தமிழில் வழங்கும் வடமொழி இலக்கணம்!
வடமொழிச் சந்திகள்:
÷தமிழில் பல வடமொழித் தொடர்கள் வந்து வழங்குகின்றன. அவை பெரும்பாலும் அவ் வடநூல் புணர்ச்சியையே பெறும். தமிழில் வரும் வடமொழித் தொடர்களைப் பிழையின்றி எழுத இவற்றைத் தெரிந்து கொள்வது நன்று.
÷புணர்ச்சியை வடநூலார், "சந்தி' என்பர். தமிழில் தீர்க்க சந்தி, குண சந்தி, விருத்தி சந்தி என்னும் மூன்று வடமொழிச் சந்திகள் வந்து வழங்குகின்றன. மிகுதியாக வழங்குபவை முதலிரண்டு சந்திகளே. இச்சந்தி முறை வடசொற்களுக்கே உரியது என்றறிக.
1. தீர்க்க சந்தி
தீர்க்க சந்தி மூன்று வகையாக வரும்.
(1) நிலைமொழியீற்றில் "அ' அல்லது "ஆ' இருந்து வருமொழி முதலில் "அ' அல்லது "ஆ' வந்தால் நிலைமொழியில் உள்ள உயிரும் வருமொழியில் உள்ள உயிரும் ஆகிய இரண்டும் கெடச் சந்தியில் ஓர் "ஆ' தோன்றும்.
("ஆ' தோன்றுதல்)
குண+அனுபவம் = குணானுபவம்
சர்வ+அதிகாரி = சர்வாதிகாரி
அமிர்த+அஞ்சனம் = அமிர்தாஞ்சனம்
வேத+ஆகமம் = வேதாகமம்
சேனா+அதிபதி = சேனாதிபதி
குறிப்பு: பால்+அபிஷேகம் = பாலபிஷேகம். இத்தொடரைப் பாலாபிஷேகம் என்றெழுவது தவறு.
(2) நிலை மொழியீற்றில் "இ' அல்லது "ஈ' இருந்து வருமொழி முதலில் "இ' அல்லது "ஈ' வந்தால், அவ்விரண்டும் கெட ஓர் "ஈ' தோன்றும்.
("ஈ' தோன்றுதல்)
கவி+இந்திரன் = கவீந்திரன்
கிரி+ஈசன் = கிரீசன்
மஹீ+இந்திரன் = மஹீந்திரன்
நதீ+ஈசன் = நதீசன்
(3) நிலைமொழியீற்றில் "உ' அல்லது "ஊ' இருந்து வருமொழி முதலில் "ஊ' வந்தால், அவ்விரண்டும் கெட ஓர் "ஊ' தோன்றும்.
("ஊ' தோன்றுதல்)
குரு+உபதேசம் = குரூபதேசம்
சுயம்பு+ஊர்ஜிதம் = சுயம்பூர்ஜிதம் (சிவநிலை)
2.குண சந்தி
(1) நிலைமொழியீற்றில் "அ' அல்லது "ஆ' இருந்து வருமொழி முதலில் "இ' அல்லது "ஈ' வந்தால், அவ்விரண்டும் கெடச் சந்தியில் "ஏ' தோன்றும்.
("ஏ' தோன்றுதல்)
ராஜ+இந்திரன் = ராஜேந்திரன்
தேவ+இந்திரன் = தேவேந்திரன்
மகா+ஈஸ்வரன் = மகேஸ்வரன்
யதா+இச்சை = யதேச்சை (மனம்போன போக்கு)
கங்காதர+ஈஸ்வரர் = கங்காதரேஸ்வரர்
2.நிலைமொழியீற்றில் "அ' அல்லது "ஆ' இருந்து வருமொழி முதலில் "உ' அல்லது "ஊ' வந்தால், அவ்விரண்டும் கெடச் சந்தியில் ஓர் "ஓ' தோன்றும்.
("ஓ' தோன்றுதல்)
சர்வ+உதயம் = சர்வோதயம்
சூரிய+உதயம் = சூரியோதயம்
சந்திர+உதயம் = சந்திரோதயம்
சக+உதரன் = சகோதரன் (உடன் பிறந்தவன்)
ஞான+உதயம் = ஞானோதயம்
3. விருத்தி சந்தி
(1) நிலைமொழியீற்றில் "அ' அல்லது "ஆ' இருந்து வருமொழி முதலில் "ஏ' அல்லது "ஐ' வந்தால், அவ்விரண்டும் கெட ஓர் "ஐ' தோன்றும்.
("ஐ' தோன்றுதல்)
லோக+ஏகநாயகன் = லோகைகநாயகன்
சர்வ+ஐஸ்வர்யம் = சர்வைஸ்வர்யம்
தேவதா+ஐக்கம் = தேவதைக்யம்
தேவதா+ஏகத்வம் = தேவதைகத்வம்
(2) நிலைமொழியீற்றில் "அ' அல்லது "ஆ' இருந்து வருமொழி முதலில் "ஒ' அல்லது "ஒள' இருந்தால், அவ்விரண்டு கெட ஓர் "ஒள' தோன்றும்.
("ஒள' தோன்றுதல்)
வந+ஓஷதி = வநெளஷதி
(காட்டு மூலிகை)
பரம+ஒளஷதம் = பரமெளஷதம்
மகா+ஓஷதி = மகெளஷதி
உபசர்க்கங்கள்
உபசர்க்கம் என்பது வடமொழியில் வினைச்சொல்லுக்கு முதலில் சேர்ந்து வருவது. தமிழ் உபசர்க்கங்கள் மிகமிகச் சில. வடமொழி உபசர்க்கங்கள் தமிழில் வந்து வழங்குகின்றன. அவற்றைத் தெரிந்து கொள்வது பிழையின்றி எழுதுவதற்கும் பொருள் தெரிந்து கொள்வதற்கும் பயன்படும்.
தமிழ் உபசர்க்கம்:
தலை, கை - தலை சிறந்த, கைக்கொள்.
வடமொழி உபசர்க்கம் - (இன்மைப்பொருள் தருவன):
அப, அவ, நிஷ், நிர், வி.
அப = அபகீர்த்தி
அவ = அவமானம்
நிஷ் = நிஷ்காரணம், நிஷ்காமிய கர்மம்
வி = விரக்தி (ரக்தி-பற்று; விரக்தி-பற்றின்மை)
பற்பல பொருள் தருவன:
அதி - மேல், மிகுதி = அதிரூபம், அதிவிநோதம்
அதோ - கீழை = அதோமுகம், அதோகதி
அநு - பின், கூட = இராமாநுஜன், அநுகூலம்
அபி - மிகுதி = அபிவிருத்தி
உப - துணை = உபகரணம் (துணைக்கருவி)
கு - அற்ப, வீண், இழிவான = குக்கிராமம், குதர்க்கம், குலேசன்.
சக - கூட = சகவாசம்
சம் - கூட = சம்பந்தம்
சம் - நல்ல = சம்பாஷணை
சன், சு - நல்ல = சன்மார்க்கம், சுமதி.
துர் - கெட்ட = துர்க்குணம், துர்மந்திரி, துராலோசனை (துன்மந்திரி, துன்மார்க்கம் என்பவை தவறுகள்).
பரி - முழுதும் = பரிபூரணம், பரிபாலனம்.
பிரதி - பதில், திரும்ப = பிரதியுபகாரம், பிரதிபிம்பம்.
வி - வேறு, மேலான = விதேசி, விநாயகன் (விநாயகன்-மேலான நாயகன்) வினாயகன் என்று எழுதுவது தவறு).
தந்திதாந்த நாமங்கள்
வடமொழியிலுள்ள "தந்திதாந்த நாமம்' தமிழ் மொழியில் வந்து வழங்குகின்றது. தந்திதாந்த நாமம் என்பது, பெயரினின்று தோன்றிய பெயர் (தத்+ஹித+அந்த+நாமம்).
1. முதலில் அகரத்தையுடைய சொற்கள் ஆகாரமாகத் திரிந்து வரும்.
தசரதன் - தாசரதி (தசரதன் மகன்-இராமன்)
பகீரதன் - பாகீரதி-கங்கை (பகீரதனால் கொண்டு வரப்பட்டது).
பரதன் - பாரதம் - இந்தியா (பரதனால் ஆளப்பட்டது பாரதம்)
2. முதலில் ஆகாரத்தையுடைய சொற்கள் முதல் திரியாமலேயே வரும். சாரதி - சாரத்யம்.
3. முதலில் இகர ஈகாரத்தையுடைய சொற்கள் ஐகாரமாகத் திரிந்து வரும்.
மிதிலா - மைதிலி (சீதை)
தீரம் - தைர்யம்
4. முதலில் உகர ஊகாரத்தையுடைய சொற்கள் ஒüகாரமாகத் திரிந்து வரும்.
சுகம் - செளக்யம்
சுந்தரம் - செளந்தர்யம்
சூரம் - செளர்யம்
5. முதலில் ஏகாரத்தையுடைய சொற்கள் ஐகாரமாகத் திரிந்து வரும்.
ஏகம் - ஐக்யம்
வேதம் - வைதிகம்
6. முதலில் ஓகாரத்தையுடைய சொற்கள் ஒüகாரமாகத் திரிந்து வரும்.
லோகம் - லெளகிகம்
கோசலம் - கெளசலை
நன்றி - தமிழ்மணி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக