உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் என்று சிலப்பதிகாரத்துக்கு ஒரு பெயருண்டு. அதனால் உரைநடை சங்கச் சார்புக் காலத்திலேயே தமிழில் தோன்றிற்று. இறையனார் களவியலுரையும் பழந்தமிழில் உள்ள உரைநடை. அடியார்க்கு நல்லார் உரை, பரிமேலழகர் உரை, சேனாவரையர் உரை என்றெல்லாம் பழந்தமிழ் உரைநடைகள் பல உண்டெனினும், ஐரோப்பியர் வருகைக்குப் பின்னரே தமிழில் உரைநடை வளர்ச்சி பெற்றது. உரைநடையில் புதினங்கள், ஆய்வுக் கட்டுரைகள், சிறுகதைகள் என்று பலவும் தோற்றம் பெற்றன. ஆதலின் வாக்கிய அமைப்புப் பற்றிய செய்திகள் ஆங்கில மொழியைத் தழுவியே ஈண்டு எழுதப்பட்டுள்ளன.
ஈண்டுரைக்கப்பட்ட வாக்கிய அமைப்புகள் பல இந்நாளில் சிதைவுற்றுப் போயின. தொடர் வாக்கியம், கலவை வாக்கியம் இரண்டும் இணைந்த தொடர் கலவை வாக்கியங்கள் நிரம்ப எழுத்துகளில் வந்துவிட்டன. பொதுவாகச் சிறிய சிறிய வாக்கியங்களாக அமைத்து எழுதுதல் நல்லது. மிக நீண்ட வாக்கியங்கள் படிப்பவர்க்குக் குழப்பத்தையும் மலைப்பையும் உண்டாக்கக்கூடும்.
எழுத்தாளர் சிலர், "எப்படி எழுதினால் என்ன? பல்லுடைக்கும் பண்டிதர் தமிழில் எழுத வேண்டுமா?' என்று பேசி வருவது நன்றாகாது. பல்லுடைக்கும் தமிழ் எங்குள்ளது? எவர் அறிவார்? தமிழ் எழுத வராதவர்கள் தாம் தப்பித்துக் கொள்ளச் செய்கின்ற வாதம் இது. ஆங்கில நாளிதழ்களில் மொழியறிவு, புலமை இல்லாதவர் எழுத முடியுமா? பிழையான ஆங்கிலத்தைத் தமிழர்கள் ஏற்பார்களா? தமிழ் என்றால் மட்டும் ஏனோ புறக்கணிப்பு?
உரை வகை நடை என்னும் குறிப்பு தொல்காப்பியத்தில் காணப்படுகிறது. செய்யுளியலில் "பாட்டிடை வைத்த குறிப்பினானும் பாவின்று எழுந்த கிளவியானும்... எனத் தொடங்கி உரைவகை நடை நான்கு என மொழிப' என்றார் தொல்காப்பியர். பாட்டின் உரைக்குறிப்புகள், பாக்கள் அல்லாது தோன்று சொல்வகையாக உலக வழக்கில் நிகழும் உரையாடல் என்று பலவாறு விளக்கம் தரப்படுகிறது. ஆயினும் முற்றிலும் இஃது உரைநடைத் தமிழ் பற்றிய செய்தி ஆகாது. உரையாப்பு வகை என்று இது குறிக்கப்படுகிறது. விரிவு விரும்புவோர் தொல் - நூற்பா 1429 ஐ காண்க. கிளவி - சொல்.
தமிழின் சீர்மை
தமிழகத்தில் இயற்கையாய் இருக்கும் அனைத்துப் பொருளுக்கும் தமிழில் சொற்கள் உள்ளன. கருவிகளுக்கும், பண்டங்களுக்கும் சொற்கள் உள்ளன. சொற்பெருக்கம் உடைய மொழி நம் தமிழ். மிகப் பழங்காலம் தொட்டு, நம் நாட்டிற்குப் புதிதாக வந்தவற்றுக்கு எப்படிப் பெயர் அமைத்தார்கள் எனச் சில காட்டுகள் வழியாகக் காண்போம்.
குதிரை பண்டு தொட்டுத் தமிழகத்தில் இருக்கவில்லை. அரேபியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுப் புதிதாக வந்தபோது அது குதித்துக் குதித்து ஓடுவது கண்டு தமிழர்கள் அதற்குக் குதிரை எனப் பெயரிட்டனர்.
நம்நாட்டில் மிளகு இருந்தது. கார்ப்புச் சுவைக்கு (காரம்) இதனையே பயன்படுத்தி வந்தோம். உடல் நலனுக்கும் ஏற்றதாய் இருந்தது. வெளிநாட்டிலிருந்து ஒரு காய் புதிதாய் வந்தது. அது கார்ப்புச் சுவை கொண்டது. அதனால் முன்னிருந்த மிளகை அடிச்சொல்லாகக் கொண்டு மிளகாய் என்று புதிய சொல்லை உண்டாக்கினர்.
பலவகை இலைகள் நம் நாட்டிலே உண்டு. புதிதாக ஓர் இலை இறக்குமதியாயிற்று. அந்த இலையைப் பயன்படுத்திப் புகை வரச் செய்து பயன்படுத்தினார்கள். புகைவரக் கூடிய இலையைப் புகையிலை என்று சொல்லலாயினர்.
தட்டச்சு, பேருந்து, தொடர்வண்டி, நடைமேடை, அலுவலகம், கணினி, குறுஞ்செய்தி, குறுவட்டு, மின்னஞ்சல், முகப்பக்கம், இணையதளம் என்பனபோல் நூற்றுக்கணக்கான சொற்கள் காலந்தோறும் தமிழில் உருவாகி வந்துள்ளன; வருகின்றன.
இப்போது புதிதாகத் தமிழ்ச்சங்கமம், இசைச் சங்கமம் என்றெல்லாம் எழுதுகிறார்கள். சங்கமம் என்பது வடசொல். கூடல் என்பதே தமிழ்ச் சொல். மூன்று ஆறுகள் சேருமிடம் "திரிவேணி சங்கமம்' என்பதைத் திருமுக்கூடல் என்றே தமிழர் சொல்லி வந்தனர். கூடலுடன் ஒரு "திரு' சேர்த்துக் கொண்டால் சொல்ல அழகாய் இருக்கும். இலக்கியத் திருக்கூடல் எப்படி?
(தமிழ் வளரும்)
நன்றி – தினமணி கதிர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக