24/02/2012

அரசியல் - சொற்பொருள் விளக்கம் - விநாயகமூர்த்தி

அரசியல் என்னும் சொல்லை இன்று நாம் Politics எனும் ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லாக வழங்கிவருகிறோம். அரசு பற்றிய கல்வியே அரசியல், அரசு, ஆட்சி (Government), மக்கள் நாடு (Territor) ஆகியவையெல்லாம் அரசியலுக்குரியன. திருக்குறளிலுள்ள அரசியலுக்கு அரசனது இயல்புகள் என்று பொருள் கூறுகிறது பரிமேலழகர் உரை. எனவே அரசனது பண்புகளைக் கூறுவதே அரசியல் எனலாம்.

தலைப்பு வரையறை

தொலைநோக்குப் பார்வையுடன் தொட்டுக்காட்டிய வள்ளுவரின் அன்றைய அரசியல் கூறுகள் இன்றைய அரசியலோடு பொருத்திப் பார்க்கும் பாங்கினையே ''திருக்குறளில் அரசியல்'' எனும் தலைப்பு வரையறுத்துக் கூறுகிறது. திருக்குறள் முடியாட்சி காலத்தில் தோன்றியது என்றாலும் அவற்றிலே கூறப்பட்டுள்ள அரசனின் தன்மைகள், அரசாள்வோரின் பணிகள் முதலியவை இன்றைய குடியாட்சி அரசியலின் உட்பிரிவுகளோடு தொடர்புடையனவாக உள்ளதாலும் இதனை ஆய்வோடு பார்ப்பதாலும் இத்தலைப்பு இவ்வாறு அமைந்தது எனலாம்.


எது அரசு? யார் அரசர்?

குடும்பம், குடி, சமயம், பிற பிற மன்றங்கள் ஆகியவை அடங்கிய பரந்த அமைப்பே சமூகம் (Society). சமூகத்திலுள்ள குடும்பம், சமயம், போன்றதே அரசு என்னும் அமைப்பு ஆகும். ஆக அரசு என்பது சட்டம் இயற்றி அதனை நடைமுறைப்படுத்திக் காண்பித்து வரும் ஓரமைப்பு.

அரசுபெற்ற உருவகம் ஆட்சி எனலாம். அரசே தன்னிடம் இயல்பாக அமைந்த அதிகாரத்தை ஆட்சி எனப்படும் ஆளுங்கணத்திற்குத் தந்து செயல்படுகிறது. இவ்வாளுங்கணத்தின் தலைமையே (Government Head) அரசன். இது முடியாட்சியின் நிலை. இன்றைய குடியாட்சி நிலையில் இது குடியரசுத் தலைவர் () அமைச்சர் என அமையும்.

இப்படிப்பட்ட அரசனின் அரசியலில் மக்கள் (Population), நிலப்பரப்பு (Territory), ஆட்சி (Government), இறைமை (Sovereignity) என்ற நான்கு கூறுகள் அடிப்படையென இன்றைய அரசியல் அறிஞர்கள் வகுத்துரைக்கின்றனர். இவ்வாறே வள்ளுவரின் அரசியலும் வகுத்துரைக்கிறது. அன்று கூறிய இவை இன்றும் தொடர்புள்ளனவாக உள்ளதால் வள்ளுவரின் தொலைநோக்கு இங்குப் பொருந்துவது புலப்படும்.

அரசனுக்குரிய பண்புகளும் பணிகளும்

1. அரசாளக்கூடிய தன்மையைப் பெற்றவன் எவர்க்கும் அஞ்சாத திண்மையைப் பெற்றிருக்க வேண்டும்.

2. வறியவர்களுக்கு ஈயும் பண்புடையவனாக இருத்தல் வேண்டும்.

3. சோம்பலைப் பகையாகக் கொண்டு, முயற்சியை (ஊக்கம்) நட்பாகக் கொள்ளுபவனாக இருத்தல் தேவையானது.

4. கல்வி கேள்விகளில் தேர்ந்த நுண்ணறிவு பெற்றவனாகவும் ஒரு பொருளை நன்கு ஆராய்ந்து துணிந்து கருத்துகளை எடுத்துரைப்பவனாக இருத்தல் வேண்டும்.

5. குடிமக்களுடைய குறைகளைக் கேட்டு அதனை உடனடியாக நீக்கும் தன்மையைப் பெற்றிருத்தல் வேண்டும்.

6. குடிமக்கள் பார்த்து அஞ்சத்தக்க தோற்றத்தினைப் பெற்றிருக்கக் கூடாது. மாறாகக் காட்சிக்கு எளியனாகவும் இன்சொல் கூறுபவனாகவும் இருத்தல் மிகவும் தேவையானது.

7. குடிமக்களே இவன் மனம் புண்படும்படி கடுமையான சொற்களால் கூறினாலும் அவற்றைப் பொறுமையுடன் செவிமடுத்து அவற்றுள் நன்மை தீமைகளை ஆராய்ந்து ஆராய்ச்சியை நடத்துபவனாகவும் இருத்தல் மிகவும் இன்றியமையாத தன்மைகளாக மதிக்கப்படும்.

8. இத்தகு பண்புகளையெல்லாம் ஒருங்கே பெற்றிருக்க வேண்டும் என்பதைக் கீழ்க்காணும் குறள்கள் எடுத்துரைக்கின்றன.

 அஞ்சாமை ஈகை அறிவுஊக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தற்கு இயல்பு

- - - (குறள் 382)
  
தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்
நீங்கா நிலனாள் பவற்கு

- - - (குறள் 383)

 அறன் இழுக்காறு அல்லவை நீக்கி மறன்இழுக்கா
மானம் உடையது அரசு

- - - (குறள் 384)

 காட்சிக்கு எளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம்

- - - (குறள் 386)
  
இன்சொலால் ஈத்துஅளிக்கு வல்லாற்குத் தன்சொலால்
தான்கண் டனைத்துஇவ் வுலகு

- - - (குறள் 387)

 செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக்கீழ் தங்கும் உலகு

- - - (குறள் 389)

 கொடைஅளி செங்கோல் குடியோம்பல் நான்கும்
உடையானாம் வேந்தர்க்கு ஒளி

- - - (குறள் 390)

அரசனிடம் இப்படி இயல்பாகவே தூங்காமை, துணிவுடைமை, மானமுடைமை, செவிகைப்பச் சொற்பொறுத்தல், அளியுடைமை முதலான பண்புகள் நிறைந்திருக்க வேண்டுமென்று வள்ளுவர் எதிர்பார்ப்பது இன்றைய அரசியலுக்கும் எதிர்கால அரசியலுக்கும் பொருந்தும் என்பதைச் சொல்லாமல் சொல்லி இருப்பது உணரமுடிகிறது.

இத்தகைய அரசனின் இயல்புகளைக் கம்பரும் மந்தரை சூழ்ச்சிப்படலத்தில்

இனிய சொல்லினன்; ஈகையன்; எண்ணினன்,
வினையன்; தூயன்; விழுமியன்; வென்றியன்;
நினையும் நீதிநெறி கட வான் எனில்
அனைய மன்னற்கு அழிவும் உண்டாம் கொலோ?

- கம்ப. . காண்டம், மந்தரை சூழ்ச்சிப் படலம். 26-வது பாடல்

எனச் சொல்வது என காலந்தோறும் இவை பொருந்தி வருவதை இங்கே நினைவுகூரத்தக்கதாகும்.

அரசனின் பணிகளாவன

இன்றைய அரசியல் அறிஞர்கள் அரசனுக்குரிய பணிகள் என்னென்ன என்பதை நான்கு வகையில் அதாவது காவற்பணி (Executive duties), போர்ப்பணி (Military duties), ஆட்சிப் பணி (Administrative duties). வருவாய்ப்பணி (Revenue duties) என வகுத்துரைப்பர். வள்ளுவர் கண்ட அறிவியலில் இத்தகைய பணிகள் காத்தல், வினை, தெரிந்து வினையாடல், இயற்றல், ஈட்டல், குடிஓம்பல் முதலானவையாக கூறப்பட்டுள்ளன.

 காவற்பணி (Executive duties)
  
வெளிநாடுகளிலிருந்து - அண்டை அயல்நாடுகளில் இருந்தும் - பகை நாடுகளில் இருந்தும் - தோன்றிவரும் தாக்குதல்களிலிருந்து அரசன் தன் அரசையும் மக்களையும் காத்தல் இவ்வகையில் அடங்கும். இதனை வள்ளுவர்,
  
இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை
முறைகாக்கும் முட்டாச் செயின்

- - - (குறள் 547)
  
செருவந்த போழ்தின் சிறைசெய்யா வேந்தன்
வெருவந்து வெய்து விடும்

- - - (குறள் 569)

என்ற குறள்களிலே கூறுவதைக் காணமுடிகிறது.

நாடுகளுக்கு வெளியேயிருந்து வரும் புறப்பகையிலிருந்து காப்பதோடு மட்டுமல்லாமல் உள்நாட்டிலே நிகழும் உட்பகையிலிருந்தும் நாட்டு மக்களைக் காத்தல் அரசனின் பணியென்பதை

 பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும்
கொல்குறும்பும் இல்லது நாடு

- - - (குறள் 735)

இக்குறள் உணர்த்துகிறது. மேலும் இத்தகைய உட்பகையைத் தோன்றும் இடத்திலே தோன்றும்போது களைந்தெறிய வேண்டுமென்பதை

 இளைதாக முள்மரம் கொல்க; களையுநர்
கைகொல்லும் காழ்த்த இடத்து

- - - (குறள் 879)

என இக்குறளிலே கட்டளையிடுகிறார்.

இன்றைய அரசாட்சியில் இத்தகைய புறப்பகையை எதிர்க்கப் படைகளும் (Military forces) உட்பகையைப் போக்க (Police Force) காவல் படைகளும் உள்ளமை அன்றைய குறளியல் உணர்த்தும் அரசியளோடு இங்கு பொருத்திப் பார்க்கத்தக்க தாகும்.

போர்ப்பணி (Military duties)

பகைவரிடமிருந்து தன் நாட்டையும் மக்களையும் காக்கும் பொருட்டு அரசன் பகைநாட்டின்மீது போர் செய்ய வேண்டி வரும். அத்தகைய சூழ்நிலையில் அரசன் செய்ய வேண்டிய பணிகளை வள்ளுவர் தெரிந்து செய்வதை, வலிஅறிதல், காலம் அறிதல், இடனறிதல் முதலான அதிகாரங்களில் பட்டியலிடுகிறார்.

தெரிந்து செய்தல்

போர்ச்செயலைச் செய்வதற்கு முன்பு அச்செயல் பற்றி ஆராய்ந்து எண்ணிப் பார்க்கவேண்டுமென்பதை
  
தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு
அரும்பொருள் யாதொன்றும் இல்

- - - (குறள் 462)

என்ற குறளிலே காணலாம்.

வலி அறிதல்

போரில் பொருளைச் செலவிடும்போது அதன் வலிமையை உணர்ந்து செயல்பட வேண்டும்; பகையரசரின் வலிமையை அறிந்து செயல்பட வேண்டும் என்பதை,
  
வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல்

- - - (குறள் 471)
  
அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றாக் கெடும்

- - - (குறள் 479)

என இவ்விரு குறள்கள் உணர்த்துகின்றன.

இடனறிதல்

போரிடுவதற்கு ஏற்ற இடம் தெரிவு செய்வதானாலும் அரசன் விழிப்புடன் செயல்பட வேண்டுமென்பதை
  
காலாழ் களரின் நரிஅடும் கண்அஞ்சா
வேலாள் முகத்த களிறு

- - - (குறள் 500)
  
தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்
இடம்கண்ட பின்அல் லது

- - - (குறள் 491)

 நெடும்புனலுள் வெல்லும் முதலை; அடும்புனலின்
நீங்கின் அதனைப் பிற

- - - (குறள் 495)

முதலான குறள்களிலே வள்ளுவர் எடுத்துரைப்பதை இடனறிந்து செய்தலின் இயல்பு அறியலாகிறது.

அமைச்சர்

அரசாட்சியில் அரசனுக்கு அடுத்துப் பதவி வகிப்பவர் அமைச்சர் ஆவர். அமைச்சர் மக்களுக்கும், அரசனுக்கும் நெருங்கிய தொடர்புடையவர். இவர் அரசரின் குறிப்பறிந்து நடக்கத் தெரிந்தவராகவும் அரசியல் அறங்களை அறிந்து, கல்வி நிறைந்து, அடங்கிய சொல்லையுடையவராகவும் இருத்தல் வேண்டும் என்பதை வள்ளுவர் அமைச்சியல் என்னும் பத்து அதிகாரங்கள் வழி உணர்த்துகிறார்.

தூதுவர்

இன்றைய அரசியலில் தூதுவர்களின் பங்கு குறிப்பிடத்தக்கது. அண்டை நாட்டுடனான தொடர்பை வலுப்படுத்துதலும், நட்புறவை பேணிக் காப்பதுமாகிய பணிகள் இவர்களின் கையில் உள்ளன. அண்டை நாட்டோடு தொடர்பு கொள்ளும்போது சொல்ல வருபவற்றைச் சுருக்கமாக, கடுஞ்சொற்களைத் தவிர்த்துக் கேட்பவர் மகிழும்படி சொல்லி உடன்பாடு செய்ய வல்லவனே சிறந்த தூதுவன் ஆவான் என்று வள்ளுவர் தூதுவருக்கும் இலக்கணம் வகுக்கிறார்,

தூதுவரின் இலக்கணத்திற்கு அனுமானைக் குறிப்பிடலாம், கம்பராமாயணத்திலே இராமனின் தூதுவராகச் செயல்பட்டு, அவன் இலங்கை நாட்டுக்குச் சென்று தான் žதையைக் கண்டு விட்டேன் என்பதை இராமபிரானிடம் ''கண்டேன் žதையை'' எனச் சொல்கிறான்.

ஒற்றர்

ஒற்றன் என்பவன் அரசனுக்குக் கண் போன்றவன். பகை நாட்டின் பால் சென்று அங்கேயுள்ள நடப்புகளை அறிந்தும் உள்நாட்டுச் சூழ்நிலைகளைத் தெரிந்து கொண்டு வந்து அரசனிடம் தெரிவிப்பது இவர்களின் பணிகளாகின்றன. இவர்களின் சிறப்பை ஒற்றாடல் எனும் அதிகாரம் விளக்குகிறது. இன்றைய அரசியலை சி.பி.. என்று கூறப்படும் மத்திய புலனாய்வுத் துறையானது வள்ளுவர் காட்டும் ஒற்றர்களோடு பொருத்திப் பார்த்து அறியத்தக்கதாகும்.

வருவாய்ப்பணி

அரசன் தன் அரச வாழ்விற்கும் குடிமக்களைக் காக்கும் பொருட்டும் பெரும்பொருளைச் செலவழிக்க வேண்டி இருக்கிறது. அதாவது அயல்நாட்டார் தம் நாட்டை தாக்காமலிருக்க நாட்டு எல்லைகளைப் பாதுகாக்கப் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. பாதுகாவலர்களையும், பாதுகாப்பு ஆயுதங்களையும் உருவாக்கப் பொருள் தேவை என்பதால் செலவிடுவதற்குப் பொருள் தேடவும், தேடியவற்றைக் காத்தலும், காத்தவற்றை முறையாக வகுத்தலும் அரசனுடைய தலையாய பணிகளாகும். இத்தகைய பணிகளை,
  
இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்லது அரசு

- - - (குறள் 385)
  
செய்க பொருளைச் செறுநர் செருக்குஅறுக்கும்
எஃகு அதனின் கூரியது இல்

- - - (குறள் 759)

 உறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த்
தெறுபொருளும் வேந்தன் பொருள்

- - - (குறள் 756)

முதலிய குறள்களில் கூறுகிறார்.

இவ்வாறு பலப் பணிகளில் சிறந்து நல்லமுறையில் நீதி வழுவாமல் ஆட்சிபுரியும் மன்னனை வள்ளுவர்,

 முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப் படும்

- - - (குறள் 388)

என இறைவனோடு கருதப்படுவான் (சமமாக) என்பதை உணர்த்தும்போது வள்ளுவரே ஓர் அரசியல் அறிஞராக இங்குச் செயல்படுவதை உணரமுடிகிறது.

அறிஞர் ரஸ்கின் என்பார் புத்தகத்திற்கு இப்படி வரையறை தருவார். ''எந்த புத்தகங்களாக இருந்தாலும் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே இருப்பவை; அழியாப் புகழ் பெற்று என்றுமே சிறந்து விளங்குபவை'' (All books are divisible into two classes, the books of the hour, the books of all time). இவர்தம் கூற்று வள்ளுவரின் திருக்குறளுக்குப் பொருந்தி வருகிறது எனலாம்.

உலகமெனும் சமூகத்தின் பால் ஈடுபாடுகொண்டு மனித வாழ்க்கைக்குரிய உன்னதமான இயல்புகளை உரைப்பதாலேயே திருக்குறள் தரணியிலே உலகப் பொது மறையாய் இன்றும், என்றும் ஆளும் தகுதியினைப் பெற்றுத் திகழ்கிறது என்றால் அது மிகையாகாது!

திரு . விநாயகமூர்த்தி
தமிழ் மொழித்துறை
சென்னைப் பல்கலைக்கழகம்
சென்னை - 5

2004 ஆம் ஆண்டில் அண்ணா பல்கலைக்கழகமும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனமும் இணைந்து நடத்திய பன்னாட்டு திருக்குறள் மாநாட்டில் வாசிக்கப்பட்ட கட்டுரை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக