02/01/2012

மதகதப்பு – மேலாண்மை பொன்னுச்சாமி

அருஞ்சுனைக்குள் ஒரு சூன்ய உணர்வு. யாரையோ எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாந்துபோகிற ஏக்க வேதனை.

ஏறிட்டு ஏறிட்டுப் பார்க்கிறார், தெருக்கோடியின் கிழக்கு நுனியை. ராவுத்தர் வருவதாக இருந்தால், இந்தப் பாதையில்தான் வருவார். கிழக்கு முக்கு திரும்புகிறபோதே அவரது சைக்கிள் அடையாளம் தெரிந்துவிடும்.

கோடிக்கணக்கான சைக்கிள் மணிகளிலும் ராவுத்தர் சைக்கிள் மணியின் ஒலியைத் துல்லியமாக அடையாளம் கண்டுபிடித்துவிடுவார், அருஞ்சுனை. சைக்கிள் மணியின் விசையை அவர் கட்டைவிரல் அழுத்துகிற விதம், 'மணிக்கு வலிக்குமோ' என்ற பதைப்பில் பூப்போல அழுத்துகிறவிதம். அந்த வித்தியாசமான விதத்தில் வேறுபடுகிற மணியோசை அதிர்வின் துல்லியத்தில் கண்டுபிடித்துவிடுவார்.

''மைதீன் பாய் வாராரோ?'' என்று முணுமுணுத்தபடி ஏறிட்டுப் பார்த்தால், சைக்கிள் தூரத்தில் தெரியும். கிட்ட வரவர... குல்லா தெரியும். கச்சிதமாக நறுக்கி வடிவமைக்கப்பட்ட சிறு தாடி தெரியும். சந்தன கலர் முழுக்கைச் சட்டை தெரியும்.

சிரிப்பார். பளிச்சென்று மின்னலடிக்கிற வெண்ணிறப் பற்கள்.

''என்ன அருஞ்சொனை, எப்படியிருக்கீரு?''

சைக்கிள் ஹாண்டில்பாரில் ரெண்டு பக்கமும் கனத்த ரெண்டு பைகள் பெரிதாகத் தொங்கும். கேரியரில் ஒரு கனத்த பை. கேரியரின் இரு பக்கமும் ரெண்டு பைகள். எல்லாமே கனத்த கனத்த புடைப்பு, எல்லாமே பத்திக் கட்டுகள். ஊதுபத்திகளின் வாசனை, மயிலிறகாக நாசியையும் மனசையும் வருடும். பன்னீர் பாட்டில்கள், வாசனைத் திரவியப் புட்டிகள், தலைவலித் தைலங்கள்.

வெள்ளை வேட்டியையே வட்டத் தையல் போட்டுக் கட்டியிருப்பார். முழங்காலுக்குக் கீழ் வரை முக்கால் காலைத்தான் வேட்டி மறைக்கும்.

''இதென்ன பாய், வேட்டியை இப்படி வட்டத் தையல் போட்டுருக்கீரு?''

''சைக்கிள்லே ஏறுறப்ப, எறங்குறப்ப வேட்டி ஒதுங்காம இருக்குறதுக்குத்தான். ஒழுக்கமா இருக்கணும்ல?'' என்பார்.

வீட்டு முற்றத்தில் சைக்கிளை நிறுத்தி ஸ்டாண்ட் போட்டு, கிளிப்பைத் தட்டிவிடுவார். அப்பவும் பார வித்தியாசம் காரணமாக வண்டி எந்தப் பக்கமாவது சாய்கிறதா என்று கவனித்து, அப்படிச் சாய்கிற பக்கத்துக்கு ஸ்டாண்டுக்கு அடியில் ஒரு சிறு கல்லை கால் விரலால் நகர்த்தி முட்டுக்கொடுத்துக் கச்சிதப்படுத்துவார்.

''என்ன... நாங்கேட்டதுக்குப் பதில் வரல்லியே'' என்று மென்சிரிப்போடு வந்து, திண்ணையில் உட்கார்வார் மைதீன்பாய்.

''ஏதோ... சாக மாட்டாம... வீண் கஞ்சி குடிச்சுக் கிட்டு, வயசான கெழட்டுச் சனியனா மண்ணுக்குப் பாரமா ஒக்காந்துருக்கேன்...''

சலிப்பையும் விரக்தியையும்கூட மென்சிரிப்போடு வெளிப்படுத்துகிற அருஞ்சுனை. அவருக்கு வயது எழுபதுக்கு மேலிருக்கும். சதையெல்லாம் காலத்தில் கரைந்தோடிவிட, எலும்பும் தோலும் சுருக்கங்களுமாய் குத்துக்கால் வைத்து உட்கார்ந்திருப்பார். பின் மண்டையில் மட்டும் பிறை நிலா மாதிரி அஞ்சாறு வெள்ளை ரோமங்கள். மழுங்கச் சிரைத்த முகத்தில் தொங்குகிற கன்னச் சதைத்தொலி.

''அல்லா படப்புலே எதுவுமே வீணில்ல. நீரு மட்டும் எப்படி வீணாவீர்? ஒம்ம பேத்திகளுக்குக் கதை போடுவீர்ல? வீட்டு வாசலுக்கு காவலாயிருப்பீர்ல? ஒம்ம மகனுக்கு நல்லது கெட்டது எடுத்துச் சொல்லுவீர்ல?''

''அது போதுமா?''

''வீட்ல ஒரு பெரியாளு இருந்தா... பெருமாளு இருந்த மாதிரி. வீட்டுக்கே தனி மரியாதை. நீரில்லேன்னா... நா யாரைப் பாக்க வரப்போறேன்?''

அருஞ்சுனையின் மருமகள் வாசலில் வந்து நின்றாள். இன்முகம் காட்டிச் சிரித்தாள். ''வாங்க ராவுத்தரைய்யா.''

''ஆமம்மா.... நீ நல்லாயிருக்கீயா?''

''ஏதோ... கடவுள் புண்ணியத்துல காலமும் கதையும் நடந்துக்கிட்டுப் போகுது'' - கனிந்த சொற்களில் அடக்கமாகச் சொல்லிவிட்டு, உடம்பை உள்இழுத்துக்கொள்வதற்கு முன்பு, ''மாமாகிட்டே பேசிக்கிட்டு இருங்க... தண்ணி கொண்டாரேன்'' என்றாள்.

''ஒமக்கு வாய்ச்ச மருமகா.... தங்கமான புள்ள. கொணத்துல நெறைகொடம். எனக்கும் வாய்ச்சாளே... ஒரு ராட்சஸி.''

''தங்கச்சி மகா. தாய் மாமாங்குற பாசம்.''

''அதைச் சொல்லும். நீரு குடுத்துவெச்ச புண்ணியவான். வீண் கஞ்சி, மண்ணுக்குப் பாரம்னு வெறுஞ்சலிப்பு சலிச்சுக்கிடுறீரே.''

சின்னத் தட்டில் கருப்பட்டி மிட்டாயும், காராச்சேவும் எடுத்து வந்து ராவுத்தர் பக்கத்தில் வைக்கிறாள். தண்ணீர் ததும்புகிற செம்பையும் வைக்கிறாள். அருஞ்சுனைக்கு ஒரு சின்னத் தட்டு. அதில் அவித்துத் தாளித்த பாசிப்பயறு.

''மாமா ஒடம்புக்கு இதுதான் ஒத்துக்கும். நீங்க வித்தியாசமா எடுத்துக்கிடாதீக. சாப்புடுங்க ராவுத்தரய்யா.''

''இருக்கட்டும்... இருக்கட்டும்'' என்ற மைதீன்பாய், சம்பிரதாயபூர்வமான மறுப்பு, போலியான பிகு எதுவுமில்லாமல்... சொந்த வீட்டில் போல சகஜமான உரிமைப் பாவனையில் கருப்பட்டி மிட்டாயை எடுத்துக் கடித்தார். மனசின் அத்தனை நரம்புகளிலும் இனிப்பின் பரவல்.

சங்கிலிப் பின்னலான வளைவோடு நீள்கிற கருப்பட்டி மிட்டாயைக் காட்டிக்கொண்டே சொன்னார், மைதீன்பாய். ''இந்த பலகாரம் நம்ம ஏரியாவுல மட்டுந்தான் கெடைக்குது. மதுரையிலகூட இருக்குறது இல்ல.''

''ஆனா... இதோட ருசி.... லட்டுலகூட வராதுல்ல?''

''முந்தி கருப்பட்டியிலே போடுறப்ப இதைவிட ருசியாயிருந்துச்சு. இப்ப மண்டைவெல்லத்துல போடுறாக. அப்பவும் இதோட ருசியை பீட் பண்ண ஒலகத்துல ஒண்ணுமில்ல..''

''ஒங்க சங்கரன்கோவில் பிரியாணி உலகப் பேமஸ்ல?''

''ஆமாமா... அது நெசந்தான்.''

அருஞ்சுனை பாசிப் பயிறை அள்ளி வாயில் போட்டார். ஒன்றிரண்டு மிளகாய் வத்தல் துண்டுகளைப் பொறுக்கி வெளியே போட்டார். பாசிப் பயிறை மென்றுகொண்டே பேச்சு கொடுத்தார். ரெண்டு பேருக்கும் அள்ளிவிடவும், வாங்கிக்கட்டவும் விஷயங்கள் இருந்தன. சங்கரன்கோவிலில் நடந்த சிறுசிறு சம்பவங்கள், விபத்துகள், குடும்ப உறவுக்குள் நடந்த நிகழ்வுகள், அழுகைகள், மோதல்கள் என்று மைதீன்பாய் பேச.... பழைய காலத்து விவசாய முறைகளையும் உரத்துக்காகக் கொழை அறுத்துக் குப்பையாக்கியதையும், பாம்புக் கடிபட்டு வைத்தியம் பார்த்த கதையுமாக அருஞ்சுனை பேச.... மருமகள் எவர்சில்வர் கிளாஸில் ஆவி பறக்கக் கொண்டுவந்து வைத்த டீத்தண்ணீர்.

தங்குதடை இல்லாமல் உருண்டோடுகிற உற்சாகமான பேச்சுக் கச்சேரி. இதை ரொம்ப ருசித்து ரசித்தது அருஞ்சுனைதான். இப்படி மதித்துப் பேசி... மனசைப் பகிர்வதற்கு ஆளற்ற தனிமைச் சூன்யத் தகிப்பில் வெந்து வெம்பிக் கிடப்பவருக்கு, மைதீன்பாய் வருகிற நாள், ஒரு திருவிழா மாதிரி. மனசு கிடந்து கொண்டாடும். ஒரு குழந்தை மனசைப் போல குதூகலிப்பார்.

பேச்சு வேகத்தில், அஸ்ஸாம் குண்டுவெடிப்புகளும் மனித உயிர் மாண்டதும் அருஞ்சுனை மனசில் உறுத்தும். 'அதைப் பத்தியும் பேசுவோமா?' - நுனிநாக்கு வரைக்கும் வந்துவிட்ட அந்த நினைவை உள்ளேயே அமுக்கிவிட்டார். 'வேண்டாம். இவருகிட்ட அதைப் பேச வேண்டாம்'.

அதே மாதிரி... மைதீன்பாய் மனசுக்குள்ளும் அமர்நாத் விஷயம் வந்து உரசியது. நாவுக்குள் வந்து முட்டி முண்டியது. 'அதைப்பத்தி இவர்கிட்டே பேசுவானேன்' என்று உள்ளுக்குள்ளேயே மென்று விழுங்கிக்கொண்டார்.

'மனுசருக்கு மனுசரான பழக்கத்துல... சிநேகிதத்துல... பொது விஷயங்களாப் பேசிட்டுப் போறதுதான் நல்லது. மத விஷயம் என்னத்துக்கு?' என்று மைதீன்பாய் மனசுக்குள் ஓடுகிற நினைவுகள். அருஞ்சுனை மனசிலும் அதே.

''லயனையெல்லாம் பாத்து முடிச்சாச்சா?''

''சங்கரன்கோவில்ல சைக்கிளை எடுத்தா... இந்த ஊருதான் எல்லை. எல்லாக் கடைகண்ணிகளையும் பாத்தாச்சு.''

''இந்த ஊர்ல எல்லாக் கடைகளையும் பாத்தாச்சா?''

''பாத்தாச்சு.''

''பத்தி ஏவாரம் நல்லாப் போகுதா?''

''சாமியை நம்பிக் கும்புடுற ஜனங்க இருக்குற வரைக்கும், சாம்பிராணி, பத்தி ஏவாரத்துக்குக் கொறை வராது.''

''எல்லாமே ஒம்ம தயாரிப்புதானா?''

''நம்ம குடும்பத்துக்கே இதுதானே தொழிலு.''

காராச்சேவையும் தின்று முடித்துவிட்டு, செம்புத் தண்ணீரையும் வயிறு முட்டக் குடித்துவிட்டு டீத் தண்ணீரையும் சாப்பிட்டார். வயிறும் மனசும் நிறைந்து ததும்பியதை ''ஹே... அல்லா'' என்று வஞ்சனை இல்லாமல் வெளிப்படுத்திய மைதீன்பாய் எழுந்து சைக்கிள் பக்கம் போனார்.

ஒரு ஊதுபத்திக் கட்டையும், சிறிய சென்ட் பாட்டிலையும் எடுத்து வந்தார். இது நீங்காத வாடிக்கை.

''எம்மா...'' என்று அழைத்தார். எட்டிப் பார்த்த மருமகளிடம் ''இந்தா... தாயி'' என்று நீட்டினார். அவளும் மறுப்போ, பிகுவோ பண்ணாமல், சகஜமான உரிமையோடு சிரித்துக்கொண்டே வாங்கிக்கொண்டாள். வாங்குவதில் ஓர் அடக்கம், பவ்யம்.

''எங்க மாமா சிநேகிதத்தால... எங்க வீட்டுச் சாமிக்கு கமகமன்னு பத்தி வாசம்'' என்று பெருமிதத்துடன் சொல்லிக்கொள்கிற மருமகள்.

''அப்ப நா வரட்டா தாயி?'' என்று விடைபெறுகிற மைதீன்பாய், ''நீ குடுத்த டீத்தண்ணியிலயும் பலகாரத்துலயும் சங்கரன்கோவில் போயிரலாம். அம்புட்டு நிறைவு.''

அருஞ்சுனையிடமும் விடைபெற்றுக்கொண்டு... சைக்கிள் பக்கம் போய் கிளிப்பைத் தட்டுவார். வண்டி வட்டமடித்துத் திரும்பி உருளும். தெருக்கோடியின் கிழக்கு முக்கு வரைக்கும் அவரையும் சைக்கிளையும் இமை தட்டாத மனத் தாகத்தோடு பார்த்துக்கொண்டு இருப்பார் அருஞ்சுனை.

அவருக்குள் ஒரு பரவச உணர்ச்சியின் பீறிடல். ததும்பி வழிகிற மகிழ்வின் தத்தளிப்பு. ராவுத்தரிடம் பேசிப் பழகிக் கழிந்த நிமிஷங்களின் இனிமை. மனப் பகிர்வில் நிகழ்கிற மன விசாலம். சந்தோஷம். மனத் ததும்பல்.

ராவுத்தர் பதினைந்து நாளைக்கொரு தடவை வந்துவிடுவார். ஒரு நாள், ரெண்டு நாள் பிந்தினாலும், வராமல் இருக்க மாட்டார். அவர் வருகிற அந்த நாள், இவருக்கு மகிழ்ச்சித் திருநாள். ஏதோ ஊருக்குப் போகிற சிறுவனுக்கான பரவசமும் குதூகலமும் அவருள் முட்டி மோதும். மைதீன்பாய் வருகையை ரொம்ப ஆவலாக எதிர்பார்ப்பார்.

'நாளை மறுநாள் ராவுத்தர் வருவாரோ?', 'நாளைக்கு வந்துருவாரா?', 'எந்நேரம் வரப்போறாரு?' கணந்தோறும் எதிர்பார்ப்பு. காதலும் தாகமுமான ஆவல் துடிப்பு. அருஞ்சுனை நாடார் குட்டி போட்ட பூனையாக முனங்கித் தவிப்பார்.

'இன்னும் ராவுத்தரைக் காணலியே...' - வந்து ரெண்டு மாதத்துக்கு மேலாகிவிட்டது. ஆளே வரவில்லை. 'ஒடம்புக்கு கிடம்புக்குச் சொகமில்லியோ?'

'குடும்பத்துலே ஏதாச்சும் பிரச்னையோ?', 'வேற ஏதாச்சும் சிக்கலோ?' எனப் பலவாறாக எண்ணி மருகித் தவிக்கிற இவர் மனசெல்லாம் மைதீன்பாய்தான்.

தெருக்கோடியின் கிழக்கு முக்கையே திரும்பத் திரும்பப் பார்க்கிறார். ஏக்கமும் ஏமாற்றமும் ஒரு வேதனையாக மனசை வருத்துகிறது. வதைக்கிறது. ஏமாற்றமும் ஏக்கமும் விரக்தி விளிம்பைத் தொட்டு, எதிர்பார்ப்பு வற்றி வடிந்துவிட்ட ஒரு நாளில்... அதே சைக்கிள் மணியோசை. மைதீன் பாயின் பெல் சத்தம். 'அழுத்தினால் மணிக்கு வலிக்குமோ' என்று மென்மையாக பூப்போல அழுத்தியடிக்கிற மணியின் நாதத் துல்லியம்.

அருஞ்சுனையின் உயிர்த் துள்ளல். மனப் பரவசம். கிழக்கு முக்கை ஏறிட்டுப் பார்த்தார். அங்கே....

மைதீன்பாயின் சைக்கிள். அதே குல்லா. அதே சந்தன கலர் முழுக்கைச் சட்டை. அதே ஊதுபத்தியின் 'கமகம' வாசனையின் மென்வருடல். சைக்கிளை ஸ்டாண்ட் போட்டு நிறுத்திவிட்டு வருகிறார்.

''வாரும்... வாரும்... மைதீன்பாய் வாரும். ஒம்மைக் காணாம.... மனசெல்லாம் கெடந்து ஏங்கிப் போய்ட்டேன். வழியைப் பாத்துப் பாத்து, கண்ணு பூத்துப்போச்சு'' - பாவனையற்றுக் குதூகலத்தைக் கொட்டுகிற அருஞ்சுனையைப் பார்க்கிற மைதீன்பாய், கழற்றிய குல்லாவை மடியில் வைத்துக் கொண்டு திண்ணையில் உட்காருகிறார். முகத்தில் ஓர் அசாத்திய வாட்டம். வெட்டி வெயிலில் எறிந்த பூங்கொடியின் முகவாட்டம்.

''ஏன்... முகம் வாடியிருக்கு? குடும்பத்துல ஏதாச்சும் பிரச்னையா?''

''அதெல்லாம் ஒண்ணுமில்ல.''

''ஒடம்புக்கு?''

''அதெல்லாம்.... குத்துக்கல்லு மாதிரி இருக்கு.''

''பெறகு என்னத்துக்கு வரல்ல?''

''லயனுக்கு வர்றதுக்கே மனசுல்ல. மனசே கெடந்து கசந்து அழருது.''

''ஏன்.... அப்படி? என்னாச்சு?''

அருஞ்சுனையின் முகத்தை ஏறிட்டுப் பார்க்கிற மைதீன்பாய். அவரது கண்ணில் வெட்டுண்ட பல்லி வாலின் துடிப்பு. முகமெல்லாம் வருத்த நிழல்.

''சொல்லும் பாய்... என்னாச்சு?'' - அருஞ்சுனையின் மனப் பதைப்பு. 'என்னவோ ஏதோ'வென்று தவிக்கிற தவிப்பு. ''அருஞ்சொனை, நீரே சொல்லும். எவன் எவனோ எங்க எங்கேயோ குண்டுவெச்சா... நா என்ன செய்வேன்? என்னமோ... நானே குண்டுகளை வெச்சுட்டு.... சைக்கிள்ல லயனுக்கு வந்த மாதிரி... எல்லாக் கடைகள்லயும் ஏங்கிட்டேயே விசாரிக்காங்க, 'என்ன பாய், இப்படி குண்டுக வெடிக்கு?'ன்னு. நான் என்ன பதில் சொல்ல? எப்படிச் சொல்ல? எனக்கு மனசே கெடந்து வேகுது. 'ஏன்டா.... இந்த மண்ணுல வந்து பொறந்தோம்'னு மனசு வெறுத்துப்போகுது'' - சோகமும் குமுறலுமாகக் கைகளை விரித்துப் பேசுகிற மைதீன்பாயின் ஆவேசம். கண்ணில் வந்து முட்டுகிற நீர்த் துளி.

திக்கற்றுத் தவிக்கிற அவரது கைகளை வலது கையால் பற்றி, ஆதரவாக வருடி, அரவணைப்பான சொற்களால் இதமாகப் பேசுகிற அருஞ்சுனை. ''ஒம்ம வேதனையும் வெறுப்பும் எனக்குப் புரியுது.''

''என்ன புரியுது?'' - கலக்கமான அவரது குரலின் உடைவு.

''ஒம்மை மனுசரா மட்டுமே பாக்கணும். அதான், மனுசப் பண்பு. ஒம்மை ராவுத்தரா நெனைக்குறதே தப்பு. அதுலேயும் குண்டுகளை வெச்சுக் கொல்லுற பயங்கரவாதியா நெனைக்குறது அதைவிட கொடூரத் தப்பு.''

அருஞ்சுனையின் பாசக் குழைவான சொற்கள், அவரது ஆன்மாவையே வருடிவிட்டன. கண்ணில் வந்து முட்டிய நீர்த் துளி, உடைந்து சிதறித் தெறிக்கிறது. அருஞ்சுனையின் உள்ளங்கைக்குள் மைதீன்பாயின் கைகள் கதகதப்பை உணர்ந்தன!

நன்றி - விகடன்

3 கருத்துகள்:

  1. நெஞ்சை நெகிழ வைக்கும் அருமையான கதை.
    எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  2. Melanmai Ponnusamy is one of the wonderful writers in Tamil. Another fine story from him. please post more

    பதிலளிநீக்கு