தமிழில் பலர் பாடிய பாடல்களைத் தொகுப்பது என்பது அன்று முதல் இன்று வரை தொடர்ந்து வரும் மரபாகும். ஒவ்வொரு புலவரும் தான் உணர்ந்த கருத்துக்களை செய்யுளாக விரும்பிய தலைப்பில் அணியாக்கி, அவை அழியாது காத்தனர். பல ஆண்டுகளாக தமிழில் பாடல்கள் தொகுத்து தமிழ் பேணிக்காக்கப்பட்டு வருகிறது. தமிழ் தொகுப்புக் கலைக்கே ஒரு கொள்கை உண்டு. நல்ல கோட்பாடுகளை வகுத்துக் கொண்டு தொகுக்கப்பெறும் நூல்கள் சாகாவரம் பெறுபவை. ஏட்டில் எழுதப்பெற்ற கவிதைகளேயன்றி வாய்மொழியாக வழங்கப்பெறும் நாட்டுப்புறப்பாடல்கள் என்னில.
தமிழர் வாழ்வில் மனிதன் பிறப்பு முதல் இறப்பு வரை அனைத்து நிகழ்ச்சிகளிலும் பாட்டு உண்டு. உள்ளம் உவந்த போது மட்டுமின்றி காலை முதல் மாலை வரை ஒவ்வொரு தமிழனும் தங்கள் கனவுகளை, மகிழ்ச்சிகளை, காதலை, வெற்றியை, தோல்வியை, அவலத்தை, மாறாத துயரத்தை மனதில் கொண்டு வாய்மொழியாக இசைவடிவில் கொடுக்கின்றனர். இசையோடு கூடிய தாலாட்டு, உழவுப்பாட்டு என்று ஒவ்வொரு சூழலுக்கும் நாட்டுப்புறப்பாடல்கள் தொகுக்கப்பட்டு இருப்பினும் அவை உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட வில்லை.
பழந்தமிழர் இலக்கிய மொழிபெயர்ப்புகள்:-
பழந்தமிழ் நாட்டில் தமிழில் இலக்கியம், இலக்கணம், மருத்துவம், சோதிடம், அறிவியல் முதலிய நூல்களை செய்யுளில் எழுத வல்லவராய் இருந்தனர். காலப்போக்கில் உரைநடை நூல்கள் பெருகின. பத்தாம் நூற்றாண்டிற்குப் பிந்திய காலத்திலிருந்தும் வடமொழியிலிருந்தும் பதினெட்டாம், பத்தொன்பதாம் நூற்றாண்டிலிருந்தும் ஆங்கிலம் போன்ற ஐரோப்பிய மொழிகளிலிருந்தும் இலக்கியங்களைத் தழுவி நூல்கள் எழுதித் தமிழ்வளர்ச்சிக்கு உறுதுணை செய்தவர் பலர்.
பெஸ்கி என்ற வீரமாமுனிவர் திருக்குறளை இலத்தீன் மொழியிலும், ஜி.யு. போப், திருக்குறள், திருவாசகம், நாலடியார் முதலிய மூன்று பழந்தமிழ் நூல்களை ஆங்கிலத்திலும் மொழி பெயர்த்தனர். டாக்டர் ஜான் லாசரஸ் என்ற அறிஞர் ஆங்கிலத்தில் தமிழ் இலக்கணத்தையும், திருக்குறள் முழுமைக்கும் அழகிய எளிய பதிப்பை வெளியிட்டு மிகப்பெரும் சேவை புரிந்துள்ளார். ஆறுமுக நாவலர் பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் நூல்களைத் தமிழிலும் மொழிபெயர்ப்பதில் சிறந்து விளங்கினார்.
இச்சிறந்த பட்டியலில், குறிப்பாகத் தமிழ் இலக்கிய வளர்ச்சியில் மற்ற பாடல்கள் பெற்ற இடத்தை நாட்டுப்புறவியலும் பெற வேண்டும் என்பதற்கான முதல் முயற்சியே எனது இக்கட்டுரை.
தமிழரின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் இடம் பெறும் நாட்டுப்புறப் பாடல்களில் ஒரு தாலாட்டு மற்றும் ஒப்பாரிப் பாடல் ஒன்றையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, தமிழரின் உள் உணர்வை ஆராய்ந்து விளக்குவது இக்கட்டுரையின் நோக்கமாக அமைகிறது.
மொழிபெயர்ப்பு:-
மூலமொழியின் கருத்துக்களையும், மொழியமைப்பினையும், பயன்பாட்டுணர்வினையும் ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்கு மாற்றுதலே உண்மையான மொழிபெயர்ப்பாகக் கொள்வர். ஆயினும் மொழிபெயர்ப்பாளர்கள் தம் விருப்பிற்கேற்ப சுருக்கியும், விரித்தும், தேவையான இடங்களில் கருத்துக்களை மாற்றியும் தருகிறார்கள்.
இக்கட்டுரையில், வெவ்வேறு சூழலில் அமைந்த தாலாட்டு ஒன்றும், ஒப்பாரிப் பாடல் ஒன்றும் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளதைக் காணலாம்.
தாலாட்டு
யாரும் அடிக்கவில்லை
ஐவிரலும் தீண்டவில்லை
பசித்திடவே நானழுத
பாசமுள்ள என் தாயாரே
யாரும் அடிக்கவில்லை
ஐவிரலும் தீண்டவில்லை
தாய்மடித்தேடி நீ
அழுது வந்த
யாரும் அடிக்கவில்லை
ஐவிரலும் தீண்டவில்லை
தானாக அழறா
தம்பித்துணை வேணுமுன்னு.
Lullaby
Nobody beats (me)
No one touches even with a finger
I cry of hunger
o! mY beloved mother
Nobody beats (you)
NO one touches even with a finger
you cry of
Mother''s fondling
Nobody beats (you)
No one touches even with a finger
He cries of
Having a companion
ஒப்பாரி
பம்ப புளியமரம்
பட்சி அடையு(ம்) நந்தவனம்
பம்ப மரம் சாஞ்சா
பட்சி போயி எங்கடயு(ம்)
மொட்ட புளியமரம்
மயிலு அடையு(ம்) மண்டபமா
மொட்ட மரம் சாஞ்சா
மயிலு போயி எங்கடயு(ம்)
குட்ட புளியமரம்
குயிலு அடையு(ம்) மண்டபமா
குட்டமரம் சாஞ்சா
குயிலு போயி எங்கடயு(ம்)
Lamentation
Lofty tamarind tree
Shelter of birds as
Garden - village
If it falls, no shelter
Dwarfed tamarind tree
Shelter of peacock as
Temporary saloon
if it falls, no shelter
short tamarind tree
shelter of cuckoo as
temporary saloon
if it falls, no shelter.
மேற்கூறிய நாட்டுப்புறப் பாடல்களைக் காணும்போது, அவை தமிழரின் உள்உணர்வை வெளிப்படுத்தும் ஒரு கருவியாக இருப்பதைக் காணமுடிகிறது. மேலும் எளிய அமைப்பும், தனிப்பட்ட விதிமுறையின்மையும் அவற்றின் சிறப்பம்சங்களாகத் திகழ்கின்றன. தாலாட்டுப் பாடலில் ஒரு குழந்தை எதற்கெல்லாம் அழும் என்ற காரணங்களாகக் கொடுப்பதோடு மட்டுமின்றி ஒரு தாயின் உள் உணர்வினையும் மிக அழகாக வெளிப்படுகிறது. எடுத்துக்காட்டாக, ''தம்பித்துணை வேணுமின்னு'' குழந்தை அழுவதாகவுள்ள அப்பாட்டின் மூலம் இன்னொரு குழந்தை வேணும் என்ற விருப்பம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
அடுத்துள்ள ஒப்பாரிப் பாடலிலும் நம் பண்பாடு பொதிந்துள்ளதைக் காணலாம். தமிழ் பண்பாட்டில், ஒரு குடும்பத்தின் தலைவன் தகப்பன் ஆவான். அக்குடும்பத்திலுள்ள மற்றவர்களான தாய், குழந்தைகள், அனைவரும் அத்தந்தையின் ஆதரவை நாடியிருப்பதை இன்றும் நாம் காணலாம். இச்சூழலில் தகப்பன் இறந்து போனால் அக்குடும்பத்தின் நிலை என்ன என்பதும், அப்பேரிழப்பை தாளாத துயரத்தை - இவ்வுலகிலுள்ள எதைக் கொடுத்தும் ஈடுகட்ட இயலாது என்பதில் தமிழ் பெண்மணிகள் கொண்டுள்ள உறுதியான நம்பிக்கையும், அவர்கள் ''கணவனே கண் கண்ட தெய்வம்'' என்ற சிந்தனைக்கு ஏற்றவாறே இந்நூற்றாண்டிலும் வாழ்கின்றனர் என்பதும் பொதுவாக பெண்கள் ஆண்களைச் சார்ந்தே வாழ்கின்றவர்கள் என்பதும் இப்பாடல் மூலம் தெரியவருகிறது.
மேலும் இப்பாடலில் கணவனைப் புளியமரத்தோடு ஒப்பிட்டுக் கூறுவதிலிருந்து, நம் பெண்கள், தம் கணவன் வலிமைமிக்க ஆற்றல் கொண்டவன் என்றும் அசைக்க முடியா தன்னம்பிக்கைக் கொண்டவன் என்றும் நெடுநாள் உயிர்வாழக்கூடியவன் என்றெல்லாம் மனதில் கொண்டிருப்பதால், அத்தகையவனுக்கு ஏற்படும் சாவினை ஏற்கமுடியாது தவித்துப்புலம்புவதன் மூலம் தமிழச்சியின் பெருமை, அவள் கணவன் மீது கொண்டுள்ள பற்று அசைக்க முடியா நம்பிக்கை ஆகியன மிக அழகாக வெளிப்படுத்தப்பட்டுள்ளன என்பதை நாம் அறியலாம்.
இத்தகைய சிறப்பம்சங்களைக் கொண்ட நாட்டுப்புறப்பாடல்கள் ஒவ்வொன்றும் உலகளவில் அறியப்பட வேண்டுமெனில் இவ்வனைத்து வகைப் பாடல்களும் உலகமொழிகளில் மொழிபெயர்க்கப்படவேண்டும். அவ்வாறு மொழி பெயர்க்கப்படுமாயின் நம் நாட்டுப் பண்பாடு, கலாச்சாரம், சமூக அமைப்பு போன்றவற்றை உலக அரங்கில் நிலைநிறுத்த முடியும். மேலும், இப்பாடல்களை மொழிபெயர்க்க விரும்புபவர்கள் தமிழர்களாகவோ அல்லது தமிழ் சமுதாயத்தை ஒட்டி வாழ்ந்தவர்களாகவோ இருப்பதோடு மட்டுமின்றி ஆங்கில மொழியில் புலமைப் பெற்றவர்களாகவும் இருத்தல் வேண்டும். அப்போதுதான் ஆங்கில மொழிக்கலாச்சாரத்திற்கு ஏற்ப மொழிபெயர்க்கமுடியும். காட்டாக ''தம்பித்துணை'' என்ற சொல்லை ''Companian'' என்றும் நந்தவனம் ''garden - village'' என்றும் ''தாய்மடித்தேடி வந்தாய்'' என்பதை ''Mothers fondling'' என்றும் ஆங்கில மொழிச்சொல்லுக்கு ஏற்ப இங்கு மொழி பெயர்க்கப்பட்டிருப்பது நோக்கத்தக்கதாகும்.
நன்றி: வேர்களைத்தேடி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக