03/09/2011

மொழிப் பயிற்சி – 28 : பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்! – கவிக்கோ ஞானச்செல்வன்

நோயற்ற வாழ்வு வாழ்வதற்கான வழிமுறைகள் சொல்லப்பட்டன என்ற செய்தியை ஒரு பத்திரிகை நோயுற்ற வாழ்வு வாழ்வதற்கான என்று அச்சிட்டிருந்தது. ஓர் எழுத்து மாற்றம் எவ்வளவு பெரிய பொருள் மாற்றத்தைத் தருகிறது என உணர்வோமா? (அற்ற - இல்லாத; உற்ற- பெற்ற) எப்போதும் நோய் அற்றவராகவே இருப்போம்.

வெகுளிப் பெண்: கள்ளம், கபடம் அறியாத சூது, வாது தெரியாத (அப்பாவிப்) பெண்ணை வெகுளிப் பெண் என்று சொல்லி வருகிறோம். பெண்ணை மட்டுமன்று, "அவனா... சுத்த வெகுளிப்பய; ஒரு மண்ணுந் தெரியாது' என்று ஆண் பிள்ளையையும் சுட்டுவதுண்டு. ஆக வெகுளி என்றால், உலக நடப்பு அறியாத நல்லது கெட்டது தெரியாத தன்மை என்று கருதுகிறோம். உண்மையில், வெகுளி என்பதற்குச் சினம் (கோபம்) என்பதுதான் பொருள்.

"குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி

கணமேயும் காத்தல் அரிது'

ஆகக் "கோபக்காரியை' "அப்பாவி' ஆக்கிவிட்டோம். அப் பாவி என ஆக்காமல் விட்டோமே!

குண்டுமணி: காட்டுச் செடி ஒன்றின் விதையைக் குண்டுமணி என்கிறோம். பெருமளவு சிவப்பும், கொஞ்சம் கறுப்பும் உடையது அது. "ஒரு குண்டுமணி' தங்கம் கூட வீட்டில் இல்லை என்பார்கள்.

பொன் அளவையில் குண்டுமணியை எடை கணக்கிடப் பயன்படுத்தியதுண்டு. குண்டு மணி என்று உடல் மிகக் குண்டாக இருக்கும் ஒரு நடிகருக்குப் பெயருண்டு. முன் சொன்ன குண்டு மணி என்ற சொல் சரியானதா? இல்லை. அதன் பெயர் குன்றிமணி.

திருக்குறளில் பல இடங்களில் குன்றியெனும் சொல் குன்றி மணியைச் சுட்டுவதாக வந்துள்ளது. "புறங்குன்றி கண்டனையரேனும் அகங்குன்றி மூக்கிற் கரியா ருடைத்து' என்பது ஒரு குறள். குன்றிமணியின் சிகப்பைப் போல் வெளித் தோற்றத்தில் செம்மையுடையவராகவும், அகத்தில் (மனத்தில்) குன்றி மணி மூக்கைப்போல் கரியர் (கறுப்பு எண்ணம் உடையவர்) ஆகவும் இருப்பவர் (போலித் துறவியர்) உலகில் உளர் என்பது இக்குறட் கருத்து.

"கேவரு' தெரியுமா உங்களுக்கு? அதுதான் கேவரகு. இச்சொல்லி இடைக்குறையுள்ளது. அஃதாவது கேழ்வரகு என்னும் சொல்லில் இடையில் உள்ள "ழ்' எனும் எழுத்துக் குறைந்துவிட்டது. சரியாகச் சொன்னால் கேழ்வரகு எனும் சிறு தானியம் இது. உடலுக்கு நல்ல ஊட்டம் தருவது.

என்ன தமிழோ இது?: "வெள்ள நிவாரணமாக ஒவ்வொருவர்க்கும் தலா ரூ.1000 வழங்கப்பட்டது' என்று செய்தி படித்தார்கள். தலா என்பதன் பொருள் தலைக்கு என்பதாம். இது தலையுடைய மனிதரைக் குறிக்கும். தலைக்கு ஆயிரம் ரூபா என்றாலும் ஒவ்வொருவருக்கும் ஆயிரம் ரூபா என்றாலும் பொருள் ஒன்றே.

ஒவ்வொருவர்க்கும் எனச் சொன்னால் தலா வேண்டாம். தலா போட்டால் ஒவ்வொருவர்க்கும் எனல் வேண்டாம்.

கல்வி கண் போன்றது; கல்விக் கண் கொடுத்த கடவுள்- இவ்விரண்டு தொடரும் பிழையற்றவை. ஆனால் ஒரு புத்தகத்தில் கல்விக் கண் போன்றது என்றும், ஒரு சிற்றிதழில் கல்வி கண் கொடுத்த கடவுள் என்றும் படிக்க நேர்ந்தபோது என்ன தமிழோ இது? என்று மனம் வருந்தினேன்.

கல்வியானது மனிதருக்குக் கண்ணைப் போன்றது என்பது முதல் தொடரில் பொருள். கல்வியாகிய கண்ணைக் கொடுத்த கடவுள் இரண்டாம் தொடரின் பொருள். கல்வியைக் கண்ணாக உருவகப்படுத்தும்போது கல்விக்கண் (வல்லொற்று) மிகுதல் சரியாம்.. உருவகம் என்றால் கல்வி வேறு கண் வேறு இல்லை. கல்வியே கண்ணாம் என்று கல்வியைக் கண்ணாக உருவகப்படுத்துதல்.

கல்வி கண் போன்றது எனும் போது கல்வியானது கண்ணைப் போன்றது எனக் கல்விக்குக் கண்ணை உவமை சொல்கிறோம். இயல்பாக இருக்க வேண்டிய இடத்தில் வல்லொற்றுப் போட்டால், கல்விக் கண் என்று உருவகமாகிவிடுகிறது. பின் போன்றது எனும் சொல்லுக்குப் பொருளில்லாமல் போகும்.

இஃதன்றி, மற்றொரு தொடரில், கல்வி கண் கொடுத்த என்றிருப்பது கல்வியும் கண்ணும் கொடுத்த என்று வேறு பொருள் உருவாக்கிடும். ஆதலின் கல்விக் கண் கொடுத்த என்று எழுதுதல் முறையாம். எங்கே எப்படி இந்த ஒற்றெழுத்துகளைப் போடுவது என அறிய நல்லறிஞர்களின் நூல்களைப் படிக்க வேண்டும்.

பிறமொழிக் கலப்பு: தமிழர் தம் எழுத்திலும் பேச்சிலும் இந்நாளில் மிகுதியாகக் கலந்துள்ள மொழி ஆங்கிலம்.

முதலில் தமிழில் கலந்த பிறமொழி, சமக்கிருதம் எனும் வடமொழியே. அளவிறந்த வடசொற்கள் தமிழில் கலந்த போது அதற்கு இலக்கணம் வரையறுத்தது தொல்காப்பியம். வடமொழிச் சொற்களைத் தமிழின் இயல்புக்கேற்ப ஒலித்திரிபு செய்து வடவெழுத்துகளை விலக்கித் தமிழாக்கிக் கொள்வதே அந்நெறி.

(தமிழ் வளரும்)

நன்றி - தினமணி கதிர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக