01/09/2011

நாட்டார் பாடலும் புலவர் செய்யுளும் - நா.மம்மது

கேம்பிபிட்ஜ் பல்கலைப் பேராசிரியராயிருந்த எம்.எம் சாடுவிக் (CHADWIK) 1911 இல் ஜெருமானிய,கிரேக்க காப்பியங்களை ஒப்பிட்டு இரண்டும் பண்டைய கதைப்பாடல் (BALLAD)களிலிருந்து தோன்றியவை என்பதை நிரூபித்துள்ளார்.

மில்மான்பேரி (MILLMANPARRY) என்ற ஆய்வாளர் ஹோமரின் காப்பியங்களை இலியட்,ஒடிசி ஆகியவை வாய்மொழிப் பாடல்களாக முதலில் வழங்கி,பின் எழுத்து வடிவம் பெற்று காப்பியங்களாக உருவானவை என்று கூறியுள்ளார்.இதிகாசங்கள்,புராணங்கள்,காப்பியங்கள் யாவும் பண்டைக் கதைப்பாடல்களிலிருந்து எழுந்தவையே;மகாபாரதமும்,இராயமாயணமும் முதலில் நாட்டார் பாடல்களாகவே வழங்கிவந்தவை.சிலப்பதிகாரம் கதைப்பாடலிலிருந்து எழுந்ததே.

தமிழ் மொழியின் முதல்நூலான தொல்காப்பியம் பல்வேறு பண்டைய பாடல் வடிவங்களைப் பதிவு செய்துள்ளது. "வேலன் வெறியாட்டு அயர்ந்த காந்ககளும்" _நூற்பா 1006 என வெறியாட்டுப் பாலையும்,

வாடவள்ளி என்ற கொற்ற வள்ளைப் பாடலான இரங்கற் பாடலையும் "வானோர் ஆடும் அமலையும் (நூற்பா 1018), "முன்தேர்க்குடியையும் ஒன்றிய மரபின் பின்தேர்க் குரவைப் பாடலையும்,

"கண் படை கண்ணிய கண் படைநிலையும்" -நூற்பா 1036 என தாலாட்டுப் பாடலையும்,

"கொடிநிலை (கொடிச்சிறப்புப் பாடல்), கந்தழி (வெற்றிப்பாடல்), வள்ளி (வள்ளன்மைப் பாடல்) நூற்பா 1034 ஆகிய பாடல்களையும் "சூதர் ஏத்தியதுயிலெடை நிலையும்" -நூற்பா 1037 என திருப்பள்ளி எழுச்சிப் பாடலையும், பெருமங்கலம், வாள்மங்கலம், மண்மங்கலம், நீராட்டு மங்கலம் எனப் பல்வேறு மங்கலப் பாடல்களையும், பண்ணத்தி என்ற நாட்டார் பாடல்களையும் இன்னும் இருபது வகை வண்ணப் பாடல்களையும் தொல்காப்பியர் விரிவாகக் கூறுகிறார்.

பண்ணத்தியை பாட்டும் மடையும்,மோதிரப்பாட்டும், கடகண்டும் ஆகிய கூத்துப்பாடல்கள் (நாடகச் செய்யுள்) என்றே உரையாசிரியர் பேராசிரியர் குறிப்பிடுகிறார்.

இளம்பூரணர்,தாழிசை,துறை,விருத்தம் (மண்டிலயாப்பு) என்ற பாவினங்களைப் பண்ணத்தியில் அடக்கியுள்ளார்.இதனால் பாவினங்கள் இசைப் பாடல்களே என்று அறிய முடிகிறது.இதனால் ஆசிரிய வெண்பா என்ற பாக்களிலிருந்து பாவினங்களாக இசை நகர்வு பெற்றதைத் தெரிவிக்கின்றது.எளிய மக்கள் வடிவான, உலக்கைப் பாட்டு என்ற வள்ளப்பாட்டு சங்க இலக்கியமான கலித்தொகையில் இடம்பெறக் காண்கிறோம்.

"ஆவினம் பாடுவாம் தோழி

வகைசால் உலக்கை வயின் வயின் ஒச்சி" - கலித்தொகை 40

"பாடவம் வா வாழி தோழி வயக்களிற்றுக்

கோடு உலக்கையாக நற் சேம்பின் இலைசுளகா

ஆடுகழை நெல்லை அறை உரலுள்

பெய்துஇருவாம்" - மேலது 41

"வள்ளை அகவுவம் வா"- மேலது 42

அடுத்து சிலப்பதிகாரத்தில் நாட்டார் பாடல்களை முதன் முதலில் பெருமளவும் பதிவு செய்தவர் இளங்கோ அடிகளே. குரவைப்பாட்டு, வள்ளப்பாட்டு, ஆற்றுவரி,சாற்றுவரி, முகமுடைவரி, முகமில்வரி,முரிவரி, கந்துகவரி, அம்மானைவரி எனப் பல்வேறு நாட்டர் பாடல்கள் சிலம்பில் பதிவு பெறுகின்றன. மாணிக்கவாசகரில் திருச்சாபூல்,திருத்தெள்ளேனம்,திருத்தோள் நோக்கம் என்றும் பள்ளுப்பாட்டாக,கண்ணிகளாக,கும்மிச்சிந்து,நொண்டிச்சிந்து எனச் சிந்துப் பாடல்களாக தெம்மாங்காக,சித்தர்கள்,தாயுமானவர்,வள்ளலார்,பாரதி,பாரதிதாசனிடம் பதிவு பெறுகின்றன.கீர்த்தனைகளாக மலர்ந்துள்ளன.புதுக்கவிதைகளாகப் பூத்துள்ளன.

தாலாட்டு: வேலன் வெறியாட்டு என்பது போன்ற சடங்குகளிலிருந்தே இசையும் ஆடலும் தோன்றுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.மேலும் குரவை, பாணர் இசைப்பாடல்கள் மற்றும் கதைப்பாடல்களும் ஆதி இசை வடிவங்களே.ஆயினும் இவை எல்லாவற்றிலும் முந்திய வடிவம் தாலாட்டு வடிவமே. தொல்காப்பியர் இதை "கண்படை"என்று பதிவு செய்துள்ளார்.தாலாட்டு மானிடத் தொடர்ச்சிக்கான தொப்பூள் கொடி உறவைத் தன்னகத்தே கொண்டது.

குழந்தையைச் "சீராட்டுதல்" என்பதிலிருந்து பிறந்தது தாலாட்டு.சீராட்டுதலை விலங்குகள், பறவைகளிடமிருந்து முதல் முதலாக ஒரு தாய் கற்றுக்கொள்கிறாள்.

குழந்தைகளுக்கான புதிய கல்வி முறையான Kinter Garden என்பது விளையாட்டு, ஆடல் பாடல்களைக் (Rhymes) கொண்டது. "மாண்டிசோரி" கல்விமுறை இவ்வாறானதே.

தால்+ஆட்டு=தாலாட்டு. ஆட்டு என்பது ஆடலைக் குறித்தது; தாலாட்டிலே ஒரு ஆடலும் உண்டு.

பண்டைய நாட்டார் பாடல்களில்,ஒரடி,ஈரடிக் கண்ணிகளாக அமைந்த பாடல்களே முதலில் தோன்றிய பாவடிவங்கள்.தாலாட்டுக் கண்ணிகளாகவே அமைந்துள்ளது.மேலும் ஒப்பாரி, தெம்மாங்கு கும்மி போன்ற நாட்டார் வவைங்களும் கண்ணிகளாகவே அமைந்துள்ளன.பாரசீகக் கஸ்ஸல்கள் கண்ணிகளே.கண்ணிகள் Couplet என்று மேலைநாடுகளில் அழைக்கப்படுகின்றன.திருமுறைகள் "தமிழ் மாலைகள்" என்றே கூறப்பட்டுள்ளன.

நாட்டார் பாடல்களில் அமைந்த கண்ணிகள் சரம் சரமாக வருவதால் "சரம்"என்றும்,கொத்துக் கொத்தாக அமைவதால்,"கொத்து" என்றும்,பத்தி பத்தியாக அமைவதால் "பத்தி" என்றும் (உரைநடையில் பத்தி பித்தி எழுதுவது),பின்னாளில் கீர்த்தனை என்ற உருப்படியில் இவை "சரணங்கள்" என்றும் இவ்வாறு வளர்ந்துதான் பெயர் பெறுகின்றன;பல்லவியாகவும் அமைகின்றன.

கொல்லத்திலே யாவாரம் -என் கண்ணே

கொத்தமல்லி யாவாரம்

கொத்தமல்லி வித்துப்போட்டு-உன் மாமன்

கொலுசு பண்ணி வாராக

இது இரண்டு கண்ணிகளைக் கொண்ட ஒரு சரம்.இவ்வாறு "மதுரையிலே யாவாரம்;"சேலத்திலே யாவாரம்"என்று ஆக மூள்று சரங்களாக வருகிறது.

"கொன்றையந்தீங்குழல் கேளாமோ தோழி", "ஆம்பலர் தீங்குழல் கேளாமோ தோழி",முல்லையந்தீங்குழல் கேளாமோ தோழி என்று மூன்று சரங்கள் ஆய்ச்சியர் குரவையில் வருகிறது.ஒரு பொருள் மேல் மூன்றடுக்கி வந்தது என்று இதை அழைக்கிறோம். மூன்று தாழிசை பெற்று வந்தது என்று கலிப்பாடல் மரபில் கூறும் வழமையும் உண்டு.

"ஒத்து மூன்றாகும் ஒத்தாழிசையே" - (நூற்பா 1399) என்பார் தொல்காப்பியர்.

தாலாட்டில் ,தனிச்சொல் குழந்தையை விளிப்பதற்காக வருகிறது.

ஆராரோ ஆரிரரோ-எங்கண்ணே

ஆரிரரோ ஆராரோ

எங்கண்ணே என்ற தனிச்சொல் பின்வந்த கண்ணிகளில் கிளியே, குதம்பாய், பராபரமே, மனோன்மணியே என்று வரக்காண்கிறோம். திருப்புகழில் "பெருமானே", "அருளாளா" என்று தொங்கலாக வருகிறது.

மாலைப்பொழுதின் மயக்கத்திலே கனவு கண்டேன்-தோழி என்பது தோழியை அழைத்துப் பாடும் பாடல். கிளிக்கண்ணி போன்ற பாடல் வடிவங்களே, கிள்ளைவிடுதூது போன்ற தூது இலக்கியங்கள் மலர்வதற்கு அடிப்படையாகின்றது. யாரையாவது தூது அனுப்புதல்.

தூது செல்ல ஒரு தோழி இல்லை என்று துயர் கொண்டாயே-தலைவி.

ஆசிரியப்பா: இசைப்பா என்ற அளவில் ஆதிப்பா தாலாட்டுதான்.இயல் பா என்ற அளவில் ஆதிப்பா ஆசிரியம் என்ற அகவல்பா. கூவி அழைத்து, விளித்துப் பாடுவதால் அகவல் பா ஆயிற்று.தோழி கூற்று, தலைவி கூற்று என்பதையும் நாம் ஒப்புநோக்கலாம். இசைப்பாடலிலிருந்து இயல் பாவாக புலவர் மரபில் மாறுவதைக் காணலாம்; ஆசிரியப்பா இவ்வாறு தோற்றம் கொள்கிறது. சங்க இலக்கியங்களில் பெரும்பாலானவை அகத்துறை சார்ந்தவை.எனவே அத்துறைக்குப் பொருத்தமான உரையாடல் மொழியில் அமைந்த அகவல்பாவிவே சங்க இலக்கியங்கள் அமைந்துள்ளன.அகவன் மகளிர்,சூதர் என்ற அகவல் என்ற கூற்றுகளையும் நாம் ஒப்புநோக்க வேண்டும்.

தாலாட்டை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். 1.குறுந்தாலாட்டு, 2.நெடுந்தாலாட்டு.குறுந்தாலாட்டு சில கண்ணிகளாக சில சரணங்களாக (மேலே குறிப்பிட்ட கொல்லத்திலே யாவாரம் போன்று) அமைந்தது,இவ்வகைக் குறும் நாட்டார் பாடல்களே,குறுந்தொகை முதலிய சங்கத் தொகை இலக்கியங்கள் மலர மூலமாக இருந்துள்ளன.

நெடுந்தாலாட்டு என்பது "மாடப்புறாவே மாடப்புறாவே மழைக்கெல்லாம் எங்கிருந்தே"என்பது போன்று கதை கூறும் நீண்ட கதைப்பாடலாக வருவது. சங்கநெடும் பாடல்களான பத்துப்பாட்டு போன்ற புலவர் மரபு இலக்கியங்களுக்கு இந்த நெடுந்தாலாட்டு-கதைத் தாலாட்டு என்ற நாட்டார் நெடும் பாடலகளே மூலமாக இருந்துள்ளன.

ஆசிரியப்பாவின் அடையாளம் அகவல் உரிச்சீர்; மாச்சீரும்,விளச்சீருமான ஈரசைச்சீர் ஏந்தி வரும். வஞ்சியும்,வெள்ளையும் விரவி வரலாம்.மற்றொரு முக்கியமான அடையாளம் ஈற்றயலடி முச்சீராய் வரவேண்டும்.(முச்சீரடி நடுவிலோ வேறு எங்கோகூட வரலாம்.)

பண்டைய இசைப்பாடலிலிருந்து நேரிசை ஆசிரியம் என்ற இயல் பாவுக்கு நகர்ந்த புலவர் மரபு பின்பு மெல்ல மெல்ல இசைப்பாடலுக்கு மீண்டும் நகர்வு பெறத் தொடங்குகின்றது. அதன் அடையாளமே தாளத்திற்குப் பொருந்திவருள் மண்டில யாப்பு முறை . முதன் முதலில் ஆசிரியப்பாவின் வகையான நிலைமண்டில ஆசிரியத்தில் இதை நாம் பார்க்கிறோம்.இயல்பா வடிவான நேரிசை ஆசிரியத்திலிருந்து இவ்வாறாக இசைப்பாடலாக நிலைமண்டில ஆசிரியமாக புலவர் மரபு நகர்வு பெறுவதை நாம் அவதானிக்க முடிகிறது.

"அகவன் மகளே பாடுக பாட்டே"என்ற பாடினி ஒளவையின் குறுந்தொகை (23)ப் பாட்டில் நிலைமண்டில ஆசிரியம் கால்கொள்ளத் தொடங்கியதைப் பார்க்கிறோம்.

தேவராயரின் கந்த சஷ்டி கவசத்தை எடுத்துக்கொண்டால்,காப்புச் செய்யுளாக,"துதிப்போர்ர்கு"என்று நேரிசை வெண்பா மற்றும் "அமரர் இடர்"என்ற குறள் வெண்பாவுடன் தொடங்கும் தேவராயர் "சஷ்டியை நோக்கச் சரவண பவனார்" என்று தம் இசைப்பாடலை "நிலைமண்டில ஆசிரியத்திலேயே"அமைத்துக் கொள்கிறார்.

வள்ளலாரின் ஐந்து திருமுறைப்பொழிவுகளின் பிழிவாக ஆறாம் திருமுறையைக்கூறலாம். ஆறாம் திருமுறையின் முழுச் சாரமாக அருட்பெருஞ்சோதி அகவலைக் கருதலாம். இந்த அருட்பெருஞ்சோதி அகவலை இசைப்பாடலாக நிலைமண்டில ஆசிரியத்தில் வள்ளலார் அமைத்துள்ளார்.

30 காதைகளில் சிலம்பின் 19 காதைகளை நிலை மண்டில ஆசிரியப்பாவில் இளங்கோ அடிகள் இசைப்பாடலாகவே பாடுகின்றார்.மாணிக்கவாசகரின் கீர்த்தித்திரு அகவலும் நிலைமண்டில ஆசிரிய யாப்பிலேயே உள்ளன. சிலம்பின் 30 காதைகள் இவையெல்லாம் இயல்பு பாவிலிருந்த புலவர் மரபு இசை நோக்கி நகர்ந்ததின் அடையாள இசைப்பாடல்களே.

வெண்பா: வெண்பாவின் அடையாளம் வேற்றுத்தளை விரவாமல் வருவது; மற்றும் ஈற்றடி முச்சீரால் அமைவது .கட்டளையாக,சட்டமாக,உத்தரவாக அறம்,நீதி கூறும் நீதிமொழி வெண்பாவின் அடையாளம்.எனவே அகத்துறை சார்ந்த பெரும்பாலான சங்கப் பாடல்கள் புறப்பொருள் சார்ந்த வெண்பா யாப்பில் அமையவில்லை.பதிணென் கீழ்க்கணக்கு நூல்கள் பெரும்பகுதி நீதி இலக்கியங்கள் ஆதலால் அவை பெரும்பாலும் வெண்பா யாப்பில் அமைந்துள்ளன.

ஒரு நாலடி வெண்பா என்பது இரண்டு கண்ணிகள் கொண்டது.முதலடி ஒரு கண்ணியாகவும் தனிச்சொல் ஈற்றுச் சீரும் கொண்டது.மீதி இரண்டடி ஒரு குறள் வெண்பாவாக வருவரு.இந்த நேரிசை வெண்பாவானது இசை நோக்கி நகரும்போது புதிய இன்னிசை வெண்பா தோற்றம் கொள்கிறது.அதாவது தனிச்சொல் இன்றி நாலடி நாற்சீர் என அளவடியாகி தாளத்திற்குப் பொருந்திவர இன்னிவை வெண்பா என்ற யாப்பாகிறது.இந்த இன்னிசை வெண்பா யாப்பே மண்டில யாப்பு எனும் விருத்த யாப்பிற்கு மூலமாகியுள்ளது.

இருகுறள் வெண்பா என்ற சவலை வெண்பா வகை நம்மிடம் உண்டு.

"அட்டாலும் பால் சுவையிற் குன்றா தளவாய்

நட்டாலும் நண்பல்லார் நண்பல்லர்

கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு

சுட்டாலும் வெண்மை தரும் - மூதுரை4

போன்ற சலலை வெண்பா யாப்பு நிலை பெறவில்லை.ஏனெனில் புலவர் மரபு இசையை நோக்கி நகர்வு பெறும் காலக்கட்டத்தில் இரண்டாம் அடியும் ஈற்றடியும் முச்சீர் பெற்று தாளத்திற்குப் பொருந்தாத யாப்பில் உள்ளதால் சவலை வெண்பா யாப்பு வெற்றி பெறவில்வை.இசைப்பாடல்கள் நோக்கி நகர்வு பெற்ற புலவர் மரபு இவ்வகை யாப்புகளை உதறிவிடுகின்றது.

கண்ணிகளால் அமைந்த பாடல்களுக்கு கலிவெண்பா என்று புலவர் மரபு பெயர் சூட்டுகின்றது. கலிவெண்பாவானது தனிச்சொல் பெற்று பல அடிகறால் அமைவது. கலி என்பது இங்கு மிகுதியைக் குறிப்பது. கலிவெண்பாவில் கலித்தளை வருவதில்லை. ஆக கலிவெண்பா என்பது பண்டைய கண்ணிகளால் அமைந்த இசைப்பாடல்களுக்கு புலவர் மரபு சூட்டிய புதிய பெயரே. இவ்வாறே முத்துவீரியமும்,வீரசோழியமும் கூறுகிறது.இதைத் தனது செய்யுள் இலக்கணத்தில் முதன் முதலில் பூவை கலியாண சுந்தர முதலியார் குறிப்பிடுகின்றார்.

கலிவெண்பாட்டு என்ற இசைக்கண்ணிகளை கனாத்திறம் உரைத்த காதை மற்றும் வஞ்சின மாலை ஆகிய காதைகளில் இளங்கோ அடிகள் பயன்படுத்துகின்றார்.

"முற்பகல் செய்தான் பிறன்கேடு தன்கேடு

பிற்பகல் காண்குறூஉம் பெற்றியகலான் -நற்பகலே"

வன்னி மரமும் மடைப்பளியும் சான்றாக

முன்னிறுத்திக் காட்டிய மொய்குழலாள் -பொன்னிக்"

"கரையின் மணற்பாவை நின்கணவனாமென்று

உரை செய்த மாதரொடும் போகாள்-திரைவந்து"

எடுத்துக்காட்டாக மேலே காட்டிய மூன்று கண்ணிகளும் ஆசிடை இட்டு தனிச்சொல்லாகவும் கண்ணிகளாகவும் பதிப்பிக்காத குறை உ.வே.சா பதிப்பு முதல் இன்றுவரை தொடர்கிறது.

கலிப்பா: வஞ்சிப்பாடலையும்,கலிப்பாவையும் வெண்பாவிலும் ஆசிரியத்திலும் தொல்காப்பியத்தில் அடக்கிக் காட்டியுள்ளார்.

"பாவிரி மருங் கினைப் பண்புறத் தொகுப்பின்

ஆசிரியப்பா வெண்பா என்றாங்கு

ஆயிரு பாவினுள் அடங்கும் என்ப"- நூற்பா 1364

"வெண்பா நடைத்தே கலி என மொழிப"- நூற்பா 1365

கலிப்பாவும் பரிபாடலும் இசைப்பாக்கள்.

கலிப்பாவின் தாழிசை, தனிச்சொல்,அந்தாதி அமைப்பு,கண்ணிகள் உரையாடல் (உரையாடல்-குழுப்பாடலின் அடையாளம்) முதலியன கலிப்பாவானது இசைப்பா என்பதின் அடையாளங்கள்.

மருட்பா என்பது முதல் ஈரடி வெண்பாவிலும் மீதி மூன்றடி ஈசிரியத்தாலும் ஆனது. அடிகள் ஐந்தானாலும் ஓரடி முச்சீர் பெற்று வருவதாலும் தாளத்திற்கு ஏற்குடையது அல்லாததால் மருட்பா வெற்றி பெறவில்லை. புலவர் மரபும் மருட்பாவைக் கைக்கொள்ளவில்லை. அகவல், வஞ்சி வெண்பாவைவிட இசைப்பாடலான சலிப்பாவின் வகைமைகளை மிக விரிவாகத் தொல்காப்பியர் குறிப்பிடுகிறார்.தொல்காப்பியர் காலத்திற்கு முன்பே புலவர் மரபு இசைப்பாடல் நோக்கி நகர்வு பெற்றதின் அடையாளமிது. ஒத்தாழிசைக்கலி, கலிவெண்பா, கொச்சகக்கலி, உறழ்கலி, வண்ண ஒத்தாழிசைக்கலி, கலிவெண்பா, கொச்சகக்கலி, உறழ்கலி, வண்ண ஒத்தாழிசை, கொச்சக ஒரு போகு என்று பல்வேறு கலிப்பா வகைகளைக் கூறுகிறார்.

இது இன்றும் விரிவு பெற்று மேலும் இசையை நோக்கி நகர்ந்து மயங்கிசைக் கொச்சகக் கலியாகவும், அயல் மயங்கிசைக் கொச்சகமாகவும், பல்தாழிசைக் கொச்சகக் கலியாகவும் சிலப்பதிகாரத்தில் இடம் பெறுகின்றது.

கலிப்பாவுடன் சேர்ந்து இசை நோக்கிய நகர்வில் புதிதாய் மலர்ந்த பா இனங்களான தாழிசை, துறை, விருத்தத்துடன் கயித்தாழிசையாக, கலித்துறையாக, கலிவிருத்தமாக இசைப்பாடல்களாகவே மலர்ச்சி பெறுவதைப் பார்க்கிறோம்.

இசைக்கு அதாவது தாளக்கணக்கிற்கு ஏற்ற மண்டில யாப்பு என்ற விருத்த யாப்பை கைக்கொண்டு திருத்தக்க தேவர் வெற்றி பெறுகிறார். கம்பன் அதே விருத்தத்தைச் சந்த விருத்தமாக்கி மேலும் இசைபட வளர்த்து வாகை சூடுகின்றான். அது அருணகிரி நாதரிடம் வண்ணவிருத்தமாக இசைப்பாடலாக வெற்றியின் ரகசியத்தை அடைகின்றது.

இசைப்பாடலான கலித்துறையும், தாளத்திற்குப் பொருந்தி வரும் மண்டில யாப்பான ஆசிரிய விருத்தமும் நிறைந்து வருவதை ஆழ்வார்களின் பாசுரங்களிலும், நாயன்மார்களின் திருமுறைகளிலும் பார்க்கிறோம்.

ஒப்பாரி: ஒப்பு, மாரடிப்பு, பிலாக்கணம் என்றெல்லாம் அழைக்கப்பெறும் நாட்டார் இசை வடிவான ஒப்பாரி, கண்ணிகளால் அமைந்த இரங்கற் பாடல்களே.

"வெறகு மேல வெறகடுக்கிண - என்னோட

வேதனய உள்ளடக்கி

வெறவு சுருண்டெரியும் - நீங்கவச்ச

வெசனமும் நின்னெரியும்" - முனைவர் கனகசபை. சந்தனத்தீ, பக்.10

மேற்கண்ட ஒப்பாரி இரண்டு கண்ணிகளால் ஆனது.

"செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத்

தேன்வந்து பாயுது காதினிலே - எங்கள்

தந்தையர் நாடென்ற பேச்சினிலே யொரு

சக்தி பிறக்குது மூச்சினிலே"

என்ற பாரதியின் கும்மிப் பாடல் கண்ணிகளால் ஆனது. இத்தகைய நாட்டார் பாடல்களின் தாய் வடிவான தாலாட்டு கண்ணிகளால் ஆனது.

"மாதா மணியடிக்க - என் கண்ணே

மாரியம்மன் காவருக்கோ

சாமி மணியடிக்க - என் கண்ணே

சம்மனசு பூசை வைக்கோ" - முனைவர் த. கனகசபை, சந்தனத்தீ

இந்தக் கண்ணிகளே செவ்வியல் இசை வடிவில் சிறப்பானதாகப் போற்றப்படும். உருப்படி என்ற கீர்த்தனைகளில் பல்லவி அடிகளாகிறது.

மாயவிந்தை செய்கிறானே - அம்பலவாணன்

மாயவித்தை செய்கிறானே

ஓங்காரமாய் விளங்கும் நாதம் - அந்த

ரீங்காரமே இன்பகீதம்

பார்த்த நாள்முதலாய் - உன்னை

பார்த்த நாள் முதலாய்

என தற்கால கவிஞர் தாமரையின் பாடலில், கண்ணியே பாடலின் முதல் அடிகளாய் வருகின்றது.

"கண் விழித்துச் சொப்பனம் கண்டேன்"

என்பதுவும் ஒரு கண்ணியே.

இவ்வாறு பண்டைப் பாணர் இசைவெறியாட்டு, குரவை முதன்மையாகத் தாலாட்டு என்று இசைப்பாடல்களாகப் பிறந்த கண்ணிகள் என்ற நாட்டார் வடிவ இசையிலிருந்து இயல்பாக்களாக புலவர் மரபு ஆக்கிக்கொண்ட வெண்பாவும் ஆசிரியமும் மீண்டும் இசைப்பாடல்களாகத் தமிழ் மரபில் நகர்ச்சி பெற்றதைப் பார்க்கிறோம்.

நன்றி: புதிய பார்வை 2007

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக