24/08/2011

தாலாட்டில் மனப்பதிவுகள் - ஆ.அரிகிருட்டிணன்

நாட்டுப்புறப் பாடல்கள் கிராமத்து மக்களின் மனக்கதவைச் சமூகத்திற்குத் திறந்து காட்டுபவை. மனத்தின் உணர்வு உந்துதல்கள் பாடல்களாகப் பாடப்படுகின்றன. நாட்டுப்புறப்பாடல்களை, இலக்கியத்தை, சமூகத்தை, பண்பாட்டை ஆய்பவர்கள் நாட்டுப்புற மக்களின் மனப்பதிவுகளை வெளிப்படுத்துகின்றனர். இத்தகு சமூக அமைப்பிற்குக் குடும்ப வாழ்வே பின்னனி. பிறப்பு முதல் இறப்பு வரை சமூகம் பரிமாறிக் கொள்ளும் ஒட்டுமொத்த தொகுப்பிற்கும், தனிமனிதச் செயலுக்கும் மனப்பதிவே முதன்மை வகிக்கிறது.

மனமும் பதிவும்:-

மனிதன் பார்ப்பவை, கேட்பவை அனைத்தும் மூளையில் பதியமிடுகின்றன. எத்தகைய பதிவாக இருப்பினும், பதிவு மனித உடற் கூற்றின் இயற்கை, வெளியீடுகள் மனிதப் பண்பின் வேறுபாடுகளால் வருகின்ற விளைவே ஆகும். குழந்தைப் பருவத்தில் பதிவுகள் எளிதாகப் பதியும் தன்மை வாய்ந்தவை. அதுவும் பாதி உறக்கத்தில் இருக்கும்போது கேட்கும் கருத்துக்கள் ஆழமாகப் பதியும் சக்தி வாய்ந்தவை. தாலாட்டில் இறை உறக்கத்திற்கு உதவுவது போல் பிஞ்சு மனத்தின் வளர்ச்சியைத் தூண்டுகிறது என்பதால் தாலாட்டுப் பாடப்படுகிறது.

ஊர்வாழ தேசம் வாழ

இனம் சுற்றம் எல்லோரும் வாழ

குருவுக்கும் சிவனுக்கும்

நல்லபிள்ளையாய் இருந்து வாழ்க

இப்பாடலில், ஊரும் தேசமும் வாழவேண்டும். சுற்றமும், உறவினமும் வாழக் குருவையும் தெய்வத்தையும் வணங்க வேண்டும். சமூகத்தில் குழந்தை வளர்ந்த பிறகு தவறுகளைச் செய்யக்கூடாது. எல்லோரும் வாழ வழி செய்ய வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே தாலாட்டுப் பாட்டு மனப்பதிவுகளாகப் பாடப்படுகின்றன.

தாலாட்டில் மனப்பதிவுகள்:-

வாழ்க்கையினை மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம்

குழந்தை

இளமை

முதுமை

இந்த மூன்று பருவத்தில் குழந்தைப் பருவம் தாலாட்டாக அமைகிறது. இளமைப்பருவம் காதலாக அமைகிறது. முதுமைப் பருவம் பக்தியும், ஒப்பாரியுமாக அமைகிறது. ''கோயிலில்லாத ஊர்பாழ்'' ''குழந்தையில்லா வீடு நரகம்'' என்பர்

ஆணும் பெண்ணும் இணைந்ததுதான் குடும்பம் எனும் ஓவியம். ஓவியத்திற்கு மெருகூட்டுவது நிறங்கள். நிறமாக வருவதே குழந்தைச்செல்வம். பெண்மையின் சிறப்பே தாய்மைதான். ''தாய்மை உணர்வின் வெளிப்பாடாகவே தாலாட்டு மலர்கின்றது. தாயின் நாவசைவில் தாலாட்டு என்னும் நல்முத்து பிறக்கின்றது. இருவர்கொள்ளும் காதலைவிட, உடன்பிறந்தார் கொள்ளும் வாழ்க்கைவிட, ஏன் உலகளக்கும் அருளினையும் விட, பிள்ளைப் பாசமே, ஆழமானது. வலிமைமிக்கது உணர்ச்சிமயமானது.

''பெண்மைக்குத் தாய்மை கிடைத்துப் பூரித்துப்போகும் வாழ்வின் உயிர் நிகழ்ச்சியே பிள்ளைப்பேறாகும். பல படைத்துப் பலரோடு உண்ணக்கூடிய செல்வ வளமிக்கவர் ஆனாலும், மயக்கத்தைத் தரும் மக்கள் இல்லாத வாழ்நாள் வீனாகும். என்கிறான் பாண்டிய மன்னன்.

இப்படி எதிர்பார்ப்புகளையும், இயலாமையும் மனப்பதிவுகளாக உருவாக்குகின்ற தாலாட்டின் மூலம் தங்கள் மனப்பதிவுகளுக்கு ஓரளவு மருத்துவம் காண்கின்றனர்.

மனப்பதிவில் புலன் உணர்வுக்காட்சிகள்:-

''புலன் உறுப்புகளால் உருவாகிய அமைப்பு வகைகளைப் பொறுத்து புலன் உறுப்புக் காட்சி அமையப்பெற்றுள்ளது. புலன் உறுப்புகளில் தூண்டுதல்கள் தாக்கும்பொழுது பொருளைப் பற்றிய பிம்பங்களையும் வகைகளைப் பற்றியும் மனிதனுக்கு அளிக்கப்பெறுகின்ற செய்திகளே புலன் காட்சி ஏற்படுவதற்குரிய அடித்தளமாக அமைகிறது.

புலன் உணர்வுக்காட்சியின் விளைவால் குழந்தை மடிப்பிச்சையாக ஏற்றுக் கொள்கிறாள் நாட்டுப்புறத்தாய். குழந்தை இல்லாத ஏக்கத்தால் மற்ற குழந்தைகளைப் பார்க்கின்ற போது அவளின் மனப்பதிவுகள் புலன் உணர்வு காட்சிக்கு ஆட்படுகிறாள். இப்பதிவின் விளைவாகக் குழந்தைப்பேறும் அடைந்ததை,

''காணிக்கை கொண்டு - என் கண்ணான சாமி

கடத்தெரு போகயிலே

மாணிக்கமுனு - என் கண்ணே

மடிப்பிச்சை தந்தாளோ'' எனப்பாடுகிறாள்.

மனப்பதிவில் ஆளுமைத்திறன்:-

மனிதனின் ஆளுமை மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்படுகிறது. இவற்றை அஃது நிலை, மேனிலை அகம், அகம் என்பார் உளவியலாளர். ஒவ்வோர் ஆளுமையும் ஒரு தனித்த அமைப்பாகும். ஆளுமையைப் பல்வகையாகவும், குழுவாகவும் வகைப்படுத்த எடுக்கப்பெறும் முயற்சிகளின் தொடர்பில் உணரவேண்டும்.

ஆளுமைச் செயலில் மனப்பதிவுகள் நடைபெறுகின்றன என்று உளவியல் நோக்கில் தாலாட்டுப் பாடல்களை ஆய்ந்தால் தாயுள்ளம் படும் பதிவுகளை வேதனைகளாகவே காட்டும் இயல்பினை உடையது.

தாய்ப் பாசத்தில் தனியுடமையைக் கவிஞர் கண்ணதாசன் மழையை - தேனுக்கும், மணலை - பொன்னுக்கும் ஒப்பிட்டாலும், எல்லாவற்றிற்கும் மேலாக இருப்பது மழலைச்செல்வமே. மனிதனின் ஆளுமையின் உச்சநிலையாக,

''மழைகூட ஒரு நாளில் தேனாகலாம்

மணல்கூட சில நாளில் பொன்னாகலாம்

ஆனாலும் அவையாவும் நீயாகுமா?

அம்மா என்றழைக்கின்ற சேயாகுமா?''

எனப் பாடியுள்ளார். இதையே நாட்டுப்புறத்தாய்

''ஆறிரண்டும் காவேரி

அதனடுவே சீரங்கம்

சீரங்கமாடி....

எட்டாத கோவிலுக்கு

எட்டி விளக்கேற்றி

...........

வெள்ளி முழுகி

வெகுநாள் தவமிருந்து

தைப்பூசமாடி

தவம்பெற்று வந்தவனே''

என்றுதன் வீட்டு வேலைக்குத் தொல்லைதராமல் இருப்பதற்கும், விரைவாக முடிப்பதற்கும் தாலாட்டுப் பாடி குழந்தையைத் தூங்க வைக்கின்றாள்.

மனப்பதிவில் சமூகம்:-

இலக்கியத்துடன் நெருக்கமுடையது சமூகவியல். மனித நாகரீகம் தொடங்கியது முதல் இன்றுவரை தனி மனிதனையும் சமூகத்தையும் பாடி வருகின்றனர். ''காதல் தொடங்கி குடும்பம் வரை காணும் சிக்கல்களை இலக்கியவாதிகள் தத்துவவாதிகளைப் போலவே எண்ணிப்பார்த்துள்ளமை சிந்தித்தற்கப்பாலானது.*

சமூகத்தில் பெண்ணே முதன்மைப் பங்காக இருக்கின்ற காரணத்தினால்; பெண்களால் சமூக நிலையையும், அவர் தம் மனப்போக்கையும் தாலாட்டுப் பாடல்களில் நயமாக உணரமுடிகிறது.

காதல்:-

சமூகக் கொடுமைகளைப் பொறுக்கமுடியாமல் மனக்குமுறலைப் பதிவுகளாக வெளிப்படுத்தும் திறனுக்கும் போக்கிடம் அமையாததால் தாலாட்டில் வெளிப்படுத்துகிறாள். காதலிக்கும் போது கருவுற்றவளைச் சமூகம் சாடாமல் விடுவதில்லை. இச்சாடல்களிலிருந்து விலக முடியாமல் தவிக்கின்றாள். ஆறுதலுக்கு குழந்தை மட்டுமே. ஆறுதல் சொல்லும் நிலையில் குழந்தையும் இல்லை''

இருப்பினும் தன் மனப்பதிவுக் குமுறலை இறக்க முனைகின்றாள். அடித்தாலும், பழித்தாலும் தாய் அனைய சமூகத்தைச் சாடாமல் நம்பிக்கைத் துரோகம் செய்த காதலனையே,

''சாலையிலே கூட்டங்கூடி சாதிநாயம் பேசயிலே

சாதிகெட்ட பையனாலே சபையிலே கையெடுத்தேன்

என் கண்ணான கண்ணே கண்ணுறங்கு'' என பழிக்கின்றாள்.

பரத்தமை:-

சமூகப் பண்பில் ஒழுக்கமே சிறந்தது. ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாடே நலம் பயக்கும். அத்தகு பண்பில் தன் உடன் பிறந்தானின் செய்கையின் மனப்பதிவை.

''தங்கக் குடை பிடிச்சு

தாசிக்கே விட்ட பணம் - ரெண்டு

தங்க மடம் கட்டலாமே''

பரத்தையின் பால் சென்றதைப் பாடுகின்றாள். இப்பரத்தைப் பண்பால் குடும்பம் சீரழிந்த நிலையை ஒவ்வொரு குடும்பமும் உணரவேண்டும் என்பதை மெய்ப்பிக்கவும் தவறவில்லை.

கல்வி:-

அடுப்பூதும் பெண்களுக்குக் கல்வி எதற்கு? என்ற சமூகச் சூழ்நிலையில் வாழ்ந்த நாட்டுப்புறப் பெண்ணுக்குத் தம் குழந்தையாவது கல்வி பெற வேண்டும் எனத் தம் மனப்பதிவில் முனைப்பாக இருக்கின்றாள். அம்முனைப்பில் சமூகச் சூழலால் ஒதுங்கியவர்கள் தம் குழந்தைகள் தாய்மொழியைக் கற்க வரவேற்கின்றாள்.

''தாழைமடல் ஓலை கொண்டு

தமிழ் படிக்க வந்தவனோ''

என்றும்; தமிழோடு ஆங்கிலமும் கற்றால் சமூகத்தில் தன் மதிப்பும் கூடும் என்பதை

''பாடுவதும் வேதாந்தம்

படிக்கிறதும் இங்கீலீசு

என்று தாலாட்டில் பாடி தனக்குள் பெருமிதம் அடைகின்றாள்.

தொழில்:-

நாட்டுப்புறப் பெண்கள் வேளாண்மையில் நாள்முழுவதும் வெய்யில், மழை எனப் பாராமல் உழைக்கும் வர்க்கத்தினராக இருந்தனர். இந்நிலையில் தன் குழந்தைகளாவது கல்வி கற்று அதிகாரியாக வேண்டும் என மனத்திற்குள் பதியமிடுகிறாள். அப்பதிவே ''வினையே ஆடவர்க்கு உயிர்'' என்னும் கோட்பாட்டில்:

''வெள்ளி எழுத்தாணி

வெண்கலத்தால் மைக்கூடு

தொட்டுக் கணக்கெழுதும்

துரை ராஜா''

எனப் பாடுகிறாள். தன் மகன் அதிகாரியாக வேண்டும் என்பதையும், சமூகத்தில் பொறுப்புள்ளவனாகவும் அமையவேண்டும் என்னும் சமூக நிலைக்குத் தன் மனப்பதிவுகளைத் தாலாட்டில் அசைபோடுகின்றாள்.

பொருளியல்:-

நாட்டுப்புற மக்களுக்குக் குழந்தைச் செல்வத்தோடு பொருளியல் செல்வமும் ஒருங்கே அமைந்தால் ஒட்டு மொத்த மகிழ்ச்சியை அடைகின்றாள். இதை,

''தெற்கே மழை பொழியத்

தென்புறமாய் காற்றடிக்கத்

தென்மதுரை மீனாள்

சேங்கைக்கே தண்­ர் வர

------------------------------

தென்னை வந்தும் வீசாதா

தென்காற்று அடியாதா

செல்வ மகன் கண்ணயர''

தம் மனப்பதிவாகப் பொருளியல் சிந்தனையைக் குழந்தையின் தூக்கத்தோடு உரமூட்டுவதாக நினைத்துப் பாடுகிறாள்.

இறைமை:-

சமூகத்தில் ஆணும், பெண்ணும் உயர்த்தப்படவேண்டும். அத்தகைய உயர்வில் குடும்பம் நன் மதிப்பைப் பெறவேண்டும். இம்மதிப்பிற்கு இறைநம்பிக்கையும் அவசியமாகிறது. நல்லதைச் செய்யவில்லை என்றாலும் தீயதை நினைக்காமல் இருந்தால் போதும் என்ற மனப்பதிவுக்கு வந்தார்கள். இத்தகைய சூழலில் தன் கணவன் செய்த இறை நம்பிக்கையைப் பாராட்டுகிறாள்.

''காசி விசிறி கொண்டு

கைலங்கிரி செம்பு கொண்டு

போகிறார் உங்கள் ஐயா - உன்னைப்போல்

ஒரு புத்திரன் வேண்டுமென்று''

இத்தாலாட்டில் தன் கணவனும் தானும் செய்த இறை தவத்தால் தான் நீ பிறந்தாய் என்பதை மனப்பதிவுகளாகக் கூறுகிறாள்.

பெண்கள் தாம் விரும்பிய இலட்சியம், சந்தித்த மனித உறவுகள், வாழ்வின் எல்லை, சாதித்த செயல்கள் முதலியவற்றை மனப்பதிவுகளாகத் தம் குழந்தைகளுக்குத் தாலாட்டோடு இணைத்துப்பாடும், சமூக உறவின் மேம்பாடாக விளங்குகின்றனர் என்பதில் சற்றேனும் ஐயமில்லை.

இதனால் தான் நாட்டுப்புற இலக்கியத்தின் தனிச்சிறப்பே வாழ்க்கையின் மீது கொண்டுள்ள நம்பிக்கையை எதிரொலிப்பதாகும் என்னும் மாக்சிம் கார்க்கியின் கூற்றோடு ஒத்திட்டுப் போகிறது எனலாம்.

நன்றி: வேர்களைத்தேடி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக