விடுகதைகள் என்னும் புதிர் முடிச்சுகள் நமது பண்பாட்டின் முகவரிகள். கேள்வித் தூண்டில்களால் நமக்குள்ளிருக்கும் சிந்தனை மீன்களைப் பிடிக்கும் முயற்சிகள். மகாகவிகளால் உருவாக்கப்படாமல் மக்களால் மக்களுக்காக உருவாக்கப்பட்ட வித்தைகள். சூரியனைப் போல நிலவைப் போல இயற்கையான வெளிச்சங்கள் தனி மனிதக் குரலாக அன்றிச் சமுதாயத்தின் பண்பாட்டுக் குரலாக ஒலிக்கும் இந்த விடுகதைகளில் காணும் கற்பனை வீச்சு பெருங்கவிஞர்களை பெருமூச்சு விட வைப்பது.
மூளைக்கும் அர்த்த அலைகளை எழுப்புகிற இந்த விடுகதைகளின் கோலங்கள் பல திறந்தவை. ''தியாகிகள் புதைக்கப்படுவதில்லை விதைக்கப்படுகிறார்கள் என்ற பிரபலமான கூற்று ஒன்று உண்டு. கவிக்கோ அப்துல் ரகுமான் அண்ணாவைப் பற்றி
''விழுகின்ற போதும்
விதையைப் போல் விழுந்தவன் நீ''
என்று குறிப்பிட்டார். கவிக்கோவின் கவியாற்றலுக்குச் சற்றும் குறையாமல் பிணத்தை விதை என்று படிமப்படுத்தும் புதிர் போடுகிற விடுகதை ஒன்று,
''ஆழக் குறி பறித்து
நீள விதை போட்டு
வருசம் ஐந்தாகியும்
முளைத்து வரவில்லை''
நீளவிதை என்ற அற்புதமான கவித்துவச்சாவி விடுகதைப் பூட்டின் சாவியாக ஆக்கப்பட்டிருப்பது வியப்பானதல்லவா?
விடுகதைகளில் பின்னப்பட்டிருக்கிற படிம அழகுகள் அவற்றை விடுகதைகளாக ஆக்கிவிடுகின்றன. கிணற்றில் நிலவின் நிழல் தெரிவதை
"எங்க வீட்டுக் கிணத்திலே
வெள்ளிக் கிண்ணம் மிதக்குது''
கிணற்றில் விழுந்த நிலவை என்று இதை ஒரு புதுக்கவிதை குறிப்பிட்டிருக்கிறது. மேற்கூறிய விடுகதையில் நிலா, என்பது வெள்ளிக்கிண்ணமாகப் படிமப்படுகிறது. வெளிச்சத்தைச் சிரிப்பின் பிரகாசத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கிறது ஒரு விடுகதை.
''எட்டாத தூரத்தில்
எவரும் இல்லாத காட்டில்
இரவெல்லாம் சிரிக்கிறாள்''
நிலவின் வெளிச்சம் பெண்ணின் சிரிப்பாகப் படிமப்படுகிறது. மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், ''நீ சிரிக்கிற மாதிரியாய் வெளிச்சங்களாம்'' என்று ஒரு திரைப்பாடலில் குறிப்பிட்டிருப்பது இங்கு நினைவுக்கு வருகிறது. பெயர் புலப்படாத ஆளின் விடுகதை பெயர் பெற்ற கவிஞனின் கவிதையோடு போட்டி போடுகிறதல்லவா? இன்னும் நிலவை தாம்பாளம், மொட்டையாண்டி, எழிலான பெண், குளத்தில் தட்டு, விளக்கு என்றெல்லாம் படிமப்படுத்தியிருப்பது சொக்க வைக்கிறது.
நிலாவின் முழு இலக்கத்தையும் சுட்டுகிற விடுகதை கவித்துவத்தின் உச்சி எனலாம்.
''அலை வீசி இரையாத
அகிலப் பெருங்கடல்
வெள்ளைக் கப்பல் ஒன்று
வெளிச்ச மிட்டு வருகுது''
என்பது அசர வைக்கும் அற்புதக் கற்பனையல்லவா?
நிலவோடு கூடி நிற்கும் விண்மீன்களைப் பற்றிய கற்பனைகளும் சளைத்தவையல்ல. விண்மீன்களை அப்பா பணம் அம்மா காசு என்றெல்லாம் சிறு பிள்ளைகளின் குதூகலத்தோடு விடுகதைகள் காட்டுகின்றன. கோடி கோடி வெள்ளிப் பணம் என்று விடுகதைக்காரன் பெருமூச்சுவிட வைக்கிறான். கவிஞர் சிற்பியின் கவிதையொன்று இங்கு நினைவில் வருகிறது.
அந்தியின்
சிவப்புக் கரத்தில்
ஒரு தங்க நாணயம்
வந்து விழுந்தது
அழகிய கண்ணாடிக்
கோப்பை ஒன்றில்
வழிய வழிய
வைக்கப்பட்டது
வெள்ளை ஒயின்
மீதிச் சில்லறைகள்
மினுங்குகின்றன
மேசை மேல்
அந்தியின் தங்க நாணயமாம் சூரியன் மறைய, வெளிச்சம் வழியும் கண்ணாடிக் கோப்பையான நிலவு, வானத்து மேடையில் வைக்கப்பட்டு நட்சத்திரச் சில்லறைகள் அங்கு மின்னுகின்றன என்பதில் விண்மீன்கள் சில்லறைக் காசுகளாகப் படிமப்பட்டிருப்பது இணைத்துப் பார்க்கப்பட வேண்டியதல்லவா? நிலவைத் தேய்த்து வரும் தட்டு, பாக்கு, பூக்கள், உதிர்ந்த ரோஜா இதழ்கள், ரோஜப் பூக்கள் என்றெல்லாம் படிமங்கள் அமைத்திருப்பது சுவை தருகிறது.
வானம் பரந்த ஒன்று என்றாலும் பாமர மக்கள் அதனைத் தங்களிடம் உள்ள ஒரு விரிந்த பொருளாக மட்டுமே பார்க்கிறார்கள்
"உலகுக்கெல்லாம் ஒரே கூரை''
என்றும்
''இரவெல்லாம் பூக்காடு பகலெல்லாம் வெறுங்காடு''
என்று இரவு நேரத்தில் வானத்தை விண்மீன்கள் நிரப்பி பூக்களாகிய காடு என்றும், பகலெல்லாம் பூக்கள் இல்லாத காடு என்றும் வானத்தை அழகாகக் கூறுகிறார்கள்.
மேலும் அம்மா புடவை, துப்பட்டி, பாய், பந்தல், தந்தை போர்வை, குடை என்றெல்லாம் அனுபவ எல்லைக்குட்பட்ட படிமங்களைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். வானம் தங்களைப் போர்த்தியிருப்பதாகவும், தாங்கள் எப்போதோ படுக்க விரித்த பாயாக இருப்பதாகவும் தங்கள் தலைக்கு மேலுள்ள குடையாகவும், பந்தலாகவும் பார்க்கிறார்கள். படிமங்கள் அனுபவங்களிலிருந்து பிறக்கும் என்ற அற்புத விதியை அப்படியே பின்பற்றுகிறார்கள்.
நாடறிந்த நல்ல கவிஞர்களின் படிமங்களுக்குச் சவால் விடுவனவாக பாமரர்களின் படிமங்கள் அமைந்திருப்பதை விடுகதைகள் காட்டுகின்றன. நாட்டுப்புற மக்களின் படிமங்கள் இயற்கையாக வளர்ந்த செடிகள். கவிஞர்களின் படிமங்கள் தொட்டிச் செடிகள். கவிஞர்களின் படிமங்களை கோலப்புள்ளிகளின் அழகு கொண்டவை என்றால், விடுகதைப் படிமங்கள் விண்மீன்களின் வியப்பழகைக் கொண்டவை எனலாம். விடுகதைக் காட்டில் கொட்டிக் கிடக்கும் படிமப் பூக்கள் சிந்தனையை அலங்கரிப்பவை. அவற்றின் மணம் நமது கவித்துவ மரபின் கவிமணம். கவின் என்னும் உணர்ச்சி சிலிர்ப்போடு இந்தச் சிந்தனை முடிச்சுகள் போடப்பட்டிருப்பது இங்குள்ள ஒவ்வொருவருள்ளும் இருக்கும் கவிஞனை இனம் காணத்தான் எனலாம்.
நன்றி: வேர்களைத்தேடி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக