03/09/2011

மொழிப் பயிற்சி – 20 : பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்! – கவிக்கோ ஞானச்செல்வன்

தன்வினை வாக்கியத்தைப் பொருள் மாறாமல் பிறவினை வாக்கியமாக மாற்ற முடியாது. ஆனால் செய்வினை வாக்கியத்தைப் பொருள் மாறாமல் செயப்பாட்டு வினையாக மாற்ற முடியும். இந்த வேறுபாட்டின் அடிப்படையைப் புரிந்து கொண்டால் இவ்விலக்கணக் குழப்பங்கள் ஏற்படாது.

 மாரனும் மாறனும்

மாரன் எனும் சொல் மன்மதனைக் குறிக்கும். மாறன் எனும் சொல் பாண்டியனைக் குறிக்கும். முன்னது வடசொல். பின்னது தமிழ்ச்சொல். மன்மதனுக்குத் தனித் தமிழ்ச் சொல் வேள் என்பது. வேட்கையை உண்டாக்குபவர் என்பது பொருள். மன்மதன் கருநிறம் கொண்டவன். சிவந்த நிறமுடைய வேள் செவ்வேள் எனும் முருகப் பெருமான் ஆவான். சுகுமாரன் என்பது அழகிய மன்மதன் என்னும் பொருள் கொண்ட வடசொல். இதனைச் சிலர் சுகுமாறன் என்றெழுதுகிறார்கள். இது சரிதானா?

திருமாறன், நெடுமாறன், நன்மாறன் - இப்பெயர்கள் எல்லாம் தனித்தமிழ்ப் பெயர்கள். இந்தப் பெயர்களில் உள்ள மாறன் (பாண்டியன்) எனும் தமிழ்ப் பெயரை சுகு என்ற வடசொல்லோடு ஓட்டலாமா? அது சுகுமாரன் என்றே எழுதப்பட வேண்டும். சுகுமாறன் என்று இருமொழியும் இணைத்துப் பொருளற்றதாக ஆக்கிவிடுதல் பிழை.

 வள்ளி - வல்லி எது சரி?

இரண்டு சொற்களும் வெவ்வேறு பொருள் கொண்ட தமிழ்ப் பெயர்களே. முருகன் காதல் மணம் செய்து கொண்ட குறமகள் வள்ளி. வள்ளிக் கிழங்கு என்றொரு கிழங்கு உண்டு. அக்கிழங்கைத் தோண்டி எடுத்த பின் இருந்த குழியில் கிடந்தவள் குழந்தை வள்ளி. இன்றும் சர்க்கரை வள்ளிக் கிழங்கு, மரவள்ளிக் கிழங்கு பயன்பாட்டில் உள்ளன. வள்ளி தமிழ்ப் பெயரே.

வல்லி எனின் கொடி என்பது பொருள். வல்லிக் கொடி என்று (ஒரு பொருட் பன்மையாக) இணைத்தும் சொல்லுவதுண்டு. இன்பவல்லி, அமுதவல்லி, மரகத வல்லி எனும் பெயர்களில் பெண்கள் கொடி போன்றவர் எனும் மென்மை பற்றிய குறிப்பை அறிக.

ஆகவே, வள்ளி, தெய்வயானை பற்றிக் குறிக்கும் இடங்களில் மட்டுமே வள்ளி வர வேண்டும். பிறவாறு பெண் பெயர்களில் வல்லி வர வேண்டும். இவற்றை மாற்றிச் சேர்ப்பது சரியாகாது.

 கைமாறு - கைம்மாறு

திருட்டுப் பணம் கைமாறிவிட்டது. இத்தொடரில் வரும் கைமாறு என்னும் சொல், ஒருவர் கையிலிருந்து மற்றொருவர் கைக்கு மாறிவிடுவதைக் குறிக்கிறது.

"தாங்கள் செய்த பேருதவிக்கு நான் என்ன கைம்மாறு செய்வேன்?' இத்தொடரில் வரும் கைம்மாறு எனும் சொல்லுக்கு "உதவிக்கு மறு உதவி' எனும் பொருள் அமைதல் காண்க.

ஆயினும் எழுத்தாளர் பலரும் இந்த நுட்பம் அறியாமல், கைம்மாறு என்று எழுத வேண்டிய இடத்தில் கைமாறு என்று பிழையாக எழுதுகிறார்கள். ஒரு மெய்யெழுத்து (ம்) விட்டுப் போவதால் எத்தகைய பொருள் மாற்றம் ஏற்படுகிறது.

""கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு

என்னாற்றும் கொல்லோ உலகு''

எனும் திருக்குறள் ஈண்டு நினைக்கத்தக்கது.

 கேள்வியும் வினாவும்

ஏடுகளில், இதழ்களில் கேள்வி - பதில் பகுதி வெளிவருகிறது. தேர்வில் எத்தனை கேள்விகளுக்குப் பதில் எழுதினாய்? என்று வினவுகிறோம். என் கேள்விக்கு என்ன பதில்? என்று பாட்டெழுதுகிறார்கள். வினா-வினவுதல் என்னும் பொருளில் இங்கெல்லாம் கேள்வி எனும் சொல் பயன்பட்டு வருகிறது. ஆனால் கேள்வி எனும் சொல்லின் பொருள் வேறு.

கண்ணால் காணப்படுவது காட்சி என்பதுபோல் காதால் கேட்கப்படுவது கேள்வி. காதுகளில் கேட்டல் என்பதுவே கேள்வி. அதனால்தான் கேள்விச் செல்வம் என்றனர். பேச்சு வழக்கிலும், "நான் கேள்விப்பட்டது உண்மையா?' என்று பேசுகிறோம். "அவர் வெளிநாட்டிற்குப் போய்விட்டதாகக் கேள்வி' என்று சொல்லுகிறோமே? என்ன பொருள்?

ஆகவே, தேர்வில் எத்தனை வினாக்களுக்கு விடை எழுதினாய்? இந்தப் பத்திரிகையில் வினா-விடைப் பகுதி வெளிவருகிறதா? என் வினாவிற்கு நீ விடை சொல்லியே ஆக வேண்டும்? - இப்படிச் சரியாகப் பேசவும் எழுதவும் முற்படுவோமா?

 சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே

இப்படி மகாகவி பாரதியார் பாடிய காரணம் என்ன? தமிழின் சொல்வளம் ஈடு இணையற்றது. ஒரு செடியின் இலையைக் குறிக்க அந்த இலையின் பருவத்தையும் உணர்த்தக் கூடிய சொற்கள் தமிழில் உண்டு.

துளிர் (செடியில் துளிர்விடும் நிலை)

தளிர் (சற்றே வளர்ந்து தளிர்க்கும் நிலை)

கொழுந்து (இன்னும் வளர்ந்து இளம் பச்சை நிறத்தில் உள்ள இலை)

இலை (பச்சை நிறத்தில் முழுமை பெற்ற நிலை)

பழுப்பு (பச்சை மாறி மஞ்சள் நிறமாகப் பழுத்த இலை)

ஆங்கிலத்தில் இவற்றைச் சொல்ல வேண்டுமானால் - அனைத்தையும் சொல்ல முடியாது, சில சொல்லலாம் - ஒட்டுச் சொற்களை இணைத்தே சொல்ல முடியும்.

Young le​af,​​ Grow le​af,​​ ​ Yellow le​af,​​ Dry le​af உடன் அடைமொழி சேர்த்தே சொல்ல முடியும்.

(தமிழ் வளரும்)

நன்றி - தினமணி கதிர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக