ஒரு சதுர கஜம் எட்டரை விலைக்கு நிலம் வாங்கி வீடு கட்டினாராம் கிஷனின் அப்பா. ரயில்பெட்டித் தொடர் மாதிரி வரிசையாய் அறைகள். எல்லா அறைகளும் முடிந்தபின் போனால் போகிறது என்று ஒட்டவைத்தாற்போல் ஒரு சமையலறை. இரு ஜன்னல்கள். ஒரு ஜன்னலின் கீழ், குழாய் வைத்த தொட்டி, ஒரு பெரிய தட்டுக்கூட வைக்க வகையில்லாமல் குறுகியது. கீழே, செங்கல் தடுப்பு இல்லாத சாக்கடை முற்றம். மேலே குழாயைத் திறந்ததும் கீழே பாதங்கள் குறுகுறுக்கும். பத்து நிமிடங்களில் ஒரு சிறு வெள்ளக்காடு காலடியில். அதில் நின்று நின்று அடிப்பாதம் எல்லாம் வெடிப்புக் கீறல்கள். சமையலறையில் அடி வைத்து, முதல் நாள் சமைத்து, கைக்குத் தங்க வளையல் போட்ட உடனேயே வெடிப்புக்குத் தடவ ஒரு மெழுகுக் களிம்பு தந்து விடுவாள், ஜீஜி என்று எல்லோரும் கூப்பிடும் கிஷனின் அம்மா.
சமையலறையின் கிழக்குப்புறம் பார்த்த ஜன்னல் வழியே பச்சை மலைகள். மேலே ஒரு வெள்ளைப் பொட்டுக் கோயில். பிள்ளையார் கோயில். அந்த ஜன்னலின் கீழேதான் சமைக்கும் மேடை. வெடிப்புப் பாதங்கள் பச்சை மலையில் உறுத்தாமல் இருந்திருக்கலாம். ஆனால் அந்த ஜன்னல் வெளியேதான் துணி உலர்த்தும் கொடி. கால்சராய், சட்டை, பைஜாமா, புடவை, பாவாடை விரிந்து ஜன்னலை மறைக்கும்.
கொத்தமல்லிப் பொடி, காரப் பொடி, கரம் மசாலாப் பொடி தூவி,அரைத்த பசு மஞ்சளும், இஞ்சியும் தடவப்பட்டுத் தயிரில் ஊறிய மாமிசத் துண்டங்களைக் கிளறி நிமிர்பவர்களை எதிர்கொள்வது ஒரு நாடா தொங்கும் பைஜாமாவாக இருக்கலாம். இதில் யாருக்கும் ஆட்சேபணை இருப்பதாகத் தெரியவில்லை. அவர்கள் வாழும் பாங்கு சமையலறையைச் சுற்றியே இருந்தது. சமையலறை என்ற தத்துவத்தை ஒட்டி, சாப்பாட்டுப் பிரியர்கள் - மதுப் பிரியர்கள் என்றே பெயரெடுத்த வம்சம். அனுபவிப்பவர்கள். உல்லாசிகள். பார்க்கப்போனால் இவர்கள் கல்யாணத்தில் அஜ்மீர் உறவினர்களுக்குக் கொஞ்சம்கூடப் பிடிக்காத விஷயம் யாருக்கும் எந்தவித மதுபானமும் குடிக்கத் தரவில்லை என்பதுதான்.
குலதெய்வம் அம்பாவுக்குக்கூட மதுதான் பிரஸாதம். ஸ்காட்சிலிருந்து நாட்டுச் சரக்குவரை எதைத் திறந்தாலும் சுவரில் தெளித்து “ஜெய் அம்பே” சொல்லிவிட்டுத்தான் குடிப்பது. பிறந்த குழந்தையின் வாயில் முதலில் மதுவில் முக்கிய விரலைத்தான் இடுவது. அப்படி இருக்கும்போது இப்படிக் கல்யாணம் செய்துகொண்டால்? சரி. ரம், ஜின், விஸ்கி வேண்டாம். அஜ்மீரிலேயே தயாராகும் ஆரஞ்சு வண்ணக் கேஸர் கஸ்தூரி இல்லையா? மண்டையைப் போய் ஒரு உதை உதைக்குமே? சே சே. இது என்ன இப்படிக் கல்யாணம் செய்துகொண்டாய் என்றார்கள் அவனிடம். வீரனுக்கு லட்சணமான குதிரையும் மதுவும் இல்லாமல் ஒரு கல்யாணமா? ராட்சஸப் பூக்கள் வரைந்த கடும் செம்மண், பச்சை, ஆரஞ்சு, சிவப்பு வண்ணப் பாவாடைகள் இடுப்பிலிருந்து உப்பிப் பருத்த பிருஷ்டங்களின்மேல் மடங்கி மடங்கிச் சரிய, வெள்ளி நிறச் சரிகைகள் இட்ட முக்காடுகளைத் தூக்கி வயதான பெண்கள் அவனிடம் கேட்டார்கள்: குடிக்க ஒன்றுமில்லையா?
ஜீஜி நடமாடிக்கொண்டிருந்தபோது டாணென்று மாலை ஏழு மணிக்கு அப்பளம் சுட ஆரம்பித்துவிடுவாள். பப்பாஜி வெளியறை முக்காலியில் மற்ற விஷயங்களை வைத்துவிட்டுத் தயாராக இருப்பார். ஜீஜி கார அப்பளம் தட்டில் அடுக்கி வைத்து வருவாள். கார அப்பளம் தீர்ந்ததும் நாக்கில் சுள்ளென்று உறைக்கும் பிகானீர் ஸேவ். அது அலுத்தால் சோளப் பக்கோடா. அல்லது மிளகாயும் கடலை மாவும் தடவிப் பொரித்த நிலக்கடலை. எதிரெதிரே அமர்ந்து ‘ஜெய் அம்பே’ என்று விட்டு ஆரம்பிப்பார்கள். பிள்ளைகளும் பெண்களும் இருந்தால் குடும்பத்தோடு சிரித்துக்கொண்டு. ஜீஜி நாட்டுப் பாடல்கள் பாடுவாள் - ‘சந்தைக்குப் போனால் எனக்கொரு குஞ்சலம் வாங்கி வா.... நல்ல வண்ணத் தாவணி வாங்கிவா....’ ‘இன்னமுமா ஆசை?’ என்று பப்பாஜி சிரிப்பார்.
சமையலறை மூலையில் ஒரு கும்மட்டி அடுப்பில் சாய் செய்யத் தண்ணீர் கொதித்தவாறே இருக்கும். சாப்பிடும் சமயத்தில் வீட்டு வாசலில் யாராவது தெரிந்தவர் வந்துவிட்டால் முதலில் ‘ஜில்’லென்று தண்ணீர்.
“சாப்பிடுங்களேன். சாச்சாவுக்கு ஒரு தட்டு கொடு” என்று ஆரம்பிப்பார் பப்பாஜி.
“இல்லை. சும்மா இப்படி வந்தேன்.”
“சரி, சாய் குடிக்க என்ன வந்தது?”
“வேண்டாமே.”
“காஃபி?”
“தண்ணி போதும்.”
“அதெப்படி வெறும் தண்ணி. கொஞ்சம் ஷர்பத் போட்டுக் குடியுங்கள்.”
"சரி.”
ஜீஜி எழுந்திருப்பாள்.
“அப்படியே ஒரு தட்டில் ரெண்டு கபாப் கொடு.”
ஜீஜி சமையலறையை எட்டும்முன் காலையில் செய்த வெந்தயக் கீரை பரோட்டா பப்பாஜிக்கு நினைவு வரும். “ஸுனியேஜி” என்று மனைவியை விளிப்பார். “அந்த மேதி பரோட்டாவும் ரெண்டு சூடாக்கி எண்ணெய் தடவிக் கொண்டுவா. சாச்சா ருசி பார்க்கட்டும்” என்பார்.
வந்தவர் தோல்வியை ஒப்புக்கொள்வார்.
“நான் சாப்பிட்டே விடுகிறேன்.”
ஜீஜி எப்படியும் சமையலறைக்குப் போவாள். இரண்டு முட்டைகள் மிளகும் உப்பும் தூவிப் பொரிக்க. ஒருவேளை, சாப்பாட்டு அளவில் ஏதாவது குறைந்துவிட்டால்?
ஆனால் சமையலறை என்ற பௌதிக விவரம் அவர்களைப் பாதிக்கவில்லை. அப்படிப்பட்ட ஒன்று இல்லாததுபோல் இருந்தார்கள். அவர்கள் கூட்டுக் குடும்ப வீடுகளில் பரந்த கல்தரை முற்றம், கூடம் இவற்றைத் தாண்டிய இருள் மூலை சமையலறை. பூஜ்ய வாட் விளக்கு எரியும் அங்கு. முக்காடு அணிந்து, அழுத்தமான வண்ணப் பாவாடைகள் இருளை ஒட்டியே இருக்க, பெண்கள் நிழல்களாய்த் தெரிவார்கள் அந்த அறையில். அறைந்து அறைந்து சப்பாத்தி மாவு பிசைந்துகொண்டோ, அடுப்படியில் கும்மென்று மணக்கும் மஸாலா பருப்பைக் கிளறியவாறோ. சமையலறை ஒரு இடம் இல்லை. ஒரு கோட்பாடு மட்டுமே. அத்தனை ருசியான, நாக்கை அடிமைப்படுத்தும் சாப்பாடும் மாயக் கம்பளத்தில் வந்ததுபோல் அலட்டிக்கொள்ளாமல் இருந்தார்கள்.
மீனாட்சிதான் ஒரு முறை சாப்பிடும் நேரத்தில் அந்த விஷயத்தைப்பற்றிப் பேச ஆரம்பித்தாள், பப்பாஜி அப்போது கீழே இருந்த கார் ‘ஷெட்’டின் மேல் ஒரு அறை கட்டிக்கொண்டிருந்தார்.
“பப்பாஜி, சமையலறைக்கு வெளியே உள்ள தாழ்வாரத்தைப் பெரிதுபண்ணிவிடுங்களேன். அதை நீங்கள் அகலமாக்கினால் நாற்காலி போட்டு உட்காரலாம். இடது பக்கம் ஒரு பாத்ரூம் கட்டினால் அதில் பெரிய தொட்டி போடலாம். பாத்திரம் தேய்க்க. பாத்ரூமுக்கு வெளியே துணி உலர்த்த அலுமினியக் கம்பி போட்டு விடலாம்.”
பப்பாஜி இந்த அபிப்ராயத்தால் தாக்கப்பட்டவர்போல் பார்த்தார்.
ஜீஜியும் வியப்படைந்தவள்போல் அவரைப் பார்த்தாள். மருமகள்கள் இதுவரை இப்படிப்பட்ட அபிப்ராயங்களை முன்வைத்ததில்லை. ராதா பாபிஜி, தட்டை வெறித்துப் பார்த்தாள். குஸுமா தலை முக்காட்டைச் சரி செய்துகொண்டாள், அவள் படபடப்பை மறைக்க. பப்பாஜி கிஷனை நோக்கினார். அவன் நிதானமாகச் சாப்பிட்டவாறிருந்தான்.
பப்பாஜி தொண்டையைச் செருமிக்கொண்டு, “எதற்காக?” என்றார்.
“இந்த சமையலறைத் தொட்டி ரொம்பச் சின்னது. தண்ணி வேறு சரியாகப் போவதில்லை. வேலைக்காரி அங்கேயே பாத்திரம் தேய்த்தால் சமையலறை முழுவதும் தண்ணீர். நிற்க முடியவில்லை. ஜன்னலுக்கு வெளியில் துணி தொங்கினால் மலையை மறைக்கிறது பப்பாஜி.”
கிஷனைப் பார்த்தார் மீண்டும். அந்தக் கட்டடக் கலை நிபுணன் தன் மனைவியோடு உடன்பட்டான்.
“அவள் சொல்வது சரிதான் பப்பாஜி. அப்படியே செய்து விடலாம்.”
“நீ எங்கே சமையலறைப் பக்கம் போனாய்?”
“அவள் மைசூர் சமையல் செய்யும்போது இவன்தான் மிளகாய், வெங்காயம் அரிந்தான்” என்றாள் ஜீஜி.
“பேசாமல் உனக்கே தங்க வளையல் போடலாம் போலிருக்கிறதே.”
“தங்கவளை எதற்கு பப்பாஜி. மோதிரம் போடுங்கள்.”
பப்பாஜி சிரித்தார்.
அறை கட்டி முடித்தாகிவிட்டது. சமையலறை நிலவரம் மாற்றப்படவில்லை. துணி உலர்த்த இன்னும் இரண்டு நைலான் கயிறுகள் கட்டப்பட்டன, ஜன்னல் எதிரே. பப்பாஜியின் மௌனச் சவால்: பெண்ணே, மைசூர்ப் பெண்ணே, இங்கே நிரந்தரமாக வாழாத உனக்கு மலை எதற்கு? அதன் பச்சை எதற்கு? ராஜஸ்தானத்து சமையல் பண்பாட்டுக்கும் ஜன்னலுக்கும், பாத்திரம் அலம்பும் தொட்டிக்கும், என்ன சம்பந்தம் பெண்ணே. கறுத்த நிறமுடைய, முக்காடு அணிய மறுக்கும், என் பையனை வசியப்படுத்திய, நிறையப் பேசும் பெண்ணே...
***
பின்னிரவு மூன்று மணி வாக்கில் மயில்கள் அகவ ஆரம்பித்தன. ஒன்றன்பின் ஒன்றாக. கர்ண கடூரமாக. குரல் இழந்த சாதகம். ஐந்தரை மணிக்கு அவளும் கிஷனும் மொட்டை மாடி போனபோது எதிரே மரத்தில் சிவன் விரித்த ஜடையாய் மயில் வால் தொங்கியது. கரு நீலமும், மென் பச்சையும், தீர்க்கப் பச்சையும் பளீரிடத் திரும்பியது. எதிர்பாராதபோது பறந்து மொட்டைமாடிச் சுவரில் அமர்ந்து வாலை நீட்டிப்போட்டது. பிறகு, இரண்டு மொட்டை வால் மயில்கள். திரும்புவதற்குள் இன்னும் இரண்டு, சாட்டை வால்களுடன். வயிற்றினுள் ஒரு மென் தன்மை இதமாய்ப் பரவியது. காலைக்கடன்களை முடித்ததும் வயிற்றுக் கனம் அகலும் இதம். அந்தக் கருநீலப் பச்சை ஐஸ் துகள் சிலீருடன் எல்லா அடங்காச் சூட்டையும் தணித்தது. கிஷனின் உதடுகளில் ஒரு முறை நாக்கால் தடவி மென்மையாக முத்தமிட்டாள். பனித்துளி ஒட்டிய, அடித்தளச் சூட்டை இனம் காட்டிய முத்தம்.
மொட்டை மாடிக் கதவு கிர்ரிட்டது. படி ஜீஜி (பெரிய ஜீஜி) எழுந்தாயிற்று. கதவருகே இருந்த பெரிய ட்ரம்மிலிருந்து கரி எடுக்க வந்திருப்பாள். கும்மட்டி அடுப்புப் பற்றவைக்க. படி ஜீஜி பப்பாஜியின் சிறிய தாயார். பப்பாஜிக்கு பதினேழு வயதாகும்போது அவருடைய தந்தை இன்னொரு திருமணம் செய்து கொண்டார் ஒரு பதினேழு வயதுப் பெண்ணை. ஐந்து பெண்கள் பெற்றாள். பப்பாஜிதான் ஆதரவு. பெர்யர்தான் படி ஜீஜி. அவளுக்கும் ஜீஜிக்கும் இடையே இரண்டே வயதுதான் வித்தியாஸம். பொக்கை வாய். பொய்ப் பல் வேண்டாம் என்று விட்டாள். மாமிஸம் சாப்பிடுவதை விட்ட பின்னர் எதற்குப் பல் என்று கூறிவிட்டாள்.
காலில் அணிந்த கனத்த வெள்ளித் தண்டை படியில் இடிக்க, போய்விட்டாள் படி ஜீஜி.
”சாய் கொண்டு வரட்டுமா மீனா?”
”ம்.”
கிஷன் போனதும் மாடி இரும்புத் தொட்டிக் குழாயைத் திறந்து முகம் கழுவி, பல் தேய்த்தாள்.
தொப்பியால் மூடிய கெட்டிலில் சாய் கொண்டுவந்தான் கிஷன். கீழே வைத்து இரு கோப்பைகளில் சாய் ஊற்றியபோது இஞ்சி, துளசி மணம் பரவியது. ஒரு காலை நட்சத்திரம் மினுக்கியது. மயில் நீலப் பச்சையில் தெறித்தது. சாய் தொண்டையில் சூடாய் இறங்கியது.
கீழே போனபோது சமையலறை மூலையில் பெரிய பித்தளை டம்ளரில் கிஷன் ஊற்றித் தந்திருந்த சாயை முக்காட்டுத் தாவணித் துணியால் பிடித்தவாறு அமர்ந்து, ஊதி ஊதிக் குடித்துக்கொண்டிருந்தாள் படி ஜீஜி. ராதா பாபிஜி இன்னொரு பெரிய கெட்டிலில் சாய்த் தூளைப் போட்டுச் சுடுதண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தாள்.
“நாஸ்தாவுக்கு மாவு பிசையட்டுமா?” என்றாள் படி ஜீஜி.
“பப்பாஜி உலவப் போயிருக்கிறார். சமோசாவும் ஜிலேபியும் வாங்கி வருவார். ரொட்டி வாட்டினால் போதும், அதை நான் வெளியில் டோஸ்ட் செய்துகொள்கிறேன். இன்றைக்கு என்ன நம் சமையலா, இல்லை மைசூர் சமையலா?”
“அவளும் கிஷனுமாய் நேற்று காய்கறியும் தேங்காயும் வாங்கி வந்தார்கள்.”
“என்ன தேங்காய் சமையல் சப்புச்சப்பென்று? நீங்கள் ஒன்று செய்யுங்கள், படி ஜீஜி. மஞ்சளும் இஞ்சியும் அரைத்துவிடுங்கள். மட்டன் புலாவ் செய்துவிடலாம். சுரைக்காய் துருவிவைத்து விடுங்கள். கோஃப்தா செய்துவிடலாம். சேப்பங்கிழங்கைத் தொலி சீவிவிடுங்கள். பெரிய ஏலம், மிளகு, லவங்கப்பட்டை, தனியா, லவங்கம் இடித்துவிடுங்கள். நல்லா நைஸாக. தனியாவை வேறாக எடுத்து இடியுங்கள் கொஞ்சம். ராத்திரி ஆலு-கோபிக்குப் போடலாம்.”
சமையலறைக்கு வெளியே வந்தாள் சாய் கெட்டிலும் கோப்பைகளும் வைத்த தட்டை ஏந்தியவாறு.
“என்ன மீனா. இன்றைக்கு என்ன சமைக்கப் போகிறாய்?”
“எதுவும் இல்லை. நாங்கள் கணேஷ் மந்திர் மலையில் ஏறப்போகிறோம்.”
”சரிதான்.”
மீனாட்சி சமையலறையில் நுழைந்தாள் இரண்டாம் ஈடு சாய் தயாரிக்க.
படி ஜீஜி பொக்கை வாய் திறந்து சிரித்தாள். தன் பித்தளை டம்ளரை நீட்டினாள்.
“எனக்கும் சாய்.”
“இஞ்சி போடவா படி ஜீஜி?”
“ம். போடு. எனக்கு, நீ போடும் சாய் பிடிக்கும்.”
“சமோசாவும் ஜிலேபியும் வாங்கி வந்திருக்கிறேன். கொஞ்சம் ஜிலேபியைப் பாலில் போடுங்கள்” என்று ஒரு பொது உத்தரவு வெளியிலிருந்து வந்தது. மீனாட்சி ஜிலேபிப் பொட்டலத்தைச் சமையலறைக்குக் கொண்டுவந்து பிரித்தாள்.
”உஷ்..... இதோ.... இதோ....”
மீனாட்சி திரும்பினாள். “எனக்கு நாலு குடு” என்றாள் படி ஜீஜி.
அது ஒரு உணவுப் போர். நிதர்சனமாகப் பங்குபெறுவோர் - ஜீஜி, படி ஜீஜி. தாத்தா உயிருடன் இருந்தபோது படி ஜீஜி கொடுங்கோல் ஆட்சி செய்தாள். மலை மலையாய்ச் சப்பாத்தி மாவு பிசைந்தாள் ஜீஜி. கூடை கூடையாய் வெங்காயம் அரிந்து கிலோ கணக்கில் மாமிசம் சமைத்தாள். மாலை வேளைகளில் படி ஜீஜி கேஸர் கஸ்தூரி குடித்தபோது அப்பளம் சுட்டாள். பக்கோடா செய்தாள். குடல் பொரித்தாள். தாத்தா இறந்தார். பத்து நாட்களில் சமையலறையில் ஜீஜிக்குப் பதவிப் பிரமாணம் நடந்தது. குங்குமம், வெற்றிலை, மது, மாமிசம் இவற்றுடன் படி ஜீஜியின் மற்ற சாப்பாடும் பறிக்கப்பட்டது. நிதம் நிதம் மாமிசம் சமைக்கப்பட்டது. மரக்கறி உணவு உண்பவர்களுக்கு (படி ஜீஜி மாத்திரம்தான்) ஜனநாயக உணர்வுடன் உருளைக்கிழங்கு வழங்கப்பட்டது. படி ஜீஜி இரவெல்லாம் ஏப்பம் விட்டுக் கொண்டும், உடம்பையே கிழிப்பதுபோல் குசுவிட்டுக் கொண்டும், கக்கூஸில் ‘உம் ஆ’ என்று முனகியவாறும் தன் போர்க்களத் தோல்வியைக் கொண்டாடிக்கொண்டிருந்தாள். மீண்டும் தாக்கப்படும்முன் அவள் இரண்டாம் போர்முனை ஒன்றைத் துவக்கினாள். ஆறு மாதத்திற்கு ஒரு முறை படி ஜீஜிமேல் அம்பா வர ஆரம்பித்தாள்.
ஜீஜியும் பப்பாஜியும் அவரவர் பானங்கள், சுட்ட அப்பளங்கள் இவற்றுடன் அமரும் மாலை வேளைகளை அம்பா தேர்ந்தெடுத்தாள். முதலில் அறையிலிருந்து ‘ஹே’ என்று குரல் கொடுத்தாள் அடி வயிற்றிலிருந்து. பதறி ஓடி வந்ததும் “என்னை மறந்தாயா?” என்று சீறினாள். தாழ்ந்து வணங்கி “உத்தரவிடுங்கள் அம்பே” என்று ஜீஜி சொன்னதும், “எனக்கான பானத்தைத் தா, கேஸர் கஸ்தூரி வேண்டும். ஒரு கிலோ பர்பி வேண்டும். வறுத்த இறைச்சி வேண்டும்.... அ... ஆ...” என்று கட்டளையிட்டாள். எல்லாம் தரப்பட்டதும் அம்பா “போங்கள் எல்லோரும்” என்று உத்தரவிடுங்கள். படி ஜீஜியின் அறையில் ஆரவாரம் கேட்கும் சற்று நாழிகை.
மறுநாள் காலை மதுவால் கனத்த கண் இமைகளைக் கஷ்டப்பட்டுத் திறந்து சமையலறையில் ஒரு பொக்கைவாய்ப் புன்னகையுடன் காட்சியளிப்பாள் படி ஜீஜி. “அம்பா கஷ்டப்படுத்திவிட்டாள்” என்பாள்.
படி ஜீஜியை வம்புக்கு இழுக்கலாம். அம்பாவைக் கேள்வி கேட்கும் தைரியம் ஜீஜிக்கு வரவில்லை.
“ஜிலேபி தா” என்றாள் படி ஜீஜி.
நாலு ஜிலேபிகளைத் தந்தாள் மீனாட்சி. வீட்டில் எல்லோருக்குமாக ஜிலேபி பிரிக்கப்படும்போது படி ஜீஜிக்கு அவள் பங்கு கிடைக்கும். இது ஆசையினால். ஆரம்பத்தில் இவற்றை அவள் எங்கேதான் வைக்கிறாள் என்று நினைத்தாள் மீனாட்சி. பிறகுதான் தெரிந்தது பல மடிப்புகள் தைத்த நாலு கஜப் பாவாடையினுள் அவள் இரு ஜேபிகள் தைத்திருந்தாள். அவற்றை மீனாட்சிக்குக் காட்டியிருக்கிறாள்.
தொப்பியால் சாய் கெட்டிலை மூடினாள்.
”மசாலா சாமான்களைத் தந்துவிட்டுப் போயேன்” என்றாள் படி ஜீஜி. ”நெய்யும் வேணும். மட்டன் புலாவ் செய்ய.”
இது சமீபத்தில் எழுந்த ஒரு புதுக்களம். ஜீஜியின் ஆஸ்த்மாவும், ரத்த அழுத்தமும் அவள் நடமாட்டத்தைக் குறைத்துவிட்டன. அவள் படுக்கை அருகே உள்ள மர பீரோவில் லவங்கம், குங்குமப்பூ, லவங்கப்பட்டை, மிளகு, திராட்சை, பெரிய ஏலம், ஏலக்காய், சர்க்கரை, நெய், முந்திரி எல்லாம் இருக்கும். அவளைத் தாண்டாமல் பீரோவை எட்ட முடியாது. அதை அடையும்முன் ஒரு கேள்விப் பட்டியல் நீட்டப்படும். எதற்காக நெய்? நேற்றுத் தந்தது என்ன ஆயிற்று? சப்பாத்திக்குத் தடவினதில் மீதி அரைக் கிண்ணம் இருந்தால் இப்போதைக்குக் கால் கிண்ணம் போதுமே? மசாலா சாமான்களைக் காட்டிவிட்டு எடுத்துப்போ. காஷ்மீரத்திலிருந்து வரவழைத்த குங்குமப்பூ. அதைப் புலவில் கொட்ட வேண்டாம். மரக்கறி சாப்பிடுபவர்களுக்கு என்ன காய்கறி? நேற்று சமைத்தது ஏதும் மீறவில்லையா அவர்களுக்கு? சாப்பிட்டுச் சாப்பிட்டுக் கக்கூஸ் போனால் யாருக்கு என்ன பயன்?
ஒளியற்ற, ஜன்னல் குறுகிய அந்தச் சமையலறையிலிருந்து, கடலில் வசிக்கும் ஆக்டபஸ் ஜந்துவின் எண்கால்போல் ஆதிக்கக்கரங்கள் நீண்டு வளைத்துப்போட்டன. கால்கள் இறுக இறுகக் கட்டுண்டு கிடந்தனர் ஆனந்தமாக. அவை இடுப்பை இறுக்கினால் ஒட்டியாணம் என்றும், காலைச் சுற்றினால் கொலுசு என்றும், தலையில் பட்டால் கிரீடம் என்றும் நினைத்துக் கொண்டனர் பெண்கள். நாலாபுறமும் கம்பிகள் எழும்பிய உலகில் புகுந்துகொண்டு அதை ராஜ்யம் என்று நினைத்து அரசோச்சினர். இன்று மட்டன் புலவு, நாளை பூரி மசாலா என்று பூமியைத் திருப்பிப் போடும் முடிவுகளை எடுத்தனர். பேடி அதிகாரம்.
ஜன்னலைத் திறந்து மலையையும், பச்சையையும், ஆகாசத்தையும், நீலத்தையும் உள்ளே இழுத்ததும் பலம் உறிஞ்சப்பட்டாற்போல் இளைத்தனர். வீணா மோஸியைப்போல். கிஷனின் சித்தி. ஐம்பது வயது. பதினைந்து வயதில் விதவை. ஒரு கிராமத்தில் டீச்சராக இருந்தாள். பள்ளிச் சொந்தக்காரர் வீட்டுத் தோட்டத்து மூலையில் ஒரு அறையும் சமையலறையும். அசோகமரம் வாசலில். சமையலறை பின்னால் சம்பக் மரம்.. வெள்ளைப் பூக்களும் மஞ்சள் தண்டுமாய், ஜன்னலை ஒட்டிய பூங்கொடிகள் உள்ளே நுழைந்துவிடும் சுதந்திரமாய். பசித்தால் சமையல். மாலையில் பக்கத்திலுள்ள குழந்தைகள் வந்துவிடும். டீச்சரைப் பார்க்க. இல்லாவிட்டால் அசோகமரத்துக் குயில் பாட்டு. ஆனால் வீணா மோஸி “நான் அதிகாரமற்றுப் போனேன்” என்பாள். ‘டீச்சர், டீச்சர்’ என்று சுற்றிக்கொள்ளும் குழந்தைகள். பள்ளியின் ஆரபக் கல்வியின் பூரணப் பொறுப்பு. நினைத்தால் வீசு நடை பஜார் வரை. நார்க்கட்டிலை அசோக மரத்தின் கீழே இழுத்துப்போட்டு கக்ஹூ கக்ஹூ என்று தாகம் தீரும்வரை குயில் தோழமை. காலையில் பின்கதவைத் திறந்ததும் தொடும் தூரத்தில் வெள்ளை மலர்கள். இருந்தும், வீணா மோஸிக்கு மூச்சு முட்டியது. வெட்ட வெளியில் எம்பியதும் மண்ணுக்காக வீறிட்டாள், யோனியும், கருப்பையும், மார்க்காம்புகளும் கல்லாகின. கனம், இழுப்பு, கீழ் நோக்கி விழுந்து விழுந்து, விழுந்து விழுந்து, மண்ணில் சரண். பாதங்களைப் புதைத்து அசைவற்று நிற்க.
***
ஏரியின் மூலையிலிருந்து வெள்ளை இறக்கைகள் நளினமாய்த் தாழ்ந்தும், உயர்ந்தும், சாய்ந்தும் நகர ஆரம்பித்தன. கண்ணில் பட்ட முதல் கணம் ஒரு சிறு வியப்பு மீனாட்சியினுள் சிதறியது. ஏரியின் முழு வீச்சிலும் சுழன்று நீரில் மிதக்கும்போது அந்தச் சிவப்பு அலகுகள் தூரத்தில் ஒளிர்ந்தன. பிறகு மீண்டும் எழும்பி வெள்ளை இறக்கைகளைச் சரேலெனப் பிரித்து இடமும் வலமும் சாய்ந்தும் எழுந்தும்.... வெகு அருகே, முகத்தின் அருகே இறக்கை வீச்சு, பவழ அலகு தட்டையாய் நீண்டு. ரஷ்யப் பறவைகள். ஆனா சாகர் ஏரியில் சில மாதங்கள் வரும் திடீர் விருந்தினராய்.
அதற்கு முந்தைய இரவுதான் ஏரிப் பயணம் தீர்மானிக்கப்பட்டது. எல்லா உறவினர்களுடனும் ஏரியைப் பார்க்கும் திட்டம். இருபது பேர்களுக்கு நூறு ஏரி. உருளைக்கிழங்கு ஸப்ஜி, தக்காளிச் சட்னி, ஸாண்ட்விச் நூறு, நொறுக்குத் தீனி, குழந்தைகளுக்கு நிரப்பப்பட்ட பால் புட்டிகள், ஃப்ளாஸ்க்கில் வெந்நீர். மாலையில் சூடாகப் பக்கோடா சாப்பிட ஒரு ஸ்டவ், ஒரு பாட்டிலில் எண்ணெய், கடலை மாவு, வெங்காயம், மிளகாய்ப் பொடி, உப்பு, பெரிய மிளகாய் - பஜ்ஜி போட - இத்யாதி. விடிகாலை நான்கு மணிக்குச் சமையலறை விளக்கு எரிந்தது. ஒரு பெரிய தாம்பாளத்தில் கோதுமை மாவைப் போட்டுப் பிசைய ஆரம்பத்தில் ஜீஜி. குஸுமா வாணலியில் எண்ணெயை விட்டு, பிசைந்த மாவை இட்டுப் பொரிக்கத் துவங்கினாள். ராதா பாபிஜி ரொட்டியில் வெண்ணெயும் சட்னியும் தடவ ஆரம்பித்தாள். ரொட்டிப் பொட்டலங்கள் அவளைச் சுற்றி, படி ஜீஜி நொறுக்குத் தீனிகளைப் ப்ளாஸ்டிக் பொட்டலங்களில் போட்டு ரப்பர் வளையத்தால் இறுக்கினாள். ஏரிப் பயணத்தின் இந்த அம்சத்தைப் பற்றி மீனா யோசித்திருக்கவில்லை.
“மீனா, எழுந்துவிட்டாயா?” என்றாள் ராதா பாபிஜி. கூந்தல் வியர்வையில் ஒட்டிக்கொண்டிருந்தது. “சாய் போடுகிறாயா?”
மீனா இவர்கள் எல்லோருக்கும் சாய் போட ஆரம்பித்தாள். துளசி இலையைப் போட்டாள் வெந்நீரில். பல் தேய்த்துவிட்டு வந்த கிஷன் கோப்பைகளைத் தட்டில் வைத்தான்.
ராதா பாபிஜி தனக்குத் தானே பேசிக்கொண்டிருந்தாள். “குழந்தைகளைக் குளிப்பாட்ட வேண்டும். ப்ளாஸ்டிக் பையில் ரெண்டு, மூணு ஜட்டி அதிகப்படியாய் எடுத்துக்கொள்ள வேண்டும். ப்ரியா சில சமயம் சொல்லாமலே போய்விடுவாள். புல்லில் விரிக்க ஐந்தாறு கம்பளங்களாவது சுருட்டி வைக்கவேண்டும். எத்தனை கைக்குழந்தைகள் மொத்தம்? நாலு. பால்டப்பா, க்ளாக்ஸோ மீனாவுக்கு. அர்ச்சனா குழந்தைக்கு லாக்டோஜன், மறக்காமல் பிஸ்கட் பொட்டலம். இதுக்கு உப்புதான் பிடிக்கும். இல்லாவிட்டால் வழியில் வாங்க வேண்டும். அழுது தொலைக்கும் இல்லாவிட்டால். இவருக்குப் பிடிக்காது. சர்க்கரை, ஸ்பூன் மறக்காமல். பரிமாறக் கரண்டி, தட்டுகள், குஸுமா, அந்த சோப் பாட்டிலை எடுத்துக்கொள், தட்டுக்கழுவ, அங்கே குழாய் உண்டு. படி ஜீஜி, வெங்காயம் ஒரு பத்து பதினைந்து அரிந்துவிடுங்கள். ப்ளாஸ்டிக் பொட்டலத்தில் போட்டுக்கொண்டு போனால் நிமிஷமாய் பக்கோடா. மீனா, ப்ளீஸ், குழந்தைகளைக் குளிப்பாட்டுகிறாயா?”
“பாபிஜி, ஆறு மணிதான் ஆகிறது. அழும் எழுப்பினால். கோபால் பாய் சாஹப் குளிப்பாட்டட்டுமே அப்புறமாய்.”
”ஆமாம். அவர் குளிப்பாட்டுவார், நினைத்துக்கொண்டு இரு.”
மீனா சாய் கோப்பையை நீட்டினாள். பித்தளை டம்ளரில் படி ஜீஜிக்கு விட்டுத் தந்தாள். ராதா பாபிஜி சலிப்புடன் பேசியது அவளுக்குப் புரிந்தது. ராதா பாபிஜி கணக்கில் புலி. அதில் மேல்படிப்பு மேற்கொள்ள வீட்டில் அனுமதிக்காததால் ஒரு வங்கியில் பெரிய பதவியில் இருந்தாள். வங்கியில் அவளுக்கு சகுந்தலாதேவி என்றே பெயர். சில மாதங்களுக்குமுன் அவளும் கோபால்பாய் ஸாஹபும் கிஷனையும், மீனாட்சியையும் ஜோத்பூருக்கு வந்து சில நாட்கள் தங்கும்படி அழைத்திருந்தனர். அங்குள்ள ஆஸ்பத்திரியில் கோபால்பாய் சாஹப் டாக்டர். நல்ல வெய்யில் காலம். மத்தியானச் சாப்பாடு இன்னும் ஆகவில்லை.
“இந்த ஊர் வெய்யில் எரித்துவிடும். ஒன்றும் செய்ய முடியாது. ராதா பாங்க் வேலைக்காக இரண்டு நாட்கள் போனாள். தவித்துவிட்டேன். சமையலறையில் நிற்க முடியவில்லை. இங்கே வேலைக்கு ஆளும் கிடைக்கமாட்டார்கள். ஒரு டீ போடக்கூட சமையலறையில் நிற்க முடியவில்லை என்றால் பார்த்துக்கொள் கிஷன்.”
கிஷன் மெள்ளச் சொன்னான்: “பாங்கில் பெரிய வேலை பார்க்கும் ராதா பாபிஜி இப்போது அதே சமையலறையில்தானே சமைத்துக்கொண்டிருக்கிறாள்?”
”ஆமாம் அதற்கென்ன? பெண்களுக்கு அதெல்லாம் சகஜம்தானே?”
கோபால்பாய் சாஹப் விடுமுறைக்கு வந்த வேளையில் சீக்கிரம் எழுந்து குழந்தைகளைக் குளிப்பாட்டுவார் என்று எதிர்பார்க்க முடியாதுதான்.
“ராதா பாபிஜி, எந்தப் புடவை கட்டிக்கொள்ளப்போகிறீர்கள்?” என்றாள் குஸுமா.
“அந்தச் சிவப்பு ஸில்க்தான். ராத்திரியே இஸ்திரி போட்டாகிவிட்டது. அவருடையது அப்புறம் குழந்தைகளுடய சட்டைகளுக்கும் போட்டுவிட்டேன்.”
”நான் அந்தக் கறுப்புப் பொட்டுப் போட்ட வெள்ளைப் புடவை கட்டலாம் என்று நினைத்தேன். ரவிக்கை இஸ்திரி போடவில்லை. மீனா, என் கறுப்பு ரவிக்கை தருகிறாயா?”
“எடுத்துக்கொள்ளேன். ஆனால் அது ஸ்லீவ்லெஸ்.”
“அடடா! அப்படியானால் என் ரவிக்கையை இஸ்திரி போடுகிறாயா மீனா? நான் ஸ்லீவ்லெஸ் போடமுடியாது. என் கை சுத்தமாயில்லை.”
“தலைப்பால் போர்த்திக்கொண்டு விடு பேசாமல். நீளத் தலைப்பு விட்டு. உன் கைக்கு அடியில் யார் வந்து பார்க்கப்போகிறார்கள்?”
”இதோ பார் மீனா. தமாஷ் பண்ணாதே. இஸ்திரி போடுகிறாயா?”
“சரி. சரி.”
மெதுவாகச் சுவரைப் பிடித்து நடந்து வந்து ஜீஜி ஊறுகாய் பரணியைத் திறந்தாள்.
“என்ன செய்கிறீர்கள் ஜீஜி, போய்ப் படுங்கள் பேசாமல்” என்று அதட்டினாள் ராதா பாபிஜி.
“ஊறுகாய் பிடிக்குமே எல்லோருக்கும். எடுத்து வைக்கிறேன்.”
”அங்கே சமையலறையில் என்ன சத்தம், தூங்கவிடாமல்?” என்று குரல் கேட்டது.
நச்சென்று மௌனம்.
ரகசியக் குரலில், “மீனா, சாய் அடுப்பில் உருளைக்கிழங்கை வேகப்போடுகிறாயா?”
“ராதா பாபிஜி, தாளித்து ப்ரஷர் குக்கரில் போடலாமே? வேகவிட்டு உரிக்கவேண்டாம்” குஸுமா கிசுகிசுத்தாள்.
“நீ செய் அதை. மீதி பூரி படி ஜீஜி பொரிக்கட்டும்.”
எட்டு மணி அளவில் கழுத்து, அக்குள் எல்லாம் வியர்வை மழை. ரவிக்கை ஒட்டிக்கொண்டது. எண்ணெய்ப் புகை கண்ணில். முழுத்தூக்கம் இல்லாமல் கனம் ஏறிய இமைகள். பப்பாஜி சமையலறையில் எட்டிப் பார்த்தார்.
”ஏரிக்குப் போகலாம் என்றதுமே உற்சாகம் பொத்துக்கொண்டு விடுமே உங்களுக்கு?” என்றார்.
அஹ்ஹா என்று சிரித்தார்.
சிறு சிறு பறவைகள் கக்ளக் என்றபடி நீரில் மிதந்தன கறுப்பும் மஞ்சளுமாய். திடீரென்று வெள்ளை இறக்கை வீச்சு. பவழ நிழலுடன்.
கம்பளங்களில் சீட்டுக் குலுக்கல். சிலவற்றில் பெண்கள். “மம்மீஜி, டட்டி” என்று பின்பாகத்தைப் பிடித்துக்கொண்டு குழந்தை சொல்லும்வரை. பழைய பேப்பரைக் கையில் ஏந்தியபின், கக்கூஸ் பயணம். குழந்தை தலையில் ஒரு குட்டு. வலிக்க வலிக்க. அம்மாக்கள் ஒழித்த இடத்தில் கன்னிப் பெண்கள். இடையிடையே சீட்டை வைத்துவிட்டு எழுந்து தண்ணீர் உபசாரம்.
சாப்பிட்டு தட்டுகளை குஸுமாவும் ராதா பாபிஜியும் கழுவியாயிற்று.
ஸ்டவ் ஏற்றல். பக்கோடா போட ஆரம்பித்தனர்.
“அரே என்ன வாசனை? எனக்கு இரண்டு வெறும் மிளகாயுடன்”
இடையில் குழந்தைகளுடன் பேச்சு.
“ராஜூ, நீ என்ன செய்வாய் பெரியவன் ஆனதும்?”
“பைலட். ஸுய்ங்கென்று.”
“நீ, ப்ரியா?”
”நானு... நானு.... நானு.... வந்து... தப்பாத்தி தெய்வேன் எங்க வீட்டுலே.”
“என்ன சமத்தாய்ப் பேசுகிறது?” ஜீஜி சிரித்தாள்.
“அஜ்மீரைச் சுற்றியுள்ள அத்தனை மலைகளிலும் நான் ஏறியிருக்கிறேன்” என்றார் பப்பாஜி.
“ஜீஜி, நீங்கள்?” என்றாள் மீனாட்சி.
”அவர் மலை ஏறினபோதெல்லாம் எனக்கு வயிற்றில் குழந்தை” என்றாள் ஜீஜி. சிரித்தாள் வாய்விட்டு. எல்லோரும் சிரித்தனர். ஜீஜி பதினாலு குழந்தைகள் பெற்றாள்.
எல்லாவற்றையும் வாரிக்கொண்டு, இன்னொரு முறை ‘டட்டி’ போகலாமா என்று யோசித்த குழந்தைகளின் மனதைத் திசை திருப்பிவிட்டு கிளம்பினர்.
குஸுமா பின்தங்கினாள். “மீனா, மெள்ள நடவேன். இன்னும் நான் பறவைகளைச் சரியாகப் பார்க்கவில்லை.”
“ஸதீஷைக் கூப்பிடவா?”
“இல்லை, இல்லை. அவர் போகட்டும், கலாட்டா ஆகிவிடும் அவரைக் கூப்பிட்டால்.”
மெதுவாக நடந்தார்கள்.
“பத்து நாள் தள்ளிப்போயிற்று. லேடி டாக்டரிடம் போகணும் என்று நினைப்பதற்குள் வந்துவிட்டது.”
”தயாராக வந்தாயா? நீ சொல்லியிருந்தால் கடைக்குப் போய் ஸானிடரி டவல் வாங்கியிருக்கலாமே...”
“தயாராய்த்தான் வந்தேன். இருந்தாலும் வெள்ளைப் புடவை. கொஞ்சம் பின்னால் பார்.”
“இல்லை. ஒன்றும் ஆகவில்லை.”
“வேகமாக நடப்போமா? ஏரிப்பக்கம் உட்கார நேரம் இல்லை. ராத்திரி சமையலுக்குப் பூண்டு உரிக்க வேண்டும்.”
“வா நீ பேசாமல்.”
ஏரி அருகே குஸுமாவை உட்கார்த்தி மௌனித்தாள்.
ஜீஜியிடம் ஒரு முறை “உங்கள் மூன்றாம் பிள்ளைக்கு எப்படிப்பட்ட மருமகள் வேண்டும்?” என்றபோது சடாரென்று பதிலளித்தாள் ஜீஜி - படித்தவள். வெளுப்பானவள், பேசாதவள் என்று. “சரியாகச் சொன்னாய்” என்றார் பப்பாஜி. அப்படி ஒரு பெண் இருப்பாள் என்று மீனாட்சி நம்ப மறுத்தாள். ஜீஜியின் பதில் அன்று மத்தியானம் நடந்திருந்த சம்பவத்தின் நீட்சி என்று நினைத்தாள். மத்தியானம் பப்பாஜியின் நண்பர் வந்திருந்தார். சரும நோய் நிபுணர். அப்போது மீனாட்சிக்குக் கையில் சில வெள்ளைத் திட்டுக்கள் வந்திருந்தன. கொஞ்சம் அரிப்புடன். சரும நோய் நிபுணரிடம் பப்பாஜி அறிமுகப்படுத்தினார்: இவள் கிஷனின் மனைவி. ஓயாமல் ஊர் சுற்றுகிறாள். சதா கையில் புத்தகம். வாயாடி. இவள் கையைப் பாருங்கள்.
நிபுணர் உபதேசம் : நீ வீட்டில் இரு. மற்ற பெண்கள் மாதிரி. எல்லாம் சரியாகிவிடும். அவரவர் அவரவர்களுக்கு விதிக்கப்பட்ட மாதிரி இருந்துவிட்டால் ஏது நோய்?
“ஆஹா” என்றார் பப்பாஜி.
ஜீஜி கூறியது அதை ஒட்டிய ஹாஸ்யம் என்று நினைத்தாள். ஆனால் ஜீஜியின் விளக்கத்துக்கு உரை போட்டாற்போல் கிடைத்தாள் குஸுமா.
அரசியலில் எம்.ஏ. ஃப்ரெஞ்சில் டிப்ளோமா. எதற்காக ஃப்ரெஞ்ச் படித்தாள் என்று தெரியவில்லை. திருமணத்திற்காகக் காத்திருக்கும்போது ஏதாவது மொழியில் டிப்ளோமோ வாங்குவது காத்திருத்தலின் ஒரு அம்சம் என்று தெரிந்தது. வெளியூரில் வேலை செய்யும் மாப்பிள்ளையானால் வெளிநாட்டு மொழி உபயோகமாக இருக்குமாம். பூ வேலை செய்த குஷன்கள், தலையணை உறைகள், கை வேலைப் பொருட்கள், பூ வேலையும் லேஸ் வேலையும் செய்த புடவைகள் எல்லாம் செய்திருந்தாள் குஸுமா அந்தச் சமயத்தில். பூ அலங்கார வகுப்புகள், பேக்கரி வகுப்புகள், தையல் வகுப்புகள், ஜாம், ஜூஸ், ஊறுகாய் வகுப்புகள் எதையும் அவள் விட்டுவைக்கவில்லை. எல்லா வித்தைகளையும் கற்றிருந்தாள். பூரணமான மருமகள்.
வெகு தூரத்திற்குப் போய்விட்டிருந்த வெள்ளைக் கூட்டம் நினைத்துக்கொண்டாற்போல் உயரே எழும்பி வட்டம் சுற்றி இடப்பக்கம் வந்தது. மிதமான வேகத்தில் மிதந்தாற்போல் வந்து சுழன்றது.
குஸுமா அழ ஆரம்பித்தாள்.
”அந்த அலகு... என்ன சிவப்பு...” என்று விசித்தாள்.
மெல்லச் சிவக்கத் தொடங்கிய மாலையில் பவழம் மிதந்தது இறக்கைகளுடன்.
உரிக்காத பூண்டு... இறக்கைகள் திறந்தன மறுவட்டம் அடிக்க.
உருவாகாத கரு... ஒயிலாக நீரின்மேல் ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து என்று சறுக்கி இறங்கி மிதந்தன.
விசும்பல் ஒலி.
***
ஹோலிப் பண்டிகை விடுமுறையில் அஜ்மீர் வந்தபோதுதான் ஜீஜிக்கு நோயின் கடுமையான தாக்குதல் நேர்ந்தது. ஒரு மத்தியானம், அன்றைய சமையலுக்கான உபகரணங்களைத் தந்துவிட்டு சாவியை இடுப்பில் செருகிக்கொண்டு குளிர்ப்பதனப் பெட்டியில் என்ன மிஞ்சியிருக்கிறது என்று பார்க்க ஜீஜி மெல்ல நடந்து வந்தாள். அதை எட்டும் முன்பே மூச்சு முட்டியது. சுவாசம் பெருத்த ஓசையுடன் இழுத்தது. மற்றவர் ஓடி வரும்முன் தன் கனத்த சரீரத்துடன் தரையில் விழுந்துவிட்டாள் ஜீஜி. வியர்வை பெருகியது. சிறுநீர் பெருகி உடையெல்லாம் ஈரம்.
“நான் போய்விடுவேன்... நான் போய்விடுவேன்... என் மருமகள்கள் எல்லோரும் வெளியூரில்... அந்தப் பாவி படி ஜீஜி என் சமையலறையை ஆளப்போகிறாள்... ஹே பக்வான்...” என்று அரற்றிக்கொண்டே தலையை இடமும் வலமும் திருப்பினாள். கீழே இருந்த டாக்டர் ஓடி வந்து ஊசி போட்டார். மூச்சு சீராகியது. இமைகள் இழுக்க உறங்கிப்போனாள்.
கண் விழித்ததும் இடுப்புச் சாவியைத் தொட்டுக்கொண்டாள். “ராத்திரி என்ன சமையல்?” என்று கேட்டாள். பீன்ஸ் என்றதும் “ஏன், நான் காலிஃப்ளவர் அல்லவா சொல்லியிருந்தேன்? அவள் மாற்றினாளா? நான் போய்விடுவேன் என்று நினைத்தாளோ?” என்று பொருமினாள்.
“இல்லை ஜீஜி. காலிஃப்ளவர் கிடைக்கவில்லை பஜாரில்.”
”புடவை... வேறு புடவை... தா” என்றாள்.
குஸுமா, ஜீஜியின் பீரோவைத் திறந்து பச்சைப் புடவை, பச்சை உள்பாவாடை, இளம் மஞ்சள் ரவிக்கை எடுத்தாள். ஜீஜியின் படுக்கை அருகே வைத்தாள். தலையைத் திருப்பிப் பார்த்த ஜீஜி, “பச்சை வளையல் எங்கே?” என்றாள் ஈனஸ்வரத்தில். மீனாட்சி வளையல் பெட்டியைத் திறந்து பச்சைக் கண்ணாடி வளையல்களை எடுத்து வைத்தாள்.
கதவை மூடி ஜீஜியின் ஆடைகளை அகற்றினர். முழுவதும் சிவக்கப் பழுத்த பழம் ஒன்று வற்றினாற்போல் இருந்தது அவள் உடம்பு. அகங்கையில் கோடுகள் கனத்து ஓடின. புறங்கை சுருங்கி நரம்புகள் பளபளத்தன. அடிவயிற்றில் ஏரிட்டு உழுதாற்போல் ஆழமான பிரசவ வரித் தழும்புகள். அவள் உறுப்பின்மேல் புறத்துமயிர் வெளேரென்று பசையற்று, அங்கங்கே உதிர்ந்து இருந்தது. பருத்துப் பின் தளர்ந்த பின்பாகமும், தொடைகளும் வெளுத்த கீறல்களுடன் சுருங்கித் தொங்கின. உள்தொடை இடுக்கின் அருகே கருகிய வாழைத் தோல்போல் வதங்கிக் கிடந்தது. ஸ்தனங்கள் சுருங்கிய திராட்சை முலைக்காம்புகளுடன் தாழ்ந்து தொங்கின. கழுத்தில் பல தங்கச் செயின்களின் கரிக்கோடுகள். நெற்றியில் வகிட்டின் முனையில் கனத்த தங்கக் குண்டுடன் தலையில் அணிந்த சுட்டிப் பட்டம் அழுத்தி அழுத்தி வழுக்கை விழுந்தாற்போல் வழவழவென்று ஒரு தழும்பு.
வாழ்ந்த உடம்பு. சிறுநீர், மலம், ரத்தம், குழந்தைகள் எல்லாவற்றையும் வெளிப்படுத்தியிருந்த உடம்பு. எத்தனை தடங்கள் அதில்!
புடவை கட்டி முடித்ததும், ஜீஜியின் தலையை வாரி, வண்ண நூல் குஞ்சலம் தொங்கும் கருத்த நூல் சவுரியைக் கூந்தலில் இணைத்துப் பின்னிவிட்டாள் ராதா பாபிஜி. பீரோ சாவியை குஸுமா ஜீஜியின் இடுப்பில் செருகினாள். ஜீஜி படுக்கையில் சாய்ந்துகொண்டாள்.
மற்றவர்கள் போனதும் ஜீஜி அருகில் உட்கார்ந்துகொண்டாள் மீனாட்சி. ஜீஜியின் கை இடுப்பைத் துழாவியது. ஜன்னல் திரைகள் மூடப்பட்ட அறை இருண்டிருந்தது.
மருந்து, தூக்கம், அயர்ச்சி சேர்ந்து ஜீஜியின் குரல் கனத்து வெளிப்பட்டது. ஆனால் காற்றினில் அலைந்துவிட்டு வந்ததுபோல் அழுத்தமின்றி இருந்தது.
“சிகப்புக் கலர் பாவாடை...”
“என்ன ஜீஜி?”
“என் கல்யாணப் பாவாடை. சிகப்புக் கலர். தங்க வெள்ளிச் சரிகை உடலெல்லாம். தங்கத் தகட்டுப் பொட்டு. பன்னிரெண்டு தங்க வளையல்கள். இரண்டு அட்டிகை, சிவப்பில், பச்சையில், முத்துத் தோடு. பவழத் தோடு. நெற்றிச் சுட்டியின் தங்கக் குண்டு அஞ்சு பவுன். ஒரு வெள்ளிச் சாவி வளையம். பதினாலு வயது எனக்கு. என்னை வழியனுப்புகிற ‘பிதாயி’ன்போது என் அம்மா காதில் சொன்னாள். நெஞ்சில் முட்டுகிறது அந்த ‘பிதாய்’. முக்காட்டோடு அவள் குனிந்து என்னைக் கட்டிக்கொண்டாள். பெரிய மூக்கு வளையம். உறுத்தியது. “சமையலறையை ஆக்ரமித்துக்கொள். அலங்காரம் செய்து கொள்ள மறக்காதே.... இரண்டும்தான் உன் பலம். அதிலிருந்துதான் அதிகாரம்....”
“இருக்கட்டும் ஜீஜி. தூங்குங்கள்.”
“முப்பது பேர் வீட்டில். அஞ்சு கிலோ ‘ஆட்டா’ பிசைவேன். முந்நூறு சப்பாத்தி இடுவேன். முதல் தடவை இரண்டு உள்ளங்கையும் ரத்தம் கட்டி நீலமாய் இருந்தது. தோள் பட்டையில் குத்திக் குத்தி வலித்தது.... பப்பாஜி சொன்னார்... சபாஷ்... நீ நல்ல உழைப்பாளி... என்று....”
ஹா என்று மூச்சு விட்டாள்.
“கோபாலுக்கு முன் ஒரு ஆண் குழந்தை. அவன் போய்விட்டான். தெரியுமா? ஒரு வயதில். பூஜை அன்று, எல்லோரும் சமையலறையில்... குழந்தை படியேறி மதில் சுவரில் ஏறப்பார்த்து விழுந்துவிட்டான்... முப்பது படி ஏறியிருந்தான்.... எண்ணெயில் பூரியைப் போட்டது ஈச்சென்ற அலறல்..... வயிற்றில் முட்டியது.... பின் மண்டையில் பிளவு... முற்றத்துக் கல் தரையில் வெள்ளைப் புழுக்கை மாதிரி அவன் மூளை சிதறியிருந்தது... ஆண் பிள்ளைகள் எல்லாம் வந்தபின்... பொரித்தேன்... மீனா... கேட்கிறாயா... பொரித்தேன் மீதம் பூரிகளை...”
மீனாட்சி ஜீஜியின் நெற்றியில் தடவினாள்.
“மாமனார் போனதும் வெள்ளிச் சாவி வளையத்தில் சாவி கோத்துக்கொண்டேன்.....”
“மீனா... எனக்கு எத்தனை செல்வாக்கு பார்த்தாயா? நன ராணி மாதிரி அதிகாரம் செலுத்துகிரேன்... இல்லையா?” ஜீஜி முனகினாள். உறங்கினாற்போல் கிடந்தாள்.
பெரிய வட்டப் புஷ்ப வடிவில் கமலமும், நீலமும் பச்சையும், முத்தும் பதித்த தோடுகளை அணிந்த சருகுச் செவிகள் அருகே மீனாட்சி குனிந்தாள். விரிந்த கடலில் பாம்புப் படுக்கையில் மகா விஷ்ணு மிதப்பதுபோல் ஜீஜியும் அவளும் மட்டுமே. இருண்டு கிடந்த அறையில் ஒரு தொப்புள் கொடி அறுந்த தன்மை ஏற்பட்டது. அந்த உரையாடலை அவள் நிகழ்த்தினாளா, அது தன்னால் ஏற்பட்டதா, அப்படிப் பல முறை யோசித்ததால் நிகழ்ந்தது போன்ற உணர்வு ஏற்பட்டதா, அது ஜீஜிக்கும் அவளுக்கும் மட்டுமேயான உரையாடலா என்று தெரியவில்லை.
ஜீஜி, அந்தச் சமையலறை, அட்டிகை, வளை, தங்கக் குண்டுச்சுட்டி - அதிலெல்லாம் ஒரு பலமுமில்லை.
அதிகாரம் அதிலிருந்து வரவில்லை.
அது பப்பாஜியை ஒட்டிய அதிகாரம்.
அதிலிருந்து எல்லாம்.
விடுபடுங்கள்.
விடுபடுங்கள்.
விடுபடுங்கள்..
விடுபட்டால்... அப்புறம்.... எஞ்சுவது?
சமையலறை, நகைகள், குழந்தைகள், பப்பாஜி எல்லாவற்றையும் துறந்த நீங்கள்தான். அறுபட்ட நீங்கள், வெறும் கேஸர்பாயி, கேஸர்பாயி மட்டுமே. அங்கிருந்துதான் பலம். அதிகாரம்.
அதை எல்லாம் துறந்த நான்... நான்... யார்?
கண்டுபிடியுங்கள். முங்கிப் பாருங்கள்.
எதில்?
கிணற்ரில், உங்கள் அந்தரங்கக் கிணற்றில்.
பற்றிக்கொள்ள எதுவுமில்லையே... பயமாக..
இன்னும் முங்குங்கள். முங்குங்கள். கேஸர்பாயிக்கும் உலகுக்கும் என்ன சம்பந்தம் என்று பாருங்கள்.
நிதம் இடப்பட்ட அந்த முந்நூறு சப்பாத்திகளும், பதினாலு குழந்தைகளை உதைக்கவிட்ட வயிறும் இல்லாவிட்டால்
மட்டன் புலவு, மஸாலா, பூரி - ஆலு, தனியாப் பொடி, உப்பு, சர்க்கரை, பால், எண்ணெய், நெய் என்று யோசித்திருக்கா விட்டால்
நாலு நாட்களுக்கு ஒரு முறை ஸ்டவ் திரியை இழுத்துவிட வேண்டும்; மண்ணெண்ணெய் கிடைக்கும்போது வாங்க வேண்டும்; மழைக்காலத்தின் கவலை அரிசி, பருப்பில் பூச்சி; மாங்காய்க் காலத்தில் ஊறுகாய்; வெய்யில் காலத்தில் அப்பளம்; பழங்கள் வரும் காலத்தை ஒட்டி ஷர்பத், ஜூஸ், ஜாம்; பழைய துணிகள் போட்டுப் பாத்திரம்; சமையலறை முற்றத்துக்கு இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை சுண்ணாம்பு; மாதவிடாய் தள்ளிப் போயிற்றோ என்று கவலை; தள்ளிப் போகாவிட்டால் கவலை என்று மண்டையெல்லாம் பூச்சி, ஊறுகாய், சுண்ணாம்பு அடைத்திருக்காவிட்டால்.
மூளையின் இழுப்பறைகளை இவற்றை எல்லாம் போட்டு நிரப்பியிருக்காவிட்டால்
ஒருவேளை நீங்கள் அந்த ஆப்பிள் விழுவதைப் பார்த்திருக்கலாம்; தண்ணீர் கெட்டிலின் மூக்கு நுனி ஆவியைப் பார்த்திருக்கலாம்;
புதுக் கண்டங்களைக் கண்டுபிடித்திருக்கலாம். கைலாய பர்வதத்தில் அமர்ந்து காவியம் எழுதியிருக்கலாம். குகைகளுக்கு ஓவியம் தீட்டியிருக்கலாம். பறந்திருக்கலாம். போர்கள், சிறை, தூக்குமரங்கள், ரஸாயன யுத்தங்கள் இல்லாத உலகம் உண்டாக்கியிருக்கலாம்.
நீங்கள் எங்கே போய்விட்டீர்கள் ஜீஜி?
சரியான அளவில் எல்லாம் இடப்பட்ட சமையலில்
காதிலும் கழுத்திலும் நுதலிலும் உறுத்திய நகையில்
பலம் என்று
எப்படி நினைத்துக்கொண்டீர்கள்?
முங்குங்கள் இன்னும் ஆழமாக.
அடியை எட்டியதும் உலகளந்த நீரைத் தொடுவீர்கள். சுற்றியுள்ள உலகுடன் தொடர்பு கொள்வீர்கள்.
உங்கள் யோனியும், ஸ்தனங்களும், கருப்பையும் சுழன்று விழும் சமையல் மணம் தூரப் போய்விடும். நகையின் மினுமினுப்பு மறைந்துவிடும். பால்தன்மை அற்ற நீங்கள். அதில் சிக்காத நீங்கள், அதில் குறுகாத நீங்கள். அதனின்றும் விடுபட்ட நீங்கள்.
அதைத் தொடுங்கள் ஜீஜி.
தொட்டு
எழுங்கள்.
எழுங்கள்.
எழுங்கள்.
அதுதான் பலம். அதனின்றும்தான் அதிகாரம்.
ஜீஜி திரும்பி, மீனாட்சியின் தேடிப் பற்றிக்கொண்டாள்.
*****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக