ஞாயிறுதோறும்: ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் விடுமுறை நாளாகும் என்பதை 'ஞாயிறுதோறும் விடுமுறை' என்று அறிவிப்பார்கள். இது சரிதான். ஆனால் சில இடங்களில் 'ஒவ்வொரு ஞாயிறு தோறும் விடுமுறை' என்று எழுதியுள்ளார்களே! 'தோறும்' எனும் சொல் ஒவ்வொரு எனும் பொருளையே தருவதால், இப்படி இரு சொற்களை ஒரு பொருள் குறிக்கப் பயன்படுத்துதல் வேண்டா. இதுபோலவே 'பணமாகவோ அல்லது காசோலையாகவோ' தரலாம் என்று சில அறிவிப்புகளைக் காண நேர்கிறது. 'ஓ' என்பது இங்கு அல்லது எனும் பொருளில் வரும் போது, இரண்டையும் ஏன் சேர்க்க வேண்டும்? 'பணம் அல்லது காசோலை' தரலாம், பணமாகவோ காசோலையாக என்றோ ஒன்றை மட்டும் குறித்தல் நன்று.
நினைவுகூறுதல்: 'நம் தலைவருடைய பணிகளைப் - புகழை நாம் என்றென்றும் நினைவு கூறுதல் வேண்டும்' என்று எழுதுகிறார்கள். கூறுதல் என்றால் சொல்லுதல் எனும் பொருள்தரும் என்றறிவோம். கூர்தல் என்றால் மிகுத்தல். அன்பு கூர்தல் என்றால் அன்பு மிகுத்து (மிக்க அன்பு கொண்டு) என்று பொருள். ஒருவர் புகழை, அவர்தம் பணிகளை நினைவு கூர்தல் என்றால், மிகவும் நினைத்தல் (நிரம்ப நினைத்தல்) என்று பொருள். ஆதலின் தலைவருடைய புகழை நாம் என்றும் நினைவு கூர்தல் வேண்டும் என்றெழுதுவதே சரியாகும்.
முன்னரே இதுபோலவே, உளமார, அளப்பரிய என்பவற்றை உளமாற, அளப்பறிய என்றெழுதுவது பிழை என்பதைச் சுட்டிக் காட்டியுள்ளோம். இந்த 'ர'கர 'ற'கரம் பற்றி என்னும்போது, பல ஆண்டுகள் முன்னர் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி அறிவிப்பில் இரண்டு திரைப்படங்களின் பெயர்கள் தவறாக எழுதிக்காட்டப்பட்டன.
1. பெருமைக்குறியவள்
பெருமைக்கு உரியவளை - பெருமைக் குறியவள் என்றெழுதி மிகத் தவறான ஒரு பொருள்தோன்றச் செய்துவிட்டார்கள்.
2.கொம்பேரி மூக்கன் - கொம்பில் ஏறுகின்ற ஒருவகைப் பாம்பின் பெயரை கொம்பேறி மூக்கன் என்றெழுதிடாமல், கொம்பேரி மூக்கன் என்றெழுதிக் காட்டினார்கள். ஏரி (நீர்நிலை) இங்கு எப்படி வந்தது? ஏன் வந்தது?
எழுதுபவர் மொழியறிவு இல்லாதவர் என்றால், எழுதிய பின் அறிந்த ஒருவர் மேற்பார்வையிட்டுத் திருத்தியிருக்க வேண்டாவா? இப்போதும் ஏடுகளில் பார்க்கிறோம். 'வரட்சி நிவாரண நிதி' என்று வருகிறது. இது வறட்சி நிவாரண நிதி என்றிருக்க வேண்டும். வறள், வறட்சி என்பன சரியான சொற்கள். ஒருவர் மீது கொண்ட அல்லது ஒரு செயலில் கொண்ட முழுமையான ஈடுபாட்டை அக்கறை எனல் வேண்டும். இப்போதும் சிலர் இதனை அக்கரை என்றெழுதுகிறார்கள். அந்தக் கரை (ஆற்றங்கரை) அன்று இது. மொழி மீது இவர்களுக்கு அக்கறை இல்லை.
கண்டவை - கேட்டவை
திருக்கோவில்களில் ஸ்ரீ சுப்பிரமணியசாமி சன்னதி என்று முன்னாட்களில் எழுதி வந்தனர். பின்னர் அருள்மிகு சுப்பிரமணிய சாமி சன்னதி என்று எழுதினார்கள். ஸ்ரீ யை விட்டு அருள்மிகு எனும் பொருள் பொதிந்த நற்றமிழ் அடைமொழியைச் சேர்த்தது நன்று. ஆனால் இந்நாளில் சில திருக்கோவில்களில் அருள்மிகு என்பதைச் சுருக்கி அ/மி மருந்தீசுவரர் என்பது போல எழுதியிருப்பதைப் பல இடங்களில் காண நேர்கிறது. மே/பா (c/o)போடுவது போல தெய்வப் பெயர்களை இப்படி இழிவு செய்யலாமா?
அடுத்தது சன்னதி என்ற சொல். இது சந்நதி என்று இருத்தல் வேண்டும். சந்நிதானம் என்னும் போது இவ்வாறே கொள்க. சில அகராதிகளில் சன்னிதி என்றும் காணப்படுகிறது. எப்படியாயினும் சன்னதி என்பது பிழையே.
அருள்மிகு வினாயகர் திருக்கோவில் எனப் பல இடங்களில் எழுதியிருப்பதைக் காண்கிறோம். வி+நாயகர்-விநாயகர் எனில் மேலான தலைவர். பூதி- சாம்பல், விபூதி - மேலான சாம்பல் (திருநீறு) தமக்கு மேல் ஒரு தலைவரற்றவர் விநாயகர். மூல முதல் என்று போற்றப்படுபவர். அவரின் பெயரை வினாவுக்கு உரியவராகச் சிதைக்கலாமா? திருத்துவீர்களா?
இந்த நிகழ்ச்சி சித்தரிக்கப்பட்டது என்று பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் திரையின் அடிப்பாகத்தில் எழுத்தில் காட்டுகிறார்கள். இது சித்திரிக்கப்பட்டது என்றிருத்தல் வேண்டும். சித்திரம் என்பது சொல். இதிலிருந்து வருவதே சித்திரிக்கப்பட்டது எனும் தொடர். சித்திரத்தைச் சித்தரம் ஆக்கலாமா?
ஓர் இசையரங்கில் ஒருவர் பாடுகின்றார். விநாயகர் வாழ்த்து அது. நந்தி மகன்தனை, ஞானக்கொழுந்தனை என்று இசைக்கிறார். ஞானத்தின் கொழுந்தாக இருப்பவனை- ஞானக் கொழுந்தினை அந்த இசைஞர் கொழுந்தன் ஆக்கிவிட்டார். கணவன் உடன் பிறந்தான் கொழுந்தன் எனப்படுவான். இப்படித் தமிழைச் சிதைக்கலாமா? எண்ணுங்கள்.
(தமிழ் வளரும்)
நன்றி - தினமணி கதிர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக