04/03/2012

பறவையும் பரணியும்! - முனைவர் சீனிவாசகண்ணன்

குலசேகர ஆழ்வார் தம்முடைய திருமொழியில் சரணாகதி தத்துவத்தை விளக்கப் பல்வேறு உவமைகளைக் கையாண்டுள்ளார். அதில் ஒன்று பின்வருமாறு:

 ""வங்கத்தின் கூம்பேறும் மாப்பறவை
 போன்றிருந்தேனே!''

கப்பலின் மேல்தளத்தில் உள்ள பறவை, கடலுக்கு மேற்பரப்பில் சிறிது தூரம் பறந்து சென்று, கரை எங்கும் காணாது மீண்டும் கப்பலின் மேல்தளத்தில் உள்ள கொம்பின் மீது அமர்வதுபோல, ""திருமாலே சரணம்'' என்று குலசேகர ஆழ்வார் தஞ்சம் அடைந்தார் என்று இப்பாடலுக்கு உரை விளக்கம் செய்வது மரபு.


முற்காலத்தில் நடுக்கடலில் செல்லும்போது மாலுமிகளுக்கு திசை காட்டும் கருவிகள் இல்லை. அதற்காக வடக்கு திசையை இரவில் காட்டும் துருவ நட்சத்திரத்தைப்போல, பகலில் வடக்கு திசையைக் கண்டறிவதற்கு பறவைகளைப் பழக்கி, கப்பலிலேயே அத்தகைய பறவைகளை வளர்த்து வந்தனர். அவை பறந்து சென்று மீளும்போது அத்திசையை மாலுமிகள் அடையாளம் வைத்துக்கொள்வர். இத்தகைய பறவைகளை "திசா பக்ஷிகள்' (திசை காட்டும் பறவைகள்) என்று வடமொழியில் அழைப்பர். இக்கருத்துக்கு அரணாக ஓர் "ஓவியம்' விசாகப்பட்டினம் கப்பல் படை அருங்காட்சியகத்தில் உள்ளது.

பாய்மரக் கப்பலில் மாலுமிகளுடன் உயரப் பறக்கும் பறவை ஒன்றும் சித்திரத்தில் உள்ளது. "திசா பக்ஷி' என்று அப்பறவை குறிப்பிடப்பட்டுள்ளது. அதே அருங்காட்சியகத்தில் உள்ள தமிழ்க் கல்வெட்டு (12-ஆம் நூற்றாண்டு) தமிழ் இலக்கியம் படித்தவர்களின் சிந்தனைக்கு விருந்தளிக்கிறது. ஆங்கில மொழிபெயர்ப்புடன் கூடிய தமிழ்க் கல்வெட்டு குறிக்கும் செய்தி பின்வருமாறு: ""குலோத்துங்க சோழனின் நிலைப்படைத் தளபதி, விசாகப்பட்டினத்தின் பெயரை "குலோத்துங்க பட்டினம்' என்று மாற்றினார்'' என்பதே அக்கல்வெட்டுச் செய்தி.

பிற்காலத்தில் சோழர் மரபில் திருமண உறவில் தெலுங்குச் சோழர்கள் - வேங்கி நாட்டு அரச மரபினர் கலந்ததாக இலக்கிய வரலாறு கூறுகிறது. அத்துடன், சோழ மன்னர் கலிங்க நாட்டு அரசனை வென்றதாகக் "கலிங்கத்துப் பரணி' எனும் சிற்றிலக்கிய நூல் கூறுகிறது.

கலிங்க நாடு என்பது விசாகப்பட்டினத்தின் வடபகுதியில் உள்ள இன்றைய ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த நிலப்பரப்பு. சோழர் தம்முடைய நிலைப் படையை (Army Stationery) விசாகப்பட்டினத்தில் நிறுத்தி வைத்திருந்த செய்தி; அவ்வூரின் பெயர் குலோத்துங்கப் பட்டினம் என்று மாற்றப்பட்ட செய்தி; கலிங்கத்துப்பரணி நூலின் நிகழ்விடத்துக்கு அரணாக "அண்டைகொண்ட பலமாக' அமைவதாகக் கொள்ளலாம். இவ்விரண்டு செய்திகளும் தமிழ் அறிஞர் உலகுக்குப் புதிய வரவுகள் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி - தமிழ்மணி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக