு தவிப்பு - தனக்கு ஏற்ற கணவன் கிடைக்கவில்லையேயென்று. சிதம்பரம் நாசூக்காக அவ ளையே பார்க்கத் தொடங்கினான் - அவள் உள்ளத்து உணர்வுகளை பார்க்கத் தொடங்கினான் - அவள் உள்ளத்து உணர்வுகளை அளந்தெடுக்க, உள்ளத்து ஆழத்தை உணர, முயலுபவனைப்போல. அவ்வப்போது அவள் பார்வை அவன் பார்வையைச் சந்தித்து விலகியது. அவன் பார்வை தன்மேல் லயித்திருப்பதை உணர்ந்தும் அதை அவள் பொருட்படுத்தவில்லை. ஒரு மெல்லிய புன்னகைதான் அவள் முகத்தில் தேங்கியிருந்தது.அவனுடைய பார்வையை அங்கீ கரிக்கும் புன்னகையா இது?

அந்தச் சிறு பையன் தன் அப்பாவிடம் மெல்லிய குரலில் ஏதோ சொன்னான். உடனே இளைஞன் சிரித்துக் கொண்டே சிதம்பரத்தைப் பார்த்து,"அப்பர் பெர்த்தில் ஏறணு மென்கிறான்" என்றான். கீழ்ப் பெர்த்துகள்தான் இளைஞன னுடையவை. மேலேயிருந்த பெர்த்துகளில் ஒன்று சிதம்பரததினுடையது, இன்னொன்று அருகிலிருந்த கிழவ ருடையது. ", ஷ்யூர்" என்று சிதம்பரம் புன்னகையுடன் அந்தச் சிறுவனை அலாக்காகத் தூக்கி மேல் பெர்த்தில் உட்கார்த்தி, செல்லமாக அவன் கன்னங்களில் தட்டினான்; பிறகு மறுபடி தன் இடத்தில் உட்கார்ந்தான்.

மேலேயிருந்த பையன் "அம்மா!" என்று அழைத்தான். ஏதோ பெரிய காரியத்தைச் சாதித்ததைப் போன்ற பெருமிதத்துடன். அவள் பையனைப் பார்த்துச் சிரித்தாள். "படுத்துத்தூங்கு" என்று சைகை காட்டினாள். எவ்வளவு அழகிய சிரிப்பு; எவ்வளவு அழகிய பாவங்கள், பாவனைகள். சிதம்பரம் கண்ணாடி ஜன்னலில் தெரிந்த அவளுடைய பிம்பத்தைப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தான். சிறிது நேரம் சென்றது. அவள் டிபன் காரியரை எடுத்துத் திறக்கத் தொடங்கினாள்.

"ஸார், இட்லி சாப்பிடுகிறீர்களா?"

சிதம்பரம் மறுக்கத்தான் நினைத்தான்; ஆனால் கைவளையல்கள் குலுங்க, அழகிய நீண்ட விரல்களால் அவள் இட்லியை எடுத்து,"இந்தாருங்கள்" என்று புன்னகையுடன் நீட்டியபொழுது, மறுக்க முடியவில்லை. இலையை வாங்கும்பொழுது வேண்டுமென்றே அவள் விரல்களைத் தீண்டினான். அவள் முகத்தில் சலனமே இல்லை. தற்செயலாகத் தீண்டியிருப்பதாக எண்ணியிருப்பாளோ? இருக்காது. இருக்காது. கணவன் இருக்கிறானேயென்றுதான் ஒன்றும் காட்டிக் கொள்ளவில்லை. இட்லிக்குப் பிறகு, வேண்டாம் வேண்டாமென்று சொல்லியும் கேளாமல் அவள் அவன் இலையில் தயிர் சாதத்தைப் பரிமாறினாள், புன்னகையுடன். அந்தப் புன்னகையையே தொட்டுக் கொண்டு தயிர் சாதத்தைச் சாப்பிட்டு முடித்தான். "சாப்பாடு நன்றாயிருந்தது" என்று அவன் சொன்னவுடன், அதே புன்னகை மறுபடி பரிசாகக் கிடைத்தது - கொசுறு.

மேல் பெர்த்திலிருந்த பையன் சாப்பிட்டுவிட்டு அங்கேயே தூங்கிவிட்டிருந்தான். கீழே படுக்கைகளை விரித்து, மேலேயிருந்து பையனைத் தூக்கி கீழே படுக்க வைத்தாள் அவள். சிகரெட்டுகளைப் புகைத்தவாறு ஜன்னல் கண்ணாடியைப் பார்த்துக் கொண்டிருந்த சிதம்பரம், எழுந்து தன்னுடைய அப்பர் பெர்த்தில் ஏறிப் படுத்துக் கொண்டான்.

இப்போதுதான் தன்னுடைய இயல்பான இடத்துக்கு வந்துவிட்டது போன்ற ஒரு நிம்மதியும் திருப்தியும் அவனுக்கு ஏற்பட்டது. முதல் வகுப்பு கிடைக்கவில்லை என்றாலும் இந்த அப்பர் பெர்த்தாவது கிடைத்தது, நல்ல வேளையாக. இல்லாவிட்டால் இந்தப் பாமர ஜனங்களோடு சரிசமமாக அவனும் உட்கார்ந்து கொண்டு - சே! நல்லவேளை, இப்போது இந்தப் பெண்மணி எதிரேயிருப்பதால் மூன்றாம் வகுப்புப் பயணமும் ஓரளவு சகிக்கும்படியாக இருக்கிறது. விளக்கு அணையும்வரைர, அவன் மேலேயிருந்து அந்தப் பெண்மேல் பார்வையை வீசியவாறு இருந்தான். விளக்குகள் அணைந்த பிறகு, அவனுக்குச் சென்னையில் தனக்ககாகக் காத்திருக்கும் இந்திராணியின் நினைவு வந்தது - இந்திராணி, அவனுடைய ஆகப் போகும் மனைவி.

இந்திராணி, இந்திராணி, இந்திராணி. எப்படியிருப்பாள் அவள் இப்போது? பருத்திருப்பாளா? அல்லது சற்று இளைத் திருப்பாளோ? இளைத்துத்தான் போயிருப்பாள். போன தடவை பார்த்தபொழுதே "டயட்டில் இருக்கிறேன். ஸ்லிம் ஆகப் போகிறேன்" என்று சொல்லவில்லையோ? இளைத்துத்தான் இருப்பாள். பறவை இறகுகளால் செய்யப் பட்டவள் போல எடையே இல்லாதவளாக அவள் என் மார்பில் வந்து சாய்வாள். காற்றில் அவள் பறந்து விடக்கூடாதே என்று என்னுடன் அவளைச் சேர்த்து நான் அணைத்துக் கொள்வேன். மிருதுவான, எடையில்லாத இந்திராணி.

ஆமாம். எடையேயில்லாத.

ஆனால்? திடீரென்று இவன் நெஞ்சில் ஒரு திகில் மூண்டது - அவளுடைய மனம்? அதுவும் எடையேயில்லாது இருக்காதே? அவன் இல்லாதபோது, அவனைவிடப் பலமான காற்றுகள் எதிலும் அடித்துச் செல்லப்பட்டிராதே? இப்போது நான் அவளைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கும் போது அவள் யாரைப் பற்றி நினைத்துக் கொண்டிருப்பாள்? என்னைப் பற்றித்தானா - அல்லது? இந்த நேரத்தில் வீட்டில்தான் இருப்பாளா அல்லது வெளியில் எங்கேயாவது போயிருப்பாளா? தனியாகப் போயிருப்பாளா, அல்லது .....

அல்லது?

'கூ'வென்று தூரத்தில் கேட்ட இஞ்சினின் ஓலம்; கொட கொடவென்று பாலத்தின் மேல் ரயில் போகும் பெருத்த ஓசை - வேதனையுடனும் ஆத்திரத்துடனும், ', மை காட்!" என்று சிதம்பரம் காதைப் பொத்திக் கொண்டான். 'நான் ஒரு முட்டாள்' என்று தன்னைத்தானே வைது கொண்டான்.

ஆறு மாதங்களாக அவன் அவள் பக்கத்தில் இல்லாமல், அவளைப் பார்க்கப் போகாமல், ஆயிரம் மைல்களுக்கப்பால் அப்பாடாவென்று உட்கார்ந்திருந்ததது எவ்வளவு அசட்டுத் தனம்! காதலென்ன, பாங்கில் போடப்பட்ட பணமா தன் பாட்டில் வட்டியைப் பெருக்கிக் கொண்டு வளர்ந்து கொண்டே போக? எப்போதும் அருகிலேயே இருந்து நீர் பாய்ச்சி உரமிட்டு வேறு பிராணிகள் மேய்ந்து விடாமல் கண்ணும் கருத்துமாய்ப் பாதுகாக்கப்பட வேண்டிய பயிர் அது. அதுவும் இந்திராணி ஒரு பொன்வயல், வைரச் சுரங்கம் - அவளுடைய உள்ளத்தில் காதல் வித்திட்டு உழுது உயரமாக வளர்த்துப் பிறகு ரூபாய் நோட்டுகளாகவும் சொகுசான செல்வச்சீமான் வாழ்க்கையாகவும் அறுவடை செய்து அனுபவிக்க யார்தான் போட்டியிட மாட்டார்கள்? அவளைச் சார்ந்த சமூக அந்தஸ்திலும் செல்வாக்கிலும் பங்கு பெற ஒவ்வொருவரும் என்னதான் முதல்போட, பணயம் வைக்க, தயாராக மாட்டார்கள்? கிடைத்தற்கரிய அவளுடைய காதல் சிதம்பரத்துக்குக் கிடைத்திருந்தது -

ஆனால் ஆறுமாத இடைவெளிக்குப் பிறகு இன்னமும் அவள் காதல் தன் பக்கமேதான் இருக்குமென்று அவன் நம்பலாமா, கூடாதா?

ஆறு மாதங்கள்!

'முட்டாள், முட்டாள்!" என்று முனகியவாறு சிதம்பரம் புரண்டு படுத்தான். திடீரென்று ரயில்வே ஸ்டேஷனின் சந்தடியும் இரைச்சலும் கேட்கத் தொடங்கின. கிரீச்சென்ற ஒலியுடன் ரயில் நின்றது. பூரிமசாலே - கரம்சாய் - பான், பீடி, சிகரெட் - யுவர் அட்டென்ஷன் ப்ளீஸ் .....

எங்கோ கனவில் கேட்பது போல பிளாட்பாரத்து ஒலிகள் அவன் காதில் வந்து மோதின. அந்த ஒலிகளிலிருந்தே பிளாட்பாரத்துக் காட்சிகளை அவனால் கற்பனை செய்ய முடிந்தது. பல சமயங்களில் பல பிளாட்பாரங்களில் அவன் பார்த்திருந்த காட்சிகள் ... அவன் கண்களை இறுக மூடிக் கொண்டான். உலகத்திலிருந்த பிளாட்பாரங்களை யெல்லாம் சேர்த்து ஒரு நீளமான பிளாட்பாரம் அமைத்திருப்பது போலவும், அதில் அவன் நடந்து கொண்டேயிருப்பது போலவும் அவனுக்குத் தோன்றியது; ரயில்கள் வருவதும் ரயில்கள் போவதுமாய் இருந்தன. ரயில்களே இல்லாத ஒரு இடத்தை நோக்கி அவன் நடந்து கொண்டிருந்தான். ஆனால், பிளாட்பாரம் முடிவில்லாமல் நீண்டுகொண்டே சென்றது. நடந்து நடந்து அவன் இரண்டு வருடங்கள் பின்னே சென்றுவிட்டான். இரண்டு வருடங்களுக்கு முன்னால் டில்லி பிளாட்பாரத்தில் அவன் காத்திருந்தபோது ...

அப்போது குளிர்காலமாக இருந்தது. டிசம்பர் மாதக்குளிர் காற்று கம்பளி உடைகளையும் ஊடுருவிப் புகுந்து அவன் உடலை வெடவெடக்கச் செய்து கொண்டிருந்தது. பம்பாயிலிருந்து வருவதாயிருந்த அவனுடைய கம்பெனியின் டைரக்டர் ஒருவரை வரவேற்பதற்காக, டில்லிக் கிளையின் சார்பில் அவன் பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்தான். அப்போதெல்லாம், இதுபோன்ற வேலைகள் அவன் தலையில்தான் விழும். மொத்தமே மூன்று பேர்கள்தானே உண்டு அப்போது - மானேஜர் ராகவாச்சாரி, டிஸ்பாச் கிளார்க் ஜோசப், சிதம்பரம்.

அப்போது அவன் ஸ்டெனோகிராபராக இருந்தான். ஆனால் உண்மையில் பியூன், டெலிபோன் ஆப்பரேட்டர், ரிஸப்ஷனிஸ்ட், கார் டிரைவர் எல்லாமே அவன்தான். "இன்று கிளப்பில் பிரிட்ஜ் டூர்னமென்ட் சிதம்பரம் ... கான்ட் - மிஸ் இட். நீ ஸ்டேஷனுக்குப் போக முடியுமா, ப்ளீஸ்? டைரக்டரிடம் எனக்கு உடல் நலமில்லையென்று சொல்" என்றார் ராகவாச்சாரி. "யெஸ் சார்" என்று அவரிடம் சொல்லிவிட்டு அன்றைய குளிர் இரவில் பிளாட்பாரத்தில் காத்திருந்தான்.
ரயில் வந்ததும், பழக்கதோஷத்தினால் மூன்றாம் வகுப்புப் பெட்டியை நோக்கிச் சென்றதும், பிறகு சட்டென்று நினைவு வந்தவனாய் முதல் வகுப்புப் பெட்டியருகே ஓடியதும் இன்னமும் அவனுக்கு நினைவிருக்கிறது. டைரக்டருடைய புகைப்படம் ஒன்றை முன்பே அவன் கம்பெனியில் பார்த்திருந்தான், நல்லவேளையாக. கறுப்பு சூட்டணிந்து சுருட்டுப் புகைத்தவாறே நின்றிருந்தவரை அடையாளம் கண்டுகொண்டு,"எக்ஸ்க்யூஸ் மீ ஸார் - நீங்கள் தானே மிஸ்டர் பட்டாபி" என்று அவன் கேட்டதும், அவர் ஆமாம் என்றார். உடனே அவன் தன்னை அறிமுகம் செய்து கொண்டான். 'வெரி கிளாட் டு மீட் யூ' என்று அவர் தம் கையை நீட்டினார்.

சிதம்பரம் திக்குமுக்காடிப் போனான். சங்கடத்துடன் அவர் கையைப் பற்றிக் குலுக்கினான். "இவள் என் பெண் இந்திராணி" என்று அவர் தம் அருகில் இருந்த பெண்ணைக் காட்டினார். சிதம்பரம் கைகூப்புவதா, கை குலுக்குவதா என்று முடிவு செய்யுமுன்பே, "ஹவ் டூ யூ டூ" என்று அவள் புன்னகையுடன் கை நீட்டினாள்.
ஸ்டேஷனை விட்டுக் கார் சிறிது தூரம் போன பிறகுதான் அவர் கேட்டார், ராகவாச்சாரி ஏன் வரவில்லையென்று. "ஜுரம்" என்றான் சிதம்பரம்.

"இன்று ஆபீஸ் வரவில்லையாக்கும்?"

சிதம்பரம் ஒரு கணம் தயங்கினான்.

"வந்திருந்தார்".

"உம்".

எதையாவது ஊகித்திருப்பாரோ? சிறிது நேரம் மௌனம் நிலவியது. பிறகு, "நீங்கள் டில்லியில் வெகு நாட்களாக இருக்கிறீர்களா?" என்று அவர் கேட்டார்.

"யெஸ் ஸார் - எட்டு வருடங்களாக".

"எனக்கு இதுதான் முதல் தடவை. டில்லி நல்ல நகரந்தானா? உங்கள் அபிப்பிராயமென்ன?"

"எனக்குப் பிடித்திருக்கிறது ஸார்".

"விசேஷ காரணம் ஏதாவது உண்டா?"
"ஏனென்று சொல்லத் தெரியவில்லை.. டில்லியின் திறந்த வெளிகள், மரங்களடர்ந்த சாலைகள், இடிந்த கோட்டைகள், அடிக்கடி மாறும் சீதோஷ்ண நிலை, பரபரப்பின்றி மந்த கதியில் செல்லும் வாழ்க்கை - எல்லாமே எனக்குப் பிடிக்கிறது"
"ரியலி? ஆனால் சிதம்பரம், எனக்கென்னவோ மந்தகதியே பிடிக்காது, நான் வேண்டுவதெல்லாம் வேகம், வேகம், வேகம்!"

சிதம்பரம், அக்ஸலரேட்டரை அழுத்தினான். கார் வேகமாகச் செல்லத் தொடங்கியது. பார்லிமெண்டு வீதி, செக்ரடேரியட் வட்டாரங்கள் வழியே செல்லும்போது இரு புறங்களிலும் வரிசையாக இருந்த உயரமான கட்டிடங்களை அவர் பார்த்தார். "டில்லி வேகமாக வளர்ந்து வருகிறது்" என்றான் சிதம்பரம். இந்தியா கேட் வழியே செல்லும்போதும், தீன்மூர்த்தியைத் தாண்டிச் சாணக்கியபுரியை நோக்கிச் செல்லும்போதும், சாலையின்இரு புறங்களிலும் விசாலமான திறந்த வெளிகளைப் பார்த்து மறுபடி அவர் பிரமித்தார். "ஒவ்வொரு இடத்தில் ஒவ்வொரு தோற்றம் காட்டும் நகரம் டில்லி" என்றான் சிதம்பரம்.

பட்டாபி சுருட்டுச் சாம்பலைத் தட்டினார். "இவ்வளவு வளர்ச்சிக்கும் மாறுதல்களுக்கும் நடுவே, டில்லியில் நம்முடைய கம்பெனி மட்டும் வளராமல் மாறாமல் இருப்பது ஒரு சாதனை இல்லை?" என்றார். சிதம்பரத்துக்குத் தூக்கிவாரிப் போட்டது. பிறகு அசோகா ஹோட்டலை அடையும் வரை அவன் பேசவில்லை. அசோகா ஹோட்டலில் அவருக்குத் தங்க ஏற்பாடுகள் செய்த பிறகு, ராகவாச்சாரியுடன் பேசினான் - அவசரமாக போனில்.

மறுநாள் காலை அசோகா ஹோட்டலுக்கு அவரைப் பார்க்க அவனும் ராகவாச்சாரியும் சென்றபோது அவர் குளித்துக் கொண்டிருந்தார். "வந்துவிடுவார், உட்காருங்கள்" என்றாள் இந்திராணி. பிறகு டில்லியைப் பற்றியெல்லாம் ஆர்வத்துடன் கேள்விகள் கேட்டாள். "நீங்களெல்லாரும் கம்பெனியைப் பற்றியும் வியாபாரத்தைப் பற்றியும் பேசிக் கொண்டிருப்பீர்கள்; எனக்குத்தான் போர் அடிக்கும்" என்றாள். "நான் டில்லியைச் சுற்றிக் காட்டுகிறேன்,

உங்களுக்கு" என்றான் சிதம்பரம். அவள் மகிழ்ச்சியுடன் புன்னகை செய்தாள். இளமையின் புதுமையும் கவர்ச்சியும் அவர்களிடையே பாலமாக அமைந்தன. அந்தப் பாலத்தில் அவர்கள் ஒருவரை நோக்கி ஒருவர் நடக்கத் தொடங்கினார்கள்...
ராகவாச்சாரியின் குரல் இந்த மயக்கத்தைக் குலைத்தது. "டில்லியில் யாரும் பார்த்தேயிராத இடங்களெல்லாம் எனக் குத் தெரியும். இருபது வருடங்களாக அல்லவா இங்கே இருக் கிறேன்... எல்லோரையும் ஒரு நாள் கூட்டிப் போகிறேன்".

இதைக் கேட்டுக் கொண்டே பட்டாபி வந்தார் - பாத்ரூமிலிருந்து, இடுப்பில் ஒரு டவலுடன். "ஆனால் உங்களுக்குச் சௌகரியப்படுமா? உடம்பு சரியில்லையென்று கேள்விப்பட்டேன்?" என்றார்.

ராகவாச்சாரி திடுக்கிட்டு எழுந்து நின்றார்.

"இன்று உடம்பு தேவலையா?"

"யெஸ் ஸார்".

"ஆம்" என்று அவர் உள்ளே சென்று ஒரு லுங்கியும் டிரஸ்ஸிங் கௌனும் அணிந்து ஒரு சால்வையும் போர்த்திக் கொண்டு வந்தார். "இந்த வெதரே மோசம் போலிருக்கிறது இல்லை? நான்கூட ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்" என்றார்.

"ஆமாம் ஸார். ரொம்ப ஏமாற்றுக்கார வெதர் இது"

"டில்லியின் பழைய பிரஜையான உங்களையே ஏமாற்றிவிட்டதே!" என்றாரோ பட்டாபி, எல்லாரும் சிரித் தார்கள்.

"பகலில் கூடக் குளிருமோ?" என்றார் பட்டாபி.

"நிழலில் குளிரும்; ஆனால் வெய்யிலில் சுகமாயிருக்கும் ஸார்" என்றார் ராகவாச்சாரி.

"அப்படியானால் எனக்குக் கொடுத்து வைக்கவில்லை" என்றார் பட்டாபி. "இன்றையப் பகல் பொழுதை ஆபீசுக்குள்ளே நிழலிலேதான் நாம் கழிக்க வேண்டியிருக்கும்; உங்களுக்கு ஆட்சேபணையில்லையே?"

"நோ, ஸார்".

"வெய்யிலில் நம்முடைய பங்கு வீணாகாமல் இருக்க நமது பிரதிநிதிகளை அனுப்பிவைக்கலாம்... மிஸ்டர் சிதம்பரம்!"

"ஸார்?"

"என் பெண்ணுக்கு டில்லியைப் பார்க்க வேண்டுமாம் - உங்கள் உதவி கிடைக்குமா?"

"யெஸ் ஸார்".

"தொந்தரவுக்கு மன்னிக்க வேண்டும்".

"பரவாயில்லை, ஸார்".

"வெய்யில் எப்படி இருந்ததென்று எங்களிடம் வந்து சொல்லுங்கள் - ..."

வெய்யில் மிக நன்றாக இருந்தது. ஒத்தடமிடுவது போன்ற இதமான கதகதப்பு! மந்தமான கண்கள் கூசாத வெளிச்சம் - டில்லியின் குளிர்கால வெய்யில் இதற்கு முன்பு இவ்வளவு மனோகரமாகவும் பரவசமூட்டுவதாகவும் அமைந்ததேயில்லை என்றுதான் சிதம்பரத்துக்குத் தோன்றி யது. வெய்யிலின் கிரணங்கள் மெல்லிய நூலிழைகள் போலவும், அந்த இழைகளெல்லாம் இணைந்து மிருதுவான போர்வையாகி அவனையும் இந்திராணியையும் போர்த்தி யணைப்பது போலவும் இருந்தது. பிர்லா மந்திரிலும் செங்கோட்டையிலும் காந்தி சமாதியிலும் செருப்பை அவிழ்த்து விட்டு அழகிய சிவந்த பாதங்கள் சலவைக் கற்கள் மீது பதிய நடந்தவாறே "ஸ்ஸ்... சுடுகிறது ரொம்ப" என்று இந்திராணி சொல்லும்போது எவ்வளவு அழகாக இருந்தது! அவளே ஒரு சலவைக்கல் பிம்பமாகத்தான் வெய்யிலில் பளபளத்தாள். சிதம்பரம் அவளைத் தொட்டுப் பார்த்தான். "நீங்களும் இந்த வெய்யில் நிறமாகவே இருக்கிறீர்கள்" என்றான். அவள் கலகலவென்று சிரித்தபோது அவளுடைய பற்களும் ஈர உதடுகளும் கண்களும் எப்படி வெய்யிலில் பளபளத்தன! மிருகக் காட்சிச் சாலையைச் சுற்றி வரும்போது, "நீங்கள் உயரமாக இருக்கிறீர்கள், உங்கள் பின்னாலேயே வந்தால் நிழலாக இருக்கிறது", என்று அவன் பின்னாலேயே அவள் நடந்து வரும்போது, இந்தியா கேட் ஏரியில் படகில் செல்லுகையில் அவள் ஜலத்தில் தெரிந்த தன் பிம்பத்தை நோக்கிக் குனிந்து தலைமயிரைச் சரிசெய்து கொள்ளும்போது துடுப்பு அவள் மீது நீரைத் தெறிக்க, படிய வாரப்படாமல் சிலும்பி நின்ற அவள் தலைமயிரில் நீர்த் துளிகள் முத்து முத்தாக வெய்யிலில் பிரகாசித்ததும், கனாட் பிளேஸ் கடைகளின் கண்ணாடி ஜன்னல்களில் பிரதிபலித்துத் தெரிநாத வெய்யிலும், சாலையும், சாலையில் பளபளவென்று ஓடிய கார்களும் - "அது என்ன விலை?" என்று அவளுடைய பிமபத்தைக் காட்டி அவன் கேட்டதும், 'உக்கூம்' என்று அவள் நொடிப்புடன் முறுவலித்ததும்- எல்லாமே எவ்வளவு நன்றாக இருந்தது!
ஆமாம். வெய்யில் நன்றாக இருந்தது டில்லி நன்றாக இருந்தது. இந்திராணி நன்றாக இருந்தாள்.

அடுத்த நாள் அதே இடங்களை இந்திராணியின் அப்பாவுடன் பார்த்தபொழுது?
குதுப் மினாரின் உச்சியிலிருந்து டில்லியைப் பார்த்து அவர் பெருமூச்செறிந்தார். "எவ்வளவு திறந்த வெளிகள், எவ்வளவு வாய்ப்புகள்!" என்றார். "பம்பாயையோ சென்னையையோ பார்க்கும்போது, எனக்கு என் முகத்தையே கண்ணாடியில் பார்ப்பது போலிருக்கிறது - வாய்ப்புகளைப் பெரும்பாலும் உபயோகித்துத் தீர்த்து விட்ட சந்துஷ்டியும் நிறைவுமான தோற்றம் - ஆனால் புது டில்லியைப் பார்க்கும் போது உன்னைப்போல ஒரு இளைஞனைப் பார்ப்பது போலிருக்கிறது - தடுமாற்றத்துடனும் சந்தேகத்துடனும் தன் வளர்ச்சித் திட்டங்களை உருவாக்கும் இளம் கீற்று - இந்த இளைஞனை நாம் நினைத்தால் நம் இஷ்டப்படி வளர்க்கலாம் சிதம்பரம் - நம்மையும் வளர்த்துக் கொள்ளலாம்."

அவர் பேசிக் கொண்டே போனார். மாலையில் ஹோட்டலில் அமர்ந்திருந்த போதும் அவர் இதைப் பற்றித்தான் பேசினார். - கையில் மதுக் கிண்ணத்தைப் பிடித்தபடி. "டில்லியில் நான் வேண்டுவது உன்னைப் போன்ற ஒரு இளைஞனை!" என்றார் அவர்.

"ராகவாச்சாரியைப் போன்றவர்கள் அல்ல>"

"சென்ற ஐந்து வருடங்களாக, வழக்கமான சில வாடிக்கைக்காரர்களிடமிருந்து ஆர்டர்கள் வாங்கிக் கொண்டு, தலைமைக் காரியாலயத்திலிருந் அவர்களுக்கு வேண்டிய வற்றை வரவழைத்துக் கொடுப்பதைத்தான் டில்லிக் கிளை செய்து வருகிறது" என்றார் அவர். புதிய வாடிக்கைக்காரர்கள்? வியாபாரப் பெருக்கம்? - ஊஹூம். "கார்கள் பெருகி வரும் டில்லியில், கார் உறுப்புகளுக்கு விநியோகஸ்தர்களான நமக்கு விற்பனை பெருகவில்லை. முயற்சி செய்தால்தானே?"

"இனி முயற்சி செய்வது, உன் பொறுப்பு. டில்லியில் இனி நீ விற்பனைப் பிரதிநிதி. மற்றவர்களுடைய தயாரிப்புகளை விநியோகம் செய்வதுடன், நாமே பல பொருள்களைத் தயாரிப்போம் - வளரும் நகரத்தக்குத் தேவையான பொருள்கள்.."
பேசிவிட்டுப் போனதையெல்லாம் அவர் செயலிலும் காட்டினார். டில்லிக்கு அருகே கட்டிட சாமான்கள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றை நிறுவினார். சிதம்பரம் விற்பனைப் பிரதிநிதியானான். அவன் வாழ்வின் போக்கே துரிதமாக மாறிக் கொண்டு சென்றது. டில்லிக் கிளையின் வியாபாரம் பெருகியது. சிதம்பரத்துக்குப் பட்டாபியிடம் சலுகையும் செல் வாக்கும் வளர்ந்தது. இந்திராணிக்கும் அவனுக்குமிடையே காதலும் வளர்ந்தது - ஆறு மாதங்களுக்கு முன்பு அவன் சென்னையிலிருந்தபோது அவர்களுடைய கல்யாணத்துக் கான பேச்சுக்கள் பிரஸ்தாபமாகுமளவுக்கு.
ஆறு மாதங்களுக்கு முன்பு! சிதம்பரத்துக்கு வெகுநேரம் தூக்கம் வரவில்லை.
காலையில் கண்விழித்ததும் கீழ்ப் பெர்த்திலிருந்த பெண்மணியின் முகத்தில்தான் விழித்தான். பல் துலக்கிவிட்டு வந்தான். அவளை மீண்டும் பார்த்தான். அப்போதுதான் சட்டென்று அவள் முகத்தில் துக்கம் கவிந்திருப்பதை அவன் உணர்ந்தான். "அப்பா, அப்பா" என்று சின்னப் பையன் சிணுங்குவதையும் கவனித்தான். அவளிடம் கேட்கலாமா வேண்டாமா என்று தயங்கிக் கொண்டிருந்தபோது, அவளே பேசத் தொடங்கினாள்: 'இவர் ராத்திரி ஏதோ ஸ்டேஷனில் இறங்கினவர் திரும்பி வரவில்லை; ரயிலைத் தவறவிட்டு விட்டார் போலிருக்கிறது. எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை" என்று சொல்லிவிட் அவள் அழத் தொடங்கினாள்.
சிதம்பரம் திடுக்கிட்டான். "அழாதீர்கள், ஏன் அழுகிறீர்கள்" என்று அவளைத் தேற்றினான். "ஒரு வேளை வேறு ஏதாவது பெட்டியில் ஏறியிருப்பார்."

"அப்படியெல்லாம் இருந்தால் இதற்குள் வந்திருக்க மாட்டாரா?''

"இன்னொரு பெட்டியில் ஏறியவுடன் தூங்கியிருப்பார். இப்பொழுது பொழுது விடிந்து விட்டதல்லவா, இனிமேல் வந்தாலும் வருவார்"

"துக்கப்படும்போது கூட அவள் எவ்வளவு அழகாக இருக்கறாள்" என்று சிதம்பரம் நினைத்தான். அவளுடைய தவிப்பு அவனுக்குப் பரிதாபமாகவும் இருந்தது. சுவாரஸ்ய மாகவும் இருந்தது. ஒவ்வொரு ஸ்டேஷன் நெருங்கும்போதும் அவள் முகத்தில் பளீரென்று நம்பிக்கை சுடர்விடும். பிளாட்பாரத்தை அவள் கண்கள் பரபரப்புடன் துழாவும். பெட்டிக்குள் ஏறி வருபவர்கள் ஒவ்வொருவரையும் ஆர்வத்துடன் தலை நிமிர்ந்து பார்ப்பாள். பரபரப்பு, ஆர்வம், பரபரப்பு பிறகு வண்டி கிளம்பும், கணவன் வராமலேயே. அவள் முகத்தில் ஏமாற்றம் சூழும். ஜன்னல் வழியே வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருப்பாள். "அப்பா எங்கேம்மா?" என்பான் சிறுவன். கண்களில் நீர் தளும்ப அவள் அணைத்துக் கொள்வாள்.

நாலைந்து ஸ்டேஷன்களுக்குப் பிறகு அவளுடைய நம்பிக்கையும் ஆர்வமும் மெல்ல மெல்லக் கரைந்து மறைந்தன. அவளுடைய சோகமும் குறைந்ததாகத் தோன்றியது. அழளுடைய முகத்தில் ஒரு அமைதி குடிகொண்டது - எந்த அசைவுமின்றி, சிலைபோல அவள் உட்கார்ந்திருந்தாள். அந்தச் சிறுபையன் தனக்குத்தானே ஏதோ விளையாட்டுக்களில் ஈடுபட்டவாறே தந்தையைப் பற்றி மறந்துவிட்டவன் போல இருந்தான். அவளும்கூட மறந்திருப்பாளோ? அவள் முகத்திலிருந்ததென்ன ஆறுதலா, அல்லது ஆழ்ந்த சோகமா?

சிதம்பரத்தால் ஒரு முடிவுக்கு வர முடிய வில்லை. அடுத்த ஸ்டேஷனில் அவன் காப்பி வாங்கிக் கொடுத்தபொழுது முதலில் அவள் மறுத்தாள். அவன் வற்புறுத்திய பிறகு, தானும் குடித்து சிறு பையனையும் குடிக்கச் செய்தாள். சிதம்பரம் நியூஸ் பேப்பரும் சில சஞ்சிகைகளும் வாங்கினான். அந்தச் சிறுவனுக்கு ஒரு பிஸ்கட் பொட்டலமும் ஒரு விளையாட்டு மோட்டாரும் வாங்கிக் கொடுத்தான். அவள் பலமாக ஆட்சேபித்தாள்; சிதம்பரம் ''பரவாயில்லை " என்று புன்னகை செய்து சமாளித்தான்.

காலை வெய்யிலில் நனைந்து கொண்டு ரயில் வேகமாக ஓடியது. நாளை இந்தப் பயணம் முடிந்துவிடும். பிறகு அவள் எங்கேயோ, அவன் எங்கேயோ? 'சீக்கிரம், சீக்கிரம்' என்றது மனம்.

சிதம்பரம் அந்தச் சிறு பையனைத் தன் மடியில் இழுத்து உட்கார்த்திக் கொண்டான்.
"உன் பெயர் என்ன சொல்லு?"

"பாலு."

"பாலுவா, வெரி குட்! பாலு, உனக்கு ரயில் எப்படி ஓடறது தெரியுமா?"

"இன்ஜின் ரயிலைக் கூட்டிண்டு போறது."

"இஞ்ஜின் எப்படி ஓடறது?"

"இஞ்ஜின் டிரைவர் இஞ்சினை ஓட்டிண்டு போவார் - கூ! சுக்சுக் சுக்சுக்.."

"நீ பெரியவனானப்புறம் இஞ்சின் டிரைவராப் போவியா?"

"மாட்டேன். நான் மோட்டார் டிரைவராத்தான் போவேன்."

அவளுக்குச் சிரிப்பு வந்துவிட்டது, இந்தப் பதிலைக் கேட். பதிலைவிடச் சிரிப்பை ரசித்தான் அவன்.

"மாமாவுக்கு பொயட்ரி சொல்லிக் காட்டு பாலு!" என்றாள் அவள்.
பையன் பாடினான்: "பா பா பிளாக் ஷிப். ஹாவ் யூ எனி வுல்? யெஸ் ஸார் யெஸ் ஸார், த்ரீ பாக்ஸா ஃபுல்!"

நடுவே அவனுக்கு மறந்து போகும் வரிகளை அவனுடைய அம்மா நினைவூட்டினாள். இப்படி நாலைந்து பாட்டுச் சொன்ன பிறகு, அவன் ஒரு கதை சொல்லத் தொடங்கினான்: "ஒரே ஒரு காட்டிலே ஒரு குண்டுச் சிங்கம் இருந்தது.."

கதையை ரசித்தவாறே அவனுடைய அம்மா சிதம்பரத்தின் அருகிலிருந்த சஞ்சிகைகளில் ஒன்றை எடுத்துப் புரட்டத் தொடங்கினாள். ஓரக் கண்ணால் இந்தச் செய்கையைத் திருப்தியுடன் கவனித்தான் சிதம்பரம். அவர்களிடையே வளர்ந்து வந்த சகஜபாவம் அவனுக்கு உற்சாகமளித்தது.

பகல் சாப்பாட்டை மூவருமாகச் சேர்ந்துதான் சாப்பிட்டார்கள். சாப்பிட்ட பிறகு சிறிது நேரம் பேசினார்கள். அவள் கணவனைப் போலவே அவளும் டில்லியைச் சேர்ந்தவள்தான் என்று சிதம்பரம் தெரிந்து கொண்டான். சிதம்பரம் படித்த பள்ளிக்கூடத்தில்தான் அவளும் படித்திருந்தாள். பள்ளிக்கூடப் பரிபாஷைகளும், வாத்தியார்களின் கேலிப் பெயர்களும் கூட அவளுக்கு நன்றாக நினைவிருக்கிறது. பழைய நாட்களைப் பற்றிப் பேசியவாறே பொழுதை ஓட்டினார்கள்.

பிறகு பாலுவைப் படுக்க வைத்துத் தானும் படுத்துக் கொண்டாள். சீக்கிரத்திலேயே தூங்கியும் போனாள். சிதம்பரம் சிகரெட் குடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தான். 'எவ்வளவு அழகாகத் தூங்குகிறாள்' என்று நினைத்தான். எவ்வளவு குதூகலமாக அவனுடன் பேசினாள். கணவனைப் பற்றிய கவலையெல்லாம் மறந்து விட்டது போலிருக்கிறது; சுகமாகச் சாப்பிட்டுவிட்டு மெய்மறந்த தூங்குகிறாளே, பதிபக்தியாவது மண்ணாங்கட்டியாவது..

டில்லியில் அவனுக்குப் பரிச்சயமான நாகரிக குடும்பத்துப் பெண்களை அவன் நினைத்துக் கொண்டான். அவனுடைய கம்பெனியில் இப்போது ரிஸப்ஷனிஸ்டாக இருக்கும் சாந்தா மணமான பிறகும் 'ஸோஷியல் ஆக்டிவிடீஸ்' என்ற பெயரில் எவருடனெல்லாம் நடமாடுகிறாள்! பேபியும் ரத்னாவும் கல்லூரி மாணவிகள். ஆனால் கல்லூரியில் பிராக்ஸிக்கு ஏற்பாடு செய்துவிட்டு யாருடனெல்லாமோ ஊர் சுற்றுகிரார்கள். மிஸஸ் முகர்ஜி வங்காளம் கற்றுத் தருகிறேனென்று தன் வீட்டில் பகல் வேளைகளில் நடத்தும் வகுப்புகளுக்கு இளைஞர்களே அதிகமாக வருகிறார்கள். இந்தப் பெண்களுடைய பலவீனங்களைச் சிதம்பரம் பயன்படுத்திக் கொண்டதுண்டு--அது வேறு விஷயம். விலையுயர்ந்த பண்டம் நடுவீதியில் காலில் இடறி ஆசையைத் தூண்டினால் பண்டம் தான் குற்றவாளி. எடுப்பவனல்ல. சிதம்பரம் இப்படித்தான் நினைத்தான். அவனென்ன, சீர்திருத்தவாதியா? ஆசைகளும், சபலங்களும் உள்ள ஒரு சாதாரண மனிதன்தானே?

எதிரே தூங்கிக்கொண்டிருந்த பெண்மணியின் தோற்றம் அவன் உள்ளத்தில் ஏதோதோ கற்பனைகளைக் கிளர்ந்தெழச் செய்தது. அப்படியே அவன் தூங்கி விட்டான் போலிருக்கிறது. "மாமா, மாமா" என்று சிறுவன் தட்டியெழுப்பியதும் தான் திடுக்கிட்டு எழுந்தான். மணி மூன்றடித்து விட்டிருந்தது. ரயில் ஏதோ ஸ்டேஷனில் நின்றிருந்தது. சிதம்பரம் சிறுவனின் முகத்தில் செல்லமாகத் தட்டிவிட்ட வெளியே செற்ற வெயிட்டரிடம் சொல்லி காப்பி வரவழைத்தான். காப்பி வந்ததும், காப்பி கலக்கும் சாக்கில் சிறுவனும் அம்மாவும் உட்கார்ந்திருந்த பெஞ்சில் தானும் போய் உட்கார்ந்தான்.

காப்பிக்குப் பிறகு, பேச்சு சிதம்பரம் நம் சினிமாக்களைக் கேலி செய்து ஏதேதோ பேசினான். அவள் சிரித்தாள். பிறக அவளும் ஏதோ பேசினாள். இருவரும் பேசினார்கள். நிறையப் பேசினார்கள். அலுக்காமல் பேசினார்கள்.

சிதம்பரத்துக்கு மெல்ல நம்பிக்கை பிறந்தது. தான் பாயக்கூடிய தொலைவுக்குள் வந்து விட்ட இரையைப் பார்த்த புலிபோல அவன் தயாரானான்.

திடீரென்று ரயில் ஒரு குகைக்குள் நுழைந்தது. பெட்டியில் இருள் சூழ்ந்தது. சிதம்பரத்தின் நெஞ்சு வேகமாகப் படபடத்தது. குகைகள் நிரம்பிய இந்தப் பிரதேசத்தை அவன் அறிவான். குகையிலிருந்து ரயில் வெளிப்பட்டதும் எதிரேயிருந்தவளின் முகத்தைப் பார்த்தான். சலனமேயில்லை.

அடுத்த குகைக்குள் ரயில் நுழைந்ததும் அவன் யோசிக்கவேயில்லை, சட்டென்று அவளைக் கட்டி யணைத்துக் கொண்டான். அவனுடைய கைப்பிடியில் அவளுடைய சதை அழுந்தியது. திடுக்கிட்டுத்தான் போய் விட்டாள் அவள். எதிர் பாராத அதிர்ச்சியில் செயலற்றுப் போனாள். ஆனால் கணம் தான். மறுகணமே பளாரென்று அவன் கன்னத்தில் ஒரு அறை விழுந்தது. நெருப்பைத் தீண்டினவன் போல அவன் சரேலென்று கைகளை எடுத்துக் கொண்டான். அதே சமயம் குகையிலிருந்து ரயில் வெளிப்பட்டது. கண் சிமிட்டும் நேரத்தில் எல்லாம் நடந்துவிட்டது. பளீரென்ற வெளிச்சத்தில் அவன் கண்கள் கூசின. அருகிலிருந்தவளை நிமிர்ந்துபார்க்கத் துணிவின்றி, அவசரமாக எழுந்து பெட்டியின் ஓரத்தை நோக்கி நடந்து சென்றான். திறந்த கதவருகே நின்றவாறு வேகமாக வீசிய எதிர்க் காற்றின் குளுமையில் தன் தடுமாற்றத்தையும் அவமானத்தையும் கரைக்க முயன்றான்.

சே, வெட்கம், வெட்கம். இனி என்ன செய்வது?

குகைகள் வந்து வந்து போயின. இருளும் வெளிச்சமும் மாற் மாறி வந்தது. சிதம்பரத்தின் மனம் அலைபாய்ந்து தத்தளித்தது. '' என்று ஓங்கரித்தவாறு ஒரு பெரும் புகைமண்டலத்தை இஞ்சின் காரித் துப்பியது. அவனுடைய இரு கண்களிலும் கரித்துகள் வந்து விழுந்தது.

கண்களிலும் மனத்திலும் உறுத்தலுடன், சுய வெறுப்புடனும் மனக் கசப்புடனும், தலைகுனிந்தவாறு மீண்டும் தன் இடத்தில் வந்து உட்கார்ந்தான் அவன். 'முட்டாள் முட்டாள்' என்று தன்னைத் தானே திட்டிக் கொண்டான்.

டில்லியில் அவனுக்குத் தெரிந்த பெண்கள் யாராவது, அவன் இப்படி நடந்ததற்காகக் கன்னத்தில் அறைந்திருப் பார்களா, என்று யோசித்துப் பார்த்தான். ஒவ்வொரு பெயராகத் தள்ளிக் கொண்டே வந்தான். கடைசியில் யாருமே மிச்சமில்லை - ஆனால், ஆனால்-

அபர்ணா!

சிதம்பரத்தின் நெஞ்சுக்குள்ளே அடைத்துக் கிடந்த மதகு ஒன்று திடீரென்று திறந்து, கிடுகிடுவென்று உடலெல்லாம் வெள்ளம் பாய்வது போலிருந்தது. ஆமாம், அபர்ணா. அவளுக்குப் பிடித்திருக்காது, அவன் இப்படிச் செய்திருந்தால். ஆனால் அவள் அவனைக் கன்னத்தில் அறைந்திருக்க மாட்டாள். ஏனென்றால் அவளுக்கு அவனைப் பிடிக்கும். அவளுக்கு அவன் மேல் உண்மையான அன்பு. ஒரு வேளை வெறுமனே முகத்தைச் சுழித்திருப்பாள். அல்லது குற்றஞ்சாட்டும் பார்வையொன்றை அவன் மேல் வீசியிருப்பாள். அபர்ணாவிடமிருந்து வரும்போது, இதுவே ஒரு பெரிய தண்டனைதான்.

"அபர்ணா, என்னை மன்னித்துவிடு!" என்று கதற வேண்டும் போலிருந்தது அவனுக்கு. ஓடும் ரயிலிலிருந்து குதித்து வந்த வழியே திரும்பி வேகமாக ஓட வேண்டும் போலிருந்தது.

வந்த வழியே! ஒரு ஸ்டெனோகிராபராக இருந்தபோது இந்தப் பெண்மணியிடம் இப்படி நடந்து கொண்டிருப்பேனா? என்று அவன் யோசித்தான். இன்று அவன் விற்பனைப் பிரதிநிதி. பெரிய பெரிய வட்டாரங்களில் புழங்கி, படாடோபத்திலும் ஆடம்பரத்திலும் நீந்தி, இந்த உலகத்தில் எல்லாமே விற்பனைக்கு என்றெண்ணும் மனப்பான்மை வந்துவிட்டது.

ஆனால் என்ன விலை கொடுத்தாலும் கைக்கு வராத பொருள்கள் சில இருக்கின்றன.
ஆரம்பத்தில் அவள் இட்டிலியும் தயிர்சாதமும் கொடுத்த போது இப்படி அவன் செய்வானென்று எதிர் பார்த்திருப்பாளா? அபர்ணாவின் வீட்டில் சாப்பிட்ட எளிய ஆனால் ருசியான சாப்பாடுகள் அவன் நினைவில் எழுந்தன. அபர்ணாவின் ஆபீஸ் அவன் ஆபீஸுக்கு அருகில்தான் இருந்தது. மத்தியான வேளைகளில் ஒரு குறிப்பிட்ட கஃபேயில் அவர்கள் டிபனுக்காகச் சந்திப்பார்கள். சில சமயங்களில் அவன் தன் ஆபீஸில் வெகு நேரம் வரை அமர்ந்து வேலை செய்வான். அப்போது அவளும் அவனுடன் வந்து உட்கார்ந்திருப்பாள். பிறகு அவளுடன் அவன் அவளுடைய வீட்டுக்குச் சாப்பிடப் போவான். அவளுடைய வீட்டில் அவனை மாப்பிள்ளையென்றே அழைக்கத் தொடங்கியுருந்தார்கள். லீவு நாட்களை அவளுடைய வீட்டில்தான் கழிப்பான்.

பிறகுதான் இந்திராணி வந்தாள். அவன் விற்பனைப் பிரதிநிதியானான். புதிய சூழ்நிலை; புதிய நண்பர்கள்-அவன் அபர்ணாவை விட்டு மெல்ல மெல்ல விலகிச் சென்றான்.

தனக்காகக் கூட அவள் கவலைப்படவில்லை. ஆனால் அவனுக்காகக் கவலைப்பட்டாள். அவன் முதலில் சிகரெட் குடித்தபோது, மது அருந்தியது தெரிந்த போது, அவள் எப்படி அழுதாள்; எப்படிக் கெஞ்சினாள். இப்போது எல்லாம் குழந்தைப் பிராயத்து நினைவுகள் போலத் தோன்றுகின்றன...

"மாமா, கதை சொல்லட்டுமா, கதை சொல்லட்டுமா?" என்று சிறுவனின் குரல் அவன் சிந்தனையைக் கலைத்தது. பதிலுக்கு உயிரற்ற ஒரு உலர்ந்த புன்னகைதான் அவ்னால் செய்ய முடிந்தது. "மாமாவைத் தொந்தரவு படுத்தாதேடா!" என்று அவள் சிறுவனைத் தன்னருகில் இழுத்துக் கொண்டாள். அவனுக்குச் சவுக்கடி பட்டது போலிருந்தது.

தான் ஒரு கயவன் என்ற உணர்வுடனேயே அவள் தன்னைவிட்டுப் பிரியப் போகிறாளே என்று எண்ணியவாறு அவமானத்தால் குறுகி உட்கார்ந்திருந்தான் அவன். பகல் கழிந்து இரவு கவிந்ததே அவனுக்குத் தெரியவில்லை. அந்தச் சிறுவனுக்குத் திடீரென்று ஜுரம் அடிக்கத் தொடங்கியபோதும் தெரியவில்லை.

பிறகுதான் கவனித்தான்-கண்களைத் திறக்காமல் சிறுவன் துவண்டு படுத்திருந்ததையும், அவனுடைய தாய் கவலையுடன் அவன் நெற்றியில் அடிக்கடி கை வைத்துப் பார்ப்பதையும். சிதம்பரத்துக்குத் திடீரென்று தான்தான் அவர்களுடைய கஷ்டங்களுக்குப் பொறுப்பாளி என்ற விசித்திரமான எண்ணம் தோன்றியது. ஒரு குற்ற உணர்வினால் சங்கடப்பட்டவாறு, சிறுவனையும் தாயாரையும் அவ்வப்போது தயக்கத்துடன் தலை நிமிர்ந்து பார்ப்பதும், பிறகு மறுபடி தலைகுனிவதுமாக இருந்தான். ரயில் ஒரு பெரிய ஜங்ஷனில் நின்றதும், தேடிப் பிடித்து ஒரு டாக்டரை அழைத்து வந்தான். அவர் சிறுவனுக்கு மருந்து கொடுத்தா. சிதம்பரம் சிறுவனுக்காக பிளாஸ்க்கில் வெந்நீர் வாங்கி வந்தான். சாத்துக்குடிப் பழம் இரண்டு வாங்கினான்.

இரவு அவள் சாப்பிடவில்லை. அவனும் சாப்பிடவில்லை. வெகு நேரம் வரை சிறுவனுக்காகக் கண் விழித்து உட்கார்ந்திருந்தான். அவனுக்கு ஒரு தடவை ஜுரமாக இருந்தபோது அபர்ணா இப்படித்தான் இரவெல்லாம் கண் விழித்துச் சிசுரூஷை செய்தாள்.

சிதம்பரத்துக்குத் துக்கம் பொங்கியது. அந்தச் சிறுவனிடம் தனக்கு ஒரு பாசம் வளர்ந்து விட்டதை அவன் உணர்ந்தான். அபர்ணாவை மணந்து கொண்டு ஒரு சிறிய வீட்டில் அவர்கள் எளிய வாழ்க்கை நடத்த வேண்டும். ஓரிரு குழந்தைகளே பெற வேண்டும் என்றெல்லாம் பலவாறாக அவன் கண்ட அழகிய கனவுகள் இப்போது அவன் நினைவில் எழுந்து கண்களைக் கலங்கச் செய்தன. எளிமையும் இது போன்ற இதமான அன்னி யோன்னியத்தையும் அமைதியையும் இனி அவன் பெறப் போகிறானா?

சென்ட்ரல் பிளாட்பாரம் மாறவில்லை. இந்திராணி மாறவில்லை.

"இவர் என் பிரண்ட் மிஸ்டர் மணிவண்ணன்" என்று தன்னுடன் இருந்தவரை இந்திராணி அறிமுகப்படுத்தினாள். "ஹலோ!" என்று மனசில்லாமல் கூறி மனசில்லாமல் கைகுலுக்கினான் சிதம்பரம். பாலுவும் அவன் அம்மாவும் பிளாட்பாரத்தில் அவர்களை வரவேற்க வந்திருந்த உறவினர்களின் அரவணைப்பில் சங்கமமாசதை அவன் கண்கள் திருப்தியுடன் கவனித்தன.

"போகலாமா?" என்றாள் இந்திராணி.

"உம்".

காரை அடைந்ததும், "நான்தான் ஓட்டுவேன்" என்றான் சிதம்பரம். இந்திராணியும் மணிவண்ணனும் பின் சீட்டில் உட்கார, சிதம்பரம் காரைக் கிளப்பினான். இந்திராணியும் மணிவண்ணனும் ஏதோ சிரித்துப் பேசிக் கொண்டே யிருந்தார்கள். சிதம்பரத்தையும் பேச்சுக்கு இழுத்தார்கள். ஆனால் அவன் சிந்தனையில் மூழ்கிக்கிடந்தான். ரயிலில் அந்தப் பெண்மணி இருந்த இடத்தில் இந்திராணி இருந்திருந்தால் என்ன செய்திருப்பாள்? அவர்கள் முறை தவறி நடந்தால் இவள் கன்னத்தில் அறைவாளா அல்லது...

"இஸ்ஸ்-ஸில்லி" என்று இந்திராணி கிசுகிசுப்பது கேட்டது. மணிவண்ணன் அவள் மேலிருந்த கையை எடுப்பதை ரியர் வியூமிரரில் பார்த்தான் சிதம்பரம். அவன் தலை வேகமாகச் சுற்றத் தொடங்கியது. ‘இவள் இல்லாதபோது ரயிலிலும் டில்லியிலும் நான் என்ன செய்தேன்? நான் இல்லாதபோது இவள் என்ன செய்திருப்பாள்?
கல்யாணத்துக்குப் பிறகு தனித்திருக்க நேரும் சமயங்களில் நாங்கள் என்ன செய்யப் போகிறோம்?’

கிரீச்!

காரின் முன்னால் ஓடிய ஒரு சிறுவன் மயிரிழையில் தப்பினான்-பாலுவைப் போலவே ஒரு சிறுவன். சிதம்பரம் நெற்றி வியர்வையைத் துடைத்துக் கொண்டான். "மிஸ்டர் மணிவண்ணன், நீங்கள் ஓட்டுகிறீர்களா? எனக்கு என்னவோ போல இருக்கிறது."

"ஷ்யூர்".

இருவரும் இடம் மாற்றிக் கொண்டார்கள். கார் மீண்டும் ஓடத் தொடங்கியது. மணிவண்ணன், பார்க்கும்படியாக, இந்திராணியின் தோளின் மேல் கை போட்டுக்கொண்டான் சிதம்பரம். "எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது" என்றான்.

"எனக்கும்தான்."

"ஆறு மாதங்களில் எப்போதாவது என்னை நினைத்ததுண்டா?"

"நிறைய."

சிதம்பரம் அவள் புன்னகை செய்வதைப் பார்த்துக் கொண்டிருந்தான். அந்தச் சிறுவனும், அவன் தாயாரும், அபர்ணாவும், இப்போது அவனுக்கு நினைவில்லை. அவனுடைய நெஞ்சில் இருவேறு மட்டங்களிலிருந்து உணர்வு களிடையே அழகிய உணர்வுகளெல்லாம் மீண்டும் ஆழத்தில் தள்ளப்பட்டு விட்டிருந்தன; இந்திராணியைச் சார்ந்து நின்ற அவனுடைய பெரிய மனிதனாகும் ஆசைகள்தான் இப்போது மேலெழும்பி நின்றன.

அப்பர் பெர்த்தில் காலூன்றிய பிறகு, கீழிறங்க மனம் வருவதில்லை.

நன்றி - மதுரைத்திட்டம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக