22/09/2011

நாட்டுப்புறவியலில் நடவுப் பாடல்கள் - வி.மலர்க்கொடி

முன்னுரை

மனித இனம் தோன்றிய அன்றே நாட்டுப்புற இலக்கியங்களும் தோன்றிவிட்டன. நாட்டுப்புற வழக்குகள் பற்றி அறிவியல் அடிப்படையில் ஆராயும் இயல் நாட்டுப்புறவியலாகும். மண்ணின் மைந்தர்தம் மனக்கருவறையில் கருக்கொண்டு உருப்பெற்று உயிர் பெற்று உலா வரும் உள்ளத்தின் உண்மையான வெளிப்பாடுகளே நாட்டுப்புற இலக்கியங்கள். நாட்டுப்புற மக்களின் பழக்கவழக்கங்களையும், பண்பாடுகளையும், நம்பிக்கைகளையும், இலக்கியங்களையும் ஆராயும் இயலே நாட்டுப்புறவியலாகும். ஒரு நாட்டின் வாழ்வையும், வரலாற்றையும், குறையையும், நிறையையும் தெளிவாகக் காட்டுவன நாட்டுப்புற இலக்கியங்கள். மக்களின் பண்பாடு, பழக்க வழக்கங்கள், பழமையான எண்ணங்கள் ஆகியவற்றை வெளிப்படையாகக் காட்டும் கண்ணாடியாகும்.

நாட்டுப்புறவியலை நாட்டுப்புற இலக்கியம், கலை என்ற பிரிவினுள் அடக்குகின்றனர். எழுதப்பெற்ற இலக்கியம் ''காலம் காட்டும் கண்ணாடி'' என்றால் நாட்டுப்புற இலக்கியம் சமுதாயத்தைக் ''காட்டும் கண்ணாடி'' எனலாம். நாட்டுப்புற இலக்கியம் கிராமப்புற மக்களின் அனுபவங்களை மட்டுமின்றி அவர்களது உணர்வுகளையும் பிரதிபலித்து நிற்கின்றது. நாட்டுப்புற இலக்கியமானது மனித சமுதாயம் எதை அனுபவித்ததோ எதைக் கற்றதோ அதைக் குவித்து வைத்திருக்கும் சேமிப்பு அறையாகும். நாட்டுப்புற மக்களால் பாடப்படும் பாடல்கள் நாட்டுப்புறப் பாடலாகும். நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புற மக்களின் வாழ்வோடு பின்னிப் பிணைந்துள்ளன. மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரையுள்ள நிகழ்வுகள் நாட்டுப்புறப்பாடலின் பொருளாகின்றன.

நாட்டுப்புறப் பாடல்களின் வேறு பெயர்கள்

மக்களின் வாழ்க்கை தாலாட்டுப் பாடலில் தொடங்கி விளையாட்டு, காதல் பாடல்களில் வளர்ந்து, திருமணப் பாடலில் நிறைவெய்தி, ஒப்பாரிப் பாடலில் முடிவடைகின்றது. இன்ப துன்பங்களைப் பற்றி மக்களே பாடுவதால் இதனை மக்கள் இலக்கியம் என்றும் கூறுவர். நாட்டுப்புறப் பாடல்களை இயற்கைப் பாடல்கள் எனலாம். மேலும் இதனை, 1. நாட்டுப்புறப்பாடல் 2. நாடோடிப் பாடல் 3. நாட்டார் பாடல் 4. வாய்மொழிப் பாடல் 5 பாமரர் பாடல் 6 பரம்பரை பாடல் 7. கிராமியப் பாடல் 8. கல்லாதார் பாடல் 9. மக்கள் பாடல் 10. ஏட்டில் எழுதாப் பாடல் 11. மலையருவி 12. காட்டுப்பூக்கள் 13. வனமலர் 14. காற்றிலே மிதந்த கவிதை என்றும் அழைக்கின்றனர்.

இப்பாடல்கள் இலக்கண வரம்பிற்கு உட்படாமலும் இருக்கும். எனவேதான் நாட்டுப்புறப் பாடல்களைத் தாமதமாக மலர்ந்து மணம் வீசும் காட்டு மலருக்கும் மலையினின்று விழும் அருவிக்கும் ஒப்பிடுகின்றனர். இதனை ஒரு சிறகில்லாப் பறவைகள் எனவும் கூறுவர்.

நாட்டுப்புறப் பாடல்களின் வகைகள்

நாட்டுப்புறப் பாடல்களை ஆசிரியர்கள் பல்வேறு வகைகளாக வகைப்படுத்துகின்றனர். அவற்றுள் 1. தாலாட்டுப் பாடல்கள் 2. குழந்தைப் பாடல்கள் 3. காதல் பாடல்கள் 4. தொழில் பாடல்கள் 5. கொண்டாட்டப் பாடல்கள் 6. பக்திப் பாடல்கள் 7. ஒப்பரிப் பாடல்கள் 8. பன்மலர்ப் பாடல்கள் எனப் பலவகைகள் உள்ளன.

நடவுப் பாடல்கள்

தமிழர்கள் உழவுத் தொழிலைத் தொடக்கக் காலம் முதல் செய்து வருகின்றனர். சங்க நூல்களிலும், காப்பியங்களிலும், திருக்குறள்களிலும், உழவுத் தொழில் பற்றிய செய்திகள் நிரம்ப உள்ளன. இன்றைய அறிவியல் உலகில் உழவுத் தொழிலில் பல புதுமைகளும், மாற்றங்களும், நடந்து வருகின்றன. உழவுத் தொழிலில் உழுதல் முதல் விளைந்தவற்றை வீட்டிற்குக் கொண்டுவருவதுவரை எனப் பலதரப்பட்ட தொழிலின் போதும் பாடல்கள் பாடப்படுகின்றன. நடவுப் பாடல்கள் என்பவைப் படிப்பறிவு இல்லாத உழவுத் தொழிலை முதன்மையாகக் கொண்டு வாழும் மக்களால் பாடப்படுகின்றன. நடவுப் பாடல்கள் என்பவைப் பெண்கள் வயல்வெளிகளில் நடவு செய்யும் பொழுது பாடப்படும் பாடல்களாகும். நடவுப் பாடல்களைப் பெண்கள் தனியாகவும் குழுவாகவும் பாடுகின்றனர். இப்பாடல்கள் பெரும்பாலும் பாடுவோரின் குரல் வளத்தால் முதன்மை பெறுகின்றன.

நடவுப் பாடல்களின் உள்ளடக்கம்

நடவுப் பாடல்கள் என்பவை பெண்களால் பாடப்படுவதால் பெண்களின் துன்ப வாழ்க்கையும், அவல நிலையும் இவற்றுள் மிகுதியாக உள்ளன. இவை தவிர இறைமை, சமூகநிலை, அரசியல், கேலி, நாத்தி - மாமி கொடுமை, பெற்றோர் பாசம், அண்ணன் தங்கை உறவு மேன்மை முதலியனவும் குறிப்பிடப்படுகின்றன. ஒவ்வொரு பாடலும் நெஞ்சை வருடச் செய்யும் காட்கிகளையும் நினைவுகளையும் கண் முன் கொணர்கின்றன. வானொலி தொலைக்காட்சி வழியும் பாடல்கள் பரவுகின்றன.

நடவுப் பாடல்கள் பாடப்படுவதற்குக் காரணம்

நடவுப் பாடல்களைப் பாடுவதற்குக் காரணம் களைப்புத் தெரியாமல் இருப்பதற்கு என்று பலரும் குறிப்பிடுகின்றனர். எனினும் பெரும்பாலான வயல்வெளி உரிமையாளர்கள் பாடக்கூடியவர்களுக்கு ஊதியம் அதிகம் தருவதும் உண்டு. இவ்வூதியம் பணம், நெல், உணவு என ஏதாவது ஒன்றாக இருக்கும். பிற பெண்கள் பாடல்களைக் கற்றுக்கொள்ளத் தூண்டுவதும் ஒரு காரணம் ஆகும். தங்களின் குரலை வளப்படுத்திக் கொள்ளவும் இப்பாடல் பயிற்சி உதவும்.

நடவுப் பாடல்களில் சமூக நிகழ்வுகள்

1. கணவன்மார் கொடுமை

நடவுப் பாடல்கள் சமூகத்தில் நிலவும் பழக்க வழக்கங்களைப் பதிவு செய்யும் ஆவணம் போல் உள்ளன. குடிகாரக் கணவனின் கொடுமை தாளாமல் ஒரு பெண் அரளி விதையை அரைத்துக் குடித்து இறக்க நினைக்கின்றாள். இதனைப் பாடும் பாடலில் அரளிக் கொட்டையை எவ்வாறு உண்பது என்பதையும் அவ்வாறு உண்டால் அவளின் இறப்பிற்கு பின்பு எத்தகு மருத்துவ ஆய்வுகள் நடக்கும் என்பதையும் ஒரு நடவுப் பாடல் தெரிவிக்கின்றது. இம் மருத்துவ ஆய்வில் அதிகாரிகளின் செயல்பாடுகள் எவ்வாறு இருக்கும் என்பதையும் இப்பாடல் தெளிவுபடுத்துகின்றது.

''வீட்டிலியே சண்மையாகி னன்னானே னானேன்னனே

போறாளடி ரோட்டுப்பக்கம் னன்னானே னானேன்னனே

அங்கிருந்து போனானே னன்னானே னானேன்னனே

பறிச்சாளாம் அரளிக்கொட்டை னன்னானே னானேன்னனே

அரைச்சாளம் அம்மியிலேயும் னன்னானே னானேன்னனே

காச்சி குடிச்சாளம் னன்னானே னானேன்னனே''

இப்பாடலில் சிற்றூர்ப்புறப் பெண்களின் அவல வாழ்வும் அவர்கள் எதிர்கொள்ளும் துன்பங்களும் காணப்படுகின்றன.

விரும்பிய கணவன் கிடைக்காத நிலையில் தன் சோக வாழ்க்கையின் முடிவை எண்ணி எண்ணி வருந்தும் ஒரு பெண்ணின் நிலையை,

''கோவ இலபறிச்சி - எம்மா

கொறடு வச்ச திண்ணக்கட்டி

குந்துலாம் என்றிருந்தேன்

கொலகாரனா எங்கிருந்தான்'' (னன்னானே)

என்ற பாடல் புலப்படுத்துகிறது.

மாமியார்களின் கொடுமை

நடவுப் பாடல்களில் பெரும்பாலும் மாமியார்கள் கொடுமைக்காரர்களாகவே காட்டப்படுகின்றனர். தாய்க்கும் மனைவிக்கும் இடையில் சிக்கித் தவிக்கும் ஆடவனின் நிலையையும் ஒரு பாடல் கூறுகின்றது.

''புல்லு நல்லா எம்மா - நல்ல புல்லு - எம்மா நல்ல புல்லு என்

புருசனும் தான் எம்மா - நல்லவரு - எம்மா - நல்லவரு

புருசனதான் எம்மா - பெத்தமாமி - எம்மா - பெத்தமாமி

பேய் குரங்கு எம்மா அலையுறாளே - எம்மா - அலையுறாளே''

இப்பாடலில் தன் கணவனை உயர்வாகவும், மாமியைக் கருங்குறத்தி, பேய் குரங்கு என இழித்தும், பழித்தும், பேசுவதைக் காணலாம்.

வரதட்சணை கேட்கும் மாமியார் குடும்பத்தையும் எண்ணெய் அடுப்பு கொண்டு அச்சுறுத்தும் மாமியையும் நடவுப் பாடலில் காணமுடிகின்றது.

''நூறுவகை சீதனமாம்

நீ எனக்கு எடுத்துவச்ச

பேராசை புடிச்ச கூட்டம் எம்மா - என்ன

பிச்சிப்புடுங்கி எறியுதே எம்மா - எம்மா (னன்னானே)

ஸ்டவ் அடுப்பு முதல் கொண்டு

நீ எனக்கு எடுத்துவச்ச

இங்கு ஒரு ஸ்டுவ் அடுப்பு எம்மா என்

மாமி வாங்கி வச்சிருக்கா எம்மா எம்மா'' (னன்னானே)

நாத்திமார்களின் கொடுமை

மருமகள் உறவுடைய பெண்களுக்கு நாத்திகளாலும், அண்ணன் மனைவியர்களாலும் இடையூறுகள் ஏற்படுகின்றன என்று நடவுப் பாடல்களில் காணப்படுகின்றது.

''ஆத்துக்கு அந்தாண்டியும்

அண்ணன் வச்ச தென்னம்புள்ள

ஆறு நெநக்கிலியே - எம்மா

அண்ணன் குர கேக்கலியே எம்மா'' - (னன்னானே)

அண்ணன் - தங்கை பாசம்

நடவுப் பாடல்களில் பெரும்பாலும் அண்ணன் தங்கை பாசம் சிறப்புடன் குறிப்பிடப்பட்டுள்ளது.

''என்னானே னானேனேன்னே

னானேன்னனே னானேனன்னே

கொண்ட கொண்ட மப்பெறங்கிக்

கொடுக்காமூல மின்னமின்னி (னன்னானே) (குழு)

கொட்டுதடி கோடை மழை

கொல்ல தண்ணி வெளியே போக (னன்னானே) (குழு)

காட்டுயான உழுது வர

கள்ளர்மக்க தென தெளிக்க'' (னன்னானே) (குழு)

தாய்ப்பாசம்

இந்த உலகில் எந்தப் பொருள் பெற்றிருந்தாலும் தாய் இல்லையெனில் எந்தப் பயனும் இல்லை. தாயை எண்ணியெண்ணி ஏங்கும் பெண்குரலைப்,

''பட்சிகளே பறவைகளே அம்மம்மா

பட்சடையும் தோப்புகளாம்

பட்சடையும் தோப்புலேயும் அம்மம்மா

பறிச்சி திங்க கனியில்லையோ

பறிச்சி திங்க கனியில்லையா - அம்மம்மா

பாவம் தீக்க அம்மா இல்லயோ'' (னன்னானே)

காதல்

நடவுப் பாடல்களில் காதல் செய்திகளும் பாடப்படுகின்றன.

''அத்த பெத்த சின்னப் பொண்ணே

ஆசை வச்சன் வாமயிலே

கொத்தவரம் கொல்லையிலே

கூட தாமும் பேசிடுவோம்

நன்னே னன்னே னானே னன்னே''

முடிவுரை

நடவுப் பாடல்கள் அடித்தட்டு மக்களின் உள்ளத்து உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதோடு பழந்தமிழ் மக்களின் இசையுணர்வினை அறிந்து கொள்ளவும் பயன்படுகின்றன. வளர்ந்து வரும் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிகளால் நம் மரபுச் செல்வங்கள் அழிந்து விடாமல் காப்பது நம் கடமையாகும்.

நன்றி - வேர்களைத் தேடி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக