தொலைக்காட்சி செய்திகளில் இப்படிப் படித்தார்கள்:
""கப்பலோட்டிய தமிழர். செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார் அவமதிப்புச் செய்ததைக் கண்டித்து'' என்று தொடர்ந்தது அச்செய்தி.
சிதம்பரனார் அவமதிப்புச் செய்தாரா? யாருக்கு? எப்போது? ஏன்? என்ற வினாக்கள் எழுகின்றன. அந்நிகழ்வு என்னவென்றால், அவரது திருவுருவப் படத்துக்கு அவமதிப்புச் செய்தமை பற்றியதாகும். அதனால், வ.உ.சிதம்பரனார் படத்துக்கு அவமதிப்புச் செய்ததைக் கண்டித்து என்றோ, வ.உ.சிதம்பரனாரை அவமதிப்புச் செய்ததைக் கண்டித்து என்றோ அந்தச் செய்தியைச் சொல்லியிருக்க வேண்டும். சிதம்பரனார் அவமதித்ததாகப் பிழையான பொருள் தோன்றும்படி இருத்தல் தகாது.
ஆற்றின் பெயரால் அமைந்த பெயர்களை "ஆர்' விகுதிபோட்டு எழுதும் கேடு பற்றி முன்னரே விரிவாக எழுதியுள்ளோம். (எ-டு) அடையாறு - அடையார், செய்யாறு - செய்யார். இப்பெயர்களைப் போலவே குமரி மாவட்டம் திருவட்டாறு என்னும் ஊர்ப் பெயரும் திருவட்டார் என்று எழுதப்படுகிறது. அண்மையில் செய்தி ஏடுகளில் வந்த ஒன்று:
"திருவட்டார் ஆதிகேசவப் பெருமாள் கோவிலிலும் பாதாள அறைகளில் பொன், வெள்ளி ஆபரணங்கள் உள்ளன'.
"ஏறக்குறைய இருபத்தெட்டு நாட்களுக்கும் மேல் இவர் பயணம் செய்துள்ளார்' என்று ஒரு சொற்றொடர் சிற்றிதழ் ஒன்றில் பார்த்தோம். ஏறக்குறைய (சுமார்) என்ற சொல். இருபத்தெட்டு எனும் வரையறுத்த எண்ணிக்கையோடு பொருந்தவில்லை. ஏறக்குறைய முப்பது நாடுகளுக்கு என்றிருக்கலாம். "மேல்' என்னும் சொல்லும் குறிப்பிட்ட எண்ணிக்கையின் பின் ஒட்டுதல் வேண்டாமே.
சிறுவர்க்கான பாட்டு ஒன்று. "உன்னதத்தைப் பெருவதற்கு' என்று அச்சாகியிருந்தது. உன்னதத்தைப் பெறுவதற்கு என்று இருத்தல் வேண்டும். பெறுதலும், பெருதலும் வேறு வேறு அன்றோ? அதிலும் பெரு என்பது பெரிய என்னும் பொருள் மட்டுமே தரும். பெருவதற்கு எனும் சொல்லுக்கு எந்தப் பொருளும் இல்லை. உன்னதம் பெருகுவதற்கு என்று வந்தால் பொருளுடையதாகும். பழம்பெரும் நடிகர் என்பதைப் பழம் பெறும் நடிகர் ஆக்குதல் எப்படித் தவறோ அப்படியே, பெறு - பெருவாதலும் பிழையே.
"உதவி செய்ய எண்ணு' என்பது முதல் வரி. புளிமா, தேமா, தேமா என மூன்று சீரும் மாச்சீராக உள்ளன. இஃதொரு அறுசீர் விருத்தத்தின் தொடக்கம். இறுதிவரை இந்த அமைப்பு (கட்டளை) மாறக்கூடாது என்று முன்னரே எழுதியுள்ளோம். இந்த மழலைப் பாட்டில், "மாற்றுத் திறனாளி மனத்தில்' என்று மூன்றாவது வரி அமைக்கப்பட்டுள்ளது. மா - காய் - மா எனும் கட்டளைகள் அமைந்துள்ளமை பிழையேயாகும். கவிஞர்கள் இந்த நுட்பங்களிலும் கவனம் செலுத்துதல் நன்று. அடிதொறும் அமைய வேண்டிய எதுகை அமைப்பும் இல்லை (உதவி - மாற்று).
இன்னொரு பாப்பாப் பாட்டில் ஒருவர் எழுதியிருந்தார்:
"உடன் செய்க உயர்வாய்' "கருணை காண்பி சிறப்பாய்', "உதவிக் கரங்கள் நீட்டு' - ஒன்றொடொன்று பொருந்துவதாக இவ்வரிகள் அமையவில்லை. கட்டளை (அமைப்பு) மாற்றத்துடன் எதுகை மோனைகளும் இடர் செய்கின்றன. யாப்பு இலக்கணம் பயின்று எழுதுதல் நல்லது.
மொழிக்கலப்பு:
மொழிக் கலப்படம் பற்றி முன்னர் விரிவாக எழுதியுள்ளோம். எழுத எழுத மாளாத வண்ணம் மொழிக் கலப்பு நாளும் பெருகி வருகிறது. "பண்ணு' என்பதைப் பயன்படுத்தி எப்படி "பண்ணித் தமிழ்' பேசுகிறோம் என்பதையும் முன்னரே எழுதியிருக்கிறோம்.
அண்மையில் ஒரு சமையல் கலை நிகழ்ச்சி தொலைக்காட்சியில் கண்ணிற்பட்டது. பேசுகின்ற பெண்மணி குக் பண்ணி, ஷேக் பண்ணி, என்று பல பண்ணிகளை அடுக்கினார். சமைத்து, கலக்கி என்று சொன்னால் நமக்குப் புரியாதா? இடியாப்பம், கொழுக்கட்டை, குழிப் பணியாரம் போன்ற தமிழ்நாட்டுக்கே உரிய உணவுப் பொருள்களைப் பற்றி விரிவாக விளக்குவதும், பாதி ஆங்கிலம், பாதித் தமிழ் என்னும் வகையில்தான். ஆப்பக்கடை என்று தமிழில் பெயர் வைத்து ஆங்கிலத்தில் எழுதுகிறார்கள். அது ஆப்பக்கடையா? அப்பக்கடையா எனும் ஐயம் எழும்.
(தமிழ் வளரும்)
நன்றி – தினமணி கதிர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக