பத்தொன்பதாம் நூற்றாண்டின் நிறைவில் வாழ்ந்த ஸ்காட் என்னும் ஓர் அய்ரோப்பியப் பாதிரியார், மதுரையில் தமிழ் கற்றுக் கொண்டு யாப்பு இலக்கணத்தைப் படித்து முடித்ததும் சுகாத்தியர் எனத் தமது பெயரை மாற்றிக் கொண்டார். திருக்குறளில் சில குறள்கள் யாப்புக்கு முரணாக இருப்பதாகத் தவறாகக் கருதி, கருதிய குறள்களைத் தம் மனதிற்குத் தோன்றியவாறு திருத்தி எழுதினார். குறட்பாக்களை மட்டுமா திருத்தினார்? திருக்குறளின் பால், இயல், அதிகாரங்கள் ஆகிய அனைத்தையும் மாற்றிப் பதிப்பித்தார். அதிகாரத் தலைப்பையும் மாற்றினார். தமது திறமையைக் காட்டி பெருமை பெறும் நோக்கத்தில் தமிழ் வித்வான் எனத் தமிழகமெங்கும் புகழ் கைக் கொண்டிருந்த பூவாளுர் தியாகராசச் செட்டியாரின் திருச்சி இல்லத்தைத் தேடி வந்து செட்டியாரின் வீட்டிற்குள் நுழைந்தார். வந்த நோக்கத்தைப் பாதிரியார் விளக்கியவாறு திருத்திய திருக்குறள் பதிப்பை மெல்ல எடுத்தார். எதிரே அமர்ந்திருந்த தியாகராசச் செட்டியார் என்ன, திருக்குறளைத் திருத்தினீரா? என்னய்யா உளறுகிறீர்? திருக்குறளின் அமைப்பும், சிறப்பும் உனக்கு எங்கே தெரியப் போகிறது? திருக்குறளைத் திருத்திய உன் முகத்தைப் பார்ப்பதே பாவம் எனச் சொல்லியவாறு கண்களை மூடிக் கொண்டார்.
பாதிரியார் திகைப்புற்றாலும் மீண்டும் தாம் செய்த திருத்தத்தைப் பற்றிக் கூறத் தொடங்கினார். அய்யோ, உமது குரலைக் கேட்பது மாபாவம் எனக் கூறிக் கொண்டே கண்களை மூடியவாறு செட்டியார் வீட்டுக்குள் ஓடிவிட்டார். நான்காவது தமிழ்சங்கத்தை உருவாக்கிய வள்ளல் பாண்டித்துரைத் தேவரிடம் சென்ற பாதிரியார் தமது திறமையை எடுத்துக் கூறி திருத்திப் பதிப்பித்த திருக்குறளை மகிழ்ச்சியுடன் தேவரிடம் கொடுத்தார். நூலைப் புரட்டிப் பார்த்த தேவர் மிகுந்த சதுரப்பாட்டுடன் பதிப்பித்த அத்தனை நூல்களையும் கொண்டு வாருங்கள், நான் விலைக்கு வாங்கிக் கொள்கிறேன் என்றார்.
பாதிரியாரிடமிருந்து ஒரு கணிசமான தொகை கொடுத்து வாங்கிய நூல்கள் அனைத்தையும் குவித்து நெருப்பூட்டினார். நிகரில்லாத் தமிழுணர்வு கொண்ட பாண்டித்துரைத் தேவர் இந்நூல்கள் அறிஞர்களிடம் சென்று மனத்துயர் விளைவிக்காதிருப்பதற்கும் அறியாதார் திருக்குறளைத் தவறாகப் பாடம் ஓதாமல் இருப்பதற்கும் நூல்களை தீயிட்டுக் கொளுத்தினும் இன்றும் இதன் சில படிகள் தமிழ்நாட்டில் அங்கங்கே உள்ளன.
நன்றி - விடுதலை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக