27/10/2011

கரிய முகம் - பிரபஞ்சன்

கதவு தட்டப்பட்டது.

'சார் சார் ' என்று அழைக்கும் குரலில், ரகசியம் இருந்தது. ரேடியம் அலாரம் மணி இரண்டு இருபதைக் காட்டியது. வெளியே இருட்டும், குளிரும் கண்ணாடி வழித்தெரிந்தன. போர்வையை விலக்கிக் கொண்டு, கதவின் அருகில் போனேன். கதவை ஒட்டி, சாருவும், குழந்தைகளும் உறங்கிக் கொண்டிருந்தார்கள். சப்தம் கேட்டு அவர்கள் எழுந்து விடக்கூடாது, மெதுவாகக் கதவைத் திறந்தேன்.

வீட்டுக்காரர் நின்றிருந்தது புகைப்படம் போல் தெரிந்தது. நான் குடியிருந்தது இரண்டு மாடிவீடு. தரைப் பகுதியில் வீட்டுக்காரர் உறவினர் குடும்பமும், முதல் மாடியில் வீட்டுக்காரர் குடும்பமும், இரண்டாம் மாடியில் நாங்களும் குடியிருந்தோம். வீட்டுக்காரர் என்றதும் கடுமையான, பணத்தில் கறாரான் மனிதர் ஒருவரின் முகம் உங்களுக்கு நினைவில் வரலாம். வந்தால், அது தவறு. தமிழகத் தலைநகரில் சிதைந்து கொண்டே வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களில் ஒருவர் அல்லர் அவர்.

'என்ன சார் ? ' என்றேன் நானும். என் குரலும் ரகசியக் குரலாக, நான் அறியாமலே ஆகியிருந்தது.

'பக்கத்து வீட்டில் திருடன் புகுந்திருக்கிறான். ஒருத்தன் உள்ளே இருக்கிறான். ஒருத்தன் நம்ம வீட்டு மொட்டைமாடியில் இருக்கிறான். கதவைச் சாத்திக் கொள்ளுங்கள். நான் சத்தம் போட்டால் மட்டும் கதவைத் திறவுங்கள். ஜாக்கிரதை. '

அவர், முன்னங்காலில் சப்தம் எழுப்பாமல் படியில் இறங்கினார். நான் கதவைச் சாத்திக் கொண்டேன். திருடன் என்றதும், இரவு நேரத்தில் மனம் சொரசொரக்கத் தான் செய்கிறது. அதுவும் கையெட்டும் தூரத்தில் அவன் இருக்கையில். பாம்பு, பேய்க் கதைகள் மாதிரித் திருடன் கதைகளும் சாஸ்வதமானவைதானே ? திருடன் என்பவன், முகமூடி அணிந்து கையில் கத்தி அல்லது துப்பாக்கி அல்லது உருட்டுக் கட்டை அல்லது சைக்கிள் செயின் என்று ஏதாவது ஓர் ஆயுதத்தை கையில் வைத்துக்கொண்டு திரிபவன் என்றுதானே கற்பிக்கப்பட்டிருக்கிறது.

கதவைச் சரியாகத் தாழ்போட்டிருக்கிறேனா என்பதை மீண்டும் மீண்டும் சரிபார்த்துக் கொண்டேன். கதவின் தரம், பலம் குறித்து எனக்குத் திருப்தி ஏற்படவில்லை. ஆகவே எனக்குக் கவலை ஏற்படத்தான் செய்தது. சாருவை எழுப்பலாமா என்று தோன்றியது. ஆனாலும், என்னைவிடவும் அதிகமாக உழைத்துக் களைத்துத் தூங்கும் அவளை எழுப்ப மனம் வரவில்லை.

என் போர்ஷனுக்கு மேல் இருக்கும் மொட்டை மாடியில் திடுதிடு என யாரோ சிலர் ஓடும் சப்தம் கேட்டது. அப்புறம் இரவைக் குறுக்காகக் கிழித்துக் கொண்டு, திருடன் திருடன் என்ற அலறல் எழுந்தது. நான் ஜன்னல் திரையை விலக்கிக் கொண்டு வெளியே பார்த்தேன். எனக்கு அடுத்த வீட்டு மொட்டைமாடி மற்றும் மூன்றாவது வீட்டு மாடியில் நிறைய மனிதர்கள் தட்டுப்பட்டார்கள். குழப்பமாகவும் இருந்தது.

சாரு எழுந்து கொண்டாள்.

'என்ன சத்தம் ? ' என்றாள்.

'திருடன் ' என்றேன்.

அவள் சுருங்கியது தெரிந்தது. பிறகு சுதாரித்துக் கொண்டாள்.

'....கதவைச் சாத்திக் கொண்டு உள்ளே இரு.. நான் போய்ப் பார்த்துவருகிறேன்.

'நானும் வர்றேன். '

'குழந்தைகள் தனியே இருக்குமே ? '

அவள் தயக்கத்துடன் 'சரி ' என்றாள்.

நான் சட்டையை மாட்டிக் கொண்டு புறப்பட்டேன்.

'கதவைச் சாத்திக்கோ... '

படியில இறங்கித் தெருவுக்கு வந்தேன். மாடியைப் பார்த்தேன். சாரு, கைப்பிடிச் சுவரில் சாய்ந்து கொண்டு வெளியே நிற்பது தெரிந்தது. அவள் துணிச்சல்காரி. அந்தச் சூழ்நிலையில் சாருவைப் பற்றிப் பெருமிதமும் எனக்கு ஏற்பட்டது.

தெரு சுத்தமாக விழித்துக் கொண்டு, விளக்கு வெளிச்சத்தில் கும்பல் கும்பலாகக் கூடிப் பேசிக் கொண்டிருந்தது. திருடன் பிடிபட்டு விட்டானாம்.

அவரவரும் தங்களுக்குத் தெரிந்த, தாங்கள் சம்பந்தப் பட்ட திருடர் கதைகளைப் பேசிக் கொண்டிருந்தார்கள். ரிடையர்டு ரெவின்யூ ஆபீசர் மகாதேவன், தான் சேலத்தி ஒரு பெரிய திருட்டுக் கும்பலைப் பிடித்த கதையைச் சுவாரஸ்யமாகச் சொல்லிக் கொண்டிருந்தார். யாருக்குத் தான் கற்பனை இல்லை ?

தெருமுனை திரும்பி ஒரு கூட்டம் வந்துகொண்டிருந்தது. திருடன் கையைக் கட்டி அழைத்து வந்தார்கள். திருடன் முகத்தில் மூடி இல்லை. வயசும் இருபதுக்கு ஒட்டித்தான் இருக்கும். மெரீனா கடற்கரையில் சுண்டல் விற்கிற சிறுவர்கள் மாதிரி நடுங்கிப் போய் இருந்தான். இவனா திருடன் ? 'ஐயோ பாவம் ' என்றிருந்தது.

வக்கீல் குமாஸ்தா புதைத்துக் கொண்டிருந்த சிகரெட்டால், அவனைச் சுட்டார். கூட்டம் 'சூ.....சூ ' என்றது. வீட்டுக்கார், 'அதுதப்பு.... ' என்றார்.

'சொல்லுடா... கூட வந்தவன் எங்கே ? இன்னும் எத்தனைபேர் உங்க கோஷ்டி ? ' என்றார் வரதராஜன்.

தமிழே தெரியாதவன் போலும். ஊமை போலும். அவன் வாயைத் திறக்காமல் இருந்தான். கல்லூரி மாணவர்கள் போலத் தெரிந்த இரண்டு இளைஞர்கள் திடுமென பாய்ந்து அவனைச் சரமாரியாகத் தாக்கத் தொடங்கினர். அந்தத் திருட்டு சிறுவன் கைகள் கட்டப்பட்ட நிலையில் அத்தனை அடிகளையும் வாய் பேசாமல் வாங்கிக் கொண்டு தரையில் அமர்ந்தான்.

எங்கள் வீட்டுக்காரர் அம்மாள்தான் திருட்டு நடந்ததை முதலில் கண்டுபிடித்தவள். ராத்திரி அடுப்பறையில் ஏதோ சத்தம் கேட்டு அவள் எழுந்திருந்தாள். தண்ணீர் குடிக்கப் போயிருக்கிறாள். குடித்துத் திரும்புகையில், அடுத்த வீட்டு பின் அறையில் விளக்கு வெளிச்சத்தைப் பார்த்திருக்கிறாள். ஊருக்குப் போய் இருக்கும் ஸ்டேட் பாங்க் தம்பதிகள் வந்துவிட்டார்களா என்று ஆச்சரியப்பட்டிருக்கிறாள். தபால்கள் அவர்களுக்கு வந்தவை, தன்னிடம் இருப்பது நினைவுக்கு வந்தது. பாகீரதி அம்மாளின் மகனுக்குக் குழந்தை பிறந்துவிட்டதா, என்ன குழந்தை என்று அறிய ஆவல் கொண்டிருக்கிறாள். தபால்களை எடுத்துக் கொண்டு, தெரு வாசலுக்கு வந்திருக்கிறாள். பூட்டு நாதாங்கியோடு பெயர்க்கப்பட்டு தொங்கிக் கொண்டு இருந்தது தெரிந்தது. ஆகவே உள்ளே இருப்பது திருடர்கள் என்கிற சம்சயம் அவளுக்கு ஏற்பட்டிருக்கிறது. நடுங்கிப்போன அவள், திரும்பி வந்து புருஷனை எழுப்பிச் சொல்லியிருக்கிறாள்.

அறைக்குள் இருவரும், மொட்டைமாடியில் ஒருவனுமாக இருந்துகொண்டு அவர்கள் காரியத்தைத் தொடங்கி இருக்கிறார்கள். ஆக, அவர்கள் மூன்று பேர். மேலே இருந்தவன் ஆள் நடமாட்டத்தை அவதானிப்பது. கீழே இருப்பவர்கள், பொருள்களை மூட்டை கட்டுவது அவர்களின் திட்டமாக இருந்தது.

வீட்டுக்காரர், சப்தம் போடாமல் தெருவுக்கு வந்தவர், அடுத்த அடுத்த வீட்டுக் கதவுகளைத் தட்டி உஷார் படுத்தியிருக்கிறார். ஒரு சிறு கூட்டம் கூடி இருக்கிறது. கூட்டம் பாங்க்காரரின் வீட்டுத் தெருக்கதவைச் சுற்றி தயாராக நின்றிருக்கிறது. எப்படியும் திருடர்கள் தெருவழியாகத் தானே வெளியேற வேண்டும் ?

மாடியில் இருந்தவன், அபாயத்தைப் புரிந்து கொண்டிருக்கிறான். விசித்திரமான குரல் கொடுத்துள்ளான். திருடர்கள், சுருட்டிய பொருளுடன் வெளியே வந்தவர்கள் பொருள்களைப் போட்டுவிட்டு, கூட்டத்தை இடித்துத் திமிறிக் கொண்டுஓடியிருக்கிறார்கள். கூட்டம் துரத்தியிருக்கிறது. ஒருவன் சிக்கிக் கொண்டான்.

அவன் பெயர் செங்கோடனாம். நிறைய அடிகளை வாங்கிக் கொண்ட பிறகு அவன் அதைச் சொன்னான். முகம் வீங்கியிருந்தது. உதடுகள் கிழிந்து இரத்தம் கசிந்தது. உடம்பை உதறிக் கொண்டு, மழைக் காலத்துச் சிட்டுக் குருவி மாதிரி அமர்ந்திருந்தான்அவன். யாரோ ஒரு மனிதர் வந்து அவன் முகத்தில் உதைத்தார். அவன் தரையில் விழுந்தான். அவன் கைகள் இன்னும் கட்டப்பட்ட நிலையிலேயே இருந்தன.

வீட்டுக்கார் சொன்னார்.

'சார்...அப்படியெல்லாம் ஒரு மனுஷனைச் சித்திரவதை செய்யக் கூடாது. '

'திருடனுக்கு என்ன சார் வக்காலத்து ? '

'திருடனா இருக்கலாம். அவனும் நம்மைப் போல மனுஷன் தான். அவனைப் போலீசிடம் ஒப்படைக்கலாமே.. அதுதானே சரி... ? '

அவன்கள் காசு வாங்கிக் கொண்டு விட்டு விடுவான்கள். இவனை அடித்துக் கொல்வதுதான் சரி. '

அவர் அவனை மீண்டும் தன் பூட்ஸ் காலால் உதைத்தார்.

'சார்...இது அநியாயம் ' என்று மட்டும்தான் என்னால் சொல்லமுடிந்தது.

செங்கோடன் அழுக்குப் பனியனும், நாலு முழவேஷ்டியும் அணிந்திருந்தான். பனியன், அடி உதைகளால் கிழிக்கப்பட்டிருந்தது.

'தண்ணி....தண்ணி ' என்று முனகினான் அவன்.

வீட்டுக்கார அம்மாள் ஒரு லோட்டாவில் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாள். மடக் மடக்கென்று சப்தம் வர அவன் அதைக் குடித்தான்.

'இவனைஎன்ன செய்வது ? '

'போலீஸ்ல ஒப்படைச்சுடலாம். '

ஒருவர் வந்து, 'ஏந்திரிடா ' என்றார்.

'என்னை விட்ருங்க அண்ணே.. போலீசுகிட்டே ஒப்படைக்க வேணாம்... இனி திருட மாட்டேன்... ' என்று திக்கித் திணறிச் சொன்னான் அவன். கை கூப்பினான்.

வலுக்கட்டாயமாக அவனை எழுப்பி நிறுத்தினார் ஒருவர். அவன் சரிந்து விழுந்தான்.

'ஐயோ ' என்றாள் வீட்டுக்கார அம்மாள்.

'வெறும் நடிப்பு சார் அது '

'உதைங்க... எழுந்திருவான். '

ஒருவர் பிரம்பை எடுத்து வந்து அவனைச் சுளீர் எனத் தாக்கினார். அவன் துடித்தபடி எழுந்தான்.

போலீஸ் ஸ்டேஷனை நோக்கி அந்த ஊர்வலம் புறப்படத் தயாராகியது. வீட்டுக்காரர் சட்டையை மாட்டிக் கொண்டு புறப்பட்டு வந்தார்.

'உம் புறப்படுங்க ' என்றபடி முன்னால் நடந்தார் அவர்.

கூட்டத்தை விலக்கிக் கொண்டு வீட்டுக்கார அம்மாள் வந்தார். அவர் கை டம்ளரில் டா இருந்தது.

'என்னடி இது ' என்றார் வீட்டுக்காரர்...

'டா... ஆனாலும் அந்தக் குழந்தையை அப்படிப் போட்டு அடிச்சிருக்கப்படாது ' என்றார் அந்த அம்மாள்.

செங்கோடன் டாயைக் குடித்தான்.

ஊர்வலம் தொடர்ந்தது.

 

1 கருத்து: