05/12/2011

ஏழுமலை ஜமா - பவா செல்லதுரை

சொந்த ஊருக்குப் போகிறோம் என்கிற நினைப்பே மற்ற எல்லாத் துயரத்தையும் வடியச் செய்தது. உடல் முழுக்க புது ரத்தம் ஊறுவது மாதிரியிருந்தது. பஸ் முழுக்க கூட்டம் நசநசவென்றிருந்தது.


எல்லாவற்றிற்கும் பழக்கப்பட்டிருந்தது மனசு. சிட்டி ரவுண்ட் மார்க்கெட் மோரி நாத்தம் பழகி புதிய மணமாய் அவனுள் உறைந்திருந்தது. சீட் நெம்பர் தேடி உட்கார்ந்து ஆசுவாசமாய் பக்கத்தில் பார்த்தான். அழுக்கும் சோர்வும் அப்பிய முகங்களில் அதையும் மீறின லேசான உற்சாகம் துளிர்ந்ததைக் கவனிக்க முடிந்தது. ஊருக்குப் போகிறோம் என்கிற, துளியே துளியான சந்தோஷம்  அது. கிராமத்தில் இரண்டொரு நாளில் அது மறையும். பக்கத்து சீட்டில் இருப்பவனைப் பார்த்து விட்டு இவ்வளவு யோசிக்க முடிகிறது. இப்போது பழைய நினைவுகள் ஞாபகத்துக்கு வந்தது.


பெங்களூரில் சாய்ந்த தலை ஓசூரில் வந்துதான் நிமிர்ந்தது. அப்புறமும் தூங்க முயன்று, முடியாமல் முழித்துக் கிடந்தபோது வந்த பயம் இன்னமும் அப்படியேதான் இருக்கிறது.


ஏன் இப்படி சம்மந்தமில்லாத நினைவுகள் வந்து அலைகழிக்கிறது? எல்லாவற்றையும் சிட்டி ரவுண்ட் மார்க்கெட் மோரியிலேயே கரைத்தாகிவிட்டது. எதைப் பற்றியும் நினைக்காமல் ஊர்போய்ச் சேர வேண்டும். மனசு மட்டும்தான் இப்படி நினைத்தது. கண்கள் இப்படியும் அப்படியும் அலைந்தது. பஸ்ஸில் உட்கார்ந்திருப்பவர்களில் சிட்டி ரவுண்ட் மார்க்கெட் முகங்கள் அடையாளம் தெரிகிறது. பழக்கூடை சுமந்து காய்ப்பேறிய கைகள் அவனைக் கஷ்டப்படுத்துகிறது. அழுகை அழுகையாய் வருகிறது.


இறங்கி விடலாமா?


இல்லை. இந்த நகரம் இனியும் எனக்கு வேண்டாம்.


ஊருக்குப் போய் என்ன பண்ண?


குடும்பத்தோட கொளத்துல விழுந்து மாஞ்சாலும் சரி, இங்க வேணாம். கம்பியில் தலை சாய்ந்து, கண்களை இறுக்கமாக மூடிக் கொண்டான். எதற்கோ காத்திருந்தது போல, எது ஞாபகம் வரக்கூடாதோ அதெல்லாம் பிய்த்துக்கொண்டு வந்தது.


‘ஏழுமலை, கூத்தாடும் போதுதான் இந்த ஜிட்டு தலப்பெல்லாம். கூடை தூக்குறப்போ வேணாம். கெராப்பு வெட்டிக்கோடா.’


சொல்றவனுக்கு இவன் மகன் வயசிருக்கும். இங்கு எல்லாருமே போடா வாடாதான். எத்தனை வயசுக்காரனயும் இப்படி சொல்ல சிட்டி ரவுண்ட் மார்க்கெட் சீனியாரிட்டி தைரியம் கொடுத்திருந்தது. யாரும் எதையும் பேச முடியாது. மரியாதைக்கெல்லாம் ஆசைப்பட்டா எவன் கை வேணுன்னாலும் நீளும். கைகள் ஊர்வாரியா, ஜில்லாவாரியா, ஜாதிவாரியா பிரியும்.


எந்த நேரமாயிருந்தாலும் கூடையை இறக்கி வைத்துவிட்டு ஆட வேண்டும். பாதங்களில் சலங்கைகளின் சப்தம் எழ, சுற்றி ஆடின ஊர் ஞாபகம் மனசில் முட்ட, மார்க்கெட் கொய்யா இலையும், சப்போட்டா இலையும் காலில் மிதிபடும். மார்க்கெட்டில பல உருவங்கள் நின்று பார்க்கும். ‘‘லூசு’’ என்ற புரிதல் பல முகங்களில் எதிரொலிக்கும். அதெல்லாம்தான் அவனுக்கு மரண அடிகள், வேட்டைநாய் மாதிரி துரத்தித்துரத்திக் குதறியது. தப்பிக்க, எங்கும் ஓடிப்போக முடியவில்லை. சுற்றிச்சுற்றி சிட்டி ரவுண்ட் மார்க்கெட்டுக்குள்ளேயே வாழ்க்கை அவனை இயக்கிக் கொண்டிருந்தது.


மீறியாகி விட்டது. இதுவரை இவன் மென்னியைப் பிடித்துக் கொண்டிருந்த வாழ்வின் கலகத்தைத் திருப்பி இறுக்கியாகி விட்டது. இனி ஊர்போய்விட வேண்டும். கொஞ்சம் கொஞ்சமாய் வெளியாக இந்த எண்ணம் உருக்கொண்டது. ஊர்தான் இவனை நெட்டித் தள்ளி காண்டோன்மென்ட் நெரிசலில் தள்ளியது என்பதெல்லாம் இதுவரை இருந்த வெறியில் ஞாபகம் வரவில்லை. ஆனால் இந்த பஸ் பயணம் இப்போதே அதைக் கொண்டு வந்து ரப்பர் பந்து மாதிரி மனசில் மோதுகிறது.


சுற்றுப்பக்கம் இருபது மைலுக்கு இருபது மைல் ‘‘ஏழுமலை ஜமா’’ தான். பாக்கு வைக்கும்போதே கிராமங்களுக்குள் போட்டி கிளம்பும். அத்தனை மவுசிருந்தது ஏழுமலை ஜமாவின் சலங்கை சத்தத்திற்கு. கிராமங்களுக்குப் பெரும்பாலும் நடந்தே புறப்படுவார்கள். அது ஒரு மாதிரியான போதை. வழிநெடுகப் பேசிக் கொண்டே போவது. சாராயம் விற்கிற புதரை நோக்கிக் கால்கள் தானாக அடையும். ஒரு மாதிரியான பக்தியோடு யாருக்கும் அதிகமாகி விடாமல் மருந்துமாதிரி குடிப்பார்கள். அப்புறம் பேச்சு நின்றுவிடும். பாட்டு... பாட்டுதான் வழிநெடுக.


பாட்டின் சத்தமும், லயமும், இந்தப் பிறவிக்கான முழு சந்தோஷத்தையும் இம்மி, இம்மியாக அனுபவிக்கிற மாதிரி மற்றவர்களைப் பொறாமைப்படுத்தும் அடர்த்தியான அந்த ராத்திரிகளின் நினைவுகள்தான் இவனை பஸ் ஏற்றி விட்டிருக்கிறது. விடியவிடியக் கூத்து நடக்கும். மறக்க முடியாத கதைகள். கூத்து முடிய, காலை பத்து, பதினொன்றுகூட ஆகும். வேஷம் கலைக்காமலேகூட படுதாவுக்குப் பின்னால் சாராயம் குடிப்பார்கள். புதுசாய்ப் பார்ப்பவர்களுக்கு ஆச்சரியமாய் இருக்கும். பீமன், தர்மர், துரியோதனன், கர்ணன் என்று ஆளாளுக்கு ஒரு டம்ளரை உள்ளே இறக்குவார்கள்.


அநேகமாய்ப் பல ஊர்களில் ஏழுமலையை விட்டுவிட்டு ‘‘ஜமா’’ ஊர் திரும்பும். ஏழுமலைக்கென்று திறக்கும் கதவுகளும், ஒரு கோடி பிரியத்தோடு பரிமாறப்படும் மாட்டுக்கறியும், சாராயமும், ராத்திரிக்கு கிடைக்கும் ஒடம்பும் என அவனுடைய வாழ்வின் சுவாரஸ்யங்களே தனிதான். ரெண்டு மூன்று நாட்கள்கூட ஆகும் ஊர் திரும்ப.


திகட்டத்திகட்ட வாழ்கிற மாதிரி இருந்தது, செல்லங்குப்பம் கூழ்வார்க்கும் விழா நோட்டீஸ் வருகிறவரை. நம்பமுடியாமல் மறுபடி மறுபடி படித்தான். நோட்டிஸின் கீழே கொட்டை எழுத்துகளில் போட்டிருந்தது. இரவு எட்டு மணிக்கு ரஜினிகாந்த், கமலஹாசன், ஸ்ரீதேவி நடித்த 16 வயதினிலே வீடியோ படம் காண்பிக்கப்படும். ஏதோ மனசுக்குள் அறுந்து விழுவது கேட்டது. இவன் திமிரத்திமிர ஒரு திகில் வந்து வலுக்கட்டாயமாய் இவனுள் நுழைவது புரிந்தது.


‘‘இன்னாடா இது, சாமிக்கு முன்னாடி, சினிமாக்காரனை ஆடவுட்ரானுங்க’’, வேதனை வாய்வழியே சிந்திவிடாமல் கேட்டான்.


அதன் நியாயம் பல வகைகளில் அவனுக்கு விளக்கப்பட்டது.


‘‘உங்களுக்குன்னா ரெண்டாயிரம், மூவாயிரம் ஆவும். இது முன்னூறு நானூறுல எல்லாம் முடிஞ்சிடும். மழை மாரி இல்லாத இந்த நேரத்தல ஜனங்க கைல காசு இல்லைன்னா...’’


‘‘போதும், போதும். நிறுத்திக்குங்க.’’ தாங்க முடியவில்லை. அவனுக்கு எல்லோருக்கும் முன்னால் ஆத்திரம் சிதறியது.


அப்பறம் சுத்துப்பக்க கிராமத்துல இருந்து வந்த எல்லா நோட்டீஸ்களிலும் நடிகர், நடிகைகள் பெயராகத்தான் மாறியிருந்தது. இத்தனைக்குப் பிறகும்கூட சில ஊர்த்தெருக்களில் கூத்து நடந்து கொண்டிருந்தது இவனுக்கு ஆச்சரியமாய் இருந்தது.


‘‘இந்தக் காலனிக்காரனுங்கதான் இப்படி சினிமாக்காரனுக காலுல உழுந்துட்டானுங்க ச்சீ... இந்த ஜாதில பொறந்தம்பாரு’’ சதா இதே புலம்பல்தான். கூத்துக்காக இதுவரை ஊர்த்தெருவில் இந்தப் பாதம் பட்டதில்லை.


கரும்பு வெட்ட, சூளை போட, ரிக்ஷா ஓட்டவென்று, தர்மரையும், பீமனையும், பாஞ்சாலியையும் வாழ்க்கை பிரித்தனுப்பியது. இவன்தான் பிடிவாதமாய் எதிர்த்து நின்றான்.


எந்தப் பிடிவாதமும் ஒரு மாசத்துக்குக் கூட தாக்குப் பிடிக்கவில்லை. ஊருக்குச் செல்ல வெட்கப்பட்டுக் கொண்டு, நடுராத்தரியில் பெங்களூருக்கு பஸ் ஏறினான். போதும், போதும் என்னை நெரிக்காதே என்று ஏதோ எதிரில் நின்ற பிசாசிடம் கெஞ்சுவது மாதிரிதான் சிட்டி ரவுண்ட் மார்க்கெட்டில் இருந்து இதோ இப்போது தப்பியது.


தெருவில் நடக்கிறபோது ஒன்றிரண்டு வீட்டு அரிக்கேன் விளக்குகள் விழித்திருப்பது தெரிந்தது. நடை தானாகவே சத்தத்தை குறைத்துக் கொண்டது. இவனுக்கு இவ்வளவு அந்நியமாகிவிட்ட ஊரைப் பார்க்கப் பார்க்கக் கோபமாய் வந்தது.


சத்தம் போடாமல் வள்ளியை எழுப்பினான். ரெண்டு பேருக்குமே பேச ஏதுமற்றுப்போனது. விரித்திருந்த பாயில் படுத்து அவள் பழைய புடவையைப் போர்த்திக் கொண்டான். அவள் இவனைப் போர்த்திக் கொண்டாள்.


மத்தியானத்துக்கு மேல், இவன் வந்திருப்பது ஊருக்குத் தெரிந்தது. ஒவ்வொரு கூரையிலும், கேள்விகள் முளைத்தது. இதுக்குப் பயந்துதான் பெங்களூருக்கு ஓடினது. மீண்டும் அதே கேள்விகள். எப்படி ஏழுமலை வந்தாப்பலே?


இப்படித்தான் துவங்கின அவை. அப்புறம், அவை காயத்தில் குத்துகிற கோணி ஊசிகளாய் மாறும், மாறின. சித்தப்பிரமை பிடித்தவன் மாதிரி எல்லாருக்கும் ஒரே பதில் சொன்னான்.


‘‘அப்புறம் இன்னா பண்ணப் போற?” யார் மூலமோ வாழ்வு அவனைக் கேட்கிற அழுத்தமான கேள்வி இது. முடியவில்லை இதற்கு பதில் இல்லாமலே பெங்களூரை விட்டுப் புறப்பட்டிருக்கிறான்.


இருட்டினதுக்கப்பறம், ‘‘ஜமா’’ ஆட்கள் விசயம் கேள்விப்பட்டு வந்தார்கள். அதே மரியாதை இருந்தது ஒவ்வொரு மொகத்திலும். கரும்பு வெட்டக் கூப்பிட்டார்கள், சந்தையில் மாட்டுத்தரவு செய்வது கவுரவமான தொழில் என்றார்கள், எதையும் கேட்கிற மாதிரி இல்லை மனசு.


‘‘எவனுக்கும் கூத்த போடலாம் வாத்தியாரேன்னு சொல்ற தைர்யம் வரலையே’’ என்று குச்சியால் தரையைக் கிளறிக் கொண்டிருந்தான்.


எல்லாரும் போனபிறகு மனசு கனத்திருந்தது. எதுக்கோ ஏங்கியது. வாடகைக்கு சைக்கிள் பேசி எடுத்துக் கொண்டு வேளானந்தலை நோக்கி மிதித்தான். பிரிட்ஜ்ஜைத் தாண்டுகிற போது ஆசை வந்தது.


‘‘பாடிப் பார்க்கலாமா?”


முடியவில்லை திட்டுத் திட்டாய் மனதில் உறைந்திருந்த ரத்தக் கறைகளில் பாட்டும் சந்தோஷமும் ஒட்டிக் கிடந்தன. பாட்டுக்கு ஏதோ ஒன்று முட்டித் தள்ளுவதும், பின்பு அதுவே கையைப் பிடித்துக் கொள்வதுமாய் அவஸ்தைப் பட்டான்.


மொத்தமாய் நாலு டம்ளர் குடித்து, பச்சை மொளகா அதிகமா போடச் சொல்லி, மொச்சையை கையில் வாங்கி சைக்கிள் மிதிச்சப்போ நிதானம் இழக்க ஆரம்பித்தான். இன்னைக்கு மத்தியானம் கண்ணுசாமி காட்டின கோணலூர் கூழ் ஊத்ர நோட்டீஸ் ஞாபகம் வந்தது. ‘‘அம்மன் கோயில் கிழக்காலே’’ கலர்ப் படமாம்.


சொந்த ஊரே இவனை எட்டி ஒதைச்சி, வேணான்னு முடிவு செஞ்சிட்டப்புறம் இனி எவன் கூப்புடுவான்? சொந்த ஊர்க்காரனை விட, விஜய்காந்தும், ராதாவும் முக்கியமாகி விட்டது ஊருக்கு.


பிரிட்ஜ்ஜை தாண்டும்போது லாரி ஒன்று இவனைக் கடந்து போனது. நிதானமாக சைக்கிள் ஓட்ட முயன்றான்.


வடக்கே இருந்து கூத்துப்பாட்டு சத்தம் கேட்டது.


பிரமை. வெறும் பிரமை. நாளெல்லாம் இதே நெனப்போட இருந்தா இப்படித்தான்.


இல்லை சைக்கிள் நகர நகர பாட்டு துல்லியமாகிக் கொண்டே வந்தது.


இப்போது பெட்ரோமாக்ஸ் வெளிச்சமும் தெரிந்தது. வெறிபிடித்த பிசாசு மாதிரி சைக்கிள் வேகமெடுத்தது. மண்ரோட்டில் சைக்கிளை நிறுத்திவிட்டுத் தட்டுத் தடுமாறி மரத்தடிக்கு நடந்தான்.


பத்துப் பதினைந்து உருவங்கள் மங்கலாய்த் தெரிந்தன. மர ஸ்டூல் போட்டு ஒருத்தன் உட்கார்ந்திருந்தான். கையில் பெரிய நோட்டிருந்தது. கூத்துப் பழகிக் கொண்டிருந்தவர்கள் எல்லாருமே புது ஆட்கள், எல்லார் முகத்திலும் அது திட்டுத்திட்டாய்த் தெரிந்தது. ஒரு செடி, மனசுக்குள் முளைப்பது மாதிரி இருந்தது இவனுக்கு. தள்ளாடி விழப் போனவனை மரம் தாங்கிக்கொண்டது. கூர்ந்து அந்தக் கால்களைப் பார்த்தான். சரியில்லை. அந்தக் கிருதாக்காரனின் அடவு தப்புத் தப்பா வருது. உள்மனசு இவனுக்குள்ளேயே பேசிக் கொள்வது கேட்டது. என்ன வாத்தியார் இவன், அடவைக் கவனிக்காம புஸ்தகத்தைப் பாத்து படிச்சிட்டா போதுமா, ‘‘அடவு தாண்டா உசுரு ஆட்டத்துக்கு.’’


கிருதாக்காரன் தொடர்ந்து தப்புப் பண்ணிக் கொண்டே இருந்தான். ஏதோ உள்ளிருந்து கிளம்ப, ‘தகிதோம், தகிதோம்’ என அந்த வட்டத்துக்குள் பெரிய வன்முறையாளனைப் போலக் குதித்தான். அவசரமாய் ஒருவன் பெட்ரோமாக்ஸ் விளக்கை நகர்த்திக் கொண்டான். அவனுக்குள்ளிருந்த வெறிபிடித்த பேய் விடாமல் ஆடியது.


மடேரெனக் கீழே விழந்தபோது, ரெண்டொருவர் அதிர்ந்தனர். பெட்ரோமாக்ஸ் வெளிச்சத்தில், ஒரு கை மூக்கில் கை வைத்துப் பார்த்தது.


‘‘மூச்சி இருக்கு’’


‘‘போதை போலிருக்கு.’’


வாத்தியார் நிதானமாய் எழுந்து வந்தார். முகத்தைத் திருப்பி வெளிச்சத்தில் பார்த்தார்.


‘‘நம்ம கோணலூர் ஏழுமலை’’


எல்லோரும் வாத்தியாரையே பார்த்திருந்தார்கள். யாருமே எதிர்பார்க்காமல் அவர் கால்களைத் தொட்டுக் கும்பிட்டு விட்டு ‘‘தண்ணி கொண்டாடா’’ என்ற சத்தத்திற்குப் பலகால்கள் ஓடின. அந்த வார்த்தைகளில் அவ்வளவு பிரியமும் ஏதோ நம்பிக்கையுமிருந்தது.


*******

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக