திருப்பரங்குன்றம், திருச்சீரலைவாய், திருவாவினன்குடி, திருவேரகம், குன்று தேராடல், பழமுதிர் சோலை என்னும் ஆறு தலங்கள் பற்றிய வருணனைகள் அடக்கம். இந்த ஆறும் படைவீடுகள் அல்ல. "ஆறுபடை வீடு, ஆறுபடைவீடு' என்று பேசுவதெல்லாம் பொருளறியாது மக்கள் வழக்கில் வந்து கலந்தனவே.
ஆற்றுப்படை என்னும் சொல்லின் பொருளறியாது, படை என்பதைப் படை வீடாக்கி ஆற்றுதலை "ஆறு' என எண்ணாக்கி ஆறுபடை வீடுகள் என்று சொல்லி வருகிறோம். குன்றுதோராடல் என்று அவற்றுள் ஒன்று. எல்லாக் குன்றுகளிலும் (மலைகளிலும்) முருகன் எழுந்தருள் ஆடல் புரிவதே அதன் பொருள். திருத்தணிகை என்பது நாமாகக் கற்பிதம் செய்து கொள்ளுவதேயாம். அவ்வாறே திருவேரகம், சாமிமலையைக் குறிப்பதாகச் சொல்லுவதும் நம் விருப்பினால் ஆனதேயாம்.
படைவீடு என்றால் பாசறை. மன்னர்கள் பகை நாட்டின் மீது படை எடுத்துச் செல்லுங்கால் இடையில் இளைப்பாற அமைக்கப்படுவதே படை வீடு அல்லது பாசறை. இப்போதைய வழக்குத் தமிழில் "முகாம்' என்றும் சொல்லலாம். அந்த வகையில், முருகப் பெருமான் சூரனை அழித்திடப் போருக்குப் புறப்பட்டபோது, திருச்செந்தூரில் படை வீடு அமைத்ததாகக் கந்தபுராணம் சொல்லுகிறது. மற்ற தலங்களுக்கும் படை வீட்டுக்கும் தொடர்பு இல்லை.
ஆற்றுப்படை என்னும் சொல்லின் பொருளறியாது, படை என்பதைப் படை வீடாக்கி ஆற்றுதலை "ஆறு' என எண்ணாக்கி ஆறுபடை வீடுகள் என்று சொல்லி வருகிறோம். குன்றுதோராடல் என்று அவற்றுள் ஒன்று. எல்லாக் குன்றுகளிலும் (மலைகளிலும்) முருகன் எழுந்தருள் ஆடல் புரிவதே அதன் பொருள். திருத்தணிகை என்பது நாமாகக் கற்பிதம் செய்து கொள்ளுவதேயாம். அவ்வாறே திருவேரகம், சாமிமலையைக் குறிப்பதாகச் சொல்லுவதும் நம் விருப்பினால் ஆனதேயாம்.
சாமி மலைக் கோவில் கட்டுமலை. அஃதாவது இயற்கையாய் அமைந்த மலையன்று. மனிதர்கள் கற்களை அடுக்கிக் கட்டிய மலை. பல்லவர் காலத்திலிருந்தே (நான்காம் நூற்றாண்டின் பின்) கற்கோவில்கள் தமிழகத்தில் எழுப்பப்பட்டன. சங்க நூல்களில் மிகவும் பழமை வாய்ந்தது திருமுருகாற்றுப்படை என்பதை அதன் நடை கொண்டறியலாம். ஆதலின் அப்போது (முதல் நூற்றாண்டில்) கட்டுமலை இருந்திருக்குமா என்பது ஐயமே.
ஆறுபடை வீடு என்னும் "வழக்கு' திருமுருகாற்றுப்படையைக் கொண்டே சொல்லப்பட்டு வருகிறது. ஆற்றுப் படைக்கும் ஆறுபடை வீட்டுக்கும் எந்தத் தொடர்புமில்லை.
மற்றொரு செய்தி - கமுக்கமாகச் (இரகசியமாக) செயற்பட்டு வஞ்சகம் செய்வதை ஐந்தாம்படை வேலை செய்துவிட்டான் என்று சொல்லி வருகிறோம். எப்படி வந்தது இது? மன்னர்களின் படை நான்கு. அவை: தேர்ப்படை, யானைப்படை, குதிரைப் படை, காலாட்படை. (இந்நாளில் வான்படை, கடற்படை, தரைப்படை என மூன்றே) மேற்சொன்ன நான்கு படைகளும் நேரடியாக எதிர்ப்பட்டுத் தாக்கும். இப்படி நேர்முகமாகத் தாக்காமல் மறைமுகமாக வேலை செய்பவர்கள் (அரசியலில்) ஐந்தாம் படை என இழிவாகக் கருதப்படுகிறார்கள்.
நூத்தி முப்பத்து மூனு
நூற்று முப்பத்து மூன்று என்று சரியாகச் சொல்ல வேண்டியதை இப்படி "நூத்தி முப்பத்தி மூனு' என்று பேசுகிறோம். நூற்று - முப்பத்து - மூன்று என இலக்கணமாகச் சொல்லாது போயினும் நூத்தி முப்பத்து என்று "உ' வை "இ' ஆக்காமல் முப்பத்து மூணு என்றாவது சொல்லலாமே.
உள்ளம் தோய்ந்த உவகையுடன் நன்றி
இந்தத் தொடரை இன்னும் பல கிழமைகள் (வாரங்கள்) தொடர்ந்து எழுதிடலாம். ஆயினும் எதற்குமோர் எல்லை வேண்டுமன்றோ? கோவையில் நடைபெற்ற செம்மொழி மாநாட்டின் ஆய்வரங்கில், "ஊடகங்களில் தமிழ்ச் சிதைவுகள்' என்னும் தலைப்பில் ஆற்றிய உரையைக் கேட்டுவந்த நம் தினமணி ஆசிரியர், அரங்கில் உரைத்த கருத்துகளை விரிவாகத் தினமணியில் தொடர்ந்து எழுதுமாறு வேண்டினார்கள்.
"கரும்புத் தின்னக் கூலியா?' நமக்குப் பெருமகிழ்ச்சியளித்தது இவ்வாய்ப்பு.
"அறிவோம் அருந்தமிழ்' என்று வினா - விடை வடிவில் இலக்கியத் திங்கள் ஏடு ஒன்றிலும் தொடர் (2006) எழுதியுள்ளோம். பொதிகைத் தொலைக்காட்சியில் "தவறின்றித் தமிழ் பேசுவோம்' என்னும் தலைப்பில் (புதன்தோறும்) உரையாற்றினோம்.
ஆதலின் நமக்கு மிக உவப்பான ஒன்றை - காலமெல்லாம் பரப்புரை செய்கின்ற கருத்தை எழுதிடப் பணித்த ஆசிரியர்க்கு மனம் தோய்ந்த மகிழ்ச்சியான நன்றியுரைக்கிறோம். இத்தொடர் தொடங்கிய போதிருந்தே பல்வேறு ஊர்களிலிருந்தும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாராட்டிய அறிஞர்கள், தமிழன்பர்கள், ஐயம் வினவித் தெளிவு பெற்றவர் அனைவர்க்கும் நன்றி.
(நிறைவு பெற்றது)
நன்றி – தினமணி கதிர்
அருமையான விளக்கங்கள் ஐயா.நீங்கள் நூலாகவும் வெளியிட கேட்டுக் கொள்கிறேன். கண்டிப்பாக இனி வரும் காலங்களில் தமிழின் மீது ஆராய்ச்சிகள் பல தொடங்கும். அப்பொழுது தங்களை போன்றோரின் இச் செய்திகள் உதவும். நன்றி ஐயா.
பதிலளிநீக்கு