03/09/2011

மொழிப் பயிற்சி – 26 : பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்! – கவிக்கோ ஞானச்செல்வன்

புலிப்பாய்ச்சல் - புலியைப் போன்ற பாய்ச்சல் என்று பொருள்தரும். போன்ற எனும் உவமை உருபு மறைந்திருப்பதால் இது உவமைத் தொகை. தாமரை முகம் எனில் தாமரை போன்ற முகம் எனும் உவமை உருபு மறைந்திருப்பதால் உவமைத் தொகை.

பெயரை வேறுபடுத்திக் கொண்டிருப்பது வேற்றுமை. ஒரு வாக்கியத்தில் உள்ள எழுவாய் (பெயர்) வேறுபடாத நிலையில் முதல் வேற்றுமை. (எடுத்துக் காட்டு) முருகன் வந்தான்.

இரண்டாம் வேற்றுமை - முருகனை வணங்கினான் (ஐ)

மூன்றாம் வேற்றுமை - முருகனால் முடியும் (ஆல்)

நான்காம் வேற்றுமை - முருகனுக்குக் கொடு (கு)

ஐந்தாம் வேற்றுமை - முருகனின் வேறு (இன்) (பிரித்தல் பொருள்)

ஆறாம் வேற்றுமை - முருகனது வேல் (அது) உடைமைப் பொருள்

ஏழாம் வேற்றுமை - முருகனிடம் சென்றான் (இடம்)

எட்டாம் வேற்றுமை - முருகா வா - விளித்தல்

இரண்டு முதல் ஏழு வரையிலான வேற்றுமைகளுக்கு உருபுகள் உண்டு. அவை மறைதலே வேற்றுமைத் தொகை. எந்த வேற்றுமை உருபு மறைந்துள்ளதோ, அதனைச் சொல்லிக் (நான்காம் வேற்றுமைத் தொகை என்பதுபோல்) குறிப்பிடல் வேண்டும்.

வினைத் தொகையில் காலம் மறைந்து வரும்.

உவமைத் தொகையில் உவம உருபுகள் மறைந்து வரும். போல, போன்ற, ஒத்த, நிகர்த்த, புரைய, ஒப்ப, அனைய- ஏதாகினும் ஓர் உருபு மறைந்து வரலாம்.

பண்புத் தொகையில் "மை' எனும் விகுதியும் "ஆகிய' எனும் உருபும் மறைந்திருக்கும். உம் எனும் இடைச்சொல் மறைந்திருப்பது உம்மைத் தொகை.

இந்த ஐந்து தொகைகளின் வழியாக இவற்றுள் அடங்காத மற்றொரு சொல் மறைந்திருப்பது அன்மொழித் தொகை எனப்படும். அல் + மொழி + தொகை (அல்லாத சொல் மறைதல்) எ-டு: தேன்மொழி வந்தாள் - தேன் போன்ற சொல் பேசும் பெண் வந்தாள்- உவமைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை. (தேன்மொழி எனும் பெயருடைய பெண் வந்தாள்) பெண் எனும் சொல் ஈண்டு அன்மொழி. பைந்தொடி கேளாய் - பசிய (பச்சைநிற) வளையல் அணிந்த பெண்ணே கேள் (பெண் அன்மொழி)

இப்போதைக்கு இதுபோதும், இலக்கணச் சுமையை ஏற்றுதல் நம் நோக்கமன்று.

துவக்கமா? தொடக்கமா?

ஊராட்சி துவக்கப்பள்ளி, விழாவைத் துவக்கி வைத்தார் என்று பார்க்கிறோம், கேட்கிறோம். தொடக்கப்பள்ளி, தொடங்கி வைத்தார் என்றும் காண்கிறோம். எது சரி?

தொடு - தொட - தொடக்கு - தொடங்கு என்று பார்த்தால், ஒன்றைத் தொடங்கும்போது கைகளால் தொட்டு அல்லது சொற்களால் தொட்டுத்தானே ஆக வேண்டும். ஆதலின் தொடக்கம், தொடங்கினார் என்பன சரியான சொற்கள். (தொடு - (பள்ளம்) தோண்டு; தொட்டு-(பள்ளம்) தோண்டி எனும் பொருள் உண்டு.)

துவ - துவக்கு என்று பார்த்தால் துவ என்பதன் பொருள் ஒன்றுமில்லை. துவள் எனும் பகுதி உண்டு. இது துவளுதல் - துவண்டு போதல் ஆகும். ஆதலின் துவக்கினார் என்பதும், துவக்கப்பள்ளி என்பதும் பிழையெனத் தோன்றவில்லையா?

அறிக்கை - அறிவிக்கை

இவ்விரண்டு சொற்களும் வெவ்வேறு பொருள் கொண்டவை. அரசியல் தலைவர்கள் அறிக்கை விடுக்கிறார்கள். ஓர் ஆய்வுக் குழு தமது பரிந்துரை அல்லது தீர்ப்பை அறிக்கையாக வெளியிடுகிறது. ஆதலின் ஆங்கிலத்தின் ரிப்போர்ட் என்பதை அறிக்கை எனலாம்.

அரசு அவ்வப்போது சில செய்திகளை மக்களுக்கு அறிவிக்கிறது. நிறுவனங்கள் மக்களுக்கு அறிவிக்கும் செய்திகள் உண்டு. வங்கிகள் நகைகளுக்கு ஏலமிடுதல்பற்றி அறிவிப்புச் செய்கிறது.

இந்த வகையானவை அறிவிக்கை எனலாம். ஆங்கிலத்தில் நோட்டீஸ் என்பதுதான் அறிவிக்கை.

தப்பு - தவறு - பிழை

சரியா? தப்பா? என்று பேசுகிறோம். சரியா? தவறா? என்று வினவுகிறோம். தப்புத் தவறு செய்ததில்லை என்று சொல்கிறார்கள். தப்பித் தவறியும் கெட்ட வார்த்தை பேசமாட்டேன் என்பார் சிலர். தப்பும் தவறும் உடன் பிறந்தவை. ஒரே பொருள் கொண்டவை. ஆனால் "தப்பு'வில் தப்பித்தல் எனும் பொருள் அடங்கிக் கிடக்கிறது.

உங்கள் கருத்து தவறு என்று சொல்கிறோம். தவறான செய்தி என்கிறோம். தவறு செய்தால் தண்டிக்கப்படுவார்கள் என்று எழுதுகிறோம். ஆகத் தப்பு என்பதனினும் தவறு அழுத்தம் உடையதாக அறிகிறோம். அறியாமல் செய்வது தப்பு என்றும், அறிந்தே செய்வது தவறு என்றும் சொல்வாருளர்.

(தமிழ் வளரும்)

நன்றி - தினமணி கதிர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக