அறிமுகம்:-
நாட்டுப்புற இலக்கியம் நாட்டார் இலக்கியம் என்று வழங்கப்படுகிறது. படிப்பறிவில்லாத பாமர மக்களால் தொன்று தொட்டு வரும் வாய்மொழி இலக்கியம், தொடக்கத்தில் இது வழிவழியாகப் பாடப்பட்டு வந்தது. ஆரம்பத்தில் இதற்குப் பதிவுகள் இல்லை. சமீப காலங்களில்தான் இதற்குப் பதிவுகள் தொடங்கப்பட்டது. இது நாட்டுப்புற மக்களின் நாகரிகம், பண்பாடு, நம்பிக்கைகளைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாகத் திகழ்கிறது.
ஒலியும் இனிமையும்:-
ஒலி மனிதன் அடிநாதம், சப்தசுரங்கள் மனிதனைத் தெய்வமாகவும், மாமனிதனாகவும் மாற்றும் ஆற்றல் உள்ளது.
''குழல்இனிது யாழ்இனிது என்பர்தம் மக்கள்
மழலைச் சொல் கேளாதவர்'' என்றார் வள்ளுவர்.
ஒலி, தகவல் பரிமாற்றத்தின் களனாகும். இது இருவர் அல்லது இரண்டுக்கு மேற்பட்டவர்களுக்கிடையே நடைபெறும். ஒலி வெறும் சொற்களோடு இருந்தால் அதில் இனிமையை எதிர்பார்க்க முடியாது. ஆனால் அதுவே ஒலிநயமுடைய பாடல்கள் ஆனால் அவை மனிதனை மனதிற்குள் தாளம் இடவைக்கும் தன்னை மறந்து ஆடவும் செய்யும், எத்தனை தகவல் தொடர்பு சாதனங்கள் வந்தாலும், வந்தபோதிலும், இவ்வொலிக் குறிப்புப் பாடல்கள் முன் மண்டியிடவே செய்ய வேண்டுமென்றால் அது மிகையாகாது.
அருவியின் ஒசையும், அலைகளின் ஆர்பரிப்பும், பறவைகள் இனிமையும், வண்டுகளின் ரீங்காரமும், மூங்கில்களின் நாதமும், மனித மனங்களைக் கொள்ளை கொள்வதாக அமையும். எல்லாம் இசைமயம்; ஒலி இல்லையேல் உலகம் இல்லை.
ஒலியும் இசையும்:-
''ஐசக்கா ஐ
அரப்பிடி நெய்
சுப்பம்மா சொன்னதெல்லாம்
பொய் பொய் பொய்''
என்ற பாடலில் ''ஐசக்கா ஐ'' என்ற வார்த்தை ஒலி நயத்திற்காகப் பாடப்பட்டுள்ளது. இரண்டாவது வரியில் ''அரப்பிடி நெய்'' என்பதில் விலை உயர்ந்த பொருள் இடம் பெறுகின்றது. மூன்றாவது வரியில் அப்பொருள் குறித்து சுப்பம்மாள் என்ற பெண் கூறிய செய்தி குறிப்பிடப்படுகிறது. நான்காவதாக இது தொடர்பான செய்திகள் பொய்யானது என்ற எண்ணம் நமக்குத் தெரிகின்றது.
ஒலி நயமும் விளையாட்டும்:-
''நான் தான் உங்கப்பன்
நல்லமுத்துப் பேரன்
வெள்ளிப்பிரம்பெடுத்து
விளையாட வாரேண்டா
தங்கப் பரம்பெடுத்து
தாலி கட்ட வாரேண்டா
வாரேண்டா வாரேண்டா வாரேண்டா''
என்ற விளையாட்டுடன் தொடர்புடைய பாடலில்
நான் - நல்
வெள்ளி - வினை
தங்கம் - தாலி
என ஒன்றுக்கொன்று முதல்வரியின் முதல் சீர் இரண்டாம் வரியின் முதல் சீரோடும், மூன்றாம் வரியின் முதல் சீர் நான்காம் வரியில் முதல் சீரோடும், ஐந்தாம் வரியின் முதல்சீர் ஆறாம் வரியின் முதல் சீரோடும் இயைந்து வருவது இதன் சிறப்பியல்பாகும்.
''ஈச்சு எலுமிச்சு
மூச்சு விட்டா போச்சு''
என்ற பாடலிலும் ஈச்சு மூச்சு என ஒன்றாக ஒலி நயத்துடன் இணைந்து வருவதைக் காணலாம்.
ஒலி நயமும் சங்கிலித் தொடரும்:-
தேன் தேன் என்ன தேன்
கொம்புத் தேன் என்ன கொம்பு
மான் கொம்பு என்ன மான்
புள்ளி மான் என்ன புள்ளி...........
என நீண்டு கொண்டே செல்கின்ற வினாவிடை படிவத்தில் அமைந்துள்ளது இதன் சிறப்பாகும். முதல் வரியின் இறுதிச் சொல் அடுத்த வரியின் வினாவாக வருகின்றது. இவ்வாறு தொடர்ந்து சங்கிலித் சொற்றொடர் போன்று சொற்கள் காணப்படும். இத்தகைய சொற்றொடர் ஆர்வத்தைத் தூண்டுவதாகவும், அடுத்த வரி என்ன என்று எதிர்பார்க்கும் விதத்தில் அமைந்துள்ளது.
ஒலி நயமும் கேலிப்பாடல்களும்:-
''மொட்டை மொழுக்கட்டை
எனக்கு ரெண்டு கொழுக்கட்டை''
என்ற பாடல் பிறரைக் கேலி செய்து ஒரு பொருளைப் பெறுவதாக அமைகின்றது.
ஒலி நயமுடைய மீன் பிடிப்பாடல்:-
மீனவர் மீன் பிடிக்கும் போது பாடப்படும் பாடல்கள்
''ஐலசா ஐலசா'' என்று ஒலி நயம் தோன்றப் பாடப்படும். இது அவர்களின் களைப்பைப்போக்கி உற்சாகத்தை ஏற்படுத்தும் ஏற்றப்பாடல்களும் இவ்விதமாக அமைந்துள்ளன.
தாலாட்டுப் பாடலில் ஒலி நயம்:-
பச்சிளங்குழந்தையைத் தாய் தாலாட்டுப்பாடித் தூங்கச் செய்யும் பாடல்கள் ஒசை நயம் உடையவையாகத் திகழ்கின்றன. குழந்தைப் பருவத்திலே அதற்கு அறிவு புகட்டும் விதத்தில் அப்பாடல்கள் அமைந்துள்ளன.
''பால் போல் நிலவடிக்க
பரமசிவன் பந்தடிக்க
பரமசிவன் பந்தையும் தான்
எதுத்தடிக்க வந்த கண்ணா''
என்ற பாடல் குழந்தை இறைவனோடு விளையாடுவதாக அமைந்துள்ளது.
''ஆசாரி ஆசாரி
கழுகுமலை ஆசாரி
நான் பெத்தானுக்கு
பொன்னூஞ்சல்
கொண்டு வாரும்''
என தன் குழந்தைக்கு ஊஞ்சல் வேண்டி ஆசாரியிடம் உரைப்பதாகப் பாடல் இடம் பெற்றுள்ளது.
உரையாடலில் ஒலி நயம்:-
தலைவன் தலைவி
''அன்ன நடையழகி
அலங்கார உடையழகி
பின்னல் நடையழகி செல்லம்மா
புறப்படம்மா தேரு பார்க்க''
என்ற பாடலில் தலைவியைப் பார்த்துத் தலைவன் வருணித்து அழைப்பதும் அதற்குத் தலைவி தகுந்த பதில் உரைக்கிறாள்.
''மதன வடிவழகா
மாமோகச் சொல்லழகா
வண்ண உருவழகா என் ஆசை மச்சானே
வரமாட்டேன் தேரு பார்க்க''
என்று மறுமொழி உரைக்கிறாள்.
இலக்கியங்களும் நாட்டுப்புறப்பாடல்களும்:-
இராமாயணத்தில் கும்பகர்ணன் தூங்கிக் கொண்டு இருக்கின்றான். அவனை எழுப்புவதற்காக உலக்கை, தாரை, தப்பட்டை போன்ற கருவிகள் கொண்டு எழுப்ப முற்படுகின்றனர்.
''உறங்குகின்ற கும்ப கர்ணன்
உங்கள் மாயவாழ்வ்வெல்லாம்
இறங்குகின்ற தின்று - காண்
எழுந்திராய் எழுந்திராய்''
என்ற பாடலை நினைவூட்டுவதாக அரிசி குத்தும் தலைவியை
''அரிசி குத்தும் அக்கா மகளே''
என் பாடல் நினைவூட்டுகிறது.
திருப்பாவையில் துயில் எழும்பும்போது
''ஏலே இளங்கிளியே எனத் தலைவி தோழிகளை எழுப்புவாள். இது போன்று நாட்டுப்புறப்பாடலில்.
''ஏலோ ஏலோ ஏலேலங்கடியோ'' என வருகின்ற இசைப்பாடல் பாடப்பட்டு வருகின்றது.
மேலும் காளை மாடுகள் வண்டியில் பூட்டிப் போகின்ற காட்சி ''சல்சல்'' என்னும் சலங்கை ஒலி எனவும்.
சங்க இலக்கியத்தை நினைவூட்டுவதாக ''ஆலோலம், ஆலோலம் சோ...சோ.. என்ற பாடல்கள் அமைந்துள்ளன.
''ஆராரோ ஆரிராரோ
என் கண்ணே நீ ஆரிராரோ''
என வருகின்ற ஒலியும் லல்லலாலா.. இந்தா இந்தா இந்தா என்று வருகின்ற துள்ளிசை ராகங்களும் நாட்டுப்புறப்பாட்டுகளில் நிறையக் காணப்படுகின்றன, என்றால் அது மிகையாகாது. அன்றும் இன்றும் என்றும் நம்மனதில் நீங்காது ஒலித்துக்கொண்டு இருப்பது நாட்டுப்புற இசைப்பாடல்களின் அடி நாதமே யாகும்.
வாழ்வு மகிழ்ச்சி, சோகம் என இரண்டும் கலந்து அமைந்துள்ளது. மகிழ்ச்சியின் போது நம்மை அதன் உச்ச நிலைக்குக் கொண்டு செல்வது நாட்டுப்புற இசைப் பாடல்களே, மக்கள் வாழ்வோடு இரண்டறக்கலந்துள்ளன. அதே நேரத்தில் துன்பம் வருகின்ற போது அதில் இருந்து விடுபட்டு மீளா வடிகாலாக அமைந்திருப்பதும் நாட்டுப்புற இசைப்பாடல்களே அழகுக்கு அழகூட்டும் ஆடையாகவும், அணிகலனாகவும் விளங்குவதும் என்றும் இசை மயமான நாட்டுப்புறப் பாடல்களே!
நன்றி: வேர்களைத்தேடி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக