உலகமெங்கும் வியாதிக் கிருமிகள் மயம், இலேசாகச் சொல்-விடலாம், நாலைந்து ஆண்டுகள் இதைப் பற்றி ஆராய்ச்சி செய்து பட்டம் பெற்ற செங்கமலத்திற்கு அல்லவா அதன் பயங்கர விளையாட்டுகள் தெரியும், வியாதிக் கிருமிகளைப் பூதக்கண்ணாடி வழி சோதனை செய்து. எண்ணிக் கணக்கிடுவது அவள் வேலை.
ரோகாணுக்களின் சம்காரத் திருவிளையாடல்களைப் பற்றி எத்தனை தடவை கௌரிக்குட்டியிடம் சொன்னாலும் அலுக்காது செங்கமலத்திற்கு, அரைமணி நேரம் மூச்சு விடாமல் சொற்பொழிவு ஆற்றிவிட்டுக் கேள்விகள் தொடுப்பாள்.
“இன்று துடைப்பக்கட்டையை லோஷன் விட்டு கழுவினாயோ?”
“ம்”
“கொல்லையில் மாமரத்தடியில் பத்து அவுன்ஸ் தண்ணீர் தேங்கி நிற்கிறது, இந்த உலகம் அழிய அதுவே அதிகம்.
“கவனிக்கிறேன்”
“இன்று காலையில் குளித்தாயோ?”
“ஆமாம்”
“மருந்து சோப்புத் தேய்த்துத்தானே?”
“ஆமாம்”
வாசலில் கார் வந்து நின்றது, செங்கமலம் கிளம்பி விட்டாள்.
பூதக்கண்ணாடி வழி அணுவை எண்ணிக் கணக்கிட, கௌரிக்குட்டி வேலைக்கு வந்து ஐந்தாறு மாதங்கள் தானாகிறது. வேலைக்காரி என்று வந்தவள், இப்பொழுது தோழி என்ற பதவி உயர்வு பெற்றுவிட்டாள்.
வேலைக்கு வந்த முதல் நாள் நடந்த கூத்தையெல்லாம் தனிமையில் உட்கார்ந்திருக்கிறபொழுது எண்ணிப் பார்த்துச் சிரிப்பாள் கௌரிக் குட்டி.
முதல்நாள் வந்து நின்றதும் இன்டர்வியூ ஆரம்பமாகிவிட்டது.
செங்கமலம்: உலகமெங்கும் வியாதி அணுக்கள் நிறைந்திருக்கிறது என்பது தெரியுமா?
கௌரிக்குட்டி: தெரியாது.
செங்கமலம்: தெரிந்துகொள், உலகமெங்கும் ரோகாணுக்கள் மயம், நீ எந்த நிமிஷமும் இறந்து போகலாம், நானும் அப்படியே.
கௌரிக்குட்டி கண்ணை உருட்டி உருட்டி விழித்தாள், பேட்டி தொடர்ந்து நடைபெற்றது.
செங்கமலம்: தேவலோகத்தில் முப்பத்திமூன்று கோடி தேவர்கள் இருக்கிறார்களாம், பூலோகத்தில் அதே அளவு அணுக்கள் உனது உள்ளங்கையில் இருக்கின்றன, மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
தொடர்ந்து. கௌரிக்குட்டியின் அன்றாட அலுவல்கள் பற்றியும் சில சொன்னாள் செங்கமலம்:
சுடு தண்ணீரில் மருந்து சோப்புத் தேய்த்துக் குளிக்க வேண்டும், சாப்பாட்டு இலைகளை மூன்றரை வினாடி கிருமிநாசினியில் ஊற வைக்க வேண்டும், ஐந்து தடவை பல் விளக்க வேண்டும், வாய்க்குள்ளிருக்கும் கிருமிகள் இரண்டு லக்ஷம் யானைகளை விழத்தட்டுவதற்குப் போதுமானதாகும்.
மறுநாள் இரவு அன்றைய அலுவல் மிகுதியால் கண்ணெரிச்சலோடு வீட்டுக்கு வந்த செங்கமலம் கௌரிக்குட்டியை அழைத்தாள், அவள் வந்தாள்.
“குனிந்து நின்றுகொள்”
நின்றாள்
முதுகில் கிடந்த பின்னலைக் கீழே தள்ளி தலைமயிரை அளைந்து பார்த்தாள் செங்கமலம்.
செங்கமலம்: இன்றோடு நின்றுகொள், கணக்குத் தீர்த்துச் சம்பளம் தந்துவிடுகிறேன்.
கௌரிக்குட்டி: என்ன விஷயம்?
செங்கமலம்: தலையில் பேன் இருக்கிறது.
கௌரிக்குட்டியின் கண்களில் நீர் நிறைந்து விட்டது, இதைப் பார்த்ததும் மனமிரங்கி விட்டது செங்கமலத்திற்கு.
செங்கமலம்: சரி. இரண்டு நாள் அவகாசம் தருகிறேன், ஒழித்துக் கட்டிவிட வேண்டும்.
கௌரிக்குட்டி: ஒழித்துக்கட்டுவேன், உறுதி.
இதெல்லாம் பழைய கதை, பின்னால் கௌரிக்குட்டியும் எவ்வளவோ மாறிப்போய் விட்டாள், பூதக்கண்ணாடி இல்லாமலே எங்கும் அணுக்கள் நிறைந்திருப்பது அவள் கண்களுக்கும் தெரிந்தது.
சென்னையும் செங்கமலமும் சேர்ந்து ரொம்பவும் மாற்றிவிட்டார்கள் கௌரிக்குட்டியை, பழைய பட்டிக்காட்டுப் பெண்ணா அவள்!
மாமூல் உடையைக் கழற்றி எறிந்துவிட்டு வாயில்சாரி கட்டிக் கொண்டாள், வெளியே கிளம்பினால் கையில் பை சுழலும், குடையைச் சுழற்றிக்கொண்டே ஒயிலாய் நடந்தாள்.
இருமுகிறபொழுது விரல்களைச் சுருட்டி வாய் அருகே வைத்துக் கொள்ளும் அழகு அற்புதமாக இருக்கும், இங்கீலிஷ் கூடத் தெரிந்து கொண்டாள், யாராவது அழைப்பிதழ்கள் கொண்டு கொடுத்தால் “எக்ஸ்க்யூஸ்மி” என்பாள், பஸ்ஸில் பிரயாணிகள் காலை மிதித்துவிட்டால் ‘தாங்க்யூஃ என்பாள், தோள் குலுங்க வாய்விட்டுச் சிரிப்பாள், செங்கமலத்தோடு வைத்தியர்கள் சங்க விருந்துக்குச் சென்றால் சகல பண்டங்களையும் எச்சில் ஆக்கிவிட்டு அப்படி அப்படியே வைத்துவிட்டு வரவும் தெரிந்து கொண்டாள், நவநாகரிக யுவதி ஆனாள் கௌரிக்குட்டி, செங்கமலம் அவளைத் தோழியாக ஏற்றுக்கொண்டுவிட்டாள்.
கௌரிக்குட்டியும் செங்கமலமும் ஒரே உயிர் என்றாகிவிட்டார்கள், இரவில் இருவரும் சிரித்துச் சிரித்துக்கும்மாளம் போடுவார்கள், முதல் நாள் பார்த்த சினிமாவில் வந்த ஹாஸ்ய நடிகர் போல் நடித்துக் காட்டி. தமிழ் வசனங்களை மலையாளக் கொச்சையுடன் பேசிக் காட்டுவாள் கௌரிக்குட்டி.
செங்கமலம் சிரிப்பாய்ச் சிரித்து. வயிற்றைப் பிடித்துக்கொண்டே
‘போதும்டீ போதும் என்று குழறியடித்துக்கொண்டு
கௌரிக்குட்டியின் வாயைப் பொத்துவாள்.
எனினும் நீண்ட நாட்களாகவே செங்கமலத்திற்கு ஒரு சந்தேகம், கௌரிக்குட்டி தினமும் மருந்து சோப்புத் தேய்த்துக் குளிக்கிறாளோ? அல்லது கள்ளப் பாடம் போடுகிறாளோ? இந்தச் சந்தேகத்தை எப்படித் தீர்ப்பது? யோசித்துப் பார்க்க வேண்டியதுதான்.
ஆனால் ஒரு சிக்கல், காலையில் எட்டு மணிக்குத்தான் கண் விழிப்பாள் செங்கமலம், இருபத்தேழு ஆண்டுகளாக இந்தப் பழக்கம், அதிகாலையில் கௌரிக்குட்டி மருந்து சோப்புத் தேய்த்துக் குளிக்கிறாளா என்பதை எப்படித்தான் தெரிந்து கொள்வது?
செங்கமலம் நல்ல மூளைக்காரி, யோசித்தாள், வழி பிறந்தது.
சொடக்கு விட்டு. தனக்கே சபாஷ் போட்டுக்கொண்டாள்.
வீட்டில் கௌரிக்குட்டிக்குத் தனி அறை, அதில் சுவர் அலமாரி, சுவர் அலமாரிக்குள் மருந்து சோப். மருந்து எண்ணெய். கிருமி நாசினி முதலியன.
அன்று இரவு நடுநிசிவரை கண் விழித்திருந்தாள் செங்கமலம்.
மணி ஒன்றடித்தது, அறை விளக்கை அணைத்தாள்,
டார்ச் விளக்கை எடுத்துக்கொண்டு கால் அரவமின்றி கௌரிக்குட்டியின் அறைக்குள் வந்தாள், நெஞ்சு படபடவென்றடித்தது, அன்னிய வீட்டில் திருடச்செல்வதுபோல்
பீதி,
கௌரிக்குட்டி ஆனந்த நித்திரையில் லயித்திருந்தாள், அவள் அருகே குனிந்து டார்ச் ஒளியைத் தரையை நோக்கி அடித்தாள், கழுத்து மாலையில் சாவி தெரிந்தது, மெதுவாக சாவியைக் கழற்றினாள், பதட்டத்தில் கை ஆடி மோவாயில் இடித்தது,கௌரிக்குட்டி உடம்பை உசுப்பினாள், சமயோஜித புத்தி கைலாகு கொடுத்தது, அருகிலிருந்த விசிறியால் வீசினாள் செங்கமலம்.
கௌரிக்குட்டியின் அலமாரியைத் திறந்து ஓரே நிமிஷத்தில் சிவப்பு மருந்து சோப்பை மடியில் கட்டிக் கொண்டாள், அடுத்த நிமிஷத்திற்குள் பழையபடி சாவி கௌரிக்குட்டியின் மாலையில் தொங்கிற்று, இப்பொழுது தைரியம் பிறந்தது, குறும்பும் கூடவே பிறந்தது.
அறைக்கதவை திறந்து கொண்டு. வாசலைப் பார்த்தபடியே கையை நீட்டி கௌரிக்குட்டியின் பாதத்தில் ஒரு குத்து விட்டுவிட்டு ஒரே ஓட்டமாய்த் தன் அறைக்குள் வந்தாள், மருந்து சோப்பைத் தனது அலமாரியில் வைத்துப் பூட்டினாள், படுக்கையில் விழுந்து கண் அயர்ந்தாள்.
காலை எழுந்ததும் முதல்நாள் இரவு நடந்த நாடகம்தான் ஞாபகத்திற்கு வந்தது, சிரித்துக் கொண்டாள், ‘கௌரிக்குட்டி பரட்டைத் தலையோடு பாத்ரூம் வாசலில் உட்கார்ந்து கொண்டிருக்கும் பார்ப்போமே?’
பின்கட்டுக்கு வந்தபொழுது. தலையில் உளுந்து வடைக்கட்டுப் போட்டுக்கொண்டு திவ்ய அலங்காரத்தோடு அமர்ந்து சினிமாப் பத்திரிகையைப் புரட்டிக் கொண்டிருந்தாள் கௌரிக்குட்டி,
கோபம் பீறிட்டுக்கொண்டு வந்தது செங்கமலத்துக்கு.
“கௌரிக்குட்டி. இன்று நீ குளித்தாயா”
“ஓ குளித்தேனே!”
“சோப்புத் தேய்த்தா?”
“ஆமாம்”
என்ன நெஞ்சழுத்தம்! அடிப்பாவி. பச்சைப் புளுகு புளுகுகிறாயே! நாக்கு அழுகிப் போகாதா?
சட்டென்று ஒரு குயுக்தி பிறந்தது செங்கமலத்திற்கு, மௌனம் சாதிப்போம், இப்படியே எத்தனை நாட்கள்தான் மருந்து சோப் தேய்த்துக் குளிப்பாளாம்?
மறுநாள் காலை எட்டு மணி,
செங்கமலம் கண் விழித்ததும் முதல் கேள்வி:
“கௌரிக்குட்டி. இன்றும் குளித்தாய் அல்லவா?”
“ஆஹா குளித்தேன்,”
“சோப்புத் தேய்த்தா?”
“ஆமாம், ஆமாம்”
“பேஷ், அருமையான திமிர்! இரு உன்னை ஒரு கை பார்க்கிறேன்.
மறுநாளும் அதே கேள்வி, அதே பதில்,”
செங்கமலத்தின் கண்கள் கோவைப் பழங்காளயின,
“ஏ. கழுதை! இங்கே வா, இன்று நீ சோப்புத் தேய்த்துக் குளித்தாயா?”
“குளித்தேன்”
“சரி சோப்பைக் காட்டு பார்க்கலாம்” என்று சவால் விட்டாள் செங்கமலம்.
கௌரிக்குட்டி தனது அறையை நோக்கி விரைந்தாள், அவள் முதுகிற்குப் பின்னால் அழகு காட்டிச் சென்றாள் செங்கமலம், பேஸ்து அடிக்கப்போகிறது கழுதைக்கு!
கௌரிக்குட்டி பட்டென்று அலமாரியைத் திறந்து லபக்கென்று சிவப்பு சோப்பை எடுத்துக் காட்டினாள், செங்கமலத்தின் முகம் வெளிரிற்று.
“என்னம்மா இது? என்ன விஷயம்?”
“என் அலமாரியில் நான் எடுத்து வைத்திருந்த சோப் பழையபடி உன் அலமாரிக்குள் எப்படி வந்தது?”
“நான்தான் எடுத்தேன், திடீரென்று சோப்பைக் காணவில்லை,
கைதவறி வைத்துவிட்டோமோ என்று தேடிப் பார்த்தேன்
காணோம்; கடைசியில் உங்கள் அலமாரியில் கண்டெடுத்தேன்”
“என் அலமாரியை நான் பூட்டியல்லவா வைத்திருந்தேன்?”
“விடியற்காலை வேளையில் எழுப்ப வேண்டாமென்று உங்களுக்குத் தெரியாமலே. மாலையிலிருந்து சாவியைக் கழற்றி எடுத்துக் கொண்டேன்”
செங்கமலம் கொல்லென்று சிரித்தாள், கௌரிக்குட்டியும் சேர்ந்து சிரித்துவைத்தாள்,
“உன்னை வீணாகச் சந்தேகப்பட்டு எரிந்து விழுந்துவிட்டேன் மனதில் போட்டுக் கொள்ளாதே, வா கேரம் விளையாடுவோம்”
கௌரிக்குட்டியின் இரு கரங்களையும் பற்றி இழுத்துக்கொண்டு போனாள் செங்கமலம்,
இருவரும் கேரம் ஆட உட்கார்ந்தனர், அப்பொழுது கௌரிக்குட்டி மெதுவாகக் கேட்டாள்:
“நான் ஒன்று கேட்டால் கோபித்துக்கொள்ளக் கூடாது நீங்கள் இரண்டு மூன்று நாட்களாகவே குளிப்பதில்லையோ?”
சட்டென்று பதில் சொன்னாள் செங்கமலம்,
“குளிக்கிறேனே நானா குளிக்காமலிருப்பேன்?”
“சோப்புத் தேய்த்தா?”
“அதில் என்ன சந்தேகம்?”
“சோப்பைக் காட்டுங்கள் பார்க்கலாம்”
செங்கமலம் தனது அறையை நோக்கி ஓடினாள், சிரித்துக் கொண்டே பின்னால் சென்றாள் குட்டி.
செங்கமலம் அலமாரியைத் திறந்து மேலும் கீழும் பார்த்தாள்
அவளுடைய சோப்பைக் காணவில்லையே!
“சோப்பைக் காணவில்லையே!”
“என் கையில் அல்லவா இருக்கிறது, அன்று என் சோப்பைத் தேட உங்கள் அலமாரியைத் திறந்தேன் அல்லவா? அப்பொழுது உங்கள் சோப்பை எடுத்து முகர்ந்து பார்தேன், பிரமாதமாக இருந்தது, சரி. இதைத் தேய்த்துத்தான் குளித்துப் பார்ப்போமே என்று எடுத்து வைத்துக் கொண்டேன், உங்கள் சோப்புத் தேய்த்துத்தான் இரண்டு நாட்களாகக் குளித்துக் கொண்டிருக்கிறேன், ஆஹா. என்ன மணம்!”
தனது உள்ளங்கையை முகர்ந்து பார்த்துக் கொண்டாள் கௌரிக்குட்டி,
செங்கமலம் மெதுவாக அறையைவிட்டு நழுவினாள், அவள் பின்னாலேயே வந்து பிடித்துக்கொண்டாள் கௌரிக்குட்டி.
“ஆமாம் இரண்டு நாட்களாக நீங்கள் எப்படி குளித்தீர்களாம்”
முகம் சிவந்தது செங்கமலத்திற்கு, தொண்டை இடறிற்று.
கூரையைப் பார்த்துக்கொண்டே சொன்னாள் அவள்:
“நீ குளிக்கிறாயோ என்று சோதித்துப் பார்த்துக் கொண்டிருந்ததில் நான் குளிக்க மறந்துபோய்விட்டேன்.”
சொல்லி முடித்ததும் கண்களில் ஈரம் கசிந்துவிட்டது.
கௌரிக்குட்டி செங்கமலத்தின் வலது கையைத் தனது கரங்களால் பிடித்துக்கொண்டு சொன்னாள்:
“என்னம்மா இது! இதெல்லாம் பெரிய விஷயமா? இரண்டு நாட்கள் குளிக்காமல் இருப்பதற்குக்கூட நமக்கு சுதந்திரம் கிடையாதா? அணுக்கள் அண்டாமலே எத்தனையோ வியாதிகள் உண்டு நமக்கு, வாருங்கள். சந்தோஷமாகக் கேரம் விளையாடுவோம்.”
அடுத்த சில வினாடிகளில் இரண்டு பேர்களும் காய்களைக் குழிக்குள் தள்ளிக் கொண்டிருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக