''பெண் மொழி, பெண் எழுத்து என்ற வார்த்தைகளே ஆண்களின் உருகாக்கம்தான்''
பெண்கள் அதிகமாக கவிதை எழுதத் தொடங்கியிருப்பது, மிக சமீபத்தில் தமிழ் இலக்கியப் பரப்பில் நிகழ்ந்த முக்கியமான ஒரு நிகழ்வு. ஒரு இயக்கமாக இன்று நவீன தமிழ்ப் பெண் கவிதைகள் உள்ளன. இப்படி ஒரு இயக்கமாக நவீன பெண்கள் கவிதை உதயமாவதற்கு முன்பே, பெண்ணின் அனுபவமும் வலியும் நவீன தமிழ்க் கவிதைக்கு அந்நியமாக இருந்த சூழலில், கவிதை எழுதத் தொடங்கியவர் கனிமொழி. ஆண் குரலில் எழுதிய பெண் கவிஞர்களே அக்காலகட்டத்தில் பெண்ணியக் கவிஞர்களாக ஏற்கப்பட்டும் அறியப்பட்டும் இருந்தார்கள். அத்தகைய சூழலில் கனிமொழியின் கவிதைகள் முதன் முதலாக நிஜமான பெண் அனுபவத்தையும் வலியையும் வெளிப்படுத்தின. அந்த வகையில் இப்போது எழுதிக் கொண்டிருக்கும் பெண் கவிஞர்களுக்கு முன்னோடி கவிஞர் கனிமொழி. அதிகம் அலங்காரமற்ற, அந்தரங்கமான அடங்கிய குரலில் பேசுபவை கனிமொழியின் கவிதைகள், படிமங்கள், வடிவப் பரிசோதனைகள், போன்றவற்றுக்குள் சிக்காதவை. தான் சொல்ல நினைப்பதை நேரடியாகப் பேசுபவை. எளிமையானவையும் கூட. இதனால் வாசகனுக்கு மிக நெருக்க மானவையாகவும் இருக்கின்றன. தனக்கேயுரிய தனித்துவமான கவித்துவத்தால், நவீன தமிழ்க் கவிதையுலகில் தனியிடம் வகிக்கின்றன கனிமொழி கவிதைகள்.
1968-இல் பிறந்த கனிமொழி, பொருளியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர். ''தி இந்து மற்றும் சிங்காப்பூர் ''தமிழ் முரசு'' நாளிதழ்களில் பணியாற்றியுள்ளார். ''கருவறை வாசனை'' (1995), ''அகத்திணை'' (2003) ஆகிய இரண்டு கவிதைத் தொகுதிகளும், ''பார்வைகள்'' (1995), ''கறுக்கும் மருதாணி'' (2003) ஆகிய கட்டுரைத் தொகுதிகளும் வெளியாகியுள்ளன.
தீராநதி: கவிதை என்றால் என்ன என்பதுக்கான உங்கள் வரையறை என்ன?
கனிமொழி: ஒரு படைப்பாளியாக என்னைப் பொறுத்தவரை, மற்ற எல்லா இலக்கிய வடிவங்களைப் போலவே கவிதையும் ஒரு படைப்பிலக்கிய வடிவம்; அவ்வளவுதான். ஆனால் மொழியின் அடிப்படையில் பார்க்கும் போது, மற்ற வடிவங்களைவிட அபூர்வமானதும் மேலானதுமாக கவிதையை நினைக்கிறேன். கவிதை மொழியின் உச்சமான வெளிப்பாடு; மொழியின் அத்தனை சாரங்களையும் தன்னுள் வாங்கிக் கொண்டு வெளிப்படுத்துகிற ஒரு வடிவமாகவும் இருக்கிறது என்னைப் பொறுத்த வரை கவிதையில் அனாவசிய வார்த்தைகளுக்கோ, அலங்காரங்களுக்கோ இடமில்லை, ஒரு சிறுகதை எழுத்தாளர், ஆசிரியரின் இடத்திலிருந்து வாசகர்களுக்கு சொல்லித்தர முடியும்; மற்ற இலக்கிய வடிவங்களிலும் இது சாத்தியம் ஆனால் கவிதையில் சாத்தியமில்லை. இங்கே கவிஞனும் வாசகனும் ஒரே தளத்தில் இயங்க வேண்டும். அது ஜன்னலைத் திறந்து, கவிஞனையும் வாசகனையும் ஒரு பெரிய வெளிக்குள் இழுத்துக் கொண்டு போய் நிறுத்தும். இது சரி, இது தவறு என்றும் நல்ல கவிதை எதையும் சொல்வதில்லை.
தீராநதி: உங்கள் கவிதை எதைப் பேச விரும்புகிறது. அதன் அக்கறை என்னவாக இருக்கிறது?
கனிமொழி: என்னைப் பாதிக்கிற எல்லா விஷயங்களையும் நான் கவிதையில் பேசுகிறேன். பொதுவாக வயது கூடிக்கொண்டே போகப்போக, நம்முடைய அக்கறைகளும் கரிசனங்களும் மாறிக் கொண்டே வருகின்றன. எனக்கும் என்னுடைய கவிதைகளுக்கும் இதுதான் நேர்ந்திருக்கிறது. ஆனால் எல்லா கால கட்டங்களிலும் மனித விடுதலை, சுதந்திரம், கருத்துத் திணிப்புக்கு எதிரான நிலைப்பாடு ஆகியவைதான் என் கவிதைகளின் அடிப்படையாக இருந்திருக்கிறது என்று நினைக்கிறேன்.
தீராநதி: படைப்பாளிகளுக்கு நேரும் பொதுவான அனுபவங்களில் ஒன்று; அவர்கள் எழுத விரும்பிய, ஆனால் அவர்களுக்கு கைகூடி வராமல் போவது என்று ஏதாவது ஒன்று இருக்கும். அப்படி உங்கள் படைப்பாற்றலுக்கு சவால் விடும் ஏதாவது இருக்கிறதா?
கனிமொழி: இருக்கிறது. சில விஷயங்களை கவிதையில் சொல்ல முடியாமல் தப்பிப் போவது தொடர்ந்து பலமுறை நேர்ந்திருக்கிறது. அதற்கு இன்னும் கொஞ்சம் அனுபவங்களும் வார்த்தைகளும் தேவைப்படுமாக இருக்கலாம். எனக்கும் என்னுடைய குழந்தைக்கும் இடையேயான உறவை, என்னால் கவிதையில் சொல்ல முடிந்ததே இல்லை. அதற்கு காரணம் என்ன என்றும் எனக்குத் தெரியவில்லை. ஆனால் மாலதிமைத்ரிக்கு முடிந்திருக்கிறது. அதற்கென்று ஒரு சமயம் வரும் போது தானாகவே அது என்னிடம் வரலாம். சில நேரங்களில் எழுத முடியாமல் போகிற கவிதையை, ஒன்றிரண்டு வருடங்களுக்குப் பிறகு எழுதியிருக்கிறேன். ஆனால் நான் சொல்ல விரும்பியதை முழுமையாக என்னால் கவிதையில் சொல்ல முடியவில்லை என்று தோன்றினால் அதனை எழுதமாட்டேன். சில கவிதைகள் எழுதி முடித்துவிட்டுப் பார்க்கும் போது தொடங்கிய போது மனதில் இருந்ததாக இல்லாமல் இன்னொன்றாக மாறி இருக்கும். இது பொதுவாக எல்லா படைப்பாளிக்கும் நேரும் அனுபவம்தான்.
தீராநதி: உங்கள் கவிதை குறித்து வைக்கப்படும் விமர்சனங்களில் ஒன்று, அதில் சுயத்தை பொதுமைப்படுத்தும் தன்மை அதிகம் இருக்கிறது என்பது இதனைத் திட்டமிட்டு செய்கிறீர்களா?
கனிமொழி: இல்லை. அப்படித்தானே இருக்க முடியும். ஒரு சமூகப் பிரச்னையை, ஏதோ ஒரு இடத்தில் என்னுடைய பிரச்னையாக நான் உணரும்போதுதான் அது என் படைப்புக்குள் வருகிறது. உதாரணமாக மக்களுக்கும் அரசியலுக்குமான உறவு, அவர்கள் அரசியல்வாதிகளைப் பார்க்கிற விதம், ஓட்டுப் போட்டு ஏமாந்துப் போவது இவை எல்லாவற்றிலும் மக்களில் ஒருத்தியாக நானும்தானே இருக்கிறேன். இதுபோல் பல்வேறு விஷயங்களில் பொதுத் தளத்தில் நான் இருக்கிறேன். அது போல் என்னுடைய விஷயங்கள் என்பது என்னுடன் மட்டும்முடிந்து விடுபவைகளும் அல்ல. அவையும் பொதுத்தளத்துக்கு வருகின்றன. எனவே பொதுத் தளத்தையும் என்னையும் பிரித்துப் பார்க்க முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை.
நான் உணராத எதனையும் எழுதுவது இல்லை. என் கவிதைகளுக்குள் நானும் நான் பார்த்த அனுபவங்களும் இருக்கின்றன. என்றாலும் அவை தனியொருவரின் வலியும் அனுபவங்களும் மட்டும் இல்லை.
தீராநதி: இமேஜ் பற்றிய உணர்வு காரணமாக சிலர் அனுபவங்களைப் பொதுமைப்படுத்தி எழுதுவதுண்டு நீங்கள் அப்படி எழுதுகிறீர்களா?
கனிமொழி: அப்படி எதுவும் இல்லை. என் கவிதைகளில் நான் எங்கே இருக்கிறேன் என்று என்னைத் தெரிந்தவர்களுக்குத் தெரியும். எனக்குள் இருக்கிற எதிர்மறையான விஷயங்கள் பற்றியும் நான் எழுதுகிறேன். என் கவிதைகளுக்குள் ஒரு பெரிய சுவரை எழுப்பி அதற்கு பின்னால் நான் ஒளிந்து கொள்கிறேன் என்பது ஏற்றுக் கொள்ள முடியாத விமர்சனம் ஆனால் என் கவிதைகள், என்னைப் பற்றி நான் சொல்ல வருபவைகள் இல்லையே. அதில் நான் இருக்கிறேன் என்றாலும் அது நான் மட்டும் இல்லை. கவிதை, படைப்பாளியின் தனிப்பட்ட வாழ்க்கையின் கதவுகள் இல்லை. நான் வெளியே வருவதற்கான கதவுகளாகத்தான் என் கவிதைகளைக் கருதுகிறேன். தனக்கு நேர்ந்த அடக்குமுறையைப் பற்றிப் பேசும் சில்வியா ப்ளாத்தின் கவிதை, உண்மையில் அவளுக்கு மட்டும் நேர்ந்த ஒரு அனுபவத்தைப் பற்றிப் பேசுகிறதா, அல்லது ஹ’ட்லரின் தலைமையில் நாஜிகளுக்கு நேர்ந்த அடக்குமுறையைப் பற்றி பேசுகிறதா?
தீராநதி: உங்களைக் கவர்ந்த கவிஞர்கள்; குறிப்பாக உங்கள் கவிதையைப் பாதித்தவர்கள் யார், யார் என்று சொல்லமுடியுமா?
கனிமொழி: ஞானக்கூத்தன், கலாப்ரியா, கல்யாண்ஜி, மனுஷ்யபுத்திரன், மாலதிமைத்ரி, அமெரிக்க கருப்புக் கவிஞரான மாயா ஆஞ்சலோ, சில்வியா ப்ளாத், சல்மாவின் சில கவிதைகள் மற்றும் இப்போது எழுதிக்கொண்டிருக்கிற அனேகம் பேர்களின் ஒரு சில கவிதைகள். இவர்கள் அனைவருமே ஏதோ ஒரு விதத்தில் என் கவிதையைப் பாதித்திருக்கிறார்கள் என்று தான் நினைக்கிறேன். சில்வியா ப்ளாத்திடம் ஆதிதப் படுத்தப்படாத ஒரு வலி இருக்கிறது. மாயா ஆஞ்சலோவிடம், கறுப்பினப் பெண்ணாக அவளுக்கு நேர்கிற அடக்குமுறைகளையும், அதன் வலிகளையும் கடந்து, இந்த உலகத்தை நேசிக்க வேண்டும் என்ற அவளது பலம் மிக அழகாக இருக்கிறது.
தீராநதி: திராவிட இயக்க மேடைப் பேச்சாளர்களின் பேச்சைக் கேட்டும் எழுத்தாளர்களின் படைப்புகளைப் படித்தும், அதன் பின்புலத்தில் வளர்ந்தவர் நீங்கள். அவர்கள் உங்கள் மேல் செலுத்திய தாக்கம் என்ன?
கனிமொழி: பொதுவாக அக்காலத்தில் திராவிட இயக்க மேடைப் பேச்சு மட்டுமல்லாமல் எல்லா மேடைப் பேச்சுகளுமே இலக்கியச் செறிவு கொண்டவையாக இருக்கும். கம்பராமாயணம், சிலப்பதிகாரம் என்று தெரிந்து கொள்ள நிறைய விஷயங்கள் அதில் இருக்கும். அதன் மூலம் நானாகத் தேடிப் போகாமலேயே நிறைய விஷயங்களைத் தெரிந்துகொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அவர்களது கருத்துகளுடன் ஏதோ ஒரு இடத்தில் நாம் உடன்படுகிறோம் அல்லது முரண்படுகிறோம். ஆனால் நிச்சயம் அவர்களது அடுக்கு மொழிகளும் தீக்கனல் பறக்கும் பேச்சுகளும் எல்லோரையும் ஈர்க்கக் கூடியவை என்பதை மறுக்க முடியாது. அவை தமிழ் மீது ஆர்வம் ஏற்படுத்துவதுடன் மொழிக்குள் நம்மைக் கொண்டு செல்வதுக்கான வழியாகவும் இருக்கிறது. நிச்சயமாக அது எனக்குள் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தீராநதி: ஒரு சமூக சீர்திருத்த இயக்கமாக திராவிட இயக்கத்தின் பங்கு மிகப்பெரியது; எவராலும் மறுக்க முடியாதது. ஆனால் கலை, இலக்கியத்தைப் பொறுத்தவரைக்கும் அவர்களது பங்களிப்புகள் எதிர்மறையாகத்தான் பார்க்கப்படுகின்றன. இது பற்றிய உங்கள் கருத்து என்ன?
கனிமொழி: திராவிட இயக்க எழுத்துகளுக்கு மிகத் தெளிவான ஒரு காரணம் இருந்தது. தன்னை வெளிப்படுத்திக் கொள்ளவோ, பகிர்ந்து கொள்ளவோ அல்லது இலக்கியம் இலக்கியத்துக்காகத்தான் என்றோ எழுத வந்தவர்கள் இல்லை அவர்கள். தங்களுக்குத் தெரிந்த சில விஷயங்களை, சிந்தனைகளை மக்களுக்குக் கொண்டு போய்ச் சேர்க்கவேண்டும் என்று எழுத வந்தவர்கள். இலக்கியம் மட்டுமல்லாமல் நாடகம், சினிமா உட்பட எல்லா ஊடகங்களையும் அந்த நோக்கத்தில்தான் அவர்கள் பயன்படுத்தி இருக்கிறார்கள். ஒரு சமூகத்தில் எல்லாவிதமான எழுத்துகளுக்கும் அவற்றுக்கென்று ஒரு இடம் இருக்கிறது. திராவிட இயக்க எழுத்துகளுக்கும் ஒரு இடம் இருக்கிறது. அதனைக் கடந்தோ அல்லது மறுத்துவிட்டோ எவரும் செல்ல முடியாது. சுதந்திரப் போராட்ட கால கட்டத்தில் பிரசாரத்துக்கு எழுத்து பயன்படுத்தப்பட்டிருக்கிறது. பாரதியின் எழுத்துக்களின் பெரும் பகுதியில் அதன் தன்மை இருக்கிறது. இதற்காக பாரதியை பிரசார எழுத்தாளர் என்று எப்படி ஒருவரால் ஒதுக்கிவிட முடியும்? திராவிட இயக்க எழுத்துகளுடன் முரண்பட்ட கருத்துகளோ, சிந்தனைகளோ ஒருவருக்கு இருக்கலாம். அவர் தனது சிந்தனையை முன்வைத்து விவாதிக்கலாம். ஆனால் அதன் இடத்தை நிச்சயமாக மறுக்க முடியாது.
தீராநதி: திராவிட இயக்கப் பின்புலத்தில் வளர்ந்தவர் என்றாலும், உங்கள் கவிதைகளில் திராவிட இயக்க எழுத்துகளின் தாக்கம் பெரிய அளவில் இல்லை. இருக்கக்கூடாது என்ற பிரக்ஞையுடன் எழுதினீர்களா?
கனிமொழி: இருக்கக்கூடாது என்று முடிவெடுத்து எழுதவில்லை. அது இயல்பாக நிகழ்ந்தது. ஆனால் அந்தப் பின்னணியில் இருந்துதான் நான் வந்தேன் என்பதால் அவர்கள் மொழியின் பாதிப்பு என்னிடம் இருக்கிறது என்றுதான் எண்ணுகிறேன்.
தீராநதி: தமிழ் இலக்கியப் பரப்பில் மிகச் சமீப காலத்தில் நிகழ்ந்துள்ள மிகப்பெரிய மாற்றம் என்பது அதிகம் பெண்கள் கவிதை எழுத வந்ததுதான். இப்போதுள்ளது போல் பெண்கள் கவிதை ஒரு இயக்கமாக இல்லாத போதே கவிதை எழுதிக்கொண்டு வந்தவர் நீங்கள். ஆனால் சமிபமாக உங்கள் கவிதைகள் அதிகம் வெளிவரவில்லை. திடீரென்று எழுதுவதைக் குறைத்துக் கொள்ள என்ன காரணம்?
கனிமொழி: காரணம் என்று பெரியதாக ஒன்றும் இல்லை. சோம்பேறித்தனம்தான் ஒரே காரணம்.
தீராநதி: தற்கால தமிழ் பெண்கள் கவிதைகள் பற்றியும் அதனையொட்டி நிகழ்ந்துள்ள விவாதங்கள் குறித்தும் உங்கள் மதிப்பீடு என்ன?
கனிமொழி: இப்போதுதான் நிறையப் பெண்கள் எழுதத் தொடங்கி இருக்கிறார்கள். முதலில் இது வரவேற்கப்பட வேண்டிய ஆரோக்கியமான ஒரு விஷயம். ஆனால் தமிழ் சமூகம் சமீபகால பெண்களின் பாலியல் அரசியல் கவிதைகளால் அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறது. அதற்கு அந்த கவிதைகள் காரணமா அல்லது தமிழ் சமூகம் காரணமா என்பது முக்கியமான கேள்வி. பெண் கவிதைகள் பற்றி முன் வைக்கப்படும் விமர்சனங்களின் அடிப்படையில் பார்த்தால், பெண்கள் எழுதுபவற்றை விட மோசமாகவும் அதிகமாகவும் ஆண் கவிஞர்கள் எழுதியிருக்கிறார்கள். திரைப்பட பாடல்களில் எவ்வளவு மோசமான, ஆபாசமான சித்திரிப்புகள் உள்ளன? பெண் கவிதைகளை ஆபாசம் என்று இப்போது சொல்பவர்களேதான் அதை எழுதியிருக்கிறார்கள். முக்கியமான ஆண் கவிஞர்களிடம் இருந்தும் இது மாதிரியான கவிதைகள் நிறைய வந்திருக்கின்றன. அதனால் என்றும் தமிழ் சமூகம் அதிர்ச்சிக்குள்ளானதே இல்லை. ஆனால் ஒரு பெண் எழுதும் போது, தடைகளைத் தாண்டி அவள் வெளியே வரும்போது, அதனை இந்த சமூகத்தால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதுதான் உண்மையில் பிரச்னை, எல்லா மொழிகளும் இப்படியான ஒரு கட்டத்தைக் கடந்துதான் வந்திருக்கின்றன. ஒரு அதிர்ச்சி மதிப்பீட்டுக்காகவும், மற்றவர்களின் கவனத்தை தங்கள் பக்கம் திருப்புவதற்காகவும்தான் பெண்கள் பாலியல் குறித்து எழுதுகிறார்கள் என்று, சில நவீன இலக்கியவாதிகள் கூட சொல்கிறார்கள். ஆனால் நான், எழுதும் பெண்களின் நோக்கத்தைச் சந்தேகப்பட முடியாது என்று உறுதியாக நான் நம்புகிறேன். நிச்சயம் யாரையும் கிளர்ச்சியூட்டுவதற்காக இவர்கள் எழுதவில்லை. தடைகளைக் கடந்து வெளியே வரவேண்டும் என்பதுதான் இவர்களின் ஒரே நோக்கமாக இருக்கிறது. இவர்கள் கவிதையில் முன்வைக்கும் விஷயங்களுக்குத்தான் நாம் முக்கியத்துவம் தரவேண்டுமே தவிர, கவிதையில் இடம் பெற்றுள்ள ஒன்றிரண்டு வார்த்தைகளைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருப்பது ஏற்றுக் கொள்ளக்கூடிய ஆரோக்கியமான விவாதம் இல்லை.
பெண் உடல் குறித்த பார்வைகள் மீது, ஒரு கட்டுடைத்தலை சமீப கால பெண்களின் பாலியல் அரசியல் கவிதைகள் நிகழ்த்தியிருக்கின்றன. பெண் விடுதலையைப் பொறுத்தவரைக்கும் இது மிக முக்கியமானது. இதனை சாதித்துவிட்டால் அல்லது இதனைக் கடந்து வந்து விட்டால் பெண் விடுதலை சாத்தியம் என்று இதற்கு அர்த்தம் இல்லை. இதனையும் கடந்து நிறைய தூரம் செல்ல வேண்டியதிருக்கிறது.
தீராநதி: பெண்கள் கவிதையின் மீது ஆண்கள் வைக்கும் விமர்சனங்களும் அது குறித்த சர்ச்சைகளும் ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம், அனேக பெண்களின் கவிதைகள் ஆணிய பார்வையைத்தான் கொண்டிருக்கின்றன என்ற விமர்சனம், சக பெண் கவிஞராலேயே வைக்கப்பட்டு அதுவும் சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கிறதே?
கனிமொழி: ஒரு சில பெண்களின் கவிதைகள் மீது அது மாதிரியான விமர்சனங்கள் எனக்கும் உண்டு. பெயர்களைக் குறிப்பிட்டால், அது தனிப்பட்ட தாக்குதலாக எடுத்துக் கொள்ளப்படும் என்பதால் பெயர்களைத் தவிர்க்கலாம் என்று நினைக்கிறேன். ஆண்கள் பெண்களைப் பார்க்கும் பார்வையைத்தான் அவர்களின் கவிதைகள் கொண்டிருக்கின்றன. பெண்ணிய கருத்துக்களைச் சொல்ல வரும் சில படைப்புகள்கூட தங்களை பெண் வழமையா பார்க்கப்படும் தாய்மையையே தன் அடையாளமாக்கிக் கொள்கின்றன. பெண் என்பவள் அதுதானா; கருத்தரிப்பும் மறு உற்பத்தியும்தான் ஒரு பெண்ணை முழுமையானவள் ஆக்குகிறதா? பெண்களின் அடையாளமாக இவற்றை வைப்பது, போராடி, எல்லா தடைகளையும் உடைத்து கடந்து பயணம் செய்து, கடைசியில் ஆண்கள் பெண்களை நிறுத்திய இடத்திலேயே நாமும் போய் நிற்பது போல்தான் ஆகும்.
தீராநதி: ஆண் எழுத்து - பெண் எழுத்து, ஆண் மொழி - பெண் மொழி என்று தனித்து பார்ப்பதை சரி என்று கருதுகிறீர்களா?
கனிமொழி: எனக்கு அதில் உடன்பாடில்லை. பெண் எழுத்து, பெண் மொழி என்று தனித்து இருக்கமுடியும் என்றும் தோன்றவில்லை. பெண்களுக்கு மட்டுமேயான பிரத்யேக மொழி, பிரத்யேக பிரச்னை என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்கும் ஒரு பெண்ணின் மொழி, வேலைக்குச் சென்று திரும்பி பலருடனும் பழகும் வாய்ப்பு கிடைத்த ஒரு பெண்ணின் மொழி, இவர்கள் இரண்டு பேரும் இல்லாத மற்றொரு பெண்ணின் மொழி இவைகள் எல்லாமே வேறுவேறானவை. இவர்கள் அனைவரையும் ஏதோ ஒரு கோடு இணைக்கிறது என்பதையும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. பெண் மொழி என்ற வார்த்தையே ஆணின் உருவாக்கம் என்றுதான் நான் நினைக்கிறேன். மீண்டும் பெண்ணை ஒரு வட்டத்துக்குள் கொண்டு போய் அடைத்து விடும் முயற்சி இது. பெண் மொழி அன்பையும் இயற்கையுடன் ஒட்டிய வாழ்வையும் சொல்கிறது. ஆண் மொழியில் வன்முறை இருக்கிறது என்கிற விதமாகவும் விமர்சனம் முன் வைக்கப்படுகிறது. பெண்கள் நல்லவர்கள் என்று சொல்வது ஆணின் கருத்தாக்கம் அல்லாமல் வேறு என்ன? எனக்கு தவறுகள் செய்வதுக்கான சுதந்திரத்தைக்கூட இது மறுக்கிறது. எனக்குள்ளும் வன்முறை இருக்கிறது. ஒரு ஆண் எவ்வளவு மோசமாக நடந்துகொள்வானோ, அவ்வளவு மோசமாக என்னாலும் நடந்துகொள்ள முடியும். எனக்குள்ளும் குரூரமும் வெறுப்பும் கோபமும் இருக்கிறது. பெண் இயற்கையை சுரண்டாதவள் என்பதில் உண்மை இருக்கிறதா?
தீராநதி: தமிழ்ப்பெண் கவிஞர்கள் தங்கள் மீது வைக்கப்படும் விமர்சனங்களை தர்க்கபூர்வமாக அல்லாமல் உணர்ச்சி பூர்வமாகத்தான் எதிர்கொள்கிறார்கள். இதனை சரி என்று கருதுகிறீர்களா?
கனிமொழி: தமிழ்ப் பெண் கவிஞர்கள் மட்டுமல்லாமல், தமிழ் ஆண் எழுத்தாளர்களும் தங்கள் மீதான விமர்சனங்களை உணர்ச்சி பூர்வமாகத்தான் எதிர் கொள்கிறார்கள். விமர்சனம் வைக்கும் போதும் உணர்ச்சிபூர்வமான இடத்தில் இருந்துதான் அதை எதிர் கொள்கிறார்கள். மிக மூத்த எழுத்தாளர்கள் முதல் இளைய தலைமுறை எழுத்தாளர்கள் வரை யாரும் இதற்கு விதிவிலக்கல்ல. எழுத்து மீது வைக்கப்படும் விமர்சனமோ, எதிர்க்கருத்தோ, முரணோ எல்லாமே தனிப்பட்ட முறையில் தன் மீதான தாக்குதலாகத்தான் இங்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. இலக்கிய செயல்பாடு என்பதே குழுக்களாகத்தானே தமிழில் உள்ளது. ஒருவரிடம் பேசினால் இன்னொருவரிடம் பேசக் கூடாது; அல்லது முடியாது. அது போல் ஒரு பத்திரிகைக்கு எழுதினால் இன்னொரு பத்திரிகைக்கு எழுதக்கூடாது. அறிவுபூர்வமான தளத்தில் விமர்சனங்கள் இயங்குவது என்பது தமிழில் மிகக்குறைவு. இது நிச்சயம் ஆரோக்கியமானது இல்லை.
தீராநதி: உலகமயமாக்கல், அதனால் உலகம் முழுக்க ஏற்பட்டுள்ள மாற்றங்கள், குறிப்பாக தமிழர்கள் வாழ்வில் நிகழ்ந்துள்ள மாற்றம் என்று எதுவும் தமிழ்க் கவிதையில் பதிவாகவில்லை. அரசியல் கவிதைகளும் தமிழில் அதிகம் எழுதப்படுவதில்லை. இதற்கு என்ன காரணம்?
கனிமொழி: பொதுவாகவே தமிழ்க் கவிதை ஒரு சில விஷயங்களை மட்டும் எடுத்துக் கொண்டு அதனைச் சுற்றிச்சுற்றியேதான் வந்து கொண்டு இருக்கிறது. அதனைக் கடந்து ஒரு பரந்த பார்வையும் வெளிப்பாடும் நம் கவிதைகளுக்கு இல்லை. நான் என் கவிதைகளையும் சேர்த்துதான் இதனைச் சொல்கிறேன். கவிதை மட்டுமல்லாமல் நம் எல்லா இலக்கிய வடிவங்களுக்கும் இது பொருந்தும். இது நிச்சயம் பெரிய பிரச்சனைதான். உலகமயமாக்கலை எல்லா கோணங்களிலும் ஆரோக்கியமாக நாம் பார்க்கவே இல்லை. சாதிப் பிரச்னை போன்றவைகள் நேரடியாக நம்மைத் தாக்குவது போல் உலகமயமாக்கல் நம்மைத் தாக்கவில்லை. அதனைப் புரிந்து கொள்ளக்கூடிய அளவுக்கு நமக்கு வாய்ப்புகள் இல்லாததும் ஒரு காரணமாக இருக்கலாம். எப்போதுமே உலகத்தில் நடக்கிற நிறைய விஷயங்களை நாம் உள்வாங்கிக் கொள்வதில்லை. ஒரு சின்ன வட்டத்துக்குள்ளேயே நமது உலகம் சுருங்கிவிட்டது.
தீராநதி: தலித் அரசியல் பேசுபவர்கள். திராவிட இயக்கத்தை தலித்துக்களுக்கு எதிரான ஒரு இயக்கமாக இன்று முன் வைக்கிறார்கள். குறிப்பாக இடைநிலை சாதியினருக்கான ஒரு இயக்கமாகத்தான் திராவிட இயக்கம் இருந்தது என்பது அவர்களது விமர்சனம். இது குறித்த உங்கள் கருத்து என்ன?
கனிமொழி: திராவிட இயக்கம், தலித்துகளுக்கு எதிரான இயக்கம் என்பதை நிச்சயம் ஏற்றுக் கொள்ள முடியாது.
தீராநதி: பிராமண எதிர்ப்பை ஆதாரமாகக் கொண்டுதான் திராவிட இயக்க சீர்திருத்த கருத்துகள் அமைந்திருந்தன. பிராமண எதிர்ப்புக்கு இன்றைக்கும் தேவை இருக்கிறது என்று கருதுகிறீர்களா?
கனிமொழி: பிராமணியம் என்பது ஒரு ஜாதிக்குள் மட்டும் இருக்கிற விஷயம் இல்லை. அதனைக் கடந்து எல்லா ஜாதிக்குள்ளும் இருக்கிற விஷயமாக இன்று அது ஆகிவிட்டது. சமஸ்கிருதமயமாக்கலை எதிர்க்கிறேன் என்று சொல்பவர்கள் அனேகம் பேரிடம்கூட அதனைப் போற்றும் தன்மைகள் இருப்பதை நான் பல சந்தர்ப்பங்களில் கண்டிருக்கிறேன். உதாரணமாக சைவம் சாப்பிடுபவர்களுக்கு கொடுக்கப்படுகிற மரியாதை, உடன் உட்கார்ந்து அசைவம் சாப்பிடுபவர்கள் அவர்கள் முகம் சுளித்துவிடக்கூடாது என்பதில் எடுத்துக் கொள்ளும் கவனம், அக்கறை இவைகள் எல்லாம் சாதாரணமாக பார்க்க கிடைப்பவைகள். இந்த மனப்பான்மை நமக்குள் இருக்கும் பிராமணியத்தின் வெளிப்பாடுகள் அல்லாமல் வேறு என்ன? இது போல் நிறைய விஷயங்கள் நமக்குள் இருக்கிறது. இது தான் நிச்சயம் எதிர்க்கப்பட வேண்டிய விஷயம் என்று நான் நினைக்கிறேன்.
தீராநதி: சமீபத்தில் அசோகமித்திரன், தமிழகத்தில் பிராமணர்கள் யூதர்களைப் போல் வாழ்வதாகவும் மரபாக வந்த அவர்களது உரிமைகள் பறிக்கப்பட்டுவிட்டன என்றும் குறிப்பிட்டார். அடுத்த சில நாட்களில் ஜெயகாந்தன் வர்ண வேறுபாடுகள் அவசியம்தான் என்றும் சமஸ்கிருதத்தை எதிர்த்த தனித்தமிழ் இயக்கத்தவர்களை நாய்கள் என்றும் சொன்னார். சக படைப்பாளி என்கிற வகையில் இது குறித்து என்ன சொல்ல விரும்புகிறீர்கள்.
கனிமொழி: யூதர்கள் வாழ்ந்த வாழ்க்கையுடன், தமிழக பிராமணர்களின் வாழ்க்கையை ஒப்பிடமுடியுமா என்பது குறித்து அசோக மித்திரனுக்கே ஒரு நியாயம் இருக்க வேண்டும். தான் சொல்வது நியாயமான தர்க்கமா என்று அவரையே அவர் கேட்டுக் கொள்ள வேண்டும். ஜெயகாந்தன் பேச்சைப் பொறுத்தவரைக்கும் ஒரு பரபரப்பை உருவாக்குவதுதான் அவர் நோக்கம் என்று நினைக்கிறேன். அந்த அவசியம் இல்லாதவர் அவர். அதனைக் கடந்து சாதித்திருக்கும் ஒருவர் அவர்.
தீராநதி: இங்கு அரசியல், பெண் விடுதலைக்கு என்ன செய்திருக்கிறது என்று கருதுகிறீர்கள்?
கனிமொழி: பெரும்பாலான அரசியல் தலைவர்கள் மிகவும் மேம்போக்கான ஒரு பெண் விடுதலையைப் பற்றிதான் பேசிக் கொண்டிருக்கிறார்கள். நாய்க்கு பிஸ்கட் தூக்கிப் போடுவது போன்றதுதான் அவர்கள் பேசும் பெண்விடுதலை. பெண் விடுதலை பற்றி ஒரு புரிதல் அவர்களுக்கு இருக்கிறதா என்பது சந்தேகத்துக்கு இடமானதுதான். அவர்களுக்குத் தெரிந்த பெண் விடுதலை என்பதே ஐயாயிரம், ஆறாயிரம் பேர்கள் என்று கல்யாணம் செய்து வைப்பது, தாலி கொடுப்பது என்பதுதான். கொஞ்சம் அறிவுஜ“விகளாக காட்டிக் கொள்பவர்கள் பாரதியின் புதுமைப் பெண் பற்றி கர்ஜிப்பார்கள் ஆனால் பெண் விடுதலையைப் பொறுத்தவரைக்கும் பாரதிக்கும் ஒரு எல்லை இருக்கிறது. ''காதலன் ஒருவனைக் கைப்பிடித்து அவன் காரியம் யாவிலும் கைகொடுத்து'' என்றுதான் அவர் சொல்கிறார். அவருடைய கட்டுரைகளில் இப்போது நம்மால் ஜ“ரணிக்க முடியாத பல விஷயங்கள் உள்ளன. அவர் காலத்தில் அவை ஒரு புரட்சிகரமான கருத்தாக இருந்திருக்கலாம். பாரதியையும் கடந்து சிந்தனையும் வாழ்க்கையும் இருக்கிறது. தமிழ் சிந்தனையாளர்களின் பெண் விடுதலையைப் பொறுத்தவரைக்கும் எந்தத் தடைகளையும் எல்லைகளையும் வைத்துக் கொள்ளாதவர் என்று பெரியாரைச் சொல்லலாம். ஒரு முழுமையான பெண்ணியவாதியாக நான் பெரியாரைப் பார்க்கிறேன். எல்லா தழைகளையும் கடந்து பெண் விடுதலை குறித்து சிந்தித்தவர், நமது சமூகத்தைப் பொறுத்தவரை பெரியார். ஆனால் அதற்கென்று பெரியார் சொன்னவற்றைக் கடந்து பெண் விடுதலை போகக்கூடாது என்று கிடையாது.
தீராநதி: நீங்கள் பிரபலமாக இருப்பதுக்கும் உங்கள் படைப்புகளுக்கு கிடைத்திருக்கும் வரவேற்புக்கும் உங்கள் படைப்புகள் மட்டும் காரணமா அல்லது உங்கள் பின்புலம் காரணமா என்பது குறித்த கேள்வி உங்களுக்கு இருக்கிறதா?
கனிமொழி: நிச்சயமாக நான் பிரபலமாக இருப்பதுக்கு என் பின்புலம்தான் காரணம் என்று உறுதியாக நம்புகிறேன்.
தீராநதி: அதனை அசௌகரியமாக உணர்கிறீர்களா?
கனிமொழி: நீங்கள் இந்த நேர்காணலை என் எழுத்துகளுக்காக மட்டும் செய்கிறீர்களா அல்லது அப்பாவுக்காக செய்கிறீர்களா என்று எனக்கு சந்தேகம் இருக்கிறது. எனக்குக் கொடுக்கப்படுகிற இடம் எனக்கானதா அல்லது என் பின்புலத்துக்கானதா என்ற குழப்பம் நிச்சயமாக அசௌகரியமானதுதான்.
நன்றி: தீராநதி 2005
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக