9ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தமிழிற் செய்யுள் வளம் மிக்க செழிப்புறக் காரணமாயிருந்தவர்கள் பெரும்பாலும் ஜைனர்களென்றே கூறவேண்டும். இவர்களே இலக்கிய இலக்கண உணர்ச்சியில் தலைநின்றவர்கள். வடமொழி, பிராகிருதம் முதலிய மொழிகளில் சிறந்த பயிற்சியுடையவர்கள்; கல்வித் துறைகள் பலவற்றிலும் மேம்பட்டு நின்றவர்கள்; கல்வியின் பொருட்டும் சமயத்தின் பொருட்டும் தங்களை முற்றும் அர்ப்பணம் செய்தவர்கள்; பல பிரதேசங்களுக்கும் சென்று அங்கங்கே கல்வியறிவையும் சமயவுணர்ச்சியையும் பரப்பியவர்கள். இவர்களுடைய பரந்த மொழியுணர்ச்சியும் இலக்கிய அறிவும் தமிழ் மொழிக்குப் பெரிதும் பயன்பட்டன.
புதுப்புதுச் செய்யுள் வகைகள் இயற்றித் தமிழை வளப்படுத்தினர். யாப்பருங்கலத்தில் வரும் மேற்கோட் செய்யுட்கள் நான் கூறியதற்குச் சான்றாகும். தமிழின் இனிமைத்தத்துவத்தை இவர்கள் நன்குணர்ந்து, அது சிறந்து புலப்படும் செய்யுட்கள் அமைத்தார்கள். இவர்கள் தமிழோசையை அனுபவித்த முறையில், தமிழ் என்ற சொல்லிற்கே இனிமை என்ற புதுப்பொருள் பிறந்துவிட்டது.
இக்காலப் பகுதியிலே ஜைனர்களுடைய மொழியாற்றல் புலப்படுவதற்கும் வாய்ப்புக் கிடைத்தது. இலக்கியத்தைக் கலையாக எத்தனையளவு போற்றினாலும் தங்கள் சமயத்தைப் புறக்கணிக்க முடியுமா? முடியாது. ஆகவே, தங்கள் சமயத்திற்குரிய கதைப் பொருள்கள் நிரம்ப வேண்டும் என்ற அவசியம் ஏற்பட்டது. முக்கியமாக, கதாரூபமான பொருள்களே தங்கள் கவிதையாற்றலுக்கும், மக்களை இன்புறுத்துதற்கும் வேண்டப்பட்டன.
தங்கள் சமயத்தில் அருசு பதவியடைந்தோர்களாகிய தீர்த்தங்கரர்களது சரித்திரங்கள் அறிவூட்டுவன என்றும், புண்ணியம் பயப்பன என்றும், இம்மைக்கும் மறுமைக்கும் நன்மை விளைவிப்பன என்றும் இவர்கள் கருதியது வியப்பாகுமா? இச்சரித்திரங்கள் அனைத்தும் ஒரு சேர வடமொழியில் எழுதி முற்றிய காலம் கி.பி. 897 ஆகும். நூலின் பெயர் மஹாபுராணம் என்பது. தங்கள் மனத்திற்குகந்த இச்சரித்திரப் பொருள்களை அழகுணர்ச்சி தோன்ற இனிமை கனியும்படி செய்யுட்களாகப்பாடி வெளி யிடும் முயற்சிகளை மேற்கொண்டனர். இம் முயற்சியின் முதலாவது விளைவு சீவக சிந்தாமணி ஆகும்.
இப்பெருங்காப்பியத்தின் காலம் கி.பி. 900-ன் பின் என்பது உறுதி. வடமொழி மஹா புராணத்தை எழுதி முற்றுவித்தவர்கள் ஜீனசேனாச்சாரியரும், குணபத்திர முனிவரும் ஆவார்கள். குணபத்திரருக்குப்பின், குமரசேனரென்று ஒருவரும் அவருக்குப் பின் சிந்தாமணியாச்சாரியரும், பின்னர் ஸ்ரீவர்த்த தேவரும் இருந்தனர். இவர்கள் திரமிள சங்கத்தைச் சார்ந்தவர்கள்.
சிந்தாமணி ஆச்சாரியரையடுத்து ஸ்ரீவர்த்த தேவர் வைக்கப்பட்டுள்ளார். இவர், தேவர் புலவர்கட்கெல்லாம் ஒரு தலைச் சூடாமணி போன்றுள்ளார் என்று போற்றப்படுகிறார்.
இவ்வாறு சிந்தாமணியையும் சூளாமணியையும் அடுத்தடுத்துக் கூறுவதனாலும், இரண்டும் காவியங்களாதலினாலும், இரண்டும் ஜைன சமயத்திற்குரியனவாதலினா லும், இவைகளை இயற்றியவர்கள் திரமிள சங்கத்தாராயிருத்தலினாலும், இவைகள் தமிழ்க் காவியங்களே யாதல் வேண்டும். இவற்றை எழுதிய ஆசாரியர்கள் மஹா புரா ணத்திற்குப் பிற்காலத்தவர்கள் என்பதும் மேலே கூறப்பட்டது.
சிந்தாமணியின் உரைச் சிறப்புப் பாயிரத்தில்,
வையகம் புகழ்ந்து மணிமுடி சூட்டிய
பொய்யில் வான்கதை பொதிந்த செந்தமிழ்ச்
சிந்தா மணியைத் தெண்கடல் மாநிலம்
வந்தா தரிப்ப வண்பெரு வஞ்சிப்
பொய்யா மொழிபுகழ் மையறு காட்சித்
திருத்தகு முனிவன் கருத்திது வென்ன
என வருகின்றது. இதிலே கூறப்பட்ட ‘பொய்யாமொழி’ கங்க ராஜ்யத்தை, கி.பி. 908 முதல் 950 வரை ஆட்சிபுரிந்தவனாகிய ‘சத்திய வாக்கிய கொங்குணி வர்ம பூதுகப் பெருமானடி’ என்பவன். கங்கர்களிற் பலர் ஜைன மதாபிமானிகள். சிந்தாமணியை உலகம் போற்றுமாறு வஞ்சி நகர்ப் பொய்யா மொழி என்பவன் புகழ்ந்த ‘திருத்தக்க தேவன்’ என வருதலால் திருத்தக்க தேவரும் பொய்யாமொழியும் ஒரு காலத்தவர். எனவே, சிந்தாமணி என்ற காவியம் 10ம் நூற்றாண்டின் முற்பகுதியில் சுமார் 930-ல் தோன்றிய தாதல் வேண்டும். சூளாமணி என்ற காவிய மும் சுமார் கி.பி. 950-ல் இயற்றப்பட்டதென்று துணிதல் தகும்.
பணிதந் தலகில் பராவெடுத்துச் சிந்தா
மணிதந்த சூளாமணியால் (கண்ணி. 186)
என்ற இராசராசனுலாவும் சிந்தாமணியை அடுத்துச் சூளாமணி தோன்றியதெனலைக் குறிப்பிடுகின்றது.
சிந்தாமணியைத் திருத்தக்க தேவரும் சூளாமணியைத் தோலா மொழித்தேவரும் இயற்றியவர் என்றல் பிரசித்தம். ‘மேலே காட்டிய ஸ்லோகங்களிலே இக்காவியங்களை முறையே சிந்தாமணி முனிவரும் ஸ்ரீவர்த்த தேவராகிய சூடாமணியும் இயற்றினர் என்று காணப்படுகின்றதே! இங்ஙனமிருப்ப, அச்சுலோகங்களிற் குறித்த காவியங்கள் தமிழ்க் காவியங்கள் ஆதல் எப்படி?’ என்று சிலர் ஐயுறவு கொள்ளலாம். இக்காவியங் களை இயற்றிய பின்னர், இவற்றின் பெயர்களால் ஆசிரியர்கள் இங்கே குறிக்கப்பட்டனர் என்று கொள்ளுதல் தக்க விடையாகும்.
(பேரா.எஸ்.வையாபுரிப் பிள்ளையின்‘காவிய காலம்’ நூலிலிருந்து)
சமணர்களின் தமிழ்ப்பணி போற்றுதலுக்குரியது. சீவகசிந்தாமணியை திருத்தக்கத்தேவர் மதுரையில் இயற்றியதாக சொல்வார்கள். இன்றும் மதுரையில் நிறைய மலைகளில் சமணர்கள் தங்கியிருந்த படுகைகளில் தமிழ்பிராமிக்கல்வெட்டுகளும், தீர்த்தங்கரர்களின் சிலைகளும் காணப்படுகிறது. பகிர்விற்கு நன்றி.
பதிலளிநீக்கு