29/01/2012

பாக்கியம் கொடுத்த பிராது! – இமையம்


ஐயா வந்துட்டாங்களா சார்?” என்று முத்துசாமி கேட்டான்.

ஒரு கேஸு விசயமாப் போயிட்டு வந்து படுத்துருக்காரு. வந்ததும் கூப்பிடுறேன்என்று காவல் நிலைய     எழுத்தர் கூறினார்.

வெளிய இருக்கோம் சார்!” என்று சொல்லிவிட்டு சலிப்புடன் வெளியே வந்தான் முத்துசாமி.


காவல் நிலையத்துக்குத் தெற்குப் பக்கம் வேப்ப மரத்தின் கீழ் உட்கார்ந்து இருந்த  கூட்டத்தில், தன் அப்பா அம்மாவைப் பார்த்தான். பாக்கியத்தின் வலது கை தோள்பட்டையில் இருந்து விரல்கள் வரை பெரிய மாவுக்கட்டு போட்டு இருந்தது. அவளுக்குப் பக்கத்தில் பேய் அடித்த மாதிரி  உட்கார்ந்திருந்த தங்கவேலுவுக்கு, பாக்கியத்திடம் இருந்த தைரியத்தில் நூறில் ஒரு பங்குகூட  இல்லை. முத்துசாமியின் சட்டையைத்தான் அவர் போட்டு இருந்தார். அந்தச் சட்டை, அவரை மேலும் மோசமாகக் காட்டியது. அவரிடம் முகம் கொடுத்துப் பேசி எட்டு நாட்கள் ஆகிவிட்டன.

எட்டு நாட்களுக்கு முன்பு கடலை நிலத்தில் மாடுகள் மேய்வதைப் பார்த்து முருகன் ஓடிப்போய் தார்க்குச்சியால் மாடுகளைக் கண்மண் தெரியாமல் அடித்து விரட்டிக்கொண்டு இருந்தான். அதைப் பார்த்த பாக்கியம், ஓடிப்போய் மறித்தாள். மாடுகளின் மேல் இருந்த கோபத்தில், ‘போம்மா எட்ட. ஞாயம் பேச வந்துட்டஎன்று சொல்லி நெட்டித்தள்ள, கீழே வரப்பில் விழுந்த பாக்கியத்தின் வலது கை மணிக்கட்டு நழுவியதோடு, முட்டிக் கைக்குப்பக்கத்தில் லேசாக எலும்பு முறிவும்ஏற்பட்டு விட்டது. செய்தி தெரிந்து முத்துசாமி, காட்டுக்கு ஓடிப்போய் முருகனிடம் கேட்டான்.

ஒம் மாடுவோ கா காணி கல்லச்செடிய மேஞ்சி இருக்கு பாருஎன்று சொன்னான். இருவருக்கும் வாக்குவாதம் முற்றி, பக்கத்து நிலங்களில் இருந்த ஆட்கள் வந்துதான் அவர்களைப் பிரித்துவிட்டனர். அதன் பிறகுதான் கை வலி பொறுக்க முடியாமல் கத்திக்கொண்டு இருந்த பாக்கியத்தை வீட்டுக்குத் தூக்கிக்கொண்டுவந்தான். பாக்கியத்தினுடைய கை நன்றாக வீங்கி இருந்தது. லேசாகத் தொட்டாலே உயிர் போவது மாதிரி கத்தினாள். ”கை நல்லா ஒடிஞ்சி, மணிக்கட்டும் நழுவிப்போச்சு. புத்தூருக்குப் போனாத்தான் சரியாவும்என்று எதிர் வீட்டு கணேசன் சொன்னான். முத்துசாமி கார் எடுத்து வர ஒரு ஆளை வேப்பூருக்கு அனுப்பினான். அப்போது பக்கத்து வீட்டு பெருமாள், ”பொட்டச்சிய அடிச்சிருக்கான். கேஸு கொடுங்க!’ என்றான். எல்லோருமேகேஸு கொடுத்துட்டு, அப்புறமாக் கட்டுப்போட தூக்கிக்கிட்டுப் போஎன்றார்கள். ஒவ்வொருவரும் பேசப்பேசபாக்கியம், ”தம்பி எங்கையி போனாலும் பரவாயில்ல. கேஸைக்குடு. அடிக்கி அடி அடிச்சே ஆவணும். கீழ் கோர்ட்டு, மேல் கோர்ட்டுனு பாத்துப்புடணும். இதெ இப்பிடியே வுட்டா தொக்காப்போயிடும். நீ ஆம்பளயா, அவன் ஆம்பளயானு காட்டணும். வயசான கிழவினுகூட பாக்காம எங் கைய ஒடிச்சிப்புட்டான். என்னெ அடிச்ச கையில பாம்பு கடிக்காதாகடவுளேஎன்று சொல்லி, சிறுபிள்ளை மாதிரி அழுதாள். பாக்கியம் அழுவதைப் பார்த்ததும் முத்துசாமி காவல் நிலையத்துக்குப் போவது என்றுமுடிவெடுத்தான். விஷயத்தைக் கேள்விப்பட்டு மோட்டாங்காட்டில் இருந்து வந்த தங்கவேல், ‘எதுக்கு ஆளப் போட்டு வெச்சிருக்கீங்க? ஆஸ்பத்திரிக்குப் போவ வாணாமா?”என்று முத்துசாமியிடம் கேட்டார்.

போவணும். காரு எடுக்க ஆளு போய் இருக்குஎன்று சொல்லிவிட்டு, பாக்கியத்தைப் பார்த்தான். பிறகுமொதல்ல கேஸு கொடுக்கணும். அப்புறந்தான் ஆஸ்பத்திரிஎன்றான்.

மொதல்ல கையப்பாப்பம். அப்புறமா மத்ததப்பேசிக்கலாம்என்று தங்கவேல் சொன்னதும், அவரை முறைத்துப் பார்த்தான் முத்துசாமி.

அப்புறம் என்னாத்தப் பாக்கப்போற?’

கையி முக்கியமா, கேஸு முக்கியமா? மொதல்ல கையப்பாரு.  அப்புறமா ஊரு பஞ்சாயத்தக் கூட்டி, ‘என்னா, ஏது?’னு கேட்டுக்கலாம்.’

நீ எல்லாம் ஒரு மனுசனா? எங்கையை ஒடிச்சிப்புட்டான். இவுரு போயி ஊரு பஞ்சாயத்தக் கூட்டப்போறாராம். அவன கொண்டுபோயி போலீசில வுடாம…’ என்று சொல்லி பாக்கியம் கத்தினாள்.

பங்காளி. பக்கத்துக் கொல்லக்காரன். ‘ஏன்டா இப்பிடிச்செஞ்ச?னு கேட்டுக்கலாம். அவன் என்ன பிறத்தியாரா?”

அவன புடிச்சி போலீசில வுடாம இந்தப் பேச்சிப்பேசுற?” என்ற பாக்கியத்தின் குரலில் அனல் வீசியது.

அந்த மாரி எடத்துக்கெல்லாம் குடியானவன் போவலாமா? அவன ஜெயில்ல போடுறதால நம்பளுக்கு என்ன கிடைக்கப்போவுது?’ என்று தங்கவேல் கேட்டார்.

தம்பி இதுல ஒங்கப்பன் பேச்ச கேக்காதடா. அறியாப்புள்ளக்கிட்டக்கூட எதுத்துப் பேசாத மனுசன்டா அந்த ஆளுஎன்று முத்துசாமியிடம் பாக்கியம் சொன்னாள்.

கேஸு கொடுத்தா நீயும் கை கட்டி நிக்கணும். நீயும்தான் காசு கொடுக்கணும். மானம் போயிடும்என்று தங்கவேல் சொன்னார்.

மானம் போயிடும்மானம் போயிடும்னு சொல்றியே. தெனம் தெனம் ஸ்டேசனுக்குப் போறவனெல்லாம் மனுசன் இல்லியா?’

அப்புறம் ஒன்னிஷ்டம். கச்சேரியில கையக்கட்டிக்கிட்டு நிக்கணும்னு நெனக்கிறீங்க. போங்கஎன்று சொல்லிவிட்டு தங்கவேல் வெளியே போய்விட்டார். அந்த இடத்தில் இருந்த எல்லாருமே தங்கவேலுவைத் திட்டியதோடு, காவல் நிலையத்துக்குப் போவதுதான் நல்லது என்றார்கள். பாக்கியமும் பிடிவாதமாக இருந்தாள். கார் வந்தது. பாக்கியத்தை ஏற்றிக்கொண்டு கணேசன், ஊர் பஞ்சாயத்துத் தலைவர் மாணிக்கம் என்று மூன்று நான்கு பேரை அழைத்துக்கொண்டு காவல் நிலையத்துக்குப் போனான் முத்துசாமி.

பாக்கியத்தின் நிலையைப் பார்த்து காவல் நிலையத்தில் இருந்த போலீஸ்காரர்கள் எல்லாருமே பரிதாபப்பட்டார்கள். ‘பிராது மனு கொடு. அவன் எவனா இருந்தாலும் உள்ள புடிச்சிப் போட்டுடறன்என்றார் ஆய்வாளர். அவருடைய பேச்சில் கை ஒடிந்தது, மணிக்கட்டு நழுவியது எல்லாமும் பாக்கியத்துக்கு மறந்துபோனது. முருகனை ஜெயிலுக்கு அனுப்பிவிட்டது மாதிரி நிம்மதி உண்டாயிற்று அவளுக்கு. ‘போயி கட்டப்போட்டுக்கிட்டு வா. எல்லாத்தையும் நான் பாத்துக்கிறன்என்று ஆய்வாளர் சொன்னதும், பிராது மனு எழுதிக் கொடுத்துவிட்டு புத்தூருக்குப் போவதற்கு காரை எடுத்தார்கள்.

புத்தூரில் இருந்து கட்டுப் போட்டுக்கொண்டுவந்ததில் இருந்து ஒவ்வொரு நாளும் காலை, மாலை இரு வேளையும் காவல் நிலையத்துக்கு முத்துசாமி வந்துகொண்டு இருந்தான். ”காலயில வா.”  சாயங்காலம் வந்துடுங்க.”  ஐயா வெளிய போயிட்டாரு. நாளக்கி முடிச்சிக்கலாம்என்று ஆறு நாட்களாக அலையவிட்டார்கள். ஒவ்வொரு நாள் காலையிலும் மாலையிலும் தனக்கு இசைந்தவர்கள் என்று சில ஆட்களை அழைத்து வந்துகொண்டு இருந்தான் முத்துசாமி. அதே மாதிரி முருகனும் அவனுக்கு இசைந்தவர்கள் என்று ஏழெட்டு பேரை அழைத்துக்கொண்டு வந்தான். ஆறு நாட்களுக்குப் பிறகு இன்றுதான் ஆய்வாளர் இருக்கிறார் என்று சொன்னார்கள். அப்படிச் சொன்னதே அவனுக்குப் பெரிய ஆறுதலாக இருந்தது.

முத்துசாமிக்கு வேப்பமரத்துக்கு அருகில் போகவே பிடிக்கவில்லை. ஆய்வாளர் வந்து என்ன சொல்லப்போகிறாரோ என்ற கவலை. முருகனையும் அவனோடு வந்திருந்த ஆட்களையும் பார்த்தான். கடுமையான கோபம் உண்டாயிற்று.

மாப்ள இங்க வாவாய் கசக்குறாப்ல இருக்கு. வெத்தல பாக்கு வாங்கிக்கிட்டு வாஎன்று முத்துசாமியைப் பார்த்து மாணிக்கம் சொல்ல, மற்றோர் ஆள்ஒரு டப்பி சிகரெட்டும் தீப்பெட்டியும் வாங்கியா?” என்றான். ”எனக்கு ஒரு பொட்டலம் போயிலஎன்றான் இன்னொருத்தன். அவர்கள் கேட்டதை எல்லாம் வாங்கி வர கடைக்கு நடக்க ஆரம்பித்தான். இன்று ஸ்டேசனுக்கு வந்ததில் இருந்து இதோடு சேர்த்து நான்காவது முறையாக அவன் கடைக்குப் போனான்.

ஒரு போலீஸ்காரர் வந்துஐயா கூப்புடுறாருஎன்றார். முத்துசாமியோடு வந்த ஆட்களும் முருகனோடு வந்த ஆட்களும் ஆய்வாளர் முன் ஆஜரானார்கள். பாக்கியத்தைப் பார்த்ததுமேகைய ஒடிச்ச கேஸா?” என்ற ஆய்வாளர், மறு நொடியே கோபத்துடன்யாருடா அடிச்சது?” என்று கேட்டார். முருகன் ஒரு அடி முன்னால் வந்தான். அவனை ஏற இறங்கப் பார்த்து, ”நீதான் ஊருல ரவுடியா? பொட்டச்சிய அடிக்க வெக்கமா இல்ல?” என்று சத்தமாகக் கேட்டார்.

இல்லீங்க ஐயா?” என்று முருகன் சொன்னான்.

என்னா இல்லெ. அந்தப் பொம்பளக்கி கை ஒடியலங்கிறியா? நீ அடிக்கிலங்கிறியா?”

கீழ வுளுந்துப்போச்சுங்க சாரு.”

வாய மூடுடா. எதுத்துப் பேசுனா கையக் கால ஒடிச்சிடுவேன், ராஸ்கல். செய்யுறதயும் செஞ்சிப்புட்டு இல்லைனு வேற சொல்றியாநாயே!”

அப்போதுஎங்கை ஒடிஞ்சிப்போனத நீங்களே பாத்தீங்க சாமி. அன்னிக்கே ஐயாகிட்ட காட்டிப்புட்டுத்தாங்க நான் புத்தூருக்குப் போயி கட்டுப்போட்டுக்கிட்டு வந்தன். எங்கையிப்போச்சு சாமிஎன்று சொல்லும் போதே பாக்கியத்துக்கு அழுகை வந்தது.

ந்தா, மொதல்ல அழுவறத நிறுத்து. நடந்ததச் சொல்லுன்னா அழுது காட்டுற?” என்று ஆய்வாளர் கோபப்பட்டார்.

காட்டுல நின்ன மாடுவுள சாட்டக் குச்சியால கண்ணு மண்ணு தெரியாம அடிச்சான் சாமி.  ஏன்டா வாயில்லா ஜீவனுவுள அடிக்கிற?’னு கேட்ட குத்தம் ஒண்ணுதான் சாமி. எங்கைய ஒடிச்சிட்டான்!”

சண்ட நடந்த எடத்துல யாரும்மா இருந்தா?”

யாருமில்லீங்க. தனியா இருந்ததாலதான் எங்கைய ஒடிச்சிப்புட்டான் சாமி!”

சண்ட எங்க நடந்துச்சு?”

காட்டுல சாமி!”

சண்ட நடந்த எடத்துல யாரும்இல்லங்கிறப்ப எதுக்கு ஊரயே கூட்டிக்கிட்டு வந்து இருக்கீங்க? எல்லாரும் வெளிய போயி நில்லுங்க!”

நான் தலவரு சார்என்று மாணிக்கம் சொன்னான்.

தலைவருன்னா?”

ஊரு பஞ்சாயத்துத் தலைவரு.”

அப்பிடியா? அப்பிடின்னா மொதல்ல நீ வெளிய போஎன்று சொல்லி முறைத்ததும், ஒன்றும் பேச முடியாமல் மாணிக்கம் வெளியே போனான் மாணிக்கம். வந்த மற்ற ஆட்களும் வெலவெலத்துப்போய் வெளியே சென்றனர்.

நீ யாரு?”

எங்கம்மா சார். இவுரு எங்கப்பா.”

ஆய்வாளர், மாணிக்கத்தை வெளியே அனுப்பியதில் இருந்து முருகனுக்குப் பயம் ஏற்பட்டு இருந்தது. சனியன் இதோடு முடிந்தால் தேவலை என்று நினைத்தான். அடுத்து யாரிடம் என்ன கேட்பாரோ என்ற பயத்தில் நின்றுகொண்டு இருந்தான். அவனை முறைத்துப் பார்த்த ஆய்வாளர், ஏட்டைக் கூப்பிட்டு, ”யோவ் ஏட்டு, இதெ என்னா ஏதுனு விசாரிச்சியா?” என்று கேட்டார்.

விசாரிச்சங்க. இங்கியே முடிச்சிடலாங்க.”

சரி. போ!” என்று சொல்லிவிட்டு பாக்கியம் பக்கம் திரும்பிஎன்ன செய்யலாம்?” என்று கேட்டார்.

இத்தினி வருசத்துல எம் புருசன்கூட என்னெ அடிச்சது இல்ல. இவன் என்னெ அடிச்சி ஒரு கைய இல்லாம ஆக்கிப்புட்டான். வயசான காலத்துல நொண்டிக்கைய வெச்சுக்கிட்டு நான் என்ன சாமி செய்வேன்?” என்று புலம்பினாள். புலம்பலுக்கு இடையேஒரு கட்டுப்போட போனதுக்கே எட்டாயிரம் புடிச்சிப்போச்சி.  இன்னும் எத்தன கட்டுப் போடணுமோ? எம்மாம் செலவு ஆவுமோ? பணமும் பண்டமும் போனாலும் பழையபடி கை இருக்குமானு தெரியல. எட்டு நாளா துணிகூட மாத்தல சாமி.”

கொஞ்ச நேரம் பேசாம இரும்மாஎன்று சொன்ன ஆய்வாளர், ‘நீ என்னடா சொல்ற?’ என்று முருகனிடம் கேட்டார்.

ஐயா சொல்றதுதாங்க!’ என்றான்.

மாடு மேஞ்சிதோ. கை ஒடிஞ்சிதோ. நீ ஆஸ்பத்திரி செலவக் கொடுத்துடு.’

கா காணி கல்ல அப்பிடியே போயிடிச்சு சாரு.’

வாய மூடுறா. கல்லப்போச்சாம் கல்லஅந்தப் பொம்பள கையி போச்சேஎன்று கத்தினார் ஆய்வாளர். அப்போதுஎனக்குப் பணம் வாணாம் சாமி. எட்டு நாளா நான் படுற வேதன இம்மாம் அம்மாம் இல்ல சாமிஎன்று சொன்ன பாக்கியம், ‘ஒனக்கு நான் என்னடா பாவம் செஞ்சேன்?  கொலகாரா. பீச்ச கையாலியே சோத்தத் திங்கவெச்சுட்டியே. இடுப்புத்துணியக்கூட மாத்த முடியாமப் பண்ணிட்டியே. என் பாவம் ஒன்ன கேக்கும்டா?’

சரி. ரெண்டு பார்ட்டியும் வெளிய போயி கேஸா, சமாதானமானு பேசி முடிச்சிட்டு வாங்க!” என்றார். ‘வெளிய வாங்க!’ என்று சொல்லி ஏட்டு கூப்பிட்டார். முத்துசாமி, தங்கவேல், முருகன் மூவரும் வெளியே வந்தனர். கடைசியாக வந்த பாக்கியம், ‘ஐயாதான் எனக்கொரு ஞாயத்தச் சொல்லணும்என்று சொல்லிக் கும்பிட்டுவிட்டு வெளியே வந்தாள். முத்துசாமியோடு வந்த ஆட்களையும் முருகனோடு வந்த ஆட்களையும் கூப்பிட்டுசமாதானமாப் போறீங்களா? கேஸு போடணுமானு முடிவு பண்ணிட்டு அஞ்சு நிமிசத்துல வாங்க!’ என்று ஏட்டு சொன்னார்.

வேப்பமரத்தின் அடியில் உட்கார்ந்து இருதரப்பும் பேச ஆரம்பித்தனர். அரை மணி நேரமாகியும் ஒரு முடிவும் ஏற்படவில்லை. பாக்கியம்என் கை போச்சி!’ என்று சொன்னால் முருகன், ‘என் கல்லப் போச்சி!’ என்று சொன்னான். பேச்சு நீண்டது. ‘இன்னும் எத்தன நாளக்கி நடக்கிறது? சட்டுனு ஒரு முடிவு பண்ணுங்க. எட்டு நாளா ஸ்டேசனுக்கு நடக்கிறதே வேலயாப் போச்சி!’ என்று சொல்லி மாணிக்கம் சலித்துக்கொண்டான். முத்துசாமியிடம்கடக்கிப் போயி சிகரெட் வாங்கிக்கிட்டு வாஎன்று மாணிக்கம் சொன்னதும், அவனுக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்த பெருமாள், ‘எல்லாருக்கும் டீ சொல்லு. அப்பிடியே வெத்தல பாக்கு போயிலனு வாங்கிக்கஎன்று சொன்னான். முத்துசாமி கடைக்கு நடக்க ஆரம்பித்தான். எதிரில் முருகன், ‘பீடி, சிகரெட், வெத்தல பாக்குஎன்று வாங்கிக்கொண்டு வருவது தெரிந்தது. பின்னாலேயே வந்த தங்கவேல், ‘இன்னும் எத்தினி நாளக்கி அடுத்தவனுக்கு இந்தப் புயிக்க வேல செஞ்சிக்கிட்டுக் கெடப்ப?  ஒங்கம்மாப் பேச்சக் கேக்காம, வெவகாரத்த இங்கியே முடிச்சிக்க, காசுக்குக் காசும் போயி கண்ட பயலுக்கு வேலயும் செய்ய வேண்டியதாப்போச்சு. எல்லாத்துக்கும் மேல கச்சேரியில கையக்கட்டி நிக்கும்படியா ஆயிப்போச்சு. நம்ப குடும்பத்துல இன்னியமுட்டும் டேசன்லயோ, பஞ்சாயத்திலியோ கையக்கட்டி நின்னது இல்ல. இதான் நான் ஒனக்குச் சொல்லுவன்.அப்பறம் ஒன்னிஷ்டம். ஒரு நாளக்கி ரெண்டாயிரம், மூணாயிரம்னு செலவு ஆவுறது எனக்குத் தெரியாதுனு நெனக்கிறியா? அவன் நம்பளுக்கு எதிரி இல்ல. நம்ப கோவம்தான் நம்பளுக்கு எதிரி. அதுதான் நம்பள கொல வாங்குது!’ என்று சொல்லிவிட்டு திரும்பிக் கூட்டத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தார். ‘என்ன பேசி முடிச்சாச்சா? நேரமாவுதுல்ல. ஐயா வெளியப் போயிடுவாருஎன்று சொல்லிவிட்டு ஏட்டு உள்ளே போனார்.

முத்துசாமி தரப்பும் முருகன் தரப்பும் வாய் ஓயாமல் ஒருவரையருவர் குற்றம்சாட்டிப் பேசினார்களே ஒழிய, சமாதானமாவழக்கா என்று முடிவுக்கு வரவில்லை. பொறுத்துப் பொறுத்துப் பார்த்த தங்கவேல், முருகனிடம்நீ என்னடா சொல்ற?’ என்று கேட்டார். ‘நீயே சொல்லுஎன்று முருகன் சொன்னான்.

கோர்ட்டு, கேஸு, டேசன்னு போறது குடும்பத்துக்காரனுக்கு ஓக்கிதயாடா?’

நானா வந்தன் டேசனுக்கு?’

அவன் வந்தா என்னா?  நீ முடியாதுனு போவ வேண்டியதுதான? நீ எதுக்கு போலீசுகாரனுக்குப் பணம் கொடுத்த?’

கல்லக்கி கல்லயும் போச்சி. பணத்துக்குப் பணமும் போச்சி.’

பட்ட பெறகுதான் தெரியுதா எல்லாம்? போனது போவட்டும்.  ஐசா பைசானு இங்கியே முடிச்சிட்டுப் போ.’

சரி!’

அவங்கிட்ட எதுக்கு ஒனக்குப் பேச்சி? அவன் பொண்டாட்டி கைய நீ ஒடிச்சி இருந்தா அவன் ஒங்கிட்ட பேசுவானா?’ என்று பாக்கியம் கோபமாகக் கேட்டாள். ‘நீ பேசாம இருஎன்று சொல்லிவிட்டுதலவரே, நீ போயி வெவகாரத்த முடிஎன்று தங்கவேல் சொன்னார்.

நீ என்னா சொல்ற?’ என்று முத்துசாமியிடம் மாணிக்கம் கேட்டான்.

ஒன்னிஷ்டம்என்று அவன் சொன்னதும், பாக்கியம் அவனிடம் சண்டைக்குப் பாய்ந்தாள். ‘நீயெல்லாம் ஒரு புள்ளயாடா?  அப்பன்தான் ஒரு பயந்தாங்குளின்னா நீ அதுக்கு மேலதான் இருக்குற? எங்கையும் போச்சி, எம் பணமும் போச்சி. கேஸு கொடுக்காம இருந்தாலும் ஒரு கௌரதியா இருக்கும். அப்பனும் மவனும் சேந்து மூக்க அறுத்துப்புட்டீங்கடா.’

கைப் போச்சிங்கிறியே, கா காணி கல்லப் போச்சேஎன்று முருகன் ஆரம்பித்தான். ‘நீயெல்லாம் ஒரு மனுசனாடா? வலி கொடுமயில அது ஏதோ புலம்புது. பெரிய இதுமாரி பேசுற?’ என்று சொல்லி மாணிக்கம் முருகனிடம் கத்திய பிறகுதான், அவன் அடங்கினான்.

பொட்டச்சிய ஏன்டா அடிச்ச, ஏன்டா கைய ஒடிச்சனு கேக்கிறதுக்கு, அதுக்கு ஒரு வழிமானத்த செய்யுறதுக்கு ஒருத்தனுக்கும் ஓக்கித இல்ல. பஞ்சாயத்துப் பேசுறானுவ. பொட்ட பஞ்சாயத்து. இப்ப வந்து சொந்தம் கொண்டாடுறான்.  அடிக்கும்போது அது தெரியலியா? வலியால நான் படுறது எனக்குத்தான தெரியும்? நான் செத்தா அவன் என்னோட தலக்கட்டுக்கு வரக் கூடாதுஎன்று ஏகத்துக்கும் பேச ஆரம்பித்தாள் பாக்கியம். அவளுடையப் பேச்சைப் பொருட்படுத்தாமல் எழுந்து மாணிக்கம் காவல் நிலையத்துக்குள் போனான்.

பேச்ச வுடு  பெரியம்மா!” என்று பெருமாள் சொன்னான். அவனை முறைத்த பாக்கியம்நீ சொல்லிப்புட்ட வாயால. எனக்கில்ல கையி போச்சி. அவன ஒரு நாழி நேரமா இருந்தாலும் உள்ளார போட்டாத்தான் எனக்கு மனசு ஆறும்!” என்றாள் பாக்கியம்.

எல்லாரும் உள்ளார வாங்கஎன்று மாணிக்கம் கூப்பிட்டான். மொத்தக் கூட்டமும் எழுந்து சென்று ஆய்வாளர் முன் ஆஜரானது.

என்னா முடிவு எடுத்து இருக்கீங்க?’ என்று ஆய்வாளர் கேட்டார்.

இங்கியே முடிச்சிவுட்டுடுங்க சார்என்று முருகன் சொன்னதும் ஆய்வாளர் தங்கவேலுவைப் பார்த்தார். ‘அவன் சொல்றபடியே செஞ்சிடுங்க ஐயாஎன்று சொல்லி கையெடுத்துக் கும்பிட்டார்.

கேசப் போடுங்க சாமி. ஒங்களுக்குப் புண்ணியமா இருக்கும்என்று சொல்லி பாக்கியம் அழுதாள். சட்டென்று கோபம் அடைந்த ஆய்வாளர், ‘இன்னமுட்டும் என்ன பேசுனீங்க?’ என்று கேட்டார். தங்கவேல்பேசாதேஎன்பதுபோல் சைகை செய்தார். அவரைப் பொருட்படுத்தாமல்நான் பெத்தப் புள்ளமாரி இருக்கீங்க சாமி. ஒங்க தாயா இருந்தா அப்பிடியே வுட்டுடுவீங்களா சாமி? கைய அசைச்சா உசிருப் போயி உசிரு வருது. படுத்துத் தூங்கி எட்டு நாளாச்சி!’

முருகனைப் பார்த்துநீதான அடிச்சவன்? நீயெல்லாம் ஆம்பளையாடா? காட்டுல வேல செஞ்சமா, சாப்பிட்டமா, தூங்குனமானு இல்லாம எதுக்கு ஊருல இருக்கிறவன் உசுர வாங்குறீங்க?’ என்று ஆய்வாளர் கேட்டார்.

அப்போது தங்கவேல்ஐயாவே முடிச்சி வுட்டுடுங்கஎன்று சொன்னார்.

சரி. போங்க. போயி எழுதிக்கொடுத்துட்டுப் போங்கஎன்றார் ஆய்வாளர்.

சமாதானம் வாணாங்க ஐயாஎன்று பாக்கியம் சென்னாள்.

என்னம்மாப் பேசுற? வாய அடக்கிப் பேசு. எனக்கு ஒரு பேப்பர்தான் செலவு. எழுதிவுட்டா பத்துப் பதினைஞ்சு வருசம் வக்கீல் வீட்டுக்கும் கோர்ட்டுக்கும் நடக்கணும். வாய்தா, வாய்தானு நடந்து செத்துப்போவ. ஒங்க வூட்டுக்காரர பாரு. எப்பிடி கையக் கட்டிக்கிட்டு நிக்கிறாரு. இந்த வயசில இது தேவையா?’ என்று கேட்ட ஆய்வாளர், முத்துசாமி பக்கம் திரும்பி, ‘பெத்தவன கச்சேரியில கையக்கட்டி நிக்கவைக்கவா நீ பொறந்த? பெரியாளுனு காட்டுறதுக்கு ஆயிரம் வழி இருக்கு. புரியுதா? போ. போயி எழுதிக்கொடுத்துட்டுப் போஎன்று சொல்லிவிட்டு எழுந்த ஆய்வாளர், திடீரென்று கோபம் அடைந்தது மாதிரிஇந்தப் பிரச்னயை இதோட வுட்டுடணும். ஊருல போயி ஒரு கிளாஸ் சாராயத்தப் போட்டுட்டுஅவன் இதப்பேசுனான், இவன் அதப் பேசுனான்னு வந்தீங்கன்னா, அவ்வளவுதான். கையக்கால ஒடிச்சி சாராயம் வித்த கேஸுல போட்ருவன். ஒரு பயலும் இனிமே இந்தப் பக்கம் வரக்கூடாதுஎன்று வேகமாகச் சொன்னார். அவருக்கு முன்னால் நின்றுகொண்டு இருந்தவர்களில் ஒருவர்கூட வாயைத் திறக்கவில்லை. பாக்கியம் மட்டும்கட்டுக்கட்டுற செலவ யாரு பாக்குறது?’ என்று கேட்டாள்.

கட்டுப்போடுற செலவ நீ கொடுத்துடு. கல்லப் போச்சி அது போச்சினு பேசக் கூடாதுஎன்று ஆய்வாளர் சொன்னார். அதற்குள் அவசரப்பட்ட தங்கவேல்அதெல்லாம் வேணாங்கஎன்று சொன்னார். ‘சேல ஒண்ணுதான் கட்டல. மத்தப்படி ஆளு பொட்டச்சிதான்என்று பாக்கியம் சொன்னாள்.

போம்மா வெளியஎன்று சொன்ன ஆய்வாளர், ஏட்டைக் கூப்பிட்டுரெண்டு பார்ட்டிகிட்டயும் எழுதி வாங்கிடு!” என்று சொல்லி எல்லாரையும் வெளியே அனுப்பினார்.

அஞ்சு குயர் பேப்பர் வாங்கிக்க. புளூ இங்க் ரெண்டு பாட்டுலு, கார்பன் பேப்பர் ஒரு டஜன், ஐயாவுக்கு ஒரு பாக்கெட் சிகரெட் வாங்கி எடுத்துக்கிட்டு ஓடியாஎன்று ஏட்டு சொன்னார். முத்துசாமியிடம்நான் வாங்கிக்கிட்டு வரன்என்று சொன்னான் முருகன். ‘நீ இரு. நான் வாங்கிக்கிட்டு வரன்என்று சொல்லிவிட்டுப் போனான் முத்துசாமி. எட்டு நாட்களுக்குப் பிறகு இப்போதுதான் அவனுடைய மனம் பழைய நிலைக்குத் திரும்பியிருந்தது.

எனக்கு வாய்ச்சவன்தான் சரியில்ல. நான் பெத்ததுமா அப்பிடி இருக்கணும்? அட கொலகாரப் பயலுவுளா? கைய ஒடிச்சவன்கிட்ட சமாதானம் பேசுறவனுவள இங்கதான் பாக்கிறன். காச வாங்கிக்கிட்டு கேஸு போடாம வுடுறானுவ பாரு போலீஸ்காரப்பயலுவோ, அவனுவளுக்குக் காசுதான் பெருசு. நீதி நேர்மயா பெருசுஎன்று சொல்லி, பாக்கியம் தங்கவேலுவையும் முத்துசாமியையும் மட்டும் அல்ல; போலீஸ்காரர்களையும் சேர்த்து திட்டிக் கொண்டு இருந்தாள்!

நன்றிஆனந்த விகடன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக