நாட்டுப்புற இலக்கியத்தின் பல்வேறு கூறுகளில் ஒன்று நாட்டுப்புறக்கதைகளாகும். நாட்டுப்புறக்கதை என்பது வாய்வழியாகப் பரவுவதாகும். நாட்டுப்புற இலக்கியத்திற்கேயுரிய தனிச்சிறப்பைப் போன்றே இதற்குத் தனி ஆசிரியர் கிடையாது. வாய்வழியாகப் பரவி வந்துள்ளதே இதன் தனி இயல்பாகும். ஒரு நிகழ்ச்சியை விளக்கிக் கொள்ள மனிதன் கற்பனையுடன், தன் அனுபவத்தையும் இணைத்து ஏற்படுத்திக் கொண்டதே கதைகள் தோன்றக் காரணமாகும். மனிதன் தோன்றிய போது கதைகளும் தோன்றிவிட்டன என கூறலாம். தனது அனுபவங்களை மற்றவர்களுக்குச் சொல்லத் தொடங்கியபொழுதே கதைகள் தோன்றிவிட்டன. மக்கள் கூட்டங்கூட்டமாக ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குச் சென்றபோதும் கால்நடை மேய்ச்சலுக்காக அலைந்து திரிந்த போதும் தாம் கண்டவற்றையும் அனுபவித்தவற்றையும் கதையாகச் சொல்லத் தொடங்கினான். இவை வாய்மொழியாகப் பலருக்கும் கூறப்பட்டன. கதைகள் உருவாகத் தொடங்கிற்று.
சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ் அகராதி ..கதை.. என்ற சொல்லிற்குப் பின்வருமாறு பொருள் உணர்த்துகிறது.
1. பெரிய சரிதம்
2. இதிகாச புராணங்கள்
3. பெருங்கதை
4. பொய் வார்த்தை
5. விசித்திரக் கதை
6. கட்டுக்கதை
7. சொல்
8. விதம்
9. சம்பாஷணை
சென்னைப் பல்கலைக்கழக ஆங்கில - தமிழ் அகராதியானது நாட்டுப்புறக் கதை என்பதற்குப் பின்வருமாறு விளக்கம் தருகிறது.
Folk Tale - மக்கள் மரபுக் கதை பழங்கதை
The New encyclopaedia Britannica in 30 volumes. Volume NO.7
பின்வருமாறு ஒரு விளக்கத்தைத் தருகிறது.
எல்லாப் பிரதேசங்களிலிருந்தும் கூறப்படும் வாய்மொழிக் கதைகள் சாதாரணமாகவே காலம், இடம் பற்றிய உலகளாவிய தன்மை உடையதாக இருக்கிறது. சிலர் சாதாரணமான கதைகளையும் சிலர் சிக்கலான கதைகளையும் கூறுகிறார்கள். கதை சொல்லிக்கும் பார்வையாளனுக்கும் உள்ள அடிப்படை உறவு எல்லாக் காலங்களிலும் காணப்படுகிறது. நாட்டுப்பாடல் மற்றும் மரபிலிருந்து இதை வேறுபடுத்தும் முகமாக சமூகக் கட்டுப்பாடுகளை மீறாத அளவிற்கு கதை சொல்லிக்கு முழுமையான சுதந்திரம் எடுத்துக் கொள்வதைக் கூறலாம்.
ஒரு நாட்டுப்புறக் கதையின் பயணம் ஒரு கதை சொல்லியிடமிருந்து மற்ற கதை சொல்லிக்கு எளிதாக மாறுகிறது. ஒரு நாட்டுப்புறக் கதை அதற்கான அடிப்படைத் தன்மைகளோடு உருவாக்கப்படுகிறது. அதன் வார்த்தை வடிவத்திலிருந்து மேலான கதை சொல்லும் வடிவத்தைப் பெறுகிறது. மொழிக்குண்டான எல்லைகளை எவ்விதச் சிரமுமின்றி கடந்துவிடுகிறது. ஒரு நாட்டுப்புறக் கதையின் பரவும் தன்மையானது தீர்மானிக்கப்படுகிறது. போக்குவரத்து வசதிகள் நவீனமாகியுள்ள இக்காலத்தில் பலகதைகள், குறிப்பாக யுரேஷ’யன் பகுதியில் உள்ள கதைகள் அதன் பண்பாட்டுப் பரப்பிற்குச் சம்பந்தமில்லாத, அருகிலுள்ள நாடுகளுக்கும், மற்ற கண்டங்களுக்கும் கூடப் பரவியுள்ளது.
மேலும் International encylopedia of the Social Sciences தரும் விளக்கமானது பின்வருமாறு.
ஒரு புனைகதையை உரைநடையின்வழி வாய்வழியாகச் சொல்லுதல் நாட்டுப்புறக்கதைகளாகும். பொதுவாக, மிருகங்கள் மனிதர்கள் பற்றிய வீரசாகஸங்களைக் கதைகளாகக் கூறுவர். அதே சமயம் வேதாளம், கொள்ளைக்காரர்கள் பற்றிக் கதைகளும் இருக்கும். கதைகளினுள் உபகதைகளும் வரும், சமூகக் சடங்குகளை வலியுறுத்தும் கதைகள், சமயக் கதைகள், நீதிக்கதைகள் போன்ற உபகதைகளும் நாட்டுப்புறக் கதைகளில் அடங்கும். ஆங்கிலத்தில் நாட்டுப்புறக்கதைகள் தேவதைக் கதைகள் என்று வழங்கப்படுகின்றன. இந்த தேவதைக் கதைகளில் தேவதைகள் பற்றி கதைகளை வாய்மொழியாகச் சொல்லுவது.
உண்மைக்கும் புனைகதைக்கும் இடையேயான வேறுபாடு கதை சொல்பவரின் நம்பிக்கைகளையும், கதை கேட்பவரது நம்பிக்கைகளையும் ஒப்பீடாகப் பிரதிபலிக்கிறது. இது நமது நம்பிக்கைகளை அல்ல. ஒரு வரலாற்றுப்பூர்வமான அல்லது ஒரு விஞ்ஞானப் பூர்வமான அல்லது ஒரு உண்மை அல்லது யதார்த்தமற்றதையோ, அளவிடுவதாக இல்லை. ஒரு சமூகத்திலிருந்து மற்றொரு சமூகத்திற்கு புராணக்கதையும் மரபுவழிக்கதையும் ஊடுருவும் போது நம்பிக்கையற்று ஏற்றுக் கொள்ளப்படுவதுண்டு. இவை ஊடுருவிய சமூகத்தில் நாட்டுப்புறக் கதைகளாய்ப் பிரதிபலிக்கிறது. அவ்வப்போது இதற்கு எதிர்மறையாகவும் நிகழ்வதுண்டு. வேகமாக கலாச்சார மாற்றம் நிகழும் காலக்கட்டத்தில் இத்தகைய நம்பிக்கைகளும் அது தொடர்பான புராணக் கதைகளும் ஒதுக்கித் தள்ளப்படுவதுண்டு. தனிமைப்பட்ட கலாச்சாரக் சூழலில் இத்தகைய மரபு சார்ந்த நம்பிக்கைகளை ஏற்க மறுப்பவர்களுமுண்டு. இவற்றிலெல்லாம் முக்கியமானது ஒரு குறிப்பிட்ட சமூகத்தில், ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் பெரும்பான்மையோரின் நம்பிக்கையைச் சார்ந்து அவைகளின் நடவடிக்கை நடைபெறுகிறது.
நாட்டுப்புறக் கதைகள் குறித்து Dictionary of folklore mythology land Legend காணப்படும் விளக்கம் பின்வருமாறு.
நாட்டுப்புறக் கதைகள் என்ற சொல்லாக்கம் ஆங்கிலத்தில் பரந்துபட்ட தளத்தில் உபயோகிகப்படுகிறது. அதற்கான வரைமுறை, தீர்மானிக்கும் முயற்சி இன்னும் மேற்கொள்ளப்படவில்லை. பொதுவாக மரபுவழிக் கதையாக்கத்திற்கு இந்தச் சொல் உபயோகிக்கப்படுகிறது. புராதன மக்களின் பழங்கதைகள் என்பது மிகத்தெளிவான வடிவங்கள் கொண்ட அரேபிய இரவுகள் Uncle Romus வீரசாகஸங்கள், Puss in Boots, ரோமரின் காதல் தெய்வம் (Cupid), கிரேக்கரின் பெண்தெய்வம் (Psyche) அனைத்தும் பழங்கதைகள் என்ற சொல்லாக்கத்தில் அடங்குகிறது ஆங்கிலத்தில் இந்தச் சொல்லிற்கான விளக்கமான வரையறை நிறைய வசதிகளை உள்ளடக்கியுள்ளது. ஒரு குறிப்பிட்ட கதை அது எந்த வகையைச் சார்ந்தது என்பதை தெளிவாக வரையறுக்க அடிக்கடி நிகழும் விவாதங்களையும் முடிவுகள் எடுக்கப்பட வேண்டிய அவசியத்தையும் இந்த வரம்பு அவசியமற்றதாக்கிவிடுகிறது.
இந்த நாட்டுப்புறக் கதைகளின் தனித்தன்மை அவை மரபு வழியைச் சார்ந்தது. இது ஒரு மனிதனிடமிருந்து மற்ற மனிதனுக்குப் பரவும் போது அதன் உண்மையான மூலக்கூறு மாற்றம் பெறுகிறது. இது வாய்வழி மரபாக அமைகிறது. இந்தக் கதைகள் மறுபடி சொல்லப்படும் போது மாற்றங்களுடனோ அல்லது மாற்றங்களின்றியோ கதைச் சொல்லியின் மனத்தில் படிந்தவை மட்டும் கதையாகக் கூறப்படுகிறது. சில மரபுகள் இத்தகைய கதைகள் மீண்டும் மீண்டும் சொல்லப்படும்போது எழுத்துவழி மரபுடன் அமைகிறது. ஐரோப்பிய நாடுகளில் பரவலாகக் காணப்படும் நாட்டுப்புறக் கதைகள் மதகுருக்களால் விளக்கப்பயன்படுத்தப்பட்ட கதைத்தொகுப்பு இன்று எழுத்துவடிவில் காணப்படுகிறது. இத்தகைய தொகுப்புகள் திரும்பத் திரும்ப நூற்றாண்டுகளாகச் சொல்லப்படும் போது வாய்மொழி மூலத்திற்குத் திரும்பச் சென்றிருக்கலாம் அல்லது ஒரு இலக்கியப் படைப்பாளியின் ஆளுமையினால் மாற்றமும் பெற்றிருக்கலாம். இவை எப்படியிருப்பினும் மரபு சார்ந்தவைதான்.
தமிழ்க் கலைக்களஞ்சியம் நாட்டுப்புறக் கதைகள் குறித்து பின்வருமாறு ஒரு விளக்கம் தருகிறது.
பண்டைக் காலத்தில் வாழ்ந்த மக்கள் தங்கள் சூழ்நிலையில் காண்பவற்றை எல்லாம் விளக்க முயன்றனர். அதன் பயனாகவே பெரும்பாலும் நாடோடி இலக்கியம் எழுந்தது. உலகத்தின் வேறுவேறு பகுதியிலுள்ளவர்கள் சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், மழை, காற்று, இடி முதலியவற்றை விளக்கப் பல கதைகள் உண்டு பண்ணினார்கள். இக்கதைகள் எழுதப்படவில்லை. தந்தை மகனுக்குச் சொல்ல, மகன் தன் மகனுக்குச் சொல்ல இவ்வாறு தலைமுறை தலைமுறையாக அனுபவிக்கப்பட்டுவந்தன.
இவற்றுள் சில தேவர்களைப் பற்றியும் சில வீரர்களைப் பற்றியும் கூறுவன. மற்றும் மக்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்று கூறுவதற்கென விளங்குக் கதைகளும், வனதேவதைக் கதைகளும் உண்டாயின. மேனாட்டில் ஈசாப்புக் கதைகள் என்பனவும், இந்தியாவில் பஞ்சதந்திரக் கதைகள் என்பனவும் இந்த வகையைச் சார்ந்தவை.
தேவர்களுடன் மனிதர்கள் வாழ்ந்ததாகக் கூறும் கதைகளும் உண்டு. இராமாயணத்தில் மனிதர்களுடன் வானரங்கள் நட்புடன் வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது. இவ்வாறு எழுந்த பல கதைகள் பிற்காலத்தில் தொகுத்துக் கோவையாக்கப்படுவதுண்டு. இங்கிலாந்தில் காணப்படும் ஆர்தர் கதைகளும், இந்தியாவில் காணப்படும் மகாபாரதத் கதைகளும் இந்த வகையைச் சேர்ந்தவை. நாட்டுப்புறக் கதைகள் குறித்த விளக்கங்கள் இவ்வாறு நிலவி வருகின்றன.
கதைகளின் பாகுபாடுகள்:-
தமிழில் கதைகளைப் பற்றிய ஆய்வு அண்மைக்காலத்தில் தான் முக்கியத்துவம் பெற்று வருகிறது. நாட்டுப்புறக் கதைகளைப் பற்றிய பாகுபாடுகள் பின்வருமாறு:
1. விசித்திரக் கதை (Fantastic Content)
2. நாள் வாழ்வுக் கதை (Tales of everday life)
3. விலங்குக்கதை (Animal Tales) எனப் பொதுவாக நாட்டுப்புறக் கதைகளை மூவகையாகக் பாகுபாடு செய்துள்ளனர்.
தெலுங்கு மொழியில் நாட்டுப்புறக் கதைகளை
வீரகாவியம் (veekatha or epic)
இதிகாசம் (Ithihasa or Legent)
அற்புதக் கதை (Adbutha katha or fairy tale)
நீதிக்கதை (Neethikatha or Didactic Story)
புராணக்கதை (Purakatha of Myth) என ஐவகையாகப் பாகுபாடு செய்கின்றனர்.
மேலும் நாட்டுப்புறக் கதைகளை நாட்டுப்புறவியல் அறிஞர்கள் நான்கு பெரும் பிரிவுகளாகப் பிரித்துள்ளனர். அவை
1. மனிதக் கதைகள் (Human stories)
2. மிருகக் கதைகள் (Animal stories)
3. மந்திரக் கதைகள் (magic stories)
4. தெய்வக்கதைகள் (God''s stories) என்பன
மனிதர்களைப் பற்றியும் மனித உணர்வுகளைப் பற்றியும் கூறப்படும் கதைகள் மனிதக் கதைகள் என்ற வகையில் அடங்குவனவாகும். அரசர்கள் பற்றிய கதைகளும் இவ்வகையில் அடங்கும். காதல், உல்லாசம், பிரயாணம், நீதி முதலியனவும் இவ்வகையில் அடங்கும்.
மிருகங்களைப் பற்றிய கதைகளை மிருகக் கதைகள் எனலாம். இக்கதைகளில் மிருகங்களே பேசுவதாகக் காணப்படும். மனிதர்களுக்குக் கூறப்படும் அறிவுரைகள் மிருகங்கள் மேல் ஏற்றிச் சொல்லப்படும். இதன் மூலம் குழந்தைகளுக்கும் மனிதர்களுக்கும் நீதிகளையும், அறிவுரைகளையும் கூற முடிந்தது. மிருகக் கதைகளின் மூலம் மிருகங்கள் பேசுவதாகக் குறிப்பிடுவதற்குக் காரணம் இறப்பிற்குப் பின் மனித ஆவி, விலங்கு, பறவைகளின் உடல்களில் புகுந்து கொள்வதாக நம்பப்படுவதேயாகும். மிருகக் கதைகளில் மிருகங்களின் இயல்புகளையும், செயல்களையும் கூறுவதைவிட மனித இனத்திற்கு நீதியைக் கூறுவதே குறிக்கோளாகக் காணப்படுகிறது. பஞ்சதந்திரக் கதைகள் இதனை நன்கு உணர்த்துகின்றன.
மந்திரதந்திரங்களைப் பற்றிய கதைகளே மந்திரக் கதைகளாகும். இக்கதைகளில் மந்திரவாதி முக்கிய இடம் பெறுவர். பேய், பிசாசு போன்றவைகளை இக்கதைகளில் இடம் பெறும். மனித இனவரலாற்றில் பழங்கால மனிதன் இயற்கையை வெல்ல மந்திர தந்திரங்களை உண்டாக்கினான். அக்காலக்கட்டத்தில் இக்கதைகள் தோன்றின எனக் கூறலாம். மக்கள் தாம் கூற விரும்பும் கருத்துக்களை மனித சக்திக்கு அப்பாற்பட்ட ஒன்றின் மீது ஏற்றிக் கூறுவதைக் காணலாம். இக்கதைகள் பழங்கால மக்களின் எண்ணங்களை நன்கு வெளிப்படுத்துவனவாக அமைகின்றன.
தெய்வங்களைப் பற்றிய கதைகளில் உலகப் படைப்புகளைப் பற்றிய செய்திகளை விரிவாகக் காணலாம். ஞாயிறு, திங்கள், காற்று, அக்கினி, பூமி பற்றியிருக்கும். புராணக் கதைகள் பழங்கால சமூகத்தில் முக்கிய இடம் பெற்றிருந்தன. சூரியனையும் சந்திரனையும் தெய்வங்களாகக் கருதி வழிபட்ட பழங்கால மனிதன் தன்னைச் சூழ்ந்துள்ள இயற்கைக்கும் உயிரற்ற இயற்கைக்கும் ஆற்றல்கள் இருந்தன என நம்பினான். பழங்கதைகள் பெரும்பாலும் பொருள்களின் தோற்றத்தைப் பற்றிக் கூறுவதால் மதத்திற்கும் மந்திரத்திற்கும் நெருங்கி தொடர்புண்டு எனலாம்.
தமிழ் நாட்டுப்புறக் கதைகளை க. கிருட்டிணசாமி என்பவர்.
மந்திரதந்திரக் கதைகள்:-
கட்டுக்கதைகள் அல்லது பழங்கதைகள்
புராணக் கதைகள்
விலங்கு, பறவைகளின் கதைகள்
உயிரற்ற பொருட்களின் கதைகள் என ஐவகையாகப் பாகுபாடு செய்கிறார்.
கதைகளைப் பாகுபாடு செய்வதின் மூலம் பின்வரும் செய்திகளை அறியஇயலும்.
1. தமிழக நாட்டுப்புறக் கதைகள் பெரும்பாலும் தனிப்பட்ட மனிதனுக்கு இன்றியமையா இடமளிப்பவனாகவே காணப்படுகின்றன.
2. ஊர்கட்கு அல்லது குறிப்பிட்ட இடத்திற்கு இன்றியமையா இடமளிக்கும் கதைகள் அதற்கடுத்த இடத்தைப் பெறுகின்றன.
3. விலங்கு பறவைக் கதைகள் அடுத்த இடத்தைப் பெறுகிறது. இதில் பஞ்சதந்திரக் கதைகளைத் தவிர்த்து வேறு எதுவும் இடம் பெறவில்லை. பஞ்சதந்திரக் கதைகள் நீதி நெறிகளைப் போதிக்கும் கதைகள் என்பதால் அது பெரும்பாலும் சிறுவர்களுக்குரியதாகவே கருதப்படுகிறது. எனவே இப்பஞ்சதந்திரக் கதைகள் என்றும் அடைமொழி கொடுத்து பதிப்பிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு சிறுவர்களுக்கு, மாணவர்களுக்கு என்று பதிப்பிக்கப்படும்போது அந்நூல்களின் முகப்பு அட்டைகள் பல வண்ணங்களில் மிருகம், பறவைகளின் படங்கள் நிறைந்ததாகவும், ஒவ்வொரு கதையிலும் குறைந்தது ஒரு படம் அச்சிடப்பட்டும், எழுத்துக்கள் பெரிய அளவில் அச்சிடப்பட்டும் காணப்படுகின்றன. இவர்கள், கதைகளை ஆய்வு செய்து வெளியிடவில்லை. ஏற்கெனவே வெளிவந்த கதை நூல்களை அப்படியே திருப்பி வெளியிடப்படுவதைக் காணமுடிகிறது. சிறுவர்களுக்கு, மாணவர்கட்கு என்று தனியே அடைமொழி கொடுத்து வெளியிடுதல் மூலம் அரசின் உதவியைப் பெறுகின்றனர். பள்ளிகளிலும், நூல்களிலும் இதற்காக ஏராளமான பிரதிகள் வாங்கப்படுகின்றன. ஒரு நூலின் பக்கங்கள் அதிகபட்சம் ஐம்பது ஆகும். முதலில் வெளிவந்த பஞ்சதந்திரம் தாண்டவராய முதலியாரால் மொழிபெயர்க்கப்பட்டு 1858 இல் வெளிவந்ததாகும்.
4. பெரும்பாலான கதைத் தொகுப்பு நூல்கள் 1970-85 களில்தான் அதிகம் பதிக்கப்பட்டுள்ளன. 1950-60களில் மிக குறைந்த அளவிலேயே கதைத் தொகுப்பு நூல்கள் பதிக்கப்பட்டுள்ளன.
5. வெளியீட்டாளர்களில் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தினரே அதிக அளவில் நாட்டுப்புறக்கதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளனர். இவர்களையடுத்து ஸ்டார்ச் பிரசுரம், ரேவதி பதிப்பகம், திருமகள் நிலையம், விசாலாட்சி நிலையம், வானதி பதிப்பகம், தமிழ்ப் புத்தகாலயம் போன்றவை கதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளன.
6. தொகுப்பாளர்களின் அதிக அளவில் தொகுத்தவர் முல்லை பி.எல் முத்தையா. அ.லெ. நடராஜன், நெ.சி. தெய்வசிகாமணி போன்றோர்.
நன்றி: வேர்களைத்தேடி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக