18/12/2011

தனி ஒருவனுக்கு – புதுமைப்பித்தன்

அம்மாசிச் சாம்பான் பிறப்பில் பிச்சைக்காரன் அல்ல. இவன் பிறந்த மூன்றாவது மாதத்திலேயே இவனுடைய தகப்பனார் பாவாடை காலமாகி விட்டான். வீட்டிலிருந்த சொத்தை (கலப்பை முதலியன) சின்னக் கடன் விஷயங்களுக்கு, சேரி பாபத்திலும், பண்ணை சுப்பராயப் பிள்ளை பற்றிலுமாக பறிமுதல் செய்யப்பட்டது.

இவனுடைய வளர்ச்சிப் படலத்தைப் பற்றிய பிள்ளைத் தமிழ் யாரும் எழுதிவைக்காமல் போய்விட்டதால் இருபது வயது வரைமட்டுமுள்ள சரித்திரக் குறிப்புகள் கிடைக்கவில்லை. கொஞ்சநாள் பண்ணையில் வேலை பார்த்து வந்ததாகவும் தெரிகிறது. பிள்ளையவர்கள் மனமுவந்து கொடுத்த சிறிய கடன் தொகையைக் கொண்டு கலியாணமும் நடந்தது. நடந்த மூன்றாம் மாதம் இவன் தாய் பரகதி - பறையருக்கு பரகதியடைய உரிமையுண்டோ என்னவோ - செத்துப் போய்விட்டாள்.

என்ன காரணத்தாலோ இவனது பெண்டாட்டியும் தாய் வீடு நோக்கிக் கம்பி நீட்டி விட்டாள். ஆக இம்மாதிரி தொல்லைகளால் பழைய கடனும் கொடுக்க முடியாமல் புதிய கடனும் வாங்க மார்க்கமில்லாமல் இருக்கும் பொழுது ஒரு ரஸவாத பண்டிதர் - சாமியார் - அங்கே வந்து சேர்ந்தார்.

சாமியாருக்கும் அம்மாசிக்கும் எப்படியோ பழக்கம் ஏற்பட்டது. கேட்பானேன்; பிள்ளையவர்கள் வீட்டுப் பித்தளை செம்புப் பாத்திரங்களில் கை வைத்தால், அவ்வளவையும் சுவர்ணமாக்கித் தந்து விடுவதாகச் சுவாமியார் வாக்களித்தார்.



தொல்லை தீர வழியிருக்கும்பொழுது தர்ம சாஸ்திரமா குறுக்கே நிற்க முடியும்? பண்ணைப் பிள்ளையவர்களின் பாத்திரங்கள் ஊருக்குப் பக்கத்திலிருந்த பாழ் மண்டபத்திற்கு வந்துவிட்டன. ஸ்புடம் போட்டுத் தங்கமாக்கிவிட. இதற்குள் பிள்ளையவர்களுக்கு எப்படியோ தெரிந்துவிட, "பயலை அப்படியே புடம் போட்டுவிடுகிறேன் பார்" என்று இரைந்து கொண்டு பண்ணை ஆட்களைத் திரட்டி வந்தார்.

கூட்டத்தைத் தூரத்தில் கண்டவுடன் அந்தர்த்தியானமாவது தவிர வேறு வழியில்லை என்று கண்ட சாமியார் நடையைத் தட்டிவிட்டார். அம்மாசியைக் கையும் களவுமாகப் பிடித்துக்கொண்டார்கள். அன்று பட்ட நரக வேதனைக்குமேல் ஆறுமாதக் கடுங்காவல்.

சில சந்தர்ப்பங்களில் சிறைவாசம் ஒரு புகழைக் கொடுக்கும். சமுதாயத்தில் ஒரு மகத்தான ஸ்தானத்தைக் கொடுக்கும். அம்மாசியின் சிறைவாசம் அந்த ரகத்தைச் சேர்ந்ததல்ல.

சிறையைவிட்டு வெளியேறியவுடன் அம்மாசி சொந்த ஊருக்குச் செல்லவில்லை. நியாயத்தின் முடிவைக் கண்டு பிடித்த அந்த மகான் இருக்கும் திருப்பதிக்கு - இந்தச் சண்டாளன், இந்த பதிதன், இந்த சமூகத் துரோகி, புழு - செல்ல முடியுமா?

விலை சரசமான காவிகட்டி இருக்கும் பொழுது சோற்றுக்குப் பஞ்சமா என்று பட்டது. உடனே அம்மாசிச் சாம்பான், ஏழை அம்மாவாசைப் பரதேசியானார்.

தாயுமானவரையும் குதம்பைச் சித்தரையும் தப்பும் தவறுமாக உச்சரிக்க எங்குதான் கற்றுக்கொண்டாரோ? முதலில் பக்கத்து ஊரில் முகாம் போட்டார். வீட்டுக்கு முன்வந்து நின்றால் இரண்டில் ஒன்று தீர்மானமாகத் தெரிந்தாலொழியப் போவதில்லை.

கொஞ்ச நாள் கவலையற்ற சாப்பாடு.

ஒரு மாதத்திற்கு முன் தான், ஏழை அம்மாவாசி சுவாமியாரின் வழியாக, இறந்துபோன தாயுமானவர் கடவுளின் பரிபூரணானந்தத்தை எங்கள் ஊர்த் தெருவழியாக வாரி இறைத்துக் கொண்டிருந்தார். ஊரைக் கவர்ச்சிக்கும்படி ஒன்றும் செய்யவில்லை. நூற்றியோராவது பிச்சைக்காரனாகத்தான். கவலையற்ற சாப்பாடு. எங்களூர்ப் பாழ் மண்டபத்தில் கவலையற்ற நித்திரை, ஸ்வானுபூதி.

இதற்குள் யாரோ சுவாமியாரின் பூர்வாசிரம ரகசியத்தையறிந்து ஊர் பூராவும் பரப்பிவிட்டார்கள். உளவு பார்க்க வந்தவன் என்ற தங்கள் கொள்கையையும் சேர்த்துக் கட்டிவிட்டதினால், எங்களூர்க்காரர்கள் மதிப்பில் சுவாமியார் பதவியிலிருந்து திருட்டுப் பேர்வழி என்ற ஸ்தானத்திற்கு இறங்கிவிட்டார். பரி மறுபடியும் நரியாவது திருவிளையாடல் காலத்துக்காரர்களுக்கு மட்டுந்தானா உரிமை?

இவ்வளவும் ஒரே நாளில்; இது சுவாமியார் - பாவம் - அவருக்குத் தெரியாது.

வழக்கம்போல் கப்பறையுடன் 'அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமான பொருளைத் தேடி' எங்களூர்க்காரருக்குத் தெரியப்படுத்தத் தெருக்கோடியில் வருமுன்னமே அவரை சூழ்ந்து ஒரு பெரிய கூட்டம் கூடி விட்டது.

ஏசலும், இரைச்சலும் சுவாமியாருக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை. அவரும் காதுள்ள, சாதாரண அறிவுள்ள மனிதன் தானே! பூர்வாசிரமக் கதைதான் இந்த விபத்திற்குக் காரணம் என்று தெரிந்து கொண்டார். தெரிந்து என்ன செய்கிறது? அதற்குள் தான் மரத்துடன் வைத்துக் கட்டியாகிவிட்டதே.

தர்மத்தின் காப்பாளர்களும் நீதியின் பொக்கிஷங்களுமான பெரியார்கள் நிறைந்த இந்தக் கிராதகயுகத்து எங்களூர்வாசிகள் இம்மாதிரியான மோசத்தையும் புரட்டையும் பொறுத்திருப்பார்களா? நியாயத்தைப் பரிமாறுவதற்காகக் கருட புராணத்தைப் பாராயணம் செய்த ஹிந்து தர்மத்தின் மெய்க்காப்பாளர்களான எங்களூர்ப் பெரியார்கள், அதற்குத் தகுந்த மகத்தான ஒரு மனநிலையைத் திருப்தி செய்தார்கள்.

இந்தத் 'திருத்தொண்டினால்' சுவாமியாரை எளிதில் கண்டு பிடிக்க முடியாது போய்விட்டது. காலில் பலத்த காயம். முகத்தில், முதுகில் புளியம் விளார்களின் முத்தத்தினால் உண்டான இரத்தம் உறைந்த நீண்ட வரைகள். உடம்பு, முகம் முழுவதும் ஒரே வீக்கம்.

"பயம் இருக்கட்டும். உன்னை ஜெயிலுக்கு அனுப்பாமல் மன்னிக்கிறோம். ஓடிப்போ..." என்று தங்கள் தயாள சிந்தனையைச் சுவாமியாருக்கு எடுத்துக்காட்டி ஊருக்கு வெளியே பிடித்து நெட்டித் தள்ளி விட்டார்கள். சுவாமியாருக்கு அந்தப் பாழ் மண்டபத்தையடைவதற்குள் மோக்ஷமோ நரகமோ இரண்டிலொன்றிற்குப் போய்விட்டுப் பத்துத் தடவை திரும்பிவிடலாம் என்று தோன்றிற்று.

இதற்குமேல் எங்களூரில் கவந்தப் படலத்தை நடத்தலாம் என்ற நம்பிக்கை அவருக்கு இருக்குமானால் அவரைப் பைத்தியக்காரன் என்று சொல்லிவிடலாம். சுவாமியார் அப்படி ஒன்றும் நினைக்கவில்லை. ஆனால், இந்த ஊரைவிட்டுப் போவதற்கும்தான் இவ்வூர் மஹா ஜனங்களின் அன்பின் திருத்தொண்டின் மூலமாகக் காண்பித்து, அவரை அங்கிருந்து அகலாமலிருக்கும்படி செய்துவிட்டார்களே.

அந்தப் பாழ் மண்டபம் எப்படி இருந்தாலும் வேளைக்கு வேளை உணவும் மருந்தும் கொடுக்கும் ஜெனரல் ஆஸ்பத்திரி அல்ல. மூன்று நாட்கள் அவர் இருந்த ஸ்திதியில் அங்கு இருந்தால் வலுவில் சுமத்தப்பட்ட உண்ணாவிரதம் தான் நிச்சயம்.

காய்ச்சல், வலி, பசி தாகம் இவைகளின் கூத்துப் பொறுக்க முடியவில்லை. சற்றுத் தூரத்திலுள்ள கோபுரங்களிலும் மரக்கிளைகளிலும் சுவாமியாரின் இறுதியை எதிர்பார்த்து, அவரைத் தங்கள் வயிற்றில் சமாதியடையச் செய்ய, காக்கைகளும் கழுகுகளும் காத்திருந்தன. அவைகளும் இவரைத் தீண்டாத பறையன், பதிதன் என்று நினைத்தோ என்னவோ கிட்டவே நெருங்கவில்லை.

ஊருக்கு வெளியில், அந்தப் பாழ் மண்டபத்தின் பக்கத்தில்தான் ஒரு சுடலைமாடன் பீடம், ஊரின் காவல் தெய்வம் என்ற கௌரவத்துடன், நமது அரசாங்கத்துடன் கூட்டுறவு செய்துகொண்டு, வரிவாங்கும் தொல்லைகள் எல்லாம் அற்ற ஒரு மௌன அரசாட்சி நடத்திக் கொண்டிருந்தது. அதைப் பற்றிக் கதைகள் பல.

எங்களூர் மறவர்களுக்கு 'பிஸினஸ் டல் ஸீஸனில்' சுடலைமாடன் பாடு கொண்டாட்டம்தான். தினம் திருவிழா. நாலு பணத்தைக் கண்டால் சுடலைக்கு படைப்பு என்ற சம்பிரதாயத்தை வைத்துக் கொண்டு, குடித்துக் களிப்பார்கள்.

அன்று சின்னச்சாமித் தேவனுக்குப் படைப்புப் போட வேண்டும் என்று தோன்றிற்று. கேட்பானேன்; சாயங்காலம் முதல் ஒற்றைப்பறை மேளம் ஒன்று சுடலைமாடனுடைய கேட்காத திருச்செவிகளுக்குச் சங்கீதக் கச்சேரி நடத்தியது.

படைப்புக்குரிய பொங்கல், பக்கத்து மரத்தடியில் சின்னச்சாமித் தேவன் மனைவியின் கண்காணிப்பில் தயாராகிக்கொண்டிருந்தது. மாடனைச் சுற்றி தேவரும் அவருடைய நண்பர்களும் பூசாரியும்தான்.

இரவு பத்து மணியாகிவிட்டது. பானையும் அடுப்பிலிருந்து இறங்கி 'சாம்போர்' என்று அவர்கள் உச்சரிப்பில் மரியாதை பெறும் குழம்புடன் கலந்து, சுடலையின் திருச்சேவையை எதிர்பார்த்து நின்றது.

பூசாரி சுடலையின் பாட்டைப் பாடி ஆராதனை நடத்துகிறான். தேவரின் மனைவியும் சுடலையின் அருள்பெறச் சன்னதிக்குச் சென்று விட்டாள்.

இருளிலே ஒரு உருவம் நகர்ந்து நகர்ந்து சோற்றுப் பானையை அணுகுகிறது. சுவாமியார்தான். பசியின் தனியரசிற்குமுன் எந்தச் சுடலைமாடன் தான் எதிர்க்க முடியும்? வாரி வாரி ஆத்திரத்துடன் கொதிக்கும் சோற்றை வாயில் திணிக்கிறார். அவ்வளவுதான், ஒரு கவளத்திலே இவருடைய இவ்வுலக ஆசை நிறைவேறியது.

சற்றுத் தூரத்திலிருந்த சுடலை பக்தர்கள் இவர் ஒரு கவளம் எடுக்கும்போதே கண்டு தடுக்க ஓடிவந்தார்கள். கிட்ட நெருங்கியதும் தண்டிப்பதற்குச் சுவாமியாரின் பிணம்தான் கிடந்தது. "மாடனின் சக்தி", "அருள்" என்று வியந்தார்கள். "பறப்பயலுக்கு வேண்டும்" என்றார்கள். இதையெல்லாம் கேட்க ஏழை அம்மாவாசைச் சாமியாருக்கு கொடுத்து வைக்கவில்லை!

சுடலையின் சக்திக்காக அன்று இரட்டிப்புப் பூசை.

ஊரில் கொஞ்சம் பரபரப்புத்தான். சுடலையின் சக்தி வெளியாகும் பொழுது இல்லாமலா இருக்கும்?

திடீரென்று இறந்தவனை அறுத்துச் சோதனை செய்யாமல், போலீஸ் விசாரணையில்லாமல் புதைத்துவிட முடியுமா? எங்களூர் டாக்டரும் இன்ஸ்பெக்டரும் தேசபக்தர்கள் அல்ல; ஆனால் கிழக்கு மேற்காக இரண்டரைப் பர்லாங்கும், தென்வடலாக ஒன்றரைப் பர்லாங்கும் விஸ்தீரணமுள்ள எங்களூர் நிலப்பரப்பைப் பொறுத்தமட்டில் தேசபக்தர்கள் தான். வீண் ஆர்ப்பாட்டம் செய்து ஊரைக் கெடுக்க வேண்டாம் என்று பட்டினியால் இறந்தான் என்ற முடிவிற்கு வந்தார்கள்.

பிறகு என்ன? புதைக்கவேண்டியதுதான் பாக்கி.

எங்களூர் ஆஸ்பத்திரித் தோட்டி, இந்த மாதிரி பிணங்களைப் புதைத்துவிடுவதில் சமர்த்தன். ஒருவனே முடித்துவிடுவான். ஒற்றைக் கம்பில் பிணத்தை இறுக்கிக் கட்ட வேண்டியது - தலை சற்றுத் தொங்கினால் என்ன மானம் போய்விட்டது? மேலே மண்வெட்டியைச் சொருக வேண்டியது; விறகுக் கட்டை போல் தலையில் தூக்கிக் கொண்டு போய் புதைக்க வேண்டியது. இதுதான் அவனுக்குத் தெரியும். அதில் அவன் 'எக்ஸ்பர்ட்'.

அன்று சாயங்காலம்; அதாவது பிணத்தை அறுத்துச் சோதித்த அன்று சாயங்காலம்.

அப்பொழுது எங்களூர் கோகலே ஹாலில் 'பாரத ஜனங்களின் தற்கால நிலைமை' என்ற பிரசங்கம். ஊர் பூராவாகவும் திரண்டு இருந்தது; அதைக் கேட்க அவ்வளவு உற்சாகம். முதலிலே 'பாரத சமுதாயம் வாழ்கவே' என்ற பாட்டை ஒரு நண்பர் வெகு உருக்கமாகப் பாடினார்.

'தனியொருவனுக்கு உணவில்லையெனில், ஜகத்தினை யழித்திடுவோம்' என்ற அடிகள் வந்தவுடன், என்ன உருக்கம்! என்ன கனிவு! நாங்கள் ஆனந்த பரவசத்தில் கை தட்டினோம்!

முற்றும்

மணிக்கொடி, 12-08-1934, (புனைப்பெயர்: கூத்தன்)

(மணிக்கொடியில் இக்கதைக்கு 'தனி ஒருவனுக்கு உணவில்லை எனின்...' என்று தலைப்பிட்ட புதுமைப்பித்தன் பின்னர் 'தனி ஒருவனுக்கு' எனத் திருத்தியுள்ளார்.)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக