இலக்கியம் என்பது வாழ்வின் விளக்கம் என்றும், காலத்தின் கண்ணாடி என்றும் கூறப்படுவதுண்டு. வழுக்கும் பாதைக்கு ஊன்றுகோல் பயன்படுவது போன்று வாழ்க்கைப் பாதைக்கு ஒழுக்கம் உடையவர்களின் வாய்ச்சொற்கள் பயன்படுகின்றன. அச்சொற்கள் அனைத்தும் வருங்கால சந்ததியினரைப் படிப்பாளிகளாக ஆக்கும் நோக்கத்தைவிடப் பண்பாளிகளாக ஆக்குவதையே குறிக்கோளாய்க் கொண்டு இயற்றப்பட்டன. இங்கு, பண்பு எனப்படுவது ''Character'' எனப்படுவதல்ல. நெய்தற்கலி பாடிய நல்லந்துவனார்,
''பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகல்''
என்று குறிப்பிடுகின்றார். இங்குப் ''பாடு'' என்பது துன்பம் என்ற பொருளில் பயன்படுத்தப்படுகின்றது. இதே கருத்தினையே குறளும்,
அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
தந்நோய்போல் போற்றாக் கடை
என்று இயம்புகிறது. இப்பண்புகளை நினைவுகூர்வதுகூட இல்லங்களின் சிதைவுகளைச் žரமைக்கும் முன்னேற்பாடே ஆகும்.
அன்பே இல்லறத்தின் பண்பு
இன்று பலருள்ளும் உள்ள மிகப்பெரும் பிரச்சினை, வாழ்வியல் முறைகளையும், அதன் அடிப்படைக் கருத்துகளையும் புரிந்து கொள்ளாமையே ஆகும். இன்றைய கல்விமுறை பணமீட்டும் வழிவகைகளை மட்டுமே கற்பிக்கின்ற காரணத்தால் குடும்பங்களில் உறவுச்சிக்கல் ஏற்பட்டு, வீட்டினுள்ளும் பல தீர்வுகள் காணப்படுகின்றன. ஆனால், அக்காலத்தில் போக்குவரத்து வசதிகள் இல்லாத பொழுதும், பரந்து விரிந்துபட்ட நாடுகள் அனைத்தும் ஒருங்கிணைந்து காணப்பட்டன. இவை அனைத்திற்கும் அடிப்படை அன்பு. அன்பின் தோற்றுவாய் இல்லறமாக மட்டுமே இருக்கமுடியும் என்று முடிந்த முடிவாகவே வள்ளுவர் கூறுகிறார். அதன் காரணமாகவே இல்லறவியலை முன்பும், அதன் பின் துறவு இயலையும் வைத்தார். இல்வாழ்க்கையே ஒருவனுக்கு உலகத்தை நேசிக்கக் கற்றுத் தருகிறது. இங்கு இல்வாழ்விற்கு அன்பானது அடிப்படையான பண்பாக அமைந்தால் அவ்வில்லத்தார் செய்யும் அறச்செயல்களே பயனாக விளையும் என்கிறார். இதையே அறனெனப்பட்டதே இல்வாழ்க்கை என்று கூறுகிறார். ஒருவன் ஈட்டும் பொருளானது அறத்திற்கும், அதோடு சார்ந்த இன்பத்திற்கும் மட்டுமே பயன்பட வேண்டும். அவ்வாறு அறம் செய்வதற்குரிய இருவகை நிலையுள் இல்லறமே முதனிலை பெறுகின்றது. இல்லாட்குங் கணவர்க்கும் நெஞ்சொன்றாகவழி இல்லறம் கடைபோகாமையின் அன்புடைமை பண்பாயிற்று. ஆனால், தற்காலத்தில் குடும்பத்தலைவன், குடும்பத்தைக் கவனியாது பணத்தின் பின் செல்வதால், கணவனால் பெறக்கூடிய அன்பு கிடைக்காமல் இல்லாள் தன்னுள் ஒரு வெறுமை குடி கொள்வதாக உணரும்பொழுது பிரச்சினைகள் கால்கோள்கின்றன.
காட்டில் வாழும் கலைமானும், பிணைமானும் தங்களுக்குக் கிடைத்த சிறிதளவு நீரையும் ஒன்று மற்றொன்றிற்காக விட்டுக் கொடுக்கும் காட்சியை ஐந்திணை ஐம்பது நம்முள் காட்சிப்படுத்துகிறது. இதேபோன்ற அன்புப் பிணைப்பை,
இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்
கண்நிறை நீர்கொண் டனள்
என்று குறளும் விளக்குகின்றது. இவ்விதம் மனம் ஒருமித்த மனைவியுடன் இணைந்து பிதிரர், தேவர், விருந்தினர், சுற்றத்தார் ஆகியோருக்கு ஆற்ற வேண்டிய கடமைகளை இனிதே நிறைவேற்றும் கணவன், துறவிகளை விடப் பெருமைக்குரியவனாகவும், அவனது இல்லமே வானுலக இன்பம் தரும் பேறு பெற்றவனாகவும் விளங்க, இல்லறத்தை நல்லறமாக்கிய சிறப்பையும் பெறுகின்றான் என்கிறார்.
இல்லறத்தில் இல்லாளின் பங்கு
இன் + ஆள் என்பது இல்லத்தை ஆளக்கூடியவள் என்ற பொருள் பொதிந்த சொல். இது புரியாமல் இல்லை ஆட்டுவிக்கக் கூடியவளாய் இல்லிற்குப் புகழைச் சேர்க்கும் நற்குணமும், நற்செய்கையும் இல்லாதிருப்பின் அவளால் கணவனுக்குப் பெருமிதம் ஏதும் ஏற்படாது என்பதை ''இகழ்வார்'' முன் ஏறுபோல் பீடுநடை'' என்ற வரியால் உணர்த்துகிறார்.
தெய்வம் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை
என்ற மனப்போக்கு மாறிப் பெண்கள் தாமும் பணிக்குச் செல்வதால் கணவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்யத் தவறுவதுடன், இல்லத்தின் இன்பத்திற்குக் காரணமாக விளங்கும் இணையில்லாச் செல்வங்களான குழந்தைகளைப் பராமரிப்பதும் தவிர்க்கப்படுகின்றது. பெண் கல்வியும், பெண்ணுரிமையும் அவள் வழி வரும் மக்கள் ஆன்றவிந்தடங்கிய சான்றோராக, பரந்த எண்ணத்துடனும் இருப்பதற்காக மேற்கொள்ளும் முயற்சியேயாகும். இதைத் தவிர்த்து தன் அன்பையும், கடமையையும் இல்லாள் தவறிவிடுவதால் ஏற்படும் பிரச்சினைகள் பலப்பல.
இல்லறத்தில் பிள்ளை வளர்ப்பு, விருந்தோம்பல் ஆகியனவும் முக்கியக் கடமைகளாகும். குழந்தைகளை நீதிக்கதைகளைக் கூறி வாழ்க்கைப் பாதையைத் தெளிவுபடுத்தும் நிலைமாறி, தொலைக்காட்சி பெட்டியின் முன்பே பொழுதைப் போக்கி, வாழ்வின் இரகசியங்களைப் புரிந்து கொள்ளாமல் வாழ்நாளை வீணாக்கிக் கொள்கின்றனர். இவ்விதம் பொறுப்பற்ற இல்லாளின் வளர்ப்பில் வரும் குழந்தைகளே பின்னாளில் பெற்றோரைக் காக்க மறந்து முதியோர் இல்லங்களில் சேர்ப்பிக்கின்றனர். இக்குறைகளை நீக்கி, சிறந்த இல்லத்தலைவிகளாக மாற, திருக்குறள் வழிகாட்டி உய்வு பெறச் செய்கிறது.
மங்கலம் தரும் மக்கட்பேறு
மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்
நன்கலன் நன்மக்கட் பேறு
என்பதில் குழந்தைகளால் இல்லத்திற்கு ஏற்படும் சிறப்பு பற்றிக் குறிப்பிடும் ஆசிரியர், அவர்களின் மழலைமொழி குழலினும், யாழினும் இனிய மக்கட்செல்வத்தை, தாயும், தந்தையும் முறை பிறழாது வளர்க்க வேண்டும். தாயும் தந்தையும் குழந்தையை அரவணைக்கத் தவறிவிடின், குழந்தை தன்னுள் பாதுகாப்பற்ற தன்மையை உணரும் நிலை ஏற்படும். அதன் காரணமாகவே வள்ளுவர்.
மக்கள் மெய்தீண்டல் உடற்கின்பம் மற்றவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு
என்று குறிப்பிடுகின்றார். ஆனால், இன்றைய வாழ்க்கை முறையில் பெற்றோரும், குழந்தைகளும் சந்தித்துக் கொள்வது அருகி வருகிறது. இந்நிலை மாற வேண்டும். குழந்தைகளுக்காக ஓய்வில்லாமல் சம்பாதிக்கும் பெற்றோர், அக்குழந்தையின் மனம் அறிந்து நடந்து கொள்வதும் அவர்களின் தலையாய கடமையாகும். வள்ளுவர் கூறிய,
தந்தை மகற்காற்று நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்
என்பது அவனைத் தன்னைவிட அறிவுடையோனாக்கும் முயற்சியே தவிர, தன்னைவிடப் பொருள் மேம்பாடு அடையச் செய்யும் நிலை அன்று. இக்குறிப்பிட்ட தவறுகள் திருத்தப்பட்டால்தான் நல்ல சமுதாயம் உருவாக வழிகோல முடியும்.
நம்முடைய குறைகளை நீக்கிப் பிள்ளை வளர்ப்பில் ஈடுபட்டால் மட்டுமே, ஒரு தாய் தன் மகனை ஈன்ற பொழுதினும் பெரிதும் உவந்து அவனைச் சான்றோன் எனக் கேட்க முடியும். அதேபோன்று தந்தையும் பிறரால் இம்மகனைப் பெற இவன் செய்த தவம் தான் யாதோ? என்ற பெருமிதத்தையும் எதிர்கொள்ள முடியும்.
இல்லறத்தின் விருந்தோம்பல்
விருந்து என்பதற்குப் புதியது என்று பொருள். புதிதாக வீட்டிற்கு வருவோர்க்கு உணவு படைத்தல், கணவனும், மனைவியும் தம்முள் அன்புடைமையின்றி இனிது நிகழாது. பிணக்கின் சமயம் விருந்துவரின், தலைவன் அவளை,
இருந்து முகந்திருந்தி ஈரோடு பேண் வாங்கி
விருந்து வந்ததென்று விளம்ப
அவள் வெறி பிடித்தவள் போல் நடந்து கொண்டாள் என்று பழம்பாடல் ஒன்று குறிப்பிடுகின்றது.
மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து
என்ற குறள் வழி விருந்தினர் அனிச்ச மலரை விட மென்மையானவர்கள் என்று உணர்த்துவதின் மூலம், விருந்தினருடன் இன்முகத்துடன் இருந்து அவர்களை ஓம்புதல் வேண்டும் என்கிறார் வள்ளுவர்.
வேடன் பிடியில் அகப்பட்ட பெண்புறா ஒன்று தன் ஆண் புறாவிடம் அவனுக்கு விருந்தோம்பச் சொல்லியது. அதற்காகத் தன் உயிரையே மாய்த்து ஆண்புறா வேடனுக்கு உணவானதைக் கம்பராமாயண யுத்தகாண்டம் விளம்பக் காணலாம். ஆறறிவில் குறைபாடுடைய பறவை இனமே விருந்தோம்பும் இல்லறக் கடமையை நழுவாது செய்யும் பொழுது, நம் கடமை உணர்வை நாம் தான் தீர்மானம் செய்ய வேண்டும்.
தற்காலத்தில் விருந்தினரை உபசரித்து, அவர்களுடன் அளவளாவுதல் தவிர்க்கப்படுவதால் இல்லறக் கடமையைத் தவறிய குற்றத்தோடு, நம் வருங்கால சந்ததியினரைக் கடமையுள்ளவர்களாக மாற்றுவதிலும் தவறு செய்து விடுகிறோம். விருந்தினர் வந்தாலும் குழந்தைகளை அவர்களுடன் நெருங்கவிடாது, படிப்பதற்கோ, விளையாடுவதற்கோ, செல்லும்படி ஆணையிடுகிறோம். இவ்விதம் நடந்து கொள்ளாமல் அவர்களையும் மற்றவர்களுடன் எளிதில் பழக உதவுதல் வேண்டும். ஒருவன்,
இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு
என்பதனை நினைவில் கொள்வதும் அவசியமாகும்.
நல்ல சமுதாயத்திற்கு அடிப்படை சிறந்த குடும்பங்களே. அக்குடும்பங்களின் அமைப்பானது, பண்பாட்டுச் சிதைவுகள், கருத்து வேற்றுமைகள், நாகரிகத்தின் அபரிமிதமான வளர்ச்சி போன்றவற்றால் சிதைவுற்றுள்ளன. இந்நிலை மாற, திருக்குறள் வழிகாட்டியாக இருந்து உய்வுபெறச் செய்யும் என்பதாலேயே இக்காலத்திற்கு மட்டுமல்லாமல் எக்காலத்திற்கும் இந்நூல் தேவையாகின்றது.
1. வ. சுப. மாணிக்கம், வள்ளுவம், மாருதி பிரஸ் பீட்டர்ஸ் ரோடு, சென்னை - 14, எட்டாம் பதிப்பு 1982.
2. ச. žனிவாசன் (பதிப்பாசிரியர்), திருக்குறள் பரிமேலழகர் உரை, முதற்பதிப்பு 1997.
3. மணிமேகலைப் பிரசுர ஆசிரியர் குழு, திருக்குறளுக்கு எளிமை உரை, மூன்றாம் பதிப்பு 1999.
4. பைந்தமிழ்ப் புலவர் அ.கி. பரந்தாமனார், இல்வாழ்க்கை (திருக்குறள் கனிகள்), இரண்டாம் பதிப்பு, 1982.
5. த. அகரமுதல்வன், பாட்டிலே பண்பு, பார்வதி பதிப்பகம், முதற்பதிப்பு 1991.
திருமதி நா.து. சிவகாமசுந்தரி எம்.ஏ., எம்.பில்.
கௌரவ விரிவுரையாளர்
சென்னை சமுதாயக் கல்லூரி
சென்னை.
2004 ஆம் ஆண்டில் அண்ணா பல்கலைக்கழகமும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனமும் இணைந்து நடத்திய பன்னாட்டு திருக்குறள் மாநாட்டில் வாசிக்கப்பட்ட கட்டுரை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக