14/04/2011

நேர்காணல் - மனுஷ்ய புத்திரன்

தீராநதி: 1983லில் வெளிவந்த உங்களது 'மனுஷ்ய புத்திரனின் கவிதைகள்' தொகுப்பிலிருந்து 2005இல் வெளிவந்த ஐந்தாவது தொகுப்பான 'மணலின் கதை' வரை உங்கள் கவிதைச் செயல்பாட்டில் காணப்படும் தொடர்ச்சியும் மாற்றமும் என்ன?

நான் மிகவும் இளமைக் காலத்தில் எழுதத் தொடங்கி அவை பிரசுர வாய்ப்பையும் பெற்றுவிட்டன. நான் உருவாகி வந்த பாதைகள் அனைத்திற்குமான தடயங்கள் அச்சுவடிவில் இருக்கின்றன. என்னுடைய சூழலில் பெரிய பத்திரிகைகளின் வழியே வந்து சேரும் எழுத்துக்கள் மட்டுமே ஒரே வாசிப்பனுபவமாக அப்போது இருந்தது. வைரமுத்துவும் மு.மேத்தாவும் அந்தச் சூழலில் கொடிகட்டிப் பறந்தார்கள். அவர்கள் இருவருமே மிகவும் எளிமையான சுலபமாக யாரும் உருவாக்கிவிடக்கூடிய கவிதை மாதிரியை உருவாக்கினார்கள். என்னுடைய முதல் தொகுப்பும் அந்த வகைமாதிரியிலிருந்து பிறந்ததுதான். ஒரு காலகட்டத்தில் இது தவிர்க்கவே முடியாத ஒருவிதி. உள்ளீடற்ற சமூக அக்கறைகளும் கற்பனாவாதமும் மிகுந்த அம்மொழியிலிருந்து விடுபட முதலில் பெரியாரியமும் வெகு சீக்கிரத்தில் மார்க்சியமும் உதவி செய்தன. தீவிர இடதுசாரிப் பார்வைகொண்ட கவிதைகளை மன ஓசை, புதிய கலாசாரம் இதழ்களில் எழுதினேன்.

எண்பதுகளின் பிற்பகுதி எனது அரசியல் நம்பிக்கைகளிலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் கடும் வீழ்ச்சிகளை சந்தித்த காலம். என் மன அமைப்பு சிதைந்து வேறொன்றாக உருமாறிக் கொண்டிருந்தது. என் கவிதையின் மொழியும் உள்ளடக்கமும் மாறத் தொடங்கியது. நான் அந்தக் கவிதைகளை மன ஓசைக்கு அனுப்பினேன். அவை வெளியிடப்படவில்லை. மாறாக மன ஓசை ஆசிரியர் குழுவுக்கும் எனக்கும் ஒரு நீண்ட கடிதப் பரிவர்த்தனை நடந்தது. புரட்சிக்கும் தனிமனித வாழ்க்கைக்கும் இடையிலான முரண்பாடுகள் பற்றிய பிரச்சினைகள் அவை. நான் மிகவும் மனம் சோர்ந்து போனேன். அப்போது கோவை ஞானியின் தொடர்பின் மூலம் சிறுபத்திரிகைகளுடனான அறிமுகம் கிடைத்தது. அது எனக்கு மிகப் பெரிய ஆசுவாசமாக இருந்தது. கோவை ஞானி என் கவிதைகளை நிகழ் இதழில் தொடர்ச்சியாக வெளியிட்டார். அது என் எழுத்து வாழ்க்கையில் மிக முக்கியமான திருப்பம். அங்கிருந்துதான் நவீன இலக்கியம் தொடர்பான எனது எல்லாப் பாதைகளும் துவங்கின.

எனது முதல் கவிதைத் தொகுப்பிற்கும் ஐந்தாவது கவிதைத் தொகுப்பிற்குமான இந்த நீண்ட தொலைவில் சொல்முறைகளிலும் அர்த்த தளங்களிலும் பல்வேறு மாறுதல்களையும் உடைப்புகளையும் இக்கவிதைகள் சந்தித்திருக்கின்றன. ஆனால் இக்கவிதைகள் அனைத்தும் தீர்க்கவே முடியாத நிம்மதியின்மையையும் கேவல்களையும்தான் திரும்பத் திரும்ப சொல்லி வந்திருக்கின்றன. இவை அவற்றை எழுதுகிறவனின் கேவல்கள் மட்டுமல்ல, வேறு எப்படியும் இருக்கமுடியாத, பொய்யான நம்பிக்கைகளுக்குகூட சாத்தியமற்ற ஒரு தலைமுறையின் சுய அழிவுப் பாடல்கள். மேலும் இக்கவிதைகள் ஒரு வாசகனின் முன்னிலையை திட்டவட்டமாக நிறுத்தி எழுதப்பட்டவை. உரையாடலின் சாத்தியங்களைத் தொடர்ந்து விரிவுபடுத்தவே இக்கவிதைகளில் முயன்றிருக்கிறேன். சில சமயம் அது மயானத்தின் தனித்த அழுகுரல். சில சமயம் மலைகளில் எதிரொலித்து பள்ளத்தாக்குகளைக் கடந்து செல்லும் நீண்ட அழைப்பு.

தீராநதி: எழுத்து அல்லது கவிதை உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் அல்லது அந்தரங்கத்தில் ஏற்படுத்தும் அர்த்தம் என்ன?

இப்போதும் நிழலாகத் தொடர்ந்துகொண்டிருக்கும் அர்த்தமின்மையை, சாரமின்மையை கடக்கிற ஒரு முயற்சியாகத்தான் எழுதுவதைப் பார்க்கிறேன். இந்த உலகத்தில் எனக்கு வேறு எந்த வேலையும் செய்யத் தெரியாது. நான் யார் என்று சொல்லிக்கொள்வதற்கு எனக்கு வேறு பெயர்களே இல்லை. வாழ்க்கையில் எங்கோ ஒரு எலிப் பொறியில் மாட்டிக் கொண்டிருக்கிறேன். எழுத்து அங்கிருந்து வெளியேறும் ஒரு ரகசிய மார்க்கமாக இருக்கிறது. ஆனால் அது அப்படித்தான் நிகழ்கிறதா என்று சில சமயம் சந்தேகமாக இருக்கிறது. எழுத்து எந்த அளவுக்கு நம்மை விடுதலை செய்கிறதோ அதே அளவுக்கு நமது விதியின் அறுக்க முடியாத தளைகளை ஸ்தூலமடையச் செய்தும்விடுகிறது.

படைப்புச் செயல் ஒரு தந்திரம் அல்லது விளையாட்டு என்றுகூடத் தோன்றுகிறது. தன்னைத் திரும்பத் திரும்பக் கண்டுபிடித்துக் கொள்ளும் விளையாட்டு. தன்னுடைய இருப்பைத் தனக்கே மறைத்துவிடும் தந்திரம். சொற்கள் சமுத்திரத்தின் நீரைப்போல சூழ்ந்துகொண்டிருக்கின்றன. என்னுடைய கயமைகள், இடையறாது பெருகும் கசப்புகள், துரத்தப்படும், கைவிடப்படும் புராதன பயங்கள், காதல்களின் உதிரப்பெருக்குகள், நான் குழந்தையாக இருந்தபோது கண்ட பரிசுத்தமான கனவுகள் என எத்தனையோ தீவுக்கூட்டங்கள் அச்சமுத்திரத்தில் மிதந்துகொண்டிருக்கின்றன. சொற்களின் சமுத்திரம் அத்தீவுகளின் கரைகளைத் தொடர்ந்து நனைத்தவண்ணம் இருக்கிறது.

தீராநதி: நீங்கள் இதை மிகவும் உருவகப்படுத்துகிறீர்கள் என்று தோன்றுகிறது

இதை வேறு எப்படிச் சொல்ல முடியும் என்று எனக்குத் தெரியவில்லை. வேறு சில நேரடியான பதில்கள்கூட இருக்கின்றன. ஒரு முறை ஏன் எழுதுகிறீர்கள் என்ற கேள்விக்கு பெண்களை கவர்வதற்காக என்று பதில் சொன்னேன். நார்சிஸம், புகழாசை, பிம்பம் கட்டுதல் என்றெலாம் கூட இவற்றிற்கு பதில் சொல்லலாம். அதெல்லாம் பொய்யில்லை. ஆனால் படைப்பனுபவம் தரும் கொந்தளிப்புகளும் பேரமைதிகளும் அவ்வளவு எளியதாக இல்லை. திடீரென ஏதோ ஒன்று கலங்கிவிடுகிறது. அதைச் சொல்வதற்கு வேறு உபகரணங்கள் தேவையாக இருக்கின்றன.

தீராநதி: உங்கள் கவிதையின் பரப்பை நிர்ணயிக்கும் அக-புற தூண்டுதல்களாக எதையெல்லாம் கருதுகிறீர்கள்? உங்கள் கவிதைகளுக்கான தேர்வுகள் திட்டமிட்டவையா அல்லது தற்செயலானவையா?

கவிதைகளுக்கான தேர்வுகள், மன நிலைகள் தற்செயலானவை. ஒரு பைத்திய நிலையின் சிதறடிக்கபட்ட கனவு. அது அசட்டுத்தனமோ தரிசனமோ சட்டென ஸ்திதியிலிருந்து நிகழும் ஒரு பிறழ்வு. இந்தப் பிறழ்வு அறியபட்ட ஒன்றிற்கு இதுவரை அறியப்படாத ஒரு கோணத்தையும் அர்த்தத்தையும் கொடுக்கிறது. இந்த மேசையின்மேல் இருக்கும் கரடிபொம்மை நேற்றுக் காலை என்னைப் பார்த்து கண் சிமிட்டியது என்று சொன்னால் நீங்கள் நம்பமாட்டீர்கள். ஆனால் என் கவிதையில் நான் அதை உண்மை என்று நம்ப வைத்துவிடுவேன். பிறகு ஒரு நாள் நீங்கள் சொல்வீர்கள், அந்தக் கரடிபொம்மை என்னையும் பார்த்து கண்சிமிட்டியது என்று. இனி அந்தக் கவிதையோடு சம்பந்தப்பட்ட அனைவருக்கும் அது ஒரு சாதாரண கரடிமொம்மையல்ல. அது ஒரு அனுபவம், குறியீடு. இவ்வாறு மந்தமான அல்லது இறுக்கமாக உருவாக்கப்பட்ட எதார்த்த உலகின் விதிகளை தொடர்ந்து கலைப்பதுதான் படைப்புச் செயலுக்கான முக்கியமான தேர்வு. வேறு தேர்வுகளும் இருக்கலாம். ஆனால் எழுத்தின் புறவயமான நோக்கங்கள் பற்றி இங்கு நான் பேசவில்லை. கலைப் படைப்பிற்கான அடிப்படை உந்துதல் பற்றியே குறிப்பிடுகிறேன்.

ஆனால் ஒரு தீவிரமான இலக்கியப் பிரதி என்பது பிறழ்வினாலோ பைத்திய நிலையினாலோ மட்டும் உருவாவதில்லை. அது ஒரு முதல் பொறி. ஒரு ஆயத்த நிலை. அவ்வளவே. அதற்கு ஒரு திட்டம், கட்டுமானம் தேவையாக இருக்கிறது. பயிற்சியும் கடும் உழைப்பும் தன்மேல் கனத்துக்கொண்டிருக்கும் பிரதிகளின் பெரும் சுமையினைக் கடந்து மேலெழும் வைராக்கியமும் தேவையாக இருக்கிறது. நாம் உருவாகுவதில் பெரும்பாலானவை மின்மினிகள். ஆனால் ஒரு பெரும் கானகத்தை எரித்து மேலெழும் நெருப்பை கையாளுபவனே மகத்தான கலைஞனாகிறான். அந்த வகையில் இந்த யுகத்தின் கலைஞன் ஒரு புராதன மாந்திரீகனாக இருக்கும் அதே சமயத்தில் ஒரு அறிவியலாளனாகவும் இருக்கிறான். உள்ளுணர்வின் பாதைகளும் அழகியலின் தர்க்கங்களும் இயல்பாக சந்தித்துக் கொள்ளும் ஒரு புள்ளியில்தான் இந்த யுகத்தின் கலையும் இலக்கியமும் பிறக்கிறது. அதற்காக எவ்வளவோ தூரம் போகவேண்டியிருக்கிறது.

தீராநதி: உங்கள் ஆரம்பகாலக் கவிதைகளில் இடதுசாரிப் பார்வைகொண்ட சமூக அக்கறைகளும் பிற்கால கவிதைகளில் இருத்தலியல் சார்ந்த நெருக்கடிகளும் இடம்பெறுகின்றன. இந்த மாற்றம் சமூக பிரக்ஞை என்ற தளத்தில் தொடங்கி தனிமனிதவாதம் என்ற கூட்டிற்குள் முடங்கும் ஒரு பொதுவான போக்கின் விளைவு என்று கருதலாமா?

உங்களுடைய இந்தக் கணிதம் சரி என்றால் இன்னும் பத்தாண்டுகளில் நான் தீவிர ஆன்மீகவாதியாகி விடுவேன். ஆனால் அது அவ்வளவு எளிதான சூத்திரம் அல்ல. சமூகம், வாழ்க்கை குறித்த நமது விழிப்பு நிலைகள் சஞ்சரிக்கும் புள்ளிகள் தொடர்ந்து நகர்ந்தவண்ணம் இருக்கின்றன. நமது மையமாக இருப்பவை, நமது அனுபவங்களாக நான் நம்புபவை ஏதோ ஒரு கணத்தில் பனிப்பாறையில் மோதும் கப்பலைப்போல சுக்கல் சுக்கலாக நொறுங்கிவிடுகின்றன. இவை முரண்பாடுகள் அல்ல. உருமாற்றம் தொடர்ந்து நமக்கு நிகழ்ந்துகொண்டிருக்கிறது. கலையும் அனுபவமும் இதை மிகவும் துரிதப்படுத்துகின்றன. ஒரு கதவை திறக்கும்போதே திறக்கபடாத பத்துக் கதவுகள் அதற்குப் பின்னிருக்கின்றன.

சமூக அக்கறை, தனிமனிதவாதம் என்ற முரண்பாடு ஸ்டாலினிஸ்டுகளால் உருவாக்கப்பட்ட ஒரு கட்டுக் கதை. தமிழில் ஐம்பது வருடங்களுக்கும் மேலாக இந்த அபத்தமான புள்ளியைச் சுற்றியே இலக்கிய விவாதங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. ஒரு சமூக அரசியல் பிரச்சினையை ஒட்டிய கவிதையாகட்டும், ஒரு காதல் கவிதையாகட்டும் இரண்டையுமே எனது மிக அந்தரங்கமான பிரச்சினையாகத்தான் சந்திக்கிறேன். எனக்கு சமூக அக்கறை கிடையாது. ஒரு பிரச்சினையின் வெளியே இருப்பவர்கள்தான் அதன்மீது அக்கறை காட்ட முடியும். சமூக நிகழ்வுகள், அதன் இடையறாத கொந்தளிப்புகளின் ஒரு பகுதியாகவே நான் இருக்கிறேன். பத்திரிகையாளனாகவும் படைப்பாளியாகவும் அவற்றிற்கு நான் தொடர்ந்து எதிர்வினையாற்றியிருக்கிறேன். மனித உறவுகளில் படியும் நாடகங்களை, தீர்க்க முடியாத துக்கங்களைப் பேசும் 'நீராலானது' தொகுப்பில்தான் 'அரசி', 'நீரடியில் கொலைவாள்' போன்ற கவிதைளும் இருக்கின்றன.

தீராநதி: அரசி கவிதை பற்றிக் குறிப்பிட்டீர்கள். அது உங்களுடைய மிகவும் பேசபட்ட கவிதைகளில் ஒன்று. அக்கவிதையை எழுதக் காரணமாக உங்களுக்கு தி.மு.க. அல்லது கலைஞருக்கு ஆதரவாக இருந்த ஒரு நிலைப்பாடுதான் காரணம் என்றும் ஒரு விமர்சனம் சிலரால் முன்வைக்கபட்டதே?

அத்தகைய நிலைப்பாடுகளை வைத்துக்கொள்வதுகூட ஒரு எழுத்தாளனின் உரிமைதான். நான் ஒரு திமுக காரனாக இருக்கும்பட்சத்தில் அதைச் சொல்லிக் கொள்வதில் எந்தக் கூச்சமும் கிடையாது. ஆனால் கருணாநிதியின் அரசியல்மீது நான் தொடர்ந்து முன்வைத்திருக்கும் விமர்சனங்களை கணக்கில் எடுத்துக் கொண்டால் இந்த விமர்சனம் அர்த்தமற்றது. 'அரசி' கருணாதிக்கு ஆதரவாக எடுக்கப்பட்ட ஜெயலலிதா எதிர்ப்பு நிலைப்பாடு என்று சொல்வது அந்தக் கவிதையின் பல்வேறு சாத்தியங்களை மறுக்கிற ஒரு முயற்சி.

ஜெயலலிதா சம்பந்தமான விவகாரங்கள் ஏதோ தவறு செய்கிற ஒரு அரசியல்வாதி சம்பந்தபட்ட பிரச்சினையல்ல. நீங்கள் அவரைத் தவறுகள் செய்கிற வேறு யாரோடும் சமப்படுத்தவே முடியாது. அவருடைய விசித்திரமான இயல்புகளும் அதிகாரத்தை அவர் சோதித்துப் பார்க்கும் விதங்களும் சுதந்திர இந்தியாவில் நடந்திராத ஒன்று. இந்திரா காந்தி எமெர்ஜென்சி மூலம் செய்த காரியங்களை இவரால் அப்படி ஒன்று இல்லாமலேயே செய்ய முடியும். மேலும் அதிகாரத்திலிருக்கும் ஒருவர் விரும்பினால் நம்முடைய அதிகார அமைப்பையும் நீதி அமைப்பையும் தனது துர்நோக்கங்களுக்காக எப்படி வேண்டுமானாலும் எந்தத் தடையும் இன்றி பயன்படுத்தலாம் என்பதை கடந்த சில ஆண்டுகளில் அவர் நிரூபித்திருக்கிறார். நாம் பாசிசத்திற்கு எவ்வளவு அருகாமையில் இருக்கிறோம் என்பதன் ஒரு அடையாளம்தான் ஜெயலலிதா என்ற சூழல். கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழகத்தின் அரசியல் வரலாறு என்பது முழுக்க முழுக்க திகிலும் மர்மங்களும் நிரம்பியதாக மாறிவிட்டது. ஒடுக்குமுறைகள், அதிகார வர்க்கக் கொலைகள், நீதித் துறையின் அழிவு என ஒரு மிகப் பெரிய சமூக விரோத, சட்ட விரோத ஆட்சியின் கீழ் வாழ்வதன் பயங்கரத்தையும் அபத்தத்தையுமே அக்கவிதை பேசுகிறது. ஒரு எழுத்தாளனுக்கு அவனுடைய வாழ்நாளில் ஜெயலலிதா போன்ற ஒரு பன்முகத் தன்மைகொண்ட கதாபாத்திரம் கிடைப்பது மிகவும் அரிது.

தீராநதி: உங்களுடைய கால்களின் ஆல்பம் போன்ற கவிதைகள் பரவலாக கவனிக்கப்பட்டதன் காரணம் அவை தமிழ்மனோபாவத்தில் புரையோடிப்போயிருக்கும் சென்டிமெண்ட் என்ற அம்சத்தை தூண்டுவதே என்று தோன்றுகிறது. அதாவது வெகுசன எழுத்து எவ்வாறு ஒரு பொதுமைப்படுத்தப்பட்ட மிகையுணர்ச்சியின் மூலம் உடனடியான கவனத்தைப் பெறுகிறதோ அதே போல நவீன படைப்பாளிகளும் வேறொரு தளத்தில் இதைக் கையாளுகிறார்கள் என்று சொல்லலாமா?

கால்களின் ஆல்பம் சென்டிமெண்ட்டான காரணங்களுக்காக கவனிக்கப்பட்டிருந்தால் அது அக்கவிதைக்கு நேர்ந்த ஒரு விபத்து என்றே சொல்லலாம். ஆனால் அக்கவிதையின் நோக்கம் அதுவல்ல. உடலுக்கும் பொதுக் கலாச்சாரவெளிக்கும் இடையிலான முரண்பாடுகளை பாலியல் சார்ந்த தளத்தில் பேசினாலும் சரி, அல்லது வேறு எந்தத் தளத்தில் பேசினாலும் சரி அவை உடனடியான சலனங்களையும் எதிர்மறை விளைவுகளையும் உருவாக்குவதைத் தொடர்ந்து கவனிக்க முடிகிறது. அக்கவிதையில் வெளிப்படும் துக்கம் தமிழ்வாசகனுக்குப் புதியது. அதுவரை அது எழுதப்படவில்லை. அது சட்டென ஒரு திடுக்கிடலை, சஞ்சலத்தை, குற்ற உணர்வை உண்டாக்கிவிடுகிறது. இந்தக் குற்ற உணர்வு எத்தனையோ விஷயங்களில் நம் அன்றாட வாழ்க்கையில் நிகழ்ந்துகொண்டிருப்பதுதான். ஆனால் அது கவிதையின் துக்கமாக வாழ்க்கையின் துக்கமாக பார்க்கப்படுவதற்குப் பதில் கவிஞனின் துக்கமாகப் பார்க்கப்படுகிறது. ஆனால் அதை எழுதுகிறவன் அந்த மாபெரும் துக்கத்தை எழுதுவதற்கான ஒரு கருவி மட்டுமே. கால்களின் ஆல்பம் என்னுடைய பிரச்சினை அல்ல. அக்கவிதையிலிருந்து என்னை விடுவிக்காதவரை அக்கவிதையின்மீதான வாசிப்பு சாத்தியமே அல்ல.

கவிதைக்கு உணர்வு பூர்வமான ஒரு வலுவான தளம் இருக்கிறது.. ஆனால் அது மிகையுணர்ச்சியாக மாறாமல் ஒரு படைப்பாளி கண்காணிப்பது மிகவும் முக்கியம். ஏனெனில் மிகையுணர்ச்சி என்பது வாசகனின் ஆன்மீக நிலையின்மீதான ஒரு சுரண்டல்.

தீராநதி: வன்முறையின் அழகியல்தான் அதிகமும் உங்கள் கவிதையின் மையமாக இருந்து வருகிறது என்பதுதான் பரவலான உங்கள் கவிதைகள் பற்றிய பார்வையாக இருக்கிறது. அன்பும் நெகிழ்ச்சியும் கூட உண்டு. வன்முறையும் அன்பும் சந்திக்கும் இடமாக எதைக் குறிப்பிடுவீர்கள்?

நான் இதை திரும்பத் திரும்பக் கேட்டிருக்கிறேன். வன்முறையும் குரூரமும் நம்முடைய காலத்தின் ஆதாரமான அனுபவமாக இருக்கிறது. படுகொலைகளும் சித்ரவதைகளும்தான் வன்முறை என்பதில்லை. அன்றாட வாழ்க்கையில் கண்ணுக்குத் தெரியாமல் ஆயிரக்கணக்கான ஊசிகள் நம்முள் இறங்கிக்கொண்டிருக்கின்றன. சமூக உறவுகள், அந்தரங்க உறவுகள் என அனைத்திலும் வெளிப்படும் நுண்ணிய அதிகாரத்தை, பிறருடைய இருப்பை கசக்கி அழிக்கும் உத்திகளை, நமக்கு நாமே தேடிக்கொள்ளும் தன்னழிவுகளை எப்படி கடப்பது என்றே தெரியவில்லை. என் கவிதைகள் இதைத் தொடர்ந்து எதிர்கொள்கின்றன. அது என் விழிப்புணர்வின் மிக ஆதாரமான ஒன்றாக இருந்துகொண்டிருக்கிறது.

ஆனால் கவிதையில் குரூரத்தைப் பற்றிய பேச்சு கருணைக்கான ஆழ்ந்த கேவலிலிருந்துதான் எழுகிறது. அன்பு என்பதே இல்லாத உலகில் வாழ்வதன் துக்கம் அளப்பரியதாக உள்ளது என்று ஆத்மாநாம் எழுதினானே, அதுதான் நான் இங்கே குறிப்பிட விரும்புவது.

சிவப்புப் பாவாடை
வேண்டுமெனச் சொல்ல

அவசரத்திற்கு
அடையாளமேதும் சிக்காமல்

விரலைக் கத்தியாக்கி
தன் தொண்டையறுத்து
பாவனை ரத்தம்
பெருக்குகிறாள் ஊமைச் சிறுமி

என்று ஒரு கவிதையில் எழுதினேன். வெளிப்பார்வைக்கு மிகவும் வன்முறை தோய்ந்ததாகக் காட்சியளிக்கும் இக்கவிதையில் வெளிப்பாட்டிற்கான பெரும் வேட்கையும் வாழ்வின் அநீதியை எதிர்கொண்டு மேலெழும் உக்கிரமும்தான் அடிப்படையாக இருக்கிறது. மேலும் அதன் இறுதியான அர்த்தத்தில் அது கசப்பையல்ல மன நெகிழ்ச்சியையே வேண்டி நிற்கிறது

தீராநதி: கவிதையை அழகுபடுத்துகிறீர்கள் என்றும் உங்கள் கவிதைகள் தொடர்பாக ஒரு விமர்சனக் கருத்து வைக்கப்படுகிறது. அதுபோல் அடுத்தடுத்து வரிகளில் ஒன்றையே பல்வேறு விதமாக அடுக்கிக்கொண்டே செல்கிறீர்கள் என்றும் விமர்சனம் இருக்கிறது. அந்த வகையில் வைரமுத்து கவிதைகளின் தன்மை உங்களிடம் இருப்பதாகச் சொல்கிறார்கள். இதற்கான உங்கள் பதில் என்ன?

ஒரு சொல்லை அல்லது ஒரு படிமத்தை முன் பின்னாக நகர்த்துவதன் வாயிலாகவும் அதை இடம் மாற்றி கலைத்துப் போடுவதன் மூலம் அச்சொல் அல்லது படிமம் ஒரு புதிய அர்த்த வெளியைப் படைக்கிறது. சில சமயம் சொல்லின் உள்ளார்ந்த இசையை கண்டுபிடிப்பதற்கும் அத்தகைய உத்தியை கையாண்டிருக்கிறேன்.

உதாரணத்திற்கு ஒரு கவிதையைப் பாருங்கள்.

பிறகு
அவை கவனிக்கப்படவில்லை
பிறகு
அவை சரி செய்யப்படவில்லை
பிறகு
அவை பரிசீலிக்கப்படவில்லை
பிறகு
அவை சொல்லப்படவில்லை
பிறகு
அவை அனுமதிக்கப்படவில்லை
பிறகு
அவை புரிந்துகொள்ளப்படவில்லை
பிறகு
அவை மன்னிக்கப்படவில்லை
பிறகு
அவை மறக்கப்படவில்லை.

இந்தக் கவிதையில் திரும்பத் திரும்ப இடம்பெறும் ஒரு வாக்கிய அமைப்பில் பிறகு என்ற சொல் முடிவற்ற சாத்தியங்களைக் கொண்டதாக மாற்றப்படுகிறது. இதை அலங்காரம் என்றோ வைரமுத்து கவிதையின் சாயல் என்றோ சொல்வது ஒரு எளிமையான அனுமானம். தொப்பி போட்ட அனைவரையும் எம்.ஜி.ஆர் என்று சொல்வது போன்றது இது.

தீராநதி: கவிதை எழுதுபவர்கள் பலரிடமும் கவிதை கதைத்தன்மை கொண்டிருப்பதை பார்க்க முடிகிறது. சிலர் இந்த மாற்றத்தை ஆரோக்கியமானதாகவும் சிலர் கவிதைக்கு எதிரானதாகவும் பார்க்கிறார்கள். நீங்கள் இந்த மாற்றத்தை குறித்து என்ன கருத்து கொண்டிருக்கிறீர்கள்?

தமிழ்க் கவிதை மரபே கதைகளின்மீது கட்டப்பட்டதுதான். எனவே இது ஒரு மாற்றம் அல்ல, தொடர்ச்சி. ஒரு கவிதை கதைத் தன்மையை கொண்டிருப்பதோ இல்லாமல் இருப்பதோ தம்மளவில் முக்கியமில்லை. அந்தக் கவிதை கவித்துவ தரிசனங்களை அடைந்தால் அது கவிதையாகப் பரிணமிக்கிறது, அடையாமல் போனால் ஒரு பதிவாக எஞ்சிவிடுகிறது. ஆனால் இந்தப் பிரச்சினைக்கு வேறொரு பரிமாணமும் இருக்கிறது. கடந்த அரை நூற்றாண்டிற்கும் மேலாக எழுதப்பட்ட நவீன கவிதைகளில் பெரும்பகுதி அரூபமான உணர்வுகளின் சொற்கூட்டங்களாக இருந்திருக்கிறது. அது தமிழ் எதார்த்தத்தை, தமிழ் வாழ்க்கையை, தமிழ் நிலக் காட்சியை நிராகரித்திருக்கிறது. கலாச்சார அடையாளங்களோ பூகோள அடையாளங்களோ அற்ற ஒரு விசித்திரமான கவிதை மொழியின் மூலம் அர்த்தமற்ற புகைமூட்டம் எழுப்பப்பட்டிருக்கிறது. நவீன கவிஞர்கள், இடதுசாரிகள், வெகுசனக் கவிஞர்கள் யாருக்குமே சுயமான நிலப்பரப்பு கிடையாது. இது வாசகனை பெருமளவு சோர்வடையச் செய்துவிட்டது. அப்போது ஒரு கவிதையில் தெளிவான ஒரு கதையை ஒருவர் எழுதும்போது கவிதை நிலத்திற்குத் திரும்பிவரும் உணர்வையும் அணுக்கத்தையும் உண்டாக்கிவிடுகிறது. தமிழில் நவீன தமிழ் வாழ்க்கை சார்ந்த கதைகளை, அதன் சிதைவுகளை கலாப்ரியா மிகுந்த உக்கிரத்துடன் எழுதினார். பழமலய் வெற்றிபெறும் இடமும் கவிதை சார்ந்த சவால்கள் தோல்வியடையும் இடமும் இதுதான்.

தீராநதி: உங்கள் கவிதைகளைப் பாதித்தவர்கள் அல்லது உங்களது கவிதைகளுக்கான வடிவத்தை, பார்வை நீங்கள் கண்டடைய காரணமாக இருந்தவர்கள் என்று யார், யாரைக் குறிப்பிடுவீர்கள்.

எனக்குள் கவித்துவ பேருவகையைப் பொங்கச் செய்யும் பெரும் சக்தியாக இப்போதும் பாரதியே இருக்கிறான். இது உங்களுக்கு சம்பிரதாயமான பதிலாகக்கூடத் தோன்றலாம். ஆனால் பாரதி ஒரு வெளிச்சமாக கூடவே வந்துகொண்டிருக்கிறான். பிரமிளது படிமங்களின் காட்டாறும் நகுலனின் அச்சுறுத்தும் தனிமைப் பெருவெளியும் இரண்டு மாறுபட்ட கவித்துவ சாத்தியங்களைத் திறந்துகாட்டின. ஆத்மாநாமும் சுகுமாரனும் எனது படைப்பு மொழியில் மிகத் தீவிரமான செல்வாக்கினைக் கொண்டிருக்கிறார்கள். அன்னியமாதல், தன்னழிவு, மனமுறிவு என முடிவற்ற வெயிலால் நிரம்பிய தமிழ்க் கவிதையின் பெருநகர்ப் பரப்பை இவர்களே தீவிரத்துடன் உருவாக்கியவர்கள். தேவதேவனின் கவிதைகளில் வெளிப்படும் கருணையும், தேவதச்சனின் வினோதங்களும், எம்.யுவனின் தர்க்கப் புதிர் வெளியும் மிகுந்த நெருக்கத்தை ஏற்படுத்துகின்றன.

மலைச்சாமியும் மு.சுயம்புலிங்கமும் மிகவும் முக்கியமானவர்கள். தொடர்ந்து எழுதாமல் போனார்கள் என்பது பெரும் இழப்பு. கே. சச்சிதானந்தன் கவிதைகளது மொழிபெயர்ப்புகள் ஒரு காலகட்டத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின.

என்னுடைய கவிதைகளை கவிஞர்கள் பாதித்த அளவுக்கு சில புனைகதையாளர்களும் பாதித்திருக்கிறார்கள். மௌனியும் லா.ச.ராமாமிருதமும் சுந்தர ராமசாமியும் ஜெயமோகனும் தங்களது கதைகளில் வெளிப்படுத்திய கவித்துவ செறிவு பல கவிஞர்களுடையதைக் காட்டிலும் மூர்க்கமானது.

தீராநதி: புதிய கவிஞர்களில் உங்களைக் கவர்ந்தவர்கள் என்று யார், யாரைக் குறிப்பிடுவீர்கள்?

யாரைப் புதியவர்கள், யாரைப் பழையவர்கள் எனப் பிரிக்க முடியாத ஒரு சிக்கலான வயதில் இருக்கிறேன். நான் எழுதிக்கொண்டிருக்கும் காலத்தில் எழுதிவருபவர்களில் யூமா வாஸ§கி, ரமேஷ்-பிரேம், பாலை நிலவன், சங்கரராம சுப்ரமணியன், குட்டிரேவதி, மாலதி மைத்ரி, முகுந்த் நாகராஜன் ஆகியோர் மிகவும் படைப்பூக்கமுள்ள கவிகள். தமிழ்க் கவிதையின் சொல்லையும் பொருளையும் அவர்கள் தொடர்ந்து புதுப்பிக்கிறார்கள்.

தீராநதி: பெண் எழுத்தாளர்கள் இன்று மிகுந்த கவனம் பெற்று வருகிறார்கள். அவர்களது எழுத்துக்கள் தொடர்ந்து சர்ச்சைக்கு உள்ளாக்கப்படுகின்றன. ஆனால் அவர்களுக்கு அதீத முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்று ஒரு புத்தக மதிப்புரையில் குறிப்பிடுகிறீர்கள். இது வளர்ந்துவரும் ஒரு புதிய போக்கிற்கு எதிரான குரல் ஆகாதா?

என்னுடைய அந்தக் கருத்தை காலச்சுவடு பெண் எழுத்தாளர்கள் தொடர்பாக கசடற இதழ் வெளியிட்ட ஒரு இழிவான குறிப்புடன் சேர்த்து உள்நோக்கத்துடன் பிரசுரித்தது. பெண் எழுத்தாளர்களின் காவலனாக காலச்சுவடு ஆடிவரும் நாடகத்திலிருக்கும் வேடிக்கை பற்றி இங்கு நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை.

ஆனால் இன்று உருவாகும் பெண் எழுத்தாளர்கள் தொடர்பாக எழும் கவனம், சர்ச்சைகள் அவர்களது பாலியல் அடையாளங்கள் சார்ந்ததே தவிர, அவர்களுடைய பிரதிகளின் உள்ளார்ந்த பிரச்சினைகள் பற்றியல்ல என்பதைத்தான் அதில் எழுதியிருந்தேன். துயரமும் வலியும் நிறைந்த பெண்களின் சொற்கள் ஊடகங்களின் பாலியல் கிளுகிளுப்புகளாக சர்ச்சை என்ற பெயரில் மாற்றப்படுகின்றன. மேலும் பெண்களின் பிரதிகள்மீதான அர்த்தமுள்ள பேச்சுக்கள் எதுவும் இதுவரை நடைபெறவில்லை. வெகுசன ஊடகங்கள், சிறுபத்திரிகை காழ்ப்புகள்தாண்டி பெண்கள் தங்களுக்கான பேச்சுக்களையும் விவாதங்களையும் சுயேச்சையாகவும் தீவிரமாகவும் நடத்த வேண்டும்.

தீராநதி: ஒரு பத்திரிகையாசிரியராகவும் பதிப்பாளராகவும் நீங்கள் இருக்கிறீர்கள். அந்த வகையில் புதியதாக எழுத வருபவர்களின் கவிதைகளை வாசிக்கும் வாய்ப்பு உங்களுக்கு அதிகம் இருக்கிறது. நீங்கள் வாசித்த வரைக்கும் புதிய தலைமுறைக் கவிஞர்களின் கவிதைகளின் நோக்கம் அல்லது வாழ்க்கை தொடர்பான பார்வை, அதன் கலகம் குறித்த உங்கள் விமர்சனம் என்ன?

நான் முக்கியமானவர்களாக கருதும் சில இளம் கவிஞர்களிடம் கூட மொழியின்மீதான பிடிமானம் மிகவும் பலவீனமாக இருப்பதாகவே தோன்றுகிறது. நோக்கமின்றி சிதறடிக்கப்பட்ட சொற்களும் படிமங்களும் பெரும் ஆயாசத்தை உண்டாக்குகின்றன. இளம்படைப்பாளிகளின் வாழ்க்கைப் பார்வை பற்றிக் கேட்கிறீர்கள். இன்று ஒரு உதிரிக் கலாசாரம் ஏற்படுத்தும் குருட்டு வன்முறையும் குழப்பங்களும் தாண்டி பெரிய கலாச்சார பிரக்ஞை எதுவும் தமிழ் கவிஞர்களிடம் செயல்படவில்லை. கலகங்களில் ஒளிந்திருக்கும் பாசாங்குகள் மிகவும் புளித்துவிட்டன. எதார்த்த வாழ்க்கையின் குரூரமான வன்முறை எதையும் நேருக்கு நேர் எதிர்கொள்ள முடியாத இந்தக் கலகங்கள் ஒரு சௌகரியமான மத்தியதர வாழ்க்கைக்கான ஏக்கம் என்பதைத் தவிர வேறு எந்த நோக்கமும் கொண்டவையல்ல.

இன்னொருபுறம் பொய்யும் அசட்டுத்தனமும் சுயமோகமும் வக்கிரமும் கவிதையின் முகமூடியை அணிந்து கொள்ள முற்படும் சூழல் தீவிரமடைந்துவிட்டது. இன்று தமிழில் வெளிவரும் பெரும்பாலான கவிதைத் தொகுப்புகளைக் காட்டிலும் தினப்பத்திரிகைச் செய்திகளும் சாலையோர விளம்பரப் பலகைகளும் அர்த்தச் செறிவு கொண்டவையாகவும் சுவாரசியமானதாகவும் உள்ளன. பிரசுர வாய்ப்புகள் பெருகிவிட்டன. எல்லாமே பார்வைக்கு வந்துவிடுகிறது. எந்தக் குப்பையின் மீதும் சாதகமான விமர்சனங்களை உருவாக்கும் வழிமுறைகள் இன்று அனைவருக்கும் தெரியும். தனக்கு முன் என்ன நடந்தது என்பது குறித்தோ தனது சம காலத்தில் என்ன நடக்கிறது என்பது குறித்தோ எந்த அக்கறையும் கவலையும் இன்றி ஒருவர் தன்னைப் பற்றிய பிம்பங்களைக் கட்டமைக்க முடியும். இலக்கியம் சார்ந்த பேச்சுக்களைவிட வெகுசன ஊடகங்களில் தம்மைப் பற்றி வரும் குறிப்புகளும் புகைப்படங்களும் முக்கியமாகிவிட்டன.

தீராநதி: முந்தைய சிறுபத்திரிகைச் சூழலுடன் ஒப்பிடும்போது, தற்போது இலக்கிய மதிப்பீடுகள் மிகமோசமாகச் சரிந்திருக்கிறது என்னும் கருத்து சிலரால் முன்வைக்கப்படுகிறது. இது தொடர்பான உங்கள் கருத்து என்ன?

மதிப்பீடுகள் என்பது ஒரு பொது கலாச்சார உணர்வு. நம்முடைய சமூகப் பண்பாட்டு வாழ்வில் என்ன மதிப்பீடுகள் நிலவுகின்றனவோ அவைதான் சிறுபத்திரிகைச் சூழலில் வெளிப்படும். ஒரு கதை எழுதுபவரோ கவிதை எழுதுபவரோ இதைத் தாண்டிய மதிப்பீடுகளைக் கொண்டவராக இருக்க முடியும் என்பது நம்முடைய ஒரு கற்பனை. பொற்காலம் குறித்த கற்பிதங்கள் என்பதே மரபான மனோபாவம்தான். முக்கியமானதும் முக்கியமல்லாததுமான காரியங்கள் எல்லாக் காலங்களிலும் இலக்கிய உலகில் நடந்துகொண்டுதானிருக்கின்றன.

முன்பு சிறுபத்திரிகைச் சூழலில் இயங்கியவர்களுக்கு இல்லாத பல வாய்ப்புகள் இன்று இருக்கின்றன. மிகத் தீவிரமான இலக்கிய மதிப்பீடுகளைப் பேசியவர்கள் வெகுசன ஊடகங்களில் அவர்களுக்காக ஒரு ஜன்னல் திறந்ததும் அதற்கேற்ப எவ்வளவு வேகமாக தன்னை ட்யூன் செய்துகொள்கிறார்கள் என்று பார்ப்பது மிகவும் சுவாரசியமானதாக இருக்கிறது. வெளிப்படையான சமரசங்கள், பிறழ்வுகள் பற்றித்தான் வாசகர்கள் பார்க்கிறார்கள். மதிப்பீடுகளின் காவலர்கள் பலர் ரகசியமாக மேற்கொள்ளும் பேரங்களும் சமரசங்களும் மிகக் கடுமையானவை. உன்னத மதிப்பீடுகள் இன்று அப்பாவி வாசகனை ஏமாற்றும் ஒரு இலக்கிய அதிகாரம். ஒரு வியாபாரப் பொருளும்கூட.

அய்யன் வள்ளுவன் சிலையைவிட ஒரடியேனும் உயரமாக தங்கள் சிலையைச் செதுக்கிவிடவேண்டும் என்பதுதான் பல தமிழ் எழுத்தாளர்களின் கனவு. அதற்குத்தான் இவ்வளவு பதட்டம், ஆள் சேர்ப்பு, சக எழுத்தாளன் மீதான வன்முறை எல்லாம். யாரையும் மிகச் சிறிய விலைகளைக் கொடுத்து விலைக்கு வாங்கலாம். இந்தக் காலகட்டம் மிகவும் குழப்பமானது. இதைப் புரிந்துகொள்வது மிகவும் கடினமாக இருக்கிறது.

தீராநதி: காலச்சுவடு பத்திரிகை இரண்டாவதாக தொடங்கப்பட்டதிலிருந்து நீண்ட காலம் அதன் ஆசிரியர் பொறுப்பில் இருந்தீர்கள். திடீரென்று அதிலிருந்து பிரிந்து வந்து உயிர்மை பத்திரிகையைத் தொடங்கினீர்கள். இரண்டு வருடங்களுக்கு மேலாகியும் இன்றைக்கு வரைக்கும், ஏன் நீங்கள் காலச்சுவடு பத்திரிகையிலிருந்து பிரிந்து வந்தீர்கள் என்பது தொடர்பாக எதுவும் சொன்னதில்லை. ஏன் இந்த மௌனம்?

இது மௌனம் அல்ல, நான் எந்த விதத்திலும் பொருட்படுத்தத் தேவையில்லாத நபர்களை முற்றாக புறக்கணிக்க விரும்புகிறேன். உயிர்மையின்மீது கடந்த இரண்டு ஆண்டுகளில் அற்பத்தனமான பல தாக்குதல்கள் காலச்சுவடினால் ஏற்பாடு செய்யப்பட்டன. நேரடியான மறைமுகமான பல குறிப்புகள் தொடர்ந்து சளைக்காமல் எழுதப்படுகின்றன. இவற்றை எழுதும் கைகளுக்கு இவற்றைத் தாண்டி பொருட்படுத்தத் தக்க வேறு எதையுமே உருவாக்க முடியாது. உயிர்மை ஓராண்டு நிறைவு விழாவில் பேசிய எழுத்தாளர்கள் அனைவரையும் அவமானப்படுத்தி ஒரு பொய்யான பதிவை காலச்சுவடு பிரசுரித்தபோது மட்டும் கடுமையாக எதிர்வினையாற்றி ஒரு கடிதம் அனுப்பினேன். அதைப் பிரசுரித்து பதில் சொல்வதற்குப் பதில் ஒரு கோழைத்தனமான குறிப்பு மறைமுகமாக எழுதப்பட்டது. தம்முடைய எதிரிகளை பத்திரிகை முதலாளிகளுக்கும் போலீசிற்கும் காட்டிக் கொடுப்பதை முழுநேரத் தொழிலாகக் கொண்டவர்கள் என்னைக் காட்டி கொடுப்பவன் என அதில் கிசு சிசு எழுதினார்கள். என்னுடைய செயல்பாடுகள் வெளிப்படையானவை. காட்டிக் கொடுப்பதை பற்றிய பயம் எனக்குக் கிடையாது.

தமிழ் இலக்கிய சூழலில் காலச்சுவடு பத்திரிகை ஒரு காலத்தில் ஆற்றிய பங்கு நேர்மறையானது. ஆனால் ஒரு காலகட்டத்தில் காலச்சுவடிற்குள் அற்பத்தனமும் சிறு ஆதாயங்களுக்காக ஏற்பட்ட சந்தர்ப்பவாத கூட்டணிகளும் முதலாளியை சந்தோஷப்படுத்துவதற்காக அதன் இலக்கிய தொழிலாளிகளுக்குள் நடந்த அடிபிடிகளும் மூச்சுத் திணற வைத்தன. புண்ணைத் தேடி அலையும் ஈக்களைப்போல எதிராளியின் பலவீனங்களை தொகுத்தே உயிர்வாழும் ஒரு நபரின் கீழ் வேலை செய்வது ஒரு கட்டத்திற்கு மேல் சாத்தியப்படவில்லை. இது குறித்த தகவல்கள் ஒரு வாசகனுக்கு எந்த விதத்திலும் முக்கியமல்ல.

தங்கள் கம்பெனி எழுத்தாளர்களின் செத்தப் பிரதிகளை ஊடகங்களின் வெளிச்சத்தில் உயிரூட்டுவதற்காக கூச்சமற்ற தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்வது ஒரு புறம், தங்களுக்கு உவக்காதவர்களை ஒழித்துக் கட்டுவதற்காக ஒரு கூலிப்படையையே வளர்த்துக்கொண்டிருப்பது இன்னொரு புறம் இதுதான் இன்றைய காலச்சுவடின் இலக்கியச் செயல்பாடு. இத்தகைய வேலைகளைச் செய்யும் நபர்களை இலக்கியம் சார்ந்த பேச்சுக்களில் ஒரு தரப்பாகக்கூட எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. காலச்சுவடை முன்னிட்டு தமிழ்ச் சூழலில் அவ்வப்போது ஏற்படும் சர்ச்சைகள் அனாவசியமானவை.

தீராநதி: சுந்தர ராமசாமியுடனான உங்கள் நீண்ட கால உறவு இதனால் பாதிக்கப்பட்டதா?

என்னுடைய வாழ்வில் என் தந்தையைவிட எனக்கு முக்கியமானவராக அவர் இருந்திருக்கிறார். ஆனால் இந்த உலகில் சொந்தப் பிள்ளைகளின் தரப்பு மட்டுமே முக்கியமானது என்பதை மிக நெருக்கடியான ஒரு காலகட்டத்தில் அவர் எனக்கு உணர்த்தினார். காலச்சுவடிலிருந்து நான் வெளியேறிய சந்தர்ப்பத்தில் எனது முடிவு பற்றி ஒரு வார்த்தை கேட்பார் என்று மிகவும் எதிர்பார்த்தேன். அது அவருடைய ஆறுதலையோ சகாயத்தையோ எதிர்பார்த்து அல்ல. அவர் என்னைப் புரிந்துகொள்ளவேண்டும் என்று விரும்பினேன். ஆனால் அவர் மௌனமாக அமர்ந்திருந்தார். அது மிகவும் தந்திரமான மௌனம். உயிர்மை இதழை ஆரம்பித்தபோது அதில் எழுதப்போகும் எழுத்தாளர்களைப் பற்றிய அறிவிப்பு வெளிவந்தபோது அதில் ஜெயமோகன் பெயரும் இருந்தது. உடனே அமெரிக்காவில் இருந்து சுராவிடமிருந்து மௌனம் கலைந்து ஒரு மின்னஞ்சல். 'காலச்சுவடில் ஜெயமோகனை எதிர்த்து எழுதிவிட்டு இப்போது எப்படி அவரை உயிர்மையில் எழுதச் சொல்லலாம்?' என்று கேட்டு. ஒரு குறிப்பிட்ட பிரச்சினையில் ஜெயமோகனை நான் எதிர்த்து எழுதினால் நான் அவரை வாழ்நாளெல்லாம் எதிரியாகப் பாவிக்கவேண்டுமா? அப்படி பாவிக்கும் சந்தர்ப்பம் வந்தால்கூட எனது தலைமுறையின் மாபெரும் கலைஞன் என்று சொல்லிவிட்டுத்தான் அதைச் செய்யவேண்டியிருக்கும். ஜெயமோகன் சம்பந்தமாக எனக்கு விமர்சனங்கள் உண்டு. ஆனால் சுராவுக்கோ அவரைச் சார்ந்தவர்களுக்கோ இருக்கும் மனச்சிக்கல்கள் எதுவும் எனக்குக் கிடையாது. 'உங்களுடைய எந்த தார்மீக மதிப்பீடுகளிலும் எனக்கு நம்பிக்கையில்லை' என்று சுராவுக்கு எழுதினேன். ஏனெனில் அவை சமயசந்தர்ப்பங்களுக்கேற்ப தன்னை இடம் மாற்றி சுயசமாதானம் தேடிக்கொள்பவை.

தீராநதி: முன்பு காலச்சுவடு பத்திரிகை ஆசிரியராகவும் இப்போது உயிர்மை பத்திரிகை ஆசிரியராகவும் நீங்கள் கவனித்த வரையில் சமீபகாலங்களில் தீவிர இலக்கியங்களுக்கு வாசகர்கள் கூடியிருக்கிறார்கள் என்று சொல்லப்படுவதை ஏற்றுக்கொள்வீர்களா?

கல்வியும் மக்கள்தொகையும் விரிவடைந்திருக்கும் விதத்தோடு தர்க்க ரீதியாக ஒப்பிட்டால் இந்தப் பரப்பு சுருங்கியிருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். ஆனால் தனிப்பட்ட முறையில் எழுத்தாளனுக்கும் சிறு பத்திரிகையாளனுக்கும் செயல்படுவதற்கான களங்கள் சற்றே அதிகரித்திருக்கிறது என்று தோன்றுகிறது. இது ஒரு சாதகமான மாற்றம்.

தீராநதி: பதிப்பும் பத்திரிகையும் உங்கள் முழுநேரத் தொழிலான பிறகு நீங்கள் எழுதுவது மிகவும் குறைந்துவிட்டது. ஒரு படைப்பாளியாக இந்த இழப்பு உங்களுக்கு மிகவும் கடுமையானது இல்லையா?

பதிப்பு, பத்திரிகைத் தொழிலால் எழுதுவது குறைகிறது என்று சொல்ல மாட்டேன். சில சமயம் மன வறட்சி நிரம்பிய பருவங்கள் வருகின்றன.
சந்திப்பு: தளவாய் சுந்தரம்

நன்றி தீராநதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக