05/03/2012

சுமேரியக் கண்ணகி - முனைவர் கி.இராசா

சிந்து சமவெளியில் வாழ்ந்த திராவிட இனத்தவர்கள், மெசபடோமியாவில் (ஈரான்-இராக் நிலப்பரப்பு) வாழ்ந்த சுமேரியருக்கும் இடையே நிகழ்ந்த பண்பாட்டுப் பரிமாற்றங்களுள் மொழி-இலக்கியப் பரிமாற்றம் குறிப்பிடத்தக்கதாகும். இந்த மொழி-இலக்கியப் பரிமாற்றத்தில் திராவிடர்களும் சுமேரியர்களும் கொண்டும் கொடுத்தும் உறவு கொண்டாடியுள்ளனர். "சுமேரியக் கண்ணகி கதை' இந்த உறவு நிலைக்கு நல்ல சான்றாக உள்ளது.


சுமேரியாவில் கிடைத்துள்ள சுடுமண் முத்திரை ஒன்றில், கையில் சிலம்புடனும் தலைப்பகுதியில் தீப்பிழம்புகளுடனும் காணப்படும் தெய்வத்தை "இனானா' என்று குறிப்பிடுகின்றனர் (படம்-1). இன்னொரு சுடுமண் முத்திரையில், இறக்கைகளுடன் மலையுச்சியில் ஒரு மரத்தடியில் காணப்படும் உருவத்தையும் "இனானா' என்றே குறிப்பிடுகின்றனர் (படம்-2). இந்த உருவங்களை இணைத்துப் பார்க்கும்போது, கண்ணகியின் தோற்றத்தோடும் (சிலம்பு கையிலேந்திய நிலை), பண்போடும் (தீ வடிவம்), முடிவோடும் (மலை உச்சியில் ஏறி, மரத்தினடியில் நின்று வானுலகம் செல்லுதல்) தொடர்புடையதாக இனானா கதை அமைகிறது. இனி சுடுமண் முத்திரைகளில் காணப்படும் இந்த இனானாவின் வரலாற்றைக் காண்போம்.

இனானா என்பவள் நிலவுக் கடவுளுக்கும், நிலமடந்தைக்கும் பிறந்தவள். இவள் ஒளியை உலகுக்குத் தந்தவள். காதலர்க்குத் துணை நிற்பவள். இவளது காதலன் நரகம் எனப்படும் கீழ் உலகில் அடைபட்டுக் கிடக்கிறான். அவனைக் காப்பதற்காக இனானா கீழ் உலகம் செல்கிறாள். இரக்கமும் மென்மையும் அன்பும் கொண்ட இவள், வீரமிக்கவளாகவும் துணிச்சல் மிகுந்தவளாகவும் படைக்கப்பட்டிருக்கிறாள் - கண்ணகி போன்றே! கீழ் உலகில் உள்ள நீதிமன்றத்தில் தன்னுடைய காதலனுக்காக வாதாடி, அவனை மீட்டு வருவதற்கான ஆவணங்களுடன் கீழ் உலகத்தில் ஆட்சி செலுத்தும் "இயக்கி'யைச் சந்திக்கப் புறப்படுகிறாள். புறப்படும்போது தான் திரும்பி வரமாட்டேன் என்று அவள் மனதுக்குப்படுகிறது. இதனால் தன் பணியாளரிடம்,

"மூன்று நாள்களுக்குள் தான் திரும்பாவிட்டால், தனக்காக விண்ணுலகத் தெய்வங்களிடம் முறையிட வேண்டும்' என்று கேட்டுக்கொள்கிறாள்.

இந்த முன்னேற்பாடுகளைச் செய்துவிட்டு, மணிகளால் அழகு செய்யப்பட்ட கீழ் உலகம் நோக்கி இனானா செல்கிறாள். அங்கு வாயிற்காப்போன் அவளைத் தடுக்கிறான். அவளைப் பற்றிய விவரத்தையும், வருகையின் காரணத்தையும் கேட்கிறான். அவளும் விவரத்தைச் சொல்கிறாள். அவன் சென்று கீழ் உலகத் தலைவி இயக்கியிடம் தெரிவித்து அனுமதி பெறுகிறான். அனுமதி பெற்ற இனானா, ஏழு வாயில்களைக் கடந்து சென்று இயக்கியைச் சந்திக்கிறாள். அங்கு தன் கணவன் இறந்துவிட்டதை அறிகிறாள். இயக்கி முன் மண்டியிட்டு, தன் கணவனை உயிரெழுப்பித்தருமாறு மன்றாடுகிறாள். ஆனால், இவளுடைய கதறல் இயக்கி காதில் ஏறவில்லை. இயக்கி, தன்னுடைய பார்வையாலேயே இனானாவை சுட்டெரித்து விடுகிறாள்.

 மூன்று நாள்கள் கடந்தன. நான்காவது நாள் வந்தது. தன்னுடைய தலைவியைக் காணாது "நின்சுபர்' என்ற பணியாள் தவிக்கிறான். தலைவி கேட்டுக்கொண்டதுபோல விண்ணுலகத் தெய்வங்களிடம் முறையிடுகிறான். விண்ணுலகத் தெய்வம் தன்னுடைய தூதர்களை அழைத்து இனானாவுக்கு உயிர் தருவதற்குரிய நீர் தந்து அவள் மீது தெளித்து உயிர்ப்பிக்குமாறு கட்டளையிடுகிறது. விண்ணுலகத் தூதுவர் கீழ் உலகம் சென்று இனானாவை உயிர்ப்பிக்கின்றனர். இனானா வானுலகம் சென்று பிற கடவுளோடு சேர்ந்து வாழும் வானுறை தெய்வமாகிறாள் - இப்படி முடிகிறது இனானாவின் கதை. (பழைய சுடுமண் ஓடுகளின் பதிவுகளிலிருந்து இக்கதை மீட்டெடுக்கப்பட்டுள்ளதால், இடையிடையே சிதைந்து காணப்படுகிறது என்று அகழ்வாராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்).

இக்கதையின் குறிப்பிடத்தக்க அம்சம், இனானா தன்னுடைய காதலனை மீட்கக் கீழுலகு செல்வதாகும். மேலும், கீழுலகு தெய்வத்தோடு வாதிடுவதற்காக அவள் சான்றுப் பத்திரங்களோடு செல்வதும், இறுதியில் அவளுக்கு அமையும் வாழ்வும் இனானாவின் கதை, கண்ணகி கதையோடு நெருங்கிய தொடர்புடையது என்பதற்கான சான்றுகளோடு அமைகின்றன. மேலும், இக்கதைப்பாடலில் இடம்பெறும் பல தொடர்கள், கண்ணகியின் கதையில் வரும் பல்வேறு நிகழ்வுகளை நினைவூட்டுகின்றன. அவற்றுள் சில வருமாறு:

* இனானா நீதி கேட்கக் கீழ் உலகு செல்லும்போது ஒரு கையில் சிலம்பையும் கொண்டு செல்கிறாள் (படம்-1).



* வருவதை முன்னுணர்த்தும் உத்தியாகத் "தீதறுக' என்றும், "மண் தேய்த்த புகழினான்' என்றும், "மாறி வருவன் மயங்காது ஒழிக' என்றும் இளங்கோவடிகள் எதிர்மறையாகக் குறிப்பிட்டதுபோல, இனானா தன்னுடைய பணியாளரிடம் மூன்று நாள்களுக்குள் தான் திரும்பி வராவிட்டால், தெய்வங்களிடம் சென்று முறையிடும்போது அழிவை முன்னிறுத்தி எதிர்மறையில் புலம்பச் சொல்கிறாள்.

* இவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்ததுபோல, சுமேரியாவின் நிப்பூர் அகழ்வாய்வில் கிடைத்த சுடுமண் முத்திரைகளில் இனானாவின் வலது கையில் சிலம்பு காணப்படுவதும், தலைப்பகுதியில் அழல் வடிவம் காணப்படுவதும், இன்னொரு முத்திரையில் இனானா வானுலகம் செல்வதுபோன்று இறகுகளுடன் காணப்படுவதும், மலையுச்சியில் மரத்தடியில் நிற்பதும் இனானா வரலாற்றைக் கண்ணகி கதையோடு தொடர்புபடுத்திப் பார்ப்பதற்குப் பெரிதும் உதவுகின்ற சான்றுகளாக அமைந்துள்ளன.

கண்ணகி கதை, இலங்கையில் "கர்ணகி கதை' என்று நாட்டுப்பாடல் வடிவில் காணப்படுகிறது. கிரேக்கத் தொன்மங்களிலும் பெண் தெய்வங்களின் ஆற்றல் பெரிதும் பேசப்படுகிறது. இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது, பண்டைய நாகரிகங்களில் பெண் தெய்வங்கள் தலைமையிடம் பெற்றிருந்தனர் என்பதை அறியமுடிகிறது. இவற்றுக்கெல்லாம் மேலாக கண்ணகி என்ற தொன்மம் சில மாற்று வடிவங்களுடன் சுமேரியாவிலும் நிலவியது என்பதை அறிகிறோம். பண்டங்களின் பரிமாற்றத்துடன், மொழி இலக்கியப் பரிமாற்றங்களும் சுமேரியருக்கும் பண்டைத் தமிழருக்குமிடையே நிகழ்ந்தன என்பதற்குச் சுமேரியக் கண்ணகி கதைப்பாடல் ஒரு வலுவான சான்றாகும்.

நன்றி - தமிழ்மணி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக