29/10/2011

உலக வளத்தை நோக்கி முதல் அடிச்சுவடுகள் - சுந்தர ராமசாமி

உலக இலக்கிய ஆக்கங்கள், தத்துவங்கள், சிந்தனைகள் ஆகியவற்றின் மிக முக்கியமான பகுதிகளையேனும் தமிழில் மொழிபெயர்த்து தமிழ் மட்டுமே அறிந்த வாசகனும் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் எப்போது அவற்றைத் தரப்போகிறோம் ? அந்தக் காலம் தமிழில் என்றேனும் உருவாகுமா ? (அல்லது தமிழனுக்கு போதிய அளவு ஆங்கில அறிவை ஊட்டி அவர்கள் சுயத் தேர்வு சார்ந்து உலகப் படைப்பு வளத்தை ஆங்கிலம் வழி அறிந்து கொள்ளும் காலத்தை உருவாக்கப் போகிறோமா ?) சமூக மாற்றங்கள் நம் சூழலில் பல தாண்டல்களை நிகழ்த்த வேண்டுமென்றால் முதலில் தமிழனின் சிந்தனை முறையிலும் அவன் பார்வையிலும் பெரும் மாற்றம் நிகழ்ந்தாக வேண்டும். வளர்ந்து வரும் புதிய சிந்தனைகளுக்கும் காலம் காலமாக மறுபரிசீலனையின்றி உறைந்து கிடக்கும் தமிழனின் மரபுச் சிந்தனைகளுக்குமிடையே பெரும் மோதல் நிகழாத வரையிலும் நிலப்பிரபுத்துவச் சிந்தனை களையும் மரபுச் சிந்தனைகளையும் புராண மனோபாவங்களையும் மூடி மறைக்கப் பயன்படும் போலி முற்போக்கு சிந்தனைகள்தான் சமூகச் செல்வாக்குப் பெற்று மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும்.

உலகப் படைப்பு வளத்தை விரிந்த அளவில் மொழிபெயர்ப்பது அல்லது தமிழர்களை ஆங்கிலத்தில் தேர்ச்சிபெறச் செய்து உலக வளத்தை அவர்கள் அறிந்து கொள்ளும்படியான சூழலை உருவாக்குவது ஆகிய இரண்டு வழிகளில் எதற்கு முக்கியத்துவம் அளிக்கப் போகிறோம் ? எது நமக்கு நடைமுறைச் சாத்தியமாக இருக்கப் போகிறது ? இருவழிகளிலும் பல குறைபாடுகளும் அசிரத்தையும் நிறைந்த சில முயற்சிகளை மேற்கொள்ளுவோம் என்றுதான் இன்றையச் சூழலில் எண்ண முடிகிறது.

மொழிபெயர்ப்புத் துறையில் நாம் தீவிரமாக ஈடுபடத் தொடங்கினால் இவ்வாறான முயற்சிகளில் நம் கவனத்தைக் கூட்டிக் கொள்வோம் என நம்புவதற்கான காரணங்கள் எவையும் இன்று இல்லையென்றாலும் நாம் செலுத்த வேண்டிய உழைப்பின் அளவு நம்மை ஸ்தம்பிக்க வைக்கக்கூடியது. நேற்றைய உலகப் படைப்பு வளத்தையும் இன்று பிரபஞ்சத்தையே தழுவிக் கொள்ளும் வகையில் கணந்தோறும் பாய்ச்சல் நிகழ்த்திக் கொண்டிருக்கும் சிந்தனை வளத்தையும் கற்பனை செய்து பார்ப்பதே இன்று நமக்குச் சற்றுக் கடினமான காரியமாகும். பலருக்கு இது தேவையற்ற வேலையாகவும் படுகிறது. நம்மிடம் உலக மக்களுக்கு வழங்க நிறைய இலக்கியச் செல்வங்கள் இருக்கின்றன என்றும் பிறரிடமிருந்து பெற்றுக் கொள்ள எதுவுமில்லை என்ற எண்ணமும் இருக்கிறது. சிந்தனையில் பின்தங்கிப் போவதிலுள்ள பெரும் ஆபத்து இதுதான். உலக வளர்ச்சியுடன் இணைந்து போய்க்கொண்டிருந்தால் சிறிய பின்தங்கல் உருவாக்கும் இடைவெளிகூட நம்மை அதிர்ச்சி கொள்ளச் செய்யும். நமக்கும் உலக முன்னேற்றத்திற்குமான இடைவெளி அளவிடமுடியாத ஒன்றாகிவிடும்போது ஒப்பிட்டுப் பார்க்கும் கூர்மையைக்கூட இழந்து நம்மைத் தேற்றிக் கொள்ளும் வகையில் பழம் பெருமை பேசத் தொடங்கிவிடுவோம்.

உலகப் படைப்புகளைத் தமிழில் கொண்டுவருவதற்கு நேர்மாறான யோசனைகளையும் சமீபகாலமாக சிலர் ஒலிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். தமிழில் ஒரு சில படைப்பாளிகள் தங்கள் படைப்புகள் உலகத் தரத்தைச் சேர்ந்தவை என்றும் அவை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுவிட்டால் மறுகணமே அவை நோபல் பரிசை அள்ளிக் கொண்டு வந்துவிடும் என்றும் நம்புகிறார்கள். தங்கள் இருப்பு நோபல் பரிசுக் குழுவினருக்குத் தெரியாமல் இருப்பதால்தான் அவர்கள் வேறு யாருக்கோ பரிசைத் தரவேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளாகிறார்கள் என்ற கற்பனையும் இவர்களுக்கு இருக்கக்கூடும். தமிழின் சிறந்த படைப்புகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க வேண்டுமென்று அரசாங்க அமைப்புகளை நோக்கி இவர்கள் கோரிக்கைவிடும்போது அதற்கு மறைமுகமான அர்த்தம் ‘எங்கள் படைப்புகளை அரசாங்க வரிப்பணத்தில் மொழிபெயர்ப்புச் செய்யுங்கள்’ என்பதே.

இந்திய படைப்பு வளத்தில் நம் கவனம் பதிவதுகூடக் காலப் போக்கில் மங்கிவிட்டது என்று சொல்லலாம். தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு வெளிவரும் இந்தியப் படைப்புகளைக்கூட நம் வாசகர்கள் தேடிப்படிக்கிறார்கள் என்று சொல்ல முடியாது. இப்படைப்புகளைப் பிரபல இதழ்கள் வாசகர் கவனத்திற்குக் கொண்டுவருவதும் கிடையாது.

வாசகர்கள் விரும்பிப்படிக்கும் இலக்கிய உருவம் நாவல். இந்திய மொழிகளிலிருந்து தமிழுக்கு வந்துள்ள நாவல்கள்கூட வாசக ஆதரவின்றி விற்பனையாகாமல் தேங்கியே கிடக்கின்றன. அவை பற்றிய பேச்சும் இலக்கியத்துறைகளில் அடிபடுவதில்லை.

ஆங்கிலத்தில் எழுதும் இந்தியப் படைப்பாளிகள்தான் தமிழ் வாசகனின் புறக்கணிப்புக்கு அதிக அளவுக்கு ஆளாகி வருகிறார்கள். இந்திய மொழிகளிலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்படும் அளவுக்குக்கூட இந்திய ஆங்கில எழுத்தாளர்களின் படைப்புகள் தமிழில் மொழிபெயர்க்கப்படுவதில்லை. ஆர். கே. நாராயணின் ஒன்றிரண்டு நாவல்கள் அரை நூற்றாண்டுக்கு முன்னர் தமிழில் வெளிவந்தமைக்கு அந்த நாவல்களின் தென்னிந்திய பின்னணி சார்ந்த கதைப்போக்கும், எளிமையும், நகைச்சுவை உணர்வும் காரணங்களாக அமைந்திருக்கலாம். மிகுந்த சர்ச்சைக்குரிய படைப்புகள் மூலம் உலக அரங்கில் எழுந்த பெரும் பரபரப்பும், தன் உயிருக்கே ஆபத்தான சூழ்நிலையில் நீண்ட காலம் வாழ வேண்டிய நிர்பந்தமும் சல்மான் ருஷ்டியின் பெயர் தமிழ் வாசகர் களுக்குத் தெரிய காரணங்களாக அமைந்தன. ஆங்கில வாசிப்பில் மட்டுமே தனது கவனத்தைக் குவித்திருக்கும் தமிழர்கள் கூட ருஷ்டியைப் படிப்பதிலோ விவாதிப்பதிலா கவனம் எடுத்துக் கொண்டதாகத் தெரியவில்லை. ருஷ்டியுடன் இணைத்து சிந்திக்கத் தகுந்த ஆற்றல் மிகுந்த மற்றொரு படைப்பாளி அமிதாப் கோஷ். இவரது ‘நிழல் கோடுகள்’ எனும் தலைப்புக் கொண்ட நாவல் சரளமாகத் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு (மொழிபெயர்ப்பாளர் - திலகவதி) வெளிவந்துள்ளது. இந்நாவலும் தமிழில் போதிய கவனம் பெறவில்லை. ருஷ்டியின் உலகத்திற்கு முற்றிலும் வித்தியாசமான உலகத்தைப் படைத்துக் கொண்டிருப்பவர் அமிதாப் கோஷ்.

இந்தியர்கள் ஆங்கிலத்தில் படைக்கத் தொடங்கி நீண்ட காலமாகிவிட்டன. பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்கத்திலேயே கவிதைகள் வெளிவரத் தொடங்கின. அதன்பின் ஏறத்தாழ இருநூறு ஆண்டுகளாகவே தீவிர கவிதை முயற்சிகள் நடைபெற்று வரு கின்றன. 1920ல் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் கவிதைத் தொகுப் பொன்றை Indian in Song : Eastern Themes in English Verse by British and Indian Poets என்ற தலைப்பில் வெளியிட்டது. அரவிந்த கோஷ், சரோஜினி நாயுடு, ஷோசப் பர்டாடோ, ஹரீந்திரநாத் சட்டோபாத்யாயா போன்றவர்கள் ஆங்கிலத்தில் கவிதைகள் எழுதிக் குவித்திருக்கின்றனர்.

சுதந்திரத்திற்கு முற்பட்ட காலத்தில் இந்திய ஆங்கில எழுத்தில் வெளிப்பட்டுக் கொண்டிருந்த தீவிரமான குறிக்கோள்கள் - விடுதலை உணர்வும் இந்தியக் கலாச்சாரத்தின் வலிமையைத் திரட்டிக் கொள்ளும் ஆவேசமும் - இருந்தன. முல்க்ராஜ் ஆனந்தின் நாவல்களில் இந்திய வாழ்க்கையின் கொடுமைகள் யதார்த்தமாகப் பிரதிபலித்தன. ராஷா ராவ் தத்துவத்திலும் தேடலிலும் ஈடுபாடு கொண்ட கலைஞராகத் தோன்றி பிற இந்திய ஆங்கில எழுத்தாளர்களுக்குச் சம்பந்தமில்லாத ஒரு படைப்புலகத்தை உருவாக்கினார். தீவிரமான வாசகர்களின் கவனத்தைப் பெற்றார். இந்திய விடுதலைக்குப் பின் இந்திய ஆங்கில எழுத்து ஒரு குறுகிய காலத்திற்கேனும் அதன் தீவிரத் தன்மையை இழந்து நின்றது என்று சொல்லலாம். மேல்தட்டு வாழ்க்கையை மேம்போக்காக வெளிப்படுத்தும் நாவல்கள் தோன்றத் தொடங்கின. இந்தியாவிற்கு வெளியே இருக்கும் ஆங்கில வாசகர்களின் பார்வையையும் விருப்பு வெறுப்புகளையும் கணக்கிலெடுத்துக் கொண்டு எழுதப் பட்ட படைப்புகள் இவை. கமலா மார்க்கண்டேயா, அனிதா தேசாய் போன்ற எண்ணற்ற படைப்பாளிகள் இந்தியாவிலும் உலக அரங்கிலும் அவர்களுடைய தகுதிகளுக்கு மேற்பட்ட விளம்பரம் பெற்றாலும் காலப்போக்கில் இவர்களது படைப்புகள் பின்நகர்ந்து போய்விட்டன என்றுதான் சொல்ல வேண்டும்.

இன்று இந்திய ஆங்கில எழுத்து மிகத் தீவிரமான எழுத்தாளர்கள் இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு துறையாக வளர்ந்து கொண்டிருக்கிறது. பிராந்திய மொழிகளில் மிக மேலான படைப்புகள் எந்த அளவுக்கு இந்திய வாழ்க்கையின் நெருக்கடிகளைப் பிரதிபலிக் கின்றனவோ அந்த அளவுக்கு இந்திய ஆங்கில நாவல்களும் பிரதிபலிக்கின்றன. இந்திய அரசியல் இந்திய வாழ்க்கையில் சாதாரண மனிதர்களின் அல்லல், கலாச்சாரப் பிரச்சனைகள் ஆகியவை இன்று படைப்புகளில் ஆழமான விவாதத்திற்கு ஆளாகின்றன.

மேல்தட்டு வாழ்க்கைக்குரிய மேலோட்டமான பிரச்சனைகளிலும் மோஸ்தர் மனோபாவங்களிலும் அழுந்திக் கிடந்த இந்திய ஆங்கில எழுத்தை வாழ்வுக்குரிய வேதனைகளையும் நுட்பமான உணர்வுகளையும் நோக்கி நகர்த்திய பெருமை இந்திய ஆங்கிலக் கவிஞர்களையே சாரும்.

சென்ற நூற்றாண்டின் பிற்பகுதியில் பல கவிஞர்கள் இந்திய வாழ்க்கைக்குரிய கண்ணோட்டத்துடனும் நவீனத்துவம் அளித்த புதுமை உணர்ச்சியுடனும் செயல்படத் தொடங்கினர். அருண் கோல்த்கர், ஜீவா படேல், அரவிந்த் கிருஷ்ண மெல்ஹோத்ர, ஷிவ் கே. குமார், தெகி என். தருவாலா, கமலா தாஸ், ஏ. கே. ராமானுஷம், ஆர். பார்த்த சாரதி, ஷயந்தா மகாபத்ரா, நிஸிம் எசக்கியேல் ஆகியோரின் கவிதைகள் இந்திய வாழ்க்கையை மீண்டும் கண்டுபிடிப்பதில் மிக முக்கிய பங்காற்றியுள்ளன. அத்துடன் இவர்களது கவிதைகளில்தான் இருபதாம் நூற்றாண்டுக்குரிய சுய அடையாளத்தை உணர இயலாத நெருக்கடி (identity crisis) முதலில் எதிரொலிக்கத் தொடங்கியது. இவர்களுடைய பாதிப்பினால் பல கவிஞர்கள் பின்னால் தோன்றினார்கள். சுதந்திரத்துக்குப் பிற்பட்ட ஆங்கில எழுத்து தீவிர குணம் கொள்ள இவர்கள் ஆற்றியுள்ள பங்கு முக்கியமானது. இந்திய ஆங்கில எழுத்தை அறிந்து கொள்ள விரும்பும் ஒரு வாசகன் இவர்களுடைய கவிதைகளிலிருந்து தன் பயணத்தைத் தொடங்குவது மிக வாய்ப்பான ஒரு பணியாக இருக்கும்.

2003

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக