14/11/2011

மொழிப் பயிற்சி – 65 : பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்! – கவிக்கோ ஞானச்செல்வன்

முருங்கைக்காய் தமிழ்ச் சொல்லா?

"மாதராய்ப் பிறந்திடவே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா என்றார் புரட்சிக் கவிஞர் பாரதியார்' என்று ஒரு மருத்துவத் திங்களிதழில் மூலிகை மருத்துவர் எழுதிய கட்டுரையில் படித்தோம். இந்தச் சொற்றொடரில் மூன்று பிழைகள் உள்ளன.

"மங்கையராகப் பிறப்பதற்கே...' என்னும் தொடக்கத்தை மாற்றிவிட்டார். "நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா' என்று கவிதை எழுதியவர் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை. கவிஞர் பெயரைப் பாரதியார் என்று மாற்றிவிட்டார். மேலும் புரட்சிக் கவிஞர் என்று பாரதிதாசனார்க்கு உரிய அடைமொழியைச் சேர்த்துவிட்டார். பாட்டு வரியில் பிழை; பாட்டின் ஆசிரியர் பெயரில் பிழை; அவர்தம் அடைமொழி (பட்டம்) யில் பிழை. சரியாக அறிந்து - அறிந்தவரைக் கேட்டு எழுதலாமன்றோ?

"இருப்பிரிவினரிடையே மோதல்' ஒரு பத்திரிகைச் செய்தி. இரு பிரிவினர் என்று இயல்பாதல் வேண்டும். "ப்' போட்டு வலி மிக வேண்டாம். கோடியக்கரையும், கருப்புப் பணமும் மாறாமல் வந்து கொண்டேயுள்ளன. நாம் பலமுறை எழுதிவிட்டோம். இப்போதும் கோடிக்கரை, கறுப்புப்பணம் என்று எழுதுங்கள் என வேண்டுகிறோம்.

கொஞ்சம் (கொஞ்சும்) இலக்கணம்:

காளி கோவில் தெரு; காளிக் கோவில் தெரு - எது சரி? கோ.சு.மணி தெரு; கோ.சு.மணித் தெரு - எது சரி? இரண்டு எடுத்துக்காட்டுகளிலும் முதலில் வருவதே (க் - மிகாமல், த் - மிகாமல்) வருவதே சரி.

ஆறாம் வேற்றுமைத் தொகையில் நிலை மொழி உயர்திணையாய் இருப்பின் வல்லெழுத்து மிகாது.

காளியது கோவில், மணியது (பெயர் கொண்ட) தெரு என்று விரியும் இவை. அது எனும் உருபு, காளி கோவில், மணி தெரு என்பனவற்றுள் மறைந்திருப்பதால் இவை ஆறாம் வேற்றுமைத் தொகைகள். காளி, மணி ஆகிய நிலைமொழிகள் உயர்திணை எனக் காண்க. நிலை மொழி முதலில் வருவது; கோவில், தெரு என்பன வருமொழிகள் (பின்னர் வந்து சேர்வன).

தெருப் பெயராதலின் மணி தெரு என்று விட்டிசைத்தல் சரியே. மணித் தெரு எனில் மணியான (சிறந்த) தெரு என்று வேறு பொருள் உண்டாகக் கூடும்.

நம்பி என்பது ஒருவர் பெயர். அவரது கையை எப்படி நம்பி கை (நம்பியது கை) என்று எழுதிட வேண்டும். நம்பிக்கை என்று எழுதினால் பொருளே மாறுபட்டுப் பிழையாகிவிடும். இவ்வாறே தம்பி தோள் எனில் தம்பியது தோள் எனப் பொருள்படும். தம்பித் தோள் என்றால் பிழை. தம்பித்துரையில் - "த்' வருகிறதே! வலி மிகல்தானே இது? ஆம். வல்லெழுத்து மிகுதல்தான். ஆனால் தம்பி எனும் பெயரும், துரை என்னும் பெயரும் ஒன்றோடொன்று ஒட்டி நிற்பவை. அஃதாவது தம்பியாகிய துரை என்று பொருள். இதனை இருபெயரொட்டுப் பண்புத் தொகை என்பர். இவ்விடத்து வல்லொற்று மிகும் என்பது இலக்கண விதி.

சற்றே சொல்லாய்வோம்:

ஆகாய விமானம் என்னும் சொல் நிரம்ப நம் பயன்பாட்டில் உள்ளது. பேசுகிறோம், செய்தியிதழ்களில் படிக்கிறோம். இதற்குச் சரியான தூய தமிழ்ச் சொல் நம் எல்லார்க்கும் தெரிந்த ஒரு சொல் "வானூர்தி' இருக்கிறதே! இச்சொல்லை ஏன் பயன்படுத்துவதில்லை? வானில் செல்லும் (பறக்கும்) ஊர்தி (வாகனம்). வானூர்தி - பொருள் வெளிப்படையானது.

தமிழர்கள் ஒட்டுநர் இல்லாமல், தானே இயங்கும் வானூர்தியும் கண்டனர் போலும். "வலவன் ஏவா வான ஊர்தி' என்பது சங்கப் பாட்டு வரி. (வலவன் - பைலட்). சிலப்பதிகாரத்தில் வான ஊர்தி வருகிறது, கண்ணகியை வானுலகு அழைத்துச் செல்லுவதற்காக. சிந்தாமணியில் மயில் வடிவில் அமைந்த வானூர்தி - மயிற்பொறி பேசப்படுகிறது. இராவணன் சீதையைக் கவர்ந்து வானூர்தியில் கொண்டு சென்றான் (தமிழ்க் கம்பன் கூற்றுப்படி) என்றும் படித்துள்ளோம். ஆக வானூர்தியைப் பரப்புவோமாக!

தமிழிலுள்ள சில சொற்கள் பிறமொழிச் சொல்லாக இருத்தல் கூடும். முருங்கைக்காய் என்பதை அப்படி யாராவது நினைக்க முடியுமா? தமிழ்நாட்டுக் காய், தூய தமிழ்ப் பெயரே இது என்றுதான் எண்ணுவோம். "முருங்கா' என்னும் சிங்களச் சொல்லே முருங்கை எனத் தமிழில் திரிந்தது என்று "தமிழ் வரலாற்றிலக்கணம்' எனும் நூலில் அ.வேலுப்பிள்ளை எனும் தமிழறிஞர் குறிப்பிட்டுள்ளார்.

நம் தமிழ்நாட்டுக்குரிய முப்பழங்களுள் இரண்டின் தமிழ்ப் பெயரை நம் தமிழ்ப் பிள்ளைகள் மறந்தனரோ? எனும் ஐயம் எழுகிறது. வாழைப் பழத்தைப் "பனானா' என்றும் மாம்பழத்தை "மாங்கோ' என்றும் எங்கும் எப்போதும் இயல்பாகச் சொல்லுகிறார்கள். மாதுளம் பழம் என்பதும், "பொம்மகர்னட்' என்றுதான் பள்ளிப் பிள்ளைகளால் சொல்லப்படுகிறது. எல்லாப் பிள்ளைகளும் ஆங்கில வழியில் படிப்பது காரணம். வீட்டிலாவது பெற்றோர்கள் தமிழ்ப் பெயர்களைச் சொல்லித் தர வேண்டும்.

(தமிழ் வளரும்)

நன்றி – தினமணி கதிர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக