நாட்டுப்புறத் தெய்வங்களை வழிபட்டு வந்த மக்கள் உயர்சாதியினருக்கு உரிய நடைமுறை வழக்குகளைப் பின்பற்றி தங்கள் மதிப்பை உயர்த்தத் தொடங்கிய போது வழிபாட்டு நிலைகளில் மாற்றங்கள் ஏற்பட்டன.
மரபு வழிப்பட்ட நாட்டார் தெய்வ வழிபாட்டு முறைகள் வேத, ஆகம முறையில் மாற்றம் அடைவதையே மேனிலையாக்கம் (உயர்நிலையாக்கம் அல்லது விரிநிலையாக்கம் அல்லது சமஸ்கிரதவயமாக்குதல்) எனலாம். (தொ.ஆ. பெருமாள் ஆ.கா & சண்முகசுந்தரம், சு., தன்னனானே ப.127) இம்முறையில் மதுரை மொட்டைக் கோபுரம் முனீஸ்வரன் கோயில் அடைந்துள்ள மேனிலையாக்கத்தை இங்கு ஆய்வோம்.
மதுரை மாநகரின் மையப்பகுதியில் மீனாட்சி அம்மன் கோயிலின் வடக்கு வாசலில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. நெடு நாட்களாக மீனாட்சி அம்மன் கோயிலின் வடக்குக் கோபுரம் கட்டப்படாமல் இருந்ததால் (வயிநாகரம் செட்டியாரால் 19-ஆம் நூற்றாண்டில் இக்கோபுரம் கட்டப்பட்டது) அக் கோபுரமும், அதன் கீழ் இருந்த முனீஸ்வரன் கோயிலும் மொட்டைக்கோபுரம் என்று அழைக்கப்பட்டன.
சைவப் பிள்ளைமார் வகுப்பைச் சார்ந்த அமரர் யாழ்கீத சுந்தரம் பிள்ளை குடும்பத்தினருக்கு உரிமையுடையதாக இக்கோவில் விளங்குகிறது. சகோதரர்கள் நால்வர் ஆண்டுக்கு ஒரு முறை இக்கோயில் நிர்வாகத்தைப் பகிர்ந்து முறை மாற்றிக் கொள்கின்றனர். எனினும், பல்வேறு சாதியினரும், மதத்தவரும் அக்கம்பக்கம் கிராமத்தில் உள்ளவர்களும் இச்சிறு தெய்வத்தை வழிபடுகின்றனர்.
மதுரை மொட்டைக் கோபுரம் முனீஸ்வரன் கோயிலில் மேனிலையாக்கம்:-
தனியொரு குடும்பத்தாருடைய குல தெய்வக் கோயிலான இக்கோயிலில் இன்றைக்குப் பெருவாரியான மக்கள் வழிபடுகின்றனர். அக்கம்பக்கம் கிராமத்தவரால் மட்டுமின்றி கடல்கடந்த மக்களின் வழிபடு கடவுளாகவும் இத்தெய்வம் உள்ளது.
கால வளர்ச்சியால் இக்கோயில் நடைமுறைகளில் ஏற்பட்ட மாற்றங்கள் மேனிலையாக்கம் என்னும் நிலையினை அடைந்துள்ளமையைக் கள ஆய்வின் மூலம் அறிய முடிந்தது. அவற்றை
1. பெயரமைப்பில் மேனிலையாக்கம்
2. கோயில் அமைப்பில் மேனிலையாக்கம்
3. வழிபாட்டில் மேனிலையாக்கம்
4. பெருந்தெய்வ வழிபாட்டுத் தொடர்பு
என்ற உட்தலைப்புகளில் காண்போம்.
பெயரமைப்பில் மேனிலையாக்கம்:-
இக்கோயிலில் தெய்வத்தின் சன்னிதியில் அருள்மிகு முனீஸ்வரன் என்ற பெயர்ப்பலகை வைக்கப்பட்டுள்ளது. இச்சிறு தெய்வத்தை வழிபட வரும் மக்கள் ''முனி'' என்றும் ''முனியாண்டி'' என்றும் மொட்டைக் கோபுரத்தான் என்றும் கூறுகின்றனர். (காளிமுத்து, ஆண், வயது 44, மதுரை மீனாட்சி பெண், வயது-52 திருவாதவூர் வாரந்தோறும் வரும் பக்தர்கள்).
ஆயின், இக்கோயில் உரிமையாளர்களும், மீனாட்சி அம்மன் கோயில் பட்டமார்களும் இச்சிறு தெய்வத்தை முனீஸ்வரன் என்றே சுட்டுகின்றனர். (பாலசுந்தரம் ஆண், பூசாரி வயது 75, மதுரை & கருப்பூர சுந்தர பட்டர் ஆண், வயது 28) அதாவது முனி, முனியாண்டி என்ற மக்கள் வழக்கு பெருந்தெய்வமான ஈஸ்வரன் பெயரோடு இணைக்கப்பட்டு மேல்தட்டு சாதியினரால் முனீஸ்வரனாக மாறியுள்ளமை மேல்நிலையாக்கத்திற்கு ஒரு சான்றாகும்.
கோயில் அமைப்பில் மேனிலையாக்கம்:-
கோயில் அமைப்பினை நோக்குகையில் தொடக்கத்தில் மீனாட்சியம்மன் கோயிலின் வடக்கு இராஜகோபுரத்தின் அடியில் உள்ள மண்டபமாக இருந்துள்ளது. முனீஸ்வரர் உள்ள சன்னிதிக்கு மட்டும் மரத்தாலான கதவு உண்டு. தொடக்கத்தில் தரையோடு உள்ள வளையத்தில் சங்கிலியிட்டுப் பூட்டிப் பெருங்கல்லை உருட்டி வைத்ததாகவும் (யாழ்.சுந்தரம், ஆண் பூசாரி, வயது 66, மதுரை) கூறுகின்றனர்.
சன்னிதியின் வெளிப்புறத்தில் கதை வடிவிலான இருபெரும் கற்றூண்கள் சாற்றி வைக்கப்பட்டுள்ளன. வலது புறம் விநாயகரும் இடது புறம் மடைப்பள்ளியும் உள்ளது. கிழக்குப் பார்த்த வகையில் இரட்டை விநாயகர் உள்ளது. மிகச் சமீபத்தில், பத்தாண்டுகளுக்கு முன் மடைப்பள்ளியின் முன்புறம் முருகன் சிலை வைக்கப்பட்டுள்ளது. (வேதநாயகம், ஆண் பூசாரி, வயது 42, மதுரை).
இக்கோயிலின் அருகே துணைக்கோயில் ஒன்று உள்ளது. இதில் சோனை, சப்பாணி, சமயக்கருப்பு ஆகிய தெய்வங்கள் ஒரே திருவாச்சியில் அமர்ந்த நிலையில் உள்ளன. அருகில் இராக்காயி அம்மனும் சங்கிலித் கருப்பும் நின்ற நிலையில் தனித்தனித் திருவாச்சியில் காணப்படுகின்றனர்.
தற்போது கோயிலின் கிழக்கே சிறுகதவொன்று அமைக்கப்பட்டுள்ளது. காலச் சூழ்நிலையை ஒட்டி கல்தரை மார்பிளாகவும் மாற்றம் பெற்றுள்ளன. மரக்கதவுகள் பித்தளைப் பூண் இட்டும் மாற்றம் பெற்றுள்ளன. ஒவ்வொரு சன்னிதிக்கும் தனிக் கதவும் உள்ளது. மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. துணைக் கோயிலில் கோயில் பயன்பாட்டிற்கெனக் குடிநீர் இணைப்பும் உள்ளது. திறப்பாக இருந்த முன்மண்டபக் பகுதிகள் இரும்புக் கிராதிக் கதவாக மாறியுள்ளன.
இம்மாற்றங்கள் காலவளர்ச்சியில் கோயில் அமைப்பில் ஏற்பட்ட மேம்பாடுகளைக் காட்டுவதை உணர முடிகின்றது.
வழிபாட்டில் மேனிலையாக்கம்:-
தனியாருக்குச் சொந்தமாகக் குலதெய்வமாக உள்ள இச்சிறு தெய்வம் பல்வேறு இனத்தாராலும், பல்வேறு மதத்தவராலும் வழிபடப்படுகிறது. யாதவ வகுப்பினருக்கும், மீனாட்சியம்மன் கோயில் பட்டர்களுக்கும் இச்சிறு தெய்வம் குலதெய்வமாக விளங்குகிறது. சென்னை காளிகாம்பாள் கோயிலைச் சேர்ந்த பட்டர் வருடந்தோறும் தவறாது வந்து இத் தெய்வத்தை வழிபடுவர் என்பது குறிப்பிடத்தகுந்தது. முனீஸ்வரன், மேல்தட்டு வர்க்கமாகச் சுட்டப்படும் பட்டர்களின் குலதெய்வமாக விளங்குவது வியப்பிற்குரியதாகும்.
தினசரி வழிபாட்டில் துணைக்கோயில் வழிபாடு ஏதும் இல்லை வழிபடுவோர் தரும் தேங்காய் பழத்தைப் பூசாரி உடைத்துத் தீபம் காட்டுவார். அவற்றில் பாதி கொண்டு வருவோருக்கும் மறுபாதி பூசாரிக்கும் உரியதாகும். அர்ச்சனையின் போது வேத மந்திரங்கள் கூறப்படுவதில்லை. கட்டணமும் இல்லை கால பூசைகள் ஏதுமில்லை செவ்வாய், வெள்ளிக் கிழமைகள் விசேஷ நாட்களாகக் கருதப்படுகின்றன. அன்று மாலையில் அபிஷேகம் நடைபெறுகிறது. உபயதாரர் வேண்டினால் அபிஷேகம் பிரசாதம் முதலியன அவர்களது செலவு வழிபடுவோர் வேண்டுதலின்படி வடைமாலை சாத்துதல் பஞ்சாமிர்த அபிஷேகம் உண்டு.
நிலைமாலை அணிவித்தல் என்பது இக்கோயிலுக்கு உரிய சிறப்புவேண்டுதல் ஆகும். பூச்சரம் அல்லது வெள்ளைக் காடாத்துணி அல்லது எலுமிச்சை ஆகிய ஏதாவதொன்றால் ஆன சரம் மீனாட்சி அம்மன் கோயிலின் வடக்கு இராஜகோபுரம் கலசத்திலிருந்து விடப்பட்டு முனீஸ்வரர் கோயில் வரை இழுத்துக் கட்டப்படும் சிறப்பு வழிபாடு நடைபெறும் நாட்களில் சோடசோபகாரத்தின் சில முறைகள் கையாளப்படுகின்றன. பிரசாதங்கள் சிறு தெய்வங்களுக்குப் படையிலிடப்படுவது வழக்கம். இக்கோயிலில் பெருந்தெய்வ வழிபாட்டு முறைப்படி மறைவாக நடத்தப்படுகிறது.
தமிழ்ப்புத்தாண்டு, விநாயகர் சதுர்த்தி, சரஸ்வதி பூசை, தீபாவளி, பொங்கல், கார்த்திகை, முதலியனவும் மார்கழி 30 நாட்களும் திருவனந்தல் பூசையும் இத்திருக்கோயில் அடைந்துள்ள மேனிலையாக்கத்திற்குச் சான்றாகும்.
வருடந்தோறும் ஆடிப் பௌர்ணமி மற்றும் மாசி சிவராத்திரி முதலியன முக்கிய விழாக்களாகும். இந்நாட்களின் ஏழாம் நாள் பாரிவேட்டை எனக் கொண்டாடப்படுகிறது... இவற்றுள் ஆடிப்பௌர்ணமியில் அழகர் கோயில் பதினெட்டாம் படிக் கருப்பணசாமியின் சந்தனக்குடம் இத்திருக்கோயிலில் இருந்து எடுத்துச் செல்லப்படுகிறது. (கந்தசாமி, ஆண், பூசாரி வயது 48 மதுரை)
மாசி சிவராத்திரியின் போது முறைகாரர்களில் அவ்வாண்டு உரிமையுடையவரால் கரகம் எடுக்கப்படுகிறது. நள்ளிரவில் உறவினர்களும், பக்தர்களும் சூழ வைகையாற்றில் சென்று பூசாரி கரகம் எடுத்து வருவார். வரும் வழியில் பக்தர்கள் தங்கள் வீடுகளுக்குப் பூசாரியை அழைத்து, மரியாதை செய்வர் சக்தி கரகமாக இல்லாமல், பூசாரியே கடவுளை இட்டு ஆடுவது இக்கோயில் வழிபாட்டில் சிறப்பனதாகும். (யாழ், சுந்தரம், ஆண் பூசாரி வயது 66 மதுரை) சாதாரண நாட்களில் பிரசாதங்கள் மறைவாக வைப்பதைப் போலின்றி சிறப்பு வழிபாட்டு நாட்களில் இரட்டை இலைவிரித்துப் படையல் இடப்படுகிறது.
முற்காலத்தில் பலியிடப்பட்டதாகவும் ஐம்பதாண்டுகளாக உயிர்ப்பலி கோயிலில் நிறுத்தப்பட்டதாகவும் பூசாரி கூறுகின்றனர். (முன்னது) ஆடு, கோயில், கன்றுக்குட்டி, முதலியன உயிரோடு கோயிலுக்கு உரிமையாக்கப்படுகின்றன.
பெருந்தெய்வ வழிபாட்டுத் தொடர்பு:-
மொட்டைக் கோபுரம் முனீஸ்வரர் கோயிலில் சோனை, சப்பானி, சமயக்கருப்பு, சங்கிலிக் கருப்பு, இராக்காயி அம்மன் முதலிய சிறுதெய்வங்கள் துணைக் கோயிலில் உள்ளனர் ஆனால் பெருந்தெய்வங்களான விநாயகர், முருகன் முதலிய தெய்வங்கள் கோயிலில் முனீஸ்வரரின் இருபுறமும் உள்ளமை கவனிக்கத்தக்கது ஆகும்.
பெருந்தெய்வக் கோயிலில் நடைபெறுவது போன்று விநாயகருக்கும், முருகனுக்கும் பூசைகள் நடத்திய பிறகு முனீஸ்வரருக்கும், பிற தெய்வங்களுக்கும் நடைபெறுவதே மேனிலையாக்கத்திற்குச் சான்றாகும்.
நாட்டுப்புற வழக்காறுகளை மேனிலையாக்கம் செய்வதை நாட்டுப்புற ஆய்வாளர்கள் குறையாகக் கருதுகின்றனர். (பதி.ஆ.பகவதி கு & லாரன்ஸ் செ.ஜ“ன். தமிழ்நாட்டிலும் மேலை நாடுகளிலும் தமிழியல் ஆய்வு ப-206) எனினும் மக்கள் பழக்கங்களைச் சீர்திருத்துவது ஆய்வாளர் கடமையல்ல. அவ்வகையில் மேற்கண்டவற்றின் அடிப்படையில்.
மதுரை மொட்டைக் கோபுரம் முனீஸ்வரர் கோயில், கோயில் அமைப்பாலும் பெயரமைப்பாலும் வழிபாட்டு முறைகளிலும் பெருந்தெய்வத் தொடர்புகளாலும் மேனிலையாக்கம் பெற்று வருகிறது. குழுவிற்கு நம்மை இட்டுச் செல்கிறது.
நன்றி: வேர்களைத் தேடி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக