18/04/2011

பெருந்திணையும் குழுமணமும் - வெ.பெருமாள் சாமி

ஏடறியா வரலாற்றுக் காலத்தில் மக்கள் பொதுவுடைமைச் சமூகமாக வாழ்ந்தனர். ஆய்வாளர்கள் அதனை ஆதிபொதுவுடைமைச் சமூகம் என்கின்றனர். அந்தக் காலகட்டத்தில் காட்டுமிராண்டிகளாக வாழ்ந்த மக்களிடையே வரை முறையற்ற புணர்ச்சி வழக்கத்தில் இருந்தது என்றும் அம்மக்கள் அநாகரிக நிலையை அடைந்த பொழுது, அவர்களிடையே குழு மணம் நிலவியது என்றும் ஆய்வாளர் கூறுகின்றனர். செவ்விந்தியர் நீக்கிரோக்கள் மட்டுமல்லாது, உலகில் நாகரிகத்தின் உச்சியில் இருப்பதாகக் கூறிக்கொள்ளும் அனைத்து இனமக்களுமே காட்டுமிரண்டி நிலை, அநாகரிக நிலை என்ற நிலைகளைக்கடந்துதான் இன்றைய நாகரிக நிலையை எட்டியுள்ளனர். இந்த விதிக்கு எந்த இனத்தவரும் விலக்காக இருக்க முடியாது என்பது அறிவியல் உண்மை ஆகும்.

ஆதிபொதுவுடைமைச் சமூகம் நிலவிய அந்தக்காலகட்டதில் மக்கள் கணசமூகமாக வாழ்ந்தனர். கணசமூகமாக வாழ்ந்த அமெரிக்க செவ்விந்தியர்களைப் பற்றிக் கூறும்போது எங்கல்ஸ் அவர்கள் அச்சமூகத்தின் குறிப்பிடத்தக்க குணாம்சங்களாகச் சிலவற்றைக் குறிப்பிடுகிறார். அவர்கள் மரக்கழிகளால் ஆன படல் கட்டப்பட்ட வீடுகளில்வாழ்ந்தனர். அவர்களது ஊர்கள் காவற்காடுகள் சூழ அமைந்திருந்தன. கிடைத்தது எதுவாயினும் அதனை அம்மக்கள் தமக்குள் சமமாகப்பங்கிட்டுக் கொண்டார்கள், கணத்தின் உறுப்பினன் ஒருவன் பிற கணத்தைச் சேர்ந்த ஒருவனால் கொல்லப்பட்டால் , ரத்தப்பழி ( பழிக்குப் பழி ) வாங்கும் கடமையை கணம் மேற்கொண்டது. மாற்றாருடன் போர் ஏற்பட்டால், வெற்றி அல்லது வீரமரணம் என்ற குறிக்கோளுடன் போரிட்டனர். ( ஆப்பிரிக்க ஜீலு இனத்தவரின் போர்ச் செயலை எங்கல்ஸ் உதாரணம் காட்டுகிறார் ) கணசமூகத்துக்கு தாயே தலைமை ஏற்றிருந்தாள், தாய் வழியாகவே வம்சாவளி குறிக்கப்பட்டது.

மேற்குறித்த இவையெல்லாம் கணசமூகத்தின் புறவாழ்வு சார்ந்த பண்புக் கூறுகள் ஆகும். இவை உலகம் எங்கும் கணசமூகமாக வாழ்ந்த மக்கள் அனைவர்க்கும் பொருந்தும். தமிழகத்துக்கும் பொருந்தும், சங்க இலக்கியங்களில் இவற்றுக்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. கணசமூகத்தின் அகவாழ்வு சார்ந்த குறிப்பிடத்தக்க குணாம்சமாக, குழுமணம் இணைமணம் ஆகியவற்றை எங்கல்ஸ் குறிப்பிடுகிறார். ஒரு கணத்தைச் சேர்ந்த ஆண்களும், பெண்களும் தம்முள் மணம் புரிவதை கணம் தடைசெய்தது என்பதையும் எங்கல்ஸ் குறிப்பிடுகிறார்.

‘பொதுவுடைமைக் குடும்பத்தில் பெரும்பாலான பெண்கள் அல்லது எல்லாப் பெண்களுமே ஒரேயொரு கணத்தைச்சேர்ந்தவர்களேயாவர், அவர்களின் கணவர்களான ஆண்களே வௌ;வேறு கணங்களில் இருந்து வந்தவர்கள். அது தான் புராதன காலங்களில் பெண்கள் மேலோங்கிய நிலையில் இருந்து வந்ததற்கான பௌதீக ரீதியான அஸ்திவாரம் ஆகும்.’ என்பது எங்கல்ஸ் அவர்களின் கூற்று ஆகும். கணசமூகத்தில், தாயே சமூகத்திற்குத் தலைமை ஏற்றிருந்தாள், தாய் வழியாகவே வம்சாவளி குறிக்கப்பட்டது. தமிழகத்திலும் சங்காலத்தில் இப்படிப்பட்ட நிலைமையே இருந்தது. இதற்கு கீழ்வரும் புறநானூற்றுப் பாடலடிகள் சான்றளிக்கின்றன.

‘சிறுவர்தாயே பேரிற் பெண்டே ‘ - புறநானூறு : 270
‘செம்முதுபெண்டின் காதலஞ்சிறா அன்’ - புறநானூறு : 276
‘வானரைக் கூந்தல் முதியோள் சிறுவன் ‘ - புறநானூறு : 277
‘முளரிமருங்கின் முதியோள் சிறுவன் “ - புறநானூறு : 278
‘என்மகள் ஒருத்தியும் பிறள்மகன் ஒருவனும் ‘ - கலித்தொகை பாலைக்கலி : 8 மேற்குறித்த தொடர்களில், வீரனான இளைஞன் இன்னாளது மகன் என்று கூறப்பட்டுள்ளானேயல்லாது,’இன்னான் மகன் என்று கூறப்படாமை நோக்கத்தக்கது.

மேலே குறிக்கப்பட்டுள்ள புறநானூற்றுப் பாடலடிகள் வெறும் சொற்றொடர்கள் அல்ல: முரண்தொடை என்னும் செய்யுள் நயம் கருதிப் பெய்யப்பட்ட சொற்கள் அல்ல. அவை பொருள்பொதிந்த சொற்கள் ஆகும். பேரிற்பெண்டு, செம்முதுபெண்டு, இற்பொலி மகடூஉ ( புறநானூறு 331:9 ) முதலிய சொற்கள், தாய் கணசமூகத்தில் வகித்த உன்னத நிலையையும் எய்தியிருந்த உயர் மதிப்பையும் உணர்த்தும் தொடர்கள் ஆகும். அத்துடன் சங்க காலத்தில் தமிழகத்தில் நிலவியிருந்த சமூக அமைப்புக்குச் சான்றளிக்கின்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தொடர்களும் ஆகும்.

‘ குழுக் குடும்பத்தின் எல்லா வழிகளிலும் ஒரு குழந்தையின் தகப்பன் யார் என்பதை அறுதியிட்டுச் சொல்ல முடியாது. ஆனால், குழந்தையின் தாய் யார் என்பதை உறுதியாகச் சொல்ல முடியும். குழுமணம் இருக்கிற இடங்களில் எல்லாம் தாய் தரப்பில் இருந்து மட்டுமே வம்சாவளியைக் கண்டுகொள்ள முடியும் என்றும் ஆகவே பெண் வழி ஒன்று தான் ஒப்புக்கொள்ளப்பட்டது என்றும் தெளிவாகிறது” என்று எங்கல்ஸ் அவர்கள் கூறுவது நம் கவனத்துக்கு உரியதாகிறது.

சங்க காலத்தில் தமிழகத்தில் மக்கள் கணசமூகமாக வாழ்ந்தனர்: கணத்துக்குள் மணம் புரிவது தடை செய்யப்பட்டிருந்தது. இதனைச் சங்க இலக்கியங்கள் தெளிவாக உணர்த்துகின்றன. மகள் காதல் வயப்பட்ட நிலையில் காதலனோடு உடன் போக்காகச் சென்றுவிட்டாள்: மகளைக்காணாது வருந்திய தாய் அவளைத் தேடிச் சென்றாள் வழியில் எதிர்ப்பட்ட முக்கோற் பகவரிடம் ‘ என் மகள் ஒருத்தியும் பிறள் மகன் ஒருவனும்” உடன் போக்காகச் சென்ற தனைக் கண்டீர்களா? ‘என்று வினவினாள். அவர்களும் ‘காணேம் அல்லேம், கண்டனம்” எ;னறு கூறுதலோடு ‘ அறம் தலைப்பிரியா ஆறு” எ;னறு சில அறிவுரைகளைக் கூறினர். கூறி அவளைத் தேற்றினர். முக்கோற்பகவர் கூறிய அம்மொழிகள், கணசமூகத்தவரின் நடைமுறையை உணர்த்துவதாக உள்ளன. அக்கூற்று இது.

‘காணேம் அல்லேம் கண்டனம் கடத்திடை
ஆணெழில் அண்ணலோடு அருஞ்சுரம் முன்னிய
மாணெழில் மடவரல் தாயிர் நீர் போறீர்
பலவுறு நறுஞ்சாந்தம் படுப்பவர்க்கல்லதை
மலையுளே பிறப்பினும் மலைக்கவைதாம் என் செய்யும்
நினையுங்கால் நும்மகள் நுமக்கு மாங்கனையளே
சீர் கெழுவெண்முத்தம் அணிபவர்க்கல்லதை
நீருளே பிறப்பினும் நீர்க்கவை தாம் என் செய்யும்
தேருங்கால் நும்மகள் நுமக்குமாங் கனையளே.
ஏழ்புணரின்னிசை முரல்பவர்க்கல்லதை
யாழுளேபிறப்பினும் யாழ்க்கவைதாம் என்செய்யும்
சூழுங்கால் நும்மகள் நுமக்குமாங் கனையளே
- கலித்தொகை : பாலைக்கலி: 8

( அன்னையீர் நீவிர் நம்பியோடு சென்ற நங்கையின் தாயர்போல்கின்றீர் : நும் மகளும் அவள் காதலனும் உடன் போக்காகச் சென்றதனை யாங்கள் வழியிடைக் கண்டோம்.

மணம் மிக்க சந்தனம் மலையில் பிறந்தாலும் பயன் கொள்வார்க்கு அல்லாது, மலைக்கு அது பயன்படுவதில்லை. விலைமதிப்பில்லாத வெண் முத்துக்கள் கடலில் பிறந்தாலும் அணிபவர்க்கு அல்லது கடலுக்கு அவை பயன்படா. ஏழு சுரங்கள் பொருந்திய இன்னிசையானது யாழில் பிறந்தாலும், மீட்டுவார்க்கு அல்லது யாழுக்கு அவ் இசை பயன்படாது. அதுபோல நும்மகளும் நுமக்குப் பயன்படாள்) என்று கூறினர். முக்கோற் பகவரின் இக்கூற்று, கணசமூகத்தில், கணத்துக்குள் மணம்புரிவது கண்டிப்பாகத்தடை செய்யப்பட்டிருந்தது” என்பதற்கான இலக்கியச் சான்று ஆகும் என்பது மிகையன்று.

தலைவனும் தலைவியும் வௌ;வேறு கணங்களைச் சேர்ந்தவர்களாகவே இருத்தல் வேண்டும் என்பதனைக் கணசமூகம் கண்டிப்பாகப் பின்பற்றியது என்பதற்கு செம்புலப்பெயனீராரின் குறுந்தொகைப் பாடல் சிறந்த சான்று ஆகும். பாடல் இது.

யாயும் யாயும் யாராகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி யறிதும்
செம்புலப் பெயனீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே

(உன் அன்னை, யார் என்பதனை யான் அறியேன், என்தாய் யார் என்பது உனக்குத் தெரியாது. என்தந்தையும் உன் தந்தையும் எம்முறையிலும் உறவினர் அல்லர்: யானும் நீயும் இதற்கு முன் அறிந்தவர்கள் அல்லேம். ஆயினும் செம்மண் நிலத்திற்பெய்த மழை நீரானது அம்மண்ணுடன் கலந்து அதன் நிறத்தை ஏற்கு மாப்போல, நம் இருவரது நெஞ்சங்களும் அன்பால் தம்முள் ஒன்று பட்டுக்கலந்தன) என்று காதல் நெஞ்சங்கள் அன்பால் இணைந்தமை குறித்துக்காதலர்கள் கூறுவதாகப் புலவர் பாடியுள்ளார். ‘செம்புலப் பெயனீர்” என்ற உவமைச் சிறப்பால் உயர்வு பெற்ற இப்பாடல், காதலர்கள் இருவரும் வௌ;வேறு கணங்களைச் சேர்ந்தவர்கள் என்ற உண்மையையும் உணர்த்துகிறது.

தாய் மகளைத் தினைப் புனக் காவலுக்கு அனுப்பினாள். தோழியருடன் தினைப்புனம் சென்ற மகளும் மான்வேட்டைக்காக அங்குவந்த இளைஞனும் சந்தித்துக் கொண்டனர். இச்சந்திப்பு தற்செயலான நிகழ்வுதான். அந்த நேரத்தில் வேட்டுவரால் விரட்டப்பட்ட யானை ஒன்று அங்கு ஒடி வந்தது. யானையைக் கண்ட அவள் அச்சமுற்று ஓடிச்சென்று இளைஞனைக்கட்டிக்கொண்டாள். அவனும் அவளை ஆதரவாக அணைத்துத் தழுவி அச்சத்தைப் போக்கினான். அந்நிலையில் இருவருக்கும் புணர்ச்சி நிகழ்ந்தது: இயற்கைப்புணர்ச்சி. இயற்கையாக நிகழும் இத்தகைய புணர்ச்சி களிறுதருபுணர்ச்சி புனல்தருபுணர்ச்சி என்று புலவர்களால் புகழ்ந்து பேசப்பட்டது.

இயற்கைப் புணர்ச்சிக்குப்பின் தலைவனின் வருகையைத் தலைவிபெரிதும் விரும்பினாள். தலைவனும் அடுத்தடுத்து அவளைத் தேடிவரலானான். பகலிலும் இரவிலும் குறியிடங்களை நியமித்துக் கொண்டு அவர்கள் தொடர்ந்து சந்தித்து வந்தனர். இலக்கியங்கள் இதனை பகற்குறி என்றும் இரவுக்குறி என்றும் சுவைப்படப் பேசுகின்றன.

தலைவனின் தழுவலுக்கு உட்பட்ட தலைவியின் உடலில் மாறுபாடுகள் நிகழ்ந்தன. அவளது உடல் மாறுபாட்டையும் நிற வேறுபாட்டையும் கண்டதாய், மகள் ஏதோவொரு நோய்க்கு ஆட்பட்டிருப்பதாக நினைத்தாள், நோய்க்கான காரணங்களை ஆராய முற்பட்டாள், மகளின் ’விறலிழை நெகிழ்த்த வீவருங்கடு நோய்” கண்டதாய், அந்தநோய் குறித்து ‘அகலுளாங்கண் அறியுநர் வினாயும் பரவியுந்தொழுதும் விரைமலர் தூயும் வேறுபல்லுருவிற் கடவுட்பேணியும் நறையுவிரையுமோச்சியும் அலவுற்று” வருந்தியதாகக் கபிலர் கூறுகிறார். மகள் நிலை குறித்துத்தாய் வருந்தியதைக்கண்ட தோழி, தாய்க்கு அறத்தோடு நின்றாள். தலைவன் தலைவியரது காதலையும் அவர்களுக்குள் புணர்ச்சி நிகழ்ந்ததையும் எடுத்துரைத்தாள். இரவுக் குறிக்கண் தலைவன் வரும் போது அவனை எதிர்ப்படும் இடையூறுகளை அவள்பட்டியலிட்டுக் கூறினாள்: அவள் கூற்று இது

‘வலைப்படுமஞ்ஞையினலஞ் செலச்சாஅய்
நினைதொறுங்கலுழுமாலிவளேகங்குல்
அளைச்செறியுழுவையும் ஆளியும் உளியமும்
புழற் கோட்டாமான் புகல்வியுங் களிறும்
வலியிற்றப்பும் வன்கண் வெஞ்சினத்து
உருமுஞ்சூரும் இரைதேர் அரவமும்
ஒடுங்கிருங் குட்டத்தருஞ்சுழி வழங்கும்
கொடுந்தாள் முதலையும் இடங்கருங்கராமும்
நூழிலும் இழுக்கும் ஊழடிமுட்டமும்
பழுவும் பாந்தளும் உளப்படப் பிறவும்
வழுவின் வழாஅ விழுமமவர்
குழுமலை விடரக முடைய”
- குறிஞ்சிப்பாட்டு : 250-61

(தலைவனது குழுவினர் வாழும் மலையின் கண் உள்ள முழைஞ்சிடமானது. புலிகளும் யாளியும் பாம்புகளும் கரடிகளும் யானைகளும் திரிந்து அச்சுறுத்தும். உருமேறும் கொடுந்தெய்வமும் வழிச்செல்வாரை நடுங்கச்செய்யும். சுழித்தோடும்யாறுகளின் நீர்ச்சுழிகளிலும் சுனைகளிலும் முதலைகளும் இடங்கரும் கராமும் திரிந்து அச்சம் விளைவிக்கும். தலைவன் வரும் வழியின்கண் ஆறiலைப்பாரும் சூறை கொள்வாரும் வழிச்செல்வார்க்குப் பேரிடர் விளைப்பர். வழிகளும் வழுக்கு நிலமாய் வழிமுட்டாக இருக்கும். பிசாசுகளும் பெரும் பாம்புகளும் திரியும். இவற்றையெல்லாம் தாண்டிக்கடந்துதான் தலைவன் தலைவியைக்காண இரவுக் குறியிடத்து வருதல் வேண்டும். அதனால் அவனுக்குப் பெருந்தீங்கு விளைதல் கூடும் ) என்று, தோழி காதலியைக் காண இரவுப்பொழுதில் வரும் காதலனை எதிர்ப்படும் இடையூறுகள் குறித்துக் கூறினாள்.

இங்கு, இத்தனை இடையூறுகளையும் தடைகளையும் தாண்டிக் கடந்துதான் காதலன் காதலியைக்காண வந்தான் என்று தோழி கூறுவதும் காதலன் இன்னான் என அறியப்படாத அந்நியனாக இருந்தும் காதலி தன்னை அவனுக்கு ஒப்புக் கொடுத்ததும் ஆகிய இந்நிகழ்வுகள் தலைவன் தலைவியின் கணத்தைச் சேர்ந்தவன் அல்லன், வேறு கணத்தைச் சேர்ந்தவன் என்ற உண்மையை உணர்த்துகிறது.

தொல்காப்பியம் முதலிய இலக்கணநூல்களில் அகப் பொருளுக்குரிய திணைகளாகக் குறிஞ்சித்திணை, முல்லைத்திணை, மருதத்திணை. நெய்தல் திணை பாலைத்திணை, கைக்கிளைத்திணை, பெருந்திணை என்னும் ஏழுதிணைகள் குறிக்கப்பட்டுள்ளன. இவற்றுள் குறிஞ்சித்திணை முதலிய ஐந்தும் அகனைந்திணை என்றும் அன்பினைந்திணை என்றும் சிறப்பித்துக்கூறப்படுகின்றன. இவற்றைப்பற்றியே ஏராளமான பாடல்கள் பாடப்பட்டுள்ளன. எட்டுத்தொகைநூல்களில் நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு என்னும் ஐந்து தொகை நூல்களும் அகனைந்திணை என்று பெருமையாகப் பேசப்பட்ட குறிஞ்சி முதலிய ஐந்து திணைகளைப் பற்றிய பாடல்களாகவே உள்ளன. பத்துப் பாட்டில் முல்லைப் பாட்டும் குறிஞ்சிப்பாட்டும் அகப்பொருள் நூல்களேயாகும்.

ஆனால், கைக்கிளைத் திணை பற்றியும் பெருந்திணை பற்றியும் புலவர்கள் பாடல் மிகுதியாகப் பாடவில்லை. ‘கைக்கிளை என்பது ஒரு தலைக்காமம், பெருந்திணை என்பது பொருத்தக்காமம்” எனக்கூறி அதனைப் பாடாமல் புறந்தள்ளிய புலவர்கள் ‘பொருந்தாக்காமமாவது, முதியவன் இளம் பெண்ணை மணப்பதும் முதியவள் இளைஞனை மணப்பதும் ஆகும். என்று அதற்கு விளக்கமும் கூறினர். இத்தகைய நிகழ்வுகள் அக்காலத்தில் தமிழகத்தில் மக்களிடையே வழக்கத்தில் இருந்துள்ளன என்பதையே மேற்குறித்த விளக்கம் புலப்படுத்துகிறது. முதியவன் இளம் பெண்ணுடனும் முதியவள் இளைஞனுடனும் இணைவதாகிய நிகழ்வுகள் குழுமணம் நிலவிய சமூக அமைப்பில் இயல்பானவையே ஆகும். ஏனெனில் ஒரு கணத்தின் ஆண்களும் பிற கணங்களின் பெண்களும் பிறவி கணவன் மனைவியர் ஆவர் என்பது பழங்குடி மக்களின் வாழ்வியல் பற்றி ஆராய்ந்த ஆய்வாளர் கூறும் உண்மை ஆகும்.

முதியவன் இளம் பெண்ணைக் காதலிப்பதும் மணப்பதும் முதியவன் இளைஞனைக்காதலி;ப்பதும் மணப்பதும் ஆன இவ்வழக்கம் கீழ்மக்களுக்கு உரியதாகும்” என்று கூறிப்புலவர்கள் பெருந்திணை பற்றிப் பாடாமல் ஒதுக்கினர். எனவே அவர்கள் அத்திணை பற்றிப் பாடல் எதுவும் பாடவில்லை. அதனால் அவற்றுக்கான இலக்கியச் சான்றுகள் சங்கஇலக்கியங்களில் இல்லை. புலவர்கள் அதனைப் பாடாவிட்டாலும் அத்தகைய வழக்கம் தமிழகத்தில் சங்ககாலத்தில் நடைமுறையில் இருந்தது. இன்றும் இருக்கிறது. இதற்கு எண்ணற்ற நடைமுறை எடுத்துக் காட்டுகளைக் கூறமுடியும்.

பிறனில் விழையாமை என்பது ஆடவர்க்கு அறநூலார் வற்புறுத்திக்கூறிய அறவுரையும், அறிவுரையும் ஆகும். ஆணாதிக்கமும் தனியுடைமைச் சிந்தனையும் தலைதூக்கி, பெண்ணுக்கு மட்டும் கற்புடைமை வற்புறுத்தப்பட்ட சமூகச் சூழலில் சமூக அமைதி கருதி ஆடவர்கள் கடைபிடிக்க வேண்டிய அறங்களில் ஒன்று என்று திருவள்ளுவர் முதலிய அறநூலார் இதனை வற்புறுத்திக் கூறினர். ஆனாலும் அவர்கள் வற்புறுத்திய கள்ளாமை கள்ளுண்ணாமை புறங்கூறாமை பொய்யாமை முதலிய ஒழுக்கங்களுக்கு ஏற்பட்ட கதியே பிறனில் விழையாமைக்கும் ஏற்பட்டது. பிறனில் விழைதல் என்பது பொதுவுடைமைச் சமூகத்தில் இல்லாதது. தனியுடைமைச் சமூகத்தில் தலையெடுத்தது. குழுமணத்தின் மிச்ச சொச்சமான நடவடிக்கையே பிறனில் விழைதல் என்பது சரியாகவே இருக்கும்.

‘பொருந்தாக்காமம்” என்று உழைக்கும் மக்களின் காதலைப் பாடாமல் ஒதுக்கிய புலவர்கள் தாம், அரசர்கள் ஆண்டைகள் மற்றும் செல்வர்களின் பரத்தைமை ஒழுக்கத்தைப் பாராட்டியும் புகழ்ந்தும் ஏராளமான பாடல்களைப் பாடியுள்ளனர். சங்க இலக்கியங்களில் மருதத்திணை பற்றிய பாடல்கள் அனைத்தும் சுரண்டும் வர்க்கமாகிய மேல் தட்டு மாந்தரின் காமக்களியாட்டங்களைச் சிறிதும் கூச்சமின்றிப் புகழ்ந்தும் வியந்தும் பாடிய பாடல்களின் தொகுப்பேயாகும் எனல் மிகையன்று. ஒரு தலைக் காமம் என்றும் பொருந்தாக் காமம் என்றும் கூறி உழைக்கும் மக்களின் காதலைப் பாடாமல் புறந்தள்ளிய இந்நிலை வர்க்க ஒடுக்கு முறையின் அப்பட்டமான வெளிப்பாடேயாகும் எனல் தவறாகாது. சங்க இலக்கியங்கள் கூறுகின்ற மற்றும் கூறாமல் புறந்தள்ளிய இச்செய்திகள் அனைத்தும் சங்க காலத்தில் மக்கள் கணசமூகமாக வாழ்ந்தனர் என்ற உண்மையைத் தெளிவாக உணர்த்துகின்ற இலக்கியச் சான்றுகள் ஆகும் என்பது மிகையன்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக