18/04/2011

மேய்ச்சல் சமூகம் - வெ.பெருமாள் சாமி

மக்கள் வேட்டைச் சமூகமாக வாழ்ந்த காலகட்டத்தில் கால்நடைகளை மந்தையாகத் திரட்டி மேய்த்துப் பயன்கொள்ளத் தெரிந்திருக்கவில்லை. காட்டுப்பசு, காட்டெருமை முதலிய விலங்குகளில் இருந்து, கிடைக்கும்போது பாலைக்கறந்து பயன்படுத்திக் கொண்டார்கள். காட்டுமிராண்டியாக வாழ்ந்த கால கட்டத்திலேயே தீயின் உபயோகத்தை மனிதன் தெரிந்து வைத்திருந்தான். அநாகரிக நிலையின் கடைக்கட்டத்தில் மண்பாண்டங்கள் செய்யவும் தெரிந்து கொண்டிருந்தான். இது பற்றி எங்கல்ஸ் அவர்கள் கூறியுள்ளார்கள்.

மண்பாண்டங்கள் செய்யத் தெரிந்திருந்தமையால் மனிதன் தினை முதலிய தானியங்களைக் குற்றி அரிசியாக்கிச் சமைத்து உண்ணக் கற்றுக் கொண்டான் பால் பொருட்களான தயிர், மோர், வெண்ணெய், நெய் முதலியவற்றை தயாரித்துப் பயன்படுத்தலானான். மனிதன் வேட்டைச் சமூகமாக வாழ்ந்த காலகட்டத்தில் இவற்றைப் பற்றி அறிந்திருக்கவில்லை. மேய்ச்சல் சமூகமாக மாறத் தொடங்கிய போதுதான் இவற்றைப் பயன்படுத்தும் பழக்கம் மனிதனிடம் ஏற்பட்டது. இது மனித வாழ்க்கையில் ஏற்பட்ட முக்கியமாற்றம் எனலாம்.

‘மரையான் கறந்த நுரைகொள் தீம்பால்
மான்றடி புழுக்கிய புலவுநாறு குழிசி
வான்கேழிரும் புடை கழாஅ தேற்றிச்
சாந்த விறகினுவித்த புன்கம்
கூதளங்கவினிய குளவி முன்றிற்
செழுங்கோள் வாழை அகலிலைப்பகுக்கும்” - புறநானூறு 168

(மரையான் கறந்த நுரைகொண்ட இனிய பாலை, மான் தசையைச்சமைத்த புலால் நாறும் பானையின் நிணம் தோய்ந்த வெளிய நிறத்தையுடைய பெரிய வெளிப்பக்கத்தைக் கழுவாமல் உலை நீராக வார்த்து ஏற்றிச் சந்தன விறகால் சமைக்கப்பட்ட சோற்றை, கூதாளி அழகுடன் விளங்கும் மலை மல்லிகை நாறும் முற்றத்தில் வளமான குலைகளையுடைய வாழையினது அகன்ற இலையில் பலருடனும் பகுத்துண்ணும்) என்று மலையில் மேய்ந்த மரையாவைக் கறந்து பாலை உலையாக ஏற்றிச் சமைத்து வாழை யிலையில் எயினர் சோற்றைப் பகிர்ந்து உண்டதனைப் புறநானூறு கூறுகிறது. வேட்டைச் சமூகம் மேய்ச்சல் சமூகமாக மாற்றமடைந்து வந்த நிலையின் தொடக்கத்தை இது குறிக்கிறது எனல் சரியேயாகும். சங்ககாலத்தில் தமிழகத்தில் மக்கள் வேட்டைச் சமூகமாக வாழ்ந்த நிலை பற்றிக் கூறுகின்ற பாடல்களில் பசு, பால், தயிர் முதலியன பற்றிய குறிப்புகள் காணப்படாமை நோக்கத்தக்கது.

பாலையும் பால் பொருட்களையும் நீண்டநாட்களுக்குச் சேமித்துப் பாதுகாக்க முடியாது, எனவே மனிதன் பால் தரும் விலங்குகளான பசு எருமை முதலியவற்றைப் பாலுக்காக மந்தையாகத் திரட்டி மேய்த்துப் பாதுகாக்கவும் அதனால் பாலும் பால்படு பொருள்களும் பெற்றுப் பயன் துய்க்கவும் முற்பட்டான். பசுக்களுடன் எருமைகளையும் ஆடுகளையும் பன்றிகளையும் கூட மந்தையாக வளர்க்கலானான். இப்போது மனிதன் அவற்றை மந்தையாக வளர்த்துப் பயன்கொள்ளத் தெரிந்து கொண்டான். இவை அவனுக்குப் பால், இறைச்சி, தோல் முதலிய பொருள்களைக் கொடுத்தன. பறவைகளில் கோழிகளையும் வளர்க்கலானான். குடிசைகளில் கோழி வளர்த்தமை பற்றி “கோழி சேக்கும் கூடு” என்று பெரும்பாணாற்றுப்படை கூறுகிறது. கோழிகள் முட்டை மற்றும் இறைச்சிக்காக வளர்க்கப்பட்டன. காவலுக்காகவும் வேட்டைக்காவும் நாய் வளர்க்கப்பட்டது.

‘தொடர்நாயாத்த துன்னருங் கடிநகர்” என்றும்
‘பகுவாய் ஞமலியொடு பைம்புதலெருக்கி “என்றும் பெரும்பாணாற்றுப்படை (112,125 ) எயினர் நாய்வளர்த்தது பற்றிக் கூறுகிறது.

இடையர் குடியிருப்பு

குறிஞ்சி நிலத்து எயினர் ஊர்களைப் போலவே முல்லை நிலத்து ஆயர்களின் ஊர்களும் காவற்காடு மற்றும் விடு நிலம் எனப்பட்ட மேய்ச்சல் நிலங்கள் சூழ அமைந்திருந்தன. குடிசைகள் வரிந்த கழிகளில் வைக்கோலாலே வேயப்பட்டிருந்தன. அவை மழை மேகங்கள் போலக் கறுத்துக் காணப்பட்டன. கழிகளால் கட்டப்பட்ட கதவுகளைக் கொண்டிருந்தன. சிறு தூற்றையுடைய வாயில்களில் குறிய கால்கள் நடப்பட்டு, அவற்றில் ஆட்டு மறிகள் நின்று தின்னும் வகையில் தழைகள் கட்டப்பட்டிருந்தன. முற்றத்தில் நடப்பட்டிருந்த குறிய முளைகளில் தாமணி தொடுத்தநெடிய தாம்புகள் கட்டப்பட்டிருந்தன. தங்குமிடமாகிய சேக்கையில் கிடாயினுடைய தோலைப் பாயலாகக் கொண்டு முதியவன் காவலுக் காகப்படுத்திருந்தான். கட்டு முள்ளாகிய வேலி சூழ்ந்த எருமிகுந்த ஊரில் வளைந்த முகத்தையுடைய செம்மறியாடுகளுடன் வெள்ளாடுகளும் கிடந்தன.

‘மறிய
குளகரையாத்த குறுங்காற் குரம்பைச்
செற்றைவாயிற்செறிகழிக் கதவிற்
கற்றை வேய்ந்த கழித்தலைச் சாம்பின்
அதளோன் துஞ்சுங் காப்பின் உதள
நெடுந்தாம்பு தொடுத்த குறுந்தறி முன்றிற்
கொடுமுகத்துருவை யொடு வெள்ளை சேக்கும்

இடுமுள் வேலி எருப்படு வரைப்பு” என்று முல்லை நிலத்தில் மேய்ச்சல் சமூகமாக வாழ்ந்த ஆயர்களின் ஊர் குறித்துப் பெரும்பாணாற்றுப்படை (147-54) பேசுகிறது. தொழுக்களையுடைய ஊர்களில் குடிசைகளின் முற்றத்தில் வரகு இட்டு நிரப்பிய குதிர்கள் மிகுதியாக இருந்தன. அவை யானைக் கூட்டம் போல் காணப்பட்டன. குடிசைகளின் முற்றங்களில் அமைக்கப்பட்டிருந்த பந்தரில் வரகு திரிகைகள் நிறுத்தப்பட்டிருந்தன. அவை யானையின் முழந்தாள் போலத் தோற்றமளித்தன இக்காட்சியினை

‘முள்ளுடுத்
தெழுகாடோங்கிய தொழுவுடை வரைப்பிற்
பிடிக்கணத்தன்ன குதிருடை முன்றிற்
களிற்றுத்தாள் புரையுந்திரி மரப்பந்தர்’
என்று பெரும்பாணற்றுப்படை (184 - 87 ) காட்டுகிறது.

நெடுகக் கட்டிய கொட்டிலின் ஒரு பக்கத்தில் அடுப்பெரித்து ஒரு பக்கத்தில் தொழில்; ஒழிந்திராத நாளில் சகடையில் உருளைகளையும் கலப்பைகளையும் சார்த்தி எருதுகளையும் கட்டி வைத்திருந்தனர். அதனால் கொட்டிலின் சுவர் தேய்ந்து புகைப்படிந்து காணப்பட்டது. இதனை
‘குறுஞ்சாட்டுருளையொடு கலப்பை சார்த்தி
நெடுஞ்சுவர்பறைந்த கொட்டில்”என்று அந்நூல் மேலும் ( 188-89 ) கூறுகிறது.

குழலும் யாழும்

முல்லை நிலத்து இடையன் செருப்பு விடாமற் கிடந்து வடு அழுந்தின பாதங்களையுடையவன். பசுக்களுக்கு வருந்தஞ் செய்யும் தடியை ஊன்றியதும் மரங்களை ஒடியெறிந்து கொடுக்கும் கோடரியால் தழும்பிருந்ததுமான வலிய கைகளையுடையவன். இரண்டு முனைகளிலும் உரியையுடைய காக்கள் மேலே யிருந்ததனால் உண்டாகிய தழும்பு மிக்க மயிரெழுந்த தோள்களையுடையவன். எல்லாமணமும் பொருந்தும் பசு கறந்த பாற்கையைத் தடவிக் கொண்ட தலைமயிரையுடையவன். கலம்பகமாகிய மாலையைக் கழுத்தில் அணிந்திருந்தான். ஒற்றையாகப் பொருந்திய கோவணமாகிய உடையை அணிந்திருந்தான். கன்றுகள் பொருந்தின பசுத்திரளோடே காட்டில் தங்கியிருந்த அவன், கடைக் கொள்ளியால் துளையிடப்பட்ட மூங்கில் குழலில் பாலைப்பண் இசைத்தான். குமிழின் கொம்பில் மரற்கயிற்றால் வளைத்துக் கட்டின யாழை விரலாலே தெறித்துக் குறிஞ்சிப் பண்ணை வாசித்தான். இதனை

‘தொடுதோல் மரீஇய வடுவாழ் நோனடி
விழுத்தண்டூன்றிய மழுத்தின் வன்கை
யுரிக்காவூர்ந்த மருப்படு மயிர்ச் சுவன்
மேம்பாலுரைத்த வோரியோங்குமிசைக்
கோட்டவுங் கொடியவும் விரைஇக்காட்ட
பல்பூமிடைந்த படலைக் கண்ணி
யொன்றமருடுக்கைக் கூழாரிடையன்
கன்றமர் நிரையொடு கானத்தல்கி
யந்து ணவிர்புகை கமழக் கை முயன்று
ஞெலிகோற் கொண்ட பெருவிறன் ஞெகிழிச்
செந்தீத் தோட்ட கருந்துளைக் குழலின்
இன்றீம்பாலை முனையிற் குமிழின்
புழற் கோட்டுத் தொடுத்த மரற்புரி நரம்பின்
வில்யாழிசைக்கும் விரலெறி குறிஞ்சிப்
பல்காற்பறவை கிளை செத்தோர்க்கும்” என்று பெரும்பாணாற்றுப்படை ( 169-183) கூறுகிறது.

உணவுக்காக விலங்குகளை விரட்டிச் சென்று வேட்டையாடும் தொழிலில் ஈடுபட்டிருந்த வேடன் ஓய்வு ஒழிச்சலின்றி வேட்டையாடவே நேரம் சரியாக இருந்தது. ஆனால் மனிதன் கால்நடை மேய்ச்சலை மேற்கொண்ட பொழுது அவனுக்கு ஓய்வு மிகுதியாகக் கிடைத்தது. அந்த ஓய்வு நேரத்தில் அவன் இசை முதலிய கலைகளில் தன் மனத்தைச் செலுத்தலானான். அதனால் பல கலைகள் வளர்ந்தன. மேலே குறித்த பெரும்பாணாற்றுப் படைப் பாடலடிகள் இவ்வுண்மையைத் தெளிவாக உணர்த்துகின்றன. இங்கு, இது குறித்து எங்கல்ஸ் அவர்கள் கூறியுள்ள கூற்று நம்கவனத்துக்குரியதாகிறது. அக்கூற்று இது. ‘குதிரைகள் பசுக்கள் ஒட்டகைகள் கழுதைகள் வெள்ளாடுகள் செம்மறியாடுகள் பன்றிகள் ஆகியவற்றின் மந்தைகளுடன் முன்சென்று கொண்டிருக்கிற மேய்ச்சல் தொழில்புரிந்த மக்கள் சமூகங்கள், பெற்றிருந்த உடைமைகளை வெறுமனே மேற்பார்வை செய்து மிகச்சாதாரணமான கவனிப்பு அளித்து வந்தால் போதும், அவற்றின் எண்ணிக்கையை மேலும் மேலும் பெருக்க முடிந்தது. பாலும் இறைச்சியுமாகச் சத்துமிக்க உணவு கிடைத்துவரும். இதுவரை உணவு சேமிப்புக்குக் கையாண்ட முறைகள் பின் தள்ளப்பட்டுப்போயின. ஒரு காலத்தில் அவசியமாய் இருந்த வேட்டைத் தொழில் இப்போது சுகஜீவன வேலையாகிவிட்டது” (நூல் : குடும்பம் தனித் சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம்)

‘வேட்டைச் சமூகத்து எயினனைவிட மேய்ச்சல் சமூகத்து இடையனுக்கு ஓய்வு மிகுதியாகக் கிடைத்தது. அந்த ஓய்வு நேரத்தில் அவன் குழல்,யாழ் முதலிய இசைக்கருவிகளைச்செய்யும் இயக்கவும் தெரிந்து கொண்டான். அதனால் இசை முதலியகலைகளோடு எண்ணும் எழுத்துமாகிய கலைகளும் தோன்றி வளரலாயின’ என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இடையரின் விருந்தோம்பற் சிறப்பு

மழைக்காலத்தில் ஆகாயத்தில் திரிகின்ற நீர்சுமந்த மேகம் போன்ற வரகு வைக்கோலால் வேய்ந்த அழகிய குடிசைகளையுடைய சிற்றூரில் உள்ளவர்கள் வரகினது அவிழாகிய சோற்றை அவரையினது நன்றாகிய பருப்பை விட்டுப் புழுங்க வெந்ததனைத்தாமும் உண்டு விருந்தினராகிய பாணர்க்கும் மிகுதியாக வழங்கினர். இதனை,

‘பருவ வானத்துப் பாமழை கடுப்பக்
கருவை வேய்ந்த கவின் குடிச் சீறுர்
நெடுங்குரற்பூளைப் பூவினன்ன
குறுந்தாள் வரகின் குறளவிழ்ச் சொன்றிப்
புகரிணர் வேங்கை வீகண்டன்ன
அவரை வான் புழுக் கட்டிப் பயில்வுற்
றின் சுவை மூரற் பெறுகுவீர்’ என்று பெரும் பாணாற்றுப்படை (190 -96) கூறுகிறது.

கிடாய்கள் கலந்துள்ள செம்மறியாட்டுத் திரள் வெள்ளாட்டுடன் கலந்து கல்லென்ற ஓசையுடைய காட்டில் கடல்போல் ஒலிக்கும் பல ஆட்டினங்களின் திரளிலே இடையர்கள் இரவில் பாலும் பாற்சோறும் தமக்காகச் சமைத்ததனை விருந்திரனராகிய பாணர்க்கும் தந்து உண்பித்தனர்.

‘கல்லென் கடத்திடைக் கடலின் ஒலிக்கும்
பல்யாட்டின நிரை எல்லினர் புகினே
பாலு மிதவையும் பண்ணாது பெறுகுவிர்”
என்று மலைபாடுகடாம் ( 415- 17 ) முல்லை நிலத்து ஆயர்களின் விருந்தோம்பற்சிறப்பு பற்றிக் கூறுகிறது.

பாலும் பண்ட மாற்று வணிகமும்

வேற்றுப்புலங்களிலே பசுக்கூட்டத்தில் இருந்த சங்கு போன்ற வெண்மையான நிறமுடைய பசுக்களின் இனிய பாலை ஆநிரைகளைக் காக்கின்ற இடையர்கள் கொண்டுவந்து, வளையல் அணிந்த மகளிர் மனம் மகிழும்படி சொரிந்தனர். இருள் நீங்குகின்ற விடியற்காலத்தே பறவைகள் துயில் நீங்கி எழுகின்ற அதிகாலைப்பொழுதில் இடைச்சியர் மோர் கடைந்தனர். புலியின் முழக்கத்தையொத்த ஆரவாரத்தையுடைய மத்தைக்கயிற்றால் வலித்து, குடைக்காளானுடைய முகை போன்ற வெண்மையான உறையாலே இறுகத் தோய்த்த இனிய தயிரைக் கடைந்து வெண்ணெய் எடுத்தனர்.

தயிர் புள்ளியாகத் தெரித்த மோர்ப்பானையைப் பூவாற் செய்த சுமட்டைத் தலையிலே வைத்து, குறிஞ்சி நிலத்து ஊர்களுக்குச் சென்று இடைச்சி மோர் விற்றாள். அப்பெண் நன்றாகிய மாமை நிறத்தவள், குழை என்ற ஆபரணம் அசைகின்ற காதுகளையுடையவள். மூங்கில் போலும் தோளும் ஆற்று மணல் போன்ற கரிய கூந்தலும் உடையவள், அப்பெண் மோர் விற்றதனாற் கிடைத்த நெல்லால் தன்சுற்றத்தாரையெல்லாம் உண்பித்தாள். தான் நெய்யை விற்கின்ற விலைக்குக் கட்டியாகப் பொன்னை வாங்காமல் பால் எருமைகளையும் நல்ல பசுக்களையும் எருமை நாகினையும் நெய்க்கு ஒப்பாகச் சொல்லி வாங்கிவந்தாள்.

வாயை மடித்துச் சீழ்க்கையடிக்கும் இடையர் குடியிருப்பில் உள்ளார், நண்டின் சிறிய குஞ்சுகளைப் போன்ற செவ்விய தினையரிசியால் சமைத்த சோற்றைப் பாலுடன் கலந்து பாணர்க்கும் விருந்தினர்க்கும் கொடுத்து மகிழ்ந்தனர் என்று பெரும்hணாற்றுப்படை (155-168) கூறுகிறது.

‘நள்ளிருள் விடியப் புள்ளெழப் போகிப்
புலிக்குரல் மத்த மொலிப்பவாங்கி
யாம்பி வான் முகையன்ன கூம்பு முகிழ்
உறையமைதீந்தயிர் கலக்கி நுரைதெறித்து
புகர்வாய்க் குழிசி பூஞ்சுமட்டி ரீஇ
நாண்மோர் மாறு நன்மா மேனிச்
சிறுகுழை துயல்வரும் காதிற் பணைத்தோட்
குறுநெறிக் கொண்ட கூந்தலாய் மகள்
அளைவிலையுணவிற் கிளையுடனருத்தி
நெய்விலை கட்டிப் பசும்பொன் கொள்ளாள்
எருமைநல்லான் கருநாகு பெறூஉம்
மடிவாய்க் கோவலர் குடிவயிற் சேப்பின்
இருங்கிளை ஞெண்டின் சிறுபார்ப்பன்ன
பசுந்தினை மூரல் பாலொடும் பெறுகுவிர்’
என்பது கடியலுர் உருத்திரங் கண்ணனார் கூற்றாகும்.

இங்கே, ஆய் மகள் தான் விற்றநெய்க்கு விலையாகக் கிடைத்த நெல் முதலிய உணவுப் பொருள்களைத் தன் சுற்றத்தார். அனைவர்க்கும் கொடுத்து உண்பித்தாள். கண சமூகத்தில் மனைத் தலைவியான அப்பெண், தன்னல நோக்கம் எதுவுமின்றித் தன் கணத்தின் நலன் ஒன்றையே கருதிச் செயல்பட்டதனை நாம் இங்குக் காண்கிறோம். தான் விற்ற மோருக்கு விலையாகப் பெற்றுவந்த நெல்லைத்தன் கிளையினர் அனைவர்க்கும் தந்து உண்பித்தாள்.தான் விற்ற நெய்க்கு விலையாகக் கட்டிப்பொன்னை வாங்;காமல், தன்குடிக்கு வளம் சேர்க்கும் விதமாகப் பசுவும் எருமையும் வாங்கிவந்தாள். இச்செய்தி கண சமூக மாந்தரின் தலையாய பண்பாக விளங்கும்; தன்னல மறுப்புக்கும் பகிர்ந்துண்ணும் பண்புக்கும் தக்க சான்றாக விளங்குகிறது. இச்செய்தி. உபரிப்பொருளைக் கொடுத்துத் தமக்கு வேண்டிய பொருள்களைப் பெற்றுக் கொள்ளும் பண்டமாற்றுமுறை நடைமுறைக்கு வந்ததனையும் உணர்த்துகிறது.

மேய்ச்சல் சமூகத்தில் கால்நடைகளான ஆடுமாடுகளின் எண்ணிக்கை பெருகியது. மேய்ச்சல் தொழில் மக்களின் வாழ்க்கைக்குரிய முக்கியமான தொழில் ஆயிற்று, கால்நடைகள் மிகுதியாக வளர்க்கப்பட்டதனைச் சங்க இலக்கியங்களில் பயிலும் ‘தாதெருமறுகு’ எருப்படுவரைப்பு’ என்னும் தொடர்கள் தெளிவாக உணர்த்துகின்றன.

கால வோட்டத்தில் இரும்பு கண்டுபிடிக்கப்பட்டுப் பயன்பாட்டுக்கு வந்து விட்டது. இந்நிலையில் முன்னேற்றகரமான இரும்புக் கருவிகள் பலவற்றை மனிதன் படைத்துக் கொண்டான். தொடக்கத்தில், அவன் செய்து வந்த தொழிலாகிய வேட்டைத் தொழிலுக்குத் தேர்வான கருவிகளே படைக்கப்பட்டன. வேல், ஈட்டி முதலிய கருவிகளே செய்யப்பட்டன. தொடர்ந்து மனிதன் மேய்ச்சல் தொழிலிலும் உழவுத்தொழிலிலும் ஈடுபட்டதனால் அத்தொழிலுக்குத் தேவையான கொழு, கோடரி, குந்தாலி, மண் வெட்டி முதலிய கருவிகளும் செய்யப்பட்டன. இரும்பு உபயோகத்துக்கு வந்த பிறகு மனிதனின் தொழில் முறையிலும் வாழ்க்கை முறையிலும் மாற்றம் ஏற்பபட்டது. இம்மாற்றம் சமூக மாற்றத்துக்கு வழி வகுத்தது.

மனிதன் காட்டு மிராண்டி நிலையில் வேட்டைச் சமூகமாக வாழ்ந்த காலகட்டத்தில் சமூகத்துக்கு எந்த விதமான சொத்தும் இருக்கவில்லை. நிலமும் காடும் சமூகத்துக்குப் பொதுவாக இருந்தன. அவற்றின் மீது தனிமனிதன் எவனும் உரிமை கொண்டாடவில்லை. மனிதன் வசித்த குடிசைகளும் பயன்படுத்திய வேட்டைக்கருவிகளும் வீட்டு உபயோகப்பொருள்களும் மட்டுமே சமூகத்தின் சொத்தாக இருந்தன. வேட்டைச் சமூகம் மேய்ச்சல் சமூகமாக மாற்றமடைந்த நிலையில் கால்நடைகள் சமூகத்தின் சொத்துக்கள் ஆயின. நிலத்தைத் திருத்திப் பயிர் சாகுபடியில் ஈடுபட்டபிறகு, விளைந்து வந்த உணவுப் பொருள்களான வரகு, தினை, பயறு வகைகள் முதலியனவும் சேமிக்கப்பட்டு சமூகத்தின் பொதுச் சொத்தாகவே பயன்படுத்தப்பட்டன. கால் நடைகளை மந்தையாகத்திரட்டி மேய்த்து வளர்க்கத் தொடங்கிய போது, கால்நடைகளும், அவற்றில் இருந்து கிடைத்த பாலும் பால் பொருட்களும், தோலும் இறைச்சியும் உரோமம் முதலியனவும் சமூகத்தின் பொதுவுடைமையாயின. இவை தனிமனிதனின் ஆக்கிரமிப்புக்கு இன்னும் உள்ளாகவில்லை.

இரும்புக் கருவிகள் புதிது புதிதாகப் படைக்கப்பட்டமையால் காட்டைச் சுட்டுத் திருத்திய நிலைமாறி வெட்டித் திருத்திச் சாகுபடிக்கு ஏற்றதாக மாற்றித் திருத்தும் நிலை ஏற்பட்டது, திருத்துவதும் எளிதாயிற்று. தேவைக்கேற்ப நிலங்கள் திருத்தப்பட்டன. உழவுத்தொழிலில் ஏர்களையும் சகடங்களையும் ஈர்த்துச் செல்லக் கால்நடைகள்- குறிப்பாக காளைகளும் எருமைகளும் பயிற்றிப் பயன்படுத்தப்பட்டன.

‘ஈரச் செவ்வியுதவின ஆயினும்
பல்லெருத்துள்ளும் நல்லெருத்து நோக்கி
வீறு வீறாயும் உழவன்”

என்று புறநானூறு (289) காளைகள் உழவுத்தொழிலில் வசக்கிப் பயன்படுத்தப்பட்டது குறித்துக் கூறுகிறது. அதனால் சுமைகளைக் காளை எருமை முதலியவற்றின் முதுகில் ஏற்றி வந்த நிலை மாறியது. மாடுகளால் ஈர்த்துக் செல்லப்படும் சகடங்கள் செய்யப்பட்டன, பயன்படுத்தப்பட்டன. சமூகத்தின் மக்கள் அனைவரும் சேர்ந்து உழைத்துப் பாடுபட்டு உற்பத்தி செய்த இச்செல்வம் சமூகத்தின் மக்கள் அனைவருக்கும் சொந்தமான சமூகத்துக்குப் பொதுவான - சொத்தாகவே இருந்தன. இச்செல்வம் குறித்து தோழர் எங்கல்ஸ் அவர்கள் கூறியுள்ளதை நாம் கவனத்தில் கொள்ளல் தக்கது. இது குறித்து அவர் கூறுவதாவது;

‘இங்கே (பழைய உலகத்தில்) மிருகங்களைப் பழக்குவதும் மந்தையாகப் பெருக்குவதும் இதுவரை கேட்டறியாத செல்வத்திற்குரிய ஓர் ஊற்றுக் கண்ணைப் பயன்படுத்தி,புத்தம் புதிய சமுதாய உறவுகளையும் சிருஷ்டித்தன. அநாகரிக நிலையின் கடைக்கட்டம் வரையிலும் நிலையான செல்வம் என்று வீடும் துணிமணிகளும் நேர்த்தியற்ற நகைகளும் உணவு பெறவும் தயாரிக்கவும் பயன்பட்ட கருவிகளும் அதாவது, மிகவும் சாதாரண வகைப்பட்ட வீட்டுச் சாமான்களும் ஆயுதங்களும் படகுகளும் மட்டுமே இருந்தன. மக்கள் உணவுக்காக தினம் தினம் பாடுபட வேண்டியிருந்தது.

இப்பொழுதோ குதிரைகள், ஒட்டகங்கள், கழுதைகள், பசுக்கள், வெள்ளாடுகள், செம்மறியாடுகள், பன்றிகள் ஆகியவற்றுடன் ஐந்து நதிகள் பாயும் பகுதியிலும் கங்கை நதிப்பிரதேசத்திலும் ஆரியர்கள் (அதைவிட நீர்வளம் மிக்க ஆக்ஸஸ், ஜகார் தஸ் ஆறுகள் ஓடுகிற புல்வெளிப் பிரதேசங்களில் உள்ள ஆரியர்கள், யூப்ரடிஸ் டைகிரிஸ் நதிப்பக்கங்களில் உள்ள செமைட்டுக்கள்) பெற்றிருந்த உடைமைகளை வெறுமனே மேற்பார்வை பார்த்து மிகச் சாதாரண கவனிப்பு அளித்து வந்தாலே போதும்;;; அவற்றின் எண்ணிக்கையை மேலும் மேலும் பெருக்க முடிந்தது. இறைச்சியும் பாலுமாக சத்துமிக்க உணவு கிடைத்து வரும். ஆனால் இந்தப் புதிய செல்வம் யாருக்குச் சொந்தமாக இருந்தது? சந்தேகமின்றி ஆரம்பத்தில் அது கணத்துக்கே சொந்தமாயிருந்தது ‘ (நூல் : குடும்பம் தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்)

எங்கல்ஸ் அவர்களின் இக்கூற்று தமிழகத்துக்கும் பொருந்தும். மக்கள் கண சமூகமாக வாழ்ந்த காலகட்டத்தில் உடைமைகள் அனைத்தும் சமூகத்துக்கே சொந்தமாக இருந்தன. கால்நடைகளும் உணவு தானியங்களுமாகச் சேர்ந்திருந்த ஏராளமான செல்வத்தைச் சமூகத்தைச் சேர்ந்த அனைவரும் சேர்ந்தே அனுபவித்தனர். தமக்குள் எவ்விதப் பாகுபாடும் இன்றிச் சமமாக அனுபவித்தனர் என்பதற்குச் சங்க இலக்கியங்கள் சான்றளிக்கின்றன.

பகுத்துண்ணும் பண்பு

தமிழகத்துக் குறிஞ்சி முல்லை நிலங்களில் மக்கள் வேட்டைத் தொழிலையும் நிரை மேய்த்தலையும் வாழ்வுக்குரிய பிரதானமான ஆதாரமாகக் கொண்டு கண சமூகமாக வாழ்ந்தனர். இந்நிலங்கள் அடிக்கடி வறட்சிக்கு இலக்காகும் பகுதிகள் ஆகும். மக்கள் பற்றாக்குறையான வாழ்க்கையே மேற்கொண்டிருந்தனர். இந்நிலையிலும் அவர்கள் கண சமூகத்தின் பங்கீட்டு மரபுகளைக் கறாராகப் பின்பற்றினார்கள். எழுதப்படாத இச்சட்டத்தை எவரும் மீறியதில்லை.

கொடிய வறட்சிமிக்க கோடைக்காலங்களில் நீர்வற்றியநிலையில் பள்ளங்களில் சேற்றைத் தோண்ட ஊறிய சிறிதளவு நீராயினும் சரி: வேட்டையில் கொன்ற விலங்காயினும் சரி: வெட்சிப் போரில் கவர்ந்து வந்த ஆநிரையாயினும் சரி: அவையனைத்தையும் மக்கள் தமக்குள் எவ்வித வேறுபாடுமின்றிச் சமமாகப் பங்கிட்டுக் கொண்டார்கள். அம்மக்களின் பகுத்துண்டலாகிய சீரிய பண்புக்கு கீழ் வரும் புறநானூற்றுப்பாடலடிகள் தக்க சான்றாக விளங்குகின்றன. சங்ககாலத்தில் மக்கள் கண சமூகமாக வாழ்ந்தனர் என்பதற்கும் இப்பாடல் சரியான சான்றாகும். அப்பாடல் இது:

‘களிறு நீறாடிய விடுநில மருங்கில்
வம்பப் பெரும்பெயல் வரைந்து சொரிந் திறந்தெனக்
குழிக்கொள் சின்னீர் குரா அலுண்டலிற்
சேறுகிளைத்திட்ட கலுழ்கண்ணூறல்
முறையினுண்ணும் நிறையா வாழ்க்கை
முளவு மாத்தொலைச்சிய முழுச் சொலாடவர்
உடும்பிழுதறுத்த வொடுங்காய்ப் படலைச்
சீறில் முன்றிற் கூறு செய்திடு மார்
கொள்ளிவைத்த கொழுநிணநாற்றம்
மறுகுடன்கமழும” - புறநானூறு 325.

பன்றிகளால் புழுதியாக்கப்பட்ட விடுநிலத்தில் பெய்த மழை நீர்பள்ளங்களில் சிறிதளவே தங்கியிருந்தது. அதனையும் காட்டில் மேய்ந்து வந்த ஆடுமாடுகள் குடித்து வற்றச் செய்து விட்டன. அதனால் மக்கள் குடிநீருக்காகச் சேற்றைத் தோண்டியதில் நீர் சிறிதளவே ஊறியது. ஊறிய நீர் மக்களின் தேவைக்குப் போதுமானதாக இல்லை. ஆனாலும் அம்மக்கள் அந்நீரைத்தமக்குள் சமமாகப் பங்கிட்டுக் கொண்டனர். அதற்காக முறைவைத்து நீரை முகந்து சென்று உண்டனர். நீருக்காக அவர்கள் அந்நிலையிலும் முண்டியடித்து மோதிக் கொள்ளவில்லை. சண்டையில்லை. சச்சரவு இல்லை. கலங்கிய சேற்றில் தோண்டியதால் ஊறிய சிறிதளவுநீரையும் ஒருவர் பின் ஒருவராக முறைகொண்டு சென்று (ஞரநரயளலளவநஅ ) வரிசையாக முகந்து வந்தனர்.

அதைப் போலவே வேட்டையாடிக் கொண்டுவந்த உடும்பின் தசையைத் தீயில் இட்டுச் சுட்டுத் தமக்குள் சமமாகப் பங்கிட்டுக் கொண்டனர். உடும்பு சிறிய விலங்கு: அதனைப் பச்சையாக அறுத்துப் பங்கிட்டால் அப்பங்கைச் சுடவோ சமைக்கவோ முடியாது. எனவே அவர்கள் அதைச் சுட்டுத்தமக்குள் பங்கிட்டுக் கொண்டார்கள். ‘கூறு செய்திடுமார் கொள்ளி வைத்த கொழுநிணம்” என்பது கவிக் கூற்று. இக்கூற்று ‘பங்கிடுவதற்காவே அவர்கள் அதனைச்சுட்டார்கள்” என்பதை உணர்த்துகிறது.

புறநானூறு காட்டும் மற்றொரு காட்சி: முல்லை நிலத்துச்சிற்றூர் ஒன்றில் இல்லத்தலைவி தன் இல்லத்தில் இருந்த தினையைச் சோறு சமைத்தாள். அரிசி சிறிதளவே இருந்தது. அதைச் சமைத்து வைத்தாள். ஆனால் அதை உண்ணக் காத்திருந்தோர் மிகப் பலராக இருந்தனர். அதற்காக அவள் கலக்கமுறவில்லை. காத்திருந்த அனைவரையும் தன் இல்லத்தின் முற்றத்தில் இருந்த நெடிய பந்தலில் வரிசையாக அமரச்செய்தாள். சமைத்து வைத்திருந்த உணவை அனைவர்க்கும் முறை முறையாகத் தந்து உண்ணச் செய்தாள். ஏற்போர் பலராக இருந்தும் அவரது பன்மையை மனங்கொள்ளாது பலரும் ஏற்றமையுமாறு வழங்கி மேம்பட்டாள். அவள் செயல்கண்டு வியந்தபுலவர் முது கூத்தனார் அவளை ‘இற்பொலிமகடூஉ” என்று ஏற்றமுடன் போற்றினார்.

‘உள்ளது
தவச் சிறிதாயினும மிகப்பலரென்னாள்
நீணெடும்பந்தர் ஊண் முறையூட்டும்
இற்பொலிமகடூஉ” என்பது புலவரின் புகழுரையாகும்.

இங்கு “சிறு சோற்றானும் நனிபல கலத்தன் மன்னே, பெருஞ்சோற்றானும் நனிபலகலத்தன்மன்னே” என்று அவ்வையார் கணசமூகத் தலைவனான அதியமான் நெடுமான் அஞ்சி குறித்துக் கூறியது நம் கவனத்துக்குரியதாகும். கணசமூகமாக வாழ்ந்த மக்கள் அச்சமூகத்தின் பங்கீட்டு விதிகளை எந்த அளவுக்கு மதித்துப் போற்றினர் என்பதை மேற்குறித்த பாடலடிகள் உணர்த்துகின்றன. இம்மக்களின் பங்கீட்டுச் செயல் உபரி நிலையில் நிகழ்ந்தது அல்ல. பற்றாக்குறையான நிலையில் பங்கிட்டுக் கொண்ட செயலேயாகும், என்பதையும் இங்கு நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

இவ்வாறு வரகும் தினையுமாகச் சமைத்த சிறிதளவு சோறும் வேட்டையாடிக் கொணர்ந்த உடும்பைச்சுட்ட கறியும் “சேறுகிளைத் திட்ட குழிக்கொள் சின்னீரும்” மட்டுமல்லாது, கரந்தையாரை வென்று கவர்ந்து வந்த ஆநிரைகளையும் கூட கணசமூக மாந்தர் தமக்குள் பங்கிட்டுக் கொண்டனர் என்ற செய்தியையும் சங்க இலக்கியங்கள் நமக்குக் கூறுகின்றன.

“காலைப்
புல்லார் இனநிரை செல்புற நோக்கிக்
கையிற் சுட்டிப் யை வெண்ணிச்
சிலையின் மாற்றியோனே அவைதாம்
மிகப் பலவாயினு மென்னாம் எனைத்தும்
வெண்கோள் தோன்றாக்குழிசியொடு
நாளுறை மத்தொலி கேளாதோனே”

என்னும் புறப்பாடலடிகள் வெட்சிப்போரில் கவர்ந்து வந்த ஆநிரைகளைக் கண சமூகமாந்தர் பங்கிட்டுக் கொண்ட செய்தியை நமக்குக் கூறுகின்றன.
‘வெட்சித்தலைவன் கரந்தையாரை வென்று கவர்ந்து வந்த நிரைதாம் மிகப் பலவேயாயினும் அவனுக்கு அவைதாம் என்ன பயன் படும் எத்தன்மைத்தும்? பால் முதலியன பெய்யப்படாமையின் சிறிதும் வெள்ளிய முகம் தோன்றாத பானையினை நாட்கலையில் கண்டான். ஆனால் உறை தெறிப்பக் கடையும் மத்தின் ஒலி கேளாமுன்னே தான் கவர்ந்து வந்த நிரையனைத்தும் பிறர்க்கு நேராகக் கொடுத்தல் வல்லனாயினான். “என்று தலைவன் கவர்ந்து வந்த ஆநிரைகளைக் குழுவில் உள்ளார் அனைவர்க்கும் பங்கிட்டளித்த விரைவு இங்கு புலவரால் வியப்புடன் குறிக்கப்படுகிறது.

இங்கு அத்தலைவன் தான் கவர்ந்து வந்த ஆநிரைகளைப் பங்கிடுவதில் தயக்கம் எதுவும் காட்டவில்லை. தனக்கெனச் சிறந்தது எதனையும் அவன் ஒதுக்கி வைத்துக் கொள்ளவில்லை. அவனது இச்செயல் புலவருக்குப் பெருவியப்பைத் தந்தது. அவ்வியப்பின் வெளிப்பாடுதான், ‘அவைதாம் மிகப் பலவாயினும் என்னாம் எனைத்தும்” என்ற வினாவாக வெளிவந்தது. தலைவனது தன்னல மற்ற இச்செயலுக்கு அவன் வாழ்ந்த சமூக அமைப்பே காரணமாகும். அவன் பொதுவுடைமை வகைப்பட்ட கண சமூகத்தில் வாழ்ந்தான். சமூகத்தில் இன்னும் தனிச் சொத்துடைமை பற்றிய சிந்தனை ஏற்படாத நிலையினையே இந்நிகழ்வுகள் உணர்த்துகின்றன.

கிடைத்த பொருள் எதுவாயினும் அவை அனைத்தையும் மக்கள் தமக்குள் சம அளவில் பங்கிட்டுக் கொள்ளும் பழக்கம் கணசமூகமாக வாழ்ந்த பண்டை மக்களிடையே ஆழமாக வேரூன்றியிருந்து. வேட்டையில் கிடைத்தது எது வாயினும் அதனைத்தன் குழுவில் உள்ளார் அனைவரும் சமமாகப் பங்கிட்டுக் கொள்ள வேண்டும் என்பது கணசமூகத்தின் இயல்பு ஆகும். “உலகம் முழுவதிலும் கணசமூகத்தில் தனியாளுக்கு வேட்டைப்பொருள், மீன், உணவு முதலியவற்றுள் தனியுரிமை இருக்க வில்லை, அவன் வாழ்ந்த சமத்துவ சமூகம் தான்பெறும் எதையும் குழுவினருடன் பங்கிட்டுக் கொள்ளும் படி இயல்பான உள்ளுணர்வாகவே அவனை உந்தியது.” என்று கணசமுகமாக வாழ்ந்த பழங்குடியினைரைப்பற்றி ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அவர்கள் கூற்று தமிழகத்துக்கும் பொருந்தும் என்பதனை மேற்குறித்த புறநானூற்றுப் பாடலடிகள் உணர்த்துகின்றன.

இப்பாடல்கள், இம்மக்கள் தாம் வேட்டையாடிக் கொண்டுவந்த ஊனைவிலைக்கு விற்க வில்லை. குழுவில் உள்ள வலியவன் தனக்கு என்று சிறந்தையோ கூடுதலாகவோ எடுத்துக் கொள்ளவில்லை. இருந்ததை அனைவரும் தமக்குள் சம அளவில் பங்கிட்டுக் கொண்டனர்.” என்ற செய்தியை நமக்குக் கூறுகின்றன. இங்கே மக்கள் தம் உழைப்பின் பயனைத் தாமே துய்க்கின்ற காட்சியையும் காண்கிறோம். ‘புராதன பொதுவுடைமைத் சமூகத்தில் பொதுச் சொத்துடைமை கூட்டு உழைப்பு சமத்துவ அடிப்படையிலான விநியோகம் முதலியவை ஆதிக்கம் செலுத்திய வரையில் சமூகம் வர்க்கங்களாகப் பிளவுபடவில்லை.” என்ற மார்க்சீய அறிஞர்களின் கூற்றுக்கு இப்பாடல்கள் தக்க சான்றாக அமைந்துள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக