வெளிநாட்டிலிருந்து ஒரு பெரிய தமிழ் விழாவுக்கான அழகான அழைப்பிதழ் ஒன்று வந்தது. அதில் "ராம காதையை உறைத்திடக் கேட்போரும் படிப்போரும் நரகமெய்திடாரே' என்று இறுதியில் பெரிய எழுத்துகளில் எழுதப்பட்டிருந்தது. உரைத்திட என்னும் இடையின ர கரத்திற்கு மாறாக உறைத்திட வல்லினம் போட்டு அழுத்திவிட்டார்கள். ஐகாரம் நெட்டெழுத்து என்று அறிவோம். இதனை அய் என்று எழுதும்போது அரை மாத்திரை குறைகிறது என்று முன்னரே சொல்லியுள்ளோம். சிலர் இந்த ஐ போட்டுக் கூடவே ஒரு ய் போட்டு ஐய்யங்கார் பேக்கரி என்று விளம்பரப் பலகையில் எழுதி வைத்துள்ளார்கள். ஏன் இவரை இப்படி அழுத்த வேண்டும்!
ஒரு தொலைக்காட்சியில் ஒரு நடிகரின் பெயரை வெண்ணீராடை என்று எழுதிக் காட்டினார்கள். வெண்ணிற ஆடை என்ற பொருள் பொதிந்த சொல்லை வெண்ணீராடை என்று ஒரு பொருளும் அற்றதாக ஆக்கியதை என்ன சொல்ல? இப்படியெல்லாம் தமிழைச் சிதைப்பதைக் கண்டுகொள்ளாமல் இருக்கிறோம், நாம்தாம் தமிழர்கள்!
பொருட் பிழைகள்: காட்டு வேடனாகிய திண்ணன், தன் சிவபக்தி காரணமாகத் தன் கண்ணை எடுத்துக் குருதி வந்த சிவலிங்கத்தின் கண்ணில் அப்பியதால் (அப்புதல் - அழுத்திவைத்தல்) அவன் அவராகிக் கண்ணப்பர் ஆனார். திண்ணன் என்றால் தின் என்று மிக்க உடல் வலிமை கொண்டவன். உறுதி மிகக் கொண்டவன் என்று பொருள் சொல்லலாம். கண்ணப்பநாயனார் கதையை ஓர் ஊடகத்தில் ஒருவர் சொல்லும்போது, கண்ணப்பரது பழைய பெயர் திண்ணப்பர் என்று சொன்னார். திடுக்கிட்டோம். இது என்ன? பொருள் புரியாமல் பேசுகிறாரா? புரிந்துதான் பேசுகிறாரா? எனும் ஐயம் எழுந்தது.
வைணவ சமய வரலாற்றில் திருக்கோட்டியூர் குறிப்பிடத்தக்க சிறப்பு மேவிய தலம். இந்தத் திருக்கோட்டியூரை, இந்நாளில் பலரும் திருக்கோஷ்டியூர் ஆக்கிவிட்டார்கள். கோஷ்டி எனில் ஒரு குழுவை, கும்பலைக் குறிக்கும் சொல். ஏன் இங்கு கோஷ்டி வந்தது? நீளமாகத் தறியில் நெய்து, வெட்டி, வெட்டி எடுக்கப்பட்டதைத் தமிழர் வேட்டி என்றனர். இந்த வேட்டியைப் பிற்காலத்தில் வேஷ்டி ஆக்கினார்கள் அல்லவா? அப்படித்தான் கோட்டியூர் கோஷ்டியூர் ஆயிற்று (துண்டுதுண்டாகத் துண்டிக்கப்பட்டது துண்டு என்பதும் அறிக).
ஏமாந்து போனான் என்று பலரும் எழுதுகிறோம். பேசுகிறோம். இது சரியான சொல்தானா? ஏமம் எனில் பாதுகாப்பு. "ஏம வைகல் எய்தின்றால் உலகே' எனக் காண்க. விளைவு, இன்பம், ஏமம் என்பார் திருவள்ளுவரும். ஏமாற்றுதல் என்னும் சொல் பொருளுடையது. வஞ்சித்தல், நம்பிக்கையைக் கெடுத்தல் என்று சொல்லலாம். வஞ்சிக்கப்பட்டவனை, நம்பிக்கை தொலைந்தவனைத்தான் நாம் ஏமாந்தான், ஏமாந்து போனான் என்று சொல்கிறோம். கம்பன் ஏமாந்தான் என்று திரைப்பாடலும் எழுதிவிட்டார்கள். ஆனால் இது பிழையான சொல். ஏமாறினான், ஏமாற்றப்பட்டான் என்பனவே சரியான சொற்கள்.
திருக்காளத்தி கோவில் கோபுரத்தில் விரிசல் கண்டபோது அதனை ஒரு தீய சகுனமாகக் (வருந்தீமைக்கு முன்னறி குறி) கருதினர் மக்கள்.
அதுபற்றிச் செய்தித்தாளில், அதனை உட்பாதம் என்று எழுதியிருந்தனர். அஃது உட்பாதம் அன்று; அஃது உற்பாதம் (வடசொல்). உள்பாதம்தான் உட்பாதம் (அடி) ஆகும். இப்படித்தான் வைகுண்ட ஏகாதசி (பதினோராம் திதி) என்பதை, ஏகாதேசி என்று செய்தியாளர் சிலர் தொலைக்காட்சியில் படித்தார்கள். ஏகம் - ஒன்று; தேசம்- தேசி - தேசத்தான். ஒரே நாட்டினன் என்று ஏகாதேசி என்பதன் பொருள் ஆகிவிடும்,
இசையால் பொருள் கெடல் உண்டு. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பது அனைவரும் அறிந்த தொடர். கேளிர் என்பதற்கு உறவினர் என்று பொருள். கேள்- கேளிர். ஆனால் அதனை நீட்டிக் கேளீர் எனில் கேட்பீராக என்பது பொருள். யாவரும் கேளீர் என்று இசையின் பொருட்டு நீட்டப்படும்போது, பொருள் சிதைந்து குன்றிவிடுகிறது என்பதை நாம் உணர வேண்டும்.
ஒருவராகத் தனித்திருப்பவரை ஒண்டிக்கட்டை என்று சொல்லும் வழக்கமிருக்கிறது. எங்காவது சென்று மறைந்து கொள்வதை ஒண்டுதல் எனலாம். ஒண்டுதல், ஒட்டிக் கொள்ளுதல் என்றும் சொல்லலாம். ஒற்றையாளை இந்தச் சொல் எப்படிக் குறிக்கும்? ஒன்றிக்கட்டை என்றிருந்தால் இச்சொல் சரியாக இருக்கும். ஒன்றியாய் என்றால் ஒருவனாகவோ, ஒருத்தியாகவோ இருக்கலாம். ஒன்று என்பதிலிருந்து வந்த சொல்.
சங்க கால ஒüவையார் வேறு; நீதிநூல்கள் பாடிய ஒüவையார் வேறு. இச் செய்தியறியாமல் ஓர் இலக்கியச் சிற்றிதழில் ஒருவர் எழுதியிருந்த கட்டுரையில் ஒüவையார் என்ற சங்கப் புலவர் இயற்றிய ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன், மூதுரை போன்ற நூல்களை நாம் அவசியம் படிக்க வேண்டும் என்றிருந்தது. எவ்வளவு பெரிய பொருட்பிழை!
(தமிழ் வளரும்)
நன்றி - தினமணி கதிர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக