இசையமைப்பாளர் பிரபாகர்ராவ் சொல்லித்தான், சந்திரசேகர் உடல் நலமில்லாமல் இருக்கிறார் என்று சந்திரிகா அறிந்தாள். சந்திரிகா ஆந்திரத்தைச் சேர்ந்தவள். அவருடைய தந்தை தமிழ்ப்படங்களில் சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். அவளுடைய தாயார் ரஞ்சிதம் ஆரம்பத்தில் வீட்டு மனைவியாகத்தான் இருந்தாள்.பின்னால் பொருளாதார நெருக்கடியினால்,அவள் துணை நடிகையானாள், அவளுக்கு ஆரம்பத்தில் விருப்பமில்லாமல்தான் இருந்தது. குழு நடனங்களில், சில படங்களில், குளோசப்பில் தெரிந்த பின்னர் அவளுக்கு ஈடுபாடு வந்து விட்டது.
டான்ஸ் மாஸ்டர் மாதவமேனனுக்கும் அவளுக்கும் தொழில் ரீதியாக ஏற்பட்ட தொடர்பு நெருக்கத்தைக் கூட்டிக் கொண்டிருந்தது. ஒரு படத்தில் கதாநாயகியுடன் தோழி ஆடிப்பாட வேண்டிய காட்சியில், மாதவமேனன், ரஞ்சிதத்தை சிபாரிசு செய்து, அந்தப் பாத்திரத்தை வாங்கிக் கொடுத்துவிட்டார். அந்தப் பாடல் பிரபலமானதும் ரஞ்சிதத்திற்கு, விரைவில் கதாநாயகியாகி விடுவோம் என்ற எண்ணம் ஏற்பட்டது. கணவரிடம் ஒதுக்கம் ஏற்பட்டது. அவருக்கு வாய்ப்புகள் வருவது அரிதாக இருந்தது. மாதவமேனனுக்கும் ரஞ்சிதத்தின் மீது ஈர்ப்பு இருந்தது. இருவருக்கும் நெருக்கம் கூடிக்கொண்டேயிருந்தது. மாதவமேனன் எப்படியும் தன்னை கதாநாயகியாக ஆக்கிவிடுவார் என்ற எண்ணம் ரஞ்சிதத்திற்கு ஏற்பட்டது. சந்திரிகா அப்போது சிறுமியாக இருந்தாள். ரஞ்சிதத்தின் கணவர் சினிமா வாய்ப்புக்காக பம்பாய் செல்வதாகச் சொல்லிச் சென்றவர், திரும்பவேயில்லை. ரஞ்சிதமும் அவரைப் பற்றி லேசாக விசாரித்து விட்டு விட்டாள்.
மாதவமேனன் வீடு பார்த்து வைத்திருந்தான். முக்கியமான கதாநாயகர்களின் படங்களுக்கு அவர்தான் டான்ஸ்மாஸ்டராக இருந்தார். மலையாளத்திலும் அவருக்கு வாய்ப்புகள் இருந்தன. பார்த்து வைத்திருந்த வீட்டில் ரஞ்சிதத்தைக் குடி வைத்தார். ஒரு மலையாளப் படத்தில் இரண்டாவது கதாநாயகி பாத்திரம் வாங்கிக் கொடுத்தார். ரஞ்சிதம் மிக மகிழ்ச்சியாக இருந்த காலகட்டம் அது. மாதவமேனன் மிகுந்த பண வசதியுடன் இருந்தார். சந்திரிகாவை பார்த்துக் கொள்வதற்கும் வீட்டு வேலைகளுக்கும் ஆட்களை நியமித்திருந்தார். இரண்டாவது கதாநாயகியாக ரஞ்சிதம் நடித்த மலையாளப்படம் சரியாக ஓடவில்லை.
மாதவமேனனின் நண்பர், புதுமுகங்களை வைத்து எடுக்கும் படத்தில் கதாநாயகியாக ரஞ்சிதம் ஒப்பந்தம் ஆனாள். மகள் சந்திரிகா வீட்டில் இருப்பது பொருத்தமில்லை என்று கருதி, வெளியூரில், விடுதியில் சேர்த்து படிக்க வைத்தாள். மாதவமேனனுக்கு ஒரு குடும்பம் ஏற்கெனவே இருந்த போதிலும், ரஞ்சிதத்திடம் பிரியமாகவும் அவள் வளர்ச்சியில் அக்கறையுள்ளவராகவும் இருந்தார்.
வெளியூரில் படப்பிடிப்பு இருந்த சமயம் ஒருநாள் அவள் அறைக்கு வந்து படத்தின் வளர்ச்சி பற்றியும் அவளுடைய திறமை பற்றியும் பேசிக்கொண்டிருந்த தயாரிப்பாளர், கிளம்பும்போது, அவளை அணைத்து உதட்டில் முத்தமிட்டுச் சென்றார். தனியாக இருக்கும் சந்தர்ப்பம் அமையும்போது அவர், அவளைத் தொடுவது என்பது பழக்கமாகி விட்டது.
மாதவமேனனுக்கு மதுப்பழக்கம் இருந்தது. ரஞ்சிதத்திடம் சில வேளைகளில் குடிக்கச் சொல்லி கேட்டுக் கொள்வார். அப்போது ஒப்புக்கு கொஞ்சமாகக் குடித்துவிட்டு செக்ஸில் அதிக ஆவேசம் வந்தவள் போல் காட்டிக்கொள்வாள். அவளுக்கு அந்தக் கசப்பான பானம் குடிப்பதற்கு மிகக் கஷ்டமானதாக இருந்தது. ஆனால், படத்தயாரிப்பாளர் கொடுத்த பானம் இனிப்பும் சற்று துவர்ப்பும் கலந்து இருந்தது. இதுதான் ஒயின் என்று அப்போது அவர் கூறினார். வெளியூர் படப்பிடிப்பு நாட்களில் இருவரும் உடல்சேர்க்கை கொள்ளும் சந்தர்ப்பத்தை உருவாக்கிக் கொள்வார்கள்.
படத்தின் கதாநாயகனுடன் காதல் காட்சியில் நடிக்கும்போது அவனுடன் உடல்சேர்க்கை கொள்ள வேண்டும் என்ற அவா திடீரென்று அவளுக்கு ஏற்பட்டது. அப்போது காரைக்கால் அருகே ஒரு இடத்தில் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தது. சாப்பாட்டு நேரத்தில் உதவி இயக்குனர் சிவானந்தம் காரைக்காலம்மையார் பற்றிக் கூறினார். ரஞ்சிதத்திற்கு அப்போதுதான் காரைக்காலம்மையார் பற்றி தெரிந்தது. தெய்வாம்ச அழகுள்ளவள் என்று கணவர் விலகிச் செல்ல, தன் தோற்றத்தைக் கெடுத்து பேய் போல ஆக்கிக்கொண்டு வாழ்ந்தவள், காரைக்காலம்மையார் என்பதை அறிந்தபோது, ரஞ்சிதத்திற்கு ஆச்சரியமும், அதிர்ச்சியும் விளங்கிக்கொள்ள முடியாத உள்மன மாறுதல்களும் ஏற்பட்டது. அவளுக்கே ஏன் என்று தெரியவில்லை. அவளுக்கு ஏற்பட்ட எண்ணம் பிறகு மறைந்து விட்டது.
அவள், கதாநாயகியாக நடித்துக்கொண்டிருந்த படம் சற்று வளர்ந்த நிலையில் பொருளாதார பிரச்சினையில் தடுமாறி பிறகு நின்றுவிட்டது. படத் தயாரிப்பாளரும் கடன் பிரச்சினையில் சிக்கி நலிந்து போனார். மாதவமேனன், அவளை நன்றாகவே, பொருளாதார சிரமமில்லாமல் வைத்திருந்தார். அவள் வீட்டில் மாதவமேனன் தங்கும் நாட்களில் அவள் வேறு ரஞ்சிதமாக மாறிவிடுவாள். காலையில் தலைக்குக் குளித்து கூந்தலை விரித்து முடிச்சுப் போட்டிருப்பாள். முகத்தில் லேசாக மஞ்சள் நிறம் கூடியிருக்கும். பளிச்சென்று இருப்பாள். ஒரு மோகினி அவளுக்குள் புகுந்து கொள்வாள். மாதவமேனனுக்கு ஊட்டிவிடுவாள். கன்னத்தைக் கிள்ளுவாள். பேசிக்கொண்டிருக்கும்போதே கட்டியணைத்து முத்தமிடுவாள். மாதவமேனன், அவள் பெயருக்கு ஒரு வீட்டை வாங்கி அதிலிருந்து வரும் வாடகை ரஞ்சிதத்திற்குக் கிடைக்கும்படியாக ஏற்பாடு பண்ணியிருந்தார்.
சந்திரிகா வயதுக்கு வந்துவிட்டாள். ஒரு காலகட்டத்தில் இனிமேல் தனக்கு சினிமாவில் எதிர்காலம் இல்லை என்ற முடிவிற்கு ரஞ்சிதம் வந்துவிட்டாள். சந்திரிகாவை அழைத்து வந்து உள்ளூரிலேயே ஒரு கல்லூரியில் விடுதியில் சேர்த்து படிக்க வைத்தாள்.
மாதவமேனனுக்கு உடல்நலம் சரியில்லாமல் போனால், முதல் குடும்பத்திலேயே வைத்து பராமரிக்குமாறுதான் ஆகிவிடும் என்று அவள் அறிந்திருந்தாள். அந்தக்கால கட்டத்தை நினைத்து பயந்து கொண்டிருந்தாள். அந்தக்கால கட்டமும் வந்தது. அவருக்கு சிறுநீரகக் கோளாறு ஏற்பட்டது. சிறுநீரகம் பழுதாகி விட்டது என்றார்கள். அவள் அந்த வீட்டிற்குச் சென்று அவரைப் பார்க்க முடியவில்லை. ஒரு நாள் மாதவமேனன் இறந்து விட்டதாக அவளுக்குத் தகவல் கிடைத்தது.
சந்திரசேகர் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர். அவருடைய தந்தை குவாரி தொழிலில் ஈடுபட்டிருந்தார். தந்தையின் மறைவிற்குப் பின், குவாரி தொழிலையும் கவனித்துக் கொண்டு சினிமாவில் ஃபைனான்ஸ் செய்யும் தொழிலையும் செய்து வந்தார். சினிமாவில் அவர் நுழைந்ததற்குக் காரணம் பெண்ணாசை. அழகான பெண்களைப் பார்க்கலாம், விதவிதமான பெண்களோடு தொடர்பு வைத்துக் கொள்ளலாம் என்ற ஆசையே அவரை சினிமாவை நோக்கித் தள்ளியது.
சினிமாவிற்கு ஃபைனான்ஸ் செய்யும் தொழிலில் இறங்கிய சமயத்தில் சினிமாவிற்கு துணை நடிகைகளை அனுப்பும் பஞ்சாட்சரம் அறிமுகமானான். பஞ்சாட்சரம் மூலமாக பல பெண்கள் அறிமுகமானார்கள். அவன் மூலம் அறிமுகமான பெண்களில் மோகினி அவருக்குப் பிடித்தமானவளாக இருந்தாள். அவள் முகவெட்டும், உடலமைப்பும் அவள் பேசுவதும் அவருக்குப் பிடித்திருந்தது. அவளை அழைத்துக்கொண்டு அடிக்கடி வெளியூர் செல்வது அவருக்கு வழக்கமாகி விட்டது. அவர்கள் இருவரிடமும் நெருக்கம் கூடியது. அந்தரங்கமாக ஒருவர் மீது ஒருவர் காமமும் அன்பும் கொண்டவர்களானார்கள். இருவரும் ஒருவருக்கொருவர் தவிர்க்க முடியாதவர்களாகிவிட்டனர். மாமல்லபுரத்தில் ஓட்டலில் தங்கியிருந்த போது தன்னுடைய பெயர் மோகினி இல்லையென்றும் சந்திரிகா என்பது தன்னுடைய பெயர் என்றும், தன் தாயார் பெயர் ரஞ்சிதம் என்றும், தந்தை சிறுவயதிலேயே வீட்டை விட்டுச் சென்று விட்டார் என்றும் கூறினாள். அன்று மதியத்திற்கு மேல் உடல்சேர்க்கை முடிந்த சற்று நேரத்தில், சந்திரிகா தன்னை, சந்திரசேகர் வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் அவருக்கு ஆயுள் முழுவதும் விசுவாசமாக இருப்பதாகவும் தெரிவித்தாள்.
சந்திரசேகரின் மனைவிக்கு மூன்று சகோதரர்கள். மூன்று பேருமே வில்லங்கமானவர்கள். ஒருவர் மதுக்கடை உரிமம் எடுத்து நடத்தி வந்தார். ஒருவர் நகராட்சித் தலைவராக இருந்தார். இன்னொருவர் காவல்துறையில் இன்ஸ்பெக்டராக இருந்தார். மனைவி சந்திரகாந்தா அவரை அனுசரித்துப் போகக்கூடியவராக இல்லை. அடிக்கடி அவரை வம்புக்கு இழுத்துக் கொண்டேயிருப்பார். சந்திரிகாவை தனிக் குடும்பமாக வைத்தால், மனைவியின் சகோதரர்களினால் தனக்கும், சந்திரிகாவிற்கும் பிரச்சினை ஏற்படும் என்ற எண்ணம் அவருக்கு இருந்தது. சந்திரிகாவினால் அந்தப் பிரச்சினையைத் தாங்க முடியாது என்றும் தோன்றியது. எனவே, சந்திரிகா கேட்ட போது, அவர் உடனே பதில் சொல்லவில்லை. அப்போதைய நிலையில் அவளுக்கு மனச்சுருக்கத்தை ஏற்படுத்த விரும்பாததனால் `யோசித்து நல்ல பதில் கூறுவதாக' அவளிடம், அவர் கூறினார்.
தூங்கி எழுந்து குளித்துவிட்டு, சிற்றுண்டி சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது அவர், அவளிடம் `நீ சொன்னது நல்ல யோசனை. எனக்கும் அதில் விருப்பம்தான். ஆனால் என் மனைவியின் சகோதரர்கள் அக்கிரமக்காரங்க. அவுங்க அடாவடியை சமாளிக்கிறது கஷ்டம். அவனுக உன் வாழ்க்கையையே கெடுத்துருவாங்க..' என்றார். அவளுக்கு முகம்மாறியது. தொடர்ந்து அவளால் சாப்பிடமுடியவில்லை. கை கழுவவிட்டு, ஜன்னலோரமாக நின்ற வெளியே பார்த்தாள்.
சந்திரசேகருக்கு வாழ்க்கை இன்பமயமாகத் தோன்றியதற்குக் காரணம் சந்திரிகாதான். அவருக்கு பெண் அன்பு என்றால் என்னவென்றே தெரியாது. அவருக்கு பத்து வயதாகும்போதே தாயார் இறந்துவிட்டார். சகோதரிகள் கிடையாது. மனைவியிடம் பேசிக்கொள்வதற்கு அவரிடம் விஷயங்கள் இல்லை. அவளுக்கும், சாப்பாடு பரிமாறுவது; வீட்டு செலவுக்கு பணம் கேட்பது; உடல்சேர்க்கைக்கு அழைக்கும் நேரங்களில் ஒத்துழைப்பது ஆகியவற்றைத் தவிர அவரிடம் வேறு தொடர்புகள் அரிது. சந்திரிகா அவர் வாழ்க்கையில் நுழைந்த பின்னர், அவள் மூலமாக, பெண் அன்பை அவர் அறிந்தார். சந்திரிகா, அவரை குளிப்பாட்டி விடுவாள்; துடைத்து விடுவாள்; ஊட்டிவிடுவாள், தன் மடியில் அவரை தலைவைத்து படுக்கச் சொல்லி தலைமுடிக்குள் கைகளை அலையவிடுவாள்; அடிக்கடி முத்தமிடுவாள். அவருடைய நலனில் அக்கறை கொண்டு விசாரிப்பாள். அடுத்த நாள் காரில் நந்தி மலையைச் சுற்றியுள்ள சில கோயில்களுக்குச் செல்வது என்று முடிவு செய்தார்கள். அவள் மனம் ஒரு நிலைக்கு வந்திருந்தது. ஏமாற்றத்தை அவள் தாங்கிக் கொண்டாள். எதுவும் நடக்காதது போல் இருந்து அவரை மகிழ்விக்க வேண்டும் என்று நினைத்தாள். நகைச்சுவையாக அவரிடம் பேசினாள். மிகையாக நடந்து கொள்வதாகத் தோன்றி சில நேரம் அமைதியாகவும் இருந்தாள்.
நந்திமலை, தூரத்தில் இருந்து பார்க்கும்போது நந்தி போலத் தோன்றும். காரில் வரும்போதே நந்திமலை, நந்தித் தோற்றத்தை இழந்து ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு மாதிரி தோற்றம் தந்ததை காரின் ஓட்டுநர் காட்டிக்கொண்டே வந்தார். தூரத்தில் வால் போலத் தோன்றிய பகுதியை அதற்கு அடுத்தாற்போல் இருந்த சாலையில் கடக்கும்போது அந்த வால்பகுதி, அவ்வாறு இல்லாமல் சிறு சிறு கற்குவியலாக இருந்ததை ஓட்டுநர் சுட்டிக் காண்பித்தார். `தூரத்திலே பார்க்கும் போது ஒரு மாதிரியா தோணும். பக்கத்துலே பாக்கறப்ப வேறு மாதிரி தோணும். ஒவ்வொரு இடத்திலே இருந்து பாக்கும் போதும் ஒவ்வொரு மாதிரி தோணும். எந்த இடத்திலே இருக்கோம்கிறதைப் பொறுத்து அதன் தோற்றமும் அமையும். எது உண்மை என்பது யாருக்கும் தெரியாது' என்றார் ஓட்டுநர். அவர் சொன்னது அவள் மனதை திடுக்கிட வைத்தது. அவள் உள்மனதிற்குள் அவை மாறுதலை ஏற்படுத்தியது.
சந்திரசேகர் சிரித்துக்கொண்டே சொன்னார். `நீ இவனை டிரைவர்னு நெனைக்காதே ஒருநாள் பெரிய கதாசிரியனா வரப்போறான். தயாரிப்பாளர்களை சந்திச்சு கதை சொல்றான். வசனம் எழுதிக் காண்பிக்கிறான். இவன் அப்பா சிவானந்தம் அஸிஸ்டெண்ட் டைரக்டராக இருந்தார். அறிவாளி. நல்லா வர வேண்டிய ஆள். ஆக்ஸிடெண்டுலே இறந்துபோயிட்டார்.' சந்திரிகா ஓட்டுநர் கூறியதை யோசித்துக் கொண்டே வந்தாள். விளங்கிக் கொள்ள முடியாத உள் மாறுதல்கள் ஏற்பட்டன.
சந்திரசேகர், தொழில் விசயமாக, பம்பாய் சென்று ஒரு மாதம் தங்கியிருந்தார். பம்பாயிலிருந்து திரும்பியபின் இரண்டு நாட்கள் கழித்து சந்திரிகாவிடமிருந்து, அவருக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. `அவரைச் சந்திக்க முடியுமா?'ன்னு கேட்டாள். வழக்கமாக சந்திக்கும் இடத்தில் அவளை காரில் ஏற்றிக்கொண்டு மாமல்லபுரம் சென்று திரும்புவதாக ஏற்பாடு செய்து கொண்டார்கள். அறைக்குள் நுழைந்த சற்று நேரத்திலேயே, அவள், அவர் காலைத் தொட்டு வணங்கினாள். இவ்விதமாக நாடகத்தன்மையுடன் ஆரம்பிக்க வேண்டும் என்று அவள் ஏற்கெனவே முடிவு செய்திருந்தாள். எழுந்து அவரை வணங்கிக்கொண்டே `நான் ஒருத்தரை திருமணம் செய்து கொள்ளப் போறேன். ஆசிர்வாதம் பண்ணுங்க' என்றாள்.
அவர் திகைத்தார். சுதாரித்துக் கொண்டு கட்டிலில் அமர்ந்து, அவளையும் அமரச் சொல்லி விவரம் கேட்டார். சினிமா சம்பந்தப்பட்டவரல்ல என்றும், அவருக்கு விசுவாசமாக இருக்க முடிவு செய்திருப்பதாகவும் கூறினாள். அவளை அணுகுவதில் அவருக்கு தடுமாற்றம் ஏற்பட்டது. இதுபோன்ற தடுமாற்றம் அவருக்கு இதற்குமுன் ஏற்பட்டதில்லை. அவளிடம், வருங்காலக் கணவர் பற்றிய விவரங்களைக் கேட்டறிந்தார்.
உடல் சேர்க்கை முடிந்தபின் அவருக்கு சரியாகத் தூக்கம் வரவில்லை. அடுத்தநாள் காலை இருவருமே ஏதோ யோசனை செய்து கொண்டிருந்ததால் சரியாகப் பேசிக்கொள்ள முடியவில்லை. அவளை வழக்கமாக இறக்கிவிடும் இடத்திற்கு வந்தபோது, அவள் காரினுள் அமர்ந்திருந்த நிலையில் அவரை வணங்கினாள். அவரும் பதிலுக்கு வணங்கினார். அவள், இறங்கி திரும்பிப் பார்க்காமல் நடந்தாள். திரும்பிப்பார்ப்பாள் என்று சற்று நேரம் காரை நிறுத்தச் சொன்ன சந்திரசேகர், `பெரிய இழப்பு' என்று நினைத்துக்கொண்டே காரை எடுக்கச் சொன்னார்.
இசையமைப்பாளர் பிரபாகர்ராவ் சொல்லித்தான் சந்திரசேகர் உடல் நலமில்லாமல் இருக்கிறார் என்று சந்திரிகா அறிந்தாள். சந்திரிகாவின் கணவர் ராஜ்மோகன், தொழிற்சாலையில் உள்ள இயந்திரங்களுக்கு ரப்பரினால் ஆன பாகங்கள் தயாரிக்கும் சிறிய தொழிற்சாலை வைத்திருந்தார். சந்திரிகாவை திருமணம் செய்த பிறகு தொழில் வளர்ந்தது. வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்து தற்போது மிகுந்த பணவசதியுடன் மன நிறைவான வாழ்க்கை நிலையில் இருக்கிறார். சந்திரிகாவின் கவனிப்பும், அக்கறையும், ராசியும்தான் தன்னை இந்த நிலைக்குக் கொண்டு வந்தது என்ற நினைப்பு அவருக்கு உள்ளது.
சந்திரிகாவை ராஜ்மோகன் திருமணம் செய்த அன்று அவருக்கு இறுதிவரை விசுவாசமாக இருப்பது என்று வைராக்கியமாக முடிவுசெய்தாள். நெற்றி வகிட்டில் குங்குமம் வைக்கும்போது அந்த வைராக்கியம், அவள் நினைவிற்கு வரும். ராஜ்மோகனைத் திருமணம் செய்யும்போது, சிறிய வீட்டில் இருந்தார்கள். இன்று பெரிய பங்களா, கார்கள் என்று வசதிகள் ஏற்பட்டுவிட்டன. அவரது தொழில் பற்றி அவளுக்கு ஏதும் விளங்காது. ஆனால் அவரை அக்கறையுடன் கவனித்துக் கொள்வது; அவரின் மனம் அறிந்து சந்தோஷமாக வைத்திருப்பது; அவளது இயல்பான குணங்களாக இருந்தன. அவள் தந்த அன்பும், காமமும் அவருக்கு சக்தி கொடுத்து, தொழிலில் அவரைக் கெட்டிக்காரராக்கி விட்டது என்று நினைத்துக் கொள்வாள். ஒரு மகன் அமெரிக்காவில் டாக்டராக இருக்கிறான். இன்னும் திருமணமாகவில்லை. பெண் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். மகளுக்குத் திருமணமாகி சென்னையிலேயே வேறு பகுதியில் தனியாகக் குடியிருக்கிறாள்.
ராஜ்மோகனுடன் திருமணமாகி சில வருடங்கள் கழிந்த நிலையில், ஒரு திருமண நிகழ்ச்சியில், அவள் சந்திரசேகரைப் பார்த்தாள். வணக்கம் சொல்லிவிட்டு, அவள் போக்கில் சென்றாள். அவர், அவளிடம் பேச முற்படுவதைக் கவனித்த போதும் அவள், அதைப் பொருட்படுத்தாமல் சென்று விட்டாள். அவர், அதை எதிர்பார்க்கவில்லை. அவள் வாழ்க்கை மாறிவிட்டது என்று நினைத்துக் கொண்டார். பிறகு ஒருதடவை முக்கியமான மருத்துவமனைக்குச் சென்றிருந்தபோது, அவர் பார்வையாளர்கள் இடத்தில் அமர்ந்திருந்ததைப் பார்த்தாள். அவர் கவனித்தாரா என்று தெரியவில்லை. அவள் தன்போக்கில் சென்று விட்டாள்.
சந்திரசேகரின் வாழ்விலும் பெரிய பொருளாதார ஏற்றம் ஏற்பட்டது. ஃபைனான்ஸியராக இருந்த அவர் சினிமா தயாரிப்பாளராக மாறினார். புதுமுகங்களை வைத்து எடுத்த படம், வெற்றியடையவே, பிரபலமான கதாநாயகனை வைத்து படங்கள் எடுத்தார். சினிமா உலகிலும், சமூகத்திலும் முக்கியப் பிரமுகர்களில் ஒருவரானார். அந்நிலையில் அரசியல் கட்சியில் சேர்ந்து சட்டமன்ற உறுப்பினரானார். மந்திரி பதவி கிடைக்கும் என்ற சூழ்நிலை கூட இருந்தது.
காலமாற்றத்தில் சினிமா சூழ்நிலை மாறி அவர் தயாரித்த பழைய பாணி படங்கள் தோல்வியடைந்தன. அரசியலிலும் மாற்றங்கள் ஏற்பட்டன. அவர் இருந்த அரசியல் கட்சி, எதிர்க்கட்சியானது. அரசியலிலும் புதிய ஆட்கள் உருவாகியிருந்தனர். காலம் செல்லச் செல்ல, வயதும் ஆக, ஆக அரசியலும், சினிமாவும் தனக்குப் பொருந்தாத வகையில் மாறிவிட்டது என்று நினைத்தார். குவாரி தொழிலிலும், குடும்ப உறுப்பினர்களின் நலனிலும் கவனத்தைச் செலுத்த ஆரம்பித்தார். இசையமைப்பாளர் பிரபாகர்ராவ், ஹைதராபாத்தில் குடியிருக்கிறார். சென்னை வந்திருந்த அவரை, தற்செயலாக ஒரு கடையில் சந்திரிகா சந்திக்குமாறு ஆகிவிட்டது. சந்திரசேகர் மருத்துவமனையில் இருப்பதாகவும், மனைவி, மகள், மகன் யாரையும் அவருக்கு அடையாளம் தெரியவில்லை என்றும் ஏதோ பழைய ஞாபகங்களை உளறிக் கொண்டிருக்கிறார் என்றும் அவர் கூறினார். சந்திரிகாவிற்கு மனசஞ்சலம் ஏற்பட்டது. மனம் பழைய நினைவுகளை நோக்கிச் சென்றது. அடுத்தநாள் காரில் நந்திமலையைச் சுற்றியிருக்கிற கோயில்களுக்குச் சென்றுவிட்டு, மலையைச் சுற்றி வந்தாள். ஒரே குழப்பமாக இருந்தது.
அடுத்தநாள், வீட்டிற்குக் கூட்டிச் செல்வதற்கு முன் மருத்துவமனையில் அவரைப் பார்த்துவிட வேண்டும் என்று அவளுக்குத் தோன்றியது. காரில், கடைகளுக்குச் சென்று சில பொருட்கள் வாங்கினாள். யோசிப்பதற்கு அவகாசம் வேண்டும் என்பது போல் ஊரைச் சுற்றி வந்தாள். பிறகு மருத்துவமனையை நோக்கி காரை செலுத்தினாள். தன்னை யாரென்று கேட்டால் என்ன சொல்வது என்று யோசித்தாள். சந்திரசேகர், தன் கணவரின் நண்பர் என்றும், கணவர் வெளியூர் சென்றிருப்பதால் தான் மட்டும் பார்க்க வந்துள்ளதாகவும் பொய் சொல்லலாம் என்று தோன்றியது.
மருத்துவமனைக்குள் நுழைந்தாள். ஏதோ திருட்டுத்தனம் செய்வது போல் மனம் இருந்தது. அறை எண்ணை விசாரித்து, அறையின் கதவைத் தட்டினாள். அறை திறந்தது. நல்லவேளையாக பள்ளியில் படிக்கும் தோற்றத்தில் ஒரு பையன் மட்டும் இருந்தான். என்ன உறவென்று தெரியவில்லை. தயார் செய்திருந்த பொய்யைக் கூறினாள். அவர் முதுகைக் காட்டி படுத்திருந்தார். பையன் அவரைத் தொட்டு இந்தப் பக்கம் திருப்பினான். வயதாகியிருந்தது. தலை, மீசை, தாடி வெள்ளை நிறத்தில் இருந்தது. உடல் கனத்திருந்தது. அவரை இந்தக் கோலத்தில் பார்ப்பது பயமாக இருந்தது. வாழ்க்கையை அவரது கோலம் பகடி செய்வதாகவும் தோன்றியது. அவர் சந்திரிகாவைப் பார்த்து விழித்தார். `யாரையும் அடையாளம் தெரியலை' என்றான், அந்தப் பையன்.
`எங்கம்மா எனக்கு எக்ஸிபிஷன்லே பந்து வாங்கிக் கொடுக்க முடியாதுன்னு சொல்லியிருச்சு' என்றார். சந்திரசேகர். சந்திரிகாவிற்கு அங்கிருக்கப் பிடிக்கவில்லை. வெளியில் வந்தாள். காரை ஓட்டும்போது தடுமாற்றம் ஏற்பட்டது. வீட்டிற்குள் நுழையும் போது, அவளின் கணவர், ராஜ்மோகன் `எங்கே போயிருந்தே?' என்று கேட்டார். அவள் `கடைக்குப் போயிருந்தேன்' என்று சொல்லி வீட்டிற்குள் சென்றாள். முகத்தைக் கழுவிய பின் அவளுக்கு சற்று நிதானம் ஏற்பட்டது.
நன்றி – தீராநதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக