சந்தானம்
எழும்பூர் ரயில் நிலையத்துக்குள் பிரவேசித்தார்.
நெஞ்சு வரையில் இன் செய்த
பேன்ட். நாலு வருடங்களுக்கு முன்பு
தள்ளுபடி விலையில் வாங்கிய அசல் லெதர்
பெல்ட். கையில் இருந்த தோல்
பைக்கு வயது ஆறு. அதில்
நிறையக் காகிதங்களும் பகவத் கீதையின் கையடக்கப்
பதிப்பும், ஷ§கர், பி.பி.,
கொலஸ்ட்ரால் மாத்திரைகளும் நிரம்பி இருந்தன. தவிர,
சின்ன சூட்கேஸ். வீட்டிலேயே ஃபில்டரில் தண்ணீர் பிடித்து இரண்டு
பாட்டில்களும் மனைவி கட்டித் தந்த
நான்கு சப்பாத்திகளும் மூன்று வாழைப் பழங்களும்
பிளாஸ்டிக் கேரி பேக்கில் தனியாக
இருந்தன. செல்போனை முன் ஜாக்கிரதையாக ஃபுல்
சார்ஜ் போட்டு, அதற்குப் பிறகும்
அரை மணி நேரம் சார்ஜரிலேயே
வைத்திருந்து கொண்டுவந்து இருக்கிறார். தவிர, காற்றுத் தலையணையும்,
குளிர் அடித்தால் போர்த்திக்கொள்ள கம்பளி சால்வையும் சூட்கேஸில்
இருக்கின்றன. சென்னையில் இருந்து மதுரை ஒரு
ராத்திரிதான். இருந்தாலும், பயணம் குறித்து ஒரு
வாரம் திட்டமிடும் மனிதர் சந்தானம். எதிலும்
ஒரு முன் யோசனை, முன்
தயாரிப்பு, முன் திட்டமிடல் என்று
எதிர்காலம் குறித்த ஜாக்கிரதை மற்றும்
பதற்றத்துடன் எப்போதும் அடுத்த ஒரு மணி
நேரத்திலேயே வாழ்கிறவர்.
ரயில் திண்டுக்கல் ஸ்டேஷனில் நிற்கும்போது, சந்தானத்தின் மனம் மதுரையில் இருக்கும்.
எக்மோரில் கிளம்பும்போது, செங்கல்பட்டில் ரயில் நிற்கும்போது டீ
குடிப்பது குறித்துத் திட்டமிட்டு, சில்லறைகளைச் சேகரிக்கிற ஆயத்தவாதி.
திட்டப்படி
வெகு சீக்கிரம் பிளாட்ஃபாரத்துக்கு வந்தாயிற்று. ரிசர்வேஷன் சார்ட் ஒட்டப்பட்டு இருந்த
நோட்டீஸ் போர்டை வைத்த கண்
வாங்காமல் பார்த்துவிட்டு, ‘எஸ் 3’ கோச்சுக்கு வந்து
பெட்டியில் ஒட்டியிருந்த சார்ட்டையும் செக் பண்ணினார். பெயர்,
வயது, பாலினம் எல்லாம் சரியாக
இருந்தபோதும் பி.என்.ஆர்.
நம்பரும் சரியாக இருக்கிறதா என்று
பார்த்துக்கொண்டார். பிறகுதான் பெட்டிக்குள் ஏறினார். இவருக்கு லோயர் பர்த். தனது சூட்கேஸைக் காலுக்கு
அடியில் தள்ளி செயின் போட்டுக்
கட்டிவிட்டு, தோல் பையை மடியிலும்
கேரிபேக்கை அருகிலும் வைத்துக்கொண்டு அமர்ந்தார். ஓரிரு முறை மூச்சுவிட்ட
பின், செல்போனை எடுத்து டயல் செய்து
பேசினார்.
”ம்.
வந்தாச்சு. ரயில்ல ஏறிட்டேன்… ஒண்ணும் பிரச்னை இல்லை.
சாரு என்ன பண்றா? என்னது… டி.வி-யை ஆஃப்
பண்ணிட்டு பிரிப்பேர் பண்ணச் சொல்லு. ஓஹோ… அவ அப்படித்தான் சொல்லுவா. சின்னக் கழுதை. வெளி
உலகம் என்ன தெரியும் அவளுக்கு?
இது காம்பெடிட்டிவ் வேர்ல்டு மரகதம். லட்சுமணன் பையன்
கதை தெரியும்ல உனக்கு? 87 பெர்சன்ட் வாங்கியும் வேலைக்கு ஆகலை…’
மறுமுனை
ஏதோ புலம்பியது.
‘நான்
என்ன சொல்றேன்னா ‘சூப்பர் ஸிங்கர்’ல ஜெயிக்கிறவங்க வீடு
வாங்கிட்டுப் போயிருவாங்க. பாக்குற இவளுக்கு என்னா
கிடைக்கும்? நோ… நோ… இட்ஸ் நாட் டைம்
பாஸ். இட்ஸ் கில்லிங் தி
டைம். முன்னாடி மாதிரி லைஃப் இப்பல்லாம்
ஈஸி கிடையாதுடி… புரியுதா? அவளைப் படிக்கச் சொல்லு.
நான் நாளன்னைக்குக் காலையில வந்துருவேன். ஸோ,
டிபனுக்கு சேர்த்துப் போட்டுரு. வெச்சிர்றேன்.’
நாளை மறுநாள் டிபனுக்கு மனைவியையும்
அடுத்த மாதம் ஏதோ ஒரு
தேர்வுக்கு மகளையும் தயார்படுத்திய ஆசுவாசத்தில் நிமிர்ந்தவரை, எதிரே வந்து அமர்ந்தவர்
பார்த்துப் புன்னகைத்தார். அவருக்கும் இவர் வயதுதான் இருக்கும்.
ஆனால், கொஞ்சம் இளமையாகத் தோன்ற
முயற்சித்து… டி-ஷர்ட் எல்லாம் போட்டு
இருந்தார். அவரது நேரடிப் புன்னகையைப்
பார்த்து, இவரும் பதில் புன்னகையைச்
சிந்தினார்.
‘எங்க
சார் மதுரையா?’
‘ஆமா
சார்.’
புதியவர்
பனியனுக்குள் ஊதினார் ”ரொம்ப வேர்த்து ஊத்துதுல்ல?’
”ஆமா.
இப்பல்லாம் சென்னையில எல்லா மாசமும் வேர்க்குது.
என்னடா இப்படி
வெயில் அடிக்குதுன்னா செகண்ட் சம்மர்னு என்னமோ
சொல்றான்!’ என்றபடி சந்தானம் எழுந்தார்.
‘கொஞ்ச
நேரம் காத்தாட வெளியில நிக்கணும்.’
‘ஆமா
சார்…’ என்றபடி புதியவரும் இயல்பாக
வெளியே வர, இரண்டு பேரும்
பிளாட்ஃபார்மில் வந்து நின்றனர்.
‘நீங்களும்
மதுரைக்கா?’ என்றார் சந்தானம்.
‘இல்ல
சார். என் டாட்டர் போறா.
நான் செண்ட் ஆஃப் பண்ண
வந்தேன். ஐயம் சிவநேசன்… பி.டபிள்யூ.டி-ல வொர்க் பண்றேன்.
செக்ஷன் ஆபீஸர்.’
‘நான்
சந்தானம்…
போஸ்டல் டிபார்ட்மென்ட்ல வொர்க் பண்ணேன். தர்ட்டி
ஃபைவ் இயர்ஸ் அதுல குப்பை
கொட்டியாச்சு. ரெண்டு வருஷம் முன்னால வி.ஆர்.எஸ். வாங்கிட்டு,
தனியா ஒரு ஏஜென்ஸி நடத்தறேன்.
ஃபார்மசூடிகல்ஸ் அண்ட் காஸ்மெடிக்ஸ். ரீ-டெய்லாவும் சேல்ஸ் பண்றோம். பெர்ஃப்யூம்ஸ்,
ஹேர் டை, லோஷன் அது
இதுனு…’
‘அப்படியா!
வெரி குட்.’
”புதுசா
ஒரு பெர்ஃப்யூம் வந்திருக்கு. ஃபுல் அண்ட் ஃபுல்
நேச்சுரல் ஃப்ளவர்ஸை எக்ஸ்ட்ராக்ட் பண்ணித் தயார் பண்ணது.
ட்ரை பண்றீங்களா?’
‘எதுக்கு
சார்? வயசாச்சு…’ என்று நெளிந்தார் சிவநேசன்.
‘யார்
சொன்னது? இந்த டி-ஷர்ட்ல
நீங்க ரொம்ப யங்கா இருக்கீங்க.
உங்க போன் நம்பர் குடுங்க
சார். என்னோட நம்பரைத் தர்றேன்.
ஃப்ரீயா இருக்கும்போது கால் பண்ணுங்க. நானும்
பேசறேன்.’
சிவநேசனிடம்
வற்புறுத்தித் தனது நம்பரைக் கொடுத்த
சந்தானம், அவர் நம்பரைக் கேட்க,
அவர் லேசான தயக்கத்துடன் தன்
நம்பரைச் சொல்லிவிட்டு, ‘எக்ஸ்கியூஸ் மீ’ என்று நாகரிகமாக சந்தானத்திடம்
இருந்து விலகி, ஜன்னல் ஓரம்
அமர்ந்து இருந்த தன் மகளிடம்
சென்றார்.
‘யாருப்பா
அது… தெரிஞ்சவரா?’
‘ம்ஹூம்… இப்பதான்
பாத்தேன். தெரியாத்தனமா ஸ்மைல் பண்ணிட்டேன். பிடிச்சிக்கிட்டாரு…’
‘போன்
நம்பர் எல்லாம் குடுத்தீங்க. நான்
கவனிச்சுக்கிட்டுத்தானே இருந்தேன்.’
‘ம்… அவரோட
நம்பரைக் குடுத்துட்டு என் நம்பரைக் கேக்கறாரு.
கொஞ்சம்கூட விவஸ்தையே இல்லாத ஆளா இருப்பார்
போலிருக்கு. பாத்து அஞ்சு நிமிஷத்துல
என்கிட்ட அவரோட பெர்ஃப்யூமை விக்கப்
பாக்கறாரு… இம்சை.’
அவள் சிரித்தாள்.
‘சரிம்மா
வித்யா. டிரெயின் கிளம்பிரும். பத்திரமாப் போ. நான் கிளம்பறேன்.
இன்னும் கொஞ்ச நேரம் இருந்தா,
அந்த ஆள் இங்க வந்து
சேல்ஸை ஆரம்பிச்சாலும் ஆரம்பிச்சிருவார்.’
சரியாக
அந்த நிமிடத்தில் சந்தானம் அவர்களைக் குறிவைத்து நகரத் தொடங்க… அவள், ”நம்மைப் பாத்துதான்
வராரு… டேஞ்சர். கிளம்பிருங்க” என்று சிரித்தபடி எச்சரிக்க,
சிவநேசன் பை சொல்லிவிட்டு எதிர்த்திசையில்
நகர, ரயில் கிளம்புவதற்கான சத்தத்தை
ஒலிக்க, வேறு வழி இன்றி
சந்தானம் ரயிலில் ஏறிக்கொண்டார். வித்யா
இருந்த சீட்டுக்கு அருகே வந்து நின்று
புன்னகை புரிய முயன்றார். அபாயம்
உணர்ந்த வித்யா அவருக்கு வாய்ப்பே
தராமல், மொபைல் போனில் ஒயர்
மாட்டி காதில் ஸ்பீக்கரைப் பொருத்திக்கொண்டு,
கண்களை இறுக மூடிக்கொண்டாள். சற்று
நேரம் அசடு வழிய நின்றுவிட்டு,
தன் இருக்கைக்கு வந்து பொட்டலத்தைப் பிரித்து
சப்பாத்திகளைத் தின்று தண்ணீர் குடித்தபடி
அந்தப் பெண் ணைக் கவனித்தார்.
சாருவின் வயதுதான் இருக்கும்… வசீகரமான களையான முகம். கண்களை
மூடிப் பாடலை லயித்துக் கேட்கிறாள்.
கண் விழித்து நேராகப் பார்த்தாள் என்றால்
உன் அப்பாவின் ஃப்ரெண்டு என்று அறிமுகம் செய்துகொண்டு
பேசலாம். சன்ஸ்க்ரீன் லோஷனும் ஹேர் க்ரீமும்பற்றி
அவளிடம் சொல்லலாம்.
அவளோ சைடு லோயர் பர்த்தில்கால்
நீட்டியபடி கண் மூடி பாட்டுக்
கேட்டபடி இருந்தவள், திடீரென மெதுவான குரலில்
போனில் பேச ஆரம்பித்தாள்.
வண்டி தாம்பரத்தில் வேகம் குறைந்து நின்றது.
அவள் தொங்கிய ஒயரின் குட்டிப்
பித்தானை வாய் அருகில் பிடித்தபடி
யாருக்குமே கேட்காத மெதுவான குரலில்,
ஏதோ சொல்லியபடி பரபரப்பாக பிளாட்ஃபாரத்தைப் பார்த்தாள். யாரையோ தேடும் பார்வை.
ஆர்வத்துடன் தேடிய விழிகள் குறிப்பிட்ட
ஒரு நொடியில் பிரகாசித்தன. முகத்தில் மலர்ச்சியுடன் அவள் வாசலைப் பார்க்க,
ஒருவன் பெட்டியில் ஏறினான். முதுகில் பேக். அவன் காதிலும்
மொபைலின் ஹெட்போன். ஊசியாக இறங்கிய கிருதா,
சின்னச் சின்ன படிக்கட்டுகளாக வெட்டப்பட்டு
இருந்தது. காதில் கடுக்கன் போட்டு
இருந்தான். கீழ் இறங்கிய பேன்ட்.
அதில் கூலிங் கிளாஸை வேறு
மாட்டி இருக்கிறான். முழங்கையில் டாட்டூ. கழுத்து வெட்டப்பட்ட
பனியன். அதில் single again, but with
some experience என்று எழுதி இருந்தது. வந்தவன்
சற்றுத் தள்ளி இருந்த அப்பர்
பர்த்தில் தன் பேக்கை எடுத்துப்
போட்டுவிட்டு நேராக அவளிடம் போய்
அமர்ந்துகொண்டான்.
‘ஹை…’
‘சாப்டியா?’
– இது அவள்.
‘ம்… ஸ்டேஷனுக்கு
யார்கூட வந்தே?’
‘அப்பா
வந்திருந்தாரு.’
அவன் வெகு இயல்பாக நெருங்கி
அமர்ந்து, அவளது கையை எடுத்து
தன் கையில் வைத்துக்கொண்டான். இருவரும்
ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரித்துக்கொள்ள,
சந்தானத்துக்குப் படபட என்று வந்தது.
அடிப்பாவி! பூனை மாதிரி இருந்தாள்… பாவம்
அந்த அப்பன். எழும்பூரில் அப்பனுக்கு
டாட்டா காட்டி அனுப்பிவிட்டு, தாம்பரத்தில்
லவ்வரை பிக்-அப் பண்ணுகிறாளே.
அக்கிரமமாக அல்லவா இருக்கிறது?!
டி.டி.இ. வந்தார்.
சந்தானத்திடம் டிக்கெட் செக் பண்ணிவிட்டு அவர்களிடம்
செல்ல, சந்தானம் பரபரப்பானார். அவர் அந்த இரண்டு
பேரிடமும் போய் அமர, அவள்
தனது டிக்கெட்டை எடுத்து நீட்டினாள். அவர்
பார்த்துவிட்டுத் திருப்பிக் கொடுத்துவிட்டு அவனைப் பார்க்க, அவன்
தனது டிக்கெட்டை எடுத்துக் கொடுத்தான்.
‘உங்க
பர்த் அங்கே இருக்கு…’ என்றார் டி.டி.இ.
அவன் பதில் சொல்லும் முன்
அந்தப் பெண் ‘வீ ஆர்
ஃப்ரெண்ட்ஸ் சார். பேசிட்டு வர்றோம்” – என்று
சொல்ல, டி.டி.இ.
ஒரு விநாடி இரண்டு பேரையும்
பார்த்துவிட்டு மற்ற பயணிகளிடம் செல்ல… சந்தானத்துக்கு
ரத்த அழுத்தம் அதிகரித்தது. தண்ணீர் பாட்டிலை எடுத்துக்
குடித்தார். பாத்ரூமுக்குப் போய் வந்தார். அவர்
வரும்போது அவர்கள் இருவரும் சைடு
பர்த்தில் சப்பணம் போட்டு அமர்ந்துகொண்டு,
தங்கள் கைகளைக் கோத்தபடி பேசிக்கொண்டு
இருந்தார்கள்.
வண்டி செங்கல்பட்டைத் தாண்டவும் பெட்டியின் முக்கால்வாசி விளக்குகள் அணைக்கப்பட்டு, மெல்லிய ஒளியில் எல்லோரும்
தூங்கத் தொடங்கினார்கள். ஏனோ சந்தானத்துக்குத் தூக்கம்
வரவில்லை. நாட்டில் என்னவெல்லாம் நடக்கிறது? 20 வயசுப் பெண்ணுக்கு இவ்வளவு
துணிச்சலா? பெத்த தகப்பன் லூஸு
மாதிரி கூடவே வந்து பத்திரமாக
வண்டி ஏத்திவிட்டுப் போறான். இந்த ரெண்டு
பேரும் ஏற்கெனவே பக்காவாக பிளான் பண்ணி இருக்கிறார்கள்.
ஒரே பெட்டியில் தனித்தனியாக ரிசர்வ் பண்ணி… இவன் தாம்பரத்தில் ஏறிக்கொண்டு… என்ன ஓர் அயோக்கியத்தனம்? என்
காலத்தில் இவன் வயதில் நான்
வயசுப் பெண்களிடம் பேசியதே கிடையாது. ஆனால்,
இப்போது பெண் பிள்ளைகளே இந்த
மாதிரி அலைகிறார்களே? எல்லாம் இந்த மொபைல்
சனியனால் வந்த வினை. நாடு
கெட்டுக் குட்டிச்சுவராகிக்கொண்டு இருக்கிறது.
ஆற்ற மாட்டாமல் படுத்தவாறே தலையைத் தூக்கி அவர்களைப்
பார்த்தார். இப்போது அவன் கால்
நீட்டி அமர்ந்து இருக்க, அவள் அவனை
ஒட்டி அமர்ந்து தோளில் சாய்ந்து இருந்தாள்.
இருவரும் ஒரு சால்வையைப் போர்த்திக்கொண்டு
இருந்தனர். ஒரே ஹெட் போனை
ஆளுக்கு ஒரு காதில் ஒன்றாகச்
சொருகி ஒரே பாட்டைக் கேட்டபடி
கண் மூடி அவர்கள் பயணிக்க,
சந்தானம் மறுபடி பாத்ரூம் போய்வந்தார்.
மறுபடி தண்ணீர் குடித்தார். படுத்தார்.
தூக்கம் பிடிக்காமல் மறுபடி அவர்களைப் பார்த்தார்.
அவர்கள் அதே நிலையில் தூங்கிக்கொண்டு
இருக்க, இவருக்குச் சுத்தமாகத் தூக்கம் வரவில்லை.
காலையில்
திண்டுக்கல்லில் வண்டி நின்றது. இவர்
கண்கள் எரிய டீ வாங்கிக்
குடித்தார். அந்தப் பையன் பையை
எடுத்துக்கொண்டு இறங்கினான். அவளுக்கு டாட்டா காட்டினான். ரயில்
கிளம்பியது. இப்போது அவர் அந்தப்
பெண்ணைப் பார்த்தார். அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டு, ஒருக்களித்துப்
படுத்து இருந் தாள். வந்த
கோபத்துக்கு விறுவிறுவென சென்று வாஷ்பேசினில் பல்
விளக்கத் தொடங்கினார். காறிக் காறித் துப்பினார்.
மதுரையில்
வேலை முடிந்து சென்னை திரும்பிய பிறகும்
அந்த விஷயம் அவரைத் தொந்தரவு
செய்துகொண்டே இருந்தது. மனசுக்குள் ஒரே உறுத்தல். திடீர்
என்று அந்த யோசனை தோன்றியது.
அட, அந்த சிவநேசனின் நம்பர்தான்
தன்னிடம் இருக்கிறதே. பேசாமல் அவருக்கு போன்
செய்து விஷயத்தைச் சொல்லி, பெண்ணைக் கண்டிக்கச்
சொன்னால் என்ன? வேகமாக டயல்
செய்தார்.
சிவநேசன்
மொபைலைப் பார்த்தார். ‘போச்சுடா! அந்த காஸ்மெடிக்ஸ் பார்ட்டி.
விட மாட்டான் போலிருக்கே’ என்று போனை எடுக்காமல்
இருந்தார்.
சந்தானம்
மறுபடி மறுபடி போன் போட,
சிவநேசனின் எதிரே இருந்த வித்யா
வியப்புடன் பார்த்தாள்.
‘ஏம்ப்பா
போனை அட்டென்ட் பண்ண மாட்டேங்கிறீங்க?’
‘ரெண்டு
நாளைக்கு முன்னால நீ மதுரை
போறப்ப எக்மோர்ல ஒரு அறுவை வந்தானே.
அந்தாளுதாம்மா. திருப்பித் திருப்பி அடிச்சுக்கிட்டே இருக்கான். இந்தா… நான் போனை மறந்துட்டுப்
போய்ட்டேன்னு எதையாவது சொல்லிச் சமாளி.’
அவர் போனை வித்யாவிடம் தர,
வித்யா போனை எடுத்துக்கொண்டு வெளியே
வந்தாள். ஆன் பண்ணியவள் ஹலோ
சொல்லும் முன், சந்தானம் படபட
என்று பேச ஆரம்பித்துவிட்டார்.
‘சார்… நாந்தான்
சந்தானம். டூ டேஸ் பேக்
நாம எக்மோர்ல பாத்தோமே ஞாபகம் இருக்கா? உங்க
பொண்ணை செண்ட் ஆஃப் பண்ண
வந்திருந்தீங்க. இப்ப ஏன் போன்
பண்ணேன்னா… உங்க பொண்ணைப் பத்தி ஒரு விஷயம்
சொல்லணும். ஷி இஸ் ச்சீட்டிங்
யூ. நீங்க போன பிறகு
தாம்பரத்தில் ஒரு பையன் ஏறினான்.
ரெண்டு பேரும்… ச்சே! எனக்குச் சொல்லவே
அசிங்கமா இருக்கு.’
பரபரப்புடன்
ஒரு பேருதவியைச் செய்கிற பெருமிதத்துடன் சந்தானம்
பேச, எதிர் முனையில் இருந்து
சுடச்சுட பதில் வந்தது.
”ஏன்
மிஸ்டர். பெரிய மனுஷனா நீ?
நான் எவன்கூட சுத்தினா உனக்கு
என்ன? இட்ஸ் நன் ஆஃப்
யுவர் பிசினஸ். எனி வே… வேலை மெனக்கெட்டு போன்
பண்ணிச்சொல்றியா? உனக்கும் எனக்கும் என்னய்யா சம்பந்தம்? உனக்கு ஏன் இந்த
வேலை? இனிமே இந்த மாதிரி
ஏதாவது போன் பண்ணா… உன்னைச் சும்மா விட
மாட்டேன். இடியட். வயசாச்சில்ல? புத்தி
இல்லையா? லூஸா நீ?’
போன் பட்டென்று கட் ஆனது.
சந்தானம்
அதிர்ந்துபோனார். அவரிடம் யாரும் இது
வரைக்கும் இப்படிப் பேசியது இல்லை. அவளா?
அந்த சின்னப் பொண்ணா இப்படி
மரியாதை இல்லாமல் பேசுகிறாள்? இல்லை… இல்லை. அவ சின்னப்
பொண்ணே இல்லை. சந்தானம் மனதுக்குள்
அவளைத் திட்டுவதற்குக் கெட்ட வார்த்தைகளைத் தேடினார்.
பேய் அறைந்த மாதிரி ஆகிவிட்ட
அவர் முகத்தைப் பார்த்து, அவருடைய மனைவி கேட்டாள்.
‘என்னாச்சுங்க?
மூஞ்சி ஒரு மாதிரியா இருக்கு.’
‘ஒண்ணும்
இல்லை.”
”மாத்திரை
போட்டீங்களா?’
‘ம்… எல்லா
எழவையும் போட்டாச்சு.’
‘ஏன்
எரிஞ்சு விழுறீங்க? சாரு இன்னிக்கு மதுரைக்குப்
போறா. ஸ்டேஷன்ல போய் அனுப்பணும்!’
சந்தானத்துக்குத்
திடுக் என்றது.
‘என்னது… மதுரைக்கா?’
சாரு அப்பாவை விநோதமாகப் பார்த்தாள்.
”என்னப்பா
மறந்துட்டீங்களா? மதுரை யுனிவர்சிட்டியில
செமினார். எங்க காலேஜ்ல இருந்து
அஞ்சு ஸ்டூடன்ட்ஸ் போறோம். போன வாரமே
சொன்னேனே மறந்துட்டீங்களா?’
இவருக்குச்
சட்டென்று நினைவு வந்தது.
‘ஓ!
ஆமாமா. அஞ்சு பேரும் ஒண்ணாத்தானே
போறீங்க? எந்த கோச்?’
‘இல்லப்பா.
மத்தவங்க எல்லாரும் வைகையில கிளம்பிட்டாங்க. நான்
மட்டும் தனியா பாண்டியன்ல போறேன்.
கோச் ‘எஸ் 5’-ப்பா.’
சந்தானத்தின்
முகம் சீரியஸ் ஆனது. மகளை
ஏற இறங்கப் பார்த்தார்.
‘என்ன
அவளை இப்படிப் பாக்கிறீங்க? உடம்புக்கு ஏதாவது பண்ணுதா?’ என்றாள்
மனைவி. இந்த மனுசனுக்கு என்னமோ
ஆயிருச்சு என்று உள்ளுக்குள் தோன்றியது
அவளுக்கு.
”அதெல்லாம்
ஒண்ணும் இல்லை. பிசினஸ்ல ஒரு
பிரச்னை. நான் சாயங்காலம் வெளியில
போயிருவேன். சாருவை நீ போய்
ரயில் ஏத்திவிட்டுரு.’
சாரு,
‘எதுக்குப்பா அம்மா? நான் என்ன
சின்னக் குழந்தையா? நானே போய்க்குவேன்’ என்று சொல்ல, இவர்
அவளை உற்றுப் பார்த்தார். ரொம்பவும்
அப்பாவி போலத்தான் இவள் முகமும் இருக்கிறது.
ம்ஹூம். அவள் காதில் மாட்டி
இருந்த போன் வயரை எரிச்சலுடன்
பிடுங்கினார். ”வீட்ல
இருக்குறப்பகூடவா இது?’
சாரு அவரைக் குழப்பத்துடன் பார்க்க,
அவர் கடுப்புடன் உள்ளே போனார்.
சாரு அம்மாவுடன் ஆட்டோவில் எக்மோர் கிளம்பிய அஞ்சாவது
நிமிஷம் சந்தானம் தனது ஸ்கூட்டரை எடுத்தார்.
தாம்பரம் நோக்கி விரைந்தார். ஸ்டாண்டில்
ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு, பிளாட்ஃபாரத்தை நோக்கி ஓடினார். பாலம்
ஏறி இறங்கியதில் மூச்சு வாங்கியது. நெஞ்சு
படபட என்று அடித்துக்கொண்டது. பாண்டியனின்
‘எஸ் 5’ எங்கு வரும் என்று
விசாரித்தார். சரியாக ‘எஸ் 5’ நிற்கும்
இடத்தில் நின்றுகொண்டார். ரயில் ஏறக் காத்திருந்த
பயணிகளின் மேல் பார்வையை ஓட்டினார்.
அவருடைய டென்ஷனை அதிகரிப்பதைப் போலவே
ஏழெட்டு இளைஞர்கள். ஒவ்வொருத்தனும் கிழிந்த ஜீன்ஸைப் போட்டுக்கொண்டு,
விநோதமாக கிருதாவும் தாடியும் வைத்திருந்தனர். எவனையும் பார்க்க அவருக்குச் சகிக்கவில்லை.
அதில் இரண்டு பேர் போனில்
சிரித்துச் சிரித்துப் பேசிக்கொண்டு இருக்க… சந்தானத்தின் இதயம் கன்னாபின்னா என்று
துடித்தது.
பாண்டியன்
கூவியபடி உள்ளே நுழைந்து, வேகம்
குறைந்து மூச்சுவிட்டு நின்றது. ‘எஸ் 5’ யூகித்த இடத்தில்
நிற்காமல் தள்ளிப் போய் நிற்க,
இவர் அதன் அருகே ஓடிப்போய்
மூச்சு வாங்கினார். கண்கள் சாருவைத் தேடின.
எங்கே அவள்? ஐயையோ! கீழே
இறங்குகிறாளே. அந்த போன் பேசியவன்
அவளை நோக்கிச் செல்ல, இவர் ஒதுங்கி
கோச்சின் மற்றொரு படிக்கட்டு அருகே
பதுங்கிக்கொண்டார். இறங்கிய சாரு அந்த
இளைஞனைத் தாண்டிப் போய் தண்ணீர் பாட்டில்
வாங்க, இளைஞன் பெட்டிக்குள் ஏறினான்.
சாரு தண்ணீர் வாங்கிக்கொண்டு இவர்
இருக்கும் பக்கமாக வர, இவர்
பதறிப்போய் பெட்டிக்குள் ஏறிக்கொள்ள, சாரு நேராக இவர்
நின்று இருந்த வாசல் அருகே
ஏறுவதற்கு வர… வேறு வழியின்றி சட்டென்று
பாத்ரூமுக்குள் நுழைந்து கதவைத் தாளிட்டுக்கொண்டார். மேல்
மூச்சு கீழ் மூச்சு வாங்கியது.
இதயம் படபடத்து வியர்த்து ஊற்றியது. பாத்ரூமின் நாற்றம் குடலைப் பிடுங்க,
அப்படியே சற்று நேரம் நின்றார்.
ஓரிரு விநாடிகளில் ரயிலின் பூம் சத்தம்
கேட்க, பதறிப் போய் பாத்ரூம்
கதவை வேகமாகத் திறக்க முயன்றார். டைட்டாக
இருந்தது. ‘ஐயோ!’ என்று தாழ்ப்பாளை
பலங்கொண்ட மட்டும் இழுத்தார். ரயில்
லேசாக நகரத் தொடங்கியதை உணர்ந்து
பதற்றம் அதிகரிக்க, உயிரைக் கொடுத்து தாழ்ப்பாளை
இழுக்க அது திறந்துகொள்ள… இவர் பாத்ரூமில் இருந்து
ரிலீஸ் ஆவதற்குள் ரயில் வேகம் எடுத்துவிட்டது.
இவருக்குத்
தலை சுற்றியது. என்னடா இது என்கிற
குழப்பத்துடன் பெட்டிக்குள் நோட்டம்விட்டார். ஏறிய இளைஞர்கள் அங்கங்கே
செட்டில் ஆகியிருந்தனர். சாரு தனது பர்த்தில்
படுத்து கண் மூடி இருப்பது
தெரிந்தது. அருகே யாரும் இல்லை.
எப்போதும்
அடுத்த ஒரு மணி நேரத்தில்
வாழும் சந்தானம் முதல் முறையாக அடுத்து
என்ன என்பது தெரியாமல் குழம்பி
நின்றார். நாக்கு வறண்டு தாகம்
எடுத்தது.
அவரை நோக்கி டி.டி.இ. வந்துகொண்டு இருந்தார்!
நன்றி
– விகடன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக