01/09/2011

நாட்டுப்புறக் கலைகளில் பெண்களின் பங்கு - முனைவர் க.ராஜசேகரன்

முன்னுரை

கலைகள் மனிதனின் நுண்ணறிவால் கண்டுபிடிக்கப்பட்டவை. இதில் நாட்டுப்புறக் கலைகள் மிகவும் பிரசித்தி பெற்றவை. தமிழ்நாட்டில் குறிப்பாக தென் மாவட்டங்களில், மனிதனின் அன்றாட வாழ்க்கையில் கலந்துவிட்ட ஒன்றாகும். நாட்டுப்புறக் கலைகளை ஆண், பெண் இருபாலரும் கற்றுத் தேறியவர்கள். இதில் பெண்கள் எந்தெந்தக் கலைகளில் தேர்ச்சி பெற்றுள்ளார்கள் என்பதையும், அவர்கள் சமுதாயத்திற்கு ஆற்றிய பங்கினை பற்றியும், ஆராய்வதே இவ்வாய்வு கட்டுரையின் நோக்கமாகும்.

கரக ஆட்டம்

கரகம் என்ற சொல் கமண்டலம், ஆலங்கட்டி, நீர்த்துளி, கங்கை, பூங்குடம் ஆகிய பொருள்களைத் தருகிறது. மலர்களைக் கொண்டு அழகாக ஒப்பனை செய்யப்பட்ட குடத்தைத் தலையில் வைத்து ஆடும் ஆடலுக்குக் கரக ஆட்டம் என்று பொருத்தமாகப் பெயர் கொடுத்துள்ளனர். இதைத் தென் மாவட்டங்களில் கும்பாட்டம் என்று கூறுகின்றனர்.

கரக ஆட்டம் கலையழகு சிறக்கத் தொழில் முறையாகப் பல இடங்களில் நடைபெறுகிறது. வழிபாட்டுக் கரகத்துக்கும், கலைத்தன்மைக் கரகத்துக்கும், கலைத்தன்மைக் கரகத்துக்கும் சில வேறுபாடுகள் உள்ளன. முன்னது தண்­ரால் நிரம்பி இருக்க வேண்டும். பின்னது அரிசியால் நிரப்பட்டிருக்கும். மலராலும், வண்ணக் காகிதத்தாலும் ஒப்பனை செய்திருப்பர். கரகத்தின் உச்சியில் ஒரு பொம்மைக்கிளி பொருத்தப்பட்டிருக்கும். பெரும்பாலும் பெண்கள் ஆடும் கலையாக இது விளங்குகிறது. ஆண்களும் சில இடங்களில் ஆடுவதைக் காணலாம். இருபாலரும் இணைந்து ஆடுவதும் உண்டு.

கரகமெடுத்து ஆடுவோர் சில பாடல்களைப் பாடுவதைக் கேட்கலாம். பாடல்கள் நாட்டுப்புறப் பாடலிசை அமைப்பில் இருக்கும். ஒன்று முதல் பத்து வரை எண்கள் அமைந்த பாடலொன்றைப் பார்க்கலாம். முத்துமாரி அம்மனை அழைத்தே பாடப்படுகிறது.

ஒண்ணாம் கரகமாடி எங்க முத்துமாரி

ஒசந்த கரகமாடி எங்க முத்துமாரி

ரெண்டாம் கரகமாடி எங்க முத்துமாரி

ரத்தின கரகமாடி எங்க முத்துமாரி

இவ்வாறு பத்துவரை எண்களைக் குறிப்பிட்டுப் பாடுவர். பாட்டின் மொழி பொருள் இசை எல்லாம் இனிமையாகவும் எளிமையாகவும் இருக்கும். ஆனால் சுவை மிகுதியாகக் காணப்படும். அது நாட்டுப்புற மக்களை மிகவும் கவர்ந்துள்ளது.

கோலாட்டம்

கோலாட்டம் தமிழ்நாட்டில் பல பகுதிகளில் மிகவும் கோலாகலமாக ஆடப்பெற்று வரும் ஆட்டமாகும். இதில் இரண்டு கோல்கள் அல்லது கொம்புகளைப் பயன்படுத்தி ஒன்றுடன் ஒன்று மோதி ஒலி எழுப்புவர். அடிக்கப்படும் கோல்களின் சிறப்பு பற்றியே இந்த ஆடலுக்கு இப்பெயர் கொடுக்கப்பெற்றுள்ளது. ஆண்களும் பெண்களும் கோலாட்டம் ஆடுவர். கால்களில் சதங்கையும் கட்டீ இருப்பர். கோல்கள் இருவண்ணமுடையவையாக இருக்கும். பொதுவாகச்சிவப்பும், பச்சையும் பூசி இருப்பார்கள். பெண்களே இதனைச் சிறப்பாக ஆடுவர் என்று கூறப்படுகிறது.

பெண்கள் வட்டமாகச் சுற்றி நின்று கோலடித்து ஆடுவர். ஆட்டம் தொடங்கிய பின்பும் பெண்கள் வந்தவாறு இருப்பர். அவர்கள் வரவர வட்டம் பெரிதாகிக் கொண்டே இருக்கும். பாடல்களையும், பாடி ஆடல்களையும் ஆடுவர். கோல்களை அடிப்பதும் முன்னும், பின்னும் திரும்பி மாறி மாறி அடிப்பதுமாக ஆட்டம் நடைபெறும். சில சமயம் குனிந்தும், நிமிர்ந்தும் ஆடுவர். கைகளை உயர்த்தியும் தாழ்த்தியும் கோல்களை அடிப்பதைப் பார்க்கலாம். தன் கையில் இருக்கும் கோல்கள் அடிப்பதுடன் முன்பின் உள்ளவர்களின் கோல்களையும் தட்டி ஒலி எழுப்புவர்.

வட்டத்தில் அனைவரும் சுற்றிச்சுற்றி வந்தவாறு ஆட்டம் நடைபெறும். அனைவரும் ஒரு ஒழுங்கைப் பின்பற்றி பாடலின் தாளத்துக்குத் தக்கவாறு கோல்களைத் தட்டி ஒலி எழுப்புவதே இந்த ஆட்டத்தின் சிறப்பு அம்சமாகும்.

கும்மி ஆட்டம்

தமிழ்நாட்டில் ஆண்கள் கலந்து கொள்ளும் கும்மியும், பெண்கள் கலந்து கொள்ளும் கும்மியும் வேறு வேறாக உள்ளன. ஆயினும் பெண்கள் கும்மிக்கே உயர்வும் சிறப்பும் கொடுக்கப்பட்டு வருகிறது. பெண்கள் வட்டமாக ஒரு விளக்கைச் சுற்றி நின்று கும்மியடித்துப் பாடுவது கண்ணுக்கும் காதுக்கும் இன்பம் தருவதாக அமைகிறது. அதனை மக்கள் மிகவும் விரும்பி வரவேற்கின்றனர்.

ஆடி, ஆவணி மாதங்களில் முளைப்பாரி விழாவின் போது பெண்களால் கும்மி ஆட்டம் நிகழ்த்தப் பெறுகின்றது. இது பத்து நாட்கள் நடைபெறும் விழாவாகும். முதல் ஒன்பது நாட்கள் அதைச் சுற்றிப் பெண்கள் கும்மியடித்துப் பாடுவார்கள். அவர்களுடைய பாடல்கள் இனிமையாகவும், பொருள் சிறப்புடையதாகும் இருக்கும்.

ஒண்ணாங் கிழமை யன்னிக்கு ஓரிலையாம் -முளைப்பாரி

இரண்டாங் கிழமை யன்னிக்கு இரண்டிலையாம் -முளைப்பாரி

மூன்றாங் கிழமை யன்னிக்கு மூன்றிலையாம் -முளைப்பாரி

நாலாங் கிழமை யன்னிக்கு நான்கிலையாம் -முளைப்பாரி

என்றாவாறு ஒன்பது நாளைக்கும் பாடுவர் இறுதியாக

பத்தாங்கிழமை யன்னிக்குப் பதமே யடைந்திடுமே

என்று பாடி முடிப்பர்.

கும்மி ஆடும் பெண்களில் ஒருவர் கும்மிப்பாடலை முதலில் பாடுவார். அவரை முன்பாட்டாளர் என்று குறிப்பிடலாம். அவரைத் தொடர்ந்து பாடுபவர்களைப் பின்பாட்டாளர் எனலாம். முன்பாட்டாளர் பாடியதில் பகுதி மட்டும் வாங்கியோ தாமாகச் சிறிது சேர்த்தோ இசையை மட்டும் தழுவியதாகப் புதியதாகச் சொற்களைச் சேர்த்தோ முன்பாட்டாளருக்குத் துணையாகப் பின்பாட்டாளர் பாடுவர். கும்மி ஆடும் பெண்கள் கும்மிப்பாடல்களைப் பாடிக்கொண்டே களைத்துப் போகும்வரை கை கொட்டிக் கும்மியடித்து ஆடுவதே இதன் சிறப்பாகும்.

பொய்க்கால் குதிரை ஆட்டம்

விலங்கினங்களின் உருவைத் தாங்கி ஆடும் பலவிதமான ஆடல்கள் தமிழ்நாட்டில் உள்ளன. அவற்றில் பொய்க்கால் குதிரை ஆட்டத்தை மிகச் சிறப்பாகக் கூறலாம். அதைப் புரவியாட்டம் என்றும் சில இடங்களில் அழைக்கிறார்கள். கோயில் திருவிழக்களில் பெரும்பாலும் இந்த ஆடல் நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.

ஒரு குதிரையின் உருவத்தை அட்டைகளாலும் மூங்கில் கீற்றுக்களாலும் செய்து அதைப் பல வண்ணத் துணிகளால் ஒப்பனை செய்வார்கள். கால்களை இணைப்பது இல்லை. அட்டைக் குதிரையின் முதுகுப் பகுதியில் ஒரு மனிதன் நிற்கும் அளவுக்குக் கூடாக இடம் விட்டு வைப்பர். அதற்குள் ஆட்டம் ஆடுபவர் புகுந்து நின்று குதிரையைப் பிடித்திழுத்து ஆடுவார்.

மரக்கட்டையால் செய்த கால்களைத் தன்கால்களுடன் இணைத்துக் கட்டிக் கொள்வார். அதைக் கொண்டு தரையில் உதைக்கும் போது குதிரையின் குளும்பு ஒலிகேட்கும். குதிரையைக் கடிவாளத்துடன் பிடித்துச் சவுக்கால் அடித்தும் ஆடுவதைக் காணலாம். ஆட்டத்தில் மெய்ம்மை காட்டும் நோக்கத்துடன் இவ்வாறு செய்யப்படுவதாகக் கருதலாம். ஆடுபவரின் காலில் சதங்கை கட்டியிருப்பதால் அதன் இனியவொலி தாள இசை எழுப்பியவாறு இருக்கும். சில சமயம் ஒரு வாளைக்கையில் பிடித்தவாறு குதிரையில் அமர்ந்திருப்பர்.

பொய்க்கால் குதிரையாட்டம் ஆடுவதற்காக முன்பு குந்தளம் என்ற கருவியால் இசை எழுப்புவார்கள். இசைக்கு ஏற்றவாறு குதிரை துள்ளுவது போன்ற நிலையில் அட்டைக் குதிரையை ஆட்டி அசைத்து ஆடுவர். இதுவே இவ்வாட்டத்தின் சிறப்பாகும்.

ஒயிலாட்டம்

வரிசை முறையில் நின்றாடும் ஒயிலாட்டம் நேர்க்கோட்டு முறையிலானதாகும். ''ஒயில்'' என்பதற்குச் சாயல் என்ற பொருளினைத் தமிழ் அகராதி தருகின்றது. உடை ஒப்பனையின்றி வேட்டியைத் தார்பாய்ச்சிக் கட்டிய நிலையில் வரிசை முறையில் நின்று வலக்கையில் ஒரு சிறு துணியைப் பிடித்துக் கொண்டு வரிசைக்கு முன்நிற்கும் ஆசிரியரின் வழிகாட்டுதலோடு முன் பாட்டாளரின் பாடலைப் பின்பாட்டாகப் பாடிக் கொண்டு கைத்துணியை முன்னும் பின்னும், மேலும் கீழும் ஆட்டி அசைத்துத்தம் இரு கால்களால் வலமும், இடமும், முன்னும், பின்னும் காலடி வைப்புக்கள் செய்தும் குதித்தும், சுழன்றும் ஆடுவது ஒயிலாட்டம் ஆகும்.

முன்னும், பின்னும், வலமும், இடமும், ஆட்ட அசைவுக் கூறுகள் பாடலுக்கேற்ப முறையே நிகழ்த்தப்படுவதற்கு ''நாலுவீடு கட்டுதல்'' என்று பெயர். நின்ற நிலையில் பக்கங்களில் திரும்பிக் காலடி செய்து ஆடும் முறைக்கு ''அடிப்போடுதல்'' என்று பெயர். ''நாலு வீடு கட்டுதல்'' அடிப்போடுதல் ஆகிய ஆட்ட முறைகள் சிலம்புக் கம்புகள் கொண்டு செய்யும் வீர (போர்) நடனத்திலும் காணப்படுகின்றன.

அமைதியான தாள நடையில் தொடங்கிப் படிப்படியாக வேக நிலைக்குச் சென்று முடிவடையும் ஆட்டத்தின் நேரம் மூன்று நிமிடத்திலிருந்து ஐந்து நிமிடத்திற்குள் அமைவதாயிருக்கும். பின்னர் இரண்டு நிமிடத்திற்குள் அமைவதாயிருக்கும். பின்னர் இரண்டு நிமிடத்திலிருந்து ஐந்து நிமிடத்திற்கு வேக நிலையில் ஆடி முடித்த கலைஞர்கள் ஓய்வு எடுத்துக் கொண்ட பின்னர் மீண்டும் வேறொரு பாடலிலோ ஆட்டம் ஆடத் தொடங்குவர்.

இந்த முறையில் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு விடிய விடிய நீண்ட கதைப்பாடல்களைப் பாடி ஆடுவது ஒயிலாட்டத்தின் மரபாகும். பொதுவாக நாட்டுப்புற ஆட்டங்கள் முகபாவங்களையோ, பொருள் உணர்த்தும் வகையிலோ நாட்டுப்புற ஆட்டங்களில் காணப்படுவதில்லை.

மாரடிப்பு ஆட்டம்

இழவு வீட்டில் பெண்கள் வட்டமாக நின்று, தங்கள் உள்ளங்கைகளை மார்புகளில் அடித்து ஆடுவது மாரடிப்புஆட்டம் ஆகும். இறந்தவரின் உறவுப் பெண்கள் இதனை ஆடுவர். வயது முதிர்ந்த இறந்தோர்களுக்கு மட்டும் மாரடிப்பு ஆட்டம் ஆடும் வழக்கம் இருந்து வருகிறது. குழந்தைகள் சாவு, சிறுவர்கள் சாவு, வெட்டு, கொலை, தற்கொலை ஆகியவற்றால் சாகும் அவச்சாவுக்கு இவ்வாட்டம் ஆடப்படுவதில்லை.

நல்ல குரலில் அதிய நேரம் பாடும் நபர் முன்பாடடாளராக அமைய, ஏனையோர் பின்பாட்டாளர்களாவர். இவ்வாட்டத்தில் கன்னிப் பெண்கள் கலந்து கொண்டு பாடுவது இல்லை. வயதான பெண்களே இவ்வாட்டத்தில் பாடி ஆட முன் வருகின்றனர். வட்ட வடிவமுறையில் ஆடுவோர் அனைவரும் பாடுவது இவ்வாட்டத்தின் சிறப்பு அம்சமாகும்.

முடிவுரை

நாட்டுப்புறக் கலைகள் பல ஆண்டு காலமாகத் தமிழ்நாட்டில் நடைமுறையில் இருந்து வருகின்றன. ஆனால் காலப்போக்கில் அவைகளின் செயல்பாடுகள் குறைந்து கொண்டே வருகிறது. இன்னும் சிறிது காலம் போனால் நாட்டுப்புறக் கலைகள் நடைமுறையில் இல்லாமல் காலச்சுவடுகாளகவோ அல்லது வரலாற்று செய்திகாளகவோ நிற்கும் நிலை உருவாகும்.

பெண்கள் பல கலைகளில் தேர்ச்சி பெற்று இருந்த போதிலும் நாட்டுப்புற கலைகளில், அவர்களுக்கென தனிச்சிறப்பு பெற்றுள்ளார்கள். அவர்கள் தேர்ச்சி பெற்ற நாட்டுப்புறக் கலைகளில் கரக ஆட்டம், கோலாட்டம், கும்மி ஆட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், ஒயிலாட்டம், மாரடிப்பு ஆட்டம் ஆகியவை முக்கியத்துவம் வாய்ந்தவை.

நாட்டுப்புறக் கலையானது ஒரு வட்டத்திற்குள் அடங்கிவிட்டது. அக்கலைகள் வளர்ச்சி அடைகின்ற வகையில் தங்களின் செயல்பாடுகளை மாற்றி அமைக்கவேண்டும். முக்கியமாகப் பெண்களின் பங்கு எல்லாக் கலைகளிலும் இன்று இடம் பெற்றுள்ளன. ஆகையால் நாட்டுப்புற கலைகள் அழியாமல் பாதுகாக்கும் திறமையும், வல்லமையும் பெற்றவர்கள் பெண்களே. ஆகவே, பெண்கள் நாட்டுப்புறக் கலைகளின் சிறப்பையும், முக்கியத்துவத்தையும் நாட்டு மக்களுக்கு எடுத்து உரைக்க வேண்டும் என்பதே எனது கருத்தாகும்.

நன்றி: வேர்களைத்தேடி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக