26/03/2012

வேருக்கு நீர் வார்த்தவர்கள் – 32 : தமிழ் வளர்ந்த மன்றங்கள்!

 ரசிகமணி டி.கே.சி.

ஆங்கில பாஷையிலேயே சென்ற நூறு வருஷமாக நாம் கல்வி கற்று வந்திருக்கிறோம். அது காரணமாக, கற்கும் விஷயம் நமக்கு நன்றாய்ப் புலப்படுவதில்லை. பத்து நாளில் கற்கவேண்டியதைப் பத்து மாதத்தில் கற்பிக்கிறார்கள். அப்போதும் கல்வி வந்தபாடாக இல்லை. கற்றவர்களுக்கு நேரில் வருகிற நஷ்டம் இது. சமுதாயத்துக்கு இதனால் ஏற்படுகிற நஷ்டம் ரொம்பவும் பெரிது.

 இரசாயனக் கலையை எவ்வளவெல்லாமோ மாணவர்கள் கஷ்டப்பட்டுக் கற்கிறார்கள். ஆங்கிலம் கற்ற சிலர், ""சாயத்தைப் பற்றியும் "பம்ப்' பற்றியும் ஆங்கிலத்தில்தான் பேச முடியும்; தமிழில் பேசமுடியாது'' என்றுகூடச் சொல்லுகிறார்கள். இது தவறான கொள்கை என்பதை நிரூபிக்க வெகுதூரம் போக வேண்டாம். மோட்டார் வண்டிகளைப் பழுதுபார்க்கிற பட்டறை ஒன்றுக்குப் போய்ப் பார்த்தால் போதும். காலேஜுகளிலே ஸயின்ஸ் வகுப்புகளில் கற்கிற விஷயத்தைவிட நுட்பமான விஷயத்தை, எழுதப்படிக்கத் தெரியாத ஒரு பையன், புதிதாகப் பட்டறையில் வந்து சேர்ந்த மற்றொரு பையனுக்கு விளங்கும்படி எடுத்துச் சொல்லி விடுவான். தமிழில் சொல்லுகிறதனாலேயே இது சாத்தியமாகிறது.


 கருவிகளின் பெயர்களை ஏதோ ""பாட்டரி, மாக்னடோ, வால்வு'' என்றெல்லாம் லத்தீன், கிரீக்கு, பிரெஞ்சு முதலிய பாஷைகளிலிருந்து கடன் வாங்கிக்கொண்டு விஷயத்தை விளக்கிவிடுகிறான். கருவிகள், உறுப்புகள் இவற்றின் பெயர்கள்தான் இதர பாஷைகளிலிருந்து வந்தவை. மற்றபடி பேச்செல்லாம், பேசுகிறவனுக்கும் கேட்பவனுக்கும் நன்றாய்ப் பழகிய வீட்டுப் பாஷையே. ஆங்கிலம் கற்றவர்களுக்கு மாத்திரம் அந்த வீட்டுப் பாஷை வரமாட்டேன் என்று சாதிக்கிறது.

 பள்ளிக்கூடத்தில் நான் மாணவனாக இருந்த காலத்தில், தமிழ் வியாசம் எழுதச் சொல்லுவார்கள். உயர்ந்த நடையில் எழுதவேண்டும் என்றும் சொல்லுவார்கள். "உயர்ந்த நடை' என்றால், பேச்சு வழக்குக்குக் கொஞ்சமும் சம்பந்தம் இல்லாத முறையில் எழுதப்படுவது என்று பொருள். பஞ்சதந்திரக் கதைகளில் ஐந்தாம் தந்திரமான "அசேம்பிரேக்ஷீய காரியத்துவம்' என்ற கதையை நெட்டுருப் பண்ணச் சொன்னார்கள்; கதையின் பெயரைப்போல், வாய்க்குள் நுழைய மாட்டாமல் திண்டாடுகிற பாஷையிலேயே எழுதவும் சொன்னார்கள். குறளுக்குப் பொருள் சொல்கிறதென்றால் அல்லது சீவகசிந்தாமணிச் செய்யுளுக்குப் பொருள் சொல்லுகிறதென்றால், அந்நூல்களின் உரையாசிரியர்களான பரிமேலழகர், நச்சினார்க்கினியர் முதலியவர்களுடைய நடையை ஒட்டியே எழுதவேண்டும் என்று சொல்லுவார்கள். எப்படியோ வழக்கொழிந்த பாஷைகளிலே தமிழ் ஆசிரியர்களுக்கு மோகம் பிறந்துவிட்டது. இதற்கெல்லாம் ஆங்கிலம் போதித்த ஆசிரியர்களும் துணைபுரிந்தனர். "கலோக்குயல், கலோக்குயல்' என்று சொல்லி, ஆங்கில வியாசம் எழுதும்போதும், பேச்சு வழக்கிலுள்ள பாஷையைக் குறைத்துப் பேசி வந்தார்கள். "கலோக்குயல்' என்ற வார்த்தையைத் தமிழாசிரியர்களும் வளமாகக் கையாண்டு, தமிழ் எழுதும் முறையை வகுத்து வந்ததால், மாணவர்கள் எழுதும் பாஷையும் பேசும் பாஷையும் வழக்கொழிந்த பாஷையாய்ப் போய்விட்டது.

 தமிழர்களாகிய ஆடவர் பெண்டிர் அந்தப் பாஷையைக் காதில் கேட்டது கிடையாது; பேசியதோ, கிடையவே கிடையாது. ஆசிரியர் அரும்பத அகராதியை எடுத்து எடுத்து வீசுகிற அதிசயச் செயலைப் பார்த்துவிட்டு, மாணவர்களும் பேசும்போது விஷயத்திலே எவ்வித கவனமும் ஆர்வமும் இல்லாமல் அரும்பதம் எங்கே என்று தேடுவார்கள். அரும்பதம் ஒன்றைக் கண்டுபிடித்து உபயோகப்படுத்தியபின், வேறொரு அரும்பதத்தைக் கண்டுபிடிக்க முயலுவார்கள். அதையும் உபயோகித்துவிட வேண்டியது; பிறகு இன்னொரு வார்த்தை. இப்படியாக, பேசுவது அவ்வளவும், வெறும் வார்த்தை வேட்டையாகவே முடியும்.

 இப்படித் தமிழ் கற்ற மாணவர்கள் கிராமவாசிகளிடம் போய்ப் பேசி மகிழ்ச்சி உண்டாக்க முடியுமா? கொஞ்ச நேரத்துக்கு வார்த்தைகளைக் கொண்டு அம்மானை ஆடுகிறதை எல்லாம் பார்த்து, "...!' என்று கிராமவாசிகள் வியந்து கொண்டிருக்கலாம். பிறகு, விஷயம் ஒன்றுமே புரியாமல், மனமும் உடம்புமே களைத்துச் சோர்ந்துவிடும். கிராமவாசிகள் அனுபவிப்பதற்கு ஒன்றுமே இராது என்றால் மிகையல்ல.

 ஆங்கில பாஷை எப்படி உதவாமல்போய் நம்மைத் திண்டாட விட்டுவிடுகிறதோ, அப்படியே தமிழும் உபயோகமற்றுப்போய் நம்மைத் திண்டாட விட்டுவிடுகிறது. இதெல்லாம் நமக்கு, பல்கலைக்கழகம் ஆரம்பித்துக் கையாண்டு வந்த கல்விமுறை காரணமாக வந்தது. இனி, பல்கலைக்கழகத்தின் சம்பந்தம் இல்லாமல் தமிழ் கற்கும் முறை எப்படி என்று பார்க்கலாம்.

 தமிழ்நாட்டிலே நாற்பது ஐம்பது வருஷங்களுக்கு முன்பு, ஆங்காங்கு புலவர்கள் என்றும், புராணப் பிரசங்கிகள் என்றும் பலர் இருந்தார்கள். அவர்கள் எல்லோரும் யாராவது ஓர் ஆசிரியரிடம் சில ஆண்டுகள் உடனிருந்து திருவிளையாடற் புராணம், பெரியபுராணம் முதலிய நூல்களைப் பாடம்சொல்லக் கேட்பார்கள். புராணப் பிரசங்கம் செய்யும்போது, உடனிருந்தோ, ஆசிரியருக்குக் கையேடு வாசித்தோ அனுபவித்துக் கொண்டிருப்பார்கள். கதையாகவும் செய்யுளாகவும் இருக்கும்போது, கேட்க இனிமையாய் இருத்தல் இயல்பு. பாடல்களை என்ன முறையில் பாடவேண்டும் என்பதையும் மாணவர்கள் கற்பார்கள். நாளடைவில் தாங்களும் புராணப் பிரசங்கம் செய்ய வல்லவராவார்கள். ஊரூராகப் போய் புராணப் பிரசங்கம் செய்வதால் தங்களுக்குக் காலúக்ஷபம் நடக்கும். ஊரிலுள்ளவர்களுக்கும் தமிழைக் கேட்டு அனுபவிக்கும் வசதி கிடைக்கும்.
 முப்பது வருஷத்துக்கு முன்கூட, இத்தகைய புராணப் பிரசங்கிகள் எத்தனையோ பேர் இருந்தார்கள். புராணிகர்கள் பேசுகிற பாஷை சாதாரணப் பேச்சு வழக்கிலிருக்கும் பாஷைதான். உரையாசிரியர்களுடைய பாஷையெல்லாம் புராணிகர்களிடத்தில் கிடையாது; அதற்குப் புகலிடமில்லாமல் ஆங்கிலம் கற்ற "தமிழறிஞர்கள்' கைக்கே வந்துவிட்டது. இந்த உயர்ந்த நடை ஒன்று வந்து, புராணிகர்களையும் புராணப் பிரசங்கங்களையும் துரத்திவிட்டது. புராணப் பிரசங்கம் ரொம்ப அபூர்வமாய்ப் போய்விட்டது.

 இருநூற்றைம்பது வருஷத்துக்கு முன் தமிழ்நாட்டில் உதாரணமாக திருநெல்வேலிச் சீமையில், தமிழ் மக்கள் தமிழை நன்றாய் அபிமானித்து வளர்த்து வந்தார்கள் என்பது தெரியவருகிறது. அதற்கு அனுகூலமாகப் புராணிகர்களும் இருந்தார்கள்.

 திருக்குற்றாலக் குறவஞ்சி ஆசிரியரான திரிகூடராசப்பக் கவிராயர் இருந்த காலம் 250 வருஷத்துக்கு முன். அவர் பாடிய குற்றாலத் தலபுராணத்தில், நாட்டு வளத்தைப் பாடும்போது இவ்வாறு சொல்லுகிறார்: பூங்கொத்துகளிலிருந்து வடியும் தேன் நாற்றங்காலில் பாயுமாம்; செங்கோன்மை பொருந்திய அரசாட்சி இருந்ததால் நாட்டிலுள்ளவர்கள் எல்லோரும் சகல சம்பத்துகளுடனும் மேம்பட்டிருப்பார்களாம்; வீதிகளில் சதா திருவிழாக்கள் நடந்தவண்ணமாய் ஒரே கோலாகலமாய் இருக்குமாம். இன்னொரு விஷயம். அதைச் செய்யுளிலேயே பார்ப்போம்.

 ""நாறெலாம் வளர்க்கும் பூந்தேன்
 நாடெலாம் வளர்க்கும் செங்கோல்
 சாறெலாம் வளர்க்கும் வீதி
 தமிழெலாம் வளர்க்கும் மன்றம்'

 ஆங்கில நாட்டிலாவது, வேறெந்த நாட்டிலாவது ஆங்கிலம் பற்றியோ, அந்த நாட்டுக்குரிய பாஷையைப் பற்றியோ இப்படிச் சொல்ல இடம் உண்டா? எங்கும் இல்லாத பாஷை வளமும் பாஷை அனுபவமும் தமிழ்நாட்டில் இருக்கிறது. இனி எப்பொழுது மறுபடி வருமோ?

நன்றி - தமிழ்மணி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக