13/09/2011

பழந்தமிழ்ப் பதிப்புகள் வரலாறு - முனைவர் இ. சுந்தரமூர்த்தி

முன்னையோரின் புலமையையும் அவர்களுடைய கல்வி பண்பாட்டுப் பெருமை முதலியவற்றையும் அறிந்து கொள்வதற்குத் துணை நிற்பது அவர்கள் விட்டுச் சென்ற அறிவுசார்ந்த சொத்துக்களேயாகும். கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும், ஓலைச்சுவடிகளிலும் அவர்கள் தங்களுடைய எண்ணங்களைப் பொறித்து அடுத்த தலைமுறைக்கு விட்டுச் சென்றனர். அவற்றின் வழியாகவே நாம் இன்று பண்மையோரின் வரலாற்றுப் பெருமையை உணர்ந்து கொள்ள முடிகின்றது.

தமிழின் தொன்மையை அறிவதற்குத் துணையாக நிற்கும் சங்க நூல்களைச் சுவடிகளில் எழுதிப் போற்றிப் பாதுகாத்தனர். பனை ஓலையை நன்கு பதப்படுத்தி ஒழுங்குபட நறுக்கிச் சுவடி வடிவில் அமைத்து எழுதினர். இன்றும் தமிழகத்தில் பல்லாயிரக் கணக்கான ஓலைச் சுவடிகள் பண்டையோரின் புலமை நயத்தை நமக்கு எடுத்துக் காட்டுகின்றன.

கிரேக்கர், பினிஷ’யர், உரோமர், எபிரேயர், அர்மீனியர், அராபியர் ஆகியோர் கி.பி. ஏழாம் நூற்றாண்டு வரை ''பைரஸ்'' என்னும் புல்லையே எழுதப்படும் பொருளாகப் பயன்படுத்தினர். பேப்பர் என்ற சொல்லும் ''பைபரஸ்'' என்னும் சொல்லிலிருந்து உருவானது என்பர். கிறித்தவ வேத நூலான விவிலிய நூலுக்கும் அதுவே (பைபிள்-Bible) பெயராயிற்று என்பர்.

நம் நாட்டில் பயன்படுத்தப்பெற்ற பனையோலைச் சுவடிகள் ஏறத்தாழ முந்நூறு ஆண்டுகளுக்கு மேலாகவும் அழியாமல் இருக்கும் தன்மை வாய்ந்தவை. உலகம் முழுவதும் பல்வேறு நூலகங்களில் தமிழ்ச் சுவடிகள் உள. கிரிகோரி ஜேம்ஸ் என்பவர் அயல்நாட்டு நூலகங்களில் உள்ள தமிழ்ச் சுவடிகளைப் பட்டியலிட்டுத் தந்துள்ளார். பேராசிரியர் அ. கிருஷ்ணமூர்த்தி அவர்களும் இதுபற்றிய விவரங்களைத் தந்துள்ளார். ஐரோப்பிய நாட்டில் 88 முன்னோடிகளுள் ஒருவராகப் புகழ் பூத்த டாக்டர் உ.வே. சாமிநாதையர்(U.V.Swaminatha Iyer) அவர்கட்குப் பாரிசில் இருந்த பேராசிரியர் ஜூலியன் வின்சோ 7.5.1891 ஆம் நாளில் எழுதிய கடிதத்தில் இச்சுவடிகளைப் பற்றிய விவரங்களைத் தந்துள்ளார்.

பழஞ்சுவடிகளுள் பல போற்றுவாரின்றி அழிந்து போனமையால் நமக்குக் கிடைக்க வேண்டிய பல அரிய நூல்களும் கிடைக்கவில்லை. இலக்கண இலக்கியங்கள், மருத்துவம், சோதிடம், வானசாத்திரம் முதலான பல்வேறு சுவடிகள் இன்னும் அச்சிடப் பெறாத நிலையில் இருக்கக் கூடும். அவற்றையெல்லாம் தொகுத்து முறைப்படுத்தி ஆராய வேண்டியது இன்றியமையாததாகும்.

சுவடிகளைப் படித்து அவற்றைப் படியெடுத்துப் பாதுகாக்கும் அரிய கலையைப் பயிற்றுவிக்க வேண்டும். தமிழறிஞர்கள் பலர் இத்துறையில் முன்பு சிறந்து விளங்கினர். பதிப்பு முன்னோடிகளான அ. தாண்டவராய முதலியார், சிவக்கொழுந்து தேசிகர், திருத்தணிகை விசாகப் பெருமாளையர், களத்தூர் வேதகிரி முதலியார், புஷ்பரதஞ்செட்டியார், ஆறுமுகநாவலர், சி.வை. தாமோதரம் பிள்ளை(Thamotharampillai), மழவை மகாலிங்கையர், உ.வே. சாமிநாதையர்(U.V.Swaminatha Iyer), ச. வையாபுரிப்பிள்ளை(S.Vaiyapuri Pillai) ஆகியோர் இத்துறையில் உழைத்துப் பல அரிய தமிழ் நூல்களைப் பதிப்பித்துத்தந்தனர்.

பழஞ்சுவடிகளில் ஒற்றெழுத்துகளுக்குப் புள்ளி இருக்காது. நெட்டெழுத்தைச் சுட்டும் கொம்பு வேறுபாடுகளும் சுவடிகளில் இரா. இவற்றை அறிந்து எழுதுவதற்குத் தக்க பயிற்சி வேண்டும். பொறுமையும், பயிற்சியும், புலமையும் இப்பணிக்குத் தேவையாகும். சுவடிகளில் எழுதப்பெறும் எழுத்து வடிவங்களை எப்படியெல்லாம் படிக்க வேண்டும் என்பது பற்றியும் வேறுபாடங்களைத் தந்தால் வரும் பொருள் மாற்றங்கள் குறித்தும் பதிப்பாசிரியர்கள் நூலின் முன்னுரைகளில் விவரம் குறித்துள்ளனர்.

பலநூறு ஆண்டுகளுக்குப் பின்னர் ஒரு நூலினைப் பதிப்பிக்கும் போது ஆசிரியரின் உண்மைப்பாடத்தைத் தெரிந்து பதிப்பிப்பது அரிய பணியாகும். பல்வேறு சுவடிப் பிரதிகளையும் திரட்டி மூலபாடத்தைத் தெரிவு செய்து பதிப்பித்தல் வேண்டும். இவ்வரிய பணியின் அருமையைப் பின்வரும் பாடல் நன்கு காட்டும்.

ஏடுபடித்தல் என்பது ஒருகலை

எல்லோரும் ஏடுபடித்தல் இயலாது

அதற்குத்தக்க நூற்பயிற்சி பெரிதும்

உழைத்துப் பெறுதல் வேண்டும்

செல்லும் பூச்சியும் ஏட்டைச் சிதைக்கும்

ஏடுகள் ஒடிந்தும் கிழிந்தும் இருக்கும்

மெய்யெழுத்துகள் புள்ளி எய்தா

ஒற்றைக் கொம்பும் சுழியின் கொம்பும்

வேறுபாடின்றி ஒத்து விளங்கும்

காலும் ரகரமும் ஒன்றே போலும்!

பகர யகரம் நிகருறத் திகழும்

கசதநற என்பவை வசதியாய் மாறி

ஒன்றன் இடத்தை மற்றொன்று கவரும்

எழுதுவோர் பலப்பல பிழைகளைப் புரிவர்

பக்கங்கள் பலப்பல மாறிக் கிடக்கும்

சீரும் தளையும் செய்யுள் வடிவம்

சரிவரத் தெரியா வரிகள் விடுபடும்

இத்தகு நிலைகளால் எத்தனையோ பலகுழப்பமும்

கலக்கமும் விளைத்து நிற்கும்

என்று சுவடிபடித்துப் பதிப்பிக்கும்போது ஏற்படுகின்ற பல்வேறு இடர்களையும் அறிஞர் ந.ரா. முருகவேள் குறிப்பிடுவார். சுவடிப் பயிற்சியும் புலமையும் இல்லாதவர்கள் பதிப்பிக்கும்போது சொற்களும் மாற்றம் பெறும் என்பர்.

தொன்று மொழி அந்தோ தோன்றுமொழி ஆகும்

எதிபங்கம் அச்சோ எதிர்பங்கம் எனஆம்!

யவமத்திமம் எனும் எழிற் பெருஞ்சொல்தான்

பவமத்திமம் எனப் பண்பிற் பிறழும்

அரிய வழக்கு, அன்னோ ஆரிய வழக்காம்

போரவை மாறிப் போர்வை எனப்படும்

தகர சகரம் குறிக்கும் தச்சகரம்

தசக்கரம் ஆகித் தரங் கெட்டு நிற்கும்

என எழுத்தின் வேறுபாடு அறியாது பல்வேறு சொற்களைப் பதிப்பிப்போர் பயன்படுத்திவிடுவதால் சொல்லின் பொருளே மாற்றம் பெற்றுவிடும். எனவே பதிப்பாசிரியர்கள் இப்பிழைகளை எல்லாம் களைந்து ஆய்ந்து பதிப்பிக்கும் பணி பெரிது பெரிது எனப் பாராட்டுவார்.

தமிழாய்வு இன்று பலநிலைகளிலும் வளர்ச்சி பெற்றுத் தொடங்குவதற்கு அடிப்படையாய் அமைவது பதிப்புப் பணியாகும். தமிழ் நூல்களின் அச்சு வரலாற்றில் முதலில் நமக்குக் கிடைத்த நூல் தம்பிரான் வணக்கம் (1557) என்னும் நூலாகும். தொடக்க காலத்தில் கிறித்தவ சமயநூல்களை வெளியிட்டனர். தமிழகத்தில் 1712 இல் தரங்கம் பாடியில் முதன் முதலில் அச்சுக் கூடம் நிறுவப்பட்டது. தரங்கம்பாடி அச்சகம் பல சமய நூல்களையும் அகராதிகளையும் வெளியிட்டது.

1810 ஆம் ஆண்டிற்குப்பின் தமிழில் புதிய பதிப்பு முயற்சிகள் தொடங்குகின்றன. 1812 ஆம் ஆண்டில் திருக்குறள் மூலபாடமும் நாலடியார் மூலபாடமும் வெளியிடப் பெற்றன. இந்நூல்களே தமிழில் அச்சுருவம் பெற்ற முதல் இலக்கிய நூல்களாகும்.

சென்னையிலிருந்த ஆங்கில அலுவலர்களான எஃப்.டபுள்யு. எல்லீஸ் என்பவரும் காலின் மெக்கன்சி என்பவரும் சென்னைக் கல்விச் சங்கம் என்னும் ஓர் அமைப்பினை நிறுவி அரிய நுல்களை வெளியிடத் தொடங்குகின்றனர். 1812ஆம் ஆண்டு எல்லீசு திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்க்கின்றார். 1811ஆம் ஆண்டில் திருவேற்காடு சுப்புராய முதலியார் தமிழ்விளக்கம் என்னும் உரைநடை இலக்கணநூலினை வெளியிட்டார். தொடர்ந்து வெளியிடப் பெற்ற சில நூல்கள் அக்காலக் கல்விச் சூழலை வெளிக்காட்டுவதாக அமைகின்றன.

சிற்றம்பல தேசிகரின் இலக்கணச் சுருக்கமும் (1813), 1824 இல் சதுர் அகராதியும் (பெஸ்கி) 1827 இல் தமிழ் அரிச்சுவடியும் (திருவேங்கட முதலியார்) 1828 இல் இலக்கண வினா விடையும் (தாண்டவராய முதலியார்) 1835 இல் நன்னூலும் (தாண்டவராய முதலியார்) 1847 இல் நன்னூல் விருத்தியுரையும் (இராமாநுச கவிராயர்) பதிப்பிக்கப்பெற்றன. தமிழ்க் கல்வியை அறிமுகப் படுத்த இவ்வச்சு நூல்கள் பெரிதும் பயன்பட்டன.

மேலைநாட்டாருக்கும் தமிழ் மொழியறிவு தேவையான நிலையில் ஜி.யு.போப், பெஸ்கி போன்றோர் இலக்கண வினாவிடை (1888) கொடுந்தமிழ் (1848) ஆகிய நூல்களை வெளியிட்டனர். ஹெண்டிரிக் பாதிரியார் (1520-1600)இதற்கு முன்னரே தமிழுக்கு இலக்கண நூலினை ஆக்கித்தந்தார். ரேனியஸ் ஐயர் 1832 இல் இலக்கண நூற் சுருக்கம் எழுதினார். தமிழ் கற்கும் ஐரோப்பியருக்காக A Grammer of Tamil Language என்னும் நூலினை 1836 இல் அவர் வெளியிட்டார். இவர் திருப்பாற் கடல் நாத கவிராயர், இராமநுச கவிராயர் ஆகியோரிடம் தமிழ் இலக்கணத்தைக் கற்றவர் என்பர்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில்தான் தொல்காப்பிய இலக்கண நூல் அச்சாகியது. மழவை மகாலிங்க ஐயர் 1848 இல் தொல்காப்பிய எழுத்ததிகார நச்சினார்க்கினியர் பதிப்பை வெளியிட்டார். அதற்குப் பின்னர் 1885 இல் யாழ்ப்பாணம் சி.வை. தாமோதரம்பிள்ளை தொல்காப்பிய பொருளதிகார நச்சினார்க்கினியர் உரையை வெளியிட்டார். எஸ். சாமுவேல் பிள்ளை 1858 இல் வெளியிட்ட தொல்காப்பிய நன்னூல் பதிப்பானது ஒப்பியல் பார்வைக்குப் பெரிதும் பயன் தருவதாகும்.

தொல்காப்பிய முதல் பதிப்பாசிரியரான மழவை மகாலிங்க ஐயர் ஓரளவு ஏடுகளிலிருந்த நூற்பா நிலையை நன்கு புரிந்து கொள்வதற்காக முற்றுப்புள்ளி, காற்புள்ளி முதலிய குறியீடுகளை அமைத்துப் பதிப்பித்தார். நூற்பாவும் உரையும் ஒரேவகை எழுத்தினால் அமைக்கப்பட்டுள்ளன. தொல்காப்பிய பதிப்பு வரலாற்றில் இந்நூலே முதன்முயற்சி (1855) என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். இப்பதிப்பிற்குப் பின்னர் தோன்றிய சோட சாவதானம் சுப்பராயச் செட்டியாரின் எழுத்ததிகாரப் பதிப்பு (1868), சி.வை. தாமோரம் பிள்ளையின் சொல்லதிகார சேனாவரையர் பதிப்பு (1868) கோமளபுரம் இராச கோபாலப் பிள்ளை சொல்லதிகாரப் பதிப்பு (1868) முதலியன குறிப்படத்தக்கன.

சி.வை.தாமோதம்பிள்ளை அவர்கள் வெளியிட்ட பதிப்பு நூல்கள் படிப்போர்க்குப் பேரளவில் துணைபுரியுமாறு பல சிறப்புக் கூறுகளைப் பெற்றிருந்தன. எல்லாப் பதிப்பகளிலும் அரிய பதிப்புரைகள் உள்ளன. மூலபாடம் பெரிய அளவிலும், உரை அதனின் வேறான வடிவத்திலும் அமைந்தன. நுற்பாவின் கருத்து, விளக்கம், பொருள் சான்றுகள் ஆகியன தனித்தனிப் பத்திகளில் அமைந்து தெளிவைத் தந்தன. பதிப்பு நூல்களுக்கு இவருடைய பதிப்புகள் முன்மாதிரியாக விளங்கின.

அச்சு ஊடகம் தோன்றியபின் தமிழாராய்ச்சியின் வளர்ச்சியில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டன. இவ்வசதி பல்வேறு நூலாக்கங்களுக்கு வழிவகுத்தது. 1850களில் ஏற்பட்ட பல்கலைக் கழகக் கல்வி (சென்னைப் பல்கலைக்கழகம் தோன்றிய ஆண்டு 1857) மொழிக் கல்வியிலும் புதிய பரிமாணங்களைத் தோற்றுவித்தது. சென்னைப் பல்கலைக் கழகத்தின் முதல் பட்டதாரிகளுள் ஒருவரான யாழ்ப்பாணம் சி.வை.தாமோதரம் பிள்ளை தொல்காப்பியம் மட்டுமின்றி சங்க நூல்களுள் ஒன்றான கலித் தொகையையும் 1887 ஆம் ஆண்டில் வெளியிட்டார்.

சங்க இலக்கியங்களுள் முதன்முதலாகத் திருமுருகாற்றுப்படையை (1851) வெளியிட்டவர் ஆறுமுகநாவலர். சங்க நூல்களுள் பெரும்பாலானவற்றைப் பதிப்பித்துப் பெரும் புகழ் கொண்ட உ.வே.சா. அவர்கள் பத்துப்பாட்டு முழுவதையும் 1889 ஆம் ஆண்டில் வெளியிட்டார். தொடர்ந்து புறநானூறு (1894), ஐங்குறுநூறு (1903), பதிற்றுப்பத்து (1904), ஆகிய நூல்களையும் பதிப்பித்தார். மறைமலையடிகளார் (முல்லைப்பாட்டு 1903, பட்டினப்பாலை 1906) வா. மகாதேவமுதலியார் (பொருநராற்றுப்படை 1907), சௌரிப் பெருமாள் அரங்கனார் (குறுந்தொகை 1915), பின்னத்தூர் நாராயணசாமி அய்யர் (நற்றிணை 1915), ரா. இராகவையங்கார் (அகநானூறு 1918) ஆகியோர் சங்க நூல் பதிப்புகளின் முன்னோடிகளாவர்.

பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை அவர்களின் ''சங்க இலக்கியம் - பாட்டும் தொகையும்'' என்னும் சமாஜப்பதிப்பு (1940) சங்க இலக்கியப் பதிப்பு வரலாற்றில் ஒரு திருப்பு முனையாகும். தொகை நூல்களைப் பழைய உரையுடனோ அல்லது புதிய எளிய உரையுடனோ தொகை வாரிகயாகக் கற்றநிலையிலிருநுத் மாறிப் புலவர் வாரியாகக் கற்கும் நெறியை இப்பதிப்பு புதுநெறியாகக் காட்டியது. சங்கப் பாடல்களை உரையின்றி உணர்ந்து கொள்வதற்கு ஏற்பச் சந்தி பிரித்துப் பதிப்பிக்கும் முறையினையும் பேராசிரியர் அறிமுகம் செய்தார். மரபுப்பாங்கான முறைவைப்பிலிருந்து மாற்றி முற்றும் புலவர் வரிசையில் சங்கப் பாடல்களைப் பதிப்பித்தார். இவ்வகைப் பதிப்பு பல்வேறு ஆய்வுகளுக்கு வழிவகுத்தன.

சுவடிகளில் உள்ள பாடல்களைப் பதிப்பிக்கும் போது தொடக்ககாலத்தில் சந்தி பிரிக்காமலும், குறியீடுகளை அமைக்காமலும் பதிப்பித்தனர். இன்று காற்புள்ளி, அரைப்புள்ளி, முற்றுப்புள்ளி எனப் பல்வேறு குறியீடுகளைப் பயன்படுத்துகின்றோம். 1875 ஆம் ஆண்டில் பதிப்பிக்கப் பெற்ற ''நிட்டானுபூதி'' என்னும் நூலில் இக்குறியீடுகளை அமைத்து அக்குறியீட்டுகளுக்கான விளக்கங்களையும் தர முயற்சி செய்துள்ளனர்.

( , ) இம்முளை கூட்டுச்சொல் முதலியவற்றின் பின்னும்

( - ) இச்சிறுகீற்று சொற்களின் பிரிவுக்குப் பின்னும்

( _ ) இப்பெருங்கீற்று பதசாரத்திற்குப் பின்னும்

( ) இவ்விருதலைப் பிறை வருவிக்கப்பட்ட சொற்களுக்குப் பின்னும்

[ ] இவ்விருதலைப் பகரம் தாத்பரியத்திற்கும்

* - இத்தாரகை அடியிற் காட்டப் பட்டவற்றிற்கும் வைக்கப்பட்டன.

பதிப்பாசிரியரின் இக்குறிப்புகள் காலச் சூழலுக்கு ஏற்ப அவர்கள் கண்ட பதிப்பு முயற்சியைக் காட்டும்.

பதிப்பாசிரியர்கள் பல்வகைத் திறனும் பெற்றிருந்தமையை பழம்பதிப்புகள் நமக்கு நன்கு காட்டுகின்றன. பழமையும் புதுமையும் இணைந்த பார்வையினால் புதிய நூல்கள் எளிமையாக ப் படிப்போரைச் சென்றடைந்தன.

தமிழ் நூல்கள் பதிப்பு வரலாறு பரந்து பட்டது. ஏறத்தாழ இருநுறு ஆண்டுகளின் கல்வி வரலாற்றைக் காட்டுவது. பழைய சுவடிகளில் உள்ள புலமைச் செல்வத்தை மீட்டுருவாக்கம் செய்த அவர்களின் பணி என்றும் நினைந்து போற்றற்குரியதாகும். பழம் பதிப்புகள், புதிய சிந்தனைகளுக்குக் களங்களாக விளங்குகின்றன. சமூகக் கல்விப் பண்பாட்டு இயக்கப் பின்னணிகளில் பழம் பதிப்புகளைக் காணும்போது அவற்றின் தோற்றத்திற்கான காரணம் சிந்தனை வளர்ச்சியில் மாற்றம் ஆகியவற்றைக் காண முடியும். காலந்தோறும் பல்வேறு நிறுவனங்கள் பதிப்புப் பணிகளில் ஈடுபட்டுவந்திருக்கின்றன. இன்றைய அறிவியல் வசதிச் சூழலில் பதிப்புப் பணியை மேலும் தரமுள்ளதாக்கலாம்.

முன்னையோர் அரும்பாடுபட்டுப் பெரிதும் ஈடுபாட்டோடும் புலமையோடும் பதிப்பித்த பழந்தமிழ்ப் பதிப்புகளை, அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்வது இன்றையத் தலைமுறையின் கடமையாகும். பழந்தமிழரின் வரலாறு, பண்பாடு குறித்தும், மொழியின் தொன்மை குறித்தும் ஆராயும் இன்றைய செம்மொழிச் சூழலில் பழந்தமிழ்ப் பதிப்புகளின் பயன்பாடும் பெரிது அன்றோ!

நன்றி: தமிழர் கண்ணோட்டம் பொங்கல் மலர் 2007

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக