27/03/2012

இளவேனிற் காலத்து இனிய காட்சி

தமிழ் மக்கள் ஓர் ஆண்டு காலத்தை ஆறு பருவங்களாகப் பகுத்துக்கொண்டனர். அவைகளில் இளவேனிற் காலம் மட்டுமே வசந்தகாலம். தலைவனைப் பிரிந்து தவிக்கின்ற தலைவிக்குக் கசந்தகாலம். வாழ்வில் இன்பம் தருகின்ற இளவேனிற் காலத்தை, கலித்தொகை மிக அழகாக விவரிக்கிறது.

வைகை ஆற்றின் இரு கரைகளிலும் மரங்கள் பூத்துக் குலுங்குகின்றன. ஆண்கள் மனம் விரைவில் கரைந்து விடுவதுபோல பேசும் மடப்பத்தை, ஆண் மானின் பிணையான பெண் மானின் மிரண்ட பார்வையுடைய பெண்கள் முத்துப்பல் விரிவதுபோல எங்கும் அரும்பி பூத்துக்குலுங்குகின்ற முல்லை மலர்கள். களவியில் திளைத்துக் கலைந்த மகளிரின் கூந்தல்போல ஈரமான வைகை மணலிலே பூந்தாதுக்களும் தளிர்களும் விழுந்துகிடந்தன. இப்படி இனிய காலமான இளவேனில் என்னை வந்து வாட்டுகிறதே, என்பதை ""ஈதலிற் குறை காட்டாது'' என்று தொடங்கும் கலித்தொகைப் பாடல் (27) விளக்குகிறது.


சுனைகளிலே பூத்திருக்கும் பூக்களைத் தேடிச்சென்று பறிக்க வேண்டுமா? இதோ, அழகான மணமுள்ள மலர்களை நாங்களே தருகிறோம் என்று கூறுவதுபோல வைகை ஆற்றின் இருகரைகளிலும் மரக்கிளைகள் தாழ்ந்து மலர்க்கொத்துகளுடன் காணப்படுகின்றன. ஆற்றின் நடுவிலே காணும் செந்நிறமான மணல் மேடுகள், கன்னியர் தலையிலே தலைக்கோலம் சூடி வருவதுபோன்று காட்சியளிக்கின்றன. திருமகளின் மார்பிலே தொங்கும் முத்தாரம்போல ஆற்றுநீர் சிவந்த மணலை ஊடறுத்துச் சென்றுகொண்டிருக்கிறது. அந்த இளவேனிற்பொழுதும் வந்தது.

""பாடல்சால் சிறப்பின் சினையளவும், சுனையளவும்
நாடினர் கொயல் வேண்டா, நயந்துதாம் கொடுப்ப போல''
(கலி-28)

வைகையில் பொங்கிப் பெருகிவரும் புதுப்புனல், கால்வாய் வழிச்சென்று கண்மாய்களையும், குளங்களையும் நிறைத்து நாடெங்கும் அழகும், பொலிவும் பெற்றன. மழை நீரால் அடித்து வரப்பட்ட நுண்மணல்கள் குளங்களின் வெளிப்பரப்பில் படிந்து காணப்பட்டன.

இப்படி இளவேனிற் காலத்தில் வைகை ஆற்றில் நீர் நிறைந்து ஓட, இருமருங்கும் மணம் பரப்பிய மலர்கள் நிறைந்த மரங்களையும், செடி கொடிகளையும் கொண்டு மதுரை மணம் பரப்பியது அன்று.

நன்றி - தமிழ்மணி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக