30/01/2012

மிதிபட…. – வண்ணதாசன்


உன்னை யாரு வரச் சொன்னாண்ணு வந்து நிக்க ? ‘ முத்து படுத்துக் கிடந்த ஜமுக்காளத்திலிருந்து அப்படியே சிகரெட்டோடு எழுந்து வந்த போது பொன்னுலட்சுமி வாசலிலேதான் நின்றாள். ஒரு வித மட்டி ஊதாக் கலரில் பெயிண்ட் அடித்த ஒரு கதவு சாத்தியிருக்க, கையில் சற்றுக் கனமாகத் தொங்குகிற பையுடனும் இன்னொரு கையில் ஊரிலிருந்து கொண்டு வந்திருக்கிற மண்ணெண்ணெய் ஸ்டவ்வுடனும் உள் நுழையச் சாத்தியமற்று அவள் வெளியிலேயே நிற்கும்படி ஆயிற்று.


தனியாய் இருட்டோடு இருட்டாய்ப் புறப்பட்டுப் பலவித மனக் குழப்பங்களோடு பஸ் ஸ்டாண்டில் வந்து இறங்கி, கடையில் போய் கேட்க, ‘ஸாருக்கு இன்று வார லீவுல்லாஎன்று சொன்னதைக் கேட்டதும் திக்கென்றிருந்தது. வீட்டில் உள்ளவர்கள் எல்லோரும்போதும் போதும் நீ அவன் கூடப் போய்க் குடித்தனம் போட்டதுஎன்று ஒரேயடியாகச் சொல்லி விட்டார்கள். அண்ணன் ஆபீசுக்குப் போய், கூட வர முடியுமா என்று கேட்கப் போனாள். கட்டுக் கட்டாகச் சாயந்திரப் பதிப்பு வெளியே போய்க் கொண்டிருந்தது. கேட்டில் உள்ள போர்டில் கூட அன்றையப் பதிப்பின் தலைப்புச் செய்திகள் அச்சடித்த்தாள் ஒட்டப் பட்டு விட்டது. ‘சேலத்துக்கு முதல் பரிசுஎன்று பெரிய எழுத்துக்களில் முதல் வரியும் இரண்டாம் வரியும் மடங்கியிருந்தன.

அண்ணன், உள்ளே போய்ப் பார்க்கையில், துடைத்துக் கொண்டிருந்த வேஸ்ட்டும் மசிக்கறையுமாகப் பிரும்மாண்டமான மிஷினுக்குப் பின்னால் இருந்து அவன் சற்று எரிச்சலோடுதான் வந்தான். இவளுடன் வாசலிலிருந்து வந்த கூர்க்கா சிரித்ததற்குப் பதில் சிரிப்புக் கூடச் சிரிக்கவில்லை. என்னமோ அவளை யாருக்கும் பிடிக்காமலேயே போய் விட்டது.

ஒழுங்காய் வேலைக்குப் போய் விட்டு வந்து கொண்டிருந்தவளை எல்லோருமாய்ச் சேர்ந்து, ‘இம்புட்டாவது கட்டிக்கிடுதேண்ணு சொல்லி ஒருத்தன் வரும் போது ரெண்டாம்தாரம் அது இதுண்ணு யோசிச்சா முடியாதுஎன்று சொல்லி விட்டார்கள். ‘கல்யாணம் முடிஞ்சு மூணு வருஷமாப் பிள்ளையில்லாமல் இப்பத்தான் உண்டாச்சாம். சின்ன உசிரு விழுந்தும் பெரிய உசிரு ஆயிடுச்சி போல். பாவம், இந்தப் பையனை பார்த்தால் ஏறு நெத்தியும் மீசையுமா சித்துப் போல இருக்கு. வயசு தெரியலை அப்படியொண்ணும்என்று இந்த அண்ணன் தான் சொன்னான். ‘இரண்டாம் தாரத்துக்கு என்ன இவ்வளவு யோசிக்கக் கிடக்கு. நம்ம சங்கரன் கோயில் பேச்சியம்மைச் சித்தி மூணாம் தாரமா வாக்கப்பட்டா, அதுக்குப் பிறகு மூணு ஆணும் மூணு பொண்ணும் பெத்தா, காரும் வண்டியுமா இப்ப போட்சா இருக்கா. ஒரு நேரத்துக்கு அது மாதிரி ஆகப்படாதுண்ணா இருக்குஎன்று இந்தக் கல்யாணத்திற்கு மத்தியஸ்தர் மாதிரி வந்த செவல் பிள்ளை சொன்னார்.

பொன்னுலட்சுமிக்கு ஒன்றும் பிடிக்கவில்லை. சின்ன வயசிலேயே அம்மாவைச் சாகக் கொடுத்து விட்டு எப்படி எப்படியோ, சரியில்லாத அப்பாவுடன் வளர்ந்து சீரழிந்து மாதம் நூற்றிருபது ரூபாய்ச் சம்பளம் என்கிற அளவுக்காவது முன்னிலைக்கு வந்திருக்கும் போது, மறுபடியும் இது என்ன என்றிருந்தது.

ஆனாலும் யார் சொல்லுக்கும் கட்டுப் படாமல் வேகவேகமாகக் கல்யாணம் ஆகி, கல்யாணம் ஆன நாளிலிருந்து இரண்டு மாதம் கூட ஒத்துப் போகாமல். தெருவில் நடந்து கொண்டிருக்கும் போதே ஜன்னல் வழி வந்து முன்னால் விழுகிற எச்சில் இலைபோல் எறியப்பட்டு விட்டது எல்லாம். யோசனை கேட்க அண்ணனையும் மதினியையும் தவிர ஆளும் கிடையாது. இத்தனை நாள் இங்கே இருந்ததற்கு அண்ணன் ஒன்றும் சொல்லவில்லை. இப்படி ஆபீஸைத் தேடி வந்து நான் ஊருக்குப் போகலாம்ணு பாக்கேன், என்று சொல்லும் போதும் ஒன்றும் பேசாமல் இருக்கிறான். ‘ஒத்தையில் புறப்பட்டுப் போயிடுவியா நீ. இப்ப பஸ் ஏறினாலும் கருகருத்த நேரமாயிடுமே போய்ச் சேருகிறதற்குள்ளே. கூட வந்து விட்டுட்டு வரட்டுமாஎன்று எதையும் சொல்லாமல் எரிந்து எரிந்து மட்டும் விழுந்தான்.

காலையில் எல்லாம் புறப்படணும்னு தோணலையா மூணு மணிக்குத்தான் யோசனை உதிச்சுதாக்கும். இங்கே வந்து நிக்கிதியே ஊருக்குப் போகணும்னு. அவன் அந்தால வாவாண்ணு ஆரத்தி எடுத்துக் கூட்டிக் கிட்டுப் போகப் போகிறானாக்கும். அப்பன் கிட்டே கேட்கணும் ஆத்தாக்கிட்டே கேட்கணும்பான். அண்ணன் பொண்டாட்டி கிட்டே யோசனை கேட்கணும்பான். இம்புட்டும் பத்தாம, மூத்தவடியா படத்துக்குப் படையல் வச்சுக் குறிகேட்கணும்பான். புத்தியை இரவல் கொடுத்துட்டு நிற்கிற மனுஷன்லா அவன்இப்படியே பேசிக் கொண்டு போனானே தவிர முடிவாக ஒன்றும் சொல்லவில்லை. எப்படியும் ஆகிறது என்றுதான் புறப்பட்டு வந்தான்.

வீட்டில் இருக்க வேண்டுமே என்ற யோசனையோடே, பஸ் ஸ்டாண்டிலிருந்து இரண்டு கையிலும் இரண்டு சாமான்களுடன் நடந்து, பஜாரிலிருந்து பரிந்து வெளிச்சக் குறைவான இந்தத் தெருவுக்குள் வந்து, இந்தத் தெருவின் முனையிலிருக்கிற சாராயக் கடையில் இருப்பானோ என்றும் யோசித்துக் கொண்டு, நாகஜோதி விலாஸ் மிட்டாய்க் கடைக்குச் சரக்குப் போட்டுக் கொண்டிருக்கிற அடுப்பிலிருந்து தக தகக்கிற வெக்கையும், தண்ணீர் வண்டியையும், கம்பிக் கட்டில் போட்டு வீட்டுக்கும் விறகுக் கடைக்கும் நடுவில் வளர்ந்து நிற்கிற பூவரச மரத்தடியில் யாரோ குப்புறப் படுத்திருக்கிற சோலை நாடார் காம்பவுண்டையும் தாண்டி. வாசலில் காயப் போட்டிருக்கிற தீப்பெட்டி டப்பாக் குவியலுக்கு ஒதுங்கி வந்து நிற்கிறவளையாரு வரச்சொன்னாஎன்று கேட்டால் எப்படியிருக்கும் ? கைவலியைத் தாங்காமல் சற்று இறக்கி வைப்பதற்காவது இவள் உள்ளே போக வேண்டும்.

ஒருச்சாய்ந்து சற்று பயத்துடனே அவள் உள்ளே நுழைந்து ஸ்டவ்வையும் பையையும் வைத்தாள். சைக்கிள் மேலும், கொடியிலும், அங்குமிங்கும் சொல்ல முடியாத புழுக்கத்துடன் செடிவாடை அடித்துக் கொண்டு அவனுடைய துணிகள் தாறுமாறாய்த் தொங்கின. மூன்று மாதத்திற்கு முன்னால் அவள், ‘பிடிக்கலைண்ணா ஊரிலே கொண்டி விட்டிருங்க ஒரேயடியா. கூட வச்சுக்கிட்டு இந்த இம்சை பண்ண வேண்டாம். தாங்க முடியலை மனுசிக்குஎன்று சொன்னதும், அவன்இதுதான் வழி, இந்தானைக்குப் போயிட்டுவா, நல்லதாப் போச்சுஎன்று கையைக் காட்டினதும் இவள் புறப்பட்டதுமான நேரத்தில் களைந்து போட்டிருந்த சேலையும் உள்பாடியும் அப்படியே கொடியில் கிடந்தது.

ஒங்கப்பனும் அண்ணனும் முந்திக்குப் பின்னாலேயே வருவான்களே. எங்கே காணோம். வாசல்ல நிண்ணு வாய் பார்த்துக்கிட்டிருக்காங்களா

ஒத்தையிலே போனேன். ஒத்தையிலே வந்திருக்கேன். ‘

இந்த வாயிலதானே தீய வைக்கணும் உனக்கு. எங்கம்மைகிட்டேயும் இந்த வாயடிதானே அடிச்ச உனக்குக் கொழுப்புட்டி. வேலைக்குப் போற கொழுப்பு. வேலையும் வேண்டாம் தாலியும் வேண்டாம்ணுதானே வீட்டில் கிடண்ணு தள்ளினேன். அப்படியும் திமிர் அடங்கலையே உனக்கு. ‘ இப்போது மட்டுமில்லை. ஆதியிலே இருந்து இதையேதான் சொல்கிறான். திமிர் கொழுப்பு என்று எதைச் சொல்கிறான் என்றும் பிடிபடவில்லை. கன்னம் ஒட்டி உலர்ந்து கிள்ளச் சதையில்லாமல்தான் இருக்கிறது உடம்பில்.

பொன்னுலட்சுமிக்கு துணிமணியிலிருந்து கிளம்பின வாடையை நிஜமாகவே தாங்க முடியவில்லை. அருவருப்புக்குச் சுளுக்கிய மூக்கைக் கட்டுப் படுத்த முடியவில்லை. இடது மூக்கும் இடது பக்க வாயும் குறுக்கே சரிந்து வலதுபுறம் போய்த் திரும்பியது மூச்சிழுப்புடன், இது நடந்தது ஒரு வினாடிக்குள்தான் என்றாலும் முத்துவுக்குத் தாங்க முடியாத ஆத்திரம் வந்தது.

ஆமா நீ சுளிக்கத்தான் செய்வே, அப்படியே போத்திகிளப் அத்தரும் புனுகும் பூசிக்கிட்டுப் பொறந்தல்லா நீ. இந்த நாத்தம் ஒரு மாதிரித் தான் தெரியும் உனக்கு. மகராசி அவ பெத்துப் போட்டுக் கண்ணை மூடியிருக்கா. அந்த அருமைக்காக உன்னைக் கட்டியிருக்கேன். நீ அதோட பீத்துணியைக் கசக்கிட்டு, மதினிகிட்டே, ‘சோப்பு இருக்கா கை கழுவண்ணு கேக்கிறே, எம்பிட்டு இருக்கு உனக்கு. ஆமாமா, உனக்கு நாத்தம் அடிக்கத்தான் செய்யும். சிந்தா மதார் பிரஸ்ஸில் நாலு பேர்கூட இடிச்சுக்கிட்டு நின்னா உனக்கு மணக்கும் ‘.

பொன்னுலட்சுமிக்கு எந்த மாறுதலுமின்றி, அதே இடத்தில் இத்தனை மாதமும் நிற்பது போலிருந்தது. எந்தப் புள்ளியில் தன்மேல் சந்தேகம் என்று அவளுக்குப் புரியவில்லை. வேலை பார்க்கும் போதும், நாலு பேருடன் ஒன்றாக இருக்கும் போதும் அவள் சந்தோஷமாக இருந்தது வாஸ்தவம்தான். ஏன் ? இவனே கூட நாலு பேருக்கு மத்தியில் சந்தோஷமாகவே இருந்தான். பாத்திரக்கடை கோமதிநாயகம், குமரன் எலெக்ட்ரிக்கல்ஸ் முதலாளி, இவளுடன் வேலை பார்க்கிற அம்மன் தழும்புச்சிவராமன், கன்னமெல்லாம் அடர்த்தியான தாடியுடன் வெள்ளைச் சட்டை போட்டுச் சிரித்துக் கொண்டே இருந்த மிட்டாய்க் கடை ராஜப்பா இவர்கள் மத்தியில், இவர்களை எல்லாம் இவர்களுக்கு அறிமுகம் பண்ணின கையோடு கல்யாணத்தன்றைக்கு இவள் இருந்த போது ரொம்பச் சந்தோஷமாகவே இருந்தாள். அதற்கு என்ன செய்வது ?

இவள் ஒன்றுமே சொல்லாமல் நின்று இப்படி பையை வைத்துவிட்டு, உள்ளே போய்ப் பானையை, குடத்தை எல்லாம் ஒழுங்கு பண்ணி இங்கேயே உட்கார்ந்து விடுவாளோ என்று பயந்தது போல மறுபடியும் ஆத்திர மூட்டிக் கேட்டான்.

என்ன மயித்துக்கு இங்கே வந்த ? ‘

பொன்னுலட்சுமிக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை என்றாலும், ஒரு பதிலாக இருக்கட்டுமே என்பது போலவும் நிஜமாகவே அவள் இங்கு வர ஒரு தூண்டுதலாக இருந்த இவனுடைய சிநேகிதன் சிவராமனைப் பத்து நாளைக்கு முன் பிரஸ்ஸிலிருந்து வரும்போது தற்செயலாகச் சந்தித்து, இவர்கள் வாழ்க்கையை ஒக்கிட்டுக் கொள்வது குறித்து நீண்ட நேரம் பேசியதையும், ‘நீ முதல்லே புறப்பட்டுப் போ. நான் அவனைப் பார்த்துப் பேசிக்கிடுறேன். எல்லாம் சரியாகிப் போகும்என்று சிரித்துக் கொண்டே சொல்லி அனுப்பியதையும் நினைத்தவளாகசிவராமன் வரச் சொன்னார்என்று சுருக்கமாகச் சொல்லி முடிப்பதற்குள்,

அவன் படுக்கச் சொன்னாம்னா படுப்பியாஎன்று முத்து விகாரமான நிதானத்துடன் இவளைக் கேட்டதும், ‘இவனைச் சங்கை நெறித்து அப்படியே கொண்ணுரலாமாஅவ்வளவு ஆங்காரம் வந்தது. அப்புறம் மேற்கொண்டு என்ன செய்ய இருக்கிறது.

எப்போதும் இறந்து போனவள் பெயர் சொல்லிக் கொண்டு, இவளையும் இவள் வாழ்க்கையையும் விமர்சித்து கேலி பேசுகிறதற்குத் திருப்பிச் செய்கிற ஒரு கேலியாக, ஒரு சற்றே அன்னியோன்னியமான நேரத்தின் உரிமையில் இறந்து போனவள் பற்றி ஏதோ ஒன்று இவள் சொல்ல, மேல் துணிகூட இல்லாத இவளை அப்படியே உதறிக் குப்புறத் தள்ளி, விளக்கு மாடத்துக்கு முன் கும்பிடச் சொல்லி உதைத்தவனில்லையா இவன் ?

எல்லாம் அறிந்து, பின் எதற்கு மடக்கி மடக்கி உள்ளேயே வந்து விழுந்தோம். கல்யாணமாகி வேலையை இவன் விடச் சொன்னதற்காக விட்டு, இந்த ஊர் வந்து, ஊருக்கு திரும்பிய கொஞ்ச நாளில் மறுபடி அதே பிரஸ்ஸில் வேலைக்குப் போய், இன்று மறுபடி பஸ் ஏறி இவன் முன்னால் வந்து கேவலப்பட எது காரணம் ? மெல்ல மெல்ல மறுபடி படிந்து கொண்ட வாழ்க்கையை மறுபடி கலைக்கிறது போல இவளே திரும்பிக் கொண்டது எவ்விதம் ? தான் வந்த எத்தனையோ பஸ்களின் டயர்களில் மிதிபடுவதற்கென்றே ரோட்டின் நடுவில் அறுவடைத் தானியக் கதிரைக் குவித்து ஒதுங்கி நின்றவர்கள் போல, இவனிடம் மிதிபட வாழ்க்கையைக் கொடுக்கும்படி இவளைத் தூண்டுகிற விசை எது ?

பொன்னுலட்சுமிக்குள் முடிவற்ற கேள்விகள் தெறித்துச் சிக்கலாகிக் கொண்டிருந்த போது, கப்பென்று இருட்டுப் படர்ந்து வலையாக விழுந்தது. மில் சங்கின் சத்தம் உய்ய்ங்கென்று கேட்டது. ‘லைன் மாத்துதானா, . ‘ என்று பொன்னுலட்சுமி நிதானித்து, மறுபடி வெளிச்சம் வரக் காத்திருந்த நேரத்தில், அவள் மேல் இரண்டு கைகள் விழுந்தன. உடம்பை இழுத்து நெருக்கி மிகுந்த பரபரப்புடன், இந்த இருட்டே ஒரு அனுகூலம் போன்று வெறியுடன் அவள் முகத்துடன் முகம் அப்பியது. முத்து தான். அவன் கைகள். அவன் வாடை. இவ்வளவு நேரம் நாயை விரட்டுகிற மாதிரி விரட்டினவன். எவன் வரச் சொன்னான் என்று கேட்டவன்.

பொன்னுலட்சுமி மிகுந்த மூர்க்கத்துடன் பலம் திரட்டி, உதறித் தள்ளவும் அவன் இருட்டுக்குள், கதவு, சுவர் என்று எதனுடன் எல்லாமோ மோதி விழவும், மறுபடியும் வெளிச்சம் வந்தது.

வெளிச்சம் முழுவதுமாகத் தான் வீழ்ந்திருப்பதைக் காட்டிவிடக் கூடாது என்பது போல, ஒரு மிருகம் நிகர்ந்து, அவசரம் அவசரமாகப் பாய்கிற முயற்சியில், அவன் விழுந்து கிடந்த இடத்திலிருந்து வேட்டியைப் பற்றிக் கொண்டு எழுந்து-

வெளியே போயிருஎன்று கத்தினான்.

பொன்னுலட்சுமிக்கு வேறு எந்த யோசனையுமின்றி வெளியே போவதற்கு மிகுந்த உடன்பாடு தோன்றிற்று. பையை எடுப்பதற்கு அவள் குனியும் போது இடுப்பில் அவன் மிதிக்கக்கூடும் என்ற பயத்தை மட்டும் தவிர்க்க முடியவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக